Saturday, May 2, 2020

கொஞ்சம் கடலை போடலாமா?



வேர்க்கடலை, நிலக்கடலை மற்றும் மல்லாட்ட இந்த மாதிரி எத்தனை பேர்தான் இந்தக் கடலைக்கு இருக்குன்னே தெரியல. எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு பால்ய வயதிலிருந்தே மிகவும் பிடித்தமான “ஆர்கானிக்“ தின்பண்டம்னா அது இந்தக் கடலை தான்.
எனது துணைவியார் ’உங்களுக்கு ரொம்ப கொழுப்புத்தான்’ என்று செல்லமாக கடிந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கெல்லாம் காரணம் நான் சாப்பிட்டக் கடல தான் என மெல்லமாக நினைத்துக் கொள்வேன். சின்ன வயசில் இருந்து எத்தனை வெரைட்டி எத்தன விதமாக சாப்பிட்டுத் தள்ளியிருக்கேன். அதை எல்லாம் அப்படியே செக்கில் ஆட்டி இருந்தால் கூட ஒரு 100 லிட்டர் கடலை எண்ணை தேறும்.
எங்க மணல் கொள்ளையில் கல்ல போடுவாங்க. நிலத்தில் வெதக் கல்ல போடுவதற்கு மில்லில் எல்லாம் கொடுத்து கல்லய அடிக்கப் படாது. கல்லயோடு நுனி மொக்கு செதயக் கூடாதில்ல. அதனால கையாலயேதான் ஒடைக்கணும். அப்போவெல்லாம் ஒரு கூடை கல்ல ஒடைக்க நாலணா அல்லது ஐம்பது பைசா கூலி. நிறய உடைக்கணும்னு சிலபேறு லாவகமா ரெண்டு கையாலயும் கல்லய எடுத்து தரையில் மோதி சிதைத்து பிளந்து போடுவாங்க. அப்புறமா தொளும்பு தனியா பயிறு தனியான்னு கையாலயே பீராஞ்சிருவாங்க. அதிலயும் சிக்காத தொளும்பு எல்லாம் மொறத்துல போட்டு பொடைக்கும் போது வந்துடும். அப்புறமா மொறத்தாலயே நேம்பி ’நண்ணி’ பயிறு தனியா போடுவதற்கு தோதான முத்தின பயிறு தனியா பிரிச்சுடுவாங்க. கல்ல ஒடைக்க போனவங்க நண்ணி பயிற வறுத்து திங்க எடுத்துட்டு வந்துடுவாங்க.
     கல்ல போடுறது (அட அது இல்லைங்க, இது நிலத்துல வெதக்கறது) பாக்கவே அழகான ஒரு விஷயம். ஏற்கனவே நிலத்த ரெண்டுதடவ உழுது மண்ண பொரட்டி போட்டு வைப்பாங்க. அப்புறம் வெதக்கும் போது நூல் புடிச்சமாதிரி கலப்பைய புடிச்சி உழுதுகிட்டே போவாங்க. பின்னாடி பொம்பள ஆளுங்க ஒரு புட்டில பயிர வச்சிக்கிட்டு கையால அள்ளி மூடி வச்சிக்கிட்டு ஆட்காட்டி விரல் வழியா ஒவ்வொண்ணா நழுவ விட்டுக்கிட்டே போவாங்க. ஒரு ஆளு புட்டி தீர தீர எடுத்து தந்துகிட்டே போவாங்க.
     பால் பச்சக் கல்ல ( நாங்க கடலய கல்ல ன்னு தான் சொல்லுவோம் ’புய்ப்பம்’ மாதிரி) சாப்பிட்டுருக்கீங்களா. அது ஒண்ணும் இல்ல கல்ல முத்திடுச்சா இல்லையான்னு செக் பண்ணுறதுக்காக புடுங்கி பாப்பாங்க. புடுங்கிய கல்லக் கொடிய திரும்ப நட்டா வைக்க முடியும். அப்படியே கல்ல இருக்கும் வேர் பகுதிய அங்கே வாய்க்கால்லயோ பள்ளத்திலயோ தேங்கி இருக்கிற தண்ணியில ஒரு அலசு அலசிபுட்டு ஒவ்வொண்ணா உரிச்சி சாப்புட வேண்டியது தான். நல்லா முத்திய கடலையை அந்த பால் பச்சை பருவத்தில சாப்பிடுவது அவ்வளவு ருசி. நிச்சயமா இது அனைவருக்கும் கிட்டாது. ஏன்னா கல்ல ஆயும் போது கொடிய ரெண்டு நாளு உலர்த்திட்டு தான் ஆயவிடுவாங்க. அதனால கல்ல ஆஞ்ச பின்ன சாப்பிடுவது கூட ரெண்டுநாள் உலர்ந்த கல்லதான்.
     பச்சகல்ல சாப்பிடுவது அவ்வளவு அலாதியான சுகம். அது ஒரு தியானம் மாதிரி. கை தானா கல்லய துளாவி எடுத்து அனிச்சையாக உரிக்கும். வாய் தானாக திறக்கும். என்னதான் கிரிக்கெட் ஃபீல்டிங்கில நான் மோசமான ஆளா இருந்தாலும் கல்லய வாயில விட்டெறிவதில் ஜான்டிரோட்ஸ் கூட எனக்கு பின்னாலதான் நிக்கணும். அந்த சமயத்தில் கல்லயின் சுவையை ரசித்து ருசிப்பதில் தான் மனம் லயித்து இருக்கும். மனம் வேறு எதையும் உணராது. அதனால தான் கல்ல சாப்பிடுறது ஒருவகையான தியானம் என்கிறேன். எங்கம்மா கல்லய உரிச்சி உரிச்சி மொத்தமா தருவாங்க. ஆனா வேணாம்னுடுவேன். கல்ல சாப்பிடுறது என்பது நல்ல தேர்ந்த செழிப்பான கல்லய தேர்வு செய்வது, கல்லயின் நடு வயிற்றில் ஒரு கட்டை விரலால் ஒரு அமுக்கு அமுக்கி ரெண்டாக உடைப்பது அப்புறம் பயிர வாயிலும் தொளும்ப தனியாவும் போடுவது என்கிற எல்லாமும் இணைந்து இருந்தால் தான் அந்த செயல் முழுமை பெறும். இதில் கூட தேர்ந்த அனுபவம் இல்லாதவர்கள் “ஸ்பூனரிசம்“ என்கிறது போல தொளும்பை வாயிலும் கல்லய கீழேயும் எறிகிற பிழையை செய்வார்கள்.
     அடுத்த ஒரு விஷயம், காஞ்சிகிடக்கும் கல்லக் கொடிய முட்டா போட்டு கொளுத்தி அதுல பச்சக்கல்லய போடணும். கொடி நல்லா கொளுந்தி முடியிற வரைக்கும் காத்திருக்கணும். அப்புறமா கல்லய லாவகமா அப்புறப் படுத்தணும். கிட்டத்தட்ட கருப்பு கலர்ல தோளு இருக்கும். சூடா இருக்கும் போதே அத உரிச்சோம்னா பச்சக்கல்லயில இருக்குற நீர் வத்தி தோள் சுருங்கி இருக்கும். சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். அத எப்படி உங்களுக்கு சொல்றது?! பிஞ்சி முந்திரிபருப்ப கீணி சாப்பிட்டு இருக்கீங்களா (இல்லையா?, சாரி பாஸ், ஒண்ணும் பண்ண முடியாது) அந்த மாதிரி இருக்கும். அதுலயும் கொஞ்சம் கருகி இருப்பது லைட்டா கசப்பு ஏறி இன்னும் அருமையா இருக்கும். இதே புராசஸ் காஞ்ச கல்லைக்கும் பொருந்தும். அது நாம சட்டியில வறுத்த கல்லய விட வேற லெவல் டேஸ்டா இருக்கும்.

     அடுத்தது பச்சக்கல்லய அவிச்சி சாப்பிடுவது. (குறிப்பு எழுதிக்க நோட்டு எடுக்காதிங்க இது சிம்பிள் பிராசஸ் தான்) இதுல பெருசா ஒண்ணும் மெனக்கெட வேண்டாம். கல்லய அலசிக்கணும். அப்புறம் ஒரு அலுமினியக் குண்டான்லயோ அல்லது குண்டுலயோ அல்லது மண்சட்டியிலயோ தண்ணி வச்சி கல்லய முழுகுற அளவு போட்டு உப்பு போட்டு மூடிவச்சிட்டு வேற வேல எதுவும் இருந்தா போய் பாருங்க அது பாட்டுக்கு வெந்துக்கிட்டு கிடக்கும். எடுத்து தண்ணிய வடிச்சிப்புட்டு ஆற வச்சி சாப்பிட வேண்டியது தான். சுடுற பச்சக்கல்லயில நீர் வத்தி இருக்கும், ஆனா இதுல நீர் ஏறி இருக்கும். இதே அவிச்ச கல்லய ஒரு நாள் வெயில்ல காய வச்சி சாப்பிட்டிங்கன்னா அந்த சுட்டக் கல்ல டேஸ்ட்ல பாதி டேஸ்ட் கிடைக்கும்.
     இருந்த கல்லய எல்லாம் நல்லா காயவச்சிட்டாங்கப்பா, என்னப்பா பண்றது? இது கொஞ்சம் டெலிகேட் பொசிசன் தான். ஏன்னா பச்சக் கல்ல அளவுக்கு காஞ்சக் கல்லய ட்ரை பண்ணாதிங்க, அப்புறம் நீங்க டாய்லெட்லயே குத்த வச்சி உக்கார வேண்டி வந்துரும். ஆனா எல்லாருக்கும் இல்ல. நானெல்லாம் படிக் கணக்குல காஞ்சக் கல்லய சிங்கிள் சிட்டிங்ல சாப்பிட்டுருக்கேன். காஞ்ச கல்லய வறுத்து சாப்பிடுறது இன்னும் சிறப்பா இருக்கும். தொளும்போட வறுப்பது ஆபத்தில்லாதது. ஏன்னா டைமிங் மிஸ்ஸானாலும் பிரச்சின இல்ல. உறிச்ச கல்லய வறுக்கறது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம். கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனாலும் நீங்க வெறும் சார்கோல் திங்கிற மாதிரிதான் திங்க வேண்டி வரும். வண்டியில வச்சி கல்ல வறுக்குறவங்க அதானல தான் மணல் போட்டு வறுப்பாங்க.
     இந்த வறுத்த கடல விஷயத்தில எனக்கு நேர்ந்த இந்த அநீதிய நான் சொல்லியே ஆகணும். லால்குடி ஆஸ்டல்ல தங்கி இருந்தப்ப சாயங்காலம் ஆனா கிண்கிணி என்று சத்தம் எழுப்பிய படி கல்ல பயற உப்பு சேர்த்து  வறுத்துக் கிட்டே விப்பாங்க.  நானும் ஆஸ்டல் போன புதுசுல வாங்கி சாப்பிடலாமேன்னு ஒரு நாலணாவுக்கு (2கே கிட்ஸ், ஃபார் யுவர் இன்பர்மேசன் நாலணா என்றால் இருபத்தி ஐந்து பைசா) வாங்கினேன். நானும் ஒரு படி இல்லனாலும் ஒரு டம்ளர் அளவாவது தருவாங்கன்னு வாய பொளந்துகிட்டு எச்சி ஒழுக நின்னேன். அவன் ஒரு பத்து பதினஞ்சி பயிற ஒரு கூம்பு மாதிரி சுருட்டி வச்ச பேப்பர்ல போட்டு மடிச்சி தரான். வாசல்ல இருந்து ஆஸ்டல் படி ஏறுறதுக்குள்ள தீந்து போச்சு. (இந்த ”லேஸ்” காரன் படிச்ச ஸ்கூல்ல இவந்தான் ஹெட்மாஸ்டர் போல)
     காய்ந்த கல்லய ஊறவெச்சி அவிச்சி கொண்டக் கடல மாதிரி தாளிச்சி அலங்காரமா சாப்பிடுவது எல்லாம் லேட்டஸ்ட் பரிணாம வளர்ச்சி. அதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. ஆனாலும் ”ஆல இல்லாத ஊருக்கு இலுப்ப பூ சக்கர“ என்பது போல திருச்சி போறப்பல்லாம் சத்திரம் பஸ்டாண்டில் வாங்கி சாப்பிடுவது உண்டு.
     வறுத்த கல்லயோ காஞ்ச கல்லயோ சாப்பிட்ட பின்பு கொஞ்சமாக வெல்லமோ சக்கரயோ சாப்பிடுவது நல்லது (”பின்” விளைவுகளில் இருந்து தப்பிவிடலாம்) என்பார்கள். அந்த சேர்க்கையில் தான் கடலைமிட்டாய் கண்டுபிடித்திருப்பார்கள் போலும். இப்பவும் எனக்கு மிகப் பிடித்த தின்பண்டம் “கடலைமிட்டாய்“ தான். தனியாக கடைக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் கடலை மிட்டாய் (அப்போவெல்லாம் இது வெறும் ஐம்பது பைசா தான் தெரியுமா) வாங்கி சாப்பிடுவது உண்டு. (துணைவியாருக்கு தெரிந்தால் “ஏற்கனவே இருக்கிற கொழுப்பெல்லாம் பத்தாதா?” என்று “மரியாதையாக“ கோபித்துக் கொள்வார்)
     “பொறிவிளங்காய்“ என்று கடலை மிட்டாய் மாதிரியான சேர்க்கையை அப்படியே உருண்டையாக (கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் பால் சைசில்) பிடித்து விடுவார்கள். இது விழுப்புரம் மாவட்டத்தில் பிரபலம் என நினைக்கிறேன். ஏனென்றால் தீனி செய்வதில் விற்பனரான எங்க “செஞ்சி“அத்தை (அண்ணியின் அம்மா, அத்தை செய்யும் அதிரசம் ரொம்பச் சிறப்பு) பல முறை செய்து எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இதை சாப்பிட நீங்க வெறும் கையோடு உக்கார முடியாது. சுத்தியலும் கையுமாக உக்காந்தீங்கன்னா அப்படியே ஒரு மாமல்லபுர சிற்பியின் லாவகத்தோடு உடைத்து உடைத்து சாப்பிடலாம்.
     அப்புறம் கல்ல உறிச்சி சாப்பிடுவதில் என்ன மிஞ்ச யாரும் கிடையாது என்கிற ஒரு இறுமாப்ப்பு இருந்தது அல்லவா? ஆனா அதுவும் ஒரு நாள் உடைந்து தரைமட்டமானது. எங்க நடுசித்தப்பா எதிரில் அமர்ந்து ஒருமுறை கல்ல சாப்பிட்டேன். அவரின் வேகமும் அளவும் பார்த்து வியந்து போனேன். கல்ல அரைக்கிற மிஷின் கூட இவரிடம் தோற்றோடும். கொஞ்சம் நேரம் அமர்ந்தாலும் அரை கூட கல்லய உரித்து தள்ளி விட்டார். அவர் சாப்பிடுவதை பார்க்கும் எவருக்கும் கல்ல சாப்பிடும் ஆர்வம் தொற்றிக் கொள்ளும். அவ்வளவு வேகத்திலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்.
     இப்போ என்ன திடீர்னு “கடலை போடலாமா” ன்னு எழுத ஆரம்பிச்சிட்டீங்க? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. இந்த லாக்டவுன்லயும் ஒரு அம்மா தட்டு வண்டியில் வைத்து பச்சக்கடலையை படி இருபது ரூபான்னு விக்கிறாங்க. நானும் ஒரு இருபது ரூபாய்க்கு வாங்கி இருக்கேன். இன்னைக்கு அவித்து சாப்பிடணும்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...