Tuesday, August 29, 2017

குவாண்டம் இயற்பியல் பற்றிய புத்தகம்

https://www.4shared.com/office/JLR5pvOaei/___online.html"There is no difficult topics in science but there is lack of persons to make it easy"
குவாண்டம் இயற்பியல் பாடம் அறிவும் கற்பனைத் திறனும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே புரியும்.
இந்த புத்தகம் எவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்ட ஒன்று. சிறிய புத்தகம் தான் தவறாமல் படியுங்கள்.

https://www.4shared.com/office/JLR5pvOaei/___online.html

Monday, August 28, 2017

லால்குடி டேஸ்-4

எங்கள் பள்ளியின் ஆசான்கள்

அதிகாலை எழுந்து அடித்துப் பிடித்து பேருந்து பிடித்து செந்துறை எல்லாம் சுற்றிக் கொண்டு மூச்சிறைக்க முதல் நாள் வகுப்புக்குள் நுழைந்தாயிற்று.
உள்ளே போனால் எல்லோரும் புதிய முகம். எவனும் என்னை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. எங்கே இட.ம் காலியாக இருக்கிறது என்று நோட்டமிட்டேன். இரண்டாவது பெஞ்ச் மூன்றாவது பெஞ்ச் மற்றும் கடைசி பெஞ்ச் இவற்றில் தான் ஓரிரண்டு இடங்கள் காலியாக இருந்தன.
கடைசி வரிசையில் இருந்தோரெல்லாம் பொன்னம்பலத்தின் சின்னத்தம்பி சீருடையில் இருப்பது போல கரடு முரடாக இருந்தார்கள். ’இந்த மூஞ்சிகள எல்லாம் பாத்தா படிக்கிற மாதிரியே தெரியலையேஇது மூன்றாவது வரிசை. இரண்டாம் வரிசை, ஒரு பக்கம் குண்டாக ஒருவன் அடிக்கடி நெஞ்சில் சிலுவை போட்ட படி இருந்தான். ரைட் இவன் பக்தி பழமா இருக்கான். கண்டிப்பா நல்ல பையனா இருப்பான்(?!). அட பக்கத்தில் ஒருவன் நல்ல சிவப்பு இவன் அவனை விட நல்ல பையனா இருப்பான். ’ஏங்க சிவப்பா இருப்பவன் எங்கேயாவது கெட்டவனா இருப்பானா?’ இது தான் எனக்கு ஏற்ற இடம்.
முக்கால் வாசி பேர் லால்குடிப் பள்ளியிலேயே படித்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் கசமுசா கசமுசா என்று பேசியபடியே இருந்தார்கள்.
நான் மட்டும் திரு திரு என் விழித்தபடி அமர்ந்திருந்தேன். அருகில் இருந்த குண்டுப் பையனிடம் “ஏங்க உங்க பேர் என்னங்க?”
“என்னய்யா வாங்க போங்கன்னுட்டு என் பேர் கெய்சர்”
பக்கத்தில் இருந்த சிவப்பு மனிதனிடம் “உங்க பேர்”
“எது உங்க பேரா? என் பேர் கோபிநாத் டா வாடா போடான்னே பேசலாம்“
முன்வரிசையில் சின்னஞ்சிறிய பையன்கள் இருவர் அமர்ந்திருந்தனர். யாரும் அவர்களது தம்பிகளை அழைத்து வந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.
”டேய் அவனுங்க தான் மகேஸ்வரன், சண்முகம் போன வருஷம் ஸ்கூல் ஃபர்ஸ்ட், செகண்ட்”
“அப்படியா என்ன மார்க்?“
“464 மற்றும் 459“
“ஆத்தாடி இவ்ளோ மார்க்கா“ நானும் எங்கள் பள்ளியில் இரண்டாம் மதிப்பெண்தான். ஆனாலும் இவர்களுக்கும் எனக்குமான மதிப்பெண் இடைவெளி ரொம்ப அதிகமாக இருக்கே. இவர்களைத் தாண்டி சார்ங்கள இம்ப்ரஸ் பண்ணனுமே என்ற கவலை உண்டாயிற்று.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நெற்றியில் உள்ள மொத்தப் பரப்பிலும் குங்குமத்தை கொட்டிக் கொண்டு ஒருவர் உள்ளே நுழைந்தார். நான் அடித்துப் பிடித்து எழுந்து நின்றேன். வகுப்பில் என்னைத் தவிற யாரும் எழவில்லை. எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர்.
“டேய் அவரு பியூன்டா“ இது கோபிநாத்.
அடுத்த தாக அழுக்கு வேட்டி மற்றும் கலர் மங்கிய சட்டையோடு ஒருவர் நுழைந்தார். ’நான் எந்திருக்க மாட்டேன்பா’. ஆனால் எல்லோரும் எழுந்து நின்றனர்.
“டேய் எந்திரிடா தமிழ் அய்யாடா“ என்று கெய்சர் கிசுகிசுத்தான்.
முதல் நாளே பாடத்திற்குள் செல்லாமல் பள்ளியின் அருமை பெருமைகள் பற்றி சொல்லிக் கொண்டே போனார் தமிழ் அய்யா. இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இலால்குடி வழியாக சுற்றுப் பயணம் சென்றவர் நூற்றாண்டு விழா கண்ட பள்ளி என்ற பதாகையை பார்த்து இறங்கி பள்ளியை சுற்றிப் பார்த்து சென்றதாக பெருமை பொங்க கூறினார். அய்யாவுக்கு “ழ“ வே வரவில்லை. அப்புறம் பிரிதொரு நாளில் கூறினார் “இந்த ஜெயங்கொண்டம் ஏரியா காரங்க தமிள தமிழ்ன்னும் வாளைபளத்த வாழைப்பழம்னும் கூறுவார்கள். அவர்களுக்கு உச்சரிப்பே வராது” என்றார். பையன்கள் அனைவரும் என்னை நோக்கி கை காண்பித்து கிண்டலடித்தனர். நிர்வாண ஊரில் “உடுக்கை”யோடு அலைந்தவனாய் என்னை உணர்ந்தேன். அவரது எண்ணத்தில் தமிழில் உள்ள எழுத்துக்கள் “ல,ள, ள(ழ)“
அடுத்ததாக வேதியியல் ஆசிரியர் செல்வம் அவர்கள் வந்தார். சற்றே உயரம் குறைவாகவும் சற்றே பருத்தும் காணப்படுவார். அவர்தம் இளமைக்கால சிகையலங்காரமான காதைச் சுற்றி சுருள் சுருளாக முடியை வளர்த்து காதை மூடியிருந்தார். மாணவர்களை “சார்“ எனவும் “வாங்க போங்க“ எனவும் அன்புடனும் மரியாதையுடனும் விளித்தார். எனக்கு மிகப் பிடித்தமானவர். இரண்டொரு முறை மாணவர்கள் யாரும் விடையளிக்க இயலாத கேள்விகளுக்கு நான் விடையளித்த காரணத்தினால் என் மீது அன்பு பாராட்டுபவர்.
அடுத்து உயிர் விலங்கியல் பாடவேளை. நிர்மலா மேடம். ஒல்லியாக உயரமாக இருப்பார். மாணவர்களிடத்தில் மிக்க அன்பு கொண்டவர். கண்டிப்பு காட்ட தெரியாதவர். பசங்க அவர் மடியில் உட்காராத குறைதான். எல்லா பசங்களும் ரொம்பவும் உரிமை எடுத்துக் கொள்வார்கள் அவரது பாட வேளையில். லேபில் தான் வகுப்பு எடுப்பார். “ப“ வடிவ கட்டிடத்தின் தரைதள வலது மூலைதான் அவர்களது ஆய்வகம்.
அப்படியே இடது மூளைக்கு சென்றால் தாவரவியல் ஆய்வகம். தாவரவியல் ஆசிரியை பெயர் இன்றளவிலும் தெரியாது. ரொம்ப சின்சியர். ஆனால் குரலில் ஏற்ற இறக்கம் இல்லாமல் மொத்தப் புத்தக விஷயங்களையும் நடத்துவார். பேசும் போது வாயில் இருந்து “தீர்த்தம்“ ஸ்பிரே ஆகும். எல்லா பீரியடிலும் முதல் பெஞ்சுக்கு முண்டியடிப்பவர்கள் இந்த பீரியடில் மட்டும் இரண்டாம் அல்லது மூன்றாம் பெஞ்சுக்கு ஓடுவார்கள். “தீர்த்தத்தில்” குளிக்க யாருக்குத் தான் பிடிக்கும்.
எனக்கு கணிதப் பாடம் எடுத்த ஆசிரியை மதிமலர் சுகுமாறன் அவர்கள். மேல்நிலை கணிதப் பாடத்தைப் பொறுத்த வரையில் புகுமுக மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம்.
ஏனென்றால் கீழ் வகுப்புகளில் அல்ஜீப்ராவில் மட்டுமே வரும் ஆங்கில எழுத்துக்களான x,y,z எல்லாம் மேல்நிலையில் எல்லா பாடங்களிலும் வரும். அல்ஜீப்ராவை வசதியாக விட்டுவிட்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கூட எடுத்த விடுவார்கள் சாமர்த்திய சாலிகள். ஆனால் அவர்களுக்கு மேல்நிலையில் ஒன்றும் விளங்காது.
 எல்லா பாடங்களிலும் இயற்கணித நுட்பங்கள் பயன்படும். அதனால் மேல்நிலை வகுப்புகளில் பாடம் நடத்தும் போது தேவைப் படும் போதெல்லாம் மாணவர்களை ஃப்ளாஷ்பேக்கில் பின்னோக்கி அழைத்துச் சென்று அந்த விஷயங்களை நினைவூட்டியபடியே நடத்தினால் தான் அவர்களுக்கு புரியவைக்க இயலும். இல்லை என்றால் ஆசிரியர் பேசுவது சைனீஷ் பாஷை போலத்தான் இருக்கும். மாணவர்களின் நிலைபற்றி கவலை கொள்ளாமல் நடத்திக் கொண்டே சென்றால் பிரயோஜனம் இல்லை.
இயற்பியல் ஆசிரியர் அருணாச்சலம் அவர்கள் தனது ஓய்வு பெறும் வருடத்தில் இருந்தார். எங்கள் செட் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு ஓய்வு பெற்றார். அருமையாக பாடம் நடத்துவார். ஆனால் பெருங்கோபக் காரர். செய்முறையை பொறுத்தவரை நான் அவரின் அபிமானத்திற்கு உரிய வகையில் நன்றாக செய்வேன். என்னுடைய ரெக்கார்ட் நோட்டையே ஒரு முறை தூக்கி வெளியே வீசி விட்டார். ஒரு அட்டவணை தவறாகி விட்டதால் “பேட்ச்“ ஒர்க் பண்ணி இருந்தேன். ஒட்டுவதற்கு ஆஸ்டல் சாதத்தை பயன் படுத்தியதால் அங்கே ஒரு மாடர்ன் ஆர்ட் உருவாகி இருந்தது. பாவம் அவர் மாடர்ன் ஆர்ட்டை எல்லாம் ரசிக்கிற மன நிலையில் இல்லை போல.
ஆங்கில ஆசிரியை பெயரும் நினைவில் இல்லை. அவர்கள் எங்கள் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரின் துணைவியார் என்கிற அளவில் ஞாபகம் உள்ளது. பெரிய அளவில் கண்டிப்பும் இருக்காது. செல்லமும் கொடுக்க மாட்டார். அவர் நடத்தும் கதைகளை கேட்டு முக்கிய வார்த்தைகளை மட்டும் தெரிந்து கொண்டு நடு நடுவுல “மானே தேனே பொன்மானே” எல்லாம் போட்டு  நானே essay, paragraph எழுதிவிடுவேன். அதை அவர் என்றும் குறை கூறி மதிப்பெண் குறைத்தது கிடையாது. பாராட்டியதும் கிடையாது.
ஒரு நாள் கடைசி பாடவேளையில் வழக்கம் போல கச முச என்று பேசிக்கொண்டு இருந்தோம். பக்கத்து வகுப்பறையில் கணினி பிரிவிற்கு கணிதப்பாடம் நடந்து கொண்டிருந்தது. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். சத்தம் தாளாமல் வேகமாக வந்து “ஏண்டா சத்தம் போடுறீங்க “$#@%$#^&*” (ஆத்தாடி எம்மாம் பெரிய கெட்ட வார்த்தை) நான் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டேன். மாணவர்கள் பழைய மாணவர்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஆசிரியர்களும் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்பதை அறிந்து கொண்ட நாள். (அவர் ஒரு நல்லாசிரியர். திறமையாக போதிக்க கூடியவர் என்பதை போக போக உணர்ந்து கொண்டேன்)






Tuesday, August 22, 2017

அரசு ஊழியர்கள் போராட்டம் எதற்கு?


பீகாரில் துப்புரவு பணியாளர் வேலைக்கு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்று செய்தித் தாளில் படிக்க நேர்கிறது
பத்தாம் வகுப்பையும் பனிரெண்டாம் வகுப்பையும் கல்வித் தகுதியாக உடைய JUNIOU ASSISTANT,VAO AND LAB ASSISTANT போன்ற பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயின்றோரை மொத்தமாக தள்ளி விட்டு விட்டு பொறியியல் பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு படித்தோரும் வென்று பணிகளை கைப்பற்றி விட்டார்கள். இது தமிழகத்தில் தான்.
“கால் காசா இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாக இருக்க வேண்டும்”
“கழுத மேச்சாலும் கவர்ன்மெண்ட் கழுதையா மேக்கணும்” என்கிற சொலவடை இருப்பது நமது தமிழ்நாட்டில்தான்.
எட்டாம் வகுப்பு படித்தால் கூட எம்ப்ளாய்மெண்ட்டில் பதிந்து மூன்றாண்டுக் கொரு முறை நம்பிக்கையோடு பதிவை புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் 60 வயது வரை.
நாட்டில் அனைவருக்குமே ஏதானும் ஒரு வகையில் அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்பது லட்சியமாகவோ அல்லது வாழ்நாள் கனவாகவோ உள்ளது.
ஏன் அரசு வேலை அதில் அப்படி என்ன உள்ளது?
பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம். இந்த இரண்டு தானே அரசு வேலை மீது மக்களை நாட்டம் கொள்ள வைக்கிறது.
பிராமணியம் என்ன செய்கிறது. 3% உள்ள நாம் கிட்ட தட்ட 99% இடத்தில் அமர்ந்து இருந்தோம். ஆனால் இப்போ இட ஒதுக்கீடு என்கிற பேரில் எல்லா பயலுவலும் வந்துட்டான். நாமெல்லாம் பூரா தனியார் நிறுவனங்களிலும் உயர்பதவி வகித்தாலும் பணிப் பாதுகாப்போ ஓய்வூதியமோ கிடையாது. மெல்ல அரசு வேலையிலும் இதெல்லாம் கிடையாது என்று ஆக்கி விட்டால் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆக்கி விடலாம். அல்லது DISINVESTMENT என்கிற பேரில் பூரா அரசு கம்பெனிகளையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டால் அரசு வேலையும் கிடையாது இட ஒதுக்கீடும் கிடையாது.
“கல்யாண வீடா இருந்தால் மாப்பிள்ளையா இருக்கணும் எழவு வீடா இருந்தா பொணமா இருக்கணும். மொத்த த்தில் மாலையும் மரியாதையும் எனக்கு மட்டும் தான் கிடைக்கணும். இல்லன்னா தொலைச்சுபுடுவேன் பாத்துக்கோ”
இந்த அடிப்படையில் தான் அரசு வேலைமீதான கவர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை காலி செய்ய படிப்படியாக அரசு முயற்சித்து வருகிறது.
அதன் முதல் படி “ஓய்வூதியத்தை நிறுத்து“ என்று சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது சட்டம் கொண்டு வந்து பங்களிப்பு ஓய்வூதியம் என்கிற மோசடி நாடகம் அரங்கேறியது. மத்திய அரசின் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் இணங்காத சிங்கமாக இருந்த ஜெயலலிதா அவர்கள் இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார். (இதில் முன்னவர் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இல்லாதவர் பின்னவர் பிராமணர்)
அரசாங்கம் காங்கிரஸா இருந்தாலும் பிஜேபி யாக இருந்தாலும் ஆள்வது என்னவோ பிராமணீயம் மட்டுமே. இவை தவிர்த்து இங்கே சமூக நீதி ஆட்சி  செய்தது இரண்டு வருடங்கள் மட்டுமே. அப்போது தான் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல் செய்யப் பட்டு ஓபிஸி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பொறுக்குமா பிராமணீயம் தூக்கி எறிந்து விட்டார்கள்.
அடுத்தக் கட்டமாக பணிப் பாதுகாப்பில் கை வைக்கும் வேலையையும் பாஜக அரசு துவங்கி விட்டது. Performance based increment and firing policy என்றெல்லாம் கொண்டு வரப் போகிறார்கள். இப்படியே போனால் அரசு ஊழியர்கள் மேலதிகாரி முன்னால் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு “கும்புடறேன் சாமி” என்று சொல்லப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கூடியமட்டும் தனியார் மயம் அல்லது சலுகை பறிப்பு என அரசாங்கம் செயல் படும்போது அரசு ஊழியர்கள் வாலாவிருக்கலாமா? பின்னால் வேலைக்கு வரத் துடித்துக் கொண்டு இருக்கும் இளம் தலைமுறையினருக்கு நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளை பாதுகாத்து வைத்துச் செல்ல தானே இந்த போராட்டம்.
போராட்டம் என்றாலே சம்பள உயர்வு மட்டுமே என்று எண்ணாதீர்கள். எல்லா குடும்பத்தினரும் கனவு காணும் அரசு வேலை அதற்குறிய ஓய்வூதியமோ பணிப் பாதுகாப்போ இல்லை என்றால் இவ்வளவு மெனக்கெட்டு பரிட்சை எல்லாம் எழுத வேண்டியதில்லை. தனியார் கம்பெனிக்கு போய்விடலாம்.
அரசு ஊழியர்களின் உரிமைக்குரல் அவர்களுக்கு மட்டமானது அல்ல. ஏனென்றால் அவர்களது இடம் சாஸ்வதம் அல்ல. பின்னால் வரப்போகும் இளம் தலைமுறையினரும் அந்த உரிமைகளைப் பெற்று சுயமரியாதையோடு பணியாற்ற வேண்டும்.
பணியையே துறந்து பிள்ளை பெற்று பிறகு புதிதாக விண்ணப்பித்து புதிய பணியாளராக சேர வேண்டும் என்பது தான் ஒரு காலத்தில் பெண்களுக்கு விதிக்கப் பட்டதாக இருந்தது. ஒரு அம்பேத்கர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக வந்தபோது தானே மகப்பேறு விடுப்பு என்கிற பேரில் இந்த நிலை மாறியது. இப்போது தொழிலாளர் நலனைப் பேணும் அம்பேத்கர்கள் தொழில் துறை அமைச்சர்களாக இருப்பதில்லையே. அதனால் தான் எங்கள் போராட்டம்.




Sunday, August 20, 2017

லால்குடி டேஸ் -3

இரயில் பாதை நினைவுகள்
லால்குடியின் கழுத்தை சுற்றி போடப்பட்ட ஆரமாக இரயில் பாதை ஊரைச் சுற்றி அழகாக வளைந்து நெளிந்து ஓடும். அந்த நாட்களில் மின்மயமாக்கல் இல்லை. இரட்டைப் பாதையும் இல்லை. ஒரு ஒற்றை இரயில் பாதை ஈரிணை வளைவரைகளாக செல்லும். நடுவில் நின்று பார்க்கும் போது அவை ஈரிலாத் தொலைவில் தொட்டுக் கொள்வது போல தோன்றும். ஆனாலும் அவை இரண்டும் டி.இராஜேந்தரும் அவர்தம் கதாநாயகியும் போல தொடாமலே காதல் கொள்பவை.
பள்ளியில் இருந்து வந்தவுடன் பையை ஒரு மூலையில் வீசிவிட்டு டிரெஸ் மாற்றிக் கொண்டு நாங்கள் வழக்கமாக ஓடும் இடம் இரயில் பாதை. விடுதி இருக்கும் தெருவில் இருந்து வயல்வெளிக்கு செல்லும் குறுகிய பாதையில் பின்புறமாக சென்றால் அது ஒரு சிறு வாய்க்கால் பாலம் கடந்து இரயில் பாதையில் கொண்டு நிறுத்தும்.
பாதை வந்தவுடன் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டு அந்த குறுகிய இடத்தில் கால் வைத்து பேலன்ஸ் செய்து நடந்து செல்லும் போட்டி நடைபெறும். புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் இந்த மாதிரி செயல்கள் எனக்கு அடியோடு பிடிப்பதில்லை. ஆகையால் நான் இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் நடந்து போட்டியை வென்று விடுவேன். இருந்தாலும் பெருந்தன்மையோடு வெற்றி பெற்றதாக அறிவிக்க கோருவதில்லை.
எங்களது இலக்கு தினம் தோறும் வைகை எக்ஸ்பிரஸ் இரயிலின் வேகத்தைப் பார்த்து வியப்பது. இரயில் பாதையில் சற்று தெற்கு நோக்கி நடந்தோமானால் ஒரு வாய்க்கால் பாலம். அதன் இடது புறம் சிமெண்ட் கட்டை அமர்ந்து பேச வசதியாக இருக்கும். அதன் கீழே தண்ணீர் ஓடும். மாலைக்கடன் செலுத்தினால் சுத்தம் செய்து கொள்ளவும் வசதி. தண்ணீரை அழுக்காக்கி எங்களை சுத்தம் செய்து கொள்வோம். எனவே அதுதான் எங்கள் மாலைநேர மீட்டிங் பாய்ண்ட்.
இன்று ஒரு ”ஆபரேஷன்” செய்ய உத்தேசித்து வந்துள்ளோம்.
டேய் தூரத்துல இரயில் வர சத்தம் கேட்குதுடா. சீக்கிரம் அதை எடு
ஏய் இந்தா இது ஒண்ணுதான் இருக்கு பார்த்து செய்
சரிடா இன்னைக்காவது நாம நெனச்சது சரியா அமையணும்
பேசிக்கிட்டு இருக்காத சீக்கிரம் வச்சிட்டு வா ஓடிடலாம்
மெல்ல குனிந்து இரயில் பாதையில் கவனமாக அதை வைத்துவிட்டு வருகிறான் எனது நண்பன். இன்றைக்காவது அது வெற்றிகரமாக முடிய வேண்டுமே என மனது அடித்துக்கொண்டது.
வைகை எக்ஸ்பிரஸ் அதிக பயணிகளோடும் அதிக வேகமாகவும் வரும் இரயில். எனவே அது வரும் போது சுற்றுப் புறமெல்லாம் அதிரும். தூரத்தில் வரும் போதே நல்ல அதிர்வை தண்டவாளத்திலும் காற்றிலும் உணர முடிந்தது.
இரயில் பாதையில் அது கம்பீரமாக அமர்ந்திருந்தது. இரயில் கண்ணுக்கு எட்டியது. தடதடவென்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வேகத்தில் அது அதிர்ந்தது. கீழே விழுந்துவிடக் கூடாதே என்று கவலையாக இருந்தது.
இரயில் பக்கத்தில் வர வர எங்களுக்கு திக் திக் என்று இருந்தது. இரயில் பாதையில் இருந்தஅதையும் இரயிலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு பதட்டத்தோடு நின்று கொண்டு இருந்தோம்.
இரயில் வேகமாக வந்தது. இப்போது இரயிலை விடுத்து அதன் சக்கரங்களை குறிபார்த்து எங்கள் பார்வையை தாழ்த்தினோம். அதிவேகமாக சுழன்றோடும் கனத்த கரு வளையங்கள்.
சக்கரம் நெருங்கியது. பக்கத்தில் வந்து விட்டது. ஆகா வெற்றிகரமாக மேலேறிவிட்டது.
ஹேய்என்று சந்தோஷக் கூச்சல் இட்டோம்.
இரயில் சென்றதும் வேகமாக சென்ற பாதையை ஆராய்ந்தோம். பாதை நன்கு சூடாக இருந்தது. அங்கே நாங்கள் வைத்த அந்த அலுமினியபத்து பைசாநாணயம் இரயிலால் நசுக்கி இழுக்கப்பட்டு மெல்லிய தகடாக ஆகி இருந்தது.
இந்த ஆய்வினை நாங்கள் பலமுறை மேற்கொண்டோம். இந்த முறைதான் பாதையில் இருந்து நழுவி விழாமல் வெற்றிகரமாக சோதனை முடிந்தது.
செவ்வானம் வெளிச்சம் தின்று கருவானமாக நிறம் மாற ஆரம்பித்தவுடன் நாங்களும் மெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இருபுறமும் அடர்ந்த வாழைத்தோப்புகளாக இருந்ததால் வழியில் நெளியும் வாழை மட்டைகள் எல்லாம் பாம்புகள் போல அந்த இருளில் எனக்கு தெரிந்தது. அதனால் சற்று வேகமாக நடந்தேன்.
ஒரு மரத்தின் வாழைத்தார் சற்று முற்றிய நிலையில் மேல் புறம் நான்கைந்து பழங்கள் மஞ்சள் நிறமாக மின்னியது. அப்புறம் என்ன அடுத்த இரண்டு மணித்துளிகளில் அது எங்கள் வயிற்றுக்குள் தஞ்சம் அடைந்தது.
அய்யன் வாய்க்கால் என்பது காவிரியில் இருந்து நீரினை எடுத்து வந்து லால்குடியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வழங்கும் நீர் நரம்பு. அய்யன் வாய்க்கால் வற்றிய நாட்களில் ஆழ்குழாய் பாசனம் மூலம் விவசாயம் இடைவிடாமல் நடக்கும். மின் மோட்டார்கள் ஓடும் நாட்களில் எங்களுக்கு அருவிக் குளியல் அனுபவம் தான். தண்ணீர் அவ்வளவு நிறையவும் வேகமாகவும் வரும்.
அந்த வேளைகளில் எங்கள் காலைக் கடன்களுக்கான கலெக்ஷன் கவுண்டர்கள் எது தெரியுமா? இரயில் பாதையின் ஓரங்கள் தான். அதிலும் குறைந்த பட்சஎத்திக்ஸ்உடன் ஆள்நடமாட்டம் குறைவாகவுள்ள இடங்களையே தேர்வு செய்வோம்.
”சுற்றுப் புறத் தூய்மை குறித்து அறிவு இல்லாத அற்ப பதர்களா!“ நீங்கள் எங்களை வசைபாட எண்ணலாம். 1992 ல் விடுதிக்கு என்றே கட்டப் பட்ட கட்டிடங்களில் கூட கழிவறைகள் பெயரளவில் தான் இருந்தன. எங்கள் விடுதி மாதிரி தனியார் கட்டிடங்களில் இயங்கும் விடுதியில் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கருணையுடன் எங்கள் செயல்களை வசைபாடாமல் கடந்து போய்விடுங்கள்.
அந்த காலை வேளைகளில் பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி செல்லும். ஆனால் அதனை நின்று ரசிக்கவெல்லாம் நேரம் இருக்காது. நாங்கள் எங்கள் கடன்களிலும் மின்மோட்டார் அல்லது அய்யன் வாய்க்கால் நோக்கிய ஓட்டங்களிலும் பிசியாக இருப்போம்.
பிரிதொரு நாளில் நடந்த மற்றொரு நினைவு. அன்று நல்ல மழைக்காலம். மாலை ஐந்து மணிக்கெல்லாம் நல்ல பனி சூழ்ந்து ஊட்டி போல ஊரே காட்சியளித்தது. ஒரு ஆறு மணிக்கெல்லாம் தப தபவென்று ஒரு ஐந்தாறு நண்பர்கள் இரயில் பாதையில் இருந்து ஓடி வந்தார்கள். ஒருவன் ஆடையை அவிழ்த்துப் போட்டு உடை மாற்றினான். மற்றொருவன் பின்பக்கம் கிணற்றடியில் வாந்தி எடுத்தான். மற்றொருவன் பின் புற அடி பம்பில் குளிக்க ஆரம்பித்தான்.
“என்னடா ஆச்சி?”
“ஆக்ஸிடென்ட் டா”
“யாரும் இரயிலில் அடி பட்டுட்டாங்களாடா?”
நடந்த சம்பவம் இதுதான்.
பத்து பதினைந்து அடிதூரத்திற்கு அப்பால் பார்க்க இயலாத பனிப்பொழிவு. ஒரு பாட்டி ஒரு பசுமாடு மற்றும் ஒரு இருபது ஆடுகள் மற்றும் குட்டிகளை இரயில் பாதை ஓரத்தில் மேய்த்தபடி வீடு நோக்கி நடத்தி வந்திருக்கிறார்.
இடையில் ஒரு சிற்றோடைப் பாலம், அடியில் மழையால் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு. எனவே அனைவரும் இரயில் செல்லும் பாலத்தின் மீதேறி கடந்து கொண்டு இருக்கிறார்கள். பாலம் முடிந்து கீழே இறங்க வேண்டிய தருணம். சற்று அலட்சியமாக தண்டவாளத்திலேயே நடந்தபடி வருகிறார். அடர்பனியில் இரயில் வரும் ஓசை கேட்கவியலவில்லை. டிரைவரும் காணும் வகையில் சூழல் இல்லை பனி மறைத்து விட்டது. சற்று அருகில் வந்தவுடன் கவனித்து ஆரன் அடித்து இருக்கிறார்.
பாட்டி தன் உயிர் வெல்லக் கட்டி என நினைக்காமல் ஆடுகளையும் மாடுகளையும் பத்தியபடி அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அங்கே சென்றிருந்த நமது நண்பர்கள்
“பாட்டி நீ இறங்கு பாட்டி“ என்று கத்தி இருக்கிறார்கள்.
அதெற்கெல்லாம் வைகையின் வேகம் அவகாசம் அளிக்கவில்லை.
“சடசட“ என்று பத்து ஆடுகள் ஒரு மாடு மற்றும் அந்த பாட்டி என அனைவரையும் இரத்தச் சகதியாக்கி நொடியில் சென்றுவிட்டது அந்த வைகை இரயில்.
சற்றேரக் குறைய ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிக்கிய ஆடுகளையும் மாட்டையும் அந்தப் பாட்டியையும் பிய்துப் போட்டுக் கொண்டே சென்று விட்டது அந்த உலோக அரக்கன்.
பைப் அடியில் குளித்தவன் குளித்துவிட்டு லுங்கியாலே துவட்டிக் கொண்டு வந்தான். லுங்கியில் இருந்த சதைத் துணுக்கு அவன் முகத்தில் ஒட்டியது.
“டேய் சதைடா, நல்லா துடைடா” என அலறினோம்.
அது பாட்டியோடதா, ஆட்டினுடையதா அல்லது அந்த பசுமாட்டினுடையதா என்கிற பயத்திலும் குமட்டலிலும்  அவனுக்கு அடுத்த இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல் வந்து விட்டது.
அன்பில் சாலையில் இருக்கும் இரயில்வே கேட் வழி செல்லும் அந்த பசுமை பிரதேசத்திற்கு அதன் பிறகு நாங்கள் சென்றதே இல்லை.
பள்ளியில் அந்த காலகட்டத்தில் செய்முறைப் பயிற்சிகள் முறையாக நடந்த காலம். எல்லா செய்முறைகளையும் செய்து பார்த்து அவர்தம் சொந்த ரிசல்ட் கொண்டு அப்சர்வேஷன் ரெக்கார்ட் எழுதி பிறகுதான் ரெக்கார்ட் நோட்டில் எழுதுவோம்.
ஒரு முறை பதினோறாம் வகுப்பில் தாவரவியல் ஆசிரியை செடிகள் கொண்டு ஹெர்பாரியம் தயார் செய்ய சொல்லி இருந்தார். நாங்கள் செடிகளை தேடி இரயில் பாதைகளில் அலைந்து திரிந்தோம். எங்கள் வழக்கமான பாலக்கட்டையை விடுத்து வடக்கு நோக்கி சென்றோம். அங்கே பெண்கள் பள்ளி அருகே இரயில் பாதையில் நிறைய செடிகொடிகள் இருக்கும் என நண்பர்கள் கூறியிருந்தார்கள்.
காலை பதினோறு மணி இருக்கும். நாங்கள் இரயில் தண்டவாளங்களில் இரண்டிரண்டு பேராக கைகோர்த்து பேலன்ஸ் செய்து நடந்து கொண்டு சென்றோம்.
தூரத்தில் ஒரு பேஸஞ்சர் இரயில் வந்து கொண்டு இருந்ததால் கீழே இறங்கி விட்டோம்.  எங்களுக்கு எதிரில் ஒரு தாத்தா தண்டவாளத்தில் வெற்றிலைப் பாக்கு பையை அவிழ்த்தபடி நடந்து வந்து கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் இரயில். எங்களுக்கு பக் என்று இருந்தது.
நாங்கள் எவ்வளவு கத்தியும் அவருக்கு கேட்க வில்லை. இரயில் ஆரன் சத்தம் கேட்டு அப்படியே ஒதுங்கியவரை இரயில் நெட்டி கீழே தள்ளி விட்டது.
பக்கத்தில் சென்று பார்க்கும்  தைரியம் இல்லை. மேலும் சதையால் முகம் துடைத்த நண்பனும் எங்கள் குழுவில் இருந்ததால் அவனது உடல் நிலை கருதியும் உடனே விடுதி திரும்பி விட்டோம்.
அடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் அதேப் பணிக்காக அங்கே சென்று செடிகள் தேடினோம் அங்கே மூடி பாதி கழற்றப் பட்ட நிலையில் ஒரு வாசனை சுண்ணாம்பு டப்பா கிடந்தது. அந்த தாத்தாவின் இறப்புக்கு மவுன சாட்சியான அந்த சுண்ணாம்பு குவளையை திறந்தோம். அப்போது தான் லால்குடியில் வாங்கி இருப்பார் போல ஒரு துளி சுண்ணாம்பு கூட எடுக்கப் படாத அந்த குவளையை விட்டெறிந்து விட்டு வந்தோம்.
இலால்குடியை சுற்றிச் செல்லும் ஆரம் என்று தவறாக அல்லவா சொல்லி விட்டேன். உண்மையில் அது அழகிய இயற்கை சூழல் நடுவே கொத்துவதற்கு காத்துக்கொண்டு படுத்திருக்கும் இரும்புப் பாம்பு என்பது தான் சரி. இரயில் பாதை அழகோடு பல ஆபத்துக்களும் நிறைந்தது.



மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...