Thursday, October 26, 2017

அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது.


“ஆம் உங்கள் ஊகம் சரிதான், இது ஒரு கவிதைப் புத்தகம் பற்றிய பதிவுதான்”
எங்கள் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் பரிந்துரை செய்த கவிதைப் புத்தகம் பற்றிய பதிவு இது.
கவிஞர் ”மௌனன் யாத்ரீகா” அவர்களின் மூன்றாவது பிரசவம் இந்த நூல். கவிஞர் தனது மந்திரப் பேனாவில் மரபுச் சொல் ஊற்றி புதுக் கவிதையை பிரசவித்திருக்கிறார்.

சித்திரத்தில் மரபு ஓவியங்கள் புரிந்து கொள்ளுதல் எளிது. மாடர்ன் ஆர்ட் எனும் நவீன வகை சித்திரங்களுக்குத் தான் கோனார் நோட்ஸ் தேவைப்படும். கவிஞரின் மரபுச் சொல் எடுத்து புதுக் கவிதை புனையும் பாணி எல்லோரையும் வசீகரிக்கும் வண்ணம் இருப்பது வி“சித்திரம்“.
கவிஞர் எதைப் பாடியிருக்கிறார்?
சுகத்தைப் பாடியிருக்கிறார் சோகத்தையும் பாடியிருக்கிறார்.
இசையைப் பாடியிருக்கிறார் இல்லறத்தையும் பாடியிருக்கிறார்.
இருளைப் பாடியிருக்கிறார் இயற்கையையும் பாடியிருக்கிறார்.
மலையழகைப் பாடியிருக்கிறார் மழையழகையும் பாடியிருக்கிறார்
காட்டினைப் பாடியிருக்கிறார் பறவைக் கூட்டினையும் பாடியிருக்கிறார்
கோடையைப் பாடியிருக்கிறார் பாதகத்தி ஆடையையும் பாடியிருக்கிறார்
நெல்வயலைப் பாடியிருக்கிறார் அது “கல்“வயலாகிப் போனதையும் பாடியிருக்கிறார்
காதல் மயக்கத்தைப் பாடியிருக்கிறார் காம முயக்கத்தையும் பாடியிருக்கிறார்
பூக்களைப் பாடியிருக்கிறார் அதன் வாசம் திருடியதையும் பாடியிருக்கிறார்
பாடல் தோறும் விசிறியடிக்கும் மழை, காரிருள், தனிமை மற்றும் தொட்டுத் தொடரும் மென் சோகம் என நமது இதயத்தை மயிலிறகால் வருடியபடி செல்கிறது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும். மென்னுடல் உடையவர்கள் கைவசம் சில மாத்திரைகளை வைத்துக் கொண்டு படியுங்கள் ”அந்த நாடோடியின் நனைந்து போன பாடல்“ உங்கள் அகத்தையும் புறத்தையும் சேர்த்தே நனைத்து விடும்.
என்னை சற்று ஆழமாக சென்று நனைத்த சில திவலைகளை இங்கே உலர்த்தி பாதுகாக்க முனைகிறேன்.
“இந்த உலகின் வியப்பை
வாசித்துவிட அலைகிற நாடோடி நான்.“ வாசிப்பின் மீது தீறா காதல் உற்ற அனைவருமே இவர் குறிப்பிட்ட நாடோடி வகையினர் தானே?
இரவென்றால் மையிருட்டு என்றல்லவா இதுகாரும் நினைத்து இருந்தேன் இது என்ன இரவிற்கும் பசியும் ருசியும் உண்டென்கிறார் கவிஞர்?
”இரையைக் கவ்விச் செல்லும்
மிருகம் போல் என்னைக்
கவ்விக்கொண்டு போகிறது இரவு”
இரவின் மீது அனைவருக்கும் இருக்கும் அச்சம் ஒருவகை என்றால் இவரது அச்சம் வேறு வகை,
”தனிமையில் இருப்பவர்களை
ருசி பார்த்துவிடும் இரவுகளை
காண அச்சம் கொள்கிறேன்”
என்கிறார். உண்மைதான் தனிமையில் இருப்பவர்களை இந்த இரவு ருசி பார்க்கவும் செய்கிறது தான்.
“உதட்டுச் சுழிப்புக்கு
ஊடல் உடைதல்“
என்கிறார். உதட்டுச் சுழிப்பு என்னும் சுழலில் சிக்கி நமது கோபம் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. ஊடல் உடையாமல் கூடல் எங்ஙனம் நிகழும்?
இரவு முடிந்து பொழுது புலர்வதை இவ்வளவு அழகாக எவரும் கூறியதில்லை என்று சவால் விடுகிறேன்
“வண்ணங்களில் நனையும் தூரிகை
ஒரு சித்திரத்தை அருந்தக் கொடுக்கும்
அனுபவத்தை ஒத்ததாய்
அமைந்தது அந்த இரவு”
“தகுதியொத்தவர்“ இந்தக் கவிதை நல்லதொரு உளவியல் ஆய்வு.
“தகுதியொத்தவர் வாய்த்த பிறகே
சுமை இறக்கி மெதுவாய்
இயல்படைய முடிகிறது”
ஆம் நம்மைப் போல ஒரு fellow sufferer ஐக் காணும் வரை நம் துன்பம் மலையெனக் கனக்கிறது. கண்டபின்பு அப்பாடா I am not alone என்கிற ஆசுவாசம் பிறக்கிறது.
நெல்வயல்கள் எல்லாம் கல்வயல்களாய் மாற்றம் அடைவதை ஆற்றாமையுடன் இப்படி பதிவு செய்கிறார்,
“அறுத்துக் கூறு போடப்படும் ஒன்றை
நிலம் என்று சொல்வதற்கில்லை”
தீராப் பெருங் கோபங் கொண்ட ஒரு கவிஞனின் வார்த்தையின் வலிமையை “பைத்தியக்காரனின் இலக்கியம்“ என்கிற தலைப்பிட்டு எழுதுகிறார்.
“குரூரமான மிருகத்தின்
நஞ்சேறிய பற்களைப் போன்றிருக்கும்
அவன் எழுத்துக்கள்”  Yes, his pen is mightier than the sword!
“நேரத்திலே ஊர் செல்ல வேண்டும்” இதில் சேது படத்தில் இளையராஜாவின் குரலில் ஒலித்த காதல் சோகத்தை அவர் எழுதியதை படித்தபின்பு அந்தப் பாடலை இணையத்தில் எடுத்து ஒலிக்க விட்டு தூக்கம் தொலைத்து புரண்டேன்.
என்ன கவிஞரே இரவின் மீது அத்தனைக் காதல்?
”இரவைப் பருகத் தொடங்கியவர் எவரும்
கோப்பையைக் கீழே வைப்பதில்லை”
இது நாம் பெரும்பாலானோர் வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் செய்யும் திருட்டு தான்
“அடுத்த நிறுத்தத்தில்
இறங்கிப் போய்விடப் போகிற
பூக்காரியிடமிருந்து
வாசனையை அள்ளிக்கொண்டேன்”

நான் இங்கே காட்டியது வெறும் பனிப்பாறை நுனி( Tip of an iceberg) மட்டுமே!

நனைய விரும்பும் கவிநேசர்களுக்கு தேவைப் படும் விபரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.



Monday, October 23, 2017

லால்குடி டேஸ் - 12 டியுசனுக்கு போகாமல் கற்றுக் கொண்ட கணக்கு

டியுசனுக்கு போகாமல் கற்றுக் கொண்ட கணக்கு
பதினோறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கற்ற கணிதம் போதுமானதாக இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் தேவை ஆதலால் கணிதப் பாடத்திற்கு டியுசன் சேர்ந்தேன்.
பாரத் டியுசன் சென்டர்இது தான் டியுசன் சென்டர் பெயர். லால்குடி பூங்காவனம் தியேட்டருக்கு போகும் வழியில் அந்த தியேட்டருக்கு முந்திய சந்தில் இருந்தது. விடுதியில் இருந்து ஒரு ஐந்து பேர் மட்டும் டியுசன் சென்றோம்.
டியுசனில் பார்த்தால் நாங்கள் விடுதி மாணவர்கள் ஒரு ஐந்து பேர் தான் ஆண்கள் மற்றும் தமிழ் மீடியம். மீதி 15 பேர் பெண்கள் மற்றும் ஆங்கில மீடியம்.
டியுசன் ஆசிரியர் மோகன் அவர்கள் எங்களை விட ஒல்லியான உடல் வாகு உடையவர். பூவாளுரிலிருந்து சைக்கிளில் வருவார். மிக இனிமையானவர். கணக்கினை தமிழ் ஆங்கிலம் என இருவருக்கும் பேலன்ஸ் செய்து நடத்துவார். அவரின் தயவால் தான் எனக்கு கல்லூரியல் ஆங்கில வழியில் படித்தபோது ஆங்கில சொல்லாடல்கள் மிரட்சியைத் தரவில்லை.
நாங்கள் ஆண்கள் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆதலால் பெண்களிடம் இயல்பாக பேசும் வாய்ப்பு அமைந்தது இல்லை. எனவே டியுசனில் பெண்கள்ஹலோஎன்றால் கூட கூச்சத்தில் வியர்த்து நெளிவோம். எங்களில் சற்று துணிச்சலானவன் இரவிச்சந்திரன் அவன் தான் பேசுவான்.
பள்ளியில் இருந்து திரும்பியதும் மற்ற நண்பர்கள் எல்லாம் ஓய்வெடுக்கும் போது நாங்கள் டியுசன் செல்வோர் மட்டும் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் மோடில் இருப்போம்.
அந்த மாதிரியான ஒரு மாலை வேளையில் நண்பன் அசோக் என்னை தடுத்தாற் கொண்டான். “டேய் ஜெயராஜ் ஒரு கணக்கு கொடுக்கிறேன் போடுறியா?“
எதுவா இருந்தாலும் டியுசன் போய்ட்டு வந்த அப்புறம் பார்க்கலாம். உனக்கென்ன ஜாலி டியுசன் போக வேண்டியதில்லை!“
இல்லடா நீ இந்த கணக்கு போட்டின்னா ஒரு விஷயம் இருக்குஎன்று ஒரு பொடி வைத்தான்.
நானும் தும்மிக் கொண்டேஎன்ன விஷயம்டா?” என்று சற்று வேகம் குறைத்தேன்.
உனக்கு மனைவியா வரப்போறவங்க பேர கணக்குப் போட்டே கண்டு பிடிச்சுடுவேன்
ஏய் அதெப்படி முடியும்?”
நான் கேக்குற தகவல்கள் எல்லாம் சரியாச் சொன்னா என்னால் சொல்ல முடியும்
கணக்குல இல்லாத புதிர்களா? அல்லது கணிதம் செய்யாத அற்புதங்களா? சொன்னாலும் சொல்லிடுவான். என்று எண்ணியபடி சுவாரசியமானேன். மெல்ல அமிர்தலிங்கத்தின் இரும்பு பெட்டியில் அமர்ந்தேன்.
அசோக்கும் அருகில் அமர்ந்து கொண்டு. ”இந்தா கேக்குறேன்என்று ஒரு நோட்டை எடுத்துக் கொண்டான். ”நீயும் ஒரு ரஃப் நோட்டு எடுத்துக்கோ
என்னடா நோட்டெல்லாம் எடுக்க சொல்ற நான் டியுசன் போகணும்டா!”
இல்லடா சின்னக் கணக்குதான். போட்டீன்னா உன் மனைவி பேர சரியா சொல்லிடுவேன்.”
அவன் இவ்வளவு திண்ணமாக சொன்னதால்டியுசன் கிடக்கட்டும் கழுத நாளைக்கு பாத்துக்கலாம். இன்னைக்கே என் மனைவி யார்னு பாத்துட்டுத் தான் மறுவேளைஎன்று எண்ணியபடி தயாரானேன்.
உன் பேர் ஜெயராஜ், உன் அப்பா பேர் சொல்லு
முத்துவேல்
அம்மா பேர்?“
கண்ணம்மாள்
ஊர்?“
சுத்தமல்லி
பிறந்த தேதி?“
“11-06-1977“
சொன்னவற்றை எல்லாம் தனது நோட்டில் குறித்துக் கொண்டான். பின்னர் நோட்டின் குறிப்பிட்ட பக்கத்தை புரட்டி பார்த்து ஏதோ முணுமுணுத்தான். பின்னர் விரல்களை விட்டு ஏதோ எண்ணினான்.
ஜெயராஜ் இந்தா 11061977 இந்த நம்பர 81 ஆல் பெருக்கு
என்னடா சின்னக் கணக்குன்ன இம்மாம் பெருசா இருக்கு
ஏய் உன்னாலேயே முடியாதுன்னா எப்படி?” என்று எனது தன்மானத்தை தூண்டிவிட்டான்.
இதோ இப்போ சொல்றேன்
உக்காந்து கொண்டு சிறிது நேரம் படுத்துக் கொண்டு என்று போட்டு முடித்து விட்டேன்.
இந்தாடாஎன்று கொடுத்து விட்டேன்
ஏய் ஒரு நிமிஷம்என்று மறுபடியும் பிடுங்கிக் கொண்டேன். கணக்கு சரியாக உள்ளதா என்று செக் பண்ணிடலாம். கணக்கு தவறாகப் போய்கொல்லங்குடி கருப்பாயின்னு ஆன்சர் வந்தா என் மனது தாங்காது.
ம் இந்தா சரியாக இருக்கு
வாங்கிப் பார்த்தான். மறுபடியும் நோட்டில் அந்த ரகசியப் பக்கத்தை புரட்டினான். கடைசி இரண்டு இலக்கங்களை மாற்றி எழுதினான். நான் கொடுத்த 10 இலக்க எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்களை மட்டும் மாற்றி எழுதிஇந்த நம்பரை இதே நம்பரால் பெருக்கி சொன்னீன்னா போதும் பெயரை கண்டுபிடிச்சிடலாம்
என்னாது பத்து இலக்க எண்ணின் ஸ்கொயரா? என்னடா சொல்ற?“
இதாண்டா லாஸ்ட் ஸ்டெப். உன்னால கூடயா முடியாது?“ என்ற பிரம்மாஸ்திரத்தால் மறுபடியும் வீழ்த்தி விட்டான்.
நானும் படுத்து உருண்டு புரண்டு என்று ஒரு 25 நிமிடங்கள் செலவு செய்து விடை கண்டேன். மீண்டும் ஒரு பதினைந்து நிமிடங்கள் செலவு செய்து அதனை செக் செய்தேன்.
அதனை அவனிடம் கொடுத்தவுடன் மீண்டும் அந்த குறிப்பேட்டின் இரகசிய பக்கத்தை புரட்டினான். அப்புறம் நோட்டில் இரகசியமாக சில கோடுகள் போட்டான். அப்புறம் ஏதோ ஒவ்வொரு எழுத்தாக எழுதினான். ’என்ன ரொம்ப நீளமான பேரா இருக்குமோ?’
இந்தாடா என்று ஒரு பேப்பரை நான்காக மடித்து தந்தான்
அதில் அழகாக எழுதி இருந்தான்திருமதி ஜெயராஜ்என்று.
அவன் மீது கொலை வெறித் தாக்குதலில் இறங்கி விடுவேன் என்று தெரிந்து ஓடத் தயாரானான்.
அவனுடைய நோட்டு கீழே விழுந்தது. அதில் ஒன்றும் இல்லை.

“நீ திருமதி ஜெயராஜ்னு எழுதினத கூட மன்னிச்சுடுவேன்டா ஆனா ஒரு பத்து டிஜிட் நம்பர ஸ்கொயர் பண்ண வச்சியே அத மட்டும் என்னால மன்னிக்க முடியாதுடா” என்று அவன் மீது பாய்ந்தேன்.

Sunday, October 22, 2017

”குலோப் ஜாமூனும் குளோபல் வார்மிங்கும்”


தீபாவளிக்கு குலோப்ஜாமூன் செய்வது என்று எங்கள் வீட்டில் பொதுக்குழு கூடி தீர்மானித்தோம். தீர்மானத்தை எனது மனைவி முன்மொழிந்தார் நான் வழக்கம் போல் வழிமொழிந்தேன்.
எனது மகனை அழைத்துக் கொண்டு நேஷனல் ஷாப்பிங் மால் சென்றேன். எந்த கம்பெனி குலோப் ஜாமூன் மிக்ஸ் ஆனாலும் ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ. நான் எனது மனைவி தீர்மானத்தில் அடிகோடிட்டு தெரிவித்து இருந்த ஆச்சி குலோப் ஜாமூன் மிக்ஸ் வாங்கினேன். நன்றாக பார்த்து நேர்த்தியான பாக்கெட்டாக தேர்வு செய்தேன்.
முதல் முறை குளோப் ஜாமூன் செய்தபோது நடந்த “ருசி“கரமான சம்பவம் ஒன்று. எல்லோருக்கும் போன் போட்டு “இந்தா பாத்துக்கோங்க நானும் குளோப்ஜாமூன் செய்யப்போறேன்“ என்று அறிவிப்பு விடுத்து விட்டு ஜோராக ஆரம்பித்தார். மாவு பிசைந்ததிலோ உருட்டியதிலோ ஏதோ தவறு செய்துவிட்டார் எனது இல்லத்தரசி. ஆகையால் எண்ணையில் போட்டதும் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி என்று பெர்லின் சுவரோடு பிரிந்து விழுந்தது. அவரின் மெல்லிய மனம் அந்த பிரிவினையை தாங்க இயலவில்லை. உடனே எல்லோருக்கும் போன் செய்து “அவர் சக்கரையை மாற்றி வாங்கி வந்து விட்டதால் குலோப் ஜாமூன் சொதப்பி விட்டது“ என்று பிரகடனம் செய்து விட்டார். இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டால் போர் மூளும் அபாயம் உண்டு எனவே சற்று இராஜதந்திரத்தோடு அமைதியை கடைபிடித்தேன்.
எனவே இரண்டு முறை போர் மூளுவதற்கான வாய்ப்பை நாமளே ஏற்படுத்தி தரக்கூடாது என்று ஒரு பாக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டேன். பலமுறை பூஸ்ட் வாங்கும் போது ஃப்ரீ வாங்கி பழகிய அருண் எந்த பாக்கெட்டில் ஃப்ரீன்னு போட்டிருந்தாலும் உடனே பில் போடும் இடத்தில் ஞாபகப் படுத்தி வாங்கி விடுவான். எனவே நான் ஒரு பாக்கெட்டோடு சென்றதைப் பார்த்ததும் “குடு குடு“ என்று ஓடி மற்றொரு பாக்கெட்டோடு வந்தான். “விதி வலியது“ என்று நொந்து கொண்டேன்.
“அம்மா அம்மா, அப்பா ஆச்சி குளோப் ஜாமூன் மிக்ஸ் வாங்கும் போது ஃப்ரீ பாக்கெட் வாங்க மறந்துட்டார்மா நான் தான் ஞாபகப் படுத்தி வாங்கிட்டு வந்தேன்“ என்று பீற்றிக் கொண்டான்.
“ம்க்கும், என்னத்த தான் எம்.எஸ்ஸி லாம் படிச்சாரோ ஒரு பொருள் கூட சரியா பாத்து வாங்க தெரியல”
சினிமாவுக்கு பிறகு அதிக லாஜிக் மீறல்கள் நடக்கும் இடம் மனைவிமார்களின் வசவுகள் தான். யுனிவர்சிட்டி சிலபஸ்ல “கடையில் ஜாமான் வாங்குது எப்படி“ என்றெல்லாமா வருது. திட்டறதுலயும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா?
“டேய் தம்பி உன் வேகம் எனக்கு ரொம்ப சோகம்!” என்று அருணை கடிந்து கொண்டேன்.
இரண்டாம் முறை குளோப் ஜாமூன் செய்த போது முதல் முறை ஏற்பட்ட பிரிவினை மாதிரி ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று மாவை பிசைந்து உருட்டும் வேலையை எனக்கு இட்டு விட்டு  டிவி நெடுந்தொடரில் மூழ்கி விட்டார்.
இரண்டு சொட்டு விளக்கெண்ணை எடுத்து கண்ணில் விட்டுக் கொண்டு ஜாமூன் பாக்கெட்டில் போட்டிருந்த பொடிப்பொடி எழுத்துக்களால் செயல் முறையை கவனமாக படித்துக் கொண்டேன்.
ஒரு பங்கு மாவுக்கு கால் பங்கு தண்ணீர் என்று போட்டிருந்தான். மாவு கொட்டியபோது அளக்கவில்லை. இரண்டு டம்ளர் மாவு இருக்கும் என்று எடுத்துக் கொண்டு ஒரு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றினேன். கையை விட்டு பிசைந்தால் மழைக்கால களிமண் வயலில் கால் வைத்த கதையாய் கை விரல்கள் நன்றாக சிக்கிக் கொண்டன.
மெல்ல எட்டிப் பார்த்தேன். மனைவி டி.வி சீரியலில் மூழ்கி இருந்தார். கண்களில் நீர் தாரை தாரையாய் வடிந்து தரையெல்லாம் ஈரமாகி இருந்தது. அவர் சகஜ நிலைமைக்கு திரும்புவதற்குள் இதை சரி செய்ய வேண்டுமே என்று பதட்டமாகி விட்டது. இல்லை என்றால் நான் படித்த பி.எட் பட்டமும் கூட கேள்விக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது.
பாக்கெட்டை எடுத்து மறுபடியும் இரண்டு சொட்டு விளக்கெண்ணை கண்ணில் விட்டுக் கொண்டு “இன்கிரிடியன்ட்“ பார்த்தேன். பால் பவுடரும் கோதுமை மாவும் தான் கலந்துருக்கான் என்று தெரிந்தது. எனவே கோதுமை மாவு சிறிது எடுத்து தூவி சரி செய்து விரல்களை விடுதலை செய்தேன்.
அந்த முறை குளோப் ஜாமூன் ஏதோ வித்தியாசமான சுவையில் உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த ரகசியம் “பாபநாசம்“ பட ரகசியத்தை போல எனக்குள்ளே புதைக்கப்பட்டு விட்டது.
ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சரி தீபாவளி சம்பவத்திற்கு வருவோம். குளோப் ஜாமூன் பிசைந்து உருட்டுவது நான் தான் என்று முடிவாயிற்று. இந்த முறை எந்த “சிக்கலிலும்” மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மாவில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து நல்ல பதத்தில் பிசைந்தேன். உருண்டையும் நல்ல வடிவாக பிடித்தேன். கண்டிப்பாக அனைத்தும்  சமமான கன அளவு உடைய கோளங்கள் தான்.
எனது மனைவி பாகு காய்ச்ச ஆரம்பித்தார். சர்க்கரையில் தண்ணீர் கலந்து “ஒரு சாராயம் காய்ச்சுபவனின்” நேர்த்தியோடு அடுப்பருகில் நின்று கொண்டு பக்குவமாக காய்ச்சினார். சற்று நேரம் சென்றதும் ஒரு சொட்டு எடுத்து விரல்களுக்கிடையில் வைத்து நசுக்கிப் பார்த்தார். சிறிது நேரம் சென்றதும் கரண்டியால் பாகினை ஒரு முப்பது சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தி அங்கிருந்து சொட்டினார். மேலும் சிறிது நேரம் சென்றதும் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டுப் பாகினை விட்டார்.
’உன்னோட இந்த ஆராய்ச்சி மனப்பான்மை நம்மள எங்கேயோ கொண்டு போகப் போகுது’ பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்ததாக மாவு உருண்டைகளை எண்ணையில் பொறித்தார். இங்கு உள்ள அறிவியல் நுட்பத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கோதுமை மாவு மற்றும் பால் பவுடர் கலவையில் பால் பவுடர் சுவைக்காகவும் கோதுமை மாவு பூரி போல காற்றறையை ஏற்படுத்துவதற்காகவும் சேர்க்கப்படுகிறது. அதனை சர்க்கரைப் பாகில் போடும் போடு அந்த காற்றறைகளில் பாகு புகுந்து அடைத்துக் கொள்வதால் அதன் இனிப்பு சுவை அலாதியாக உள்ளது.
முதல் முறை பொறித்த உருண்டைகள் பாகில் போடப்பட்டன. அவரின் ஆராய்ச்சி மனப்பான்மை “எங்கேயோ கொண்டு போகப் போகுது” என்று வியந்தேன் அல்லவா. உண்மைதான் அண்டார்டிக்காவுக்கே கொண்டு போய்விட்டது.
ஆம் கொஞ்சம் ஓவரா சூடாக்கியதால் சர்க்கரை கோபித்துக் கொண்டு இறுகி விட்டது. மொத்த பாகும் அண்டார்டிக்கா பனிப்பாறைகளாக காட்சி அளித்தது. உறைபனியில் சிக்கிய கப்பல்களாக ஐந்து குளோப் ஜாமூன்கள் வேறு. உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினேன். லாவகமாக எடுத்த காரணத்தால் சேதாரம் 0 பர்சென்ட்.
இறுகிய பாகு என்ன சர்க்கரை படிமங்கள் தானே? எனவே மீண்டும் நீர் சேர்த்தால் கரையும் சுடவைத்தால் பாகு தயார் என்று எனது யோசனையை கூறினேன். மேலும் இதில் உன்தவறு ஏதும் இல்லை. “குளோபல் வார்மிங்“ ஆல் பூமியில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது அல்லவா, அதில் இதுவும் ஒன்று. எனக்கு முடி நரைப்பது கூட “குளோபல் வார்மிங்“ ஆல் தான் என்று சமாதானப் படுத்தினேன். எனது மகன் பொங்கி வந்த சிரிப்புக்கு உதட்டால் அணை போட்டுக் கொண்டே ஆட்காட்டி விரலை துறுத்திக் காண்பித்தான். கண்ஜாடை செய்து அவனை அப்புறப் படுத்தினேன்.
இறுதிக் கட்டப் போரானது எனது இராஜதந்திர நடவடிக்கையால் தவிர்க்கப் பட்டு குளோப் ஜாமூன் நல்ல நிலைமையில் வந்து விட்டது.
“அக்கா உங்க வீட்டில் ஜீரா ஒழுங்கா வந்ததா அக்கா? இந்த “குளோபல் வார்மிங்“ ஆல் ஜீரா ஒழுங்கா வரமாட்டேங்குது அப்புறம் சரிபண்ணிட்டேன்” என்று போனில் கதைத்துக் கொண்டிருந்தார்.


Tuesday, October 17, 2017

பெற்றோர்களே ஒரு நிமிடம்

எங்கள் பள்ளியில் காலாண்டுத் தேர்வுக்கு பிந்தைய பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது. பெற்றோர்கள் குழுமி இருந்த அரங்கில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படித்த பெற்றோரும் பெரும்பாலான படிப்பறிவு இல்லாத பெற்றோரும் நிறைந்த அரங்கு. எனவே பதின்பருவ புரிதல் மற்றும் படிக்கும் முறை சார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்னுடைய உரையை அமைத்துக் கொண்டேன். சற்றே செழுமை படுத்தி எழுத்து வடிவமாக வழங்கி உள்ளேன்.

உலகத்திலேயே கடினமான வேலை எது தெரியுமா? 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளை வளர்ப்பது தான்.
இவ்வளவு நாள் நீங்கள் போகும் பாதையில் ஆட்டுக் குட்டி போல மண்டையை ஆட்டிக் கொண்டு வந்தவர்கள் இப்போது சற்று நின்று நிதானித்து பாதை மாற முயற்சிப்பார்கள்.
இதுநாள் வரை எந்த பிரச்சினையிலும் உங்கள் கருத்து தான் அவர்கள் கருத்தாகவும் இருந்து வந்திருக்கும். ஆனால் இப்போது நீங்கள் எதைக் கூறினாலும் கேள்வி கேட்காமல் ஏற்பதில்லை.
உங்களைக் கட்டிக் கொண்டு உறங்கிய பிள்ளைகள் பிரிந்து படுப்பதை விரும்புவார்கள்.
எப்போ பார்த்தாலும் உங்கள் முந்தானையை பிடித்துக் கொண்டு அலைந்தவர்கள் இப்போது நண்பர்களுடன் நேரம் காலம் தெரியாமல் அரட்டையில் திளைப்பார்கள்.
தான் எப்படிப் பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளையாக தன்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்வது என்கிற குழப்பம் ஏற்படும். சினிமா நாயக நாயகி பிம்பங்களால் தாக்குண்டோ அல்லது பிடித்த விளையாட்டு வீரர்களின் தாக்கத்தாலோ அல்லது பிடித்த ஆசிரியர்களின் தாக்கத்தாலோ ஏன் தெருவில் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் பொறுக்கிப் பசங்களின் ஆளுமை பாதிப்பில் கூட தங்களை கட்டமைக்க விரும்புவார்கள்.
தோற்றம் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பிடித்த ஹீரோ போல மாற்றிக் கொள்வார்கள். இதில் ஒத்த வயதுடைய நண்பர்களின் ஊக்கமோ அல்லது விமர்சனமோ அவர்களை இன்னும் பாதிக்கும்.
உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இடைவெளி ஏற்படும். மெல்ல மெல்ல தங்களின் நடவடிக்கைகள் குறித்த ரகசியத்தன்மை காப்பார்கள்.
நான் இதுகாரும் கூறியவை குறித்து அஞ்சத் தேவையில்லை. குழந்தைகளின் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற மாறுபாடு மற்றும் அதன் விளைவாக தோன்றும் உளவியல் மாறுபாடு போன்றவற்றால் 90 விழுக்காட்டுக்கு மேலான குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் தான் இவை.
இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு நாம் பக்குவமாக அவர்களை வழிநடத்தினால் அவர்களை தடம் மாறாமலும் தடுமாறாமலும் காக்கலாம்.
பதின் பருவ குழந்தைகளின் திறமையும் வலிமையும் காட்டாற்றைப் போல அபரிமிதமான ஆற்றல் உடையது. நாம் சரியாக நெறிபடுத்தி அந்த ஆற்றலை ஆக்கப் பூர்வமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தவறினோமானால் யாருக்கும் பயன் படாமல் கடலில் கலக்கும் காட்டாறு போல குழந்தைகள் சமுதாயத்திற்கு பயனில்லாமல் போய் விடுவார்கள்.
அவர்களைப் பொருத்தவரை சந்தோஷத்தை தரும் எதுவுமே நல்லவைதான். துரதிஷ்டவசமாக கெட்ட விஷயங்கள் கவர்ச்சிகரமாகவும்  தற்காலிக பேரின்பத்தையும் தரக் கூடியது என்பதால் அதனை முயற்சித்துப் பார்க்கத் தலைபடுவார்கள். தனக்கென்று லட்சியம் வைத்துக் கொண்டு பொறுப்பாக அதனை நோக்கி முன்னேறிச் செல்லும் மாணவர்கள் கூட அந்த கவர்ச்சியாலும் ஒத்த வயதுடைய நண்பர்களின் ஆசை வார்த்தையாலும் மயங்கி தவறான பாதையில் செல்ல முயற்சிப்பார்கள். அது குறித்த குற்ற உணர்வும் பயமும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை நிலைகுலையச் செய்து அதிக பதட்டமும் தடுமாற்றமும் உள்ளவர்களாக அவர்களை மாற்றிவிடும்.
எனவே நல்ல பழக்க வழக்கங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கும் பாதிப் பாதி உள்ளது.
மேற்கூறிய விஷயங்களை எல்லாம் பதின் பருவ குழந்தைகளின் பெற்றோர் புரிந்து கொண்டிருப்பது அவசியம்.
தற்போது படிப்புக்கு வருவோம்.
பிள்ளைகள் எங்களிடம் இருப்பது ஏறக்குறைய ஒரு எட்டு மணிநேரங்கள். மிச்ச நேரம் உங்களிடம் தான் உள்ளனர். அதற்காக 24 மணி நேரங்களும் ஒரு குழந்தை படித்துக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. வேண்டுமானால் கோழிப்பண்ணை விடுதிப் பள்ளிகளில் இது சாத்தியப் படலாம்.
இரவில் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மேலும் அதிகாலை மணி ஐந்து முதலாகவும் என அவர்களின் படிப்பு நேரத்தை அமைத்துக் கொள்ளலாம். பரிட்சை காலங்களில் தேவைப்பட்டால் கூட்டிக் கொள்ளலாம். தினந்தோறும் படிப்பதென்றால் இது போதுமானது. இரவு பனிரெண்டு வரை படி அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து படி என்று கொடுமை பண்ணாதீர்கள். இந்த வயது பிள்ளைகளுக்கு நல்ல உணவும் நல்ல உறக்கமும் அவசியம். அது அமைந்து விட்டால் விழித்திருக்கும் மற்ற நேரப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் செய்து முடிப்பார்கள்.
அதிகாலை ஒரு மணி நேரப் படிப்பை மட்டும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். இரவு நேர மனம் முழுவதும் எழுதப்பட்ட கரும்பலகை போல கொச கொச என்று குழப்பம் நிறைந்ததாக இருக்கும். நமது சிந்தனைகளில் அந்த நாட்களின் நிகழ்வுகளின் தாக்கம் இருக்கும். எனவே எந்த செயலிலும் கவனம் 100 விழுக்காடு செலுத்த இயலாது.
ஆனால் அதிகாலை நேர மனம் சிறு கீறல் கூட இல்லாத புத்தம் புது கரும்பலகை போன்றது. அந்த நேரத்தில் எதையும் முழு கவனத்தோடு செய்து விரைந்து முடிக்க இயலும். கடினப் பாடங்களை அந்த நேரத்தில் படித்தோமானால் கடினத்தன்மை கற்கண்டாக கரைந்து இனிமையாக மாறிவிடும்.
100க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் எல்லா குழந்தைகளும் திறமையானவர்கள் தான். 100 க்கு 100 என்பது வினாத்தாளின் கடினத்தன்மை,  அந்த நேர சமயோசிதம் மற்றும் நேர்த்தியாக விடை எழுதும் பாங்கு போன்ற இன்னும் பல காரணிகளை உள்ளடக்கியது. 100 க்கு 100 எடுத்தால் சந்தோஷப் படுங்கள். எடுக்கச் சொல்லி உற்சாகப் படுத்துங்கள். மாறாக 95 எடுத்த குழந்தையிடம் ஏன் 100 எடுக்க வில்லை என்று தண்டிப்பதோ அல்லது கோபிப்பதோ நிச்சயமாக வேண்டாம். சிரித்த முகத்தோடு பாராட்டி விட்டு அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்யப்பா என்று கூறுங்கள்.
கடைசியாக ஒன்று “ஒரு மீன் மரம் ஏற இயலாது மீறி அதனை மரம் ஏற வேண்டும் என எதிர் பார்த்தோமானால் வாழ்நாள் முழுவதும் தன்னை அது ஒரு முட்டாள் என்று கருதியபடி வாழும்” என்று மேல்நாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறி இருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை ஒன்று இயல்பாகவே உண்டு. கணித அறிவு இல்லா குழந்தையிடம் இலக்கிய அறிவு இருக்கலாம். எந்தப் பாடத்திலும் ஆர்வமில்லா குழந்தைக்கு ஓவியத்திலோ விளையாட்டிலோ ஆர்வம் இருக்கலாம். எனவே கணிதப் பாடம் வராத குழந்தைகளை மேத்ஸ் குருப் படித்து இஞ்சினியரிங் சேர்ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களில் அவர்கள் “சச்சின் டெண்டுல்கர்” ஆகமுடியும்.
நன்றி.

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...