Tuesday, August 8, 2017

லால்குடி டேஸ் - அறிமுகம்


சுத்தமல்லியில் பத்தாம் வகுப்பு நிறைவு
     சுத்தமல்லியில் ஒரு அருமையான பள்ளியில் அன்பான ஆசிரியர்கள் மத்தியில் செல்லப் பிள்ளையாய் வலம் வந்தேன். அப்போது அது ஒரு உயர்நிலைப் பள்ளி ஆதலால் மேல்நிலை வகுப்புகளுக்கு வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டும். மாணவர்கள் தா.பழூருக்கோ அல்லது ஜெயங்கொண்டத்திற்கோ செல்ல வேண்டி வரும். நானும் பத்தாம் வகுப்பில் 386 எடுத்து பள்ளியில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து மேல்நிலைப் பள்ளிதான். எங்கே செல்வது?

மேல்நிலைப்பள்ளி
     மேல்நிலைப் பள்ளிக்கு திருச்சியில் சேர்த்து விடுவார்கள் என்று எண்ணினேன். கண்டிப்பாக தா.பழூரோ ஜெயங்கொண்டமோ இருக்காது என்பது திண்ணமாக தெரியும். அப்போது எங்கள் ஊரிலிருந்து தா.பழூரில் படித்தோர் ஒருவரேனும் பள்ளிப் படிப்பை ஒழுங்காக முடித்தாரில்லை. எங்கள் தெருவிலிருந்து என்னுடன் பயின்றோரில் பனிரெண்டாம் வகுப்பு தேரியோர் எவரும் இல்லை. படிப்பு சார் விழிப்புணர்வு அவ்வளவு குறைவாக இருந்த காலகட்டம். ஊரில் இருந்த ஒரு சில படித்தோரும் வேலையில்லா பட்டதாரிகளாக இருந்தார்கள். “படிச்சி பாழாய் போவதைவிட ஆடு மேய்த்து ஆளாகி விடலாம்என்ற சொலவடை எனது நண்பர்களை மிகவும் வசீகரித்தது. அதனால் படிப்பு மீதான நாட்டம் குறைவாக இருந்தது.

விடுதி ஏக்கம்
     நான் ஒன்பதாம் வகுப்பு படித்த போது சுத்தமல்லியில் விடுதி வசதி வந்தது. முதலாம் ஆண்டு என்பதால் நிறையபேரை விண்ணப்பிக்க அழைத்தார்கள். நானும் ஆர்வத்தோடு விண்ணப்பம் வாங்கினேன். அப்பா மறுத்து விட்டார். வீட்டில் அவ்வளவு கட்டுப்பாடு இல்லையானாலும் நானே என்னை கட்டுப்படுத்திக் கொள்வதுண்டு. அப்பாவின் மீதுள்ள பயம் கலந்த மரியாதையினால். ஆனாலும் அவரோ என்னை வாய்திறந்து கண்டித்ததில்லை. ஒரு பார்வை போதும். அவர் வீணாக வார்த்தைகளை விரயம் செய்வதில்லை. படித்து பட்டம் பெறவில்லை என்றாலும் உளவியல் சார்ந்த பட்டறிவு நிரம்ப பெற்றவர். பெரியவனானதும் அவரின் குழந்தை வளர்ப்பு சார்ந்த உளவியலை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன்.
இப்போ மேல்நிலை வகுப்புக்கு விடுதியில் தானே சேர்க்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோஷமாகிவிட்டேன்.
இலால்குடி
     இலால்குடி பள்ளியானது 1992 லேயே 100 ஆண்டு கண்ட ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இலால்குடிக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. திருச்சிக்கு அருகில் இருக்கும் பசுமையான பாரம்பரியம் மிக்க ஒரு அருமையான ஊர். ஊரைச் சுற்றி பச்சை வெல்வெட் விரித்தாற்போல் கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று இருக்கும். காவிரியில் இருந்து வரும் அய்யன் வாய்க்கால் கூழையாறு என்ற இரண்டும் இலால்குடியின் பசுமைக்கு நீராதாரம் ஆகும். இதெல்லாம் 1992-94 ல் தான். இப்போதைய நிலவரம் வேறு.
இலால்குடிக்கும் சுத்தமல்லிக்கும் உள்ள தொடர்பு
     சுத்தமல்லியில் இருந்து சென்று லால்குடி விடுதியில் தங்கி வெற்றிகரமாக படிப்பை முடித்தோர் நல்ல வேலையில் செட்டில் ஆகிவிட்டார்கள். முக்கியமாக இந்த காரணத்தினால் தான் என் அப்பா லால்குடியை டிக் செய்திருக்க வேண்டும். எனது நடு சித்தப்பா சிவசங்கர நாராயணன் அவர்கள் அங்கே படித்தபோது விடுதி சமையலர் வேலைக்கு ஆள்தேவைபட்டிருக்கிறது. எங்கள் ஊரில் இருந்த ஜகநாதன் சித்தப்பாவை சேர்த்து விட்டிருக்கிறார். அந்த தொடர்பினால் எங்கள் ஊரில் இருந்து லால்குடிக்கு படை எடுப்பு ஆரம்பம் ஆகியது. ஆனால் இது வெற்றிகரமான படையெடுப்பு.
பள்ளி வளாகம்
     லால்குடி பள்ளி வளாகமானது திருச்சி ரோட்டின் இருபுறமும் இருக்கும். ஒரு புறம் மிகச்சிறு வளாகம். ஒரு இரண்டு மாடி கட்டிடம் பழையது. அங்கே ஆறு முதல் எட்டு வகுப்புகள் இருக்கும். மற்றொரு புறம் இருப்பதோ மிகப் பெரிய ஏக்கர் கணக்கிலான வளாகம். மிகப் பெரிய மைதானம். சாலை முகப்பில் பழைய இரண்டுமாடிக் கட்டிடம்வடிவில் இருக்கும். அதன் வலது புறம் மற்றும் பின்புறம் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகங்கள். இன்னும் வலது ஓரத்தில் அதாவது நீதிமன்ற சாலை(சந்து) வரை நெசவு அறை,.ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கட்டிடங்கள் இருக்கும். முகப்பு கட்டிடம் முற்றிலும் தலைமையாசிரியர் அறை, கணினி ஆய்வகம், தட்டச்சு பாடப் பிரிவு அறை, இடது மற்றும் வலது மூலைகளில் முறையே தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆய்வகம், ஆசிரியர் அறை மிச்சம் உள்ள அறைகள் அனைத்தும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டிருக்கும்.
விடுதி வளாகம்.
     நாங்கள் தங்கியிருந்த விடுதியானது மணக்கால் சாலையில் இருந்தது. சிங்கப்பூரார் வீடு என்று சொல்வார்கள். மிகப் பெரிய நீ…..ளமான அந்தக் காலத்து சுத்துக் கட்டு வீடு. மேல்தளம் ரீப்பர் கட்டைகள் மீது போடப் பட்டிருக்கும். நடுவே முற்றம் உண்டு. பின் கட்டில் கிணறு ஒன்று உண்டு. எங்களுக்கெல்லாம் நீர் அளித்த கிணறு அது.
     முன்பக்க திண்ணை ஓரத்தில் மரத்தடுப்பினால் கட்டப்பட்ட வார்டன் அறை. திண்ணை ஓரத்தில் மாடிக்குச் செல்வதற்கான அகலம் குறைந்த உயரமான படிக்கட்டுக்கள். அடுத்து பதினோறாம் வகுப்பு மாணவர்கள் அறை அதன் வலது ஓரம் ஸ்டோர் ரூம். அவ்வப் போது நாங்கள் பொட்டுக் கடலை பொட்டலம் ஆட்டைய போடும் அறை.
     ஒரு பெரிய்ய்ய ஹால். அதன் வலது ஓரத்தில் இரண்டு அறைகள். ஹால் முழுவதும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சிறுவர்களுக்கு. ஓரத்தில் உள்ள அறை பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது
     அடுத்ததாக முற்றம், அதன் ஓரத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அறை. முற்றம் தாண்டியதும் சமையலறை. பின் பக்கம் கீற்று வேயப்பட்ட நீளமான டைனிங் ஹால். நான் இருந்த வரை அந்த இடம் தவிர எல்லா இடத்திலும் சாப்பிட்டு இருக்கிறேன்.
     கிணற்றடியில் ஒரு வாளி மற்றும் ரப்பர் கயிறு உருளையுடன். நீர் இறைப்பதற்கு டர்ன் டியுட்டி போடப்படும். மாணவர்கள் தட்டு கழுவும் போது இறைத்து ஊற்ற வேண்டும்.
     இவையல்லாமல் பஞ்சாயத்து போர்டு தொலைக்காட்சி அறை, அய்யன் வாய்க்கால், கூழையாறு, ரயில் வே தண்டவாளம் மற்றும் பல இடங்கள் உண்டு அவை யாவும் அது சார்ந்த நினைவுகளோடு ஒவ்வொரு பகுதியிலும் இடம் பெறும்.


     

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...