Friday, December 29, 2017

லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி”

லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி”


மீசையும் ஆசையும் அரும்பும் பருவத்தில் ஆண்கள் தங்களை கம்பீரமாக காண்பித்துக் கொள்ள மிகுந்த அக்கரைக் கொள்வார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்பதால் அவர்களின் அந்த நேர்த்தி உடையில் ஆரம்பிக்கும். ஆகையால் சட்டை முதல் ஜட்டி வரை அயர்ன் பண்ணி போட்டுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
இந்த பிரச்சனையை விடுதியில் எப்படி சமாளிப்பது?!
பழனிமுத்து போன்ற முன்னாள் மாணவர்கள் 12ம் வகுப்பு நண்பர்களிடம் அயர்ன் பாக்ஸ் வாங்கி தேய்த்து உடுத்திக் கொள்வார்கள். எங்களைப் போன்ற புதிய மாணவர்கள் என்ன செய்வது?
உடனடியாக பதினோறாம் வகுப்பு மாணவர்களின் பொதுக்குழு கூடி இது பற்றி விவாதித்தது. இறுதியாக ஒரு அயர்ன் பாக்ஸை சொந்தமாக வாங்கி போடுவது என்று தீர்மானமாயிற்று.
“முதல்ல காச கலெக்ட் பண்ணுங்க நாங்க வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார்கள் திருச்சி பக்கமிருந்து வரும் பாலுவும் செந்திலும்.
“ஆளுக்கு பத்து ரூபா போடுவோம். மீடியம் சைஸ் அயர்ன் பாக்ஸ் விலை 150 லிருந்து 200க்குள் இருக்கும். நாம லெவன்த் இருவத்தஞ்சி பேரு இருக்கோம். போக வர எல்லாம் சேர்த்து கரெக்ட்டா இருக்கும்” என்றான் பழனிமுத்து.
“ரெண்டு வருஷம் கழிச்சி போகும் போது அயர்ன் பாக்ஸ என்ன செய்வது?” இது தொலைநோக்கு பார்வை உடைய ராஜவேலு.
“ஏலம் விட்டு பிரிச்சிக்கலாம் இல்ல ஆஸ்டலுக்கு ஞாபகமா எதாவது கிஃப்ட் வாங்கி வச்சிடலாம்” இது அசோக்.
“ப்ளஸ் டூ முடிந்து போகும் போது நானே ஒரு ரேட் போட்டு கொடுத்துட்டு எடுத்துக்கறேன” என்றான் பாலு.
’முதல் வாரம் செலவுக்கு வைத்திருந்த காசு 15ல் 10 ரூபாய்க்கு வேட்டு வச்சிட்டாய்ங்கலா’ என்று எண்ணியபடி பொதுக்குழு கூட்டம் முடிந்து சாப்பிட போனேன்.
ஒரு வாரம் கழித்து அழகான சிறிய இரும்பு அயர்ன் பாக்ஸ் வந்திறங்கியது. அப்போதே எங்கள் விடுதியில் பிரபலமாக பேசப்பட்டது “இஸ்திரிப் பெட்டி ஊழல்” தான். நூற்றைம்பது ரூபாய் அயர்ன் பாக்ஸ் க்கு வசூலிக்கப் பட்ட இருநூற்றைம்பதும் செலவழிக்கப் பட்டதாக கணக்கு காண்பிக்கப் பட்டது. மேலும் பொது நல நோக்கத்தோடு மேற்கொண்டு இருபது ரூபாய் செலவழித்ததாக கூறியதை இப்போது நினைத்தாலும் எனது கண்கள் கோபத்தில் பழைய விஜயகாந்த் கண்கள் போல் ஆகிவிடுகிறது.
ஆமாம் ஆஸ்டல்ல அயர்ன் பாக்ஸ் போட அனுமதி உண்டா? கரெண்ட் பில் எக்கச்சக்கமா வந்துடாதா? வார்டன் எதுவும் சொல்லமாட்டாரா?
இப்படி எக்கச்சக்கமான கேள்விகள் உங்கள் மண்டையை குடைவது எனக்கு தெரிகிறது.
நான் இதுகாரும் சொன்னது தொழில் முறை சலவைத் தொழிலாளர்கள் வைத்திருக்கும் கரிப் பெட்டி. இரும்பால் ஆனது.
சனி ஞாயிறுகளில் அயர்ன் பண்ண போறவைங்க எல்லாரும் கிச்சன்ல அடுப்பங்கரை அருகில் குத்த வச்சி உக்காந்து இருப்போம். விறகு எரிஞ்சி கரி விழ ஆரம்பித்த உடனே கரண்டியால் கங்கு களை அள்ளி பெட்டியில் போட்டு “லாக்“ செய்து கொண்டு வந்து விடுவோம்.
நெருப்புத் துண்டங்கள் வெப்பத்தை வெளியிட்டு சாம்பலாக ஆவதற்குள் அந்த வாரத்திற்கு தேவையான துணிகளை தேய்த்து விடுவோம். தேய்த்து முடித்தவுடன் “காத்திருப்போர் பட்டியலை” சரிபார்த்து உரிய நபரிடம் சர்ச்சைகளுக்கு இடமளிக்கா வண்ணம் கொடுக்க வேண்டும்.
நமக்க ”குற்றேவல்” செய்யும் சிறுவர் பட்டாளம் நம்மை சுற்றிச் சுற்றி வரும். அவர்களின் ஏதாவது ஒரு சட்டையை தேய்த்து தருவதாக வாக்குறுதி தந்து விட்டோமானால் போதும் “சஞ்சீவி“ மலையையே பெயர்த்து எடுத்து வந்து விடுதிக்கு அருகே வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
அவர்களைக் கொண்டு சாம்பலை வெளியே தட்டி விட்டு வருவது, கங்குகள் தீர்ந்து போனால் குவித்து வைக்கப் பட்டிருக்கும் சிறு அடுப்புக்கரி துண்டங்களை பெட்டியில் போட்டு கங்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பையும் அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.
அந்தப் பெட்டியை கடைசியில் திறந்து காண்பிக்கப் போவதாக நம்மை கட்டிப் போடும் ஒரு பாம்பாட்டியின் லாவகத்துடன் அவர்களது சட்டையை இறுதியில் தான் தேய்த்து தர வேண்டும். இல்லையென்றால் சஞ்சீவி மலையை எங்காவது ரோட்டில் கடாசிவிட்டு வாய்க்கால் பக்கம் விளையாட சென்று விடுவார்கள் ஜாக்கிரதை.
அப்போது லால்குடிப் பள்ளியில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சீருடை மற்ற இரண்டு நாட்கள் வண்ண உடை. என்னிடம் சீருடை மூன்று மற்றும் வண்ண உடை இரண்டு மட்டுமே இருந்தது ஆகையால் என்னுடைய வேலை இலகுவாக முடிந்து விடும்.
அயர்ன் பண்ணுவதில் பல்வேறு தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தது எங்க ஆஸ்டல் பசங்கதான் என்று பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லலாம். துணியை எங்கே எப்படி மடித்து தேய்த்தால் என்ன டிசைன் வரும் என்பதெல்லாம் எங்க பசங்களுக்கு அத்து படி. முதுகில் டைமண்ட், ஸ்பைடர் வலை, மற்றும் வித்தியாசமான வட்ட வடிவ பூ டிசைன் எல்லாம் போடுவார்கள்.

நல்ல சிவந்த நிறம், கோரை முடி மற்றும் சிரித்த முகம் என்று ஒருவன் இருப்பான். பெயர் பாபு என்று வைத்துக் கொள்வோம். (பெயர் மறந்து போச்சு) நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்ளவே பதினைந்து நிமிடங்களை செலவழிப்பான் என்றாலே நீங்கள் அவனைப் பற்றி புரிந்து கொள்ளலாம். அன்றைய காலகட்டத்தில் பிரிண்ட்டட் நியூஸ் பேப்பர் போன்ற டிசைன் ஃபேஷனாகியிருந்தது. பள்ளி முடிந்து வந்தவுடன் பாபு மறுபடியும் புத்தாடை உடுத்தி நகர்வலம் கிளம்பி விடுவான்.
அந்த செய்தித்தாள் டிசைன் சட்டை அவனது ஃபேவரைட். அதை துவைத்து மிக நேர்த்தியாக ரீகல் சொட்டு நீலம் போட்டு தனியே உலர்த்தி பிறகு அந்த சட்டைக்கென்று பிரத்தியேகமாக வார நாட்களில் அயர்ன் பண்ணவும் உட்கார்ந்து விடுவான்.
எங்கள் விடுதிக்கு எதிரே பழங்காலத்து நாட்டு ஓடு வேய்ந்த பெரிய வீடு ஒன்று உண்டு. அங்கே ஒரு தாத்தா எந்நேரமும் செய்தித் தாளும் கையுமாகவே இருப்பார்.
நம்ம பாபு ஒரு மாலைவேளையில் அந்த செய்தித்தாள் சட்டையை மாட்டிக் கொண்டு எதிர் வீட்டு வராண்டாவில் நின்று அவர்கள் வீட்டு டிவியில் கிரிக்கெட் பார்க்க ஒதுங்கினான். அந்த தாத்தா செய்தித்தாளை வீசி எறிந்து விட்டு இவனையே “குறு குறு“ என்று பார்த்தார். எங்கே இவனை அலேக்காக தூக்கி மடியில் கிடத்தி படிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பயந்து போனேன். அவன் சட்டையில் இருந்து டிசைன் ஆங்கில செய்தித்தாளாக இருக்கப் போய் தப்பினான் பாபு.
எங்கள் சீனியர்கள் வெளியேறிய அடுத்த ஆண்டு நாங்க சீனியராக பதவி உயர்வு பெற்றோம். மறுபடி ஒரு லெவன்த். வந்தவர்கள் எங்களிடம் அயர்ன் பாக்ஸை ஓசி வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு முறை மறுக்கப் போய் அது “வகுப்புக் கலவரமாக” கனன்று கொண்டு இருந்தது. இந்த சச்சரவோடு இன்னும் பல அரங்கேறிய சண்டைக் காட்சிகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

இவ்வாறாக எங்கள் இரண்டு வருட வாழ்க்கையில் எங்களோடு பயணித்த அந்த இஸ்திரிப்பெட்டி எங்கே ஏலம் விடப்பட்டது? யாரோடு சென்றது? எவ்வளவுக்கு விலை போனது? என்கிற எந்த கவலையும் இல்லாமல் கடைசி நாளன்று ஊருக்கு மூட்டைக் கட்டினோம்.
பிரிதொரு நாள் மாற்றுச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது தான் தெரிந்து கொண்டோம், “இஸ்திரிப் பெட்டி ஊழலில்” ஈடுபட்ட அதே பசங்க அதை இனாமாக எடுத்துச் சென்று விட்டார்கள் என்று.

Sunday, December 24, 2017

நானே ”நானோ”-4 பங்களிப்புகளும் பயன்பாடுகளும்

நானேநானோ”-4 பங்களிப்புகளும் பயன்பாடுகளும்
ஆமாம், இந்த நானோ தொழில்நுட்பம் (NANO TECHNOLOGY) என்ற வார்த்தையை அறிமுகப் படுத்தியது யார்?”
இதற்கு மறுபடியும் உங்கள முன்னயும் பின்னயும் அலைக்கழிக்க வேண்டியுள்ளது
பரவால்ல சொல்லுங்க, எங்களுக்கு உண்ம தெரிஞ்சாகணும்
சர்க்கரை மூலக்கூறின் பரிமாணத்தை தனது டாக்டரேட் ஆய்வுகட்டுரைக்காக ஆய்வு செய்து 1 “நானோ மீட்டர் என்றார் ஐன்ஸ்டீன்

அட, இதுவும் ஐன்ஸ்டீன் தானா?”
ஆமாம்,நானோ தொழில்நுட்பம் என்கிற வார்த்தையை 1974ல் நோரியோ தனிக்குச்சி (அப்படில்லாம் சிரிக்கப்டாது, பெயரில் என்ன இருக்கிறது ஜப்பான்னா பேர் அப்படித்தான் இருக்கும்) என்பவர் குறிப்பிட்டார். ஒரு மைக்ரானுக்க கீழான பொருட்களை உட்பத்தி செய்யும் நுட்பத்திற்கு அந்தப் பெயரை இட்டழைத்தார்
பார்ரா மின்னணு தொழில்நுட்பம், பொருட்களதக்கணூண்டுசெய்வது இதெல்லாம் அவனுங்களுக்கு கை வந்த கலை இல்லையா
உலகத்திலேயே நானோ தொழில்நுட்ப மையத்தை முதலில் கட்டியது ஜப்பானியர்களே”.
நானோ டெக்னாலஜியில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுவது 1989 ல் ஐபிஎம் கம்பெனிக்காரங்கஐபிஎம்என்கிற எழுத்துக்களை 39 செனான் அணுக்களைக் கொண்டு நிக்கல் மீடியத்தில் ஒழுங்கமைத்தது ஆகும்.போனவாரம் அணுக்களை டிரில் பண்ணமுடியும் சொன்னேன் இல்லையா அதே நுட்பத்தில் அதை எழுத்தாக ஒழுங்கமைத்திருக்கிறார்கள் 

ஆமாம், ஃபெயின்மான் சொன்னமாதிரி ஒரு தனித்த அணுவை கட்டுப் படுத்த வல்ல நுட்பம் கண்டறிந்தாகிவிட்டது அல்லவா?”
சரியாச் சொன்னீங்க!”
அப்புறம் வேறு என்னவெல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க?“
சுமியோ லிஜிமா என்கிற ஜப்பான் விஞ்ஞானி ஒரு முறை கார்பன் அதாங்க அடுப்புக்கறி மாதிரியான மெட்டீரியல எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்புல வச்சி ஆய்வு பண்ணிப் பார்த்தார்
எல்லாம் ரொம்ப பெரிசா தெரிஞ்சிருக்கும்
இல்ல கரியில் திரி திரியாக மூலக்கூறுகள் இலேசானதாகவும்  நெகிழ் தன்மையுடனும் வலிமையானதாகவும் இருந்தது

அப்படியா?”
உங்களுக்கு ஒன்னு தெரியுமா?, வைரமும், அடுப்புக் கறியும் ஒண்ணுதான். அவற்றின் மூலக்கூறு அமைப்பில் இருக்கம் சிறு வேறுபாட்டினால் தான் வைரம் விலையுயர்ந்ததாக இருக்கிறது, கரித்துண்டு மலினப்பட்டு கிடக்கிறது. அடிப்படையில் இரண்டுமே கார்பன் தான்
அப்போ அடுப்புக்கரியை வைரமாக்கிடலாமா?”
கொஞ்ச நாள்ல நம்ம நானோ டெக்னாலஜி விற்பனர்கள் கார்பன் மூலக்கூறு அமைப்பை பட்டி டிங்கரிங்லாம் பாத்து வைரமா மாத்திடுவாங்க என்று நம்பலாம்
ஆமாம் இந்த கார்பன் நானோ டியுப் சொன்னீங்களே அதனால எதாவது பயன் உண்டுங்களா?“
கம்ப்யுட்டரில் பயன்படும் சிலிக்கான் சிப்புகளில் இருப்பதைவிட நுட்பமான வேகமாக இயங்கவல்ல, குறைவான சக்தியை பயன்படுத்தும் கார்பன் நானோ டியுப் டிரான்சிஸ்டர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சென்ற ஆண்டில் ஒரு நானோ மீட்டர் அளவிலான டிரான்சிஸ்டர் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆக உங்க கம்ப்யுட்டரில் உள்ள மொத்த மெமரியையும் ஒரு தக்கணூண்டு சிப்புக்குள் அடைத்து விடலாம்.”
அப்போ கம்ப்யுட்டர்கள் இன்னமும் சின்னதாகிவிடும் ஆனால் அதோட திறன் அதிகமாகிவிடும்ன்னு சொல்லுங்க
ஆமாம், இப்போதைக்கு கார்பன் நானோ டியுபின் பிளாஸ்டிக்கோடு கலந்து கார் பெயிண்டுகளில் உபயோகிக்கிறார்கள். அதனால் பெயிண்ட் மின்சக்தி பெற்று நன்றாக ஒட்டிக் கொள்கிறது
அப்படியா?“
இன்னமும் விண்வெளி, மின்னணு, மற்றும் தொழில் துறைகளில் கார்பன் நானோ டியுபின் பயன்பாடுகள் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியங்கள் உள்ளது. கார்பன் நானோ டியுப் மூலம் தயாரிக்கப் படும் ஒயர்கள் மிக குறைந்த மின்தடை கொண்டுள்ளதால் உயர் அழுத்த மின் கடத்திகளாக பயன்படும். “டிரான்ஸ்மிஷன் பவர் லாஸ்“ வெகுவாக குறைந்து விடும்”
அடடா, கேக்கவே நல்லா இருக்கே
“இந்த செல்ஃபோன் பேட்டரியோட சக்தி சேமிப்பு திறன், சார்ஜிங் நேரம், அளவு, எடை முதலிய அனைத்து அம்சங்களும் நானோ டெக்னாலஜி லேபில் மேம்படுத்துகிறார்கள். எனவே செல்ஃபோன் பேட்டரி அளவில் மிகச் சிறியதாகவும் அதிக நேரம் நீடிக்க வல்லதாகவும் குறைந்த நேரத்தில் சார்ஜ் ஆகும் வண்ணமும் தயாரிக்கப் படலாம்.“
“ம், அப்படியா?”
எதிர்காலத்தில் உங்க வீட்டு டிவி அல்ட்ரா ஹைடெஃபனிஷனில்(4KUHD) இயங்கும் ஆனால் பேப்பர் தடிமனில் இருக்கும் நீங்கள் சுவற்றில் ஒட்டிக் கொள்ளலாம்

அட அட விஞ்ஞானி தான்யா தெய்வம்
“அப்புறம் இந்த ஆடை உற்பத்தியில் “நானோ ஃபைபர்” கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவை எளிதில் அழுக்கடையாதவை மற்றும் துவைப்பதற்கு எளியவை”
“அட துணியில கூடவா?”
“இங்கிலாந்தில் உள்ள கார்னெல் பல்கலைக் கழகத்தில் “டெக்ஸ்டைல் நானோ டெக்னாலஜி“ ஆய்வகம் உள்ளது. அங்கே இன்னும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகிறது“

“இன்னும் என்னவெல்லாம் கண்டு பிடிச்சிருக்காங்க?”
“விமான உலோகங்களை இலேசாகவும் அதேநேரம் மிக அதிக வலிமையானதாகவும் ஆக்கவல்ல உலோக கலவையை  கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ராக்கெட் மற்றும் விமான எரிபொருள் செலவு கணிசமாக குறையும்”
”நான் இப்போ சொன்னது எல்லாமே தொழில் துறை பயன்பாடுகள் மட்டுமே. இன்னும் வேதியல் துறை, உயிரியல் மற்றும் மருத்துவத் துறைகளில் மிகப்பெரிய திணை மாற்றம் (PARADIGM SHIFT) ஏற்படுத்துகிற ஏற்படுத்தப் போகிற ஆய்வுகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.”
“என்னப்பா சயின்ஸ் படிக்கறதே ரொம்ப போர் நீ வேற வழ வழ கொழ கொழன்னு எழுதுற, இதுல எத்தன வாரம் தான் இது போவுது”
“அய்யா இது மாணவர்களுக்கும் மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கும் எதிர்கால தொழில் நுட்பம் சார்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆரம்பித்தது. எனவே இது சார்ந்த படிப்புகள், இடங்கள், இந்தியாவில் எங்கேயெல்லாம் படிக்கலாம் என்கிற தகவல்களோடு அதற்கடுத்த வாரம் முடித்துவிடுகிறேன்”








Wednesday, December 20, 2017

லால்குடி டேஸ்-20 சார் ப்ளீஸ் சார் ஆர்க்கெஸ்ட்ரா பாக்கப் போறோம் சார்!!


“அல்லோ…அல்லோ…அல்லோ….“
“மைக் செக்…  மைக் செக்..  மைக்…செக்….”
“ஒன்….ஒன்……ஒன்…”
“டு…டு……டு….”
“த்ரீ….த்ரீ….த்ரீ….” ஆர்க்கெஸ்ட்ரா காரங்க வேலையை தொடங்கி எக்கோவை அதிர விட்டார்கள். விடுதியில் எங்களுக்கெல்லாம் இதயம் அதிர ஆரம்பித்தது.
“என்னாடாது இன்னைக்குப் பார்த்து இன்னும் இந்த அட்டெண்டர் கிளம்பாம உக்காந்து இருக்கார்” என்று புலம்ப ஆரம்பித்தனர்.
சிலர் கிணற்றடித்தாண்டி வாய்க்கால் கரைவழியாக சுப்பைய்யா அண்ணன்(சமையலர்) வீட்டு சந்து வழியாக சாலையை அடைந்து ஆர்க்கெஸ்ட்ரா விரைந்தார்கள்.
“டேய் டேய் நில்லுங்கடா” என்றோம் மொட்டை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு.
“போங்கடா நீங்க அவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வரதுக்குள்ள ஆர்க்கெஸ்ட்ரா முடிஞ்சி போயிடும்” என்று கூறி எங்களை சட்டை பண்ணாமல் போய் விட்டனர்.
“டேய் ஜெயராஜ் நீ போய் கேட்டா போகச் சொல்லிடுவார் போய் கேளுடா” என்று என்னை நெருக்கினார்கள்.
அவரிடம் எனக்கு இருக்கும் நல்ல பெயரை இதற்குப் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றாலும் ஆர்க்கெஸ்ட்ரா பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அந்த மாரல் கோடை எல்லாம் அழித்து விட்டது.
“சார்?!”
“என்ன ஜெயராஜ் இன்னும் தூங்கப் போகலையா?”
“இல்ல சார் ஆர்க்கெஸ்ட்ரா பார்க்கப் போகணும்”
“ஏம்பா ஜனவரியில் இருந்து பப்ளிக் எக்ஸாம் வரைக்கும் இவனுங்க இதே வேலையாத்தான் இருப்பானுங்க, ஒவ்வொண்ணுக்கும் போவீங்களா? படிப்பு என்ன ஆகிறது?” என்றார். எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.
“இல்ல சார் இன்னைக்கு மட்டும் தான் சார்“
“சரி சரி போய்ட்டு பத்திரமா வாங்க”
எல்லோரும் ஆஸ்டலில் இருந்தே ஓட்டம் பிடித்தோம்.
அப்போது சில ஆர்க்கெஸ்ட்ராவின் பெயர்கள் வெகு பிரபலம். நல்ல பாடகர்கள் நல்ல வாத்தியக் கலைஞர்கள் என்று இருப்பார்கள். கீ போர்டை யெல்லாம் பார்த்து வியந்து வாய் பிளப்போம்.
அப்போது பிரபலமாக இருந்த தளபதிப் படப் பாடல்களான “காட்டுக் குயிலு மனசுக்குள்ள“, “அடி ராக்கம்மா கையத்தட்டு“ ஆகியப் பாடல்கள் துல்லிசை ரகம் என்பதால் ஆங்காங்கே ஆர்க்கெஸ்ட்ரா பார்க்க வந்த “குடி“மகன்களும் இளைஞர்களும் எங்க விடுதி மாணவர்களும் ஆட ஆரம்பித்து விடுவார்கள். பார்க்க வந்தவர்களோ இரட்டை சந்தோஷத்தோடு ரசிப்பார்கள்.
“நேயர் விருப்பமும்“ அரங்கேறும். ஆர்க்கெஸ்ட்ரா வை ஏற்பாடு செய்த முக்கியஸ்தர்கள் சீட்டு அனுப்புவார்கள். அதை மைக்கில் அறிவித்து விட்டு அந்தப் பாடலும் அரங்கேறும்.
விஜய் டி.வி .புகழ் “ஜெயிக்கப் போவது யாரு“ என்ற நிகழ்ச்சிக் கெல்லாம் முன்னோடி இந்த ஆர்க்கெஸ்ட்ரா மேடை.
மிமிக்ரி, ஸ்டேண்ட் அப் காமெடி போன்றவை இடையிடையே வந்து கூட்டத்தினரின் வயிற்றை பதம் பார்க்கும்.
“சித்தாடை கட்டிக் கிட்டு சிங்காரம் பண்ணிக் கிட்டு….“ என்று பாடல் ஒலித்தது என்றால் எல்லோரும் ஏமாற்றம் ஆகிவிடுவோம். ஏனென்றால் டூரிங் டாக்கீஸ்களில் “மருத மலை மாமணியே முருகைய்யா“ என்பது படம் துவங்கப் போவதற்காண அறிகுறி என்பது போல ஆர்க்கெஸ்ட்ராக் களில் இறுதிப் பாடல் இந்த “சித்தாடை கட்டிக்கிட்டு”
ஆர்க்கெஸ்ட்ரா முடிந்து வருவதற்கு மணி இரண்டு ஆகி விடும். அதன் பின் ஆஸ்டலில் படுத்துக் கொண்டு அங்கு நடந்தவற்றை சிலாகித்து பேசி தூங்குவதற்குள் மணி நான்கு ஆகி விடும்.
ஒரு முறை அக்கிரஹாரத் தெருவில் ஆர்க்கெஸ்ட்ரா போட்டார்கள். கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. இந்த ரகமானது குறைந்த பட்ஜெட் காரர்களுக்கான “சீன இறக்குமதிப் பொருட்கள்” மாதிரி லோ பட்ஜெட் ஆர்க்கெஸ்ட்ரா.
இந்த ரகத்தில் நன்கு பேச மற்றும் பாடத்தெரிந்த ஒருவர் வாடகைக்கு பொருட்களை எடுத்துக் கொண்டு, அப்போதைக்கு பாடுவதற்கு ஆட்களை அமர்த்திக் கொண்டு ஒரு ஆர்க்கெஸ்ட்ராவாக ஒன்றிணைவார்கள். அனேகமாக அந்த முதன்மைப் பாடகர் தவிர்த்த மற்றவர்கள் பாடுவது சற்று சுமாராகத் தான் இருக்கும்.
அதைக் கூட நாங்கள் விடுவதில்லை. இருந்து கடைசிப் பாடல் வரை பார்த்து விட்டுத் தான் வருவோம்.
“இப்போது ஊர் முக்கியஸ்த்தரும் தர்மகர்த்தாவுமான “சின்னக் குயில்“ குரலுக்கு சொந்தக் காரர் “சின்னத் தம்பி“ படத்தில் இருந்து “குயிலப் புடிச்சி“ பாடலை பாட வருகிறார். குயிலே வருக, உம் இசையை தருக” என்று ஸ்டைலாக இன்ட்ரோ கொடுத்தார்.
“இதென்னடா கூத்து, அப்போ அமிர்தராஜ் நீயும் போய் பாடறதுக்கு கேளுடா வாய்ப்புக் கொடுப்பாய்ங்க“
“டேய் அவரு முக்கியஸ்தர் என்கிறதால வாய்ப்பு கொடுக்குறாய்ங்க, நம்மலாம் போனா துரத்தி விட்ருவாய்ங்க”
“அலோ எல்லோருக்கும் வணக்கம்” என்றார் அந்த தர்மகர்த்தா
“என்னடா குயிலுன்னாய்ங்க பருந்து வந்துருக்கு?!”
ஆம், பருந்து என்பது அவரின் பருத்த உடல் குறித்த கமெண்ட். வந்தவர் மேடையில் பாதியை அடைத்துக் கொண்டார். குரல் சேதாரமில்லாமல் செய்த பாரதிராஜா குரல்.
அந்த கம்பீரக் குரலில் “குயிலப் புடிச்சி கூண்டில் அடைத்து…“ என்று ஆரம்பித்தார்.
கூட்டினுள் உறங்கிக் கொண்டு இருந்த காக்கை குருவிகளெல்லாம் பதறிப் போய் மரண பீதியில் கூச்சலிட்ட படி தமது கூட்டினைத் துறந்து வேறிடம் பெயர்ந்து ஓடியது.
அந்த “சின்ன“த்தம்பி இசையை சுத்தமாக சட்டை செய்யவில்லை. அவரின் குரலைத் துரத்திக் கொண்டு இசைக் கலைஞர்கள் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் வேகமெடுத்து ஓடி வந்து  கொண்டு இருந்த போது இவர் சட்டென்று நின்று விட்டார். மைக்கில் “கர் புர்“ என்று நாராசமாக ஒரு சத்தம். சின்னத் தம்பி வெற்றிலைப் பாக்கு எச்சில் துப்பியிருக்கிறார்.
இசைக் கலைஞர்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ’பெரிய மனுஷன் மைக்க வாங்கிட்டான் என்ன பண்றது’ என்ற நிலையில் இருக்க அங்கே சின்னத் தம்பியும் செய்வதறியாது திகைத்துக் கொண்டு நின்றார். ’ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்கிற பரிதவிப்பு.
இரண்டாவது சரணத்தை “எல்லோருக்கும் தலை மேல எழுத்தொண்ணு உண்டு “ என்று மனுசன் சற்றும் ஈவிரக்கம் இல்லாமல் படிக்கவே ஆரம்பித்து விட்டார். அதற்கும் ஒரு தாளகதியை பிடித்து தாளமிட்டு சமாளித்த இசைக் கலைஞருக்கு “கலைமாமணி“ விருதே வழங்கலாம்.
பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் திருவிழாக்களில் கரகாட்ட செட் ஆடுவது பார்த்திருக்கிறேன். நல்ல கூட்டமாக இருக்கும். அருமையான கரகாட்டம், மற்றும் இடையிடையே குறவன் குறத்தி ஆட்டம். குறவன் குறத்தி ஆட்டத்தில் இலை மறை காய் மறையாக விரசம் தொனிக்கும். அது ரசிக்கத் தக்க வகையில் இருக்கும்.

இந்த ஆர்க்கெஸ்ட்ரா வந்த பிறகு மண்டகப் படி செய்வோர்கள் தங்கள் கௌரவத்தை நிலை நிறுத்திக் கொள்ள கரகாட்ட செட்டுக்குப் பதிலாக ஆர்க்கெஸ்ட்ரா போட ஆரம்பித்து விட்டார்கள்.
ஜீவித்திருக்க வேண்டி குறவன் குறத்தி ஆட்டத்தில் இருந்த இலைமறை விஷயங்கள் சற்று வெளியில் வந்தது. அதுவே அவர்களுக்கு வினையாகி இப்போது கிட்டத்தட்ட முற்றிலும் வழக்கொழிந்து போய்விட்டது.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்கிறது நன்னூல்.
"only Change is permenant"


Saturday, December 16, 2017

நானே “நானோ“-3 - பெரும்பாய்ச்சல்

நானே “நானோ“-3 - பெரும்பாய்ச்சல்

ராபர்ட் ஃபெயின்மான் அவர்களின் பேச்சும் அதில் அவர் கற்பனை செய்திருந்த சாத்தியங்கள் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் பிறகு அந்த துறையில் பெரும் பாய்ச்சல் எதுவும் நிகழ வில்லை என்பது தான் உண்மை.
ஒரு படத்தில் “மலையை தூக்கப் போறேன் மலையைத் தூக்கப் போறேன்” என்று ஊரெல்லாம் சொல்லி கூட்டம் சேர்த்து விட்டு, “யாராவது வந்து தூக்கி வைங்கப்பு” என்று ஒரு காமெடி வரும் இல்லையா?
அது போலத் தான் நானோ டெக்னாலஜி சார்ந்த சாத்தியங்களை பட்டியலிட்டு இருந்தார் ஃபெயின்மான். ஆனால் அந்த சமயத்தில் அதை செய்யவோ அந்த அளவில் அணுகி பார்க்கவோ தக்க சாதனங்கள் இல்லாமல் இருந்தது.
அவருக்குப் பின் எரிக் ட்ரெக்ஸ்லர் என்பார் நிறைய ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்
”ஹீரோ ரெடி, ஹீரோயின் ரெடி ஆனா இந்த கத, இந்த கத தான் கிடைக்க மாட்டேங்குது” என்று அங்கலாய்க்கும் நாகேஷ் போல நானோ டெக்னாலஜியில் கருத்தியலாக என்ன வேணும்னாலும் சிந்திக்கலாம். எந்த லெவலுக்கும் எறங்கி அலசறதுக்கு தேவையான மெக்கானிசம் இருக்கா? எப்படி நானோ மெஷின்ஸ உருவாக்கறது? ஒரு ஊசியிலயே நூல கோக்க போராட வேண்டியிருக்கு ஆனா நானோ சைஸ்ல எப்படி கருவிகள உருவாக்குறது? அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்காங்க இந்த சைன்டிஸ்ட்ஸ்?!
அதுக்கு இரண்டு விதமான கருத்தியல(இதுவும் கருத்தியல் தானா?!) முன் வைக்குறாங்க.
ஒன்று மேலிருந்து கீழ்நோக்கி செல்லுதல் (TOP DOWN)   மற்றொன்று கீழிருந்து மேலாகச் செல்லுதல் (BOTTOM UP)
அது என்ன குறுக்கெழுத்துப் போட்டி மாதிரி மேலிருந்து கீழ் ன்னு சொல்றீங்க?

இப்போ இந்த கம்ப்யூட்டர எடுத்துக்கோங்க, நான் முன்னாடி சொன்ன மாதிரி இரண்டு ரூம அடைச்சிக் கிட்டு கிடந்த பயபுள்ள இப்போ உள்ளங்கையில் தவழும் செல்லப்பிள்ளை ஆகிவிட வில்லையா?
இது போல பெரிதிலிருந்து சிறிது நோக்கிய நகர்வின் மூலமாக நானோ சைஸை அனுகுதல். இப்போ வருகிற கணினி சிப்ஸ் ல் பயன்படுத்தப் படும் நுணுக்கங்கள் சில நூறு நானோ மீட்டர் வரை சென்றாகிவிட்டது. சோ ஒரு நானோ மீட்டர் என்பது தொட்டுவிடும் தூரம் தான்.
”எலக்ட்ரான் கற்றைகளை பாய்ச்சி எழுதுதல்( ELECTRON BEAM LITHOGRAPHY)”என்கிற நுட்பத்தின் மூலமாக சில நூறு நானோ சைஸில் கட்டுமானங்களை கொண்ட மிகச் சிறிய மின்னணு சில்லுகளை தயாரிக்கிறார்கள். அப்படித் தயாரிக்கும் போது காற்றில் மிதக்கும் துகல்களால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகையால் அதெற்கென அமைக்கப் பட்ட ”க்ளீன் ரூம்” ல் தான் இந்த செயல்பாடுகள் நடக்கிறது.
நானோ ஸ்கேலில் நடக்கும் இந்த சங்கதிகளை இப்போது பார்க்க இயலமா?
பார்க்க இயலுமாவா? ஒரு தனிமத்தின் ஒவ்வொரு தனித்த அணுவையும் பார்க்கும் அளவுக்கு மைக்ரோஸ்கோப் வந்து விட்டது. அதன் பெயர் ”ஸ்கேனிங் அண்ட் டன்னலிங்” மைக்ரோஸ்கோப்.

 அதன் துணை கொண்டு ஒரு தனிம அணுவை மற்றொரு மீடியத்தில் வைத்து லெஃப்ட் ரைட் வாங்க முடியும். ”நேர் நில், இயல் நில், வட்டமாக நில், சதுரமாக நில்” என்றெல்லாம் பயிற்சி செய்ய வைத்து படம் எடுத்திருக்கிறார்கள்.

அடுத்து இந்த கீழிருந்து மேல் எப்படி செய்யுறாங்க?
இந்த நுணுக்கம் நமக்குத் தான் கை வரவில்லை. ஆனா நம்ம உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இந்த நுணுக்கத்தை கையாலுகின்றன. விலங்கு மற்றும் தாவரங்களின் அடிப்படை அலகு செல் என்று படித்திருப்போம். அந்த செல்லில் உட்கரு, குரோமசோம், டி.என்.ஏ, ஜீன் என்றெல்லாம் பல அந்நியமான சொற்களை கண்டிருப்போம். ஃபெயின்மான் சொன்ன மாதிரி எல்லாம் இல்லாமல் இப்போது உள்ள கண்டுபிடிப்புகள் ரொம்பவே நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய துணையாக உள்ளதால் டி.என்.ஏ வில் உள்ள ஜீன்களின் வரிசைதான் ஒரு உயிரின் விலாசம் என்று கண்டிருக்கிறார்கள். கேடு விளைவிக்கும் வைரசுக்கும் உடலில் உள்ள செல்லுக்கும் நடக்கும் ஜீவ மரணப் போராட்டத்தை படம் பிடித்து டிஸ்கவரில போடுறான்.
ஆக இந்த பாட்டம் அப் டெக்னாலஜியை தான் நம்ம எரிக் டிரெக்ஸ்லர் மாலிக்குலர் நானோ டெக்னாலஜி என்று கூறுகிறார்.
இந்த டி4 என்கிற ஒரு வைரஸ் ஒரு தேர்ந்த டாக்டரைப் போல நம் மீது மெல்ல அமர்ந்து அதன் உடலில் சுருள் சுருளாக இருக்கும் டி.என்.ஏ வை இன்ஜெக்ட் பண்ணி விட்டு செல்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் ஆயிரக்கணக்கான டி4 வைரஸ்களின் உற்பத்திக் கேந்திரங்களாக நமது உடல் மாறிப் போகிறது.
ஏன் இந்த செல்பிரிதலில் என்ன நடக்கிறது? ஒரு செல்லில் என்னனென்ன பாகங்கள் எல்லாம் உண்டோ அவை அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாக பிரித்துக் கொண்டு தங்களைத் தாங்களே ”கிள்ளி” க் கொண்டு தனிக் குடித்தனம் போவதில்லையா?! இந்த செல் பிரிதலில் ரிபோசோம்கள் மீள் உருவாக்கத்திற்கான வழிபாடுகளை செய்து தனிக்குடித்தனத்திற்கு ஆவன செய்கிறது. மாலிக்குலார் நானோ டெக்னாலஜியில் இந்த வேலையை செய்பவைகள் “ஒருங்கிணைப்பாளர்கள்” (ASSEMBLERS) என்கிறார்கள்.
ஆக, இது தான் ஐடியா, நானோ இயந்திரங்களை தங்களைத் தாங்களே மீள் உருவாக்கம் செய்யும் செல்ஃப் ரெப்ளிக்கேட்டர்ஸ் ஆக உருவாக்க வழி உள்ளதா? என்று ஆராய்கிறார்கள். இந்த எந்திரன் படத்தில் ரெட் சிப் வைத்த கெட்ட சிட்டி ஒத்த ஆளா நின்னு ஒரு பெரும் படையையே தன்னைப் போல உருவாக்கம் செய்யும் இல்லையா? அந்த மாதிரி நானோ சைஸ் மெக்கானிசத்திற்கு சாத்தியம் உள்ளதா?
(மேட்ரிக்ஸ் படத்தில் செல்ஃப் ரெப்ளிக்கேட்டிங் ரோபாட்ஸ் (ARTIFICIAL INTELLIGENCE) கையில் உலகம் சிக்கி சின்னா பின்னமாகிறது. எந்திரங்கள் நம்மை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆவது என்று நல்ல முன்னேற்றமடைந்த செல்ஃப் ரெப்ளிக்கேட்டிங் ரோபாட்டால் விளைய சாத்தியமுள்ள மோசமான விளைவுகளை படமாக்கி இருப்பார்கள்.)
எனவே இந்த இரண்டு வகைகளில் நானோ டெக்னாலஜியில் இயந்திரங்களை தயாரிக்க இயலும் என்கிறார்கள். அப்படித் தயாரிக்கப் படும் இரண்டு இயந்திரங்கள் 100 விழுக்காடு ஒத்திருக்கும். ஏனென்றால் கணக்காக அணுக்களை அடுக்கி செய்தது அல்லவா? அங்கே குத்து மதிப்புக்கு வேலை இல்லை.
இயங்கும் போது உராய்வினால் ஏற்படும் வெப்பமும் இல்லை, ஆகையால் லூப்ரிகேஷனும் தேவையில்லை. இப்போது இருக்கும் ஃபாசில் எரிபொருட்களான பெட்ரோல், டீசல் போன்றவை வழக்கொழிந்து போகலாம். முற்றிலும் தூய்மையான எரிபொருளான சோலார் எரிபொருளே எதிர் காலத்தில் கோலேச்சும்.
”ஆமாம் உட்டா ரொம்ப கத விட்டுகிட்டே போறியே, இதில் ஏதாவது ஒன்றையாவது செய்து இருக்கிறார்களா? ஏதாவது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறதா?! “
அது பற்றி அடுத்த வாரம்.





Tuesday, December 12, 2017

லால்குடி டேஸ்-19 எடுடா மேளம், அடிடா தாளம், இனிதான் கச்சேரி ஆரம்பம்.

எடுடா மேளம், அடிடா தாளம், இனிதான் கச்சேரி ஆரம்பம்.

இந்த வாரம் லால்குடி டேஸ்ல எத எழுதலாம்ணு யோசனையோடு குளித்துக் கொண்டு இருந்த போது பல் வேறு விஷயங்கள் ’என்னை எழுது என்னை எழுது’ என்று வரிசையாக வந்து விண்ணப்பித்தபடி இருந்தன. அப்போது ஆடியோ பிளேயரில் “காட்டுக் குயிலு மனசுக்குள்ள“ என்ற தளபதி படப் பாடல் ஓடியது. ஆகா இத சொல்லலாமே என்று விண்ணப்பித்த அனைவரையும் அடுத்த வாரம் வருக என்று “பத்தி விட்டுட்டு” விடுதியில் நடந்த பாட்டுக் கச்சேரி சம்மந்தப் பட்ட சம்பவங்களை நினைவுச் சரத்தில் இருந்து சேகரித்தேன்.
பாட்டுக் கச்சேரி நடத்த தோதான நேரம் விடுதியில் வார்டன் மற்றும் அட்டெண்டர் இல்லாத இரவு நேரம். அதைவிட முக்கியம் கச்சேரி நடத்த தேவையான முக்கியஸ்தர்கள்.
நண்பர்களின் முகங்கள் அளவுக்கு பெயர்கள் நினைவுக்கு வரவில்லை. அமிர்தராஜ் ஆண்குரல் மற்றும் பெண்குரல் இரண்டிலும் பாடும் நல்லதொரு திறமைசாலி. சமயத்தில் டுயட் பாடல்கள் கூட சட் சட்டென்று ஆண் மற்றும் பெண் குரல் என்று மாற்றி மாற்றி பாடுவான்.
அடுத்தது பழனிமுத்து, இவர் விடுதியின் சீனியர் மாணவர். ஆம், ஆறாம் வகுப்பில் இருந்து இப்போது பனிரெண்டாம் வகுப்பு வரை வந்தவர். ஏற்கனவே இருந்த மாணவர்களிடம் இருந்து சகல வித்தைகளையும் பெற்றவர். ஒரு இரும்பு பெட்டியோ மரப் பெட்டியோ இருந்தால் போதும் தாளம் அருமையாக போடுவார்.
“ஏய் முதல்ல தலைவர் பாட்டு பாடு”
“எதுடா, எந்தப் பாட்டு”
“தளபதிப் படப் பாடல்”
“எது ’காட்டுக் குயிலு மனசுக்குள்ள’ வா?”
“ஆமாம்”
அப்போது அது புதுப் படம் ஆகையால் அந்தப் பாடல் எல்லோரையும் வசீகரித்த ஒரு துள்ளிசைப் பாடல்.
பாட்டுப் புத்தகத்தை நான் நீ என்று அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நீட்டினர். ( படிக்கிற புத்தகம் வாங்குடா ன்னா ஒரு பயல் வாங்கறது இல்லை முழுசா 50 பைசா கொடுத்து பாட்டுப் புத்தகம் மட்டும் வாங்கிடுறாங்க இப்போ தெரியுதா மக்களே இந்தியா ஏன் வல்லரசாகலன்னு?)
காட்டுக்குயிலு பாட்டுல ஹைலைட்டே அறிமுக இசையும் நிரவல் இசையும் தானே. பழனி முத்து அருமையாக ஆரம்பித்தான். பத்து விரல்களும் பெட்டியில் பரதம் ஆடியது. மரப் பெட்டி ஆதலால் புதுவிதமான ஒரு அருமையான துள்ளிசை ஒன்று பிறந்தது.
அமிர்தராஜ் கம்பீரமான குரலில் “காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கொன்றும் பஞ்சமில்ல ஆடத்தான்…“ என்று பாட ஆரம்பித்தான்.
“சின்னத் தம்பி பாட ஆரம்பிச்சுட்டான், இனிமே விடுதியில் ஒரு பய தூங்க முடியாது” என்று சொல்லாத குறைதான். கச்சேரி நடந்த இடம் கலைகட்ட ஆரம்பித்தது. பதினோறாம் வகுப்பு அறையை சுற்றிலும் மாணவர்கள் குழுமினர்.
பாடலின் இடையில் வரும் அந்த நிரவல் இசையையும் கூட அவ்வளவு அருமையாக பெட்டியின் மேல் கொட்டினான்.
அமிர்தராஜ் பாட்டுப் புத்தகம் இல்லாமலே முழுப் பாடலையும் பாடி முடித்தான். அந்தப் பாடல் ஜேசுதாசும் பாலசுப்பிரமணியனும் பாடியது என்பது எனக்கெல்லாம் கல்லூரி சென்ற பின்பு தான் தெரியும். அப்போது அந்தப் பாடல் ஒருவர் பாடிய பாடல் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
அடுத்ததாக விஜயகாந்த் ரசிகர்கள், ”ஏய் கேப்டன் பிரபாகரன் படத்தில இருந்து பாடு” என்று வற்புறுத்த ஆரம்பித்தனர்.
“பாசமுள்ள பாண்டியரே“ பாட்டுக்கு தாளத்தை முன்னெடுத்தான் பழனிமுத்து.
அமிர்த ராஜ் தான் இந்தப் பாடலையும் பாடினான். “நெத்தியில வச்சப் பொட்டு..” என்று துவங்கும் சரணத்தை அனாயசமாக பெண்குரலில் துவங்குவான். ஆண் பெண் கோரஸ் எல்லாம் ஒன் மேன் ஆர்மியாக பாடுவது அமிர்தராஜ் தான்.
அடுத்ததாக ”ஒரு நாளும் எனை மறவாத “ என்று துவங்கும் “எஜமான்“ பாடல் மறுபடியும் ரஜினி ரசிகர்கள் குதூகலிப்பார்கள். பெண்குரலுக்கு மாற்று இல்லை என்பதால் இதுவும் அமிர்தராஜ் தான்.
இடையில் கிராமத்து நையாண்டி தாளக்கட்டில் வரும் சில பாடல்களையும் பாடுவதுண்டு. அவ்வளவு நேரம் அமைதியாக வேடிக்கைப் பார்த்த நண்பன் ஆனந்த் ( பெயர் மறந்து விட்டேன் ) பாடுவான். “அடப் பாவிப் பயலே இத்தனை நாளும் அமைதியாக இருந்த இவனுக்குள்ள இவ்வளவு திறமையா” என்று எல்லோரும் வாயடைத்துப் போகும்படி பாடுவான். அவனது குரல் கிராமியப் பாடலுக்கு என்று அளவெடுத்து தைத்தது போன்று இருக்கும்.
”ம்க்கும் நானும் பெரிய பாடகராக்கும், ஊரில் பொங்கல் விழாவில் பரிசெல்லாம் கூட வாங்கியிருக்கேன்” என்கிற தைரியத்தில் நானும் கச்சேரியில் பாடுவது என்று முடிவு பண்ணியிருந்தேன்.
பிரச்சனை என்னவெனில் குழந்தைத் தனம் நிறைந்த எனது குரல் குமரப்பருவ வளர்ச்சியால் குரல் வளை தடித்து சற்று கடினமாகிவிட்டது. ஒரு விஷயம் தெரியுமா, நமது குரல் மற்றவர்களுக்கு கேட்கிற மாதிரி நமக்கு கேட்காது. காற்றில் பயணித்து கேட்பதற்கும் நேரடியாக கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. இதெல்லாம் அறியாத நான் ( என்ன செய்வது நான் அப்போது வரை “பச்ச மண்ணு”) காக்கைக்கும் தன்குரல் தேன்குரல் என்கிற தைரியத்தில் பாட இறங்கி விட்டேன்.
பாடி பரிசு பெற்ற அந்தப் பாடலையே பாடிவிடுவது என்று தேர்வு செய்தேன். நினைவுச் சின்னம் படத்தில் சுசிலா பாடிய “ஏலே இளங்கிளியே..“ எனத் துவங்கும் அருமையான தாலாட்டுப் பாடல் அது.
நான் கண்மூடி மெய் மறந்து பாட ஆரம்பித்தேன். பசங்களும் ரசிக்கிற மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிப்பார்கள். முதலில் பழனிமுத்து தாளமிடுவதை நிறுத்தினான்.
“சரி ஜெயராஜ் அடுத்தப் பாடல் போகலாமா“ என்று சட்டென்று தாவிப் போய் விட்டார்கள்.
எனது பாடல் கேட்டு பீதியில் கிடந்த அனைவரையும் பிரிதொருத் தாலாட்டுப் பாடல் பாடி தூங்க அனுப்பினான் அமிர்தராஜ்.
”தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே…”
சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு ராஜவேல் என்னிடம் வந்து “டேய் பொங்கல் பாட்டுப் போட்டியில் பரிசெல்லாம் வாங்கி இருக்கேன் என்று சொன்னியே பொய் தானே?” என்றான்.
எனக்கு வந்ததே கோபம். நான் இதுநாள் வரையில் பெட்டியில் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த “பரிசுப் பொருளை” எடுத்து அவன் மூஞ்சியில் வீசினேன்.
அதைப் பார்த்தபின்தான் அவன் அதிகமாக என்னை பகடி செய்ய ஆரம்பித்தான். “டேய் இனிமே நீ பாடிடக் கூடாதுன்னுதாண்டா இந்தப் பரிச கொடுத்துருக்காங்க” என்று என்னிடம் சொல்லியதோடு நிற்காமல் “தீயா வேலை செஞ்சிட்டான்” அன்றைக்கு சாயந்திரத்திற்குள் எல்லோருக்கும் செய்தி பரவியது.
அன்றைக்கு ஓட்டுவதற்கு எல்லோருக்கும் நான் கிடைத்துக் கொண்டேன்.
”சரி அப்படி என்னதாங்க அந்தப் பரிசு?” என்று அறிய ஆர்வமாக உள்ளதா?
“சரி யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, அந்தப் பரிசு ஒரு நைலான் கயிறு ரோல்”
அன்றிலிருந்து நான் பாத்ரூமைத் தவிர எங்கேயும் பாடுவதுமில்லை, எங்கள் ஊர் பொங்கல் விழாவில் பரிசுப் பொருளாக நைலான் கயிறு வாங்குவதுமில்லை.


Thursday, December 7, 2017

நானே “நானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!

நானேநானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!
போன எபிசோட்ல நானோ டெக்னாலஜியின் சாத்தியங்கள், நானோ மீட்டர் என்றால் எவ்வளவு சைஸ் என்று ஓவர் பில்டப் கொடுத்து ஒரு ட்ரெய்லர் ஓட்டி மெயின் பிச்சர் வந்து கிட்டு இருக்குன்னு சொல்லியிருந்தேன்.
இந்த கட்டுரையின் நோக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அலறி அடித்து ஓட்டம் பிடிப்பவர்களையும் துரத்திப் பிடித்து அவர்களும் கேட்கும் வண்ணம் இதனை வழங்குவது தான்.
ஆகையால் அதிக அளவில் ஆழ்ந்த அறிவியல் விஷயங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த எபிசோடுக்கான சோர்ஸ் கன்டென்ட் படித்து விட்டு பிளந்த வாயை இன்னும் என்னால் மூட இயலவில்லை. உள்ளே டெங்கு கொசு போய் ஒரு வீடு கட்டியிருக்கும்.
நானோ டெக்னாலஜியின் ஆரம்ப விதை பற்றியது இது. இந்த விதையை ஊன்றியவர் ஆஸ்கர் பரிசு பெற்ற ச்சீ ச்சீ (புத்தி எப்போ பாத்தாலும் எங்கே போவுது பாருங்க) நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்ட் பி.ஃபேயின்மான்.
விதையை ஊன்றியது 1959 டிசம்பர் மாதம்.
அமெரிக்காவில் இயற்பியல் விஞ்ஞானிகள் நிறைந்த அவை ஒன்றில் அவர் நிகழ்த்திய உரையில் அவர் அள்ளித் தெளித்த தகவல்கள் யாவும் பிரமிக்கத் தக்கவை. அவர் வாயில் இருந்து வந்த ஒரு வாக்கியத்தை வாங்கி வந்து ஆய்வு செய்து நாம் ஒரு பி.எச்டி பெற்று விடலாம். ஒரு பெரிய ஆய்வுக்கான சுரங்கத்தை திறந்து காண்பித்திருப்பார்.
இந்த தொடரில் அவரின் உரையை மற்றுமொரு சம்பவம் என்று கடந்து போனால் அவர் ஆவி வந்து என் சட்டை கொத்தாக பிடித்துடேய் நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டாஎன்று பஞ்ச் அடித்தபடி என்னை தாக்க வாய்ப்புள்ளது.
இதனை படிக்கும் போது வாயில் ஏதேனும் போட்டு வாயை மூடிக்கொள்ளவும். ஏனெனில் அவர் கூறியுள்ளவற்றை அந்த கால கட்ட அறிவியல் சாத்தியங்களோடு ஒப்பிட்டு உங்கள் வாய் தன்னாலே அகலத் திறந்து கொள்ளும்.
நான் படத்தில் சமந்தா பாத்தீங்களா?
ஆமாம் கொள்ளை அழகு
ஆமாம் நீங்க அழக மட்டும் தான் பாத்தீங்க, நான் அறிவியல் மனப்பான்மையோடு அவர் செய்யும் வேலையை பார்த்தேன்
என்ன வேலை செய்யுறாங்க?”
பென்சில் முனையில் சிற்ப வேலை செய்வாங்க
இத நெறய பேரு செய்வாங்களே. செய்தித்தாளில் கூட பாத்துருக்கலாமே
நமக்கு சமந்தா செய்தது மட்டும் தான் மனசுல நிக்குது
ஜோக்ஸ் அபார்ட். ஃபேயின்மான் அவர்களில் பேச்சின் தலைப்புThere is Plenty of Room at the Bottom”. (அங்கே அடியில் ஏராளமாக இடம் உள்ளது ம்ம்.. சரியா டிரான்ஸ்லேட் பண்ணிட்டேனா?)
அவர் ஏதோ லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு ரூம் கேட்டு வந்தவர்களுக்கு சொன்ன பதில் போல உள்ளதா? சரி போகப் போக பெயர்க் காரணம் புரியும்.

என்சைக்ளோபீடியாவின் 24 பாகங்கள் அடங்கிய புத்தகத்தை (அப்போது அது தான் ஆகப் பெரிய புத்தகம், இப்போது சி.டி வடிவில் சுருங்கி விட்டது) ஒரு குண்டூசி முனையில் எழுதினால் என்ன?” என்று கேள்வி கேட்டு அரங்கத்தை வியப்பில் ஆழ்த்துகிறார்.
குண்டூசி முனை ஒரு இஞ்ச் ல் பதினாறில் ஒரு பாகம் அதனை 25000 மடங்கு உருப் பெருக்கினால் அதன் பரப்பு என்சைக்ளோபீடியாவின் ஒட்டு மொத்த புத்தகங்களின் பக்கங்களின் பரப்பளவுக்கு சமம் என்று கணக்கிட்டு சொல்கிறார்.
அடுத்து உலக நூலகங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் கணக்கிட்டு அதனை எழுதுவதற்கு ஒரு சூத்திரம் சொல்கிறார். அணுக்களை கொண்டு எழுதலாம் என்கிறார்.
எனவேகீழே இடம் உள்ளது என்பது அல்ல ஏராளமான இடம்(plenty of Room) உள்ளது என்பதே அவர் கூறியது
ஏம்பாசொல்றது சுளுவு செய்யறது இன்னா கஸ்டம் தெரியுமானு நம்ம பாரதியார் சொல்லிருக்காருப்பா
அது திருவள்ளுவர்ங்க
அப்போது இருந்த அறிவியல் தொழில் நுட்பங்களை கொண்டு அவ்வாறு எழுதுவதும் சாத்தியம் படிப்பதும் சாத்தியம் என்று தொழில்நுட்ப ரீதியான விளக்கமும் அளித்துள்ளார்.

எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை ரிவர்சில் மாற்றி பயன் படுத்தி எழுதலாம், அதே மைக்ராஸ்கோப் கொண்டு படிக்கலாம் என்கிறார்.
ஏற்கனவே பெரிதாக இருப்பதை கஷ்டப்பட்டு சுருக்குவானேன், அப்புறம் அதை கஷ்டப்பட்டு படிப்பானேன்? ( “நான் ஏன்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போவனும்னு வடிவேல் கேட்டது போல் கேட்காதீர்கள்.)
இந்த மாதிரியான விசித்திர சிந்தனைதான் ஒரு புதிய அறிவியல் சாத்தியத்திற்கான கதவை திறந்து விட்டுள்ளது.
அடுத்து அப்போது புதிய கண்டுபிடிப்பாக இருந்த கணிப்பொறி பற்றியும் கூறத் தவறவில்லை.

இப்போது கணினி இரண்டு அறைகளை அடைத்துக் கொண்டு ராட்சசன் போல படுத்துக் கிடக்கிறது. அதன் பாகங்களையும் இணைப்பு வொயர்களையும் 10 முதல் 100 அணுக்களின் அகலத்தில் செய்தால் அதன் அளவு மிகவும் சுருங்கி விடும்” என்கிறார். (இந்த விஷயம் இன்றளவும் கூட சாத்தியப் படவில்லை)
அதன் நினைவுத் திறனை ஒருபிட் 5 கன அணு அளவில் பதிவு செய்தால் குறுகிய இடத்தில் ஏராளமான தகவல்களை சேமிக்கலாம். (இதுவும் இன்றளவிலும் இந்த அளவு நுண்ணியதாக சாத்தியப் படவில்லை)

அவரின் கற்பனை நிஜத்திலிருந்து லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் ஒரு ஃபிளாப்பி டிஸ்க்கையே (1.62 எம்.பி நினைவு திறன்) லாரியில் ஏற்றித் தான் கொண்டு வருவார்கள்.
”விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் போட்டுக் கொண்டு ஊசியில் நூல் கோர்க்க முடியுமா?” ஆனால் இதைவிடவும் பலநூறு மடங்கு கஷ்டமானது தான் அவர் கூறிய விஷயங்கள்.
அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தக்க இயந்திரங்களின் போதாமை பற்றி மிகவும் கவலை கொள்கிறார். அப்போது இருந்த எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் துல்லியத் தன்மையை 100 மடங்கு மேம்படுத்த வேண்டியுள்ளது என்கிறார்.
அப்படி மேம்படுத்தினால் பல உயிரியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளுக்கான வாசல்களை அது திறந்துவிடும் என்றும் கூறுகிறார்.
அடுத்ததாக இன்னுமொரு விபரீத ஆலோசனையையும் வழங்குகிறார். ”swallow the surgeon” என்கிறார்.
”ஆத்தாடி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை விழுங்குவதா?”
அதே தான் அறுவை சிகிச்சை செய்யும் வல்லமை படைத்த ஒரு நானோ ரோபாட்டை (சென்ற வாரம் சொன்ன நானோபாட்) விழுங்கி வைத்தோமானால் அது உள்ளே சென்று ”ஆபரேஷன்” செய்து முடித்து “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு” என்று மெசேஜ் தட்டிவிடும்.
மேலே தரப்பட்ட கருத்துக்கள் யாவுமே கடலில் மிதக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே (Tip of an Iceberg). அவரது உரையின் பி.டி.எஃப் வடிவத்தை இங்கே(க்ளிக்குக)இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.


 இன்னும் சுவாரசியமான நானோ டெக்னாலஜி விஷயங்களுடன் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...