Wednesday, October 11, 2023

சக்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட வாங்க!!

 சக்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட வாங்க!!



"சக்கரைவள்ளிக் கிழங்கு"

இந்தப்பேரைக் கேட்டதும் “இந்து“ படத்தில் வரும் “சக்கரைவள்ளிக் கிழங்கு நீ தான் சமைஞ்சது எப்படி…” என்ற பாடல் நினைவுக்கு வந்தால் நீங்கள் தமிழ் சினிமா பார்த்துக் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டீர்கள் என்று அர்த்தம். எனக்கெல்லாம் சுத்தமாக ஞாபகம் வர்லீங்கோ(?!)


“உன் பேரைச் சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..” இந்தப் பாடல் காதலன் காதலி உறவுக்குப் பொருந்துமோ இல்லையோ எனக்கும் சக்கரைவள்ளிக் கிழங்குக்கும் உள்ள உறவுக்கு மிக்கப் பொருத்தம்.


கொக்கி அறுந்த டவுசரின் முனைகளை முடிச்சு போட்டு மானம் காத்த சிறு பிராயம் தொடங்கி சொட்டை பின்னோக்கியும் தொப்பை முன்னோக்கியும் இறங்கும் எனது தற்போதைய கட்டிளம் காளைப் பருவம்( பாஸ் உங்க வயசு 40 பாஸ்) வரையில் இந்த சக்கரைவள்ளிக் கிழங்கு ஆசை ‘ஹட்ச்“ நாய்க்குட்டியாய் பின் தொடர்ந்து வருகிறது.


“யாகாவாராயினும் நாகாக்க…“ வள்ளுவனின் இந்தக் குறட்பாவை  மட்டும் இந்தக் கிழங்கின் சுவை விஷயத்தில் என்னால் கடைபிடிக்க இயலவில்லை.


அப்போ எனக்கு ஏழு வயதிருக்கும் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.( ஏழு வயசுன்னா இரண்டாம் வகுப்பு தானே ஏன் இந்த பில்டப்பெல்லாம்). இந்தக் கூட்டு வண்டி தெரியுமா? மாட்டு வண்டியில் பொருத்தமான “அக்ஸஸரீஸ்“ எல்லாம் இணைத்து மேற்புறத்தை உருளையை செங்குத்தாய் வெட்டி கவிழ்த்தது போன்ற அமைப்பால் கூரை அமைத்தால் கூட்டு வண்டி ரெடி. கோவிலுக்கு வண்டிக் கட்டிக் கொண்டு செல்வார்கள். திருமண காரியங்களில் மணப் பெண்ணை அழைக்க இந்த கூட்டு வண்டி பயன் படுத்துவார்கள். ( இப்போ முயற்சித்தீர்கள் என்றால் திருமணம் நின்று போவது திண்ணம்). அப்புறம் இந்த சக்கரைவள்ளிக் கிழங்கு இந்த வண்டியில் தான் வைத்து விற்பார்கள். 


மாட்டு வண்டியில் உட்காரும் பரப்பில் கிழங்கின் பச்சையான கொடியினை பரப்பி அதன் மேல் உறுத்தாமல் இருக்க கோணி சாக்கினை விரித்து குறைந்தபட்சம் இரண்டு பேர் அமர்ந்திருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று மூட்டைகளில் சக்கரைவள்ளிக் கிழங்கு வைத்திருப்பார்கள். ஒரு தராசு ஒன்று இருக்கும். வண்டியை இழுக்கும் மாட்டுக்கு பசி எடுக்கும் போதெல்லாம் இந்த பச்சைக் கொடியை இழுத்து போடுவார்கள். 


“சக்கரைவள்ளிக் க்க்கிழங்ங்..கே….” என்று உரத்தக் குரலில் ஒலி எழுப்புவார்கள். என் போன்ற சிறார்க்கு எல்லாம் இந்தக் குரல் “செந்தேன் குழல்”


பெரும்பாலும் எவரும் காசு கொடுத்து கிழங்கு வாங்குவதில்லை. “ச்சீச்சீ“ நீங்க நினைக்கிற மாறி இல்லைங்க காசுக்கு பதிலா நெல் அல்லது நிலக்கடலை போன்றவற்றை கொடுத்து வாங்கிக் கொள்வோம் பண்டமாற்று முறை அமலில் இருந்த காலம். வண்டி வீதி வழி போகும். வேண்டியவர்கள் “ஏ கிழங்கு நில்லுங்க“ என்று நிறுத்தி வாங்க வேண்டியது.


வண்டி எங்கள் வீட்டைக் கடக்கும் போது நான் அம்மாவிடம் போய் கெஞ்சுவேன்.


 “சரி நிக்கச் சொல்லு வாங்குவோம்“ என்று கூறிவிட்டு போய் அடுக்குப் பானைகளை (தானியங்கள் நிரம்பிய பெரிய பானைகளை அடுக்கடுக்காய் சுவற்றின் மூலைகளில் சாய்த்து வைத்து இருப்பார்கள்) திறந்து பார்த்தால் அது காசு தீர்ந்த “ஏடிஎம்“ ஆக பல் இலிக்கும். 

“அப்பன்னா குதிர்ல இறங்கி எடு” என்பார்கள்.

 “யப்பா நான் நாலு எடம் போவணும் வெரசா வாப்பா!“ என்று வண்டிக்காரர் அவசரப்படுத்துவார். 

“அவசரத்துல கை விட்டா அண்டாவுல கூட கை நுழையாது“ என்பது போல வழக்கமாக ஒரே துள்ளலில் ஏறும் குதிரில் இப்போ ஏறுவது ரொம்ப கடினமாக உள்ளது.


 “சரிப்பா எடுத்து வைங்க வரும் போது நிப்பாட்டுறேன்” என்று கூறி விட்டு “எல சம்முவம் உட்றா போவட்டும்“ என்று கிளம்பி விட்டார்கள். திரும்பி வருவதற்குள் கிழங்கு தீர்ந்து விடக் கூடாதே என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் குதிருக்குள் இருந்தபடி வேண்டிக் கொண்டேன்(அப்போ விவரம் அறியாமல் பெரும் பக்தி மானாக இருந்தேன்).


சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுத்த முறை அவிப்பதற்கான நெல்லையும் சேர்த்து என்னை வைத்தே எடுத்து விட்டார்கள். “ஏம்மா ஒரு ஐந்து கிலோ வாங்கிக்கலாம்மா“ என்றேன். “உதைபடுவே படுவா“ என்று திட்டிக் கொண்டே ஒரு கிலோ கிழங்கிற்கான நெல்லை மட்டும் என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை வைத்துக் கொண்டு ரோட்டில் உக்காந்து கொண்டேன். நிறுத்தாமல் சென்றால் சாலை மறியல் செய்வதாய் உத்தேசம்.


உலகத்திலேயே வெகு இலகுவாக மிகச் சுவையான ஒரு தின்பண்டம் செய்யும் முறை ஒன்று உண்டென்றால் அது சக்கரைவள்ளிக் கிழங்கு செய்யும் முறைதான். கிழங்கினை அலசி முனைகளை வெட்டி நீக்கி குறுக்காக இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி அகலமான மண்சட்டியில் கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைத்து தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்க வேண்டியது. வேக வைப்பதற்கு முன்பு கிழங்கின் தோல் கிழங்கோடு அன்றில் பறவைகள் போல பிரிக்க இயலா வண்ணம் ஒட்டிக் கொண்டிருக்கும். வெந்தபின்பு “பிரேக்கப்“ ஆன ஜோடிகள் போல டப்பென்று பிரிந்து வந்து விடும்.


சுவை?! அதை விளக்குவதற்கு பாவம் தமிழில் வார்த்தைகள் பஞ்சம். மெல்ல நாவில் பட்டு தொண்டையில் இறங்க இறங்க நீங்கள் கிறங்கிப் போவீர்கள். ஆங்கிலேயன் போல் அடிமை படுத்திவிடும். அப்புறம் எப்போதும் ஆகஸ்ட் பதினைந்து கிடையாது. 

சத்து?!


உங்களுக்கு வழக்கமாக தேவையான விட்டமின் ”ஏ“ ஆனது இதில் 400 சதவீதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் நார்ச்சத்து நிரம்ப உள்ளதால் காலைக் கடன்களை எளிதில் செலுத்திவிட்டு கவுரவமாக நடமாடலாம்.


“பொட்டாசியம்“ சத்தும் நிரம்ப உள்ளதாம். இவற்றோடு இயற்கையான சர்க்கரை ஆனால் வெகு குறைவான கலோரி மதிப்பில் உள்ளதாக சொல்கிறரார்கள். ஆதாரம் http://www.medicalnewstoday.com/articles/281438.php

சரி சரி இன்னைக்கு சந்தையில் வாங்கிய கிழங்கை வேக வைக்க வேண்டும் போய்வருகிறேன். நீங்களும் வாங்குங்க. சமைச்சு சாப்பிடுங்க. உண்மையான தமிழனா இருந்தா “ஷேர்“ பண்ணுங்க.(கிழங்கச் சொன்னேன்)

1 comment:

  1. எல்லா வரிகளும் மிக மிக நன்று சார். My family read and enjoyed with this Artcle.

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...