Saturday, May 9, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும்பூதம் -2



     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் பண்ணும் களேபரங்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பொதுத்தேர்வு என்னும் பெரும்போருக்கு மாணவர்களை தயார்செய்யும் ஆசிரியர்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிர்வாகம் பண்ணும் அலப்பறைகளை பார்க்கலாம்.

முதலில் ஒரு கணக்கு போடுவோம்.

”ஜூன் முதல் டிசம்பர் வரையில் மொத்தம் எத்தனை மாதங்கள்?”
”7”
”காலாண்டு பரிட்சை- செப்டம்பர் மாதம் போச்சு, அப்புறம் அரையாண்டு பரிட்சை – டிசம்பர் மாதம் போச்சு அப்புறம் இடைத்தேர்வு மற்றும் வடைத்தேர்வு அதுக்கு ஒர அரை மாதம் போச்சா? இப்போ ஏழில் மீதி என்ன?”
”நான்கரை மாதங்கள்”
”சோ, இந்த நான்கரை மாதங்களுக்குள் நூற்றைம்பது பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் புத்தகங்களை முடிக்கவேண்டும்”
”ஏய் நிறுத்து, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் என்னாச்சு?”
“ஏம்பா, அரையாண்டுத் தேர்வுக்கே முழு சிலபஸ்லயும் கேள்வித்தாள் அமையும்னு தெரியாதா? அதனால நவம்பரில் பாடங்களை முடிச்சாத்தான் அரையாண்டுத் தேர்வுக்கு முழு புத்தகத்தையும் படித்து தேர்வு எழுத மாணவர்களை தயார் செய்யலாம்”
“பாடங்களை முடிக்க டைம் இருக்குமா?”
”எங்கங்க டைம் இருக்கு, எல்லாம் சனிக்கிழமை, காலை மாலை வகுப்புகள் மற்றும் விளையாட்டு பீரியட், நீதி போதனை பீரியட் எல்லாத்தையும் கடன் வாங்கித்தான் முடிக்கணும்”
“அடப்பாவிகளா அந்தப் பசங்கள விளையாடக்கூட விடமாட்டீங்களா?”
”என்ன பண்றது பப்ளிக் எக்சாம்ல,”
அப்புறம் இந்த மெல்லக் கற்போருக்கு அனா ஆவன்னாவில் இருந்து ஆரம்பிக்கணும். நல்லா படிக்கிற பசங்களோட அறிவுப் பசிக்கும் தீனி போடணும். நான்கரை மாதத்தில் சிலபஸ் முடிக்க மூச்சு வாங்க ஓடியாகணும்.

இங்க ஒரு முக்கியமான விஷயம். இந்த விளையாட்டுத்துறை, நீதித்துறையை பிரிச்சி மேயுறதுலதான் கட்டப்பஞ்சாயத்தெல்லாம் நடக்கும். அப்புறம் யாராவது விடுப்பு எடுத்தால் அந்த பீரியடை யார் எடுப்பது என்று ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும். அடிச்சி புடிச்சி ஓடினா அங்க அந்த சார் ஏற்கனவே தொலைபேசித் தகவல் மூலமாக வேலை கொடுத்து வைத்திருப்பார்.

விதைநேர்த்தி செய்த விதைகளை மட்டுமே பத்தாம் வகுப்பில் வைத்திருக்கும் தனியார் பள்ளிகளையும் எல்லாவித மாணவர்களையும் (சமயங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் வகுப்பு பாஸ்போட்டு விரட்டப்பட்டவர்களையும்) வைத்திருக்கும் அரசுப் பள்ளிகளையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட்டு தேர்ச்சி விகிதங்களை வெகுஜன ஊடகங்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது தான் பிரச்சினை தொடங்கியது.

”நூறுசதவீத ரிசல்ட்டை உருவாக்குவது எப்படி?” என்கிற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சியெல்லாம் 2004க்குப் பிறகு வைக்க ஆரம்பித்தார்கள்.
கருத்தாளராக வேறொரு மாவட்டத்தில் இருந்து “சென்டம்“ என்கிற அடைமொழியோடு பெயர் கொண்ட ஒருவர் பேச வந்திருந்தார். ப்ளு ப்ரிண்ட் படி தேர்ச்சிக்குத் தேவையான 35 மதிப்பெண்களுக்கு தேவையான பகுதிகள் இவைதான். நான் இவற்றை ஜூனிலேயே முடித்து விடுவேன். அப்புறம் எல்லா மாதங்களும் கோச்சிங் தான் என்று அவர் கூறி முடித்த போது கைத்தட்டலில் கட்டிடமே அதிர்ந்தது. அவருடைய வகுப்பில் இருக்கும் மெல்லக் கற்போர் தவிர்த்த ஏனைய மாணவர்களை நினைத்து கவலை கொண்டேன்.

இந்த பயிற்சிகளில் நான் கற்றுக் கொண்ட முக்கிய வித்தைகளில் ஒன்று ”மல்டிபில் சாய்ஸ் புக்பேக் கொஸ்டின்ஸ காரணகாரியமெல்லாம் நோண்டாம அப்படியே ஆன்சர மனப்பாடம் செய்ய வைங்க போதும்”
பாடம் பாடத்திட்டம் எல்லாம் படித்து உணர்வதற்கு அல்ல, தேர்வெழுதி அடுத்த வகுப்பை அடையத்தான் என்கிற விஷயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆழ்மனதில் பதிந்து போனது.

ஒண்ணுமே புரியாம மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைவதற்கும் பிட் அடித்து தேர்ச்சி அடைவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. ரெண்டு பயலுக்கும் பாடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.

இப்போ சிலபஸ் மாறிப் போனதில் கத்துக்கிட்ட மொத்த வித்தைகளும் வீணாகப் போய்விட்டன. (நீட் என்கிற செறுப்புக்குத் தக்கவாறு கால்களை வெட்டிக்கொண்ட கதையை தனிப் பதிவாக எழுதுகிறேன்)

சிலபஸ் அருமையாத்தான் இருக்கு. புத்தகம் சிறப்போ சிறப்பு க்யு.ஆர் கோட் மூலமா வீடியோ லிங்க் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்காங்க, ஆனா அதையெல்லாம் என்ஜாய் பண்ணி நடத்த நேரம் இருக்கான்னா இல்ல என்பது தான் சோகமான நிஜம்.

ஒரு முறை பாரதிதாசன் பல்கலைக்கழக கலைநிகழ்ச்சிகள் போட்டியில் நடனப் போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மேக்கப் போடு மேடை ஏறிய நேரத்தில் ”ஏப்பா குழு நடனம் என்றால் குறைந்தபட்சம் நான்கு பேராவது ஆடணுமேப்பா” என்று தடுக்கப் பாய்ந்தார்கள். உடனே வேடிக்கைப் பார்க்க வந்த சக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் நீட்டாக இன் பண்ணிக்கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு மேடை ஏறினார்கள். முன்னவர்கள் அழகாக பாடலுக்கு நடனம் ஆடினார்கள். இவர்களோ மேடையின் குறுக்கும் நெடுக்குமாக லெப்ட் ரைட் போட்டபடி நடந்து போனார்கள். கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

இப்போ ஏன் இந்தக் கதை? இந்த வினாத்தாள் மாதிரி என்ன என்பதை கொரோனாவுக்கு முந்தைய வாரம் வரையிலும் தொடர்ந்து மாற்றியவண்ணமே உள்ளனர். ப்ளுபிரிண்ட் கிடையாது சரி ஓகே. ஆனால் என்ன மாதிரியான வினாவகை, எவ்வளவு மதிப்பெண் பகிர்மானம் என்று எதையுமே சரியாக இறுதி செய்யவில்லை. ஒவ்வொரு முறை வினாத்தாளை பார்க்கும் போதும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது. இருந்தாலும் அந்த ரெண்டு பசங்க லெப்ட் ரைட் போட்டு நடந்து சமாளிச்ச மாதிரி நமது ஆசிரியர்கள் சமாளிக்கத்தான் வேணும்.

சுதந்திரப் போராட்ட கால அவஸ்தைகளைவிட இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுதந்திரம் படும் பாடு இருக்கே அதை சொல்லி மாளாது. அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்லும்போது ஆட்டோவில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் செல்லும் காட்சியைக் காணும் போதெல்லாம், ’வீட்டில் இருக்கும் பசங்களுக்கே இந்த நெலமன்னா விடுதியில் இருக்கும் பசங்க ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகக் கூட நேரம் இருக்குமா’ என்று யோசிப்பேன்.

கல்யாணம் காதுகுத்து என்று எந்த விழாவும் கிடையாது, டிவி, சினிமா மற்றும் பாடல் என எந்த ஒரு கேளிக்கையும் கிடையாது. குமரப் பருவத் துவக்கத்தில் கொண்டாட்டமான வண்ண வண்ண சிந்தனைகள் விரியும் வயதில் பொதுத்தேர்வு என்கிற “துறவு வாழ்க்கை” மேற்கொள்ள வற்புறுத்தப் படுகிறார்கள்.

ஒரு முறை எனது மாணவன் ஒருவன் பையில் இருந்து ஹான்ஸ் பொட்டலம் ஒன்றை எடுத்தேன். அப்புறம் தனியே அழைத்து விசாரித்தபோது, “சார் போன வருசம் பத்தாவது “---“பள்ளியில் படிச்சப்ப நைட் ஸ்டடி வைப்பாங்க சார், நான் அடிக்கடி தூங்கி விழுந்து அடி வாங்குவேன். அப்போது தான் மத்த பசங்கள கேட்ட போது ஹான்ஸ் போட்டா தூக்கம் வராது என்று சொன்னாங்க சார். அப்போ பழகியது சார்” என்று கூறினான்.

இந்த வலுக்கட்டாய நைட் ஸ்டடியின் பக்க விளைவுகள் மைய விளைவுகள் என்ன என்று தனியார் பள்ளி விடுதியில் தங்கி பணிபுரியும் ஆசிரியர்களைக் கேட்டால் பல புத்தகங்கள் போடும் அளவுக்கு கதை தேறும்.

பப்ளிக் பரிட்சை பற்றிய பில்டப்புகளில் ஆகச் சிறந்த கேவலமான ஒன்று என்றால் பெற்றோருக்கு பாதபூஜை என்று இவர்கள் அடிக்கும் கூத்து தான். கிருஸ்துவ பள்ளிகளிலும் இது சற்று வேறு வடிவில் இருக்கும். கேரளத்து மாந்திரீகர்களிடம் மந்திரிச்ச தாயத்து வாங்கி கட்டாதது தான் பாக்கி. மற்ற எல்லா மந்திர தந்திர கூத்துகளும் பொதுத்தேர்வை மையப்படுத்தி அரங்கேற்றுகிறார்கள்.

இந்த விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்திய உளவியல் ரீதியான தாக்கத்தில் அவர்கள் வீடே பரீட்சை முடியும் வரையில் அரவிந்தர் ஆசிரமம் போல ஆகிவிடும்.

இவ்வளவு கூத்து அடிக்கிற நேரத்தில் பாடத்தை மாணவர்கள் என்ஜாய் பண்ணி புரிந்து கொள்ளும் அளவுக்கு நடத்திவிட்டால் அவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு மனப்பாடம் செய்ய வேண்டியது இல்லை.. புரிந்த விஷயங்களை மீட்டுருவாக்கம் செய்து விடைத்தாளில் எழுத பெரிதாக ஒன்றும் மெனக்கெட தேவை இல்லை என்கிற உண்மை இந்த பரபரப்புகளுக்கு இடையில் ஏறாது.

பத்தாம் வகுப்புக்கென கைக்கொண்ட தேர்வு மையக் கற்பித்தலை ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் அமல் படுத்தி தொலைப்பதால் அடிப்படை மிகவும் பலகீனமாகிப் போகிறது.

பொதுத்தேர்வுகள் இல்லாத வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வாய்ப்பு பெற்ற ஆசிரியர்கள் பாக்கியவான்கள். அவர்களின் அனைத்து விதமான கற்பித்தல் சோதனைகளையும் பரிசோதித்து கற்றல் கற்பித்தலை இன்பமயமாக மாற்றிவிடுவார்கள்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...