”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் படைக்க வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!!”
ஆம்! பெண்கள் சட்டங்கள் செய்யப் போகிறார்கள். நான் படித்த கிராமத்து பள்ளியில் பெண்களின் எண்ணிக்கை நான் படித்தபோது இருந்தது மிக மிக சொற்ப எண்ணிக்கை தான். பெண்குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் பள்ளியை விட்டு நிறுத்தி விடும் வழக்கம் பெற்றோரிடம் இருந்த்து. பெண்ணை வளர்த்து வயது வந்தவுடன் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதை மட்டுமே தங்களது கடமையாக பெற்றோர் கருதினர். ஆண்பிள்ளை படிப்பிலே அவ்வளவு சுகமில்லாமல் இருப்பினும் நிலத்தை விற்றாவது படிக்க வைத்தனர். ஆனால் பெண்பிள்ளையோ அளப்பறிய திறமை வாய்ந்தவளாக இருந்தாலும் அவளுக்கு படிப்பு மறுக்கப்பட்டது.
ஆனால் இப்போது பெண்களின் எண்ணிக்கை பெரும்பாலான கிராமத்து பள்ளிகளில் ஆண்களின் எண்ணிக்கையை விஞ்சி உள்ளது. பெற்றோர் மத்தியிலும் பெண்களை படிக்க வைக்கும் ஆர்வம் பெருகி உள்ளது. நான் பணியாற்றும் பள்ளியில் 2002 ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஆண்கள் 70 பேர் பெண்கள் 50 பேர் சென்ற ஆண்டு ஆண்கள் 86 பெண்கள் 86 இவ்வாண்டு ஆண்கள் 94 பெண்கள் 100 பேர். இவ்வெண்ணிக்கை உயர முக்கிய காரணம் எங்களது பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்போர் வெளி ஊர்களில் பெண்பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. தற்போது வீட்டுக்கு அருகாமையில் பள்ளி இருப்பதால் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
மகளிர் சுயஉதவிக்குழுவை எடுத்துக்கொள்வோமானால் அவர்களின் தலைமைப் பண்பு பொறுப்புணர்வு கடைமையுணர்ச்சி ஆகியவற்றை கண்கூடாக காணமுடிகிறது. வங்கி மேலாளர்கள் அக்குழுக்களுக்கு கடன் வழங்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த ஒரு சான்று போதாதா பெண்கள் பொது வாழ்வில் நன்கு ஒளி வீசுவார்கள் என்பதை அறிய. ஒரு அரசியல் கட்சி பொறுப்பு களை பகிர்ந்தளிக்கையில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. திறமையான பெண்கள் நம்மிடம் இருந்தும் அவர்களுக்கு உரிய இடத்தை நாம் அளிக்க தவறுவதால் அவர்களின் திறமையை அறிய முடிவதில்லை. இம்மசோதாவை பொறுத்தவரை ஆண்களே கொடுக்கும் இடத்தில் இருப்பதே இம்மசோதா ஏன் தேவை என்பதற்கு உரிய பதில் ஆகும். பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தால் இம்மசோதாவிற்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்.
“Better Late Than Never” என்ற கூற்றிற்கு இணங்க இப்போதாவது பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை இயற்றி பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டு காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குவோமாக.
No comments:
Post a Comment