Wednesday, August 12, 2020

விருந்தினன்

Anna stadium (ADW welfare) college Hostel - 90 களின் பிற்பகுதி அனுபவங்களை பதிவு செய்ய எண்ணினேன். கொஞ்சம் கற்பனை சேர்த்து கதையாகவே எழுதிவிட்டேன்!! விருந்தினன்
“நம்ம கவர்ன்மெண்ட் மாதிரி ஒரு கேடுகெட்ட கவர்ன்மெண்ட பாக்க முடியாது, இந்த 1997 ம் ஆண்டுல கூட வருசத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் டியுசன் ஃபீஸ் கட்ட முடியாதவன் எதுக்கு படிக்கணும்? இப்படியே எல்லாத்தையும் ஃப்ரீ பண்ணி பண்ணித்தான் நாடு கெட்டுக் குட்டிச்சுவராப் போய்கிட்டு இருக்கு” என்று வகுப்பில் நுழைந்த மாத்திரத்தில் விலாசினார் ஆங்கில பேராசான் பார்த்தசாரதி. அந்த தொனி அவரது வழக்கமான ஒன்று தான்.அவர்கையில் மட்டும் துப்பாக்கி இருந்தால் ஏழைகள் அத்தனை பேரையும் சுட்டுக் கொன்று விட்டு நாட்டை பணக்கார நாடாக பிரகடனப்படுத்தி விடுவார். அவரது சுடுசொற்கள் எஸ்ஸி மாணவர்களையும் எம்பிசி மற்றும் பிசியில் உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களையும் இலக்காக கொண்டு எறியப்பட்டவை தான். வகுப்பில் இருந்த முக்கால்வாசி மாணவர்கள் அவர்கள் தான். “இந்தாப்பா இன்னைக்கு மார்ச் 1 சரியா மார்ச் 10 ம் தேதிக்குள்ள யுனிவர்சிட்டி எக்ஸாம் ஃபீஸ் கட்டிடணும். ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் அப்புறம் மார்க் ஷீட் ஃபீஸ் ஒரு 25 சேத்துக்கோங்க ஃபைனல் இயர் என்பதால் டிகிரிக்கு ஒரு ஐம்பது” என்ற சர்க்குலரைப் படித்து சுருங்க கூறினார். இந்த சர்க்குலருக்கு முன்னுரை தான் மேலே கூறப்பட்ட அந்த வார்த்தைகள். ”எஸ்பிஎஸ்” சார், என்றாலே மாணவர்களுக்கு பிடிக்காதவர் தான். அவரது எரிச்சல் பேச்சு பிடிக்காமலேயே நிறய பேர் அவரது வகுப்பை கட் அடித்து விடுவார்கள். ஆறுமுகத்திற்கு “பகீர்“ என்றது. கையில் பத்து பைசா கிடையாது. சைக்கிள் பஞ்சர் ஆனா கூட ஸ்டேடியம் ஆஸ்டலில் இருந்து நடந்து தான் கல்லூரிக்கு வரணும். ரெண்டு அரியர் மற்றும் ரெகுலர் எல்லாம் சேர்த்து ஏழு பேப்பர் வருது. அட்டெண்டன்ஸ் வேற கொறயும்.அதுக்கு ஒரு எழுபத்தி ஐந்து ரூபாய். எல்லாம் சேர்த்து ஒரு ஐநூறு ரூபாய் தேவைப்படுமே என்ன செய்வது. நியு இயர் லீவுக்குப் போனவன் பொங்கல் வரைக்கும் கிராமத்தில் வேலைக்கு போய் தான் தனக்கு ஒரு செட் டிரஸ் அம்மாவுக்கு ஒரு சேலை பொங்கல் கரும்பு, கரிநாள் அன்றைக்கான கறிச் சோறு எல்லாம் ஏற்பாடு செய்தான். பரிட்சை ஃபீஸ் ஞாபகம் இருந்திருந்தா பேண்ட் சட்டைய எடுக்காம தவிர்த்து இருக்கலாம். என்று பலவாறு சிந்தித்தபடி காஜாமியான் ஸ்கூல் பள்ளிவாசல் வழியாக ஆஸ்டலுக்கு செல்லும் குறுக்கு வழியில் சைக்கிளை விட்டான். ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடித்து விடுதியில் தேனீர் அருந்தி விட்டு மைதானத்திற்கு விளையாட்டு உடைகளோடு சென்று கொண்டு இருந்தனர். ஜமால் முகமது விடுதி சந்தில் இருந்து வெளியே வந்து சாலையைக் கடந்தால் அம்பேத்கர் விடுதிதான். ஆதி திராவிடர் நலத்துறை நடத்தும் ஆடவர் கல்லூரி விடுதியைத்தான் அம்பேத்கர் விடுதி என்று அழைப்பார்கள். அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு அடுத்த கேம்பஸ் என்பதால் ஸ்டேடியம் ஆஸ்டல் என்கிற பெயரும் உண்டு. சைக்கிளை உள்ளே ஏற்றி தான் தங்கி இருக்கும் ஐந்தாம் எண் அறை முன்னால் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான். மதியம் சாப்பிடாத காலி வயிறு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தது. “எப்போ தாண்டா எதையாவது சாப்பிட்டுத் தொலைப்ப சனியனே!! உன்கிட்ட இருந்து கிட்டு நானும் நெதம் நெதம் உன்னோட சேந்து காயுறேன்” என்று புலம்புவதாகத்தான் ஆறுமுகத்திற்குப் பட்டது. இந்த அறையில் அவன் மூன்று ஆண்டுகளாக தங்கி இதோ கல்லூரிப் படிப்பையே முடிக்கப் போகிறான். ஆனால் அந்த அறைக்கும் ஆறுமுகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆமாம், விடுதி கிடைக்காமல் அவனே “விருந்தினன்” ஆகத்தான் தங்கி இருக்கிறான். இரவு உணவு ஏழரை மணிக்குத்தான் போடுவார்கள். அதுவரைக்கும் படுத்து ஓய்வெடுத்துக் கொள்வோம் என்று பாயை ஒரு ஓரமாகப் போட்டு படுத்துக் கொண்டான். சிந்தனை பழசை எல்லாம் கிளறிவிட்டது. பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வந்திருந்தன. ஆறுமுகம் தேர்ச்சி பெற்று 1200க்கு 650 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். தமிழ் தவிர்த்து இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்தில் தான் நூறைத்தாண்டி இருந்தான். அப்பா இல்லாத நிலையில் உடல்நலம் குன்றிய அம்மாவின் சம்பாத்தியம் வயிற்றுக்கே போதாத நிலையில் ஆறுமுகம் தான் சனி, ஞாயிறுகளில் வேலைக்குச் சென்று சம்பாதித்த பணத்தில் தனது படிப்பு சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். ரிசல்ட் வந்த குதூகலத்தில், “எப்பா ஆறுமுகம் நீ காலேஜ்ல சேந்து படிச்சி பெரிய்ய வேலைக்கு போவணும்யா, எங்கயாவது கடன ஒடன வாங்கித் தாரேன் நீ எழுதிப் போடுய்யா” என்று தைரியம் ஊட்டினார் ஆறுமுகத்தின் அம்மா. கம்மந்தட்டையால் வேயப்பட்ட குடிசை அது. முக்கோண வடிவில் நிற்கும் மூங்கில் கழிகள், அதற்கு மேல் தென்னங்கீற்று வரிசைகள், அதற்கு மேலாக காய்ந்த கம்மந்தட்டையை கட்டு கட்டாக சீராக அடுக்கி வேய்ந்து இருப்பார்கள். ஒரே அறைதான், மேடாக இருப்பது திண்ணை மூலையில் சிறு அடுப்பு மேடை. அவ்வளவு தான். கீற்றுக்கிடையில் செறுகியிருந்த சீப்பினை எடுத்து சுவற்றுக்கும் நிலைக்கும் இடையில் நிற்கும் சிறு கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டு, இருக்கும் ஒரே நல்ல சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு திருச்சிக்கு காலேஜ் அப்ளிகேஷன் போடக் கிளம்பினான். வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ஒரு ஐநூறு ரூபாய் சேமிப்பு பையில் கம்பீரமாக வீற்றிருந்தது இருந்தது. ஒரு பதினைந்து நாட்கள் கழிந்த பின்பு, போஸ்ட்மேனின் சைக்கிள் பெல்லின் “கிண்கிணி“ மணியோசை ஆறுமுகம் காதில் தேனாக பாய்ந்தது. கலைந்து கிடந்த கைலியை உதறிக் கட்டிக்கொண்டு புயலென புறப்பட்டு ஓடினான். “டேய், ஆறுமுகம் டெய்லி என்ன கேட்டு நச்சரிச்சிக்கிட்டே இருந்தியே, இந்தா, திருச்சி நேஷனல் காலேஜ்ல இருந்து அட்மிஷன் கார்டு வந்திருக்கு” “அண்ணா தேங்ஸ் அண்ணா” “போய் சேந்து நல்லா படி தம்பி” என்று போகிற போக்கில் வாழ்த்திச் சென்றார். கையில் இரண்டு ஆட்டுக்குட்டிகளும், தலையில் அவற்றுக்கு ஒடித்த வேப்பந்தழையும், மடியில் கீரையும் என ஆறுமுகத்தின் அம்மா, இருட்டுக்கு முன்பு வீடு திரும்பினார். “அம்மோவ், எனக்கு காலேஜ்ல எடம் கெடச்சிடுச்சி, நாளைக்கு திருச்சி போவணும்” என்று பெருமை பொங்க அட்மிஷன் கார்டை நீட்டினான். படிக்கத் தெரியா விட்டாலும் கூட அந்த சீட்டினை கையில் ஏந்தியபடி தனக்கு தெரிந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார் அந்த அம்மா. பையனின் எதிர்காலம் நிச்சயம் நன்றாக அமைந்து விடும் என்ற நம்பிக்கை தந்த மகிழ்ச்சியில் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் கொட்டியது. கல்லூரி தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டிருந்தது. எம்.பி.சி வெல்ஃபேர் ஆஸ்டலிலும் சரி எஸ்.ஸி வெல்ஃபேர் ஆஸ்டலிலும் சரி இடம் கிடைக்க வில்லை. ஆறுமுகத்தின் மதிப்பெண்ணுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததே பெரிய விஷயம். வெளியில் அறை வாடகை எடுக்க இயலவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் ஒரு வாரம் அதிகாலை புறப்பட்டு இரவில் வீடு திரும்புவதென்று கல்லூரி சென்று பார்த்தான். பஸ் டிக்கெட்டுக்கு காசு இல்லாத காரணத்தால் பின்னர் லீவு போட்டு விட்டான். மூன்று வாரங்கள் வேலைக்கு போய் ஓரளவு காசு சேர்ந்திருந்தது. ஒரு ஆடு கல்லூரிக் கட்டணமாகவும் மற்றொரு ஆடு கிடைக்காத விடுதி இடத்துக்கு லஞ்சமாகவும் காணாமல் போயிருந்தது. இப்போது இருக்கும் காசு ஒரு வாரம் சென்று வர போதுமானதாக இருந்தது. எனவே திரும்பவும் காலேஜ்ல லீவு போட்டதுக்கு என்ன சொல்வாங்களோ என்று பயந்து பயந்து போனான். ”டேய் ஏன்டா ஒரு மாசம் கிட்டக்க லீவு போட்டுட்ட?“ என்றான் அந்த ஒரு வார கால நண்பன் வினோத். “உனக்கு என்னடா பக்கத்திலேயே இருக்குற கிராப்பட்டி கவர்ன்மெண்ட் ஆஸ்டல்ல எடம் கெடச்சிடுச்சி, நான் எங்கடா தங்கறது? டெய்லி போய்ட்டு வரவும் கஷ்டமா இருக்கு, பேசாம நின்னுக்கப் போறேன்டா” “இருடா அவசரப் படாதே, எங்க ஆஸ்டல்ல கெஸ்ட்டா தங்க முடியாதுடா, நீ வேணும்னா, ஸ்டேடியம் ஆஸ்டல்ல தங்க முடியுமான்னு பாரேன். அங்க நெறய பேரு கெஸ்ட் தங்குவாங்கலாம்” “ரொம்ப தூரமா இருக்கும் டா. எனக்கு அங்க யாரையும் தெரியாது எப்படிடா?” “ஊருல எதாவது சைக்கிள் இருந்தா எடுத்துக்கிட்டு வந்துடு. ஸ்டேடியம் ஆஸ்டல் நேர் எதிர்ல இருக்குற சந்து வழியா ஜமால் முகமது கல்லூரி கிரவுண்ட், அப்புறம் மசூதி அப்படியே மேல ஏறுனா மன்னார்புரம் அப்புறம் ஸ்ட்ரைட்டா காலேஜ் தாண்டா ஈசியா இருபது நிமிசத்தில் வந்துடலாம். அங்க ஒரு சீனியர் அண்ணன், தர்மராஜ்ன்னு இருக்காரு. பி.ஜி படிக்கிறாரு. அவருட்ட சொன்னா எதாவது ஒரு ரூம்ல தங்க வைப்பாரு” அப்படியாகத் தான் இந்த ஐந்தாம் எண் அறைக்கு “விருந்தினனாக” வந்து சேர்ந்தான். ஆனால் விருந்தினன் என்பதைக் காட்டிலும் “அகதி“ என்கிற வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் விருந்தினர்கள் அனைவரும் இங்கே இரண்டாம் தரக் குடி மக்கள் தான். கல்லூரி இரண்டாம் ஆண்டு ஆரம்பித்த சமயம். இந்த ஆண்டும் கிடைக்காது எனத் தெரிந்தே ஒரு அப்ளிகேஷனை விடுதிக்குப் போட்டு வைத்தான். இறுதி ஆண்டு மாணவர்கள் வெளியேறி அந்த இடத்திற்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் வந்து சேர்ந்தனர். கெஸ்ட்டாக இருந்தாலும் கூட முதலாம் ஆண்டு மாணவர்கள் கொஞ்சம் மரியாதையாக நடத்துவார்கள். காலையில் மெஸ்ஸில் இட்லி போட ஆரம்பித்தார்கள். 150 மாணவர்களுக்கான விடுதியில் 250 பேர் தங்கி இருந்தனர். அதேபோல 150 பேருக்கான உணவை உண்ண அடித்துப் பிடித்து 250 பேரும் ஓடுவார்கள். ஆமாம், “கெஸ்ட்“ எல்லாம் கூட மெஸ்ஸிலேயே சென்று சாப்பாடு வாங்குவார்கள். சமையல்காரர்களும் எதற்கு வம்பு என்று பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள். ஐந்தாம் எண் அறையில் மாதவன் முதலாம் ஆண்டு மாணவன். நல்லொழுக்கம் நிறைந்தவன். சற்றே ஒடுங்கிய உடலுடன் சிறுபிள்ளை போல இருப்பதால் அனைவருக்கும் பிடித்தமாகிப் போனவன். அவனை யாரும் ரேகிங் கூட செய்யமாட்டார்கள். அறையின் செல்லப் பிள்ளை அவன். பெரும்பாலும் மெஸ்ஸில் அவனுக்கு காலை உணவு கிட்டாது. அவனால் முண்டியடிக்க இயலாது. மெஸ்ஸில் பரிமாறும் மாரிமுத்து அவனைக் கண்டுவிட்டால் அவனது தட்டை இழுத்து வைத்து ஐந்து இட்லிகளை வைத்து விடுவார். இல்லை என்றால் பட்டினிதான். ஆறுமுகத்திற்கு அன்று முதலாம் முறை இட்லி கிடைக்கவில்லை. இரண்டாம் முறையும் முண்டியடித்து அனைவரது தட்டுக்களையும் இடித்து முன்னேறி மாரிமுத்துவின் கைகளை தட்டால் நெட்டினான் அதற்குள் மற்றவர்கள் பாய்ந்து அவரவர்களே இட்லிகளை கைக்கு வந்தவாறு அள்ளிக்கொண்டனர். அவர் இட்லி இருந்த போனியை வைத்துவிட்டு விலகி நின்று கொண்டார். மூன்றாம் முறைதான் கடைசி, இந்த முறை எப்படியாவது வாங்கிவிட வேண்டும். மாரிமுத்துவைக் கண்ட உடன் அனைவரும் அவர் வந்த மேசையை நோக்கி முன்னேறினர். ஆறுமுகத்திற்கு அருகில் மாதவனும் நின்றிருந்தான். கண்ணில் பட்ட தட்டில் எல்லாம் ஐந்து ஐந்து இட்லிகளாக எண்ணி எண்ணி வைத்தபடி இருந்தார் மாரிமுத்து. அன்றைக்கும் அப்படித்தான் மாரிமுத்து மாதவனைக்கண்டு விட்டார். எப்படியும் மாரிமுத்து மாதவனுக்கு இட்லி வைத்து விடுவார் என்று யூகித்த ஆறுமுகம் ஒரு ஐடியா செய்தான். மாதவன் தட்டை பற்றி மாரிமுத்து இழுத்தார். மாதவன் கண்களில் ஒரு திருப்தி படர ஆரம்பித்தது. ஆசையாக தட்டை நீட்டினான். மாரிமுத்து ஐந்து இட்லிகளை கைக்கொள்ளாமல் அள்ளி எடுத்து மாதவனின் தட்டில் போடப் போன கடைசி நொடியில் ஆறுமுகம் தட்டைச் சொறுகி இட்லியோடு இழுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மாதவனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் ஓடிச் சென்று மூலையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்து தட்டு கழுவும் இடத்திற்கு வந்த போது கண்கள் சிவக்க மாதவன் நின்று கொண்டு இருந்தான். அவனை அவ்வளவு கோபமாக பார்த்ததே இல்லை. அருகில் நெருங்கி வந்து, “கேனப்…(சென்சார் கட்) பிய்யத் திங்க வேண்டியது தானே” என்று திட்டி விட்டு ஒடுங்கிய வயிறுடன் கல்லூரிக்கு கிளம்பி போனான். நேற்று இரவு சாப்பாடு கிடைக்கவில்லை. ஓட்டலில் பரோட்டா சாப்பிடவும் காசு இல்லை. எனவே காலையில் இட்லியைக் கண்டவுடன் சற்று வெறித்தனமாக நடந்து கொண்டுவிட்டான். தற்போது ஏண்டா சாப்பிட்டோம் என்றாகிவிட்டது. மாதவன் பயலே கெட்ட வார்த்தை பேசுமளவு மோசமாக நடந்ததை எண்ணி ஆறுமுகம் வருந்தினான். இதோ இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது. ஆறுமுகமும் மாதவனும் அந்த சம்பவத்திற்குப் பிறகு பேசிக் கொண்டதே இல்லை. சென்ற ஆண்டு நவம்பர் மாதமே சாப்பாட்டு பிரச்சனைக்கு முடிவு கட்டப்பட்டது. விடுதி மெஸ் ஹால் உடனடி மீட்டிங் ஹால் ஆனது. குட்டையா கறுப்பா இருக்கும் தமிழரசன் எப்போதும் இதுமாதிரி வேளைகளில் மாணவர்களை முன் நடத்துவான். சென்ற ஆண்டு சாப்பாடு சரியில்லை என்று ஸ்ட்ரைக் செய்து கொண்டு நள்ளிரவில் கேகே நகர் அருகில் இருக்கும் கலெக்டர் பங்களாவுக்கே எல்லோரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெரிய களேபரம் பண்ணிவிட்டான். அந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி இவன்தான் என்பதை போலீஸ் காரர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள். “ஏம்பா, நாம எல்லோரும் விடுதியில் ஒரு குடும்பமா தங்கி இருக்கோம். சாப்பாடு எல்லோருக்கும் கிடைக்குதான்னா இல்லை. காரணம் 150 பேருக்கு மட்டுமே இடம் இருக்குற ஆஸ்டல்ல 250 ல் இருந்து 300 பேர் வரைக்கும் தங்கி இருக்கோம். சாப்பாடு பற்றாக்குறைக்கு காரணம் கெஸ்ட்டுங்க தான்“ ஆறுமுகத்திற்கு சுருக்கென்றது. ஆகா நம்ம இடத்துக்கு ஆபத்து வந்துடும் போல இருக்கே, இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தை எங்க கழிக்கறது என்று கலவரமானான். “அதனால இனி வரும் நாட்களில் கெஸ்ட் யாரையும் மெஸ்ல விடக் கூடாது. வேணும்னா தங்கி இருக்கட்டும். ஆனா சாப்பாடு சொந்தமா ஏற்பாடு பண்ணிக்கனும். அவங்க மெஸ்ல வந்து சாப்பாடு வாங்குவதால பல இன்மேட்ஸ் பட்டினி கிடக்குற மாதிரி ஆகுது” என்று பேசி முடித்தான். பெரும்பாலானோர் ஆமோதித்தனர். சிலபேர் சொந்தக்கார பசங்கள கெஸ்ட்டா தங்க வைத்திருந்தார்கள் அவர்கள் மட்டும் , “திடீர்னு இப்படிச் சொன்னா அவங்க எங்க போவாங்க?” என்று பேசிக்கொண்டார்கள். அடுத்த நாள் வார்டன் மற்றும் சீனியர் மாணவர்கள் கலந்து பேசி அவரவர் அறைக்கான உணவை பாத்திரம் மற்றும் வாளிகளில் பெற்றுக் கொள்ளவேண்டியது. அறைக்குச் சென்று இன்மேட்ஸ் மட்டுமோ அல்லது கெஸ்ட் உடன் பகிர்ந்தோ உண்டு கொள்ள வேண்டியது என்று முடிவு செய்யப்பட்டு அமல் படுத்தப் பட்டது. அதற்கு பிறகு அனைவருக்குமே சாப்பாடு கிடைத்தது. கெஸ்ட்டாக தங்கி இருந்தவர்கள் மண்ணெண்ணை ஸ்டவ் பாத்திரம் எல்லாம் வைத்து சமைத்து இன்மேட்ஸ் உடன் பகிர்ந்து கொள்வார்கள். “என்னண்ணே இப்படி சாயந்திரத்திலேயே படுத்துட்டீங்க?“ என்றபடி உள்ளே நுழைந்தான் பூபதி. மாதவனின் நண்பன். “ஒண்ணும் இல்லப்பா டயர்டா இருக்கு” “இந்தாங்கண்ணே வடை சாப்பிடுங்க” என்று கொடுத்தான். சங்கீத் தியேட்டருக்குச் செல்லும் தெரு முனையில் 25 பைசா வடை போட்டு விற்பார்கள். மாணவர்கள் பெரும்பாலும் சாயந்திர நேரம் அங்கே சென்று வடை சாப்பிட்டு விட்டு தேனீர் அருந்தி விட்டு வருவார்கள். ”தம்பி பூபதி காசு ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமாப்பா? எக்சாம் ஃபீஸ் இன்னும் ஒரு வாரத்துக்குள் கட்டணும். கடைசி செமஸ்டர் வேற” என்றான் ஆறுமுகம் பரிதாபமாக. “அடடா இல்லையேண்ணே” “சரிப்பா” அம்மாவுக்கு லெட்டர் போடலாமா? என்ற ஆறுமுகம் யோசித்தான். ஐநூறு ரூபாய் பொருமானம் உள்ள அடகு வைக்கவோ விற்கவோ பொருத்தமான பொருள் எதுவும் வீட்டில் நிச்சயமாக இல்லை. அம்மா என்னைக்காவது ஒரு நாள் வேலை கிடைத்துச் செல்வது அவங்க வயத்துப் பாட்டுக்கே சரியாப் போவும். லெட்டர படிச்சா அழ மட்டும் தான் செய்வாங்க. எனவே வேண்டாம் என்று தள்ளிப் போட்டான். “அண்ணே உங்க கிட்ட பணம் எதாவது இருக்காண்ணே” என்று பிஜி படிக்கும் தினேஷ் அண்ணனிடம் கேட்டுப் பார்த்தான். “ஏன்டா தம்பி, என்கிட்ட ஒரு இருபது ரூபா இருக்கு நான் ஊருக்குப் போறதுக்குள்ள தந்துடணும் சரியா?“ என்றார். “இல்லண்ணே எனக்கு ஒரு ஐநூறு ரூபா வேணும்ணே, எக்சாம் ஃபீஸ் கட்டச் சொல்லி இருக்காங்க“ என்றான். ”அய்யய்யோ அவ்வளவு பணம் யாருகிட்டடா இருக்கப் போவுது?” “வார்டன்ட்ட சேத்துவைக்கச் சொன்ன பிஸ்கட்,எண்ணை கட்டிங் காசெல்லாம் போனமாசம் தான் வாங்கி டூர் போய்ட்டு வந்தோம். அந்தாளுகிட்டயும் கேக்க முடியாதே. அம்மாகிட்ட கேட்டியா” “அவங்க கிட்ட இருக்காதுண்ணே” என்றான் பாவமாக. சரியாக ஏழு முப்பதுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் இயர் பசங்க போனி பக்கெட் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் சாப்பாடு சாம்பார் ரசம் வாங்கி வந்தனர். “தினேஷ் அண்ணே, எண்ணை தக்காளி வெங்காயம் எல்லாம் இருக்குண்ணே. வெங்காயம் தக்காளி வணக்கி சாம்பர சேத்து கொதிக்க வச்சி சாப்பிடுவோமாண்ணே” என்றான் ஆறுமுகம். பெரும்பாலும் கெஸ்டாக தங்கி இருப்போரின் ஸ்டவ் இதற்குத்தான் பயன்படும். தங்கி இருப்பதற்கு பதிலுதவியாக மண்ணெண்ணை, தக்காளி வெங்காய செலவுகளை அவ்வப்போது செய்வார்கள். “நீ என்ன தான் சாம்பார தங்கமா மாத்தி சாப்பிடக் குடுத்தாலும் எங்கிட்ட தம்புடி பைசா கிடையாது” என்று நக்கலடித்தார் தினேஷ் “அண்ணே இன்னைக்கு பயன்படுத்துலன்னா வீணாப்போயிடும்ணே” “சரி சரி இந்தா வரேன் கோவிச்சிக்காத” தினேஷ் கைவண்ணத்தில் ஆஸ்டல் சாம்பார் தேவாமிர்தமாகிவிடும். ஆறுமுகத்தின் அகோரப்பசிக்கு ஏத்த சுவையான உணவு. அன்றைக்கு வெள்ளிக் கிழமை என்பதால் நிறைய பேர் ஊருக்குப் போயிருந்தனர். அதனால் எல்லோருக்கும் வயிறு நிறைய சுவையான சாப்பாடு கிடைத்தது. என்னதான் வயிறு நிறைந்தாலும் பணத்திற்கு என்ன வழி என்று தெரியாமல் இரவு முழுவதும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான். நள்ளிரவு நேரம் ஒரு உருவம் எழுந்து மெல்ல மெல்ல நோட்டுப் புத்தகத்தோடு வெளியே சென்றது. ’வெளி வராண்டாவில் இந்த நேரத்தில் எவன்டா படிக்கப் போறான்?’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டு யார் என்று பார்த்தேன் ’அட இந்த மாதவன் பய’ ’இவர்கள் இருவரும் எதற்காக பேசிக் கொள்வதில்லை? என்னப் பிரச்சனை இருவருக்குள்?’ என்று தெரியாமல் ஒன்றரை வருடமாக ஐந்தாம் நம்பர் அறையில் இருந்த எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டனர். அடுத்த நாள் விடிந்தது. ஆறுமுகத்தின் பிரச்சனைகளுக்குத் தான் விடிவு இல்லை. சோர்வாக எழுந்தான். தலையில் வைத்திருந்த புத்தக கட்டுக்கு அடியில் ஒரு கடிதம் நீட்டிக் கொண்டு இருந்தது. “அண்ணா, நீங்கள் முதலில் என்னை மன்னிக்க வேண்டும். அன்றைக்கு சாப்பாடு கிடைக்காத விரக்தியில் அந்த கணநேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் உங்களை திட்டிவிட்டேன். அதன் பிறகு எனக்கு உங்கள் முகத்தை நேர்கொண்டு பார்க்க இயலவில்லை. நீங்களும் என்னுடன் பேசுவதை தவிர்த்து விட்டீர்கள். சென்ற மாதம் எனக்கு வந்த ஸ்காலர்ஷிப்பில் புத்தகங்கள் வாங்கியது போக வீட்டுக்கு கொடுக்க ஒரு ஐநூறு வைத்திருந்தேன். அதை இத்துடன் வைத்துள்ளேன். தேர்வுக்கட்டணம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் லீவு போட்டு விட்டு வேலைக்குப் போக வேண்டாம். உங்களிடம் பணம் கிடைக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும். மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்புத்தம்பி மாதவன். லெட்டரை படித்து முடித்தபோது கண்களில் கட்டுப் பாடில்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. கண்ணீரோடு மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு மாதவனைத் தேடினான் ஆறுமுகம். “மாதவன் ஊருக்கு நைட் பஸ் இல்லைல்ல அதனால விடியற்காலையிலேயே கிளம்பி போய்ட்டான், நீ தான் அவனோட பேச மாட்டியே இப்போ என்ன தேடுற?” “இல்லண்ணே எக்சாம் ஃபீஸ் மடிச்சி வச்சிட்டு லெட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்காண்ணே“ என்று கண்கலங்கியபடி தினேஷிடம் கூறினான். 15.08.2019 சுதந்திர தினவிழா கொண்டாட்டம். காலையிலேயே வார்டன் நல்லத்தம்பி ஆறுமுகத்திற்கு போன் அடித்துவிட்டார். மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலராக பணிபுரியும் ஆறுமுகம் அவரது துறையின் கீழ் வரும் ஏதேனும் ஒரு கல்லூரி விடுதியில் கொடியேற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டவர். திருச்சி மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்ததில் இருந்து அம்பேத்கர் கல்லூரி விடுதிக்கு சென்று வர நல்லதொரு வாய்ப்பை எதிர் நோக்கி இருந்தார். சரியாக சுதந்திர தினவிழாவில் வாய்ப்பு அமைந்தது. அதே வளாகம் அதே கட்டிடம் சற்று புதுப்பிக்கப் பட்டு இருந்தது. வாயிற்படியில் இரண்டாவது முறையாக ”விருந்தினராக” கால் வைத்தபோது ஆறுமுகத்திற்கு உடல் சிலிர்த்தது. அப்போது வேண்டாத விருந்தாளி இப்போது சிறப்பு விருந்தினர். ஆமாம், படிப்பு எல்லாத்தையும் மாத்திடுச்சி. இதையன்றி அந்த மாணவர்களிடம் கூறுவதற்கு சுதந்திர தினச் செய்தி வேறு ஏதாவது உண்டா என்ன? “நான் இந்த விடுதியின் முன்னாள் விருந்தினன்…” என்று பேச்சைத் துவக்கினார் ஆறுமுகம். 🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

2 comments:

  1. Somewhat long Article Sir.

    ReplyDelete
  2. Arumugam லக்கி மேன். ஆரம்பதிதில் கஷ்டப்பட்டு , பிறகு நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளார். தங்களது கற்பனை கலந்த real கதையாகினும் அவரும், நீங்களும் வாழ்க பலலாண்டு.

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...