Sunday, May 24, 2020

கடைசி கிராமம் போவோமா?!!

புத்தகம்: கடைசி கிராமம்
ஆசிரியர் : வெங்கட் நாகராஜ்
பதிப்பு: கிண்டில்
எப்போதுமே எனக்கு பயணக்கட்டுரைகள் மேல் ஓர் ஈர்ப்பு உண்டு. புதிய இடங்களை பார்ப்பது சுவாரசியமானது தானே? நல்ல எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் வழி அவர்கள் பார்த்தவற்றை நமக்கு அழகாக காட்சி படுத்துவார்கள். அந்த வகையில் வெங்கட் நாகராஜ் அவர்கள் எழுதியுள்ள இந்த பயணக்கட்டுரைப் புத்தகம் மிக அருமையாக உள்ளது.
 நூலாசிரியர் பணிநிமித்தம் டெல்லியில் வசித்து வரும் தமிழர். அவர் தம் நண்பர்களோடு வாய்ப்பு கிடைக்கும்  போதெல்லாம் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பி விடுகிறார்.
 இந்தப் பயணத்தில் அவருடன் அவரது திருவனந்தபுர மலையாள நண்பரும் சேர்ந்து கொள்கிறார். ஏன் இது கடைசி கிராமம்? ஹிமாச்சல் பிரதேச திபெத் எல்லையில் இருக்கும் கடைசி கிராமமான சித்குல் என்ற இயற்கையின் எழிலை அள்ளிப் பருக வாய்ப்பளிக்கும் 11000 அடி உயரத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று வந்தது குறித்த பயணக்கட்டுரை என்பதால் தான் இந்த தலைப்பிட்டு இருக்கிறார்.
 டெல்லியில் இருந்து 20 மணிநேர பேருந்து பயண தொலைவில் இருக்கும் கிராமம் தான் இந்த சித்குல். அப்படி ஒன்றும் ஒரே பேருந்தில் சர்ர்.. என்று கிளம்பி சென்று விட முடியாது. குக்கிராமம் என்றாலே ப்ரேக் அப் இன்றி சென்று சேர்ந்து விட இயலுமா? இவரும் ஒரு 3 பேருந்துகளின் துணைகொண்டு தான் சென்று சேர்ந்திருக்கிறார்.
 முதலில் டெல்லியில் இருந்து ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் புஷர் என்கிற இடத்தை அடைகிறார்கள். அங்கிருந்து 100 கி.மீ தொலைவை மலைப்பாதையில் 5 மணி நேர ஆபத்தான பயணத்திற்கு பிறகு கல்பா என்கிற கிராமத்தை அடைகிறார்கள். ஒரு பக்கம் மலை மறுபக்கம் ஆஆஆஆழத்தில் கஸ்பா என்கிற நதிப் பள்ளத்தாக்கு. கரணம் தப்பினால் மரணம் என்கிற த்ரில்லான பேருந்து பயணமாம். கேட்கும் போதே ஒரு முறை அந்தப் பாதையில் பயணித்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.
 இமயமலைப் பகுதி கிராமம் என்பதால் சுற்றுலா வருவோர் தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. கல்பா புத்தமத வழிபாட்டுத்தளங்கள், ஆப்பிள் தோட்டங்கள் மற்றும் ஹிமாலயாஸ் என்று திகட்டாத இன்பத்தை தருவதற்கு தயாராக இருக்கும் இடம். இது பிரபலமான சுற்றுலா தளம் இல்லை என்பதால் அமைதியாக இயற்கையை ரசித்தபடி சுற்றுலா செல்ல விரும்புவோர் தேர்வு செய்யும் இடம். சீசன் இல்லாத காலங்களில் ஆயிரம் ரூபாய் வாடகையில் அருமையான தூய்மையான அறைகள் கிடைக்கின்றன. இதுவே ஆன்லைனில் புக் செய்தால் 1400 ரூபாயாம் பாத்துக்கோங்க. அப்புறம் அவர் போன காலகட்டத்தில் பிஎஸ்என்எல் தவிர எந்த நெட்ஒர்க்கும் வேலை செய்யவில்லையாம். இப்போது அநேகமாக ஜியோ டவர் போட்டுருப்பான்.
 ஹிமாச்சலைப் பொருத்தவரை டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வாழ்க்கை சற்று கடினமானது. அன்றாட அலுவல்களையே மேற்கொள்ள இயலாத வகையில் பத்தடிக்கும் மேலாக பனிப் பொழிவு இருக்குமாம்.
 பயணக்கட்டுரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி அவர்கள் அங்கே உணவு விடுதியில் அந்த இடத்திற்கு உரிய உணவை உண்டது குறித்து சிலாகித்து எழுதுவது தான். இவர் கூட அந்த கல்பாவில் சாப்பிட்டதை விவரித்த போது எனக்கு பசி எடுக்கவே நள்ளிரவில் ஒரு தோசை போட்டு சாப்பிட்டு விட்டு தொடர்ந்து படித்தேன். சில பேர் எழுதுகையில் நம்ம ஊர் உணவு கிடைக்காமல் தவிச்சி போய்ட்டேன் என எழுதுவார்கள். அதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. பாம்பு திங்கிற ஊருக்குச் சென்றால் நடுக்கண்டம் நம்மளது என்கிற டைப் நான். எங்கே சென்றாலும் அந்த இடத்திற்கான பிரத்தியே உணவை ருசித்துப் பார்த்து விடுவதே நல்ல டூரிஸ்ட்டுக்கு அழகு. அந்த வகையில் நூலாசிரியர் அழகுதான்.
 அப்புறம் அங்கே சென்று நான் ஆறுமணிக்கெல்லாம் தேனீர் அல்லது காபி கோப்பையோடு தான் எழுவேன் என்று சொல்லாதீர்கள் அங்கே காலையில் எட்டு மணிக்குத்தான் கடையே திறப்பார்களாம்.
 கல்பா கிராமத்தில் கின்னர் கைலாஷ் என்கிற ஒரு மலையே சிவலிங்க வடிவமாக உள்ள வழிபாட்டு தளம் உள்ளதாம். அது ஒரு லோ பட்ஜட் கைலாஷ் யாத்திரையாம். இரண்டு நாள் டிரெக்கிங் செய்தால் அந்த கின்னர் கைலாஷ் தளம் செல்ல முடியுமாம்.
 மலைக்கிராமங்களை இணைத்து செல்லும் பேருந்துகளைப் பற்றி அழகாக சொல்லி இருக்கிறார். நம்ம ஊர்ல மினி பஸ்காரன் நம்ம ஊட்டாண்ட நிறுத்தலன்னா அடுத்த நாள் பஸ்ஸ நிறுத்தி அடிதடியில் இறங்குவார்கள் அல்லவா? அங்கே இயல்பாகவே எங்கே நின்று கை காண்பித்தாலும் நிறுத்தி ஏற்றிக் கொள்வார்களாம். ஏனெனில் பேருந்துகள் மிகவும் சொற்பமாகத்தான் வரும். மேலும் டிரைவர் கண்டக்டர் அதே வழித்தடத்தில் நீண்டகாலம் ஓட்டுபவர்கள் என்பதால் அந்த ஊர் மக்களுடன் சினேகமாக இருப்பார்கள். நான் இந்த மாதிரி ஒரு சினேகத்தை கொல்லி மலைப் பயணங்களில் கண்டிருக்கிறேன்.
 சித்குல் கிராமத்தில் இந்திய எல்லையின் கடைசி தாபாவான “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா” வில் சாப்பிட்டு இருக்கிறார்கள். “ராஜ்மா சாவல்” என்ற ஹிமாச்சலின் பிரத்தியேக உணவைத்தான் அங்கே தருகிறார்கள். வேலை ஆட்கள் இன்றி குடும்ப உறுப்பினர்களே நடத்தும் உணவகம்.
 நூலில் சித்குல் கிராமத்தில் இருந்த புத்த கோயில், கோட்டை மற்றும் அருகாமை கிராமம் என நடந்தே சுற்றி சுற்றி வந்து ரசித்து திரும்பி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க பொதுப் போக்குவரத்தை பயன் படுத்தி பிரபலம் இல்லாத ஒரு ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் மலைகிராம சுற்றுலாவை கற்பனை செய்யும் போதே குதூகலமாக உள்ளது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
 நூலாசிரியர் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நல்லதொரு மேற்கோள் கொண்டு ஆரம்பித்து இருப்பது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது.
 இவரது மற்றொரு பயணக்கட்டுரையும் கிண்டிலில் வாசித்து விட்டேன். அது குறித்து மற்றொரு இடுகையில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...