Sunday, May 10, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும் பூதம் -3




பொதுத்தேர்வு என்ற உடன் நமக்கு ஞாபகம் வருவது சென்டம் ரிசல்ட் தானே?!
இந்த சென்டம் ரிசல்ட் நமது அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் பள்ளிகளையும் எப்படி சுழற்றி சுழற்றி அடிக்கிறது தெரியுமா??
தேர்வு முடிவுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டங்களில் சென்டம் ரிசல்ட் வாங்கிய ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் அவ்வளவு பாராட்டும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப் படுகிறது.
இப்போதெல்லாம் எந்தப் பள்ளியிலும் தேர்ச்சி 90 விழுக்காட்டிற்கு கீழே போவது இல்லை. அதனால் 90 விழுக்காடு என்பது மிகவும் வருந்தத் தக்க தேர்ச்சி விழுக்காடு ஆகும். சென்ற ஆண்டு எங்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 97 விழுக்காடு (அதற்கு முந்தைய ஆண்டு 100). கலந்தாய்வுக் கூட்டத்தில் அருகில் அமர்ந்திருந்தவர்களை விசாரித்தால் லெஃப்ட்டில் இருப்பவர் 100 ரைட்டில் இருப்பவர் 100 முன்னால் இருப்பவர் 100 பின்னால் இருப்பவரும் 100. அதற்கு பின்னால் இருப்பவரும் கூட நானும் 100 தாங்க என்று வான்டடா வந்து வண்டியில் ஏறிக் கொண்டார். எங்கே யாராவது 150 என்று கூறிவிடுவார்களோ என்று பதட்டத்தோடே இருந்தேன்.
2002ல் நான் உட்கோட்டைப் பள்ளியில் பணியேற்ற போது பள்ளியானது 72 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருந்தது. அதற்கே ஊர்கூடி பாராட்டித் தள்ளி விட்டார்கள். அப்போதெல்லாம் 50 விழுக்காடு பெரிய தேர்ச்சி தான். வருடங்கள் ஆக ஆக பெரும்பான்மை  தேர்ச்சி விழுக்காடானது மெல்ல மெல்ல மேலே ஏறி (உபயம் “சென்டம்“ ரிசல்ட்டை உருவாக்குவது எப்படி என்கிற பயிற்சிகள்) 90 க்கு மேல் நிலை கொண்டு விட்டது.
“என்னப்பா சென்டம் ரிசல்ட் வாங்குவது நல்ல விஷயம் தானே?” என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இதற்குப் பின்னால் ஒவ்வொரு பள்ளியும் பண்ணக்கூடிய பிரம்ம பிரயத்தனம் தான் கொடுமை.
நான் பி.எட் முடித்த உடன் பணியாற்றிய தனியார் பள்ளியில் அனைத்து வகுப்புகளும் ஒரே பிரிவு தான். ஆனால் பத்தாம் வகுப்பில் “பி“ பிரிவு இருந்தது. அதற்கு நான்தான் வகுப்பாசிரியர். எடுத்த உடனேயே பத்தாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரா என்று எனக்கோ பெருமை புடிபட வில்லை. பிறகு தான் தெரிந்தது, ஒன்பது வருடங்களாக கட்டணம் பெற்றுக் கொண்டு விட்டு, ’உங்க பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான், அடுத்த வருடம் பத்தாவது வேறு, அவன பாஸ் போட்டா எங்கள் பள்ளி ரிசல்ட் பாதிக்கும், அவன ஒன்பதாவது பெயில் போட்டு இங்கே படிக்க வைக்கிறோம் அல்லது பாஸ் போட்டு கொடுக்கிறோம் வேறு எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று பெற்றோரிடம் டீல் பேசுவார்கள். அந்த மாதிரி டி.சி வாங்கி வந்த சோ கால்டு மெல்லக் கற்கும் மாணவர்களைக் கொண்ட வகுப்பு தான் அது.
ஆனால் அந்த வகுப்பில் உள்ளபடியே தேர்ச்சி பெற இயலாதவர்கள் என்கிற நிலையில் இருந்தவர்கள் ஒரு நான்கு பேர் தான். என்னுடைய கணிதப் பாடத்தில் இரண்டு பேரைத் தவிர எல்லோரும் தேறி விட்டனர். ஒரு பையன் 440 மதிப்பெண் எடுத்திருந்தான். (அவனும் தேற மாட்டான் என்று விரட்டப் பட்டவனே) அவர்களை மனமுவந்து சேர்த்துக் கொண்ட பள்ளியை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஒரு விஷயம், அந்தப் பள்ளியில் அவர்கள் படித்தது அன்அஃபிஷியல். ஆமாம், அவர்கள் அனைவரும் பிரைவேட்டாக விண்ணப்பம் செய்து தனித்தேர்வராகத்தான் தேர்வினை எதிர் கொண்டனர். (நாங்க மட்டும் எங்க பள்ளி ரிசல்டை விட்டுக் கொடுப்போமா?)
இந்த சென்டம் மோகத்தினால் சில பள்ளிகளில் (அரசுப் பள்ளிகளும் கூட விதிவிலக்கல்ல) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே மெல்லக் கற்போர் கட்டம் கட்டப் படுவார்கள். அவர்கள் இடைநிறுத்தம் செய்விக்கப்படுவார்கள் அல்லது ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சிப் பெறத் தவறுவார்கள்(இவர்கள் பெரும்பாலும் வெட்கப் பட்டுக் கொண்டு அவர்களே நின்று விடுவார்கள்). ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை சறுக்குப் பலகைப் பயணம் போல வந்தவர்களை ஒன்பதாம் வகுப்பில் வடிகட்டி பலபேர் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பாதை மாறிப்போக இந்த சென்டம் மோகம் சிறிதளவாவது காரணமாக அமைந்து உள்ளது.
ரிசல்ட் பற்றியெல்லாம் பெரிதாக கேள்விகள் கேட்கப்படாத 90களிலேயே எங்க ஊர் பள்ளியில் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனை மூன்று பெயிலாக்கினார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தொடர்ந்து படித்து பத்தாம் வகுப்பை ஒரே தடவையில் பாஸ் செய்து காட்டினான். ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சியில் சாதிய வன்ம அரசியல் கூட இருந்து இருகிறது.
’இவன எல்லாம் பாஸ் போட்டு இருக்கீங்களே அப்புறம் ரிசல்ட் எப்படி வரும்?’ என்று நான் கோபித்துக் கொண்ட பசங்க கூட பத்தாம் வகுப்பு வந்து பாஸ் பண்ணி இருக்கிறார்கள். அதனால் ஒன்பதாம் வகுப்பிலேயே ஒருத்தனை பத்தாம் வகுப்பில் தேறுவானா தேறமாட்டானா என்று கணிப்பது முறையல்ல. எனது அனுபவத்தில் கண்டவரை, ஒன்பதாவது வரை ஒரு மாதிரியாக திரிந்த பசங்க கூட பத்தாம் வகுப்பில் வந்து முற்றிலும் பொறுப்பாக மாறி இருக்கிறார்கள்.
அதேபோல பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவன். அவனது கணிதப்பாட மதிப்பெண் 98. குமரப்பருவ குறும்புகளால் படிப்பில் கவனம் சிதைந்து (எவ்வளவு அறிவுரை கூறியும் எடுபடவில்லை) கணிதப் பாடத்திலேயே பெயிலாகி இருக்கிறான்.
மற்றொரு மாணவன் தந்தை இல்லாதவன். சிறுவயதிலேயே கண்டிக்க ஆள் இல்லாததால் சென்னைக்கு சென்று பல வேலைகளை செய்து, பிறகு ஒரு மூன்று ஆண்டுகள் கழித்து எப்படியோ ஞானோதயம் பெற்று ப்ரைவேட்டாக பத்தாம் வகுப்பு எழுதி அனைத்துப் பாடங்களிலும் சிங்கிள் அட்டெம்ப்ட்டில் தேர்ச்சி பெறுகிறான். பதினோறாம் வகுப்பு சேர்க்கைக்கு வருகிறான். கணிதப் பிரிவு கேட்டதால் என்னிடம் அனுப்பினார்கள். அவன் தோற்றம் அப்புறம் ப்ரைவேட் மதிப்பெண் பட்டியல் இதெல்லாம் பார்த்து அவனை நிராகரிக்கும் எண்ணத்தோடு சில கேள்விகள் கேட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லவே முயலவில்லை. ”பயப்படாம என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் சார், நீங்க என்ன சொல்றீங்களோ அதுப்படி கேட்டு நான் பாஸ் பண்ணிக் காட்டுறேன்” என்று கூறிய நம்பிக்கையில் சேர்த்துக் கொண்டேன். வகுப்பில் இருந்து மற்ற மாணவர்களை பின்னுக்குத் தள்ளி வகுப்பிலேயே இரண்டாம் மதிப்பெண் பெற்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்.
அப்புறம் இந்த மீத்திறன் பெற்றக் குழந்தைகள் சென்டமோ அல்லது வகுப்பில் முதல் மதிப்பெண்ணோ பெறட்டும் தவறில்லை. ஆனால் அது முடியாமல் போனாலோ அல்லது சற்று குறைந்து விட்டாலோ மிகப் பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
நான் பனிரெண்டாம் வகுப்பு கணக்குப் பாடம் எடுத்த போது எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி வேதியியல் பாடத்தில் மட்டும் பின் தங்குவார். அதனால் அந்தப் பரீட்சையின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று நாங்கள் கேட்காமலேயே காரணம் கூறுவார். நாட்கள் செல்லச் செல்ல வேதியியல் தேர்வு என்றாலே காலையில் இருந்தே தான் உடல் நிலை சரியில்லாமல் இருப்பது போல காண்பிக்க ஆரம்பித்து விடுவார். ஒரு முறை கடைசி திருப்புதல் தேர்வின் போது அவங்க அப்பாவோட சுகர் மாத்திரையை விழுங்கி விட்டார். உடம்பு தொப்பளாக நனைந்து மயங்கி விழுந்து பெரிய ஆர்ப்பாட்டமாகிப் போய் விட்டது.
     அந்த ஆண்டு கணிதப்பாட வினாத்தாள் மெல்லக் கற்போர் தேர்ச்சி பெற எளிதாகவும் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு கடினமாகவும் இருந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்து கூறும் போது, “சார் கொஸ்டின் பேப்பர் பாத்த உடனே மாடியில் இருந்து குதித்து விடலாமா என்று நினைத்தேன் சார்” என்று ஒரு குண்டைப் போட்டார். (அந்த ஆண்டு ஒரு மாணவி குதித்து விட்டார்)
இதேபோல பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் எடுத்த போது வகுப்பில் இரண்டு இணை பிரியா நண்பர்கள் இருந்தார்கள். முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் தங்கள் இருவருக்குள் இருக்க வேண்டும் என ரொம்ப வெறித்தனமாக இருப்பார்கள். ஒரு முறை ஆங்கிலத்தில் ஒருவனுக்கு நான்கு மதிப்பெண் பின்தங்கி மூன்றாமிடம் சென்று விட்டான். உடனே சிவப்பு பேனாவால் ஆங்காங்கே இரண்டு இரண்டு மதிப்பெண்களாக போட்டு தனது நண்பனுக்கு நான்கு மதிப்பெண் டோட்டலில் குறைகிறது என்று வந்தான். மீத்திற மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்தவரை எங்கெங்கு தவறு செய்தார்கள் ஏன் குறைந்து போனது என்பதை குறித்துக் கொள்வது எனது வழக்கம். குறைய வாய்ப்பே இல்லை. எனவே அவன் மீது சந்தேகம் கொண்டு ஆய்வு செய்ததில் பயல் மாட்டிக் கொண்டான். ஒரு கோபப் பார்வையோடு அமர வைத்து விட்டேன்.
மாணவர்களின் மதிப்பீட்டு முறையில் மாற்றத்தைப் புகுத்த ஏ.பி.எல் மெத்தட் கொண்டு வந்து கிரேடு சிஸ்டத்தை அறிமுகப் படுத்தினார்கள். மதிப்பெண் டாக்குமெண்டேஷன் சற்று வேலை வாங்கக் கூடியதாக இருந்தாலும் மதிப்பெண் ஏற்றத் தாழ்வை ஓரளவு ஒழிக்க முடிந்தது. ஆனாலும் கூட பெரும்பாலான ஆசிரியர்களுக்கும் சரி பெற்றோருக்கும்  சரி மதிப்பெண் என்கிற அந்த “மயக்கும் மாய எண்களை“ கை விட துளி கூட விருப்பம் இல்லை. அந்த மதிப்பெண், ரேங்க் எல்லாம் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆகவே தான் ஒன்பதாம் வகுப்பு வரையில் ஏ.பி.எல் பத்தாம் வகுப்பில் வழக்கம் போல மதிப்பெண் முறையே உள்ளது. பத்தாம் வகுப்பில் கிரேடு முறையை புகுத்த அரசும் விரும்ப வில்லை எனவே தெரிகிறது. ஆகவே தான் ஏபிஎல் மெத்தட் இருந்தாலும் கூட பக்கத்திலேயே மதிப்பெண்களை குறிக்கும் வழக்கத்தை தனியார் பள்ளிகள் செய்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் பள்ளி முகப்பில் பருவத்தேர்வுகளில் முதல் இடம் பெறுவோரின் புகைப்படங்களை பேனரில் போட்டு ஊக்குவிக்கின்றனர். அங்கே இடம் பெறாத தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோர் அழுத்தத்தை தருகிறார்கள்.
“IT IS NOT THE APTITUDE BUT ATTITUDE THAT DETERMINES THE ALTITUDE” திறமையைவிட மனப்பான்மையே நமது உயரங்களை தீர்மானிக்க அதி முக்கியமாகும்.
எனது அனுபவத்தில் மதிப்பெண் பட்டியலில் உள்ள எண்களுக்கும் மாணவனின் வாழ்க்கையில் பெறும் ஏற்றத்திற்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
“யோவ், என்னதான்யா சொல்ல வர்ர?” என்று நீங்கள் சீறுவது புரிகிறது. அத அடுத்த அத்தியாயத்தில் சொல்லி முடிக்கிறேன்.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...