Saturday, August 29, 2020

எனக்கு ஒரு கனவு உண்டு...- மார்ட்டின் லூதர் கிங்

 



புத்தகம் – கறுப்பு வெள்ளை

ஆசிரியர் – பாலுசத்யா (பத்திரிக்கையாளர்)

“எனக்கு ஒரு கனவு உள்ளது….” – என்ற இந்த வாசகத்தை யாராவது மறக்க இயலுமா? நம் எல்லோருக்குமே கனவு உண்டு. அது நமது நலன், குடும்பநலன் போன்றவை சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர் கண்ட கனவு இன விடுதலைக்கான கனவு, சமத்துவத்திற்கான கனவு, அடிமைச் சங்கிலியை அறுத்து கிடாசுவதற்கான கனவு. அந்தக் கனவுக்கு சொந்தக்காரர் “மார்ட்டின் லூதர் கிங்” ஆவார்.

வடிவேலு படத்தில் வரும் வசனம் “சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்டா” என்பது உண்மையோ இல்லையோ “வெள்ளையா இருக்குறவன் தப்பு செஞ்சிருக்க மாட்டான் ஆனா கறுப்பினத்தவன் நிச்சயமா தப்பு செஞ்சிருப்பான்” என்கிற எண்ணம் அமெரிக்க வெள்ளை இன மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி கிடப்பதை நாம் அறிவோம்.

“என்னால் மூச்சு விட முடியவில்லை…” என்கிற ஜார்ஜ் ப்ளாய்டின் வார்த்தைகள் இன்னமும் நமது தூக்கத்தை கெடுக்கத்தானே செய்கின்றன. கறுப்பினத்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டாலே அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முன்முடிவோடு காவல்துறையில் இருந்து நீதித்துறை வரையிலும் அனுகும் போக்கு இன்றளவும் உள்ளது என்பதை பல செய்திகளில் படித்து அறிந்து இருக்கிறேன்.

கிரீன் புக் என்கிற ஆஸ்கர் விருது பெற்ற ஆங்கிலப் படத்தில் “ஒரு பெரும் பணக்காரர், அமெரிக்க மக்கள் அனைவரையும் தனது இசையால் மயக்கி வைத்திருப்பவர், ஆனாலும் நிறவெறி உச்சத்தில் இருக்கும் தெற்கு மாகாணங்களில் சுற்றுப் பயணம் செய்யும் போது சொல்லொனா அவமானத்திற்கு ஆளாகிறார். கறுப்பினத்தவர்கள் தங்கும் விடுதிகளைக் கொண்ட கையடக்க புத்தகமான கிரீன் புக் உதவியோடு தான் அங்கே கறுப்பர்கள் சுற்றுப் பயணம் செய்ய இயலும்.

நிற வெறி அன்றிலிருந்து இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் பிறந்து கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய முக்கியமான தலைவர் தான் மார்டின் லூதர் கிங் அவர்கள். மகாத்மா காந்தியை தனது போராட்ட முறை வழிகாட்டியாக வரித்துக் கொண்டவர்.  தனது போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியிலேயே இருக்கும் படி கவனமாக பார்த்துக் கொண்டவர். அதனால் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றவர்.

புத்தகத்தின் முதல் அத்தியாயம் அமெரிக்க வரலாறில் ஆரம்பிக்கிறது. இந்த ஆட்டம் ஆடுற வெள்ளைக் காரனுங்களே அமெரிக்காவின் வந்தேறிகள் தான். ஆமாம், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டடைந்தவுடன் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள் தானே அவர்கள். வந்தவர்கள் சும்மாவா வந்தார்கள் கப்பல் கப்பலாக தங்களுக்கு சேவகம் செய்வதற்கான ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாக விலங்கிட்டு அழைத்து அல்லவா வந்தார்கள்.

1860 ல் கறுப்பின மக்களுக்கு சமஉரிமைகள் வழங்கும் சட்டத்தை லிங்கன் அவர்கள் கொண்டு வந்தார். அதிதீவிர நிற வெறியர்களான தெற்கு மாகாணங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் உள்நாட்டு யுத்தத்தில் குதித்தனர். 1861-1865 வரையில் உள்நாட்டு யுத்தம் நீடித்தது. கறுப்பின மக்களுக்கான சுதந்திர பிரகடனம் 13வது சட்டத்திருத்தத்தின் வாயிலாக சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் சட்டத்தில் இருப்பதோடு சரி. இந்தியாவில் எப்படி என்னதான் சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் நடைமுறையில் ஒரு தலித் இன கிராம பஞ்சாயத்து தலைவர் சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்ற இயலாத நிலை உள்ளதோ அதே போல 13 வது சட்டத்திருத்தத்திற்கு பிறகும் அமெரிக்க கறுப்பின மக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை.

கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி உக்கிரமாக இருந்த காலத்தில் 1929 ல் ஜனவரி மாதம் 15 நாள் இங்கே தை பிறந்த போது அமெரிக்க கறுப்பின மக்களுக்கு வழி பிறந்தது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்று அவர் அழைக்கப் பட்டதற்கு காரணம் அவரது தந்தை பெயரும் அதுவே.

அவரது இளம் பிராயத்தில் கறுப்பின மக்கள் விடுதலைக் கேட்டு மூச்சு விட்டால் அவர்களை கண்டறிந்து கருவறுக்க கூ க்ளக்ஸ் க்ளான் என்கிற ஒரு வெள்ளை இன தீவிரவாத அமைப்பு இயங்கி இருந்திருக்கிறது.

ப்ரௌன் வெர்சஸ் போர்ட் ஆப் எஜூகேஷன் என்கிற ஒரு பிரபலமான வழக்கு மூலமாகவே லூதர் கிங் சிறுவனாக இருந்த காலத்தில் பள்ளிகளில் சம உரிமை நிலை நாட்டப் பட்டது. அதற்கு முன்பு வரையில் கறுப்பின குழந்தைகளுக்கு தனிப் பள்ளி முறை நடைமுறையில் இருந்துள்ளது.

இதே போல ப்ளஸ்ஸி வெர்சஸ் ஃபெர்குசன் என்கிற ஒரு வழக்கு பற்றியும் புத்தகத்தில் உள்ளது. ப்ளெஸ்சி என்கிற பெண்மணி ரயிலில் வெள்ளையர்களுக்கான பெட்டியில் ஏறியதற்காக தண்டிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் கூட தீர்ப்பு அவருக்கு எதிராகவே வந்தது. இனவெறி இருக்கணும் ஆனா தெரியபடாது அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது போல “கறுப்பினர்களுக்கு சம உரிமை உண்டு. ஆனாலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் அந்தப் பெட்டியில் ஏற அனுமதிக்கப் படவில்லை“ என்று தீர்ப்பெழுதி தனது இனவெறியை காண்பித்துக் கொண்டது உச்ச நீதி மன்றம்.

இதற்கிடையில் மார்டின் லூதர் கிங் படித்து ஒரு சர்ச் ஃபாதர் ஆகிவிட்டார். பிரசங்கங்களிலும் நல்ல மேதைமை கொண்டு புகழடைந்தார். அதுவே அவரது அரசியல் போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது.

அமெரிக்க வரலாற்றில் 1955, டிசம்பர் 1 ஒரு கறுப்பு நாள். ஆமாம் அன்று தான் ரோசா பார்க்ஸ் என்கிற கறுப்பின பெண்மணி வெள்ளை இனத்தவருக்காக எழுந்து கொண்டு தனது சீட்டை தரவில்லை என்ற பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டார். அந்த தீ மள மள வென அமெரிக்கா முழுவதும் வியாபித்து அரசை மண்டியிடச் செய்யப்போகிறது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சம உரிமைத் தீயை மனதில் வளர்த்து காய்ந்து கிடந்த கறுப்பின மக்கள் மத்தியில் ரோசாப் பார்க்ஸ் சம்பவம் குப்பென்று பற்றிக் கொண்டது. கறுப்பின மக்கள் முன்னேற்றத்திற்கான மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்டோர் ஆரம்பித்த அமைப்பான NAACP இந்த பிரச்சனையை கைப்பற்றிக் கொண்டது. கறுப்பின மக்கள் அனைவரும் பேருந்துகளை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. மார்ட்டின் லூதர் கிங் அவர்களே எதிர்பார்க்காத வண்ணம் மக்கள் ஒத்துழைப்பு தந்தார்கள். சுமார் 381 நாட்கள் பேருந்துகளை புறக்கணித்து நடந்தார்கள். இந்த நடை தான் பின்னால் வரும் நம் சந்ததியினர் கம்பீர நடை போட உதவப் போகிறது என்று திடமாக கடைசி வரை களத்தில் நின்றார்கள் வென்றார்கள். பேருந்தில் கருப்பின மக்களுக்கான தனி இருக்கை முறை கை விடப்ப பட்டது.

இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு என்னனென்னவோ செய்து பார்த்தது. கிங் தாக்கப்பட்டார், சகாக்கள் சிறை பட்டனர், போராட்டக் காரர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. ஆனாலும் கூட கோரிக்கை வென்றெடுக்கப் படும் வரை அகிம்சை வழியில் ஒழுக்கத்தோடு போராடினார்கள். உலக வரலாற்றில் விடுதலைக்கான முக்கியப் போராட்டங்களில் ஒன்றாக இந்த போராட்டம் வரலாற்று ஆசிரியர்களால் சிலாகிக்கப் படுகிறது. அதே நேரம் உலக நாட்டாமை மீது உலக மக்கள் காரி உமிழவும் இதே போராட்டம் காரணமாக அமைந்தது.

மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் மகத்தான வாசகமான “I have a dream…” ஐ உள்ளடக்கிய உரை 1963 ம் ஆண்டு ஆகஸ்ட் 28  அன்று அபிரஹாம் லிங்கனின் நினைவகத்திற்கு முன்பாக நிகழ்த்தப் பட்டது. வெள்ளை இன மக்களுக்கு நிகராக அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கோரி நடத்தப் பட்ட பேரணியில் நடத்தப் பட்ட உரை தான் அது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி கறுப்பின மக்களுக்கு சம உரிமை வழங்கும் மசோதா தயார் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நிலையில் படுகொலை செய்யப் பட்டார். (லிங்கனோ கென்னடியோ சம உரிமை பேசினா வெட்டுவோம் என்பது தான் அமெரிக்க சங்கி குருப்)

1968 ஏப்ரல் 4ம் நாள் ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவனால் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.

அகிம்சை வழியில் கறுப்பின மக்கள் விடுதலை மற்றும் சம உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க கறுப்பின மக்களுக்கான உரிமைகளை பெரிய அளவில் வென்றுடுத்து அவர்கள் கைகளில் வழங்கி விட்டுத்தான் இறந்து போனார்.

சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் சமூக நீதி என்பன இன்றுவரையிலும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சொற்களாகவே இருந்து வருகிறது.

130 பக்கங்களே உள்ள நூல் இது. பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பாலு சத்யா அவர்கள் சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார். சிங்கிள் சிட்டிங்கில் படித்து முடித்து விடலாம். கிழக்கு பதிப்பக வெளியீடு.   

Thursday, August 20, 2020

அரசுப் பள்ளிகள் மீதான முற்றுகைத் தாக்குதல்கள்

      முற்றுகை 1.0


எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது, நான் உட்கோட்டைப் பள்ளியில் பணியில் சேர்ந்த வருடம் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 74 சதவீதம். அப்போதைக்கு அந்த தேர்ச்சி விகிதம் உச்சபட்ச சாதனை. அனைவருமே சந்தோஷப்பட்டோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக பாராட்டு விழா கூட நடத்தப் பட்டதாக நினைவு. இப்போது யோசித்துப் பார்க்கிறேன், இந்த தேர்ச்சி விழுக்காடு மட்டும் சென்ற ஆண்டு யாரேனும் வாங்கியிருந்தால் அந்தப் பள்ளிதான் மாவட்டத்தில் கடைசி இடத்தில் உள்ள பள்ளியாகும். அப்பப்பா!! எத்தனை மாற்றம். ஆனால் மாற்றம் என்னவோ எண்களில் தான்.

     தேர்ச்சி விழுக்காட்டை வெறிகொண்டு துரத்தும் பழக்கம் எப்போது துவங்கியது? 2002 க்கு பிறகான வருடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் “ரிங் மாஸ்டர் போல அனைவரிடமும் வேலை வாங்க வேண்டியுள்ளது” என்று அங்கலாய்த்த வருடம், பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக அனைத்து அரசு ஊழியர்களும் போராடிய வருடம் (உங்க பாஷையில் சம்பள உயர்வுக்காக போராடிய வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பெரும்பாலான மேலதிகாரிகள் ஆண்டை மனநிலையில் ஆய்வுக் கூட்டங்களில் ”யோவ் சிவப்பு சட்ட நீ சொல்லு” என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசிக் கொண்டு இருந்தார்கள். ”ஆசிரியர்களின் திறமையை அளப்பதற்கான அளவுகோல் தேர்ச்சி விழுக்காட்டைத் தவிர வேறு ஏதேனும் உண்டா” எனக் கண்டறிந்து “யுரேகா” என கோஷம் போட்டார்கள்.

     ஊடகங்கள் ஆளுக்கு ஒரு தராசினைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு தட்டில் தனியார் பள்ளி, மற்றொரு தட்டில் அரசுப் பள்ளி மாணவர்களை வைத்து ஒப்பிட்டு தேர்ச்சி விழுக்காட்டுச் சரிவைக் ஆய்வு(?) செய்து கண்டறிந்து பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதித் தள்ளினார்கள். அவர்களது கண்டு பிடிப்பு இதுதான், ”அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை, அதுவே பாருங்க தனியார் பள்ளி எம்புட்டு அறிவா சொல்லித்தந்து மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கிறார்கள்?!” என்று நிறைவு செய்து கீழ் நடுத்தர வர்க்கத்தினரை கடனாளி ஆக்கி கல்வித் தந்தைகள் உருவாக காரணமானார்கள்.

     சரி அவர்களின் ஆராய்ச்சியில் எம்மாம் பெரிய ஓட்டை என்று நிறுவப்பட்ட தருணத்தை ஒரு ”தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவது எப்படி” என்கிற பயிலரங்கில் உணர்ந்தேன்.

     2004ம் ஆண்டு என நினைக்கிறேன், ”யோவ் என்னய்யா நீங்கள்ளாம் டி.ஆர்.பி பாஸ் பண்ணிட்டேன் என்கிறீர்கள், தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த தெரியவில்லையே” என்று எங்களை எல்லாம் அழைத்து “தேர்ச்சி ஸ்பெஷலிஸ்ட்” கொண்டு ஒரு பயிலரங்கு நடத்தினார்கள். அங்கே ”சென்டம்” என்கிற அடைமொழியோடு ஒருவர் தோன்றினார். ஆகா, அவர் சென்டம் எடுப்பதில் மட்டுமின்றி பேச்சிலும் கெட்டிக் காரர் தான். ”தேர்ச்சிக்கு தேவை 35 மார்க் தானே சார்? நான் ப்ளு பிரிண்ட் படி ஒரு நாற்பது மார்க்குக்கு உரிய பாடத்தினை ஜூன் மாதமே முடித்து விடுவேன் மிச்சம் உள்ள மாதங்களில் பொதுத்தேர்வு வரையில் அதே பாடத்தில் டெஸ்ட் வைத்துக் கொண்டே இருப்பேன்” என்று அவர் முடித்த போது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அவர் வகுப்பில் இருக்கும் மீத்திறன் வாய்ந்த மாணவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த மட்டுமே என்னால் முடிந்தது. ஆனால் அதையும் ஒரு டெக்னிக் என பல பேர் அதன் பிறகு கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

     யாரேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக 2002 ல் இருந்து சென்ற ஆண்டு வரையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு இடை நிறுத்தம், ஒன்பதாம் வகுப்பில் டிசி வாங்கியவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு இடை நிறுத்தம் செய்த மாணவர்கள் விவரங்களை கேட்டுப் பெறுங்கள். எத்தனைக் குழந்தைகளின் கனவுச் சமாதியில் நம்ம தேர்ச்சி விழுக்காடு நெடிதுயர்ந்து கம்பீரமாக நிற்கிறது என்பதை அறியலாம். அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய கல்விமுறை எவ்வாறு இரக்கமின்றி வலுவில்லாதவர்களை வெளித்தள்ளும் வேலையை செய்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அரசுப் பள்ளிகளின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்குப் பின்னாலும் இந்தக் கதை உண்டு என்பது நிஜம்.

     இதற்கு பின்னால் இருப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறமையை உரசிப்பார்க்கும் உரை கல்லாக தேர்ச்சி என்கிற ஒற்றைக் காரணியை மட்டும் குருட்டுத் தனமாக நம்பிக் கொண்டு இருப்பதன்றி வேறு இல்லை.

     பத்தாம் வகுப்பில் நூறு விழுக்காடு தேர்ச்சி என்கிற ஒன்றை ஒன்பதாம் வகுப்பில் இருந்தே தொலைநோக்குப் பார்வையோடு ஆசிரியர்கள் அணுக ஆரம்பிப்பதால் வகுப்பறைக் கற்றலின் சுவையும் உற்சாகமும் குன்றிப் போய்விட்டது என்றால் அது மிகையில்லை.

     கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வது அரசுப் பள்ளிகள் தான். நிச்சயமாக அவர்களால் தேர்ச்சி பெற இயலாது என்றாலும் கூட அவர்களுக்கும் வகுப்பறையில் இடம் இருந்தது. ஆனால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சென்டம் ரிசல்ட் வாங்கிய ஒரு ஆசிரியரின் வகுப்பிற்கு மேற்காண் வகை மாணவர்கள் வந்து சேர்ந்தால் என்ன ஆகும் தெரியுமா? வகுப்பறையில் மட்டுமல்ல ஆசிரியர்களின் இதயத்தில் கூட அவர்களுக்கு இடம் இருக்காது என்பது தான் நிதர்சனம். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கலெக்டர் கையால் வாங்கிய மெடலை இந்த ஆண்டு எப்படி நழுவ விட முடியும்?

     தேர்ச்சி விழுக்காட்டைக் கொண்டு ஆசிரியர்களையும் பள்ளிகளின் தரத்தினையும் எடைபோட்ட கத்துக்குட்டி பத்திரிக்கையாளர்களின் செயல்களினால் நமது கல்வி நிலை எங்கே வந்து நிற்கிறது என்று எண்ணிப் பாருங்கள். “கடைசியில என்னையும் அரசியல் பண்ண வச்சிட்டிங்க இல்ல?” என விரக்தியாக அர்ஜூன் பேசும் டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

முற்றுகை 2.0

அடுத்ததாக ஆசிரியர்களின் ஊதியத்திற்கு வருவோம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவ்வளவு சம்பளம் வாங்கும் எந்த ஒரு அரிய வகை ஆசிரியரும் என் கண்ணில் படவே இல்லை. என்னவோ கஜானாவைத் திறந்து பை கொள்ளும் மட்டும் பணத்தை பிதுங்க பிதுங்க அள்ளி நிரப்பிக் கொண்டார்களா என்ன? நான் வேலைக்கு வந்த ஆண்டு எனது சம்பளத்தில் ஒன்றரைப் பவுன் எடுக்கலாம். சென்ற ஆண்டு வரையிலும் அதே ஒன்றரைப் பவுன் தான். (அப்ப இந்த ஆண்டு சம்பளம் ஏறிடுச்சா? இல்ல பவுன் விலை ஏறிடுச்சி) 2009 ல் ஆறாவது ஊதியக்குழு நாடு முழுவதும் ஒவ்வொரு பணி நிலை மற்றும் கல்வித் தகுதி என ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தான் ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன் இளம் மென் பொறியாளர்களின் சம்பளத்தை பார்த்து வாயைப் பொளந்து கொண்டு ஆச்சரியப் படுவோம்.

     கெடுவாய்ப்பாக அந்தக் காலகட்டத்தில் தான் பல தொழில்களில் கிடைத்த வருமானங்களை எல்லாம் முதலீடு செய்து புதிய பல கல்வித்தந்தைகள் கிராமங்கள் தோறும் உருவாக ஆரம்பித்தனர். முற்றுகை 1.0 வில் ஊடக ஆய்வுகள் கீழ்நடுத்தர மக்களை கடனாளிகளாக ஆக்கியதைப் போல இந்த அடுத்த தலைமுறைக் கல்வித் தந்தைகளின் இலக்கு ஏழைக் குழந்தைகள். அப்போ அவர்களிடம் ஃபீஸ் சொற்பமான அளவில் தான் பெயரும். மாணவர் எண்ணிக்கையும் ஒரு வகுப்புக்கு பத்துக்கு கீழ் என சொற்பமாகவே இருந்தது. இது அப்படியே இருக்கட்டும்.

அனைவருக்கும் கல்வித் திட்ட நிதிகள் மற்றும் டி.ஆர்.பி மூலமாக ஏராளமான பேருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை கிடைத்த காரணமாக பி.எட் படிப்புக்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டது. அப்புறம் என்ன ஏராளமான பி.எட் கல்லூரிகள் முளைத்தன. பி.எட் முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் வெளியே வந்தனர். நான் 2002 ல் டி.ஆர்.பி எழுதிய போது மொத்தம் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் லட்சம் பேர் இருந்தால் அதிகம். ஆனால் சென்ற ஆண்டு முதுகலை டி.ஆர்.பிக்கு விண்ணப்பித்தோரே பதினோரு லட்சம். போட்டி எப்படி களைகட்டுது பாத்தீங்களா?

ஆக, பி.எட் முடித்த ஏராளமான பேருக்கு இந்த புதிதாக முளைத்த இரண்டாம் தலைமுறை கல்வித் தந்தைகள் வேலை வழங்க தயாராக இருந்தனர். ஆனா சம்பளம் 3000, 4000, 5000 என்று தான் இருக்கும். அதிகபட்சமாக பத்தாயிரம் இருக்கலாம். அதுவும் கூட மாதா மாதம் கொடுக்கப் படுவதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆக ரெண்டு பேருக்குமே வேறு வழியில்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பணம் வழங்கும் உண்மையான முதலாளிகளான பெற்றோர் ஏழை எளிய மக்கள்.

இப்போ வாங்க, இந்த பத்தாயிரத்திற்கு கீழான சம்பளம் வாங்குவோரின் சம்பளம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடப் படுகிறது. ”இந்தப் புதியப் பள்ளிகள் கூட தரமாக இருக்கிறதே. அந்த தரத்தை பராமரிப்பது அந்த பத்தாயிரத்திற்கு கீழாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தானே?”

“கொஞ்சம் ஷோல்டர எறக்குங்க பாஸ், நீங்க சொல்ற தரம் என்பது ரிசல்ட் தான் என்று தெரிகிறது. ஏற்கனவே சொன்ன அதே டைலர் அதே வாடகை தான் இங்கேயும். இவன் பத்தாவதுல தேறமாட்டான் என்றால், ஒன்பது வருடங்கள் ஒட்ட ஒட்ட கறந்த பணம் காய்ச்சி மரமான பிள்ளைகளையே ஈவு இரக்கமின்றி வெளியே தள்ளி கதவடைக்கின்றார்கள்”

அப்புறம் ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன், 2002 போராட்டத்தின் சமயத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களது சம்பளத்தில் நாங்கள் நான்கு பேர் வேலை பார்ப்போம் என்று தொண்டை வறண்டு போக கோஷம் போட்டவர்கள் தான் 2017 ம் ஆண்டு போராட்டத்தில் முன்களப் போராளிகளாக உரிமை முழக்கம் இட்டார்கள் என்பது வரலாறு. (இரண்டுமே சம்பள உயர்வு போராட்டம் அல்ல என்பது வேறு கதை)

”அப்படி எதற்குத்தான் போராட்டம் பண்றீங்க பாஸ்? வட கொரியாவை அணு ஆயுதங்களை கைவிடச் சொல்லியா போராட்டம் பண்றீங்க?”

பலநூறு ஆண்டுகாலமாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர் வர்க்கம் ஒரு கட்டத்தில் போராடி கொஞ்சம் கொஞ்சமாக சில உரிமைகளை வென்றெடுத்து இருக்கிறது. தொழிலாளர் கடமைகள் பற்றி வாய்கிழிய பேசும் ஊடகங்களோ பொது மக்களோ தொழிலாளர்தம் உரிமைகள் என்று வரும் போது வாய் மூடி மௌன விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

2002 ல் இருந்தே அரசு தனது பணியாளர்களின் பல்வேறு உரிமைகளை பறித்தவண்ணம் வருகிறது. அரசுக்கு ஒரு துணிச்சல் என்னவென்றால் வேலை பார்க்கும் ஊழிர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் தகுதியுள்ள வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். எனவே இவர்களது நியாயமான உரிமைகளை பொறாமை கொள்ளத்தக்க ஒன்றாக ஊடகங்கள் வாயிலாக ஊதிப் பெருக்கி மக்களின் ஆதரவோடு துணிச்சலாக செய்யலாம்.

2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது. 2004 ல் வெளியில் நின்று ஆமாம், சரிதானேப்பா என்றவர்கள் உள்ளே வந்த பிறகு போட்ட ”ஓய்வு ஊதியம் இல்லையா? அநியாயம் அக்கிரமம்” என்ற கோஷமே 2017 போராட்டம். இது தான் அரசு ஊழியர்கள் போராட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை பொதுஜன மனநிலை.

மேலே சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே இது போல பல விஷயங்கள் இல்லை என்றாகிவிட்டது.

அரசு வேலை பெற அனைவரும் பெருத்த முயற்சி எடுப்பது எதற்காக?

நிறைவான நியாயமான ஊதியம், பணிப் பாதுகாப்பு, ஓய்வு ஊதியம் இவ்வளவு தானே?

ஏற்கனவே ஓய்வு ஊதியம் என்கிற ஃபியூஸை பிடுங்கியாச்சி.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில் பணிப் பாதுகாப்பு விஷயமும் கேள்விக்குறி ஆகிவிட்டது. இனி உயரதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே வருடாந்திர ஊதிய உயர்வு கிட்டும். அடுத்தது புதியக் கல்விக் கொள்கை வாயிலாக பீரியாடிக்கலான தகுதித் தேர்வு வாயிலாக மட்டுமே பணியில் நீடித்திருக்க இயலும். பணி மூப்பு என்பது பதவி உயர்வுக்கான தகுதி என்பதற்கும் சாவுமணி அடிச்சாச்சு.

இப்போது இருப்பது வெறும் சம்பளம் மட்டும் தான். இப்போ நியுஸ் பேப்பர்ல வருகிற ரைட்அப்லாம் பாத்தா அடுத்த கட்டமாக அதற்கும் ஆப்புதான்.

”இப்போ பாருங்க அரசுப் பணி தனியார் பணி ரெண்டும் சரியாப் போச்சா. கொஞ்சம் திரும்பி பாருங்க பாஸ் இந்த சண்டையில உங்க ரிசர்வேஷன் ஃபர்னிச்சரை சல்லி சல்லியா ஒடைச்சுட்டோம். எங்களால ரிசர்வேஷன வேணும்னா காலி பண்ண முடியாம இருக்கலாம். ஆனா எந்த ரிசர்வேஷன வச்சி நீ அரசுப் பணிக்கு வந்தியோ அந்தப் பணிய தனியார் பணிக்கும் கீழே எங்களால இறக்கிவிட முடியும்”

இவ்வளவு ரணகளத்திலயும் ஒரு விஷயத்த கவனிச்சிங்களா? கடைசி வரைக்கும் சொற்ப சம்பளம் கொடுத்து உழைப்பைச் சுரண்டும் தனியார் முதலாளிகள் மீது உங்களுக்கு கோவமே வரல. உங்க கோபம் எல்லாம் உங்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசுப் பணியாளர்கள் மீதுதான்.

இந்த ஊடகங்கள் சாதிச்சது இதத்தான். முதலாளிகளுக்கு எதிரான மனநிலை எழாமல் மக்களின் கோபத்தை மடைமாற்றும் வேலையை கனக்கச்சிதமாக செய்பவர்கள் வேறு யாருமில்லை இந்த ஊடக சகுனிகள்தான்.

முகநூலில் ஒரு கொலாஜ் படம் என்னை வெகுவாக பாதித்தது. இது அரசுப் பள்ளி, இது அரசுப் பள்ளி ஆசிரியர் வீடு என ஒரு இத்துபோன கட்டிடத்தையும் ஒரு அழகான மாடி வீட்டையும் போட்டிருந்தார்கள். அடுத்து இது தனியார் பள்ளி, இது தனியார் பள்ளி ஆசிரியர் வீடு என்று ஒரு பெரிய பில்டிங் காம்பளக்ஸையும் ஒரு குடிசை வீட்டையும் போட்டிருந்தார்கள்.

இதைப் பார்க்கும் போது நியாயமாக யார் மீது உங்களுக்கு கோபம் வரவேண்டும்? உழைப்பைச் சுரண்டும் தனியார் முதலாளிகள் மீது தானே? ஆனால் உங்கள் கோபம் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடமே திரும்புவது ஏனோ? அரசின் ஊதிய நிர்ணயப் பட்டியல் ஒரு ஸ்டேண்டர்ட் மாடல். அதே சம்பளம் மற்றும் சலுகைகளை தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக தனது ஊழியர்களுக்கு வழங்கி அதன் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் கட்டளை இட முடியும்.

அப்படி செய்தால் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறையும். அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை  உயரும். அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிறைய தோற்றுவிக்கப் படும். புதியவர்கள் நிறைய பேருக்கு அரசுப் பணி கிடைக்கும். அதனால அரசுப் பள்ளி ஆசிரியர்களை திட்டும் நேரத்தில் தனியார் பள்ளி முதலாளிகளிடம் நியாயமான சம்பளம் வழங்க எப்படி கோரிக்கை வைக்கலாம் அரசு மூலமாக எவ்வாறு நெருக்கடி கொடுக்கலாம் என்றெல்லாம் யோசிங்க பாஸ்.

Wednesday, August 12, 2020

விருந்தினன்

Anna stadium (ADW welfare) college Hostel - 90 களின் பிற்பகுதி அனுபவங்களை பதிவு செய்ய எண்ணினேன். கொஞ்சம் கற்பனை சேர்த்து கதையாகவே எழுதிவிட்டேன்!! விருந்தினன்
“நம்ம கவர்ன்மெண்ட் மாதிரி ஒரு கேடுகெட்ட கவர்ன்மெண்ட பாக்க முடியாது, இந்த 1997 ம் ஆண்டுல கூட வருசத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் டியுசன் ஃபீஸ் கட்ட முடியாதவன் எதுக்கு படிக்கணும்? இப்படியே எல்லாத்தையும் ஃப்ரீ பண்ணி பண்ணித்தான் நாடு கெட்டுக் குட்டிச்சுவராப் போய்கிட்டு இருக்கு” என்று வகுப்பில் நுழைந்த மாத்திரத்தில் விலாசினார் ஆங்கில பேராசான் பார்த்தசாரதி. அந்த தொனி அவரது வழக்கமான ஒன்று தான்.அவர்கையில் மட்டும் துப்பாக்கி இருந்தால் ஏழைகள் அத்தனை பேரையும் சுட்டுக் கொன்று விட்டு நாட்டை பணக்கார நாடாக பிரகடனப்படுத்தி விடுவார். அவரது சுடுசொற்கள் எஸ்ஸி மாணவர்களையும் எம்பிசி மற்றும் பிசியில் உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களையும் இலக்காக கொண்டு எறியப்பட்டவை தான். வகுப்பில் இருந்த முக்கால்வாசி மாணவர்கள் அவர்கள் தான். “இந்தாப்பா இன்னைக்கு மார்ச் 1 சரியா மார்ச் 10 ம் தேதிக்குள்ள யுனிவர்சிட்டி எக்ஸாம் ஃபீஸ் கட்டிடணும். ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் அப்புறம் மார்க் ஷீட் ஃபீஸ் ஒரு 25 சேத்துக்கோங்க ஃபைனல் இயர் என்பதால் டிகிரிக்கு ஒரு ஐம்பது” என்ற சர்க்குலரைப் படித்து சுருங்க கூறினார். இந்த சர்க்குலருக்கு முன்னுரை தான் மேலே கூறப்பட்ட அந்த வார்த்தைகள். ”எஸ்பிஎஸ்” சார், என்றாலே மாணவர்களுக்கு பிடிக்காதவர் தான். அவரது எரிச்சல் பேச்சு பிடிக்காமலேயே நிறய பேர் அவரது வகுப்பை கட் அடித்து விடுவார்கள். ஆறுமுகத்திற்கு “பகீர்“ என்றது. கையில் பத்து பைசா கிடையாது. சைக்கிள் பஞ்சர் ஆனா கூட ஸ்டேடியம் ஆஸ்டலில் இருந்து நடந்து தான் கல்லூரிக்கு வரணும். ரெண்டு அரியர் மற்றும் ரெகுலர் எல்லாம் சேர்த்து ஏழு பேப்பர் வருது. அட்டெண்டன்ஸ் வேற கொறயும்.அதுக்கு ஒரு எழுபத்தி ஐந்து ரூபாய். எல்லாம் சேர்த்து ஒரு ஐநூறு ரூபாய் தேவைப்படுமே என்ன செய்வது. நியு இயர் லீவுக்குப் போனவன் பொங்கல் வரைக்கும் கிராமத்தில் வேலைக்கு போய் தான் தனக்கு ஒரு செட் டிரஸ் அம்மாவுக்கு ஒரு சேலை பொங்கல் கரும்பு, கரிநாள் அன்றைக்கான கறிச் சோறு எல்லாம் ஏற்பாடு செய்தான். பரிட்சை ஃபீஸ் ஞாபகம் இருந்திருந்தா பேண்ட் சட்டைய எடுக்காம தவிர்த்து இருக்கலாம். என்று பலவாறு சிந்தித்தபடி காஜாமியான் ஸ்கூல் பள்ளிவாசல் வழியாக ஆஸ்டலுக்கு செல்லும் குறுக்கு வழியில் சைக்கிளை விட்டான். ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடித்து விடுதியில் தேனீர் அருந்தி விட்டு மைதானத்திற்கு விளையாட்டு உடைகளோடு சென்று கொண்டு இருந்தனர். ஜமால் முகமது விடுதி சந்தில் இருந்து வெளியே வந்து சாலையைக் கடந்தால் அம்பேத்கர் விடுதிதான். ஆதி திராவிடர் நலத்துறை நடத்தும் ஆடவர் கல்லூரி விடுதியைத்தான் அம்பேத்கர் விடுதி என்று அழைப்பார்கள். அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு அடுத்த கேம்பஸ் என்பதால் ஸ்டேடியம் ஆஸ்டல் என்கிற பெயரும் உண்டு. சைக்கிளை உள்ளே ஏற்றி தான் தங்கி இருக்கும் ஐந்தாம் எண் அறை முன்னால் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான். மதியம் சாப்பிடாத காலி வயிறு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தது. “எப்போ தாண்டா எதையாவது சாப்பிட்டுத் தொலைப்ப சனியனே!! உன்கிட்ட இருந்து கிட்டு நானும் நெதம் நெதம் உன்னோட சேந்து காயுறேன்” என்று புலம்புவதாகத்தான் ஆறுமுகத்திற்குப் பட்டது. இந்த அறையில் அவன் மூன்று ஆண்டுகளாக தங்கி இதோ கல்லூரிப் படிப்பையே முடிக்கப் போகிறான். ஆனால் அந்த அறைக்கும் ஆறுமுகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆமாம், விடுதி கிடைக்காமல் அவனே “விருந்தினன்” ஆகத்தான் தங்கி இருக்கிறான். இரவு உணவு ஏழரை மணிக்குத்தான் போடுவார்கள். அதுவரைக்கும் படுத்து ஓய்வெடுத்துக் கொள்வோம் என்று பாயை ஒரு ஓரமாகப் போட்டு படுத்துக் கொண்டான். சிந்தனை பழசை எல்லாம் கிளறிவிட்டது. பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வந்திருந்தன. ஆறுமுகம் தேர்ச்சி பெற்று 1200க்கு 650 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். தமிழ் தவிர்த்து இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்தில் தான் நூறைத்தாண்டி இருந்தான். அப்பா இல்லாத நிலையில் உடல்நலம் குன்றிய அம்மாவின் சம்பாத்தியம் வயிற்றுக்கே போதாத நிலையில் ஆறுமுகம் தான் சனி, ஞாயிறுகளில் வேலைக்குச் சென்று சம்பாதித்த பணத்தில் தனது படிப்பு சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். ரிசல்ட் வந்த குதூகலத்தில், “எப்பா ஆறுமுகம் நீ காலேஜ்ல சேந்து படிச்சி பெரிய்ய வேலைக்கு போவணும்யா, எங்கயாவது கடன ஒடன வாங்கித் தாரேன் நீ எழுதிப் போடுய்யா” என்று தைரியம் ஊட்டினார் ஆறுமுகத்தின் அம்மா. கம்மந்தட்டையால் வேயப்பட்ட குடிசை அது. முக்கோண வடிவில் நிற்கும் மூங்கில் கழிகள், அதற்கு மேல் தென்னங்கீற்று வரிசைகள், அதற்கு மேலாக காய்ந்த கம்மந்தட்டையை கட்டு கட்டாக சீராக அடுக்கி வேய்ந்து இருப்பார்கள். ஒரே அறைதான், மேடாக இருப்பது திண்ணை மூலையில் சிறு அடுப்பு மேடை. அவ்வளவு தான். கீற்றுக்கிடையில் செறுகியிருந்த சீப்பினை எடுத்து சுவற்றுக்கும் நிலைக்கும் இடையில் நிற்கும் சிறு கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டு, இருக்கும் ஒரே நல்ல சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு திருச்சிக்கு காலேஜ் அப்ளிகேஷன் போடக் கிளம்பினான். வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ஒரு ஐநூறு ரூபாய் சேமிப்பு பையில் கம்பீரமாக வீற்றிருந்தது இருந்தது. ஒரு பதினைந்து நாட்கள் கழிந்த பின்பு, போஸ்ட்மேனின் சைக்கிள் பெல்லின் “கிண்கிணி“ மணியோசை ஆறுமுகம் காதில் தேனாக பாய்ந்தது. கலைந்து கிடந்த கைலியை உதறிக் கட்டிக்கொண்டு புயலென புறப்பட்டு ஓடினான். “டேய், ஆறுமுகம் டெய்லி என்ன கேட்டு நச்சரிச்சிக்கிட்டே இருந்தியே, இந்தா, திருச்சி நேஷனல் காலேஜ்ல இருந்து அட்மிஷன் கார்டு வந்திருக்கு” “அண்ணா தேங்ஸ் அண்ணா” “போய் சேந்து நல்லா படி தம்பி” என்று போகிற போக்கில் வாழ்த்திச் சென்றார். கையில் இரண்டு ஆட்டுக்குட்டிகளும், தலையில் அவற்றுக்கு ஒடித்த வேப்பந்தழையும், மடியில் கீரையும் என ஆறுமுகத்தின் அம்மா, இருட்டுக்கு முன்பு வீடு திரும்பினார். “அம்மோவ், எனக்கு காலேஜ்ல எடம் கெடச்சிடுச்சி, நாளைக்கு திருச்சி போவணும்” என்று பெருமை பொங்க அட்மிஷன் கார்டை நீட்டினான். படிக்கத் தெரியா விட்டாலும் கூட அந்த சீட்டினை கையில் ஏந்தியபடி தனக்கு தெரிந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார் அந்த அம்மா. பையனின் எதிர்காலம் நிச்சயம் நன்றாக அமைந்து விடும் என்ற நம்பிக்கை தந்த மகிழ்ச்சியில் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் கொட்டியது. கல்லூரி தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டிருந்தது. எம்.பி.சி வெல்ஃபேர் ஆஸ்டலிலும் சரி எஸ்.ஸி வெல்ஃபேர் ஆஸ்டலிலும் சரி இடம் கிடைக்க வில்லை. ஆறுமுகத்தின் மதிப்பெண்ணுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததே பெரிய விஷயம். வெளியில் அறை வாடகை எடுக்க இயலவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் ஒரு வாரம் அதிகாலை புறப்பட்டு இரவில் வீடு திரும்புவதென்று கல்லூரி சென்று பார்த்தான். பஸ் டிக்கெட்டுக்கு காசு இல்லாத காரணத்தால் பின்னர் லீவு போட்டு விட்டான். மூன்று வாரங்கள் வேலைக்கு போய் ஓரளவு காசு சேர்ந்திருந்தது. ஒரு ஆடு கல்லூரிக் கட்டணமாகவும் மற்றொரு ஆடு கிடைக்காத விடுதி இடத்துக்கு லஞ்சமாகவும் காணாமல் போயிருந்தது. இப்போது இருக்கும் காசு ஒரு வாரம் சென்று வர போதுமானதாக இருந்தது. எனவே திரும்பவும் காலேஜ்ல லீவு போட்டதுக்கு என்ன சொல்வாங்களோ என்று பயந்து பயந்து போனான். ”டேய் ஏன்டா ஒரு மாசம் கிட்டக்க லீவு போட்டுட்ட?“ என்றான் அந்த ஒரு வார கால நண்பன் வினோத். “உனக்கு என்னடா பக்கத்திலேயே இருக்குற கிராப்பட்டி கவர்ன்மெண்ட் ஆஸ்டல்ல எடம் கெடச்சிடுச்சி, நான் எங்கடா தங்கறது? டெய்லி போய்ட்டு வரவும் கஷ்டமா இருக்கு, பேசாம நின்னுக்கப் போறேன்டா” “இருடா அவசரப் படாதே, எங்க ஆஸ்டல்ல கெஸ்ட்டா தங்க முடியாதுடா, நீ வேணும்னா, ஸ்டேடியம் ஆஸ்டல்ல தங்க முடியுமான்னு பாரேன். அங்க நெறய பேரு கெஸ்ட் தங்குவாங்கலாம்” “ரொம்ப தூரமா இருக்கும் டா. எனக்கு அங்க யாரையும் தெரியாது எப்படிடா?” “ஊருல எதாவது சைக்கிள் இருந்தா எடுத்துக்கிட்டு வந்துடு. ஸ்டேடியம் ஆஸ்டல் நேர் எதிர்ல இருக்குற சந்து வழியா ஜமால் முகமது கல்லூரி கிரவுண்ட், அப்புறம் மசூதி அப்படியே மேல ஏறுனா மன்னார்புரம் அப்புறம் ஸ்ட்ரைட்டா காலேஜ் தாண்டா ஈசியா இருபது நிமிசத்தில் வந்துடலாம். அங்க ஒரு சீனியர் அண்ணன், தர்மராஜ்ன்னு இருக்காரு. பி.ஜி படிக்கிறாரு. அவருட்ட சொன்னா எதாவது ஒரு ரூம்ல தங்க வைப்பாரு” அப்படியாகத் தான் இந்த ஐந்தாம் எண் அறைக்கு “விருந்தினனாக” வந்து சேர்ந்தான். ஆனால் விருந்தினன் என்பதைக் காட்டிலும் “அகதி“ என்கிற வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் விருந்தினர்கள் அனைவரும் இங்கே இரண்டாம் தரக் குடி மக்கள் தான். கல்லூரி இரண்டாம் ஆண்டு ஆரம்பித்த சமயம். இந்த ஆண்டும் கிடைக்காது எனத் தெரிந்தே ஒரு அப்ளிகேஷனை விடுதிக்குப் போட்டு வைத்தான். இறுதி ஆண்டு மாணவர்கள் வெளியேறி அந்த இடத்திற்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் வந்து சேர்ந்தனர். கெஸ்ட்டாக இருந்தாலும் கூட முதலாம் ஆண்டு மாணவர்கள் கொஞ்சம் மரியாதையாக நடத்துவார்கள். காலையில் மெஸ்ஸில் இட்லி போட ஆரம்பித்தார்கள். 150 மாணவர்களுக்கான விடுதியில் 250 பேர் தங்கி இருந்தனர். அதேபோல 150 பேருக்கான உணவை உண்ண அடித்துப் பிடித்து 250 பேரும் ஓடுவார்கள். ஆமாம், “கெஸ்ட்“ எல்லாம் கூட மெஸ்ஸிலேயே சென்று சாப்பாடு வாங்குவார்கள். சமையல்காரர்களும் எதற்கு வம்பு என்று பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள். ஐந்தாம் எண் அறையில் மாதவன் முதலாம் ஆண்டு மாணவன். நல்லொழுக்கம் நிறைந்தவன். சற்றே ஒடுங்கிய உடலுடன் சிறுபிள்ளை போல இருப்பதால் அனைவருக்கும் பிடித்தமாகிப் போனவன். அவனை யாரும் ரேகிங் கூட செய்யமாட்டார்கள். அறையின் செல்லப் பிள்ளை அவன். பெரும்பாலும் மெஸ்ஸில் அவனுக்கு காலை உணவு கிட்டாது. அவனால் முண்டியடிக்க இயலாது. மெஸ்ஸில் பரிமாறும் மாரிமுத்து அவனைக் கண்டுவிட்டால் அவனது தட்டை இழுத்து வைத்து ஐந்து இட்லிகளை வைத்து விடுவார். இல்லை என்றால் பட்டினிதான். ஆறுமுகத்திற்கு அன்று முதலாம் முறை இட்லி கிடைக்கவில்லை. இரண்டாம் முறையும் முண்டியடித்து அனைவரது தட்டுக்களையும் இடித்து முன்னேறி மாரிமுத்துவின் கைகளை தட்டால் நெட்டினான் அதற்குள் மற்றவர்கள் பாய்ந்து அவரவர்களே இட்லிகளை கைக்கு வந்தவாறு அள்ளிக்கொண்டனர். அவர் இட்லி இருந்த போனியை வைத்துவிட்டு விலகி நின்று கொண்டார். மூன்றாம் முறைதான் கடைசி, இந்த முறை எப்படியாவது வாங்கிவிட வேண்டும். மாரிமுத்துவைக் கண்ட உடன் அனைவரும் அவர் வந்த மேசையை நோக்கி முன்னேறினர். ஆறுமுகத்திற்கு அருகில் மாதவனும் நின்றிருந்தான். கண்ணில் பட்ட தட்டில் எல்லாம் ஐந்து ஐந்து இட்லிகளாக எண்ணி எண்ணி வைத்தபடி இருந்தார் மாரிமுத்து. அன்றைக்கும் அப்படித்தான் மாரிமுத்து மாதவனைக்கண்டு விட்டார். எப்படியும் மாரிமுத்து மாதவனுக்கு இட்லி வைத்து விடுவார் என்று யூகித்த ஆறுமுகம் ஒரு ஐடியா செய்தான். மாதவன் தட்டை பற்றி மாரிமுத்து இழுத்தார். மாதவன் கண்களில் ஒரு திருப்தி படர ஆரம்பித்தது. ஆசையாக தட்டை நீட்டினான். மாரிமுத்து ஐந்து இட்லிகளை கைக்கொள்ளாமல் அள்ளி எடுத்து மாதவனின் தட்டில் போடப் போன கடைசி நொடியில் ஆறுமுகம் தட்டைச் சொறுகி இட்லியோடு இழுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மாதவனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் ஓடிச் சென்று மூலையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்து தட்டு கழுவும் இடத்திற்கு வந்த போது கண்கள் சிவக்க மாதவன் நின்று கொண்டு இருந்தான். அவனை அவ்வளவு கோபமாக பார்த்ததே இல்லை. அருகில் நெருங்கி வந்து, “கேனப்…(சென்சார் கட்) பிய்யத் திங்க வேண்டியது தானே” என்று திட்டி விட்டு ஒடுங்கிய வயிறுடன் கல்லூரிக்கு கிளம்பி போனான். நேற்று இரவு சாப்பாடு கிடைக்கவில்லை. ஓட்டலில் பரோட்டா சாப்பிடவும் காசு இல்லை. எனவே காலையில் இட்லியைக் கண்டவுடன் சற்று வெறித்தனமாக நடந்து கொண்டுவிட்டான். தற்போது ஏண்டா சாப்பிட்டோம் என்றாகிவிட்டது. மாதவன் பயலே கெட்ட வார்த்தை பேசுமளவு மோசமாக நடந்ததை எண்ணி ஆறுமுகம் வருந்தினான். இதோ இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது. ஆறுமுகமும் மாதவனும் அந்த சம்பவத்திற்குப் பிறகு பேசிக் கொண்டதே இல்லை. சென்ற ஆண்டு நவம்பர் மாதமே சாப்பாட்டு பிரச்சனைக்கு முடிவு கட்டப்பட்டது. விடுதி மெஸ் ஹால் உடனடி மீட்டிங் ஹால் ஆனது. குட்டையா கறுப்பா இருக்கும் தமிழரசன் எப்போதும் இதுமாதிரி வேளைகளில் மாணவர்களை முன் நடத்துவான். சென்ற ஆண்டு சாப்பாடு சரியில்லை என்று ஸ்ட்ரைக் செய்து கொண்டு நள்ளிரவில் கேகே நகர் அருகில் இருக்கும் கலெக்டர் பங்களாவுக்கே எல்லோரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெரிய களேபரம் பண்ணிவிட்டான். அந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி இவன்தான் என்பதை போலீஸ் காரர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள். “ஏம்பா, நாம எல்லோரும் விடுதியில் ஒரு குடும்பமா தங்கி இருக்கோம். சாப்பாடு எல்லோருக்கும் கிடைக்குதான்னா இல்லை. காரணம் 150 பேருக்கு மட்டுமே இடம் இருக்குற ஆஸ்டல்ல 250 ல் இருந்து 300 பேர் வரைக்கும் தங்கி இருக்கோம். சாப்பாடு பற்றாக்குறைக்கு காரணம் கெஸ்ட்டுங்க தான்“ ஆறுமுகத்திற்கு சுருக்கென்றது. ஆகா நம்ம இடத்துக்கு ஆபத்து வந்துடும் போல இருக்கே, இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தை எங்க கழிக்கறது என்று கலவரமானான். “அதனால இனி வரும் நாட்களில் கெஸ்ட் யாரையும் மெஸ்ல விடக் கூடாது. வேணும்னா தங்கி இருக்கட்டும். ஆனா சாப்பாடு சொந்தமா ஏற்பாடு பண்ணிக்கனும். அவங்க மெஸ்ல வந்து சாப்பாடு வாங்குவதால பல இன்மேட்ஸ் பட்டினி கிடக்குற மாதிரி ஆகுது” என்று பேசி முடித்தான். பெரும்பாலானோர் ஆமோதித்தனர். சிலபேர் சொந்தக்கார பசங்கள கெஸ்ட்டா தங்க வைத்திருந்தார்கள் அவர்கள் மட்டும் , “திடீர்னு இப்படிச் சொன்னா அவங்க எங்க போவாங்க?” என்று பேசிக்கொண்டார்கள். அடுத்த நாள் வார்டன் மற்றும் சீனியர் மாணவர்கள் கலந்து பேசி அவரவர் அறைக்கான உணவை பாத்திரம் மற்றும் வாளிகளில் பெற்றுக் கொள்ளவேண்டியது. அறைக்குச் சென்று இன்மேட்ஸ் மட்டுமோ அல்லது கெஸ்ட் உடன் பகிர்ந்தோ உண்டு கொள்ள வேண்டியது என்று முடிவு செய்யப்பட்டு அமல் படுத்தப் பட்டது. அதற்கு பிறகு அனைவருக்குமே சாப்பாடு கிடைத்தது. கெஸ்ட்டாக தங்கி இருந்தவர்கள் மண்ணெண்ணை ஸ்டவ் பாத்திரம் எல்லாம் வைத்து சமைத்து இன்மேட்ஸ் உடன் பகிர்ந்து கொள்வார்கள். “என்னண்ணே இப்படி சாயந்திரத்திலேயே படுத்துட்டீங்க?“ என்றபடி உள்ளே நுழைந்தான் பூபதி. மாதவனின் நண்பன். “ஒண்ணும் இல்லப்பா டயர்டா இருக்கு” “இந்தாங்கண்ணே வடை சாப்பிடுங்க” என்று கொடுத்தான். சங்கீத் தியேட்டருக்குச் செல்லும் தெரு முனையில் 25 பைசா வடை போட்டு விற்பார்கள். மாணவர்கள் பெரும்பாலும் சாயந்திர நேரம் அங்கே சென்று வடை சாப்பிட்டு விட்டு தேனீர் அருந்தி விட்டு வருவார்கள். ”தம்பி பூபதி காசு ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமாப்பா? எக்சாம் ஃபீஸ் இன்னும் ஒரு வாரத்துக்குள் கட்டணும். கடைசி செமஸ்டர் வேற” என்றான் ஆறுமுகம் பரிதாபமாக. “அடடா இல்லையேண்ணே” “சரிப்பா” அம்மாவுக்கு லெட்டர் போடலாமா? என்ற ஆறுமுகம் யோசித்தான். ஐநூறு ரூபாய் பொருமானம் உள்ள அடகு வைக்கவோ விற்கவோ பொருத்தமான பொருள் எதுவும் வீட்டில் நிச்சயமாக இல்லை. அம்மா என்னைக்காவது ஒரு நாள் வேலை கிடைத்துச் செல்வது அவங்க வயத்துப் பாட்டுக்கே சரியாப் போவும். லெட்டர படிச்சா அழ மட்டும் தான் செய்வாங்க. எனவே வேண்டாம் என்று தள்ளிப் போட்டான். “அண்ணே உங்க கிட்ட பணம் எதாவது இருக்காண்ணே” என்று பிஜி படிக்கும் தினேஷ் அண்ணனிடம் கேட்டுப் பார்த்தான். “ஏன்டா தம்பி, என்கிட்ட ஒரு இருபது ரூபா இருக்கு நான் ஊருக்குப் போறதுக்குள்ள தந்துடணும் சரியா?“ என்றார். “இல்லண்ணே எனக்கு ஒரு ஐநூறு ரூபா வேணும்ணே, எக்சாம் ஃபீஸ் கட்டச் சொல்லி இருக்காங்க“ என்றான். ”அய்யய்யோ அவ்வளவு பணம் யாருகிட்டடா இருக்கப் போவுது?” “வார்டன்ட்ட சேத்துவைக்கச் சொன்ன பிஸ்கட்,எண்ணை கட்டிங் காசெல்லாம் போனமாசம் தான் வாங்கி டூர் போய்ட்டு வந்தோம். அந்தாளுகிட்டயும் கேக்க முடியாதே. அம்மாகிட்ட கேட்டியா” “அவங்க கிட்ட இருக்காதுண்ணே” என்றான் பாவமாக. சரியாக ஏழு முப்பதுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் இயர் பசங்க போனி பக்கெட் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் சாப்பாடு சாம்பார் ரசம் வாங்கி வந்தனர். “தினேஷ் அண்ணே, எண்ணை தக்காளி வெங்காயம் எல்லாம் இருக்குண்ணே. வெங்காயம் தக்காளி வணக்கி சாம்பர சேத்து கொதிக்க வச்சி சாப்பிடுவோமாண்ணே” என்றான் ஆறுமுகம். பெரும்பாலும் கெஸ்டாக தங்கி இருப்போரின் ஸ்டவ் இதற்குத்தான் பயன்படும். தங்கி இருப்பதற்கு பதிலுதவியாக மண்ணெண்ணை, தக்காளி வெங்காய செலவுகளை அவ்வப்போது செய்வார்கள். “நீ என்ன தான் சாம்பார தங்கமா மாத்தி சாப்பிடக் குடுத்தாலும் எங்கிட்ட தம்புடி பைசா கிடையாது” என்று நக்கலடித்தார் தினேஷ் “அண்ணே இன்னைக்கு பயன்படுத்துலன்னா வீணாப்போயிடும்ணே” “சரி சரி இந்தா வரேன் கோவிச்சிக்காத” தினேஷ் கைவண்ணத்தில் ஆஸ்டல் சாம்பார் தேவாமிர்தமாகிவிடும். ஆறுமுகத்தின் அகோரப்பசிக்கு ஏத்த சுவையான உணவு. அன்றைக்கு வெள்ளிக் கிழமை என்பதால் நிறைய பேர் ஊருக்குப் போயிருந்தனர். அதனால் எல்லோருக்கும் வயிறு நிறைய சுவையான சாப்பாடு கிடைத்தது. என்னதான் வயிறு நிறைந்தாலும் பணத்திற்கு என்ன வழி என்று தெரியாமல் இரவு முழுவதும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான். நள்ளிரவு நேரம் ஒரு உருவம் எழுந்து மெல்ல மெல்ல நோட்டுப் புத்தகத்தோடு வெளியே சென்றது. ’வெளி வராண்டாவில் இந்த நேரத்தில் எவன்டா படிக்கப் போறான்?’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டு யார் என்று பார்த்தேன் ’அட இந்த மாதவன் பய’ ’இவர்கள் இருவரும் எதற்காக பேசிக் கொள்வதில்லை? என்னப் பிரச்சனை இருவருக்குள்?’ என்று தெரியாமல் ஒன்றரை வருடமாக ஐந்தாம் நம்பர் அறையில் இருந்த எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டனர். அடுத்த நாள் விடிந்தது. ஆறுமுகத்தின் பிரச்சனைகளுக்குத் தான் விடிவு இல்லை. சோர்வாக எழுந்தான். தலையில் வைத்திருந்த புத்தக கட்டுக்கு அடியில் ஒரு கடிதம் நீட்டிக் கொண்டு இருந்தது. “அண்ணா, நீங்கள் முதலில் என்னை மன்னிக்க வேண்டும். அன்றைக்கு சாப்பாடு கிடைக்காத விரக்தியில் அந்த கணநேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் உங்களை திட்டிவிட்டேன். அதன் பிறகு எனக்கு உங்கள் முகத்தை நேர்கொண்டு பார்க்க இயலவில்லை. நீங்களும் என்னுடன் பேசுவதை தவிர்த்து விட்டீர்கள். சென்ற மாதம் எனக்கு வந்த ஸ்காலர்ஷிப்பில் புத்தகங்கள் வாங்கியது போக வீட்டுக்கு கொடுக்க ஒரு ஐநூறு வைத்திருந்தேன். அதை இத்துடன் வைத்துள்ளேன். தேர்வுக்கட்டணம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் லீவு போட்டு விட்டு வேலைக்குப் போக வேண்டாம். உங்களிடம் பணம் கிடைக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும். மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்புத்தம்பி மாதவன். லெட்டரை படித்து முடித்தபோது கண்களில் கட்டுப் பாடில்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. கண்ணீரோடு மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு மாதவனைத் தேடினான் ஆறுமுகம். “மாதவன் ஊருக்கு நைட் பஸ் இல்லைல்ல அதனால விடியற்காலையிலேயே கிளம்பி போய்ட்டான், நீ தான் அவனோட பேச மாட்டியே இப்போ என்ன தேடுற?” “இல்லண்ணே எக்சாம் ஃபீஸ் மடிச்சி வச்சிட்டு லெட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்காண்ணே“ என்று கண்கலங்கியபடி தினேஷிடம் கூறினான். 15.08.2019 சுதந்திர தினவிழா கொண்டாட்டம். காலையிலேயே வார்டன் நல்லத்தம்பி ஆறுமுகத்திற்கு போன் அடித்துவிட்டார். மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலராக பணிபுரியும் ஆறுமுகம் அவரது துறையின் கீழ் வரும் ஏதேனும் ஒரு கல்லூரி விடுதியில் கொடியேற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டவர். திருச்சி மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்ததில் இருந்து அம்பேத்கர் கல்லூரி விடுதிக்கு சென்று வர நல்லதொரு வாய்ப்பை எதிர் நோக்கி இருந்தார். சரியாக சுதந்திர தினவிழாவில் வாய்ப்பு அமைந்தது. அதே வளாகம் அதே கட்டிடம் சற்று புதுப்பிக்கப் பட்டு இருந்தது. வாயிற்படியில் இரண்டாவது முறையாக ”விருந்தினராக” கால் வைத்தபோது ஆறுமுகத்திற்கு உடல் சிலிர்த்தது. அப்போது வேண்டாத விருந்தாளி இப்போது சிறப்பு விருந்தினர். ஆமாம், படிப்பு எல்லாத்தையும் மாத்திடுச்சி. இதையன்றி அந்த மாணவர்களிடம் கூறுவதற்கு சுதந்திர தினச் செய்தி வேறு ஏதாவது உண்டா என்ன? “நான் இந்த விடுதியின் முன்னாள் விருந்தினன்…” என்று பேச்சைத் துவக்கினார் ஆறுமுகம். 🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

Monday, August 10, 2020

ஒரு “எளிய” மரத்தின் கதை

 

ஒரு “எளிய” மரத்தின் கதை


சென்ற ஆண்டு பசுமைப் படை அமைப்பின் மூலமாக ஐம்பது மரக்கன்றுகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அதில் பாதாம் கன்றுகள் பத்துக்குமேல் இருந்தன. பள்ளி காலைகூடுகை மைதானத்தில் கொடிமரத்திற்கு அருகில் ஒன்று வைத்தோம். வைக்கப்பட்டவற்றில் ஒரு ஏழு பாதாம் மரங்கள் நன்றாக நீர்குடித்து வேர்பிடித்தன.

ஆனால் நாகமங்கலம் கிராமத்தைப் பற்றிய ஒரு விசித்திரமான ஒரு செய்தி உங்களுக்கு தெரியாது. ஆமாம், சாலையோரங்கள், பள்ளி, மற்றும் அலுவலகங்கள் போன்ற அதிக பராமரிப்பு தேவைப்படாத இடங்களில் புங்க மரத்தை வைத்து வளர்ப்பார்கள். காரணம் இந்த ஆடு மாடுகள் அவற்றை சீந்திக்கூட பார்க்காது என்பதுதான். ஆனால் இங்கே தான் நாகமங்கலம் ஆடுகளை நாங்கள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டோம்.

பில்டிங் பற்றாக்குறை இருந்தாலும் எங்களுக்கு இரண்டு வளாகங்கள் உண்டு. மாணவர்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். எனவே பூட்டி வைக்க இயலாது. அதனால் சைக்கிள் கேப்பில் நுழையும் ஆடுகள் வேக வேகமாக வந்து புங்கங்கன்றுகளில் துளிர் விட்டிருக்கும் இலைகளை கூண்டுகளை தள்ளிக் கொண்டு மேய்ந்து விடும். என்னுடைய 43 வயது காலத்தில் “பிரித்து மேய்வது” என்பதை பார்த்து அறிந்து கொண்டது நாகமங்கலத்தில் தான்.

பாதாம் மர இலைகளையும் பெரும்பாலும் கால்நடைகள் சாப்பிடுவதில்லை. வறுமைக்கு வாக்கப்பட்ட நாகமங்கலம் ஆடுகள் இதிலும் விதிவிலக்கு.

பாதாம் மரம் இரண்டு வருடங்களில் நெடிதுயர்ந்து விடும்.

கிளைகள் பக்கவாட்டில் படரும்.

இலைகள் ஒரு ஆளே படுத்துறங்கும் அளவுக்கு பெரியது.

எனவே பந்தல் போட்ட மாதிரி இருக்கும்.

ஆக, காலைநேரக் கூடுகையின் போது வெயில் படாமல் நிற்கலாம் என்று கனவு கண்டு கொண்டு இருந்தேன்.

அந்த கொடிமரத்தை ஒட்டிய பாதாம் மரத்தின் மீது ஆடுகளுக்கு என்ன “காண்டோ” தெரியல வேகமாக வந்து கூண்டை இடித்து தள்ளிவிட்டு மேய்ந்து தள்ளிவிட்டன.

“அவன் ஒரு

பட்டு வேட்டி பற்றிய

கனாவில் இருந்த போது

கட்டியிருந்த கோவணமும்

களவாடப்பட்டது” என்று இதைத்தான் சொன்னார்களோ?!! அடடா ஒரு செடி வேஸ்ட்டா போச்சே என்று வருந்தி விட்டு மறந்து போனேன்.

ஒரு பதினைந்து நாட்களில் மொட்டை குச்சிகளில் பச்சை எட்டிப்பார்த்தது. “ஏலேய், சம்முவம் எட்றா கூண்ட” என்று கூண்டு மாட்டி வைத்து விட்டு இனி இதை கண்ணுங்கருத்துமாய் காப்பது என்று சூளுரைத்தோம்.

மழைக் காலங்களில் எங்கள் பள்ளி வளாகம் “போட்டிங்“ விடும் அளவுக்கு மினி நீர்த்தேக்கம் ஆகிவிடும். எனவே ஊரில் ஏரி வெட்டு நடக்கும் போதெல்லாம் லாரிகளில் மண் கொண்டு வந்து கொட்டச் சொல்வோம்.

விடுமுறை நாளில் மண் அடித்த ஒரு பொறுப்பான லாரி  டிரைவரின் கைங்கர்யத்தில் கூண்டு இடித்து தள்ளப்பட்டது. அப்படி ஒரு அற்புத கணத்துக்காகவே காத்துக் கொண்டு இருந்த ஆடுகள் மின்னல் வேகத்தில் தோன்றி, இருந்த இலைகளை காலி செய்துவிட்டு ஓடி மறைந்தன.

அடுத்த நாள் டீ ஆத்த சென்ற போது, (ஆமாங்க, ஆளே இல்லாத பள்ளியில் தலைமையாசிரியர்கள் அவ்வப்போது சென்று டீ ஆற்றுவது கடமை) வெறும் குச்சி மட்டும் படுத்துக் கிடக்க அதில் பாதி மண் வேறு அழுத்திக் கொண்டு இருந்தது.

எங்கிருந்தோ வந்த ஒரு ஆடு அந்த இலைகள் அற்ற பாதாம் மரத் தண்டை வாயால் கவ்வி நாறை இழுத்து சாப்பிட்டது. இதைத்தான் தோல உறிச்சி தொங்க விட்டுடுவேன்னு சொல்வாங்களோ?!!

“அட அப்படி என்னதான் இருக்கு அந்த பாதாம் மரத்தண்டில்” என்கிற குறுகுறுப்பில் எனக்கு கூட நா ஊறி கரும்பு போல சுவைத்துப் பார்த்துவிடலாமா என்று டெம்ப்ட் ஆனேன் என்றால் பாருங்களேன்.

இதற்கு மேலும் இந்த பேஷண்ட் பிழைக்க வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு ஜேசிபி கொண்டு மண் நிரவி விட்டோம். அழுத்திக் கிடந்த மண்ணை தள்ளியதால் அந்த குச்சி நிமிர்ந்து கொண்டது. அந்த குச்சி பாட்டுக்கு கிடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

ஒவ்வொரு நாள் டீ ஆற்ற செல்லும் போதும் அந்தக்குச்சிக்காக இரண்டு சொட்டு கண்ணீர் வார்ப்பேன்.

சென்ற வெள்ளிக் கிழமை போனபோது அந்த குச்சியின் கிளை முனைகளில் சிறு பழுப்பும் பச்சையும் சேர்ந்த வண்ணத்தில் மொட்டுகள் தோன்றின். நான் ஆச்சரியமாகவும் பாசத்தோடும் கண்கள் விரியப் பார்த்தேன்.

இன்று போனால், இலைகள் நன்றாகவே கிளம்பி இருந்தன. வசூல்ராஜா படத்தில் கோமா பேஷண்ட் பிழைத்த அதிசயம் போல எனக்கு மகிழ்ச்சியாக ஆகிவிட்டது. இந்த மரத்தோட ஜீவ மரணப் போராட்டத்தை கௌரவப்படுத்தியாக வேண்டும் என்று உடனடியாக செயலில் இறங்கி இனிவரும் காலங்களில் அதன் உயிருக்கு ஒரு ஆபத்தும் வரவிடக் கூடாது என்று வளர்ந்த மரத்தின் கூண்டினைப் பிரித்து இதற்கு வைத்து சற்று வலுவாக குச்சிகள் ஊன்றி கம்பிகள் வைத்து இறுக்கி கட்டி விட்டோம்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த மரம் போராட்டகுணம் மற்றும் விடாமுயற்சியின் வாழும் அடையாளமாக எங்கள் பள்ளி வளாகத்தினுள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் என்பது திண்ணம்.

 

Saturday, August 8, 2020

'மண்டையே வெடிச்சிடும் போல இருக்கே....” எனது ஐந்தாவது சிறுகதை

 


     “நானு, தீபா, லதா மூணு பேரும் காலேஜ் சேந்த புதுசு, தீபா மெயின் ஆஸ்டல்ல சேந்துட்டா, நானும் லதாவும் ஒரு கிரிஸ்டியன் லேடீஸ் ஆஸ்டல்ல தங்கி இருந்தோம்” என்று ஆரம்பித்தாள் புவனா.

     “ஓ ஃப்ளாஷ் பேக்கா?, சொல்லு சொல்லு” என்று நக்கலாக கேட்டான் புவனாவின் தம்பி தமிழரசன்.

     “கிண்டல் பண்ணாம கேளுடா, ஒரு நாள் நைட்டு மொட்ட மாடில எல்லோரும் படுத்துருந்தோம்“

     “அப்புறம்”

     “எல்லோரும் தூங்கிய பிறகு என் பக்கத்தில் படுத்திருந்த எங்க காலேஜ் பொண்ணுங்க ரெண்டு பேரு குசு குசுன்னு பேச ஆரம்பிச்சாளுங்க”

     “என்ன பேசினாங்க?“

     அப்படியே சொல்றேன் கேளு செம காமடி.

     “ஏய் புவனா என்ன கேஸ்ட் டி?“

     “முதலியார்டி”

     ”ஆனா, தீபா வன்னியர்னு சொன்னாளே”

     “அதுக்கு என்னவாம்?“

     “என்னடி புரியாம பேசுற, தீபா, புவனா, லதா மூணுபேரும் சித்தப்பா மக்க பெரியப்பா மக்க டி அப்புறம் எப்படி வேற வேற கேஸ்ட்?”

     “லதா எஸ்ஸி கேஸ்ட்னு, அவ சர்டிபிகேட்ல பாத்ததா ஞாபகம் சரியாத் தெரியல!!”

     “அதனாலதான் கேக்குறேன் புவனா உண்மையில என்ன கேஸ்ட்”

     “இப்படித்தான் பேசிக்கிட்டாளுக, எனக்கு வேற அப்ப பாத்து பாத்ரூம் அவசரம், எங்க ஏந்திரிச்சா கையும் களவுமா மாட்டிக்குவேனோன்னு பயந்துகிட்டு அடக்கிகிட்டே அவளுக தூங்குற வரைக்கும் வெய்ட் பண்ணினேன்டா”

     “ஆளுக்கு ஒரு கேஸ்ட்டா சொல்லுவீங்க? பொய் சொல்றதா இருந்தா பிளான் பண்ணி சொல்லணும். அப்புறம் எப்படித்தான் சமாளிச்ச?”

     “இதெல்லாம் நேரடியா கேக்க மாட்டாளுக. அதனால நீங்க என்ன வேணும்னா நெனச்சிக்கிட்டு போங்கடின்னு நான் பாட்டுக்கு இருந்துக்கிட்டேன்“ என்று கூறி அக்காளும் தம்பியும் சிரிச்சிக்கிட்டாங்க.

     “சரிடா, புது ஸ்கூல்ல என்னைக்கு ஜாயின் பண்ற?”

     “பழைய ஸ்கூல்ல இருந்து வெள்ளிக் கிழமை ஈவினிங் ரிலீவ் ஆயிட்டேன். திங்க கிழமை காலையில புது ஸ்கூல்ல ஜாயின் பண்ணப் போறேன்“

     திங்கள் கிழமை காலையில் வீட்டில் இருந்து சற்று சீக்கிரமாகவே கிளம்பினான் தமிழரசன். தமிழ் பாடப்புத்தகங்கள், ரிலிவிங் ஆர்டர் அப்புறம் லஞ்ச் எல்லாம் எடுத்துக் கொண்டான். முதல் நாள் சீக்கிரமாக போனால் நல்லது என்று வண்டியை உதைத்து கிளப்பிக் கொண்டு சென்றான்.

     பள்ளி வளாகம் சற்று பெரியதாகவே இருந்தது. ஆனால் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. ஏற்கனவே சர்ப்ளஸ் என்பதால் தான் இவனைத் தூக்கி இந்தப் பள்ளியில் அடித்திருக்கிறார்கள். அரசுப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை குறைய குறைய இந்தப் பிரச்சனை பல ஆசிரியர்களை இடம் பெயர்த்துக் கொண்டு இருந்தது.

     தலைமையாசிரியர் அறை பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல் சற்று அழுக்கடைந்த மாதிரி தான் இருந்தது. வெளியில் மைதானத்தை அடைத்து பந்தல் போட்ட மாதிரி இரண்டு வாதாங்கொட்டை மரங்கள் இயற்கையாகவே அந்த கட்டிடத்திற்கு குளிர்சாதன வசதி செய்து கொண்டு இருந்தது. தமிழரசன் உள்ளே நுழைந்த போது பள்ளியின் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார். ஆசிரியர்கள் அறையில் ஒன்றிரண்டு பேர் வந்திருந்தார்கள். அறிமுகம் இன்றி அங்கே சென்று அமர்வது சற்று கூச்சமாக இருந்ததால் தலைமைஆசிரியர் சீட்டுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

     ”யோவ் அந்த சீட்ல இருக்குறவன் நம்மாளுதான். ஏற்கனவே பேசிட்டேன். ரெடியா வச்சிருக்கேன் மாமான்னு சொன்னான். இன்னைக்கு வாங்கி வந்தா தான் பில் போடமுடியும்” என்று சத்தமாக தொலைபேசியபடி வந்தார் தலைமையாசிரியர்.

    

           “யாருப்பா நீ என்ன வேணும்?” என்று சற்று சத்தமாக மிரட்டும் தோரணையில் கேட்டுக் கொண்டே தலைமையாசிரியர் சதாசிவம் உள்ளே நுழைந்தார்.

     “சார் குட்மார்னிங் சார், நான் சர்ப்ளஸ் டிரான்ஸ்ஃபர்ல புதுசா வந்த தமிழாசிரியர் சார்“ என்று அரக்கபரக்க எழுந்து நின்றான் தமிழரசன்.

     “அப்படியா? வெல்கம் டு அவர் ஸ்கூல். உங்க சொந்த ஊர் எது சார்?”

     “பக்கத்தில் உள்ள மகிழம்பந்தல் தான் சார்”

     “அடடே அப்படியா? அங்க மணியார் பையன் ராசேந்திரனத் தெரியுமா?” என்று முதல் அஸ்திரத்தை வீசினார்.

     “தெரியும் சார், ஆனா பேசினது கிடையாது அவ்வளவா அறிமுகம் இல்ல சார்“

     முதல் அஸ்திரம் பயனற்று போனதில் சற்றே ஏமாந்து போனார். சரி அடுத்த அம்ப விட்டு பாப்போம்.

     “ஆமா, உங்க வீடு மகிழம்பந்தல்ல எங்க இருக்கு?”

     “சார், அங்க இப்போ எங்க வீடு இல்ல சார் நாங்க டவுனுக்கு வந்துட்டோம்”

     இரண்டாவது அம்பும் இலக்கை தைக்காததால் தலைமையாசியரியர் சதாசிவம் சோர்ந்து போனார்.

     “சரி ஏ.ஹெச்.எம் கிட்ட டைம் டேபிள் வாங்கிக்கிட்டு கிளாஸ் போயிடுங்க” என்று அனுப்பி விட்டு அவரோட கேஸ்ட் பேர எப்படி கண்டுபிடிக்கறது என்று தலைவலி வரும் அளவு யோசித்தார்.

     போனவருஷம் கண்ணனும் தான் வந்தார், இவரு மாதிரியா? அவங்க ஊர்ல ஒரு ஆள சொல்லிக் கேட்ட உடனே ’அவரு என்னோட ஒண்ணுவிட்ட மாமாதான்’ என்று பட்டுன்னு சொல்லல?!

     பிரகாஷ் இங்க மாற்றலாகி வந்தப்போ அவர்கிட்ட கேட்டபோது ’சார் நான் அம்பேத்கார் நகர், அவரைத் தெரியாது’ன்னு பட்டுன்னு தேங்கா உடைச்சமாதிரி சொல்லிட்டாரே. இந்த ஆளு ஒரு சின்ன க்ளு கூட குடுக்காம போறாரு.

     “சார், டீ வாங்கிட்டு வரட்டுமா?“ என்றார் வாட்ச்மேன்.

     “ஆமா, டீ ஒண்ணுதான் கொறச்சல். ஒண்ணும் வேண்டாம் நீ போ” என்று சுல்லென்று எரிந்து விழுந்தார்.

     மாலை இடைவேளையின் போது தலைமையாசிரியர் அறைக்கு ஒரு பஞ்சாயத்து வந்தது. அடிச்சிக்கிட்ட பசங்க ரெண்டு பேரும் காலனித்தெரு. அதனால பிரகாஷ் சாரை அழைத்து விசாரிக்கச் சொல்லி நீதி பரிபாலனம் செய்தார். அவர் எப்போதும் சாதி விஷயத்தில் சற்று கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பார்.

     “புதுசார் இங்க கொஞ்சம் வாங்க, உங்க ஊர்ல சின்னதுரைய தெரியுமா? இ.பில வேல பாக்குறாரே”

     ’ஆகா, நம்ம மாமா பேரக் கேக்குறாரு. மாமான்னு சொன்னா உடனே தெரிஞ்சிக்குவாரு. என்ன ஆனாலும் ஒரு மாசத்துக்கு இவர சுத்தல்ல விட்டே ஆகணும். என்ன கேஸ்ட்டுன்னு தெரியாம தலைய பிச்சிக்கிணும்’

     ”சார் நான் ஆறாவதுலே இருந்து ஆஸ்டல்ல தங்கிப் படிச்சேன் சார். ஊருல எங்க அப்பா அம்மா தவிர யாரையும் தெரியாது சார்”

     ஏற்கனவே பி.பி பேஷண்டான சதாசிவத்திற்கு கொஞ்சம் அழுத்தம் ஏறி வேர்க்க ஆரம்பித்தது.

     செவ்வாய்க்கிழமை கையெழுத்து போடும் போதே தலைமையாசிரியர் சீட்டில் அமர்ந்து இருந்தார். சற்று சோர்வாக காணப்பட்டார்.

     “குட் மார்னிங் சார்”

     “ம்ம்..” என்று சலிப்போடு தலையாட்டினார்.

     “எங்க உங்க சர்வீஸ் ரெஜிஸ்டர் வரவே இல்லையே” என்று அடுத்த அம்பை எய்தார். எஸ்.ஆர் புக்ல மொதப் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் கேஸ்ட் பேரு இருக்குமே.

     “புரபேஷன் டிக்ளேர் பண்றதுக்காக சி.இ.ஓ ஆபீஸ்ல இருக்கு சார்” என்று அசால்டாக லெஃப்டில் டீல் பண்ணியதில் சதாசிவத்திற்கு காலையிலேயே வியர்க்க ஆரம்பித்து விட்டது.

     வேற வழியே இல்லை, இந்த காரியத்தில் பிறர் உதவியையும் நாட வேண்டியது தான். இதனால உடம்பு வேற கெட்டுப் போவும் போல இருக்கு.

     “யோவ் கண்ணன், இந்த தமிழரசன் மகிழம்பந்தல்ல எந்த தெருன்னு சொன்னாராய்யா?”

     “அவரு டவுன்ல இருக்கறதா தான் சார் சொன்னாரு. என்ன கேஸ்ட்டுன்னு தெரியல சார்” என்று அவரது நோக்கத்தை துள்ளியமாக கணித்தார் கண்ணன்.

     “அவரோட பழைய ஸ்கூல்ல தெரிஞ்ச ஸ்டாஃப் யாராவது இருந்தா விசாரிச்சிப் பாரேன்”

     “சரிங்க சார்“

     செவ்வாய் கிழமை முழுவதும் மனசு ஒரு நிலையில் இல்லை. எப்படித்தான் அந்த ஆளோட கேஸ்ட்ட கண்டு பிடிக்கறது? என்று யோசித்ததில் தலைவலி மண்டையை பிளக்க ஆரம்பித்தது. ஏற்கனவே மதியம் சாப்பாடு வேறு இறங்காத காரணத்தால் மயக்கம் வருகிற மாதிரி இருக்கவே வீட்டுக்கு கிளம்பினார்.

     “பிசிக்ஸ் சார், நீங்க பாத்துக்குங்க, உடம்பு ஒரு மாதிரியா இருக்கு, நான் வீட்டுக்கு கௌம்புறேன்“

     “ஓகே சார் போயிட்டு வாங்க”

     புதன் கிழமை அடுத்ததாக ஒரு அஸ்திரத்தை தயாராக கொண்டு வந்திருந்தார். இந்த அஸ்திரத்தில் அந்த ஆளு தப்பிக்கவே முடியாது. சொல்லித் தானே ஆகணும். கொஞ்சம் பரபரப்பாகவும் பதட்டமாகவும் உணர்ந்தார்.

     “தமிழரசன் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?“

     “இல்லைங்க சார்”

     “என்ன சொல்றீங்க, அதான் சின்ன வயசுலயே வேலைக்கு வந்துட்டீங்க, காலா காலத்துல பண்ண வேண்டியது தானே?”

     “சரிங்க சார்“

     “நம்ம தம்பி ஒருத்தன் கல்யாண ஏற்பாடுகள் பண்ற வேலை தான் பார்க்குறான். என்ன கேஸ்ட்டுன்னு சொல்லுங்க, வரன் பாத்துடுவோம்”

     ’ஆகா, இதுக்குத்தானா? என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தேன்’

     “சார்…. அது வந்து….!!”

     “இதுல என்ன சார் கூச்சம்? ம்ம்….ம்ம்…சொல்லுங்க” என்று சதாசிவம் அடைந்த பரபரப்பில் அவரது அழுத்தம் 200ஐத்தாண்டி இருக்கும்.

     “சார், நான் என்கூடப் படிச்ச பொண்ண லவ் பண்றேன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க வீட்ல பேசிக்கிட்டு இருக்கோம் சார்“

     சதாசிவத்திற்கு தரை நழுவியது. சுழல் நாற்காலியில் சரிந்து விழுந்தார்.

     “சார், என்ன உடம்பு எதுவும் சரியில்லையா? டாக்டர்கிட்ட போலாமா சார்?” என்று பதறியது போல காட்டிக்கொண்டான் தமிழரசன்.

     ’பேத்து எடுத்துப் புட்டு பேத்தாசா’ என்று கூறும் விவேக் போல இயலாமையோடு தமிழரசனை முறைத்தார்.

     கண்ணன் மதிய உணவு இடைவேளையில் பதட்டத்தோடு ஓடிவந்தார். “சார் கண்டுபிடிச்சிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்”

     “யோவ் என்னத்தய்யா கண்டுபிடிச்ச?”

     “தமிழரசன் என்ன கேஸ்ட்டுன்னு கண்டு பிடிச்சிட்டேன்”

     “சொன்னாராய்யா?”

     “சொல்லித்தான் தெரியணுமா? ஸ்கூல் வாட்சாப் குருப்ல பாரதிக் கண்ணம்மா படத்தில் ”எவன்டா தேவன்”னு தேவனுக்கு டெஃபனிஷன் கொடுக்கற டயலாக்க ஷேர் பண்ணி இருந்தார் சார். அதனால அவரு தேவர் தான் சார்”

     முகத்தில் நிம்மதி படர நிமிர்ந்து உட்கார்ந்தார் சதாசிவம். மொபைலில் பீப் ஒலி கேட்டது. எடுத்து வாட்சாப் ஓப்பன் பண்ணினால் ”கற்றவை பற்றவை” என்கிற காலா பட புரோமோ வீடியோவை தமிழரசன் ஷேர் பண்ணி இருந்தார்.

     “ம்க்க்கும், என்னத்தய்யா கண்டுபிடிச்ச? இந்தா பாரு ரஞ்சித் படத்த ஷேர் பண்ணி இருக்காரு” என்றார் சதாசிவம் சலிப்போடு.

     இந்த குழப்பத்தை ஆரம்பித்து இயக்கிய தமிழரசன் நமுட்டுச் சிரிப்போடு மதியம் கையெழுத்து போட அட்டெண்டன்சை புரட்டினார்.

     ’ச்சே எல்லாம் இந்த திராவிட ஆட்சியாளர்களால வந்தது. இதுவே வடநாடா இருந்தா எவ்வளவு சுளுவா சர்நேம் வச்சி கண்டுபிடிச்சிருக்கலாம்?!’  என்று சிந்தித்தபடி கழுத்தில் கை வைக்க உடம்பு நெருப்பாக சுட்டது.

     “யோவ், மணி, ஆபீஸ்ல தான் இருக்கியா? ஒரு சின்ன டீட்டெயில் வேணும். எங்க ஸ்கூலுக்கு சர்ப்ளஸ்ல வந்து இருக்கும் தமிழரசன் என்ன கேஸ்ட்டுன்னு ஒண்ணு எட்டு பர்டிகுலர்ஸ் பாத்து சொல்லு” என்று சி.இ.ஓ ஆபீஸ்ல வேலை செய்யும் தனது சொந்தக்கார பையன் மணியிடம் கேட்டார்.

     “சார், அவரு போனவாரம் சர்ப்ளஸ் டிரான்ஃபருக்கு வந்தப்போ,. புதுஸ்கூல்ல குடுத்து எழுதச் சொல்லணும்னு அவரோட டீட்டெயில் இருக்குற பேஜ கிழிச்சி எடுத்துக்கிட்டு போயிட்டார் சார்”

     “என்ன கண்ணன் எதுக்கு நிக்கிறீங்க?”

     “சார் தமிழரசன் வன்னியரா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு சார்!”

     “எப்படிய்யா சொல்ற?”

     “சந்தனக் கடத்தல் வீரப்பன் பத்தி ஒரு புத்தகத்தை ஆர்வத்தோடு படிச்சிக்கிட்டு இருந்தார் சார்!”

     “அப்படியாய்யா?! இருக்கும் இருக்கும்” என்று உற்சாகமானார் சதாசிவம்.

     “அதெல்லாம் இருக்காது சார், அவரோட மேஜைமேல கபாலி படத்தில் ரஜினி வைத்திருக்கும் “மை ஃபாதர் பாலய்யா” புத்தகம் கூட இருந்துச்சி சார்” என்று பலூன் உடைத்தார் ஃபிசிக்ஸ் சார்.

     சதாசிவம்முக்கு மறுபடியும் தரை நழுவியது இன்று சற்றே வேகமாக நழுவியது. பள்ளிக்கு ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிக் கொண்டு நேரே பக்கத்து டவுன் தனியார் மருத்துவமனைக்கு சென்றது.

     அடுத்தநாள் ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் ஆப்பிள் பழங்களோடு கண்ணன் மருத்துவமனைக்கு உற்சாகமாக கிளம்பினார். தலைமையாசிரியரின் மன வாட்டத்தை போக்கும் விஷயம் தன்னிடம் இருப்பதாக வலுவான நம்பிக்கையோடு மருத்துவமனை காரிடாரில் துள்ளல் நடையோடு சென்றார்.

     “சார், ஒரு நல்ல சேதி. தமிழரசன் என்ன கேஸ்ட்டுன்னு தெரிஞ்சி போச்சி சார்”

     “என்னய்யா சொல்ற எப்படி?”

     “அவரோட நோட்ஸ் ஆஃப் லெசன் நோட்டோ பின்பக்கத்தில் ராஜராஜச் சோழனோட படத்தை கட்பண்ணி வச்சிருந்தார். மேலும் அவரோட மேசை இழுப்பறையை திறந்து பாத்தேன். அங்கேயும் ராஜராஜன் படம். அதனால நிச்சயமா அவரு நம்ம ஆளுதான் சார்”

     “அட ஆமாய்யா நல்லா கண்டு பிடிச்சய்யா, உன்ன பாராட்டியே ஆகணும்”

     “ஆமா, கிழிச்சாரு, தமிழ்நாட்டுல கீழே இருந்து மேலே வரைக்கும் எல்லா சாதிக் காரனுங்களும் ராஜராஜ சோழன நம்ம ஆளு நம்ம ஆளுன்னு தானே சொல்லிக் கொண்டு திரியறான்” என்று ஊசியால் மறுபடியும் பலூனை “டப்“ என்று உடைத்தபடி ஃபிசிக்ஸ் சார் சாத்துக்குடி பழங்களோடு உள்ளே நுழைந்தார்.

     அப்போது கதவை திறந்து கொண்டு ஒரு கூட்டம் திமுதிமுவென்று உள்ளே நுழைந்தது.

     “என்னாச்சு மச்சான்? திடீர்னு எல்லாரையும் பயமுறுத்திட்டீங்க” என்று அக்கரையாக விசாரித்தபடி உள்ளே வந்தார் மகிழம்பந்தல் மணியார் பையன் ராசேந்திரன்.

     “நம்ம பங்காளிப் பையன் தமிழரசனுக்கு உங்க ஸ்கூல்ல வேலை கெடைச்சிருக்காம் எல்லாம் பேசிகிட்டாங்க

     ’அப்பாடா என் வயித்துல பால வாத்தியே மச்சான்’ என்று நிம்மதியாக கையில் சொருகி இருந்த குழாய்களை கழட்டி விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

     அப்போது கதவைத் திறந்து கொண்டு அரைகிலோ ஆப்பிளோடு உள்ளே நுழைந்தான் தமிழரசன்.

     “மச்சான் இவரு தான் நீங்க சொன்ன தமிழரசன் சார்” என்று நம்ம ஆளு என்பதை மட்டும் விட்டுவிட்டு உற்சாகமாக கூறினார் சதாசிவம்.

     “இவரா? இல்லையே அவன் பி.டி.ஏவுல டெம்பரவரியால வேல பாக்குறதா சொன்னான்”

     “என்னாது பி.டி.ஏ, டெம்பரவரியா” என்று சத்தமாக பேசிவிட்டு மயங்கி விழுந்தார் சதாசிவம்

     ”பேரு ஒண்ணா இருந்ததால குழப்பமாகிப் போச்சி போல”என்று ராசேந்திரன் தலையை சொறிந்தார்.

     “என்னாது சந்தைக்கடை மாதிரி இத்தன பேரு. நீங்கல்லாம் ஜாப்ல இருக்குறவங்க தானே சார்? ஏன் இப்படி கும்பல் கட்டுறீங்க? டாக்டர் வருகிற நேரம்” என்று அனைவரையும் பத்திவிட்டார் உள்ளே நுழைந்த நர்சு.

     மயங்கி கிடந்த சதாசிவம் அருகில் கலர்கலராக மருந்து மாத்திரைகள் கிடந்தன. ஆனால் நோய் தீர்க்கும் மாத்திரை வெளியே சென்று கொண்டு இருந்தது.

 

    

 

    

 

 

    

    

    

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...