Sunday, August 20, 2017

லால்குடி டேஸ் -3

இரயில் பாதை நினைவுகள்
லால்குடியின் கழுத்தை சுற்றி போடப்பட்ட ஆரமாக இரயில் பாதை ஊரைச் சுற்றி அழகாக வளைந்து நெளிந்து ஓடும். அந்த நாட்களில் மின்மயமாக்கல் இல்லை. இரட்டைப் பாதையும் இல்லை. ஒரு ஒற்றை இரயில் பாதை ஈரிணை வளைவரைகளாக செல்லும். நடுவில் நின்று பார்க்கும் போது அவை ஈரிலாத் தொலைவில் தொட்டுக் கொள்வது போல தோன்றும். ஆனாலும் அவை இரண்டும் டி.இராஜேந்தரும் அவர்தம் கதாநாயகியும் போல தொடாமலே காதல் கொள்பவை.
பள்ளியில் இருந்து வந்தவுடன் பையை ஒரு மூலையில் வீசிவிட்டு டிரெஸ் மாற்றிக் கொண்டு நாங்கள் வழக்கமாக ஓடும் இடம் இரயில் பாதை. விடுதி இருக்கும் தெருவில் இருந்து வயல்வெளிக்கு செல்லும் குறுகிய பாதையில் பின்புறமாக சென்றால் அது ஒரு சிறு வாய்க்கால் பாலம் கடந்து இரயில் பாதையில் கொண்டு நிறுத்தும்.
பாதை வந்தவுடன் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டு அந்த குறுகிய இடத்தில் கால் வைத்து பேலன்ஸ் செய்து நடந்து செல்லும் போட்டி நடைபெறும். புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் இந்த மாதிரி செயல்கள் எனக்கு அடியோடு பிடிப்பதில்லை. ஆகையால் நான் இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் நடந்து போட்டியை வென்று விடுவேன். இருந்தாலும் பெருந்தன்மையோடு வெற்றி பெற்றதாக அறிவிக்க கோருவதில்லை.
எங்களது இலக்கு தினம் தோறும் வைகை எக்ஸ்பிரஸ் இரயிலின் வேகத்தைப் பார்த்து வியப்பது. இரயில் பாதையில் சற்று தெற்கு நோக்கி நடந்தோமானால் ஒரு வாய்க்கால் பாலம். அதன் இடது புறம் சிமெண்ட் கட்டை அமர்ந்து பேச வசதியாக இருக்கும். அதன் கீழே தண்ணீர் ஓடும். மாலைக்கடன் செலுத்தினால் சுத்தம் செய்து கொள்ளவும் வசதி. தண்ணீரை அழுக்காக்கி எங்களை சுத்தம் செய்து கொள்வோம். எனவே அதுதான் எங்கள் மாலைநேர மீட்டிங் பாய்ண்ட்.
இன்று ஒரு ”ஆபரேஷன்” செய்ய உத்தேசித்து வந்துள்ளோம்.
டேய் தூரத்துல இரயில் வர சத்தம் கேட்குதுடா. சீக்கிரம் அதை எடு
ஏய் இந்தா இது ஒண்ணுதான் இருக்கு பார்த்து செய்
சரிடா இன்னைக்காவது நாம நெனச்சது சரியா அமையணும்
பேசிக்கிட்டு இருக்காத சீக்கிரம் வச்சிட்டு வா ஓடிடலாம்
மெல்ல குனிந்து இரயில் பாதையில் கவனமாக அதை வைத்துவிட்டு வருகிறான் எனது நண்பன். இன்றைக்காவது அது வெற்றிகரமாக முடிய வேண்டுமே என மனது அடித்துக்கொண்டது.
வைகை எக்ஸ்பிரஸ் அதிக பயணிகளோடும் அதிக வேகமாகவும் வரும் இரயில். எனவே அது வரும் போது சுற்றுப் புறமெல்லாம் அதிரும். தூரத்தில் வரும் போதே நல்ல அதிர்வை தண்டவாளத்திலும் காற்றிலும் உணர முடிந்தது.
இரயில் பாதையில் அது கம்பீரமாக அமர்ந்திருந்தது. இரயில் கண்ணுக்கு எட்டியது. தடதடவென்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வேகத்தில் அது அதிர்ந்தது. கீழே விழுந்துவிடக் கூடாதே என்று கவலையாக இருந்தது.
இரயில் பக்கத்தில் வர வர எங்களுக்கு திக் திக் என்று இருந்தது. இரயில் பாதையில் இருந்தஅதையும் இரயிலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு பதட்டத்தோடு நின்று கொண்டு இருந்தோம்.
இரயில் வேகமாக வந்தது. இப்போது இரயிலை விடுத்து அதன் சக்கரங்களை குறிபார்த்து எங்கள் பார்வையை தாழ்த்தினோம். அதிவேகமாக சுழன்றோடும் கனத்த கரு வளையங்கள்.
சக்கரம் நெருங்கியது. பக்கத்தில் வந்து விட்டது. ஆகா வெற்றிகரமாக மேலேறிவிட்டது.
ஹேய்என்று சந்தோஷக் கூச்சல் இட்டோம்.
இரயில் சென்றதும் வேகமாக சென்ற பாதையை ஆராய்ந்தோம். பாதை நன்கு சூடாக இருந்தது. அங்கே நாங்கள் வைத்த அந்த அலுமினியபத்து பைசாநாணயம் இரயிலால் நசுக்கி இழுக்கப்பட்டு மெல்லிய தகடாக ஆகி இருந்தது.
இந்த ஆய்வினை நாங்கள் பலமுறை மேற்கொண்டோம். இந்த முறைதான் பாதையில் இருந்து நழுவி விழாமல் வெற்றிகரமாக சோதனை முடிந்தது.
செவ்வானம் வெளிச்சம் தின்று கருவானமாக நிறம் மாற ஆரம்பித்தவுடன் நாங்களும் மெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இருபுறமும் அடர்ந்த வாழைத்தோப்புகளாக இருந்ததால் வழியில் நெளியும் வாழை மட்டைகள் எல்லாம் பாம்புகள் போல அந்த இருளில் எனக்கு தெரிந்தது. அதனால் சற்று வேகமாக நடந்தேன்.
ஒரு மரத்தின் வாழைத்தார் சற்று முற்றிய நிலையில் மேல் புறம் நான்கைந்து பழங்கள் மஞ்சள் நிறமாக மின்னியது. அப்புறம் என்ன அடுத்த இரண்டு மணித்துளிகளில் அது எங்கள் வயிற்றுக்குள் தஞ்சம் அடைந்தது.
அய்யன் வாய்க்கால் என்பது காவிரியில் இருந்து நீரினை எடுத்து வந்து லால்குடியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வழங்கும் நீர் நரம்பு. அய்யன் வாய்க்கால் வற்றிய நாட்களில் ஆழ்குழாய் பாசனம் மூலம் விவசாயம் இடைவிடாமல் நடக்கும். மின் மோட்டார்கள் ஓடும் நாட்களில் எங்களுக்கு அருவிக் குளியல் அனுபவம் தான். தண்ணீர் அவ்வளவு நிறையவும் வேகமாகவும் வரும்.
அந்த வேளைகளில் எங்கள் காலைக் கடன்களுக்கான கலெக்ஷன் கவுண்டர்கள் எது தெரியுமா? இரயில் பாதையின் ஓரங்கள் தான். அதிலும் குறைந்த பட்சஎத்திக்ஸ்உடன் ஆள்நடமாட்டம் குறைவாகவுள்ள இடங்களையே தேர்வு செய்வோம்.
”சுற்றுப் புறத் தூய்மை குறித்து அறிவு இல்லாத அற்ப பதர்களா!“ நீங்கள் எங்களை வசைபாட எண்ணலாம். 1992 ல் விடுதிக்கு என்றே கட்டப் பட்ட கட்டிடங்களில் கூட கழிவறைகள் பெயரளவில் தான் இருந்தன. எங்கள் விடுதி மாதிரி தனியார் கட்டிடங்களில் இயங்கும் விடுதியில் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கருணையுடன் எங்கள் செயல்களை வசைபாடாமல் கடந்து போய்விடுங்கள்.
அந்த காலை வேளைகளில் பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி செல்லும். ஆனால் அதனை நின்று ரசிக்கவெல்லாம் நேரம் இருக்காது. நாங்கள் எங்கள் கடன்களிலும் மின்மோட்டார் அல்லது அய்யன் வாய்க்கால் நோக்கிய ஓட்டங்களிலும் பிசியாக இருப்போம்.
பிரிதொரு நாளில் நடந்த மற்றொரு நினைவு. அன்று நல்ல மழைக்காலம். மாலை ஐந்து மணிக்கெல்லாம் நல்ல பனி சூழ்ந்து ஊட்டி போல ஊரே காட்சியளித்தது. ஒரு ஆறு மணிக்கெல்லாம் தப தபவென்று ஒரு ஐந்தாறு நண்பர்கள் இரயில் பாதையில் இருந்து ஓடி வந்தார்கள். ஒருவன் ஆடையை அவிழ்த்துப் போட்டு உடை மாற்றினான். மற்றொருவன் பின்பக்கம் கிணற்றடியில் வாந்தி எடுத்தான். மற்றொருவன் பின் புற அடி பம்பில் குளிக்க ஆரம்பித்தான்.
“என்னடா ஆச்சி?”
“ஆக்ஸிடென்ட் டா”
“யாரும் இரயிலில் அடி பட்டுட்டாங்களாடா?”
நடந்த சம்பவம் இதுதான்.
பத்து பதினைந்து அடிதூரத்திற்கு அப்பால் பார்க்க இயலாத பனிப்பொழிவு. ஒரு பாட்டி ஒரு பசுமாடு மற்றும் ஒரு இருபது ஆடுகள் மற்றும் குட்டிகளை இரயில் பாதை ஓரத்தில் மேய்த்தபடி வீடு நோக்கி நடத்தி வந்திருக்கிறார்.
இடையில் ஒரு சிற்றோடைப் பாலம், அடியில் மழையால் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு. எனவே அனைவரும் இரயில் செல்லும் பாலத்தின் மீதேறி கடந்து கொண்டு இருக்கிறார்கள். பாலம் முடிந்து கீழே இறங்க வேண்டிய தருணம். சற்று அலட்சியமாக தண்டவாளத்திலேயே நடந்தபடி வருகிறார். அடர்பனியில் இரயில் வரும் ஓசை கேட்கவியலவில்லை. டிரைவரும் காணும் வகையில் சூழல் இல்லை பனி மறைத்து விட்டது. சற்று அருகில் வந்தவுடன் கவனித்து ஆரன் அடித்து இருக்கிறார்.
பாட்டி தன் உயிர் வெல்லக் கட்டி என நினைக்காமல் ஆடுகளையும் மாடுகளையும் பத்தியபடி அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அங்கே சென்றிருந்த நமது நண்பர்கள்
“பாட்டி நீ இறங்கு பாட்டி“ என்று கத்தி இருக்கிறார்கள்.
அதெற்கெல்லாம் வைகையின் வேகம் அவகாசம் அளிக்கவில்லை.
“சடசட“ என்று பத்து ஆடுகள் ஒரு மாடு மற்றும் அந்த பாட்டி என அனைவரையும் இரத்தச் சகதியாக்கி நொடியில் சென்றுவிட்டது அந்த வைகை இரயில்.
சற்றேரக் குறைய ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிக்கிய ஆடுகளையும் மாட்டையும் அந்தப் பாட்டியையும் பிய்துப் போட்டுக் கொண்டே சென்று விட்டது அந்த உலோக அரக்கன்.
பைப் அடியில் குளித்தவன் குளித்துவிட்டு லுங்கியாலே துவட்டிக் கொண்டு வந்தான். லுங்கியில் இருந்த சதைத் துணுக்கு அவன் முகத்தில் ஒட்டியது.
“டேய் சதைடா, நல்லா துடைடா” என அலறினோம்.
அது பாட்டியோடதா, ஆட்டினுடையதா அல்லது அந்த பசுமாட்டினுடையதா என்கிற பயத்திலும் குமட்டலிலும்  அவனுக்கு அடுத்த இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல் வந்து விட்டது.
அன்பில் சாலையில் இருக்கும் இரயில்வே கேட் வழி செல்லும் அந்த பசுமை பிரதேசத்திற்கு அதன் பிறகு நாங்கள் சென்றதே இல்லை.
பள்ளியில் அந்த காலகட்டத்தில் செய்முறைப் பயிற்சிகள் முறையாக நடந்த காலம். எல்லா செய்முறைகளையும் செய்து பார்த்து அவர்தம் சொந்த ரிசல்ட் கொண்டு அப்சர்வேஷன் ரெக்கார்ட் எழுதி பிறகுதான் ரெக்கார்ட் நோட்டில் எழுதுவோம்.
ஒரு முறை பதினோறாம் வகுப்பில் தாவரவியல் ஆசிரியை செடிகள் கொண்டு ஹெர்பாரியம் தயார் செய்ய சொல்லி இருந்தார். நாங்கள் செடிகளை தேடி இரயில் பாதைகளில் அலைந்து திரிந்தோம். எங்கள் வழக்கமான பாலக்கட்டையை விடுத்து வடக்கு நோக்கி சென்றோம். அங்கே பெண்கள் பள்ளி அருகே இரயில் பாதையில் நிறைய செடிகொடிகள் இருக்கும் என நண்பர்கள் கூறியிருந்தார்கள்.
காலை பதினோறு மணி இருக்கும். நாங்கள் இரயில் தண்டவாளங்களில் இரண்டிரண்டு பேராக கைகோர்த்து பேலன்ஸ் செய்து நடந்து கொண்டு சென்றோம்.
தூரத்தில் ஒரு பேஸஞ்சர் இரயில் வந்து கொண்டு இருந்ததால் கீழே இறங்கி விட்டோம்.  எங்களுக்கு எதிரில் ஒரு தாத்தா தண்டவாளத்தில் வெற்றிலைப் பாக்கு பையை அவிழ்த்தபடி நடந்து வந்து கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் இரயில். எங்களுக்கு பக் என்று இருந்தது.
நாங்கள் எவ்வளவு கத்தியும் அவருக்கு கேட்க வில்லை. இரயில் ஆரன் சத்தம் கேட்டு அப்படியே ஒதுங்கியவரை இரயில் நெட்டி கீழே தள்ளி விட்டது.
பக்கத்தில் சென்று பார்க்கும்  தைரியம் இல்லை. மேலும் சதையால் முகம் துடைத்த நண்பனும் எங்கள் குழுவில் இருந்ததால் அவனது உடல் நிலை கருதியும் உடனே விடுதி திரும்பி விட்டோம்.
அடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் அதேப் பணிக்காக அங்கே சென்று செடிகள் தேடினோம் அங்கே மூடி பாதி கழற்றப் பட்ட நிலையில் ஒரு வாசனை சுண்ணாம்பு டப்பா கிடந்தது. அந்த தாத்தாவின் இறப்புக்கு மவுன சாட்சியான அந்த சுண்ணாம்பு குவளையை திறந்தோம். அப்போது தான் லால்குடியில் வாங்கி இருப்பார் போல ஒரு துளி சுண்ணாம்பு கூட எடுக்கப் படாத அந்த குவளையை விட்டெறிந்து விட்டு வந்தோம்.
இலால்குடியை சுற்றிச் செல்லும் ஆரம் என்று தவறாக அல்லவா சொல்லி விட்டேன். உண்மையில் அது அழகிய இயற்கை சூழல் நடுவே கொத்துவதற்கு காத்துக்கொண்டு படுத்திருக்கும் இரும்புப் பாம்பு என்பது தான் சரி. இரயில் பாதை அழகோடு பல ஆபத்துக்களும் நிறைந்தது.



No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...