Sunday, May 31, 2020

நகக்கண்ணில் வலி - சிறுகதை


நகக்கண்ணில் வலி- சிறுகதை
ஆசிரியர்- ஜெயராஜ் முத்துவேல்

     ஸ்ஸ்அப்பாடா இதுக்கு மேல என்னால ஓட முடியாது, இந்த மைல் கல்லு மேல செத்த உக்காருவோம்கொரானா விடுமுறையில் வீடு அடங்கி உண்டு உறங்கியதில் ஒரு பத்து கிலோ எடை கூடிவிட்டது. இனிமே டெய்லி ஜாகிங் போய் எடைய கொறச்சிட்டு தான் அடுத்து வேலை என்று மனதுக்குள் பத்தாவது முறையாக சபதம் எடுத்தேன்.
     ஜட்டி, பனியன், மாஸ்க் என அத்தனையும் நனைஞ்சி போச்சி. எதிரே பத்து பேர் கொண்ட குழு வாக்கிங் வந்து கொண்டு இருந்தது. இவர்கள் அடைமழை காலத்தில் கூட குடைபிடித்து அடமாய் நடப்பார்கள். நடக்கையில் உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரையும் சாதி அரசியலில் இருந்து சங்கி அரசியல் வரையிலும் நீள அகல ஆழ உயரம் என அலசு அலசு என்று அலசுவார்கள்.
     என்ன தம்பி உக்காந்துட்டீங்க? எங்கள மாதிரி நடந்தீங்கன்னா களைப்பில்லாம நடக்கலாமில்ல!!”
     நீங்க பேசிக்கிட்டே அசஞ்சி அசஞ்சி நடக்குற நடைக்கு ஒரு மில்லிகிராம் கொழுப்பு கூட கரையாது.’
     என்ன தம்பி சொல்றீங்க?”
     ஒண்ணுமில்லண்ணே, நீங்க நடங்க நான் பின்னால வாரேன்
     அவர்கள் அசைந்து அசைந்து பேசிக்கொண்டே சென்று மறைந்தார்கள். சரி நானும் எழுந்து ஓட்டத்தை தொடர வேண்டியது தான் என்று எழுந்தேன்.
     நீங்க எல்லாரும் சாப்பிட்டத செரிமானம் பண்ண நடந்து கிட்டும் ஓடிகிட்டும் இருக்கீங்க, ஆனா ஒரு கூட்டமே உண்டு செரித்து உயிர் பிழைக்க பிடி உணவு இல்லாம ஆயிரக்கணக்கான மைல் நடந்துகிட்டு இருக்காங்க
     இவ்வளவு பெரிய தேசிய நெடுஞ்சாலையில் கூட வண்டி எதையும் காணோம், சுற்றிலும் ஜனநடமாட்டமே இல்லை, எங்கேருந்து சத்தம் வருது, அதிகாலையிலேயே பேய் வந்துருக்குமோ என எனக்கு லேசாக உதறல் எடுத்தது.
     கொஞ்சம் கீழே குனிஞ்சி பாருங்க உங்க கொழுப்பு கரைஞ்சிடாது, நீங்கள்ளாம் தலையில இருக்கும் கிரீடம் விழுந்துடுமோன்னு எப்பவும் கீழே இருக்கவங்கள குனிஞ்சி பாக்கறதே கிடையாது
     யார்ரா இது மறுபடி மறுபடி குத்தம் சொல்ற மாதிரியே பேசறது என்று மறுபடியும் சுற்றி சுற்றி பார்த்தேன். சரின்னுட்டு கீழேயும் பார்த்தேன் ஒன்றும் கண்ணில் படவே இல்லை.
     யோவ் உனக்கு என்ன கண்ணு நொல்லயா, நல்லா கீழே பிஞ்சி கெடக்குற டயர் பீச பாருய்யா
     என்னடாது என்று பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கீழே குனிந்ந்ந்து, யப்பா இதுக்கு மேல குனிய முடில மறுபடியும் அந்த கல்லு மேல உக்காந்துகிட்டு பாப்போம்.
     யோவ் இப்போ தெரிதா?” அட டயர்ல சிக்கி இருக்கிற நகத்துணுக்குல இருந்து தான் சத்தம் வருது. என்னது நகம் பேசுமா?
     காலெல்லாம் காப்பு காச்சிப் போயி வருசக் கணக்குல வெட்டாத கட்டை விரல் நகம் முழுதாகப் பிய்ந்து விழுந்து கிடந்தது. வெட்டாத நகம் திருகி திருகி முறுக்கிக் கொண்டு தடித்துப் போய் கறுப்பாக இருந்தது. சுத்தியல் வச்சி அடித்தால் கூட ஒடியாது போல. அந்த நகம் தான் சின்னஞ்சிறு பூதமாக மாறி பேசியது.
     டேய் யப்பா, நீ எந்த ஊரு பேய்? காஞ்சனாவா சஞ்சனாவா?”
     நான் சஞ்சய், பீகார் காரன்
     உண்மைய சொல்லு நீ பேய் தானே?”
     இல்ல, நான் சஞ்சய்யோட கால் நகம் பேசுறேன்
     நான் துள்ளி அப்படியே பின்னால் போய் விழுந்தேன், ’என்னாது நகம் பேசுமா?’
     நான் பேசுவேன்யா
     “சரி என்ன பேசப்போற?“
     “நீ என்ன வேல பாக்குற?”
     “நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர், மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறேன், என் ஒய்ஃப்பும் மாசம் 1 லட்ச்ம் சம்பாதிக்கிறா, ஒரு பையன் செகண்ட் படிக்கிறான். இப்போ ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் சொந்த ஊர் வந்து இருக்கோம்” என்றபடி சாவகாசமாக கதை கேட்க அமர்ந்தேன். கழுத்தில் வேர்வையில் ஒட்டிக் கொண்டு உறுத்திய தங்கச் செயினை எடுத்து டி-சர்ட் மேல் போட்டுக் கொண்டேன்.
     “அடேங்கப்பா, கொழுத்த ஆளுங்கதான் போல இருக்கே!”
     “ஏய், என்ன கொழுப்பா? உதை படுவ”
     “சரி கோச்சிகாத நைனா, உங்களுக்கு பசின்னா என்ன என்று தெரியுமா?”
     “தெரியாது, ஆனா டயட் கண்ட்ரோல் ன்னுட்டு அவ்வப்போது சாப்பாட ஸ்கிப் பண்ணுவோம் அப்ப லேசா பசிக்கும்”
     “ரெண்டு நாள் பழைய நாத்தம் புடிச்ச பழைய சோத்த சாப்பிட்டு இருக்கியா?”
     “ச்சி ச்சீ உவ்வ்வ்வே”
     “நாங்க சாப்பிட்டு இருக்கோம். சென்னையில மார்ச் மாதம் கிளம்பி எங்க ஊர் நோக்கி டெய்லி நடந்துகிட்டே இருந்தோம். அந்த நெடும் பயணம் தொடுவானத்த தொடும் சிறுபிள்ளைகள் முயற்சியாக நீண்டு கொண்டே இருந்தது“
     “என்னது, சென்னையில் இருந்து பீகாருக்கு நடந்தா? இம்பாசிபில், என்ன விளையாடுறீயா?”
     “பாஆஆ…ம்” என்று ஆரன் அடித்தபடி ஒரு சிமெண்ட் ஆலை லாரி கடந்து போனது.
     “விளையாட்டா, அதெல்லாம் லாக்டவுன்ல கொழுத்து சாப்பிட்டு விட்டு பொழுது போகாம நீங்க செய்யறது. வேலை இல்லன்னா எல்லா அயல் மாநிலங்களிலும் நாங்க தேவையில்லாத லக்கேஜ் தான். வேலை செஞ்ச இடத்தில் யாரும் கண்டுக்கல. மேஸ்திரி மொதலாளின்னு யாருக்கு போன் அடிச்சாலும் எடுக்கல. கிட்டத்தட்ட முப்பது குடும்பம் தங்கி பெரிய கட்டுமான வேலை செஞ்சி வந்தோம். காசு மொத்தமா வாங்கிக்கலாம்னுட்டு சோறு மட்டும் போட்டு வேலை வாங்கினாங்க. லாக்டவுன் அறிவிச்ச உடனே அவன் அவன் நத்தை மாதிரி கூட்டுக்குள்ள பதுங்கி கிட்டான். சாப்பாட்டுக்கு வழி இல்லை. கொரானா வந்தா செத்து போயிடுவோம்னு வேற பயமுறுத்துறாங்க. அதான் செத்தாலும் சொந்த ஊருல போய் செத்து போவோம்னு நடக்க ஆரம்பிச்சிட்டோம்” என்ற நீளமாக பேசி மூச்சு வாங்கியது அந்த கருநாக தலை போல இருந்த நகம்.
     “எத்தன நாளா நடந்தீங்க?”
     “அது இருக்கும் ஒரு மாசம், அப்படி நடந்தும் ரெண்டு மாநிலம் கூட தாண்டல”
     மார்ச் 30 ம் தேதி ஆவடியில் இருந்து கிளம்பி அப்படியே நேஷனல் ஹைவேயிலேயே நடந்து போக ஆரம்பிச்சோம் கையில ஒத்த பைசா கிடையாது”
     ”ஐயய்யோ அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க?”
     ”வழியில தொண்டு நிறுவனங்கள் கொடுத்த சாப்பாட்டு பொட்டலங்கள வாங்கி அரை வயிறு சாப்பிட்டு நடப்போம். அவங்க கொடுக்குற ஒரு வேளை சாப்பாட்ட நாங்க சாப்பிட்டு அதுலயும் மிச்சம் பிடிச்சி கொழந்தைகளுக்கு மூணுவேளையா கொடுப்போம்”
     “தங்கறது தூங்கறதுலாம் எங்க?”
     “நாங்க என்ன உங்க மாதிரி வெயிலுக்கு எதமா ஏசி ரூம்லயா படுக்க முடியும். நைட்டுக்கு எதாவது ஹைவே ஓரமா இருக்கிற பஸ் ஸ்டாப்புல படுப்போம்”
     ”வெயில் நேரத்தில என்ன பண்ணுவீங்க?”
     “என்ன பண்ணுவோம்? ரோட்டோரத்தில முன்ன மாதிரி நெறய மரம் இருக்கிறதுல்ல. ரோடு ரொம்ப மேடாவும் மரம் பள்ளத்திலயும் இருக்கு. சமதளமா இருக்கிற இடங்கள்ல மரமே இருக்கிறதுல்ல”
     “அடடா ரொம்ப கஷ்டம் தான்!!” என்ற படி சுற்றிலும் நோக்கினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மரத்தையும் காணோம். பழைய மரங்களுக்குப் பதிலாக வைத்தவை ஒன்றும் பெரிதாக வளரவில்லை. அப்படி வளர்ந்தால் கூட அவை சாலையில் இருந்து ஒரு இருபது அடி தள்ளி பள்ளத்தில் தான் இருந்தது.
     ”உங்க இரக்கத்த தூக்கி குப்பையில போடுங்க அதனால பைசா புரயோஜனம் கிடையாது”
     “ஏம்பா இப்படி காண்டாவுற”
     ”இந்த உதவி பண்றேன்னு கௌம்பினவன்லாம் மொத லாக்டவுன்ல நாளஞ்சு நாள் பொட்டலம் கொடுத்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுட்டு அக்கடான்னு படுத்துட்டான், கொடுத்தா ஒரே நாள்ல கொடுக்குறான் அப்புறமா ஒரு பயலும் எட்டி கூட பாக்கல”
     “அப்படியா?”
     “ஆமாங்க, நெல்லூர் தாண்டி ஒரு நாள் முழுக்க தண்ணிய மட்டுமே கொழந்தைங்க குடிச்சாங்க, நாங்க ரெண்டு நாள் சாப்பிடல. ஓங்கோல்ல ஒரு போலீஸ்காரர் கிட்ட சொன்னோம். அவர்தான் அந்த ஊர்ல யார்கிட்டயோ சொல்லி சாப்பாடு ஏற்பாடு பண்ணினார். அப்புறம் கொஞ்சம் ரொட்டி செஞ்சி கொடுத்தனுப்புனாங்க” என்று நன்றியுணர்வு பொங்க கூறியது. அப்போது விரைந்து சென்ற லாரியில் இருந்து பொறுப்பின்றி வீசியெறியப் பட்ட பொட்டலம் சரியாக எனது காலருகே வந்து விழுந்தது. அவிழ்ந்த பொட்டலத்தில் சாப்பிடாத நான்கு பரோட்டாவும் குருமா பொட்டலமும் இருந்தது.
     “அயோக்கியப் பயலுவ எப்படி பொறுப்பில்லாம தூக்கி எறிஞ்சிட்டு போறான் பாரு” என்று கத்தினேன் கோபமாக. எத்தனையோ முறை நானே சாப்பாட்டை வீணாக்கி இருந்தாலும் இப்போது அந்த பொட்டலத்தை பார்த்த போது மனது வலித்தது.
     “ஒரு எடத்தில ஊருக்குள்ள எறங்கி நடந்தோம், அன்னைக்கு வௌக்கு புடிக்க சொல்லி பிரதமர் சொல்லி இருந்தாரு. அந்த ஊருல இருந்த இளவட்டப் பசங்க கொரானா பரவும்னுட்டு தீ பந்தத்த கையில வச்சிக்கிட்டு “கோ கொரானா கோ கொரானா” அப்படின்னு எங்கள வெரட்டுனானுங்க. எங்காளு ஒருத்தர தீப்பந்தத்தாலயே அடிச்சிப்புட்டானுங்க. அதுக்கு அப்புறம் நாங்க ஊருக்குள்ள எறங்கி நடக்கறதே இல்ல” என்று கோபமாக கூறியது.
     “அயோக்கியப் பசங்க, வடக்கனுவ அப்படித்தான் இருப்பானுவ”
     “ஆமாம், நீங்க அன்னைக்கு என்ன பண்ணுனீங்க பாஸ்?“
     “வீட்டுல வௌக்க அணைச்சுட்டு மாடியில நின்னு மெழுகுவர்த்தி ஏத்தினோம்” என தேசபக்தி பொங்க கூறினேன். உண்மையான இந்தியனா இருந்தா ஷேர் பண்ணுன்னா தெரிஞ்சே வதந்திய கூட ஷேர் பண்ணி தேசபக்திய வெளிபடுத்தியவன் அல்லவா?
     “நீங்க அவனுங்கள போய் மடையன்னு சொல்றீங்க” என்று அந்த “நீங்க” என்பதை சற்று அழுத்தமாக அர்த்தமாக உச்சரித்தது அந்த அகம்புடிச்ச நகம்.
     “ஏய்…” என்று அதட்டினேன். அப்போது நான் தனியே அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து வாக்கிங் போன இரண்டு பேர் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். என்னை அரை லூசு என்று எண்ணியிருக்கக்கூடும்.
     “அப்புறம் எங்க கூட்டத்தில் ஒரு சின்ன பையன் இருந்தான் சரியான வாயாடி. குறும்புக்காரன். எதாவது உளறிகிட்டே சிரிச்சிக்கிட்டே வருவான். நாங்களும் பசி காதை அடைத்தாலும் அவன் பேசறத கேட்டு சிரிச்சிக்கிட்டே நடப்போம். மொத நாள் மதியம் கொடுத்த சாப்பாட்டு பொட்டலத்த அடுத்த நாள் மதியம் அவனுக்கு சாப்பிடக் கொடுத்து இருந்தோம். அன்னைக்கு அவனுக்கு சரியான வயிற்றுப் போக்கு. அப்போ நடந்து கிட்டு இருந்தது சரியான காட்டுப் பகுதி. தண்ணி வேற தீந்து போச்சு. எல்லோரும் பசி தாகம் ஏற்படுத்திய மயக்கத்துல தூங்கிப் போயிட்டோம். அடுத்த நாள் காலையில கண்ணு முழிச்சி பாத்தா அவன் அசையவே இல்ல ஒடம்பெல்லாம் சில்லிட்டுப் போச்சி, டவுசர் எல்லாம் வயிற்றுப் போக்கு போயி நனைஞ்சி ஒரே வாடையா இருந்துச்சி புள்ள செத்துப் போயி கெடக்கான் என்பதை நம்ப முடியாம பிரமை புடிச்ச மாதரி உக்காந்தே இருந்தோம்“
     “அடடா!!” நெஞ்சில் தீ அள்ளிப் போட்டது போல உணர்ந்தேன்.
     “அன்னைக்கு அழுவதற்கு கூட யார் கண்ணிலும் தண்ணீர் வரவில்லை. அவன அங்கேயே பொதச்சிட்டு மத்த புள்ளங்க உயிர காப்பாத்த உயிர புடிச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம். மேலே இருந்து அவன பொதச்ச எடத்துக்கு நேரா ஏனோ ஹெலிக்காப்டர்ல இருந்து மலர் தூவுனாங்க”
     ’அடடா அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் ஏதோ பெரிய மருத்துவமனை இருந்திருக்க வேண்டும்’ பிரதமரோட மூன்றாவது டாஸ்க் அல்லவா?!
     “அது சரி நீ எப்படி மறுபடி இங்க?”
     “சொல்றேன் கேளுங்க, அடுத்த நாள் ராஞ்சியில் இருந்து பாட்னாவுக்கு ட்ரெயின் போகுதுன்னு சொன்னாங்க. சரி எப்படியாவது அங்கே போயிடலாம்னு ரயில்வே ட்ராக்லயே நடந்து போனோம். ராஞ்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தோம். விடியற்காலை நேரம் கலைச்சி போயி ட்ராக்லயே படுத்துட்டோம். பக்கத்துல ஒரே புதரா இருந்துச்சி. பாம்பு எதாவது வந்துடுமோன்னுதான் பயத்துல தண்டவாளத்துல படுத்தோம். அதான் ட்ரெயின் எதுவும் வராதேன்னுதான் படுத்தோம். கெட்ட குடியே கெடும்னு சொல்ற மாதிரி அன்னைக்குன்னு பாத்து குட்ஸ் ட்ரெயின் வந்து எங்க மேல ஏறிப்போயிடுச்சி. என் ஒத்தக்காலு துண்டாகி இழுபட்டுப் போயி அருகே இருந்த சாலை ஓரமாக ஓடி விழுந்தது“
     “ஆமாம், நியுஸ்ல பாத்து அழுதுட்டேன்பா”
     “மத்தியான நேரம் வரைக்கும் அப்படியே கால் அழுகிப் போய் கிடந்தது. ஒரு கழுகு வந்தது. காலை கொத்தி சதையை இழுத்து வாய் நிறைய வைத்து சாப்பிட்டு விட்டு நகத்தை கீழே போட்டு விட்டது. சதையில் இருந்து பிய்ந்த நான் நல்லா உறுதியா இருந்ததால லாரி டயர்ல சிக்கிக் கொண்டேன். ரவுண்டானா அருகே உள்ள ஸ்பீட் பிரேக்கர்ல ஏறி இறங்கிய போது நழுவி தோ இங்கே விழுந்துட்டேன்“
     “ம்ம்…“ என்று கண்களில் நீர் கோர்த்தபடி கேட்டுக் கொண்டு இருந்தேன்
          “உங்க அழுக எதயாவது மாத்துமா? உடலுழைப்பு தொழில் செய்வோருக்கும் படிப்பு சார்ந்த வேலை செய்வோருக்கும் மலைக்கும் மடுவுக்குமான சம்பள வேறுபாடு இருக்குதே அத மாத்துமா உங்க பரிதாபம்?”
     “என்னப்பா சொல்ற?”
     “உள்ளூர்ல எங்களுக்கு பொழப்புக்கு வேலையோ நியாயமான கூலியோ இருந்தா நாங்க ஏன் இங்க நாடோடியா ஓடியாரோம். உங்க பொருளாதார அமைப்பு விவசாயம் பண்றவன்கிட்ட சேமிப்பு இல்லாம கவனமா பாத்துக்குது. உணவு உற்பத்தி பண்றவன் அவன், ஆனா அவன் பொருளுக்கு செலவு கணக்கு பாத்து லாபம் வச்சி அவனால விக்க முடியாது. ஆனா இடையில நிக்கிறவன் நோகாம பைய நெரப்பிக்கிறான்”
     “படிச்சி கெவர்மண்ட் ஜாபுக்கு வரவேண்டியது தானே?”
     “ஏம்பா நாங்க மட்டும் என்ன படிக்கலயா? நானும் சஞ்சய் எம்.ஏ, பி.எட், எம்.ஃபில் என்று கெத்தா பேர் போட்டுக்கிட்டு திரிஞ்சி அதனால பைசா புரயோஜனம் இல்லாம வேலை தேடி நாடோடியா திரிஞ்சி ரயில்ல அடிபட்டு செத்தவன் தாம்பா”
     “நீ வேலைக்குப் போக பரிட்சை எழுதி இருக்கணும்”
     “யார ஏமாத்தப் பாக்குறீங்க, அரசுத் துறைன்னு ஒண்ணு இருக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பாக்குது அரசாங்கம், தனியார் கையில போனா செலவ கொறச்சி லாபத்த கூட்ட எல்லாத்துலயும் ஆட்டோமேஷன் அப்படின்னு சொல்லி தொழிலாளர்கள கொறைக்கிறாங்க. அப்புறம் இந்த ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் வந்துச்சுன்னா நீயும் கூட எங்கயாவது பொழப்பு தேடிப் போயாகணும். அப்புறம் எங்கே புதுசா வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்க தமிழ்நாட்டுல கூட பன்னிரெண்டு லட்சம் பேரு வாத்தியார் வேலைக்கு காத்திருக்கிறான். அவ்வளவு பேருக்கு வேலை இருக்கா?”
     “ஏன் தனியார் பள்ளிகள் இல்லையா?”
     “ஆமாம், அங்க கொடுக்குற சம்பளம், நாங்க பேசி, வாங்காமல் ஏமாந்த கொத்தனார் சம்பளத்தில் பாதி கூட தேறாது. நீங்க எல்லாரும் கவர்மெண்டு வாத்தியார் சம்பளம் வாங்குறான்னு கூவுறீங்களோ ஒழிய ’தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நிகரான சம்பளம் கொடு’ ன்னு அந்த ஆசிரியர்களால தான் கேட்க முடியாது ஆனா பத்திரிக்கையோ பொது ஜனமோ கேக்குறீங்களா?”
     “அத எப்படி கவர்மெண்ட் சொல்வாங்க?”
     “ஏன் கேக்க கூடாது? என்ன ஒண்ணு கேட்டா கல்வித் தந்தைகள் நடத்தும் பண்ணைப் பள்ளிகளில் லாபம் கொற்ஞ்சி போகுமே. கவர்மெண்ட்ல வேலை பாக்குற கடைநிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் இருபதாயிரம் ரூபாயா நிர்ணயம் பண்ணி இருக்கிற அரசாங்கம் ஏன் மற்ற உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் அந்த இருபதாயிரம் ரூபாய்க்கு நிகரா ஊதியம் நிர்ணயிக்க மாட்டேங்குது? ’படிப்பறிவு இல்லாம பாவப்பட்ட ஏழைங்கள எவ்வளவு சுரண்டினாலும் தகும்’ என்று கண்டும் காணாமல் போகிற அமைப்பு தானே இங்க இருக்கு” என்று சீற்றத்தோடு மூச்சிறைத்தது.
     “அரசு வேலையில் பணிப் பாதுகாப்போடு இருப்பவர்களின் அகவிலைப்படி, விலையேற்றத்திற்குத் தக்கவாறு உயர்த்தி வழங்கப் படுகிறது. மற்ற தனியார் பணியாளருக்கோ அல்லது கூலி வேலை செய்பவர்களுக்கோ அந்த மாதிரி பரிந்துறையை வருடம் ஒரு முறையாவது அரசு கட்டாயப் படுத்துமா? எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்கும் போது ’வாய்ப்பு கிடைப்பதே பெரிது’ என்கிற மனப்போக்கை தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்தி ஆனமட்டும் சுரண்ட முயலும் முதலாளிகள் தானே இருக்கிறார்கள் இங்கே” என்று கேட்டு என்னை வாயடைக்க வைத்தது. எம்.ஏ படித்தவன் அல்லவா அதான் பொளந்து கட்டுறான்.
     “என்ன கம்யுனிசம் பேசுறியா?” என்று சத்தமாக அதட்டினேன். எனக்கு அது பேசிய பேச்சில் வியர்க்க ஆரம்பித்தது.
     “அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன் அரசாங்கம் எல்லா மக்களுக்குமானதா இல்ல. உங்க கிட்ட லட்சக்கணக்கில் பேங்க் பேலன்ஸ் இருக்கு ஆனா ஒரு ஆயிரம் ரூபாய் கூட இல்லாம ரயில்ல அடிபட்டு கால் துண்டாகி ரோட்டில் விழுந்து என்னோட கால கழுகுக்கு இறையாக்கி நகம் பெயர்ந்து லாரியில் சிக்கி இங்க  வந்து கெடக்கேன்னா அதுக்கு காரணம் இங்க நிலவும் பொருளாதார அசமத்துவம் இல்லாம வேறு என்ன?“ என்று கேட்டபடி அந்த நகம் தரையில் விழுந்து மண்ணில் மூடிக்கொண்டது.
     அன்றிலிருந்து எனது வலதுகால் பெருவிரல் நகக்கண்ணில் ஏற்பட்ட வலி என்ன செய்தாலும் சரியாகவில்லை.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...