Monday, August 28, 2017

லால்குடி டேஸ்-4

எங்கள் பள்ளியின் ஆசான்கள்

அதிகாலை எழுந்து அடித்துப் பிடித்து பேருந்து பிடித்து செந்துறை எல்லாம் சுற்றிக் கொண்டு மூச்சிறைக்க முதல் நாள் வகுப்புக்குள் நுழைந்தாயிற்று.
உள்ளே போனால் எல்லோரும் புதிய முகம். எவனும் என்னை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. எங்கே இட.ம் காலியாக இருக்கிறது என்று நோட்டமிட்டேன். இரண்டாவது பெஞ்ச் மூன்றாவது பெஞ்ச் மற்றும் கடைசி பெஞ்ச் இவற்றில் தான் ஓரிரண்டு இடங்கள் காலியாக இருந்தன.
கடைசி வரிசையில் இருந்தோரெல்லாம் பொன்னம்பலத்தின் சின்னத்தம்பி சீருடையில் இருப்பது போல கரடு முரடாக இருந்தார்கள். ’இந்த மூஞ்சிகள எல்லாம் பாத்தா படிக்கிற மாதிரியே தெரியலையேஇது மூன்றாவது வரிசை. இரண்டாம் வரிசை, ஒரு பக்கம் குண்டாக ஒருவன் அடிக்கடி நெஞ்சில் சிலுவை போட்ட படி இருந்தான். ரைட் இவன் பக்தி பழமா இருக்கான். கண்டிப்பா நல்ல பையனா இருப்பான்(?!). அட பக்கத்தில் ஒருவன் நல்ல சிவப்பு இவன் அவனை விட நல்ல பையனா இருப்பான். ’ஏங்க சிவப்பா இருப்பவன் எங்கேயாவது கெட்டவனா இருப்பானா?’ இது தான் எனக்கு ஏற்ற இடம்.
முக்கால் வாசி பேர் லால்குடிப் பள்ளியிலேயே படித்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் கசமுசா கசமுசா என்று பேசியபடியே இருந்தார்கள்.
நான் மட்டும் திரு திரு என் விழித்தபடி அமர்ந்திருந்தேன். அருகில் இருந்த குண்டுப் பையனிடம் “ஏங்க உங்க பேர் என்னங்க?”
“என்னய்யா வாங்க போங்கன்னுட்டு என் பேர் கெய்சர்”
பக்கத்தில் இருந்த சிவப்பு மனிதனிடம் “உங்க பேர்”
“எது உங்க பேரா? என் பேர் கோபிநாத் டா வாடா போடான்னே பேசலாம்“
முன்வரிசையில் சின்னஞ்சிறிய பையன்கள் இருவர் அமர்ந்திருந்தனர். யாரும் அவர்களது தம்பிகளை அழைத்து வந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.
”டேய் அவனுங்க தான் மகேஸ்வரன், சண்முகம் போன வருஷம் ஸ்கூல் ஃபர்ஸ்ட், செகண்ட்”
“அப்படியா என்ன மார்க்?“
“464 மற்றும் 459“
“ஆத்தாடி இவ்ளோ மார்க்கா“ நானும் எங்கள் பள்ளியில் இரண்டாம் மதிப்பெண்தான். ஆனாலும் இவர்களுக்கும் எனக்குமான மதிப்பெண் இடைவெளி ரொம்ப அதிகமாக இருக்கே. இவர்களைத் தாண்டி சார்ங்கள இம்ப்ரஸ் பண்ணனுமே என்ற கவலை உண்டாயிற்று.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நெற்றியில் உள்ள மொத்தப் பரப்பிலும் குங்குமத்தை கொட்டிக் கொண்டு ஒருவர் உள்ளே நுழைந்தார். நான் அடித்துப் பிடித்து எழுந்து நின்றேன். வகுப்பில் என்னைத் தவிற யாரும் எழவில்லை. எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர்.
“டேய் அவரு பியூன்டா“ இது கோபிநாத்.
அடுத்த தாக அழுக்கு வேட்டி மற்றும் கலர் மங்கிய சட்டையோடு ஒருவர் நுழைந்தார். ’நான் எந்திருக்க மாட்டேன்பா’. ஆனால் எல்லோரும் எழுந்து நின்றனர்.
“டேய் எந்திரிடா தமிழ் அய்யாடா“ என்று கெய்சர் கிசுகிசுத்தான்.
முதல் நாளே பாடத்திற்குள் செல்லாமல் பள்ளியின் அருமை பெருமைகள் பற்றி சொல்லிக் கொண்டே போனார் தமிழ் அய்யா. இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இலால்குடி வழியாக சுற்றுப் பயணம் சென்றவர் நூற்றாண்டு விழா கண்ட பள்ளி என்ற பதாகையை பார்த்து இறங்கி பள்ளியை சுற்றிப் பார்த்து சென்றதாக பெருமை பொங்க கூறினார். அய்யாவுக்கு “ழ“ வே வரவில்லை. அப்புறம் பிரிதொரு நாளில் கூறினார் “இந்த ஜெயங்கொண்டம் ஏரியா காரங்க தமிள தமிழ்ன்னும் வாளைபளத்த வாழைப்பழம்னும் கூறுவார்கள். அவர்களுக்கு உச்சரிப்பே வராது” என்றார். பையன்கள் அனைவரும் என்னை நோக்கி கை காண்பித்து கிண்டலடித்தனர். நிர்வாண ஊரில் “உடுக்கை”யோடு அலைந்தவனாய் என்னை உணர்ந்தேன். அவரது எண்ணத்தில் தமிழில் உள்ள எழுத்துக்கள் “ல,ள, ள(ழ)“
அடுத்ததாக வேதியியல் ஆசிரியர் செல்வம் அவர்கள் வந்தார். சற்றே உயரம் குறைவாகவும் சற்றே பருத்தும் காணப்படுவார். அவர்தம் இளமைக்கால சிகையலங்காரமான காதைச் சுற்றி சுருள் சுருளாக முடியை வளர்த்து காதை மூடியிருந்தார். மாணவர்களை “சார்“ எனவும் “வாங்க போங்க“ எனவும் அன்புடனும் மரியாதையுடனும் விளித்தார். எனக்கு மிகப் பிடித்தமானவர். இரண்டொரு முறை மாணவர்கள் யாரும் விடையளிக்க இயலாத கேள்விகளுக்கு நான் விடையளித்த காரணத்தினால் என் மீது அன்பு பாராட்டுபவர்.
அடுத்து உயிர் விலங்கியல் பாடவேளை. நிர்மலா மேடம். ஒல்லியாக உயரமாக இருப்பார். மாணவர்களிடத்தில் மிக்க அன்பு கொண்டவர். கண்டிப்பு காட்ட தெரியாதவர். பசங்க அவர் மடியில் உட்காராத குறைதான். எல்லா பசங்களும் ரொம்பவும் உரிமை எடுத்துக் கொள்வார்கள் அவரது பாட வேளையில். லேபில் தான் வகுப்பு எடுப்பார். “ப“ வடிவ கட்டிடத்தின் தரைதள வலது மூலைதான் அவர்களது ஆய்வகம்.
அப்படியே இடது மூளைக்கு சென்றால் தாவரவியல் ஆய்வகம். தாவரவியல் ஆசிரியை பெயர் இன்றளவிலும் தெரியாது. ரொம்ப சின்சியர். ஆனால் குரலில் ஏற்ற இறக்கம் இல்லாமல் மொத்தப் புத்தக விஷயங்களையும் நடத்துவார். பேசும் போது வாயில் இருந்து “தீர்த்தம்“ ஸ்பிரே ஆகும். எல்லா பீரியடிலும் முதல் பெஞ்சுக்கு முண்டியடிப்பவர்கள் இந்த பீரியடில் மட்டும் இரண்டாம் அல்லது மூன்றாம் பெஞ்சுக்கு ஓடுவார்கள். “தீர்த்தத்தில்” குளிக்க யாருக்குத் தான் பிடிக்கும்.
எனக்கு கணிதப் பாடம் எடுத்த ஆசிரியை மதிமலர் சுகுமாறன் அவர்கள். மேல்நிலை கணிதப் பாடத்தைப் பொறுத்த வரையில் புகுமுக மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம்.
ஏனென்றால் கீழ் வகுப்புகளில் அல்ஜீப்ராவில் மட்டுமே வரும் ஆங்கில எழுத்துக்களான x,y,z எல்லாம் மேல்நிலையில் எல்லா பாடங்களிலும் வரும். அல்ஜீப்ராவை வசதியாக விட்டுவிட்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கூட எடுத்த விடுவார்கள் சாமர்த்திய சாலிகள். ஆனால் அவர்களுக்கு மேல்நிலையில் ஒன்றும் விளங்காது.
 எல்லா பாடங்களிலும் இயற்கணித நுட்பங்கள் பயன்படும். அதனால் மேல்நிலை வகுப்புகளில் பாடம் நடத்தும் போது தேவைப் படும் போதெல்லாம் மாணவர்களை ஃப்ளாஷ்பேக்கில் பின்னோக்கி அழைத்துச் சென்று அந்த விஷயங்களை நினைவூட்டியபடியே நடத்தினால் தான் அவர்களுக்கு புரியவைக்க இயலும். இல்லை என்றால் ஆசிரியர் பேசுவது சைனீஷ் பாஷை போலத்தான் இருக்கும். மாணவர்களின் நிலைபற்றி கவலை கொள்ளாமல் நடத்திக் கொண்டே சென்றால் பிரயோஜனம் இல்லை.
இயற்பியல் ஆசிரியர் அருணாச்சலம் அவர்கள் தனது ஓய்வு பெறும் வருடத்தில் இருந்தார். எங்கள் செட் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு ஓய்வு பெற்றார். அருமையாக பாடம் நடத்துவார். ஆனால் பெருங்கோபக் காரர். செய்முறையை பொறுத்தவரை நான் அவரின் அபிமானத்திற்கு உரிய வகையில் நன்றாக செய்வேன். என்னுடைய ரெக்கார்ட் நோட்டையே ஒரு முறை தூக்கி வெளியே வீசி விட்டார். ஒரு அட்டவணை தவறாகி விட்டதால் “பேட்ச்“ ஒர்க் பண்ணி இருந்தேன். ஒட்டுவதற்கு ஆஸ்டல் சாதத்தை பயன் படுத்தியதால் அங்கே ஒரு மாடர்ன் ஆர்ட் உருவாகி இருந்தது. பாவம் அவர் மாடர்ன் ஆர்ட்டை எல்லாம் ரசிக்கிற மன நிலையில் இல்லை போல.
ஆங்கில ஆசிரியை பெயரும் நினைவில் இல்லை. அவர்கள் எங்கள் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரின் துணைவியார் என்கிற அளவில் ஞாபகம் உள்ளது. பெரிய அளவில் கண்டிப்பும் இருக்காது. செல்லமும் கொடுக்க மாட்டார். அவர் நடத்தும் கதைகளை கேட்டு முக்கிய வார்த்தைகளை மட்டும் தெரிந்து கொண்டு நடு நடுவுல “மானே தேனே பொன்மானே” எல்லாம் போட்டு  நானே essay, paragraph எழுதிவிடுவேன். அதை அவர் என்றும் குறை கூறி மதிப்பெண் குறைத்தது கிடையாது. பாராட்டியதும் கிடையாது.
ஒரு நாள் கடைசி பாடவேளையில் வழக்கம் போல கச முச என்று பேசிக்கொண்டு இருந்தோம். பக்கத்து வகுப்பறையில் கணினி பிரிவிற்கு கணிதப்பாடம் நடந்து கொண்டிருந்தது. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். சத்தம் தாளாமல் வேகமாக வந்து “ஏண்டா சத்தம் போடுறீங்க “$#@%$#^&*” (ஆத்தாடி எம்மாம் பெரிய கெட்ட வார்த்தை) நான் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டேன். மாணவர்கள் பழைய மாணவர்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஆசிரியர்களும் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்பதை அறிந்து கொண்ட நாள். (அவர் ஒரு நல்லாசிரியர். திறமையாக போதிக்க கூடியவர் என்பதை போக போக உணர்ந்து கொண்டேன்)






No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...