Monday, August 14, 2017

லால்குடி டேஸ் - 2

லால்குடி டேஸ்-2
நான் லால்குடிக்கு பள்ளி துவங்கும் நாளன்று போய் சேர்ந்ததே ஒரு பெருங்கதை. என்னை பள்ளிக்கு கொண்டு சென்று விடுமாறு எனது அண்ணன் சேகரை அப்பா கேட்டுக் கொண்டதால் சேகரும் நானும் செல்வதென்று முடிவாயிற்று.
சேகர் எனக்கு அண்ணன் என்பதைவிடவும் நல்ல நண்பர். வானிற்கு கீழ் உள்ளது மட்டுமல்ல வானம் தாண்டியவை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.
இந்த பகுதியில் பள்ளித் துவக்க நாள் அன்று நாங்கள் மேற்கொண்ட பேருந்துப் பயணம்.
மணி காலை 7.15
ஓட்டமாய் ஓடிவந்து பேருந்து நிலையத்தில் நுழைந்தோம்.                      
ஏய் ஜெயராஜ் அங்கே பாரு திருச்சி பஸ் நிக்கிது!“
அது கவர்ன்மண்ட் பஸ் வேற பஸ்ல போகலாம்
காதை கிழிக்கும் இசை ஒரு பேருந்தில் இருந்து வந்தது, இசையை மோப்பம் பிடித்தபடி சென்று அந்த தனியார் பேருந்தின் முன்னால் போய் விழுந்தோம்.
அடேய் இதுவும் திருச்சி பஸ் தான்டா!“
இந்த பஸ்ல போனாதான்டா இந்த கட்ட வேகும்!!“ என்றேன் தீர்மானமாக.
உள்ளே சென்று பார்த்தால் பேருந்தே காலியாக கிடந்தது. ஜனங்களுக்கு இசைஞானம் கிஞ்சிற்றும் இல்லாமல் போனது பற்றி கவலை கொண்டவாறே உள்ளே அமர்ந்தோம்.
திருச்சி செல்லும் அரசுப்பேருந்து கிளம்பியது. மற்றொரு திருச்சி பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தும் நிறைய ஆரம்பித்தது. மக்கள் இந்த மாதிரி இருந்தா தனியார் எப்படி தொழில் பண்ணுவான் என்று கவலையாக இருந்தது.
டிக்கெட் டிக்கெட்
சார் லால்குடி ரெண்டு
என்னாது லால்குடியா?“
ஆமா சார் திருச்சி பஸ் லால்குடி வழியாதானே போகும்?“ இது சேகர்.
ஆமாம்பா, லால்குடி குடுத்துடவா?“
ம்ம்..ரெண்டு குடுங்க
பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் எழுதும் புத்தகத்தில் ஏற்கனவே எழுதியதல்லாமல் புதிய பக்கத்தை எடுத்து எழுதினார். பாவம் நாங்கள் லால்குடி இந்த பஸ்ஸில் போவது அவருக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி போல. பேருந்தில் இளையராஜாவின் இசை ராஜாங்கம் நடந்து கொண்டிருந்தது.
டான் டன் டன் டை ங்ஹே எவ்ரிபடி விஷ்  யு ஹேப்பி நியு இயர்….“ சகலகலா வல்லவன் வாழ்த்திக் கொண்டிருந்தார்.
இசை காதை கிழித்தது. அந்த சமயத்தில் உலகத்திலேயே மகிழ்ச்சியான நபர்கள் நாங்கள் இருவர் தான்.
மணி காலை 7.30
மெல்ல மெல்ல ஊர்ந்து ஒருவழியாக பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது.
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தாண்டிய உடன் பேருந்து வலது புறம் திரும்பியது.
அடடே பஸ் என்னா இங்க திரும்புது?“ என்றோம் கோரஸாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி
நீங்க எங்கப்பா போகணும்?“
லால்குடி
அட எறங்கிக்கோங்கப்பா இது செந்துரை வழி!!”
அய்யோ டிக்கெட்லாம் எடுத்துட்டோமே!” என்றேன்
பரவால்ல இதுலயே போகலாம்சேகர்
இளையராஜா எங்களை பேருந்தோடு கட்டிப் போட்டு விட்டார்.
பேருந்து செங்குந்தபுரம் நிறுத்தத்தை நெருங்கியது. குளித்து விட்டு ஏரிக்கரையில் ஏறிய நபர் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டிக்கொண்டே இடுப்புத் துண்டோடு ஓடிவந்தார். வேகமாக வந்து மரப் பொந்தில் சொருகியிருந்த வேட்டி சட்டையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.
டிரைவர் பரவால்லடா ஒரு ஆளுக்காக நிறுத்துறார்
இன்னும் பாருங்கப்பா வீடு வீடா நிறுத்தி ஏத்துவார், நீங்க இதுல அரியலூர் போற நேரத்தில் அந்த பஸ்ல லால்குடியே போயிருக்கலாம்
எனக்கு இப்போது தான் வயிற்றில் புளி கரைத்தது. பதினோறாம் வகுப்பு அட்மிட் ஆகி முதல் நாள் இன்னைக்கு. முதல் நாளே லேட்டா? என்று பயம் லேசாக கவ்வ ஆரம்பித்தது.
அட என்னப்பா இவன் பாட்ட நிறுத்திட்டான்
டிக்கட் ஏத்தறத்துக்காக மட்டும் தான் பாட்டு, இப்போ டிக்கட் போடறதுக்காக நிறுத்திட்டான்
ஒரு வழியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் செந்துரை வந்து சேர்ந்தாச்சு.
இப்போ பாட்டு நல்லா ஃபுல் சவுண்டில் ஓடியதுபொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…..’
கூட்டம் முண்டியடித்து ஏறியது. மழை தரையை நனைப்பதற்குள் டிரைவர் நிறுத்திவிடுவார் என்பது எங்களுக்கு தெரியும்.
இதற்கு மேல் வருந்துவதற்கு ஒன்றுமில்லை வருந்தியும் ஒன்றும் ஆகப் போவதும் இல்லை என்று சூழலை என்ஜாய் பண்ண ஆரம்பித்து விட்டோம்.
முந்திரிக் காடு, கருவேல மரங்கள், திட்டுத் திட்டாக தெருக்கள் என்று கண்களில் காட்சிகள் பயணித்த வண்ணம் இருந்தது.
திடீர் என்று தோள் பட்டையில் ஆரம்பித்து கழுத்து வரை இனம் புரியாத பாரம் அழுத்தியது. பார்த்தால் கூட்டத்தில் சிக்காமல் தன் மகனை காப்பாற்றும் பொருட்டு என் தோள்பட்டையில் உட்கார வைத்து பேருக்கு அவனை பிடித்துக் கொண்டிருந்தார் ஒரு பாசக்கார தந்தை. என்னை பொருத்தவரை அவர் நாசகார தந்தை.
எனது புத்தம் புது வெள்ளை சீருடையை பரிதாபமாக பார்த்தேன். பயலுக்கு இயற்கை உபாதை எதுவும் ஏற்பட்டு விடக் கூடாதே என்று பயந்து கொண்டே அரியலூர் வரை பயணித்தேன்.
 “வெள்ளிப் பனியுறுகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்என்ற பாடல் வரி வந்ததுமே சந்தேகத்தோடு தோளினை தடவினேன். அசம்பாவிதம் ஒன்றும் நடக்கவில்லை இதுவரையில். அதன் பின்னர் இயற்கையாவது காட்சியாவது.
அரியலூர் வந்த உடன் புதுப் பட கேசட் ஒன்றை பிளேயரின் வாயினுள் திணித்தார்.
தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே….” கமல் அழகாக அழுது கொண்டிருந்தார். அரியலூர் டு திருச்சி பேருந்துகள் அதிகம் இருந்ததால் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனாலும் நடத்துனர் விடுவதாய் இல்லை.
டால்மியா, புள்ளம்பாடி, லால்குடி, திருச்சிஎன்று கூவிக் கூவி அழைத்தார்.
அரியலூரிலிருந்து பேருந்து புறப்பட 20 நிமிடத்திற்கு மேல் ஆகியது.
மணி காலை 9.30
தாய் வீட்டுக்கு வந்துவிட்டு கணவன் வீட்டிற்கு புறப்படும் பெண்ணைப் போல பேருந்து மெல்ல மெல்ல மெல்ல அரியலூரை கடந்தது. அரியலூரிலேயே கிட்டத்தட்ட 3 நிறுத்தங்கள். பேருந்து நிறைந்தது. வழக்கம் போல் பாட்டும் நின்றது. “நீயொரு காதல் சங்கீதம் …” என்று ஆரம்பித்த மனோவை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
சேகர் மொத நாளு லேட்டா போனா அடிப்பாங்களா?“
மொத நாள் அடிக்கமாட்டாங்க கவலப் படாதே!”
நேரா ஜெகநாதன் சித்தப்பா வீட்டுக்கா, இல்ல ஸ்கூலுக்கா?“
இப்போவே லேட்டு, நேரா ஸ்கூலுக்கே போயிடு
ஒரு வழியாக பேருந்து லால்குடியை அடைந்து விட்டது. மணி 11.30 ஆகியிருந்தது.
சரி ஜெயராஜ், நான் கிளம்பறேன் போய்ட்டு வா பத்திரமா இரு
சரி சேகர்
மெல்ல கேட்டை திறந்தேன்.
க்க்றீறீச்ஒரு திடீர் பேரிடி கூட என்னை இப்படி பயமுறுத்தியது இல்லை.
கையில் மெலிசாகவும் நீளமாகவும் பிரம்பு வைத்துக் கொண்டு நின்ற ஆசிரியர்கள் மூவரும் என்னை நோக்கி பார்வையை திருப்பினார்கள்.
பயந்தபடியே மெல்ல சென்று அவர்களிடம் “…..“ “….“ வெறும் காத்து மட்டும் தாங்க வந்தது.
என்னடா புது அட்மிஷனா?“ இது முறுக்கு மீசை வைத்திருந்தவர்
எங்கேருந்து வர?“ இது தொண்டையில் துணி கட்டியிருந்தவர் அடி தொண்டையால் கேட்டார்
இது தான் மொத நாள் ஸ்கூல் வர நேரமா?“ இது கண்ணாடி அணிந்து பெருங்கோபக்காரராக தெரிபவர்.
ஆமாம் சார் பதினோறாம் வகுப்பு மேத்ஸ் பயாலஜி சார்
பி ஒன்னா? மாடில லாஸ்ட் ரூம் போ இனிமே லேட்டா வராதே
ஒரு வழியாக வகுப்புக்கு வந்து சேர்ந்தேன்.




No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...