Friday, August 7, 2020

குற்றப் பரம்பரை - வேல ராம மூர்த்தி

 

புத்தகம் – குற்றப் பரம்பரை


ஆசிரியர் -  வேல ராமமூர்த்தி

பதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ்

கொரானா விடுமுறை காலத்தில் கெடுவாய்ப்பாக நூலகங்களும் மூடியேக் கிடக்கின்றன. சரி கொஞ்சம் அச்சுப் புத்தகங்கள் வாங்கிப் படித்துவிட்டு பள்ளி நூலகத்தில் சேர்த்து விடலாம் என்கிற எண்ணத்தில் ஒரு ஆறாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் ஆன்லைனில் வாங்கினேன். அதில் ஒன்றுதான் இந்தக் குற்றப் பரம்பரை.

“குற்றப் பரம்பரை” பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல?! புத்தகத்தின் அட்டைப் படமும் மரணமாஸ் ஆக இருந்ததால் கொரியர் பார்சலைப் பிரித்தவுடன் இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். புத்தகத்தின் பக்கங்கள் 443. முதல் நாள் ஒரு ஒன்றரை மணிநேரம் அடுத்தநாள் ஒரே சிட்டிங்கில் ஒரு இரண்டு மணி நேரம் அமர்ந்து வாசித்து விட்டுத் தான் எழுந்தேன். அவ்வளவு சுவாரசியம்.

     நாவலாசிரியர் வேலராமமூர்த்தி அவர்கள் படங்களிலும் நடித்து வருவதால் அவரது முகம் அனைவருக்கும் பரிச்சயமே. இந்த நாவல் குற்றப் பரம்பரை எனக் கூறப்பட்ட கள்ளர் சமூக மக்களின் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. அரசியல் பை வீக்லியான ஜூனியர் விகடனில் தொடராக வந்தது. சரி கதைக்கு வருவோம்.

     கதை துவங்கும் போது வேலுச்சாமி, அவனது தாய் கூழானிக்கிழவி, மனைவி அங்கம்மாள், குழந்தைகள் வில்லாயுதம் மற்றும் சேது அனைவரும் விரட்டி வரும் வெள்ளைக் கார போலீஸிடம் இருந்து காட்டு வழியாக தப்பித்துப் போகிறார்கள். ஓடும் போது சேது வழி தவறிப் போய் விடுகிறான். மற்றவர்கள் அடிபட்டு குத்துப் பட்டு சம்பங்கி ஆற்றில் விழுகிறன்றனர். அடுத்தநாள் ஆற்றங்கரையில் ஆடு மேய்க்கும் பெரும்பச்’சேரி’(ஆம் அதேதான்) சிறுவன் வையத்துரையால் காப்பாற்றப் படுகின்றனர்.

     நாட்கள் நகர்கின்றன. வேலுச்சாமி என்கிற வேயன்னா மற்றும் அவர்களைச் சேர்ந்தோர் குடும்பங்களாக கொம்பூதி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். வேயன்னாவின் தலைமையில் அவர்களது மக்கள் யாவும் களவுத் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். மகன் வில்லாயுதம் காப்பாற்றி கரைசேர்த்த வையத்துரை இவர்கள் சாதி வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்கின்றனர். கொம்பூதி வந்த பிறகு வேயன்னாவுக்கு பிறந்தவள் அன்னமயில். வேயன்னாவின் தங்கை மகள் சிட்டு வில்லாயுதத்திற்கு குலவழக்கப்படி “மாப்பிள்ளைக்காரி”. அன்னமயிலுக்கு வையத்துரை மேல் ஆசை இருந்தாலும் குல வழக்கப்படி அவளுக்கும் அவளது அத்தை மகன் இருக்கிறான்.

     வையத்துரையின் கிராமம் பெரும்பச்சேரி. அந்த ஊர் மக்கள் பெருநாழி என்கிற பக்கத்து கிராம உயர்சாதியினரின் வீடுகளிலும் வயல்களிலும் வேலை பார்த்து வயிற்றைக் கழுவி வருகின்றனர். திருவேட்டை மற்றும் சிவப்பியின் மகன் தான் வையத்துரை. ஆனால் அவன் பிறப்பு ஒரு உருக்கமான ஃப்ளாஷ் பேக் உடையது. அவனது தாய் மணியகாரர் வீட்டு ஆறு சகோதரர்களுக்கு செல்லமான ஒரே தங்கை. அவள் பெரும்பச்சேரியைச் சேர்ந்த வண்டிக்காரனை காதலித்து கர்ப்பமாகிறாள் செல்லமான தங்க தங்கச்சி இந்த மாதிரி காரியம் செய்தவுடன் அவளை கதவில் நெறித்து கொலை செய்து வயிற்றை அறுத்து சிசுவை வெளியே எடுத்து வீசுகின்றனர். அந்த சிசு தான் வையத்துரை.

     பெருநாழி கிராமம் உயர்சாதியினர் வசிக்கும் கிராமம். அந்த ஊர் பச்சமுத்து தான் களவு பொருட்களை வேயன்னாவிடம் இருந்து ரகசியமாக பெற்று அதற்கு ஈடாக உணவு தானியங்களை கொம்பூதி கிராமத்திற்கு வழங்குகிறான்.

     இதற்கிடையில் நாதமுனி என்றொரு கிழவன் சம்பங்கி ஆற்றை ஒட்டிய காட்டுப் பகுதியில் நிசாமின் கஜானாவில் இருந்த விலையுயர் ஆபரணங்கள் கிடப்பதாக புதையல் தேடி அலைகிறான். திருநங்கை ஹசார் தினாருக்கு ஆயிரம் தினார் பணம் கொடுத்து ஒரு பெண்சிசுவை நரபலி இட வளர்த்து தருமாறு சத்தியம் வாங்கிக் கொள்கிறான். அந்த சிசு வளர்ந்து அழகிய தேவதை வஜ்ராயினியாகி வேயன்னாவின் மகன் வில்லாயுதத்தின் கண்களில் படுகிறாள். ஹசார் தினாருக்கு வஜ்ராயினி மீது பாசம் இருந்தாலும் சத்தியத்திற்கு கட்டுப் பட்டு அவளை கன்னித்தன்மை மாறாமல் நாதமுனியிடம் நரபலிக்காக ஒப்படைக்க வேண்டும் என்பதால் வில்லாயுதம் மீதான அவளது பருவத் தடுமாற்றம் கவலை கொள்ளச் செய்கிறது.

     காட்டிலிருந்து தப்பிச் சென்ற வேயன்னாவின் மகன் சேது குழந்தை இல்லாத வில்லியம் ஜென்சி தம்பதியினரால் செல்வச் செழிப்போடு வளர்க்கப்பட்டு காவல் துறை அதிகாரி பயிற்சி முடிக்கிறான். அவனது காதலி நான்சி.

     ஆக, கதை இவ்வளவு விஸ்தாரமாக அடித்தளம் எழுப்பப்பட்டு வளர்கிறது. இதற்கே 200 பக்கங்கள் செலவாகி விடுகிறது. பிறகு வரும் 200 சொச்சம் பக்கங்களுமே க்ளைமாக்ஸ் பரபரப்புடனேயே விறு விறுப்பாக சென்றுவிடும்.

     பெருநாழிக் காரர்களுக்கான எஸ்டேட் கிணற்றில் பெரும்பச்சேரியைச் சேர்ந்தவர்கள் அவர்களாகவே நீர் எடுக்க முடியாத கட்டுப் பாடு. குடத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினால் யாரேனும் ஒரு பெருநாழிக்காரர்கள் இரக்கப்பட்டு தண்ணி சேந்தி கொடுப்பார்கள். இது தான் வழக்கம். ”என்னது? ஏனா? உலகம் தெரியாத ஆளா இருக்கீங்களே, தண்ணி தீட்டு பட்டுவிடாதா?!”

ஒரு அவசர நேரத்தில் ஆள் இல்லாத காரணத்தால் பெரும்பச்சேரி பெண் ஒருத்தி அவளே தண்ணீர் எடுத்துவிட விவகாரம் பெரிதாகி அவளது கணவனை கட்டிப் போட்டு உடலில் தேன் ஊற்றி பக்கத்தில் இருக்கும் கட்டெரும்பு புற்றுக்கு தேன் கொண்டு வழி அமைத்து விடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு பிறகு அவனை காப்பாற்றுகிறார் வேயன்னா. அத்தோடு நிற்காமல் இனிமேல் எஸ்டேட் கிணற்றில் பெரும்பச்சேரிக் காரர்கள் அவர்களே வாளி கொண்டு நீர் இரைத்துக் கொள்வார்கள் என்று மிரட்டிச் செல்கிறார்.

அடுத்த நாள்  கிணறு முழுக்க மலம் மிதக்கிறது. (இதெல்லாம் அடுக்குமா, நடக்குமா? என்று ஐயம் கொள்ளாதீங்க. 80 களின் இறுதியில் எங்க ஊரில் ஏற்பட்ட சாதிப் பிரச்சனையில்  நாங்கள் நீர் எடுக்கும் கிணற்றில் ”ஆண்ட” பரம்பரையினர் கள்ளி வெட்டி போட்ட வரலாறு உண்டு) இதனால் கடுப்பான கொம்பூதிக் காரர்களும் பெரும்பச்சேரியினரும் பெருநாழி சந்தையில் புகுந்து கண்ணில் பட்டோரை வெட்டி காயப்படுத்தி கடைகளை கொளுத்திச் செல்கின்றனர். இதனால் பெரும்பச்சேரி காரர்களுக்கு பெருநாழியில் வேலை இல்லாமல் போகிறது. வேயன்னா பச்சமுத்துவிடம் சொல்லி அவர்களுக்கான ஒரு தானிய வண்டியை பெரும்பச்சேரியில் இரக்கச் சொல்கிறார்.

     இந்த சமயத்தில் வேயன்னா மற்றும் கொம்பூதிக் காரர்களின் களவினை ஒடுக்க பெருநாழிக்கு காவல் நிலையம் வருகிறது. அன்பினால் வேயன்னாவை வழிக்கு கொண்டு வர துரை விக்டர் என்ற ஆங்கிலேய காவல் அதிகாரி(இவர் சேதுவை வளர்க்கும் வில்லியம் ஜென்சி தம்பதியினரின் சகோதரன்) முயன்று தோற்று மாற்றலாகிறார். பகதூர் என்கிற வடநாட்டு காவல் அதிகாரி கடுமையான நடவடிக்கை மூலமாக ஒடுக்க முயன்று கொம்பூதிக் காரர்களால் கொல்லப் படுகிறார். இந்த தருணத்தில் தான் சேதுவுக்கு முதல் போஸ்டிங் பெருநாழியில் போடப்படுகிறது

     மகன் வேயன்னாவை திருத்தினானா? பெரும்பச்சேரி மக்களுக்கும் பெருநாழிக்காரர்களுக்குமான பகை முடிந்து அவர்களுக்கு வேலை கிடைத்ததா? வில்லாயுதம் வஜ்ராயினியை நாதமுனியின் நரபலியில் இருந்து மீட்டானா? என பல முடிச்சுகள் வெகு சுவாரசியமாக அவிழ்க்கப் பட்டுள்ளன.

     வேல ராமமூர்த்தி அவர்கள் ஒரு தேர்ந்த திரைக்கதையாசிரியராக இருக்க வேண்டும். நாவல் முழுவதும் பல்வேறு கிளைகளாக விரிந்து ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பான காட்சி படிமங்களாக நமது மனதிற்குள் நுழைவது போல எழுதியுள்ளார். ராஜமௌலி மாதிரியான பிரமாண்ட இயக்குனர்கள் கையில் இந்தக் கதை கிடைத்தால் நிச்சயமாக அடுத்த பாகுபலி ரெடி. மல்டி ஸ்டார் புராஜட்டாக எடுத்து செம்மயா கல்லா கட்டலாம். களவு நுணுக்கங்கள், அந்தக்கால ஆயுதப் பயன்பாடு, சண்டை உத்திகள், ஏறுதழுவுதல் விவரனைகள் என மனிதர் சும்மா அடித்து ஆடியுள்ளார். அதுவும் போலீஸ் அதிகாரி பகதூரும் வேயன்னாவும் சந்திக்கும் அந்த தீ விபத்து வரும் இடம் செம்ம மாஸ் என்ட்ரி. கூழானிக்கிழவி பாத்திரம் அருமை. நிச்சயமாக வாசிக்க வேண்டிய அற்புதப் படைப்பு.

     நாவலின் இறுதிப் பகுதியில் சேதுவின் ஆளுமை சரியாக கையாளப்படவில்லை. ஒரு பலகீனமான பாத்திர வார்ப்பாகவே எனக்குப் பட்டது. இளமையான திறமையான ஒரு காவல் அதிகார படிக்காத தற்குறி பச்சைமுத்துவின் சூழ்ச்சியை கண்டறிய இயலாது போனது நம்பும்படியாக இல்லை. அதே போல வஜ்ராயினி நாதமுனி புதையல் இந்தப் பகுதிகளை தவிர்த்திருக்கலாம். கதையின் மைய ஓட்டத்திற்கு எந்த உதவியும் புரியாத பகுதி. மேலும் கதையின் எதார்த்த தன்மை இந்தப் பகுதியில் நாதமுனி தவம், புதையல், மான் பேசுகிறது கோபித்துக் கொள்கிறது போன்ற காட்சி அமைப்புகளால்  பாதிப்பதாக எனக்குப் பட்டது.

    

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...