Tuesday, May 12, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும்பூதம் – 4 “மீனுங்களா ஓடிவாங்க மரம் ஏறலாம்!!”



“என்னை தேர்ச்சிப் பெறச் செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், நான் உயிரோடு இருப்பதும் சாவதும் உங்கள் கையில்” – என்ற மிரட்டலான ப்ளாக் மெயிலை நான் கண்டது பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது.
இன்னும் பல உருக்கமான கடிதங்களையும் கண்டதுண்டு. அந்த தேர்ச்சி என்கிற எல்லைக் கோட்டை எட்டிப் பிடிக்கத்தான் எத்தனை பிரயத்தனங்கள்.
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் நிச்சயம் உண்டு, பள்ளியில் உள்ள பெருமைக்குரியோர் பட்டியலில் அவர்களது பெயரை நிரந்தரமாக எழுதி வைத்துப் பெருமை படுத்துவார்கள்.
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போதே அவர்கள் என்ன படிப்பு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் எவ்வாறெல்லாம் முழுகவனத்தையும் படிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்று படிப்பு படிப்பு படிப்பு என்று ஒட்டு மொத்தமாக கல்வி என்றாலே ஐந்து பாடங்களின் மதிப்பெண்களுக்குள்ளே மட்டுமே உள்ளது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுவிட்டது.
முழுக்க முழுக்க தேர்வு மற்றும் மதிப்பெண் மையக் கற்றல் கற்பித்தலாகிப் போன வகுப்புகள் சுவையற்றதாகிப் போய்விட்டது. மனப்பாடம் என்கிற ஒற்றைத் திறமையை வளர்த்தது அன்றி வேறு என்ன செய்து விட்டது இந்த மதிப்பெண்களை துரத்தும் கல்வி முறை.
நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனிடம் “கரண்ட் எப்படிப்பா தயார் பண்றாங்க?“ என்று ஒரு முறை (ஆய்வு நோக்கில் இந்த ஒரே கேள்வியை பலமுறை கேட்டுள்ளேன்) கேட்டேன். பயல் பேந்த பேந்த முழிச்சான். அப்படியே சற்று அவனது மொழியில் கேள்வியை மாற்றிப் போட்டேன் “ஏசி மின்னியற்றி வேலை செய்யும் விதத்தை விளக்குக” அவ்வளவு தான் மடை திறந்த வெள்ளமென விடை வந்தது. உள்ளார்ந்த புரிதல் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மனப்பாடம் செய்வதில் என்ன பயன்.
நான் உட்கோட்டைப் பள்ளியில் பணிபுரிந்த போது, அறிவியல் கண்காட்சி நடத்தும் போது மெல்லக் கற்கும் பல மாணவர்கள் வித்தியாசமான பல ஐடியாக்களை செய்து காட்டுவார்கள். ஒரு பையன் ஒரு செட் குட்டி சீரியல் பல்புகளை வைத்துக் கொண்டு அவ்வளவு வித்தைகள் காட்டிவிட்டான். வகுப்பறையைப் பொறுத்தவரை அவனெல்லாம் “உனக்கு ஒண்ணும் தெரியாது உக்காருடா” ரகம் தான்.
இவர்களின் செயல்முறை அறிவுகளுக்கு வகுப்பறையில் இடம் இல்லை. பத்தாம் வகுப்பில் செய்முறைத் தேர்வு வைத்து 25 மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள். அறிவியலின் முழுத் தேர்ச்சிக்கு அன்றி அதனால் வேறு பயன்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேல்நிலை வகுப்புகளிலே கூட உபகரணங்கள் வெறும் காட்சிப் பொருட்கள் தானே?! (பல கல்லூரிகளிலே கூட இதுதான் நிலமை என்று சிலர் எண்ணுகிறீர்கள் தானே?! மைண்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்)
இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் ஆண்டு மலர் தயார் செய்வதாகவும் அதற்கு அனைத்து மாணவர்களும் எதாவது ஒரு வகையில் ஒரு படைப்பை அளிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தேன். ஒரு ஏழாம் வகுப்பு மாணவி மட்டுமே நான்கு கதைகள் எழுதி தந்துவிட்டாள். மற்றொரு மாணவி ஒரு 20 தாள்களில் படங்கள் வரைந்து வண்ணம் தீட்டி வந்து மேஜையை நிரப்பி விட்டார். ஒரு பாராட்டு முடிந்தால் ஒரு ஐந்து ரூபாய் பென்சில் கொடுத்துப் பாருங்கள் அவர்கள் அந்த திறமை அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி அகமகிழ்ந்து போவார்கள். விளையாட்டு, இலக்கியம் மற்றும் கலை சார்ந்த விஷயங்களுக்கு பள்ளிகளில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்று எண்ணிப் பாருங்கள்
மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு எங்கள் பள்ளியில் இருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வானான். பறையிசைப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் கலந்து கொண்டான். வகுப்பறையைப் பொறுத்தவரை அவன் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவன். ஆனால் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சான்றிதழை காலைவழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டி வழங்கியபோது அவனது முகத்தை பார்க்க வேண்டுமே அவ்வளவு பிரகாசம். இசைக் கல்லூரியில் சேர்ந்து இந்த திறமையை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் நீ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்று எடுத்துக்கூறி அவனது கவனத்தை படிப்பின் பக்கமும் கொஞ்சம் திருப்ப முடிந்தது.
இந்த சம்பவங்களால் உந்தப் பட்டு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான எந்தப் போட்டியாக இருந்தாலும் மாணவர்களை தயார்செய்து அனுப்புவதை எங்கள் பள்ளியில் வழக்கமாக கொண்டுள்ளோம். மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை அடையாளம் காணுவது தானே பள்ளிகளின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.
எந்த திறமையும் வேண்டாம் படிப்புத் திறமை மட்டும் போதும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் வேண்டுமானால் அறியாமையால் நினைக்கலாம், பள்ளிகள் அந்தமாதிரி பொறுப்பில்லாமல் எண்ணுதலாகாது. இந்த மாதிரியான ஆட்டுமந்தை சிந்தனைகளின் விளைவுகள் என்ன தெரியுமா?
“இஞ்சினியரிங் தான் பெஸ்ட், கை நிறைய சம்பளம், எல்லோரும் ஓடுங்க ஓடுங்க” என்று கூறியதன் விளைவு, பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை விட தமிழ் நாட்டில் உள்ள இஞ்சினியரிங் இடங்கள் அதிகமாக உள்ளன. அதாவது எல்லா மாணவர்களும் இஞ்சினியரிங் சேர முடிவெடுத்தாலும் இடங்கள் மீந்து போகும்.
இப்போ என்னாச்சு? ஆள் கிடைக்காமல் “அதெல்லாம் முடியாது நான் காலேஜ் ஆரம்பிச்சுட்டேன் நீ வந்து படிச்சே ஆகணும்” என்று கையை பிடித்து இழுக்கிறார்கள்.
அப்புறம் 2002 க்குப் பிறகு ஆசிரியர்கள் ஏராளமாக பணிநியமனம் செய்யப் பட்டனர். உடனே,”ஏம்பா, நல்ல சம்பளம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என ஏராளமான லீவு எளிதான(?!!) வேலை எல்லோரும் வந்து பி.எட் சேருங்கப்பா” என்று ஈர்க்கப்பட்டனர். விளைவு, மாவட்டத்திற்கு 10 பி.எட் கல்லூரிகள் ஆரம்பிக்கப் பட்டன. நானெல்லாம் டி.ஆர்.பி தேர்வு எழுதியபோது ஒரு லட்சம் பேர் கூட தேர்வு எழுதவில்லை. ஆனால் இப்போது பனிரெண்டு லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
அப்புறம் இந்த உயர் நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டராகத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். உங்க பிள்ளைகளை டாக்டராகி காட்டுகிறோம் என்று கோழிப்பண்ணைப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகின.(இஞ்சினியரிங் மோகத்தின் போதே ஆரம்பித்து விட்டது) தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிறைய தொடங்கப் பட்டன. நீட்டுக்கு முந்தைய ஆண்டு நான் கேள்விப் பட்டவரையில் நன்கொடை ஐம்பது லட்சம், அப்புறம் வருடாந்திரம் 10 லட்சம் கட்டணம். என்று ஒரு பையன் டாக்டராக ஒரு கோடி சொச்சம் ஆகிவிடுகிறது.
அப்படின்னா நீட் வந்த பிறகு நிலமை மாறிப் போச்சா? அப்படியெல்லாம் இல்லை, நாங்க மட்டும் என்ன தக்காளித் தொக்கா, எங்களுக்கு ஒரு பத்து லட்சத்தை வெட்டிட்டு காலேஜ் க்கு கட்டுங்க என்று கோச்சிங் சென்டர் காரர்கள் குறுக்கே நிற்கிறார்கள்.
இந்த நீட் எக்ஸாமுக்காக சிலபசை மாத்துறேன்னு இவங்க பர்னிச்சர உடைச்சதுல அரசுப் பள்ளிகளில் கணிதப் பிரிவே காலியாகிக் கிடக்கிறது. புது சிலபஸ் ஆரம்பித்த ஆண்டு அட்மிஷனில் அமர்ந்திருந்த போது ஒரு பையன் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு கேட்டான். சரி என்று அட்மிஷன் போட்டு புத்தகம் பெற்றுக் கொள்ள அனுப்பி வைத்தோம். அங்கே உயிர்-தாவரவியல் புத்தகத்தை ஒரு மினி தலையணை சைசில் கொடுக்கவே பயல் ஆடிப் போய்விட்டான். புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்ப எத்தனிக்கையில் ”எப்பா நில்லுப்பா இன்னும் இருக்கு” என்று உயிர்-விலங்கியல் என்கிற அடுத்த தலையணையை எடுத்ததில் பையன் மூர்ச்சையாகிவிட்டான். மூர்ச்சை தெளிந்தவுடன் அவன் கேட்ட கேள்வி, “வாட் இஸ் த புரசிஜர் ஆஃப் சேஞ்ச் த குருப் சார்?”
கல்வி என்பது நம்மை போன்ற பின்தங்கிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கான ஒரு தகுதி என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறு இல்லை. ஆனால் ஒட்டு மொத்த நாட்டிலும் பொறியியல், மருத்துவம் இவற்றைச் சுற்றியே பணிவாய்ப்புகள் இருப்பதாக ஒரு தவறான மாயையை உருவாக்கி வைத்து இருப்பது தான் தவறு.
மற்ற படிப்புகள் மற்றும் திறமைகள் எதற்கும் மதிப்பில்லை. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகள் விருப்பங்கள் எதற்கும் இங்கே இடம் இல்லை.
“எல்லோருமே பெரிய திறமைசாலிகள் தான், ஆனாலும் ஒரு மீனிடம் மரம் ஏற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை வைத்தோமானால் அந்த மீன் தன் வாழ்நாள் எல்லாம் தன்னை ஒரு முட்டாள் என்றே எண்ணிக் கொள்ளும்” என்று அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறி உள்ளார்.
ஆனால் இங்கே நாம் பல “மெஸ்ஸி“க்களின் கால்களை ஒடித்து வகுப்பறைக்குள் உட்காரவைத்திருக்கிறோம். பல ரவிவர்மாக்களின் வண்ணத் தூரிகைகளை பிடுங்கி எறிந்துவிட்டு பேனாக்களை திணித்து இருக்கிறோம்.
அவர்கள் எதுவாக வேண்டுமானால் ஆகட்டும் அதற்கு குறைந்தபட்சத் தகுதி என்று ஒரு வகுப்பு வேண்டாமா? அதில் அவர்களின் திறமைக்கு ஒரு மதிப்பீடு வேண்டாமா? என்று கேட்கலாம்.
மாணவர்களின் பாடத்திறமையை மதிப்பீடு நிச்சயமாக செய்ய வேண்டும் தான். ஆனால் தற்போது இருக்கும் மதிப்பீட்டு முறை மாணவர்களின் உண்மையான நிலையை காண்பிக்கிறதா?
90 மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் உண்மையிலேயே பெரிய வேறுபாடுகள் இருப்பதாக எண்ணுகிறீர்களா?
30 க்கும் 35 க்கும் பெரிய வேறுபாடு உண்டா? 35 எடுத்தவன் அடுத்த வகுப்பு சேர்க்கைக்கும், 30 எடுத்தவனோ திருப்பூருக்கோ, சென்னைக்கோ வேலைக்குச் செல்வது நியாயமா?
எல்லோருக்கும் கிரேடு முறையில் மதிப்பீடுகளை வழங்குவதில் என்ன தடை இருக்க முடியும்.
"ஏம்பா டீச்சர்ஸ் திறமையை மதிப்பீடு செய்யவும்கூட எங்ககிட்ட இருக்கிற டூல் பொதுத்தேர்வு ஒண்ணுதாம்பா தயவு செஞ்சி அந்த ஃப்ரனிச்சர மட்டும் ஒடைச்சிடாதே!!'

"அப்போ சின்ன கிளாஸ் டீச்சர்ஸ்!!"

"அதுக்குதாம்பா 5 வதுக்கும் 8 வதுக்கும் பப்ளிக் பரீச்ச வருது!!"

"என்ன ஒரு புத்திசாலித்தனம்?!! அப்ப நல்லாசிரியர் விருது வாங்குன எல்லாரும் நல்லாசிரியர் என்று நம்பிகிட்டு இருக்குற குரூப்பா நீங்க?!"

ஆசிரியர்களின் திறமையை மதிப்பீடு செய்யவும் இந்த தேர்வுதான் அளவுகோல் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்.

நூறுவிழுக்காடு தேர்ச்சிக்கும் Teaching Attitude க்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பது தான் நிதர்சனம்
நமது மனது எல்லாவற்றையும் அளந்து ஒரு “அளவை“(Quatity) நிர்ணயித்து பழகிவிட்டது. எனவே எண்சார்ந்த மதிப்பீடுகள் நம்மிடையை பிரபலமாகி விட்டது. மதிப்பெண் மற்றும் தரம் இதையெல்லாம் நீக்கிவிட்டால் தனியார் பள்ளிகள் எவ்வாறு தங்கள் பள்ளிகளின் தரத்தை “அளவிட்டு“  விளம்பரம் செய்து சந்தைப் படுத்த இயலும்?
அப்புறம் “உங்கள் பிள்ளை சிறப்பாக படிக்கிறான்“ என்று கூறினால் நமக்கு திருப்தி இல்லை. யாரைவிடவெல்லாம் நம்ம புள்ள திறமையா இருக்கிறான். யாரெல்லாம் புள்ளய விட மேல இருக்காங்க, யாரெல்லாம் கீழே இருக்காங்க என்கிற ஒரு அடுக்கு நிலை ஏற்படுத்திக் கொண்டு மகிழ்வது என்பது பழக்கமாகிப் போனது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரம அடுக்கைப் பழகிக்கொண்டு இருகிக் கிடக்கும் நமது ஆழ்மன உளவியலின் வெளிப்பாடாக இருக்குமோ?
கொரானா பாதித்து இருக்கும் இந்த நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையில் இருக்கும் கிரேடு முறை மதிப்பீட்டை பத்தாம் வகுப்புக்கும் பள்ளித் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும். பொதுத் தேர்வு என்கிற ஒன்றெல்லாம் வேண்டாம். மதிப்பீட்டை பள்ளி ஆசிரியர்களே செய்யட்டுமே.
இனிவரும் காலங்களில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் என்ற மூன்று மாதங்களையும் பாடம் நடத்துவதற்கு நீட்டித்துக் கொடுத்தால் பாடப்புத்தகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் நின்று நிதானமாக நடத்திட இயலும். வகுப்பறைகளுக்கு வண்ணம் சேர்க்கலாமே.
“ஏம்பா,  நீங்கல்லாம் பத்தாம் வகுப்பு வந்துட்டீங்க இன்னிலேருந்து  உங்களுக்கு பி.இ.டி பீரியட் கிடையாது, நீதி போதனை பீரியட் கிடையாது, டிராயிங் பீரியட் கிடையாது, ஒன்னுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு மேல அடிக்க கூடாது, மதியம் பத்து நிமிடம் சாப்பிட்டு விட்டு டெஸ்ட் எழுதப் போயிடணும் சரியா?” என்கிற நெருக்கடிகள் இல்லாத நெகிழ்வுத் தன்மை நிறைந்த வகுப்பறைகளை உருவாக்க வேண்டுமானால் நமது மதிப்பீட்டு முறைகள் மாறியாக வேண்டும்.
குரங்குகளைப் பறக்கவும் மீன்களை நீந்தவும் கற்றுத்தரும் வகுப்பறைகள் இனியும் வேண்டாமே!!
இத்துடன் இந்தக் குறுந்தொடர் நிறைவுற்றது நன்றி.

பின்குறிப்பு: இந்த கட்டுரைகள் அனைத்தும் எனது அனுபவங்களையும் எண்ணவோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. பெரிய பெரிய நூல்களை எல்லாம் ரெபரென்ஸ் செய்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை அன்று. இதில் கருத்தியல் ரீதியான முரண்களோ தவறுகளோ இருந்தால் நண்பர்கள் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...