Friday, May 8, 2020

தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக் கொண்டிருக்கிறோமா? பொதுத்தேர்வு என்னும் பூதம் - 1



    
1992 ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினேன். அப்போது தேர்வு மையம் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்போது சுத்தமல்லியில் மேல்நிலைப் பள்ளியே உள்ளது. மேலும் அங்கேயே தேர்வு மையமும் உள்ளது. எல்லோரும் தினந்தோறும் உடையார்பாளையம் சென்று தேர்வு எழுதவேண்டும். மாணவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க செல்ல வேண்டும். மாணவியர்கள் தங்களது அண்ணன் அல்லது அப்பாவுடன் வருவார்கள்.
     தேர்வு பற்றிய பில்டப் ரொம்ப ஓவராக கொடுப்பார்கள். பறக்கும் படை வந்து பிட் அடிப்பவர்களை பிடிப்பார்கள் என்றெல்லாம் பீதியை கிளப்புவார்கள். ’பறக்கும் படைன்னா பறந்து வருவார்களோ’ என்று பயந்தபடியே யோசித்திருக்கிறேன். சரி பிட் அடிப்பவர்கள் தானே பயப்பட வேண்டும் நாம் எதற்கு என்று சமாதானம் ஆகிவிடுவேன்.
     பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் டியுசன் வகுப்புக்கு செல்வார்கள். “பிள்ளைகளை ரொம்ப நேசிக்கிறவங்க டியுசன் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க” என்கிற அளவுக்கு டியுசன் முக்கியமாகப் போய்விட்ட நாட்கள் அவை. எங்கள் ஊரில் அப்போது இரண்டு டியுசன்கள். இரண்டு பேருக்கும் “சபாஷ் சரியான போட்டி”. நல்ல ரிசல்ட் கொடுத்து அடுத்த  ஆண்டு டியுசன்ல நிறய மாணவர்களை சேர்த்து விட வேண்டும் என்று படாத பாடு படுவார்கள்.
     இந்தப் போட்டியில் கொடுமை என்னவென்றால் டியுசன் ஆசிரியரே மதில் சுவரில் ஏறிகுதித்து பிட் சப்ளை செய்தது தான். தேர்வில் கேட்கப்பட்ட எஸ்ஸே, பாரகிராஃப் மற்றும் மெமரி போயம் இவற்றை ஒரு கல்லை வைத்து சுருட்டி குறி பார்த்து விர் விர்ர் என்று எறிவார்கள். அந்த மாதிரி என் மேலேயும் ஒரு கல் வந்து விழுந்து தொலைத்தது. எனக்கு பின்னால் இருந்த பையனை நோக்கி எறியப்பட்ட பிட் இலக்கு தவறி என் காலில் அடித்தது. பின்னால் இருந்தவன் பிட்டை எடுக்க கையை மெல்ல கொண்டு வருகிறான். இன்விஜிலேட்டர் நான்தான் பிட் அடித்துவிட்டேன் என நினைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் அந்த பிட்டை நானே எடுத்து நல்ல பிள்ளையாக அவரிடம் கொடுத்து விட்டேன்.
     காம்பவுண்ட் எகிறி குதித்ததால் முட்டியை சிராய்த்துக் கொண்டும் காம்பவுண்ட் அருகில் இருந்த கருவை முள் பதம் பார்த்த விழுப்புண்களோடும் பரிதாபமாக நின்ற அவர் “கொலை வெறியோடு“ என்னை பார்த்த பார்வை இன்றளவும் என் நினைவில் அகலாமல் உள்ளது.
     என்னவோ தேர்வுகளில் வெட்டி முறித்தது போல இறுதி தேர்வு முடிந்தவுடன் களைப்பு நீங்க ஒரு திரைப்படம் தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம். பரிட்சை முடிந்தவுடன் ஒரு அழுத்து அழுத்தி ஜெயங்கொண்டம் சென்று படம் பார்த்த பிறகு தான் எல்லோரும் வீடு திரும்புவார்கள். நான ஜெயங்கொண்டத்தில் இருந்த எனது சித்தப்பா வீட்டில் தங்கி தேர்வு எழுதியதால் நானும் எனது அண்ணன் சேகரும் அடுத்த நாள் மார்னிங் ஷோ ஜனகர் தியேட்டரில் “சின்னக் கவுண்டர்“ படம் பார்த்து கடமையை நிறைவேற்றினோம்.
     அப்புறம் இந்த ரிசல்ட் வருவது மாதிரி ஒரு களேபரம் நீங்களெல்லாம் நினைத்துக் கூட பார்த்திருக்க இயலாது. இப்போவெல்லாம் ஒரு வருடம் முன்னேயே தேர்வுத் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி கொடுத்துவிடுகிறார்கள். 90 களில் பேப்பர் காரன் வால் போஸ்டரில் “பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்“ என்று கொட்டையாக போட்டு விட்டால் அவனுக்கு சில ஆயிரம் பிரதிகள் அதிகமாக விற்பனையாகும். ஆனால் பேப்பரை வாங்கி பார்த்தால் உள்ளே எங்காவது மூலையில் ”பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே இறுதியில் வரலாம் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று ஒரு குட்டிச் செய்தி போட்டு ஏமாற்றுவார்கள்.
     மாலைமுரசு மற்றும்  மாலை மலர் என்ற மாலை செய்தித்தாள்கள் இப்போது வருகின்றனவா என்பது கூட தெரியவில்லை. அப்போது எங்காவது டீ கடைகளில் பார்க்கலாம். ஆனால் ரிசல்ட் வருகிற அன்றைக்கு அந்தப் பேப்பருக்கு டோக்கன் போட்டு முன்பதிவெல்லாம் செய்வார்கள். (டி.ராஜேந்தரின் “வீராசாமி” படத்திற்கு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிய ஃபீலிங்) ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் என பெரிய மகாமக கூட்டமே நிற்கும். திருச்சியில் இருந்து வரும் ஒவ்வொரு பேருந்தையும் எட்டி எட்டி பார்ப்பார்கள்.
     ஒரு வழியாக ஏதாவது ஒரு பேருந்தில் வந்து விடும்(வீராசாமி பட பொட்டி வந்துடுச்சி). அப்புறம் பேப்பரை வாங்கி ரிசல்ட்டை பார்க்க வேண்டியது தான். தொடர்ந்து பத்து எண்கள் பாஸாகி இருந்தால் 17-26 என்று போட்டிருப்பார்கள். 18 முதல் 25 வரையிலான பசங்க மதிப்பெண் பட்டியலை பார்க்கும் வரை பீதியுடனே அலைவார்கள்.
சில வேளைகளில் அச்சுப் பிழையினால் ஒரு எண் விட்டுப் போயிருக்கலாம். அந்த மாணவனின் துயரத்தை சொல்லில் வடிக்க இயலாது. ஜெயங்கொண்டம் பள்ளியில் படித்த எனது நண்பன் ஒருவனுக்கு அவனது எண் வரவில்லை. நாம பெயில் தான் ஆகிட்டோம் என்று பேப்பரை சுருட்டி அக்குளில் சொருகிக் கொண்டு ’வீட்டிற்கு போகலாமா இல்ல எதாவது பஸ் ல ஏறி எங்கயாவது ஓடிப் போகலாமா’ என்று தீவிரமாக சிந்தித்தபடி நின்றான். நல்வாய்ப்பாக அவனது சித்தப்பா அவனை கொத்தாக பிடித்துக் கொண்டு நேராக பள்ளிக்குச் சென்று மதிப்பெண் பட்டியலை பார்த்து தேர்ச்சி என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டிற்கு பயலை பத்திரமாக அழைத்து வந்தார். இல்லை என்றால் என்ன ஆவது.
     அப்போதெல்லாம் தேர்ச்சி விழுக்காடு 50 இருந்தாலே பெரிய விஷயம். எனவே அனேகம் பேர் தேர்வில் தோல்வியுற்றிருப்பார்கள். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் சாக்லேட் வாங்கி ஊருக்கே விநியோகம் பண்ணுவார்கள். (முக்கியமாக பெயிலான மாணவனின் பெற்றோருக்கு) பெற்றோர்களோ தங்கள் பிள்ளை எதையோ சாதித்தது போல அகமகிழ்ந்து போவார்கள். பெயிலான மாணவனின் பெற்றோர் என்ன செய்வார்கள் தெரியுமா? வீட்டில் பெயிலானதற்காக தூக்கி போட்டு மிதி மிதி என மிதித்தாலும் கூட வெளியில் சொல்லும் போது "புள்ள ஒரு பாடத்துல ஒரு மார்க்ல விட்டுபுடுச்சி” என்று விட்டுக் கொடுக்காமல் சொல்லுவார்கள்.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...