Tuesday, August 15, 2017

மத்திய அரசின் பகீரத பிரயத்தனம்.


ஆட்டுக்குத் தாடி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத்தான் தமிழ்நாட்டுக்கு நீட் முக்கியம்ங்க. (நீட்டால ஒரு “கூந்தல்“ புரயோஜனமும் இல்லங்கறத இதுக்கு மேல இடக்கரடக்கலோட சொல்லமுடியாதுங்க.)
சென்றமுறை சென்னையில் இருந்து திரும்பியபோது ரயிலில் இருவர் உரையாடினர். “நீட்“ எல்லாம் ரொம்ப முக்கியம் தாங்க. எல்லா பயலும் டாக்டர் ஆகுறதா. தகுதியும் திறமையும் உள்ளவன் ஆகட்டும்ங்க. என்று சகட்டுமேனிக்கு பேசிக் கொண்டு வந்தனர்.
“இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்கிற அளவுக்கு சிறந்த நகரம் எது தெரியுமா?“ என்றேன்
“…“
“சென்னைதான்”
”மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற இலக்கை சற்றேறக்குறைய எட்டிய மாநிலம் எது தெரியுமா?”
”,,,“
“தமிழ்நாடுதான்”
“எனக்குத் தெரிந்த பல தமிழ் நாட்டு மருத்துவர்கள் பல மாநில ஏன் பல நாடுகளில் வேலை பார்க்கிறார்கள்”
“அப்படியா?!”
“என்னுடன் பணியாற்றிய எங்கள் தமிழ் அய்யா ராஜகோபால் அவர்களின் மகன் லண்டனில் ஒரு சர்ஜனாக உள்ளார். தனது தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சையை அங்கிருந்தே வீடியோ கான்ஃபரன்ஸில் மேற்பார்வை செய்தார்”
“என்ன இருந்தாலும் ஒரு தகுதி திறமை வேண்டாமா?“
“அப்படியா தகுதின்னு நீங்க எத சொல்றீங்க?! தகுதி என்பதற்கான அளவுகோல் எது?! நீங்க சொல்ற தகுதிய பார்த்து வாய்ப்பை மறுத்துட்டா அவன் எப்படி திறமையை வளர்த்துக் கொள்வான்? வாய்ப்பை மறுக்காதிங்க, முதல்ல உள்ளே வரட்டும் வந்தபின் அவன் திறமையை வளர்த்துக்குவான் அல்லது அவன் திறமையை வளர்த்தெடுக்க உதவி செய்வோம்.”
 “நான் மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் நீங்க சொன்ன தகுதி இல்லாமல் இருந்த காலத்தில் வந்தவர்கள் தான்”
“தகுதி காலத்திற்கு காலம் மாறுகிறது. ஒரு காலத்தில் பெண்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் “தகுதி“ இல்லை என மறுக்கப்பட்டது. முத்துலெட்சுமி ரெட்டி வந்து கதையை மாற்றி எழுதினார். அப்புறம் சமஸ்கிருதம் படித்தவர்களுக்குத்தான் மருத்துவக் கல்வி பயிலும் தகுதி உண்டென கூறினார்கள். (ஏன் குடுமியும் பூணூலும் இருந்தா தான் மெடிக்கல் காலேஜ்ல சேரலாம்னு சொல்லி இருந்தா ரொம்ப எளிமையா இருந்து இருக்குமே) அதுவும் திராவிடம் என்கிற உணர்வு மேலெழுந்த போது அடித்து நொறுக்கப்பட்டது”
“அப்படிங்களா?!”
“நான் கஷ்டப்பட்டு கடன வாங்கி வீடு கட்டி குடியேறும் போது அய்யறு வந்து கணபதி ஹோமம் என்கிற பேரில் நடு வீட்டில் உக்காந்து நாட்டாமை பண்ணுவான்ல. அந்த மாதிரி நாம கட்டி வளர்த்து ஆல விருட்சமா வளர்ந்து நிற்கும் மருத்துவ கல்விய நம்ம கையில் இருந்து பிடுங்கி அவன் நாட்டாமை பண்றதுக்கு பேரு தான் “நீட்” தேர்வு சூழ்ச்சி”
“ஏங்க சூழ்ச்சி என்று பெரிய வார்த்தைலாம் சொல்றிங்க?”
“நீட் வேணும்னா மத்திய பாடத்திட்டம் வேணும். எல்லோரையும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நோக்கி ஓட வைக்கலாம். அங்கே சமஸ்கிருதம் கட்டாயம். வரலாற்றில் தமிழர் வரலாறு மறைக்கப் படும். தமிழ் மொழி விருப்ப மொழி ஆக்கப் படலாம். தமிழர் வரலாறு தெரியாத ஒரு தலைமுறை மெல்ல உருவாகும். அப்புறம் இங்கே பொங்கலை விட விநாயகர் சதுர்த்தி அதி முக்கியம் பெறக்கூடும். பண்பாட்டு படையெடுப்பின் நவீன வடிவம் தான் இது என்று கூட கூறமுடியும்”
“இந்தியா என்பது பலதரப்பட்ட கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இணைந்து வாழும் நாடு. அதனால் தான் அதனை துணைக்கண்டம் என்று கூறுகிறார்கள். அவரவர் மரபையும் கலாச்சாரத்தையும் மதித்து போற்றி அதிகாரங்களை பகிர்ந்து அனைவருக்கும் முக்கியத்துவம் தந்து வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்க வேண்டுமே ஒழிய இந்தியாவுக்குள்ள வந்துட்டியா இதுதான் உன் கலாச்சாரம், இதுதான் உன் கடவுள் என்கிற ரீதியில் சட்டைக்காக கை கால்களை வெட்டிக் கொள்ளுமாறு கூறக் கூடாது“.
“மக்கள் நலனுக்காக சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கலாம். இந்தியாவை “இந்து“யா வாக ஆக்க எண்ணி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காது. கடைசியில் அவர்கள் கோமாளி ஆக்கப் படுவார்கள்.“

“இறுதியாக ஒன்று, ஹிட்லர் நல்ல சத்தத்தோடு உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதில் வல்லவர். அவரது காலத்தில் ஜெர்மனியில் நல்ல வளர்ச்சி இருந்தாலும் நாடு கடைசியில் என்னவானது?. எனவே நாடகத் தோரணையில் சத்தமாக உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவோரை நம்பாதீர்கள் அது மோடி என்றாலும் கூட”

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...