Tuesday, August 4, 2020

போயிட்டு வாங்க சார் (மொழிபெயர்ப்பு நாவல் சுருக்கம்)

புத்தகம் – போயிட்டு வாங்க சார் (மொழிபெயர்ப்பு நாவல் சுருக்கம்)

மூலம் – Good Bye Mr.Chips

ஆசிரியர் – ச.மாடசாமி

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

விலை – 60 பக்கங்கள் -62

நிறைய புத்தகங்கள் படித்தாலும் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவல்ல புத்தகங்களுக்கே பதிவு எழுதுவது எனது வழக்கம். தோழர் ச. மாடசாமி அவர்களின் இந்த அறுபத்தி இரண்டு பக்க நூல் அத்தகைய ஒன்றாகும். இது நாவலா என்றால் இல்லை, ஆனால் கதையின் ஊடாக நாவல் குறித்த தோழரின் பார்வை. ஆசிரியர்கள் தவறவிடக் கூடாத ஒரு புத்தகம். அப்படி என்ன இருக்கிறது? கற்பித்தலில் ஏதேனும் புதிய உத்திகள் பற்றி உள்ளதா? என்றால் அதுவும் இல்லை. ஆனாலும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று நூல் முழுவதுமாக விரவிக் கிடக்கிறது.

மூல நாவலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன். 1934 ல் வெளிவந்திருக்கிறது. திரைப்படமாகவும் வெளிவந்து பெருவெற்றி அடைந்திருக்கிறது. சரி பில்டப் போதும் நாவலுக்குள் போவோம்.

கதைக்களம் 1850-1933 வரையிலான கால இங்கிலாந்து. சிப்பிங் என்கிற சிப்ஸ் தனது 22வது வயதில் ஒரு பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து பசங்க பண்ணின அட்டுழியம் தாங்காமல் அவர்களை அடக்கியாள அறியாமல் ஓடி வந்து விட்டார். அதன் பிறகு புரூக்ஃபீல்ட் பள்ளிக்கு வருகிறார். தலைமையாசிரியர் முதல் நாளே கண்டிப்பை காட்டி பசங்களை வழிக்கு கொண்டு வந்துவிட்டால் போதும் பிறகு சிரமம் எதுவும் இருக்காது தைரியமாக போய் வகுப்பெடுங்கள். என்று உற்சாகமளிக்கிறார். அங்கே ஆரம்பித்த பயணம் இறுதி மூச்சு வரை அந்தப் பள்ளியோடே தனது வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர்தான் மிஸ்டர் சிப்ஸ்

கல்யாணம் புள்ளக்குட்டி எல்லாம் இல்லையா? அவரது 48 வது வயதில் 25 வயது கேதரீன் அவரை வலிய வந்து விரும்புகிறாள். திருமணம் செய்து கொள்கிறார்கள். கேதரீன் வரவு அவரது நடத்தையில் புதுரத்தம் பாய்ச்சியது. உள்ளுக்குள் மென்மையாகவும் வெள்ந்தித்தன்மையோடு இருந்தாலும் அவரிடம் ஒரு இறுக்கம் குடிகொண்டு இருக்கும். அதை தளரச்செய்து அவருக்குள் நகைச்சுவை உணர்வை ஊட்டினாள். பழைமைவாதியான அவருள் தனது சோஷலிஸ புரட்சிகர சிந்தனைகளால் (1890-1900 காலகட்டம் என்று அறிக) மாற்றங்களை கொண்டுவந்தாள். “குட்பை மிஸ்டர் சிப்ஸ், நாளைக்கு சந்திப்போம்” என்று அவள் கூறியதில் இருந்து தான் அவருடைய பெயர் “சிப்ஸ்” என்றானது. கெடுவாய்ப்பாக ஒரு ஆண்டுக்குள் அவர்களது இல்வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், பிரசவத்தின் போது தாய் சேய் இருவரும் இறந்து போய்விட்டனர். பிறகு இறுதிவரை தனியாகவே இருந்தார்.

சரி அவர் எப்படிப்பட்ட ஆசிரியர்? அவரிடம் பெரிய கவர்ச்சி எதுவும் இல்லை. சரி உயர் மதிப்பெண் அல்லது உயர் தேர்ச்சி விழுக்காடு உண்டா? இல்லை. கற்பித்தலில் புதிய உத்திகள்? சுத்தமா கிடையாது. அப்புறம் எப்படி?? மாணவர்களின் பால் வற்றாத அன்பு, குறையாத அக்கரை, பணியில் முழுமையான ஈடுபாடு. இவை இருந்தால் போதுமே. இப்போதும் சரி ஸ்மார்ட் கிளாஸ், கணினி அறிவு, கவர்ச்சியான நடத்தும் பாங்கு என ஆயிரம் இருந்தாலும் மேலே கூறப்பட்ட மூன்றும் இல்லாவிட்டால் உங்க புதுமையோ புடலங்காயோ வேலைக்காகாது.

வயது முதிர்ந்து இயலா நிலை எழுந்தபோது தானாகவே ரிடையர் ஆகி, பள்ளிக்கு எதிரே உள்ள வீட்டில் திருமதி விக்கெட் உடன் தங்கி பள்ளியை அனுதினமும் பார்த்தவண்ணம் காலத்தை கடத்துகிறார். மாணவர்களை அழைத்து தேனீர் தயாரித்து கொடுத்து மகிழ்கிறார். ஒரு இக்கட்டான தருணத்தில் மீண்டும் பள்ளிப்பணிக்கு திரும்புகிறார். உடல் நிலை மோசமடைந்தவுடன் விலகுகிறார். பின்பு தனது 85 வது வயதில் இறந்து போகிறார்.

“திறமைகள் உவட்டுகின்றன. திறமையின் அலட்டலை இரண்டாவது முறை பார்க்கும் போதே சலிப்புண்டாகிறது.

ஆனால்… ஆயிரம் தடவை காட்டினாலும் அன்பு தெவிட்டுவதில்லை. அதுவும் விளக்கு வெளிச்சத்திலும் கொட்டுச் சத்தத்திலும் தன்னை வெளிப்படுத்தாமல் கூசி ஒதுங்குகிற அன்பு ரொம்ப ரொம்ப ருசியானது” என்று ஆரம்ப வரிகளிலேயே மாடசாமி அவர்கள் நூலின் உள்ளடக்கத்தை அடக்கி வைத்துவிட்டார்.

சிப்சை நான் பார்த்திருக்கிறேன், உடன் பணியாற்றி இருக்கிறேன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அரசு மேல்நிலைப் பள்ளி, உட்கோட்டையில் (நான் முதன்முதலாக ஆசிரியராக பணியேற்ற பள்ளி) அவருடன் ஒரு நான்கு ஆண்டுகள் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. அவரது பெயர் சி.என் சார்.

குட் பை மிஸ்டர் “சி.என்”

மதிய உணவுக்கு பதிலாக ஒரு தேனீர். கொஞ்சம் புகையிலை. அவ்வளவு தான். ஆனால் வெண்கலக் குரல் என்பார்களே அப்படி ஒரு குரல். அவர் 17 வயதிலேயே வேலைக்கு வந்தவர் (அதை பாய் சர்வீஸ் என்பார்கள்). கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக உட்கோட்டைப் பள்ளியிலேயே பணியாற்றியவர். சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்லும் போது வழியில் ஒரு பத்து பேரிடமாவது நின்று பேசிவிட்டுத்தான் செல்வார். முன்னால் மாணவர்கள் ஊர் பெரியவர்கள் என அனைவருமே அவரிடம் அவ்வளவு அன்பு பாராட்டுவார்கள். பேச்சில் அவ்வளவு எனர்ஜி பாசிட்டிவான பார்வை என காண்போரை உற்சாகப்படுத்தி விடுவார்.

”எங்கடா புத்தகம்?”

”சார் மறந்துட்டேன் சார்”

“கல்யாணத்தின் போது தாலிகட்ட மறந்தான்” என்பது தான் அவனுக்கான திட்டுதல்.

“யோவ் அவசரத்துல உட்டா அண்டாவுல கூட கை நுழையாதுய்யா” என்பது போல திடீர் திடீர் என செம்மயான சொலவடைகளை போட்டுத்தாக்குவார்.

வகுப்பில் உற்சாகம் கரைபுரளும். அடிப்பதோ திட்டுவதோ ஒரு போதும் இல்லை, ஆனாலும் ரிசல்ட் நன்றாகவே வரும்.

அவரது கையெழுத்து முத்து முத்தாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். எழுதச் சொன்னால் கொஞ்சமும் சோர்வின்றி குயர் கணக்குல எழுதித்தள்ளி விடுவார். வருட இறுதியில் இளையோர் எங்களை சுற்றிலும் அமர்த்தி மதிப்பெண்களை வாசிக்க வைத்து தேர்ச்சிப் பட்டியலை எழுதித்தள்ளி விடுவார்.

“பசங்கன்னா அப்படித்தான் இருப்பான் கோவப்படாதீங்க எம்.ஜெ” என்று என்னிடம் அடிக்கடிக் கூறுவார்.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் என அனைவரின் உணர்வோடு கலந்தவர் அல்லவா? ரிடையர் ஆகி இரண்டு நாட்கள் கூட வீட்டில் தாக்குப்பிடிக்க இயலாமல் மாணவர்களை சந்திப்பதற்காகவே அப் அண்ட் டவுன் பத்துகிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து வந்து டியுசன் எடுத்தார். இந்த ”குட் பை மிஸ்டர் சிப்ஸ்” வாசித்த உடன் எனது மனதில் வந்து நின்றவர் சி.என் சார் தான்.

ஒரு மாலை வேளையில் சாலையோரத்தில் நடந்து சென்றபோது ஒரு டாடா சுமோ அடித்து மோதிய ஒரு விபத்தில் அவர் அகால மரணம் அடைந்தது ஈடு செய்ய இயலாத இழப்பு. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உட்கோட்டையே அவரது ஊரான குறுக்கு ரோடு திரண்டு வந்தது. ஊர்மக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலியோடு விடைகொடுத்தோம். குட்பை சி.என் சார்.

 


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...