Thursday, May 14, 2020

வலி- சிறுகதை



ஆசிரியர்- பாப்லோ அறிவுக்குயில்
முதலில் கதையாசிரியர் பாப்லோ அறிவுக்குயில் பற்றி பார்க்கலாம்.
90 களில் நான் எங்கள் ஊர் கிளை நூலகத்தில் உறுப்பினராகி ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் தமிழ்வாணன் நாவல்களை விரும்பி வாசித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் மாமா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது நண்பர் அறிவழகனுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அறிவழகன் அவர்கள் கதையெல்லாம் எழுதுவார் என்று அவரது புதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். நான் புரட்டிப் பார்த்து விட்டு “என்ன மாமா இது எல்லாம் கிராமத்துல பேசுற மாதிரியே இருக்கு?“ என்று அலட்சியமாக பதிலுரைத்தேன். புத்தகத்தில் “பாப்லோ அறிவுக்குயில்” என்ற பெயரைப் பார்த்துவிட்டு மாமாவை பார்த்தேன், அது அவரது புனைப்பெயர். அந்தப் பெயரில் தான் கதைகள் எழுதுகிறார் என்றார்.
     அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு இருபது ஆண்டுகள் கழித்து அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றைப் பார்த்தேன். பிறகு எங்கள் பள்ளி நூலகத்திலும் ஒரு சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். இந்த “வலி“ என்ற சிறுகதை எங்கள் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்த ”கிளுக்கி” என்கிற தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசி சிறுகதை.
     கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் என்று ஒவ்வொரு ஊர் மக்களின் பேச்சு வழக்கிற்கும் ஒரு நடை உண்டல்லவா? ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அரியலூர் சுற்று வட்டார கிராம மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி இவரது எழுத்துக்களில் அவ்வளவு இயல்பாக வருவது பெரும் வியப்பு. உழைக்கும் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி அடக்கி ஆளும் ஆதிக்க வர்க்கம் குறித்து எழுதும் போது வியர்வையின் வீச்சத்தையும் ரத்தத்தின் நெடியையும் இவரது எழுத்துக்களில் உணரலாம்
     “அந்தியின் மஞ்சள் புன்னகையை திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தது இருள்” என்று தொடங்குகிறார். டவுனில் இருந்து தனது “குக்கிராமத்திற்கு“ வருகிறான் கதைநாயகன். அவனது கிராமத்தில் இருந்து முக்கிய சாலை மூன்று கிலோமீட்டர் தொலைவு. முக்கிய சாலை சந்திப்பும் கூட முக்கியமான ஊர் இல்லை என்பதால் பெரும்பாலான பேருந்துகள் நிற்பதில்லை. இருள் கவிந்த நேரத்தில் முக்கிய சாலையில் இறங்கி ஒரு பெரிய சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு செல்கிறான். சூட்கேசில் என்ன இருக்கிறது? அந்த மாத சம்பளப் பணம் முழுவதையும் புத்தக கண்காட்சியில் செலவு செய்து வாங்கிய புத்தகங்கள்தான் உள்ளன.
                அவனது நினைவில் தனது கிராமத்திற்கு பேருந்து வேண்டி முக்கிய சாலையை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் நடத்திய பெரும் மறியல் போராட்டமும், அதற்காக தானும் நண்பர்களும் கிராம மக்களும் வாங்கிய லத்தி அடிகளும் அதற்கு பிறகு ஒரு இரண்டு முறை மட்டும் ஊருக்குள் பேருந்து வந்து செல்லும் வாய்ப்பு கிட்டியதும் ஓடிக்கொண்டு இருந்தது.
     நவீன மாற்றங்கள் பழமைவாதிகளை ஏதாவது ஒரு வகையில் உளுக்கி எடுத்து விடுகின்றன. சாதிய மேலாதிக்கமும் அடக்குமுறையும் மேலோங்கி இருக்கும் அவனது கிராமத்தில் பேருந்தினால் ஒரு புதிய சிக்கல். தாழ்த்தப் பட்டவர்கள் பேருந்தில் தங்கள் அருகிலோ தங்கள் கண் எதிரிலோ அமர்ந்து செல்வதை ஆதிக்க சாதியினரால் ஜீரணிக்க இயலவில்லை. “கெவருமண்டு பஸ்ஸ விட்டாலும் விட்டானுவ பறப்பயலுவ சக்கிலிப் பயலுவளுக்கெல்லாம் திமிரு ஏறிப்போச்சு வந்து ஒரசிக்கிட்டு குந்துரானுவ” என்று சீறுகிறார்கள். இங்கே ஃப்ளாஷ்பேக் கட்டாகிறது.
     ஊருல என்ன விசேஷம் என்று நண்பர்களிடம் விசாரிக்கிறான். பேருந்தில் உக்காரப்போன மதியை மேல் சாதியினர் அடிக்க இவனும் திருப்பி அடிக்க ஊரில் பஞ்சாயத்து வைத்து மதிக்கு மட்டும் அபராதம் போட்டிருக்கிறார்கள். இதற்கு இடையில் தாழ்த்தப் பட்ட மக்கள் இடையில் உட்சாதி பிரிவினையால் அந்தப் பிரச்சனையை மற்றவர்கள் கேட்கவில்லை என்று அறிந்து கோபப்படுகிறான்.
     இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலக்காரணம் என்ன என்று ஊர் பெருசுகள் யோசித்து காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள். ஆமாம், இந்தப் பேருந்து ஊருக்குள் வந்து செல்வது தான் காரணம். அதனால் எதாவது பிரச்சனை பண்ணி டிரைவர் கண்டக்டரை அடித்து உதைத்து ஊருக்குள் பேருந்து வராமல் பண்ணி விடுகிறார்கள். சாதிய அடுக்கு நிலை எப்போதும் சிறு நெகிழ்வுத் தன்மையும் இன்றி மிகக் கெட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
     தாழ்த்தப் பட்ட சாதியில் இருந்து வரும் நபர் வங்கி ஊழியராக இருந்தாலும் கூட தனது பெயரைச் சொல்லி அழைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாத ஆதிக்க மன நோயாளி  களை நான் அறிவேன்.
     ஒரு தலித் உயரதிகாரி தனக்கு கீழ்நிலையில் உள்ள ஆதிக்க சாதி ஊழியரிடம் பணி ஆய்வு நிமித்தம் செல்லும் போது தாமாகவே தரையில் அமர்ந்து கொண்டு ஃபைல் பார்ப்பதும் அந்த கீழ்நிலை ஊழியரோ நாற்காலியில் அமர்ந்த படி குனிந்து குனிந்து பதில் அளிக்கும் காட்சியையும் நான் அறிவேன். (அவ்வளவு தூரம் அஞ்சத்தக்க அளவிலான சாதிய மேலாதிக்க மனநிலை கொண்ட ஊர்கள் உள்ளன)
     இப்போது அவர்களின் நிலமை மிகவும் இரங்கத்தக்கதாக உள்ளது. என்னதான் நவீனத்தை எதிர்த்தாலும் கல்வி எல்லா மாற்றங்களையும் சாத்தியமாக்கி உள்ளது.
    

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...