Monday, December 23, 2024
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது.
தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் தான் நடைமுறைப்படுத்த உள்ளார்கள்!!
பள்ளிக் கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் அழிச்சாட்டியம் செய்து விரைவில் ஏற்க செய்தாலும் செய்வார்கள்!!
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு குழந்தை எப்படி படிக்கப் போகிறது என்பதை யார் தீர்மானம் செய்ய முடியும்?!
என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன் ஒன்பதாம் வகுப்பில் எழுத படிக்க திணறிய மெல்லக் கற்கும் மாணவர்கள் கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சியை எட்டிப் பிடித்து கைவசம் ஆக்கி விடுகிறார்கள்.
எட்டாம் வகுப்பில் என்ன , ஒன்பதாம் வகுப்பில்கூட அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் எங்கள் பள்ளியில் இருந்து கூட ஒரு ஐந்து மாணவர்களை இந்த வகையில் உதாரணம் காண்பிக்க முடியும்!!
அவ்வளவு ஏன் எனது மாணவன் பெயர் இளவரசன் என்று நினைக்கிறேன் (2003,2004 சமயம்) பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வுக்கு பிறகு திடீரென ஒரு நாள் அவன் கண்கள் ஒளி தோன்றியது!!
"அட, இவ்வளவு தானா சார் கணக்கு?!" என்பது போல கணக்கு பற்றி மிகப் பெரிய புரிதல் ஏற்பட்டு கணக்கோடு இருந்த பிணக்கு முடிந்து சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொண்டான்.
அதன் பிறகு எந்த கணக்காக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவான். அவனது இந்த வேகம் அவனை MSc கணிதம் மற்றும் பி எட் படிப்பு முடிக்கும் வரை இட்டுச் சென்றது!!
ஆக கண்களில் ஒளி தோன்றும் வரை குழந்தைகளை படிப்பில் தக்க வைத்து காத்திருப்பது அவசியம்.
எந்த வகையிலும் கல்வி என்பது வாழ்க்கைக்கு முக்கியமில்லை என்பதை மெல்ல மெல்ல பொது புத்தியில் ஆழமாக விதைத்துக் கொண்டு வருகிறார்கள்!!
ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் பெயில் போடுவது மிகப் பெரிய கொடுமை!!
குழந்தைகள் மனதைப் புண்படுத்தி விடக்கூடாது என்பதற்காக படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்களை மெல்லக் கற்போர் என்று அல்லவா கூறி வருகிறோம்!!
எதற்காக இந்த அவசர கறார்த்தனம்?! ஒரு குழந்தையை பத்து வயதில் அல்லது 13 வயதில் படிக்க லாயக்கு இல்லை என்று முடிவு செய்வது எவ்வளவு பெரிய அறிவீனம்?!
ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை சறுக்குப் பலகைப் பயணம் போல வந்தவர்களை ஒன்பதாம் வகுப்பில் வடிகட்டி பலபேர் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பாதை மாறிப்போக இந்த சென்டம் ரிசல்ட் மோகம் சிறிதளவாவது காரணமாக அமைந்து உள்ளது.
எனது அனுபவத்தில் கண்டவரை, ஒன்பதாவது வரை ஒரு மாதிரியாக திரிந்த பசங்க கூட பத்தாம் வகுப்பில் வந்து முற்றிலும் பொறுப்பாக மாறி இருக்கிறார்கள்.
அதேபோல பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவன். அவனது கணிதப்பாட மதிப்பெண் 98. குமரப்பருவ குறும்புகளால் படிப்பில் கவனம் சிதைந்து (எவ்வளவு அறிவுரை கூறியும் எடுபடவில்லை) கணிதப் பாடத்திலேயே பெயிலாகி இருக்கிறான்.
மற்றொரு மாணவன் தந்தை இல்லாதவன். சிறுவயதிலேயே கண்டிக்க ஆள் இல்லாததால் சென்னைக்கு சென்று பல வேலைகளை செய்து, பிறகு ஒரு மூன்று ஆண்டுகள் கழித்து எப்படியோ ஞானோதயம் பெற்று ப்ரைவேட்டாக பத்தாம் வகுப்பு எழுதி அனைத்துப் பாடங்களிலும் சிங்கிள் அட்டெம்ப்ட்டில் தேர்ச்சி பெறுகிறான்.
பதினோறாம் வகுப்பு சேர்க்கைக்கு வருகிறான். கணிதப் பிரிவு கேட்டதால் என்னிடம் அனுப்பினார்கள். அவன் தோற்றம் அப்புறம் ப்ரைவேட் மதிப்பெண் பட்டியல் இதெல்லாம் பார்த்து அவனை நிராகரிக்கும் எண்ணத்தோடு சில கேள்விகள் கேட்டேன்.
அவன் அதற்கு பதில் சொல்லவே முயலவில்லை. ”பயப்படாம என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் சார், நீங்க என்ன சொல்றீங்களோ அதுப்படி கேட்டு நான் பாஸ் பண்ணிக் காட்டுறேன்” என்று கூறிய நம்பிக்கையில் சேர்த்துக் கொண்டேன்.
வகுப்பில் இருந்து மற்ற மாணவர்களை பின்னுக்குத் தள்ளி வகுப்பிலேயே இரண்டாம் மதிப்பெண் பெற்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்.
ஆகவே குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் மேலே ஏறுவார்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சறுக்குவார்கள் அவர்களை பள்ளியில் இருந்து விலக்கி வைப்பது என்பது சமூகத்துக்கு பேராபத்தாக தான் முடியும்.
Friday, December 13, 2024
THE CHILDREN’S TRAIN – ITALIAN MOVIE
இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு (1946) இருந்த இத்தாலியின் சமூக பொருளாதார சூழலின் பின்னணியில் இருந்து எடுக்கப் பட்ட உண்மைக் கதை அடிப்படையில் படம் செல்கிறது.
இத்தாலிய கம்யுனிஸ்ட் கட்சியானது வறுமை சூழ்ந்த தெற்கு இத்தாலிய குழந்தைகளை ஒப்பீட்டளவில் வசதியாக இருக்கும் வடக்கு இத்தாலியில் (அங்கும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது தான் போலும்) இருந்த தன்னார்வம் உள்ள பெற்றோர் தற்காலிகமாக வைத்து வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறது(Foster Parenting).
ஆனால் தெற்கு இத்தாலியில் சிலர் “இது மோசடி, இந்த குழந்தைகளை சைபீரியாவுக்கு நாடு கடத்தி விடுவார்கள், அங்கே மனித மாமிசம் சாப்பிடுவோர் இவர்களை சாப்பிட்டுவிடுவார்கள், வடக்கு இத்தாலி மக்கள் இந்த குழந்தைகளை ஓவனில் வைத்து எறித்து விடுவார்கள்” என்றெல்லாம் கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார்கள்.
படமானது சிறுவன் அமெரிகோவின் பார்வையில் விரிகிறது. தெற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள் நகரில் அமெரிகோவின் தாய் அன்டோனிட்டா ஒற்றை மனுசியாக சிறுவன் அமெரிகோ வை வளர்க்கிறாள்.
அவனது தந்தை அமெரிக்காவுக்கு சென்றிருப்பதாக சொல்கிறாள். TRAIN OF HAPPINESS என்கிற திட்டத்தின் கீழ் சிறுவன் அமெரிகோ வடக்கு இத்தாலியின் மொடெனா நகருக்கு மற்ற குழந்தைகளுடன் செல்கிறான்.
அங்கே அனைத்து குழந்தைகளையும் தன்னார்வலர்கள் அழைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
சிறுவன் அமெரிகோவை அழைத்துச் செல்ல ஆள் எவரும் இல்லாத காரணத்தினால் கம்யுனிஸ்ட் கட்சி பெண் டெர்னா விருப்பமே இல்லாமல் வேறு வழி இன்றி அழைத்துச் செல்கிறாள்.
டெர்னாவின் காதலன் போர்வீரன். அவன் இறந்து போய்விடுகிறான். இவள் தான் உண்டு கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகம் உண்டு என்று வாழ்ந்து வருகிறாள்.
டெர்னாவின் இல்லத்தில் சிறுவன் தனியாக இருப்பதால் அவள் தனது சகோதரன் அல்சைட் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே ஏற்கனவே மூன்று சிறுவர்கள் உள்ளனர். இரண்டு வீடுகளிலும் வளர்கிறான். நாளடைவில் டெர்னாவுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிப் போகிறான். டெர்னாவின் சகோதரன் அமெரிகோவிற்கு வயலின் கற்றுத் தருகிறான்.
அமெரிகோவின் பிறந்த நாளுக்கு அழகான வயலின் செய்து பரிசளிக்கிறான்.
போர் முடிந்து பள்ளிகள் திறக்கப் படுகின்றன. சில நாட்கள் பள்ளிக்கும் செல்கிறான்.
ஃபாஸ்டர் பேரன்டிங் நாட்கள் முடிவடைகின்றன. ஆர்வத்துடன் தனது தாயை பார்க்க மறுபடியும் நேப்பிளுக்கு மற்ற குழந்தைகளோடு பயணிக்கிறான். தற்போது அவனிடம் டெர்னா கொடுத்த உணவுப் பொருட்கள் அவளது சகோதரன் கொடுத்த வயலின் எல்லாம் இருக்கிறது.
அன்டோனிட்டா சிறுவன் அமெரிகோவின் எந்தக் கதைகளையும் சுவாரசியமாக கேட்கும் மனநிலையில் இல்லை. அந்த வயலினையும் அலட்சியமாக கட்டிலுக்கு கீழே தள்ளி வைத்து விடுகிறாள். சிறுவன் அமெரிகோவை தச்சு வேலை கற்றுக் கொள்ள அப்ரண்டிசாக அனுப்புகிறள்.
வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்கிறான். அங்கே ஒரு ஆர்கெஸ்ட்ராவை பார்த்த உடன் வயலினை தேடி வீட்டிற்கு ஓடுகிறான். காணவில்லை. அவனது அம்மா அந்த வயலினை அடகு வைத்திருப்பாள். கோபத்தில் சிறுவன் அம்மாவுக்கு தெரியாமல் ரயில் ஏறி மொடெனா சென்று டெர்னாவிடம் சேர்ந்து விடுகிறான். அவள் அவனை வளர்த்து பெரிய வயலின் வித்வான் ஆக்கிவிடுகிறாள்.
படம் எவ்வாறு முடிகிறது என்பதாவது சஸ்பென்ஸாக இருக்கட்டும்.
படம் துவங்கும் போது ஒரு பெரிய அரங்கில் அமெரிகோவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கும். அரங்கில் உள்ள அறையில் இவன் தயாராக வரும் போது ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவனது தாய் இறந்து போய்விட்டார்.
உதவியாளர் நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிடலாம் என்பாள். இவன் வேண்டாம் நிகழ்ச்சி நடக்கட்டும் என்று கூறிவிடுகிறான். நிகழ்ச்சியில் இவன் வாசிக்கும் போது நிகழ்வுகள் அனைத்தும் இவனது ஞாபகத்தில் விரிவதாக படத்தில் காட்டுவார்கள்.
படத்தில் இத்தாலியை ஒரு பக்குவப்பட்ட சமூகமாக காட்டி இருப்பார்கள். நேப்பிளில் சிறுவர்கள் அனைவரும் ரயில் ஏறும் போது அவர்களுக்கு உணவும் ஸ்வெட்டரும் கொடுப்பார்கள். அனைத்து சிறுவர்களும் ஒன்று போலவே இவர்கள் மறுபடியும் ஒன்று கொடுத்தாலும் கொடுப்பார்கள் இந்த ஸ்வெட்டரை தனது உடன் பிறந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று டிரெயினில் இருந்து பெற்றோரிடம் வீசி விடை பெறுவார்கள்.
மொடெனாவில் இறங்கிய உடன் இவர்களுக்கு பெரிய விருந்தே ஏற்பாடு ஆகியிருக்கும். ஆனால் நேப்பிளில் இந்த பயணத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தவர்கள் இவர்களை கொல்வதற்கு தான் கம்யுனிஸ்ட் பார்ட்டி அழைத்துச் செல்கிறது என்று கூறியிருப்பார்கள். எனவே உணவில் விஷம் இருக்குமோ என்கிற பயத்தில் அவ்வளவு பசியிலும் ஒருவரும் சாப்பிட மாட்டார்கள். பிறகு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் சாப்பிட்டு காண்பித்த பிறகு களத்தில் இறங்கி ஒரு வெட்டு வெட்டுவார்கள்.
ஒருமுறை டெர்னாவின் சகோதரன் வீட்டில் ஓவனில் சுடச்சுட ரொட்டி தயாரித்து கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இவனைக் கண்டவுடன் குழந்தைகள் இவனையும் அழைப்பார்கள். குழந்தைகள் துரத்தல் மற்றும் எறியும் ஓவன் இரண்டையும் பார்த்த உடன் இவர்கள் நம்மை எறிக்கத் தான் துரத்துகிறார்கள் என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிந்து கொள்வான்.
டெர்னா துவக்கத்தில் சிறுவன் அமெரிகோவை தொடுவதைக் கூட தவிர்ப்பாள். அவன் குளிக்கும் போது அந்தப் புறம் திரும்பிக் கொண்டு துணி கொடுப்பாள். அவன் அழும் போது அவனை தொட்டணைத்து தேற்றக் கூட மாட்டாள். இருவருக்கும் இடையே பிணைப்பு அதிகம் ஆனபிறகு அவள் துயரத்தில் இருக்கும் போது அமெரிகோவின் தோளில் சாய்ந்து கொள்ள அவன் தேற்றுவான்.
பள்ளி துவங்கியதும் டீச்சர் “16 இரண்டுகள் எவ்வளவு” என்பார். அங்கே படித்த சிறுவர்கள்கூட விழிப்பார்கள். நம்ம ஆள் அசால்ட்டாக முப்பத்தி இரண்டு என்பான். “ நீ தான் பள்ளிக்கே போகவில்லையே எப்படித் தெரியும்“ என்பார்கள். ”நான் ஜோடி ஜோடியாகத்தான் ஷூ பாலிஷ் போடுவேன் அதனால் இது தெரியும்” என்பான். “காசு பணம் எண்ணி எண்ணி கணக்க நான் கத்துக் கிட்டேன்“ என்கிற சினிமாப் பாடல் போல அனுபவமே சிறந்த ஆசான் என்பதை வெளிப்படுத்திய காட்சி.
1940 களிலேயே பாலினப் பாகுபாட்டை எதிர்க்கும் கதாப் பாத்திரமாக டெர்னாவை வடிவமைத்து இருப்பார்கள். பள்ளி சீருடை மாடல் அமெரிகோவிற்கு பிடிக்காது. “இது பெண்கள் டிரஸ் போல உள்ளது“ என்று எரிச்சல் அடைவான். "பள்ளியில் ஆண் பெண் எல்லாம் கிடையாது. அனைவரும் சமமாகத்தான் தெரிய வேண்டும்" என்று கூறுவாள்.
வடக்கு இத்தாலியில் குழந்தைகள் படிப்பு மற்றும் தங்களது ஆர்வத்திற்கு ஏற்ற செயல்பாடுகள் என்று இருக்கும் போது வறுமை சூழ் தெற்கு இத்தாலி “சோத்துக்கே வழி இல்லை என்னத்த ஸ்கூலு என்னத்த வயலினு“ என்று லெஃப்ட் ஹேண்டில் நகர்த்திவிட்டு வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.
ஆனால் அந்த காலத்தில் காமராஜர் வயிற்றுக்கு சோறு போட்டு கல்வி புகட்ட வேண்டும் என்று கூறி வறுமையை குழந்தைகள் உலகில் இருந்து லெஃப்ட் ஹேண்டில் நகர்த்தி இருப்பார்.
இந்த ரயில் மூலம் குழந்தைகள் பரிமாற்ற நிகழ்வினால் வடக்கு இத்தாலியும் தெற்கு இத்தாலியும் உணர்வு பூர்வமாக ஒன்றி விடுவார்கள். குழந்தைகள் வீடு திரும்பிய பிறகும் அவர்களுக்கு பார்சலில் தீனி அனுப்புவதோடு தொடர்ச்சியாக கடிதங்கள் மூலமாக விசாரித்துக் கொள்வார்கள். இது உண்மை சம்பவம். நினைக்கும் போதே தித்திக்கிறது.
இந்தியாவில் தற்போதும் அரசின் பொருளாதார உதவிகள் பெருமளவு சென்றும் கூட அங்கே இருந்து வளர்ந்த குழந்தைகள் தெற்கு நோக்கி வந்து தான் தங்கள் வறுமையை போக்கிக் கொள்கிறார்கள். இங்கே Train Of Happiness Scheme ரிவர்சில் ஒர்க் அவுட் ஆகிறது.
படத்தில் வரும் அத்தனை குழந்தைகளும் கொள்ளை அழகு. சிறப்பாகவும் நடித்திருப்பார்கள். சிறுவன் அமெரிகோ பாத்திரத்தில் நடித்துள்ள சிறுவன் நடிப்பு பிச்சி ஒதறிட்டான்!!
இரண்டு அம்மாக்கள் ரோலில் வருபவர்களும் நன்றாக நடித்திருப்பார்கள். அன்டோனிட்டா ரோலில் வரும் பெண் சுருள் முடியுடன் வறுமை தாண்டவமாடும் தோற்றத்தில் வந்தாலும் கொள்ளை அழகாக தெரிவார்.
வடக்கு இத்தாலியை வளமாகவும் கலர்ஃபுல்லாகவும் காண்பிக்கும் அதே வேளை நேப்பிளில் குண்டு துளைத்த சிதிலமடைந்த கட்டிடங்கள் அழுக்கான தெருக்களில் வறிய மக்கள் என கான்ட்ராஸ்ட்டாக காட்டி இருப்பார்கள்.
படத்தின் இறுதிக் காட்சி கண்களில் நீரை வரவழைத்துவிடும் அளவுக்கு உறுக்கமாக இருக்கும்.
சொல்ல மறந்துட்டேனே படம் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது.
Wednesday, December 11, 2024
Second show cinema in poovalur Kaveri
இலால்குடியில் எங்கள் விடுதியில் அட்டெண்டர் ஆக இருந்தவர் பவுல்ராஜ் அவர்கள். சில மேல்வகுப்பு மாணவர்கள் கூட அவரைவிட பெரிதாக தெரிவார்கள். அவ்வளவு ஒல்லி.
வார்டன் அவரை எங்களுடன் தங்க பணித்திருந்தார். ஆனால் அவர் இரவு 9.30 பேருந்தை பிடித்து சொந்த ஊருக்குச் சென்று காலை திரும்பி விடுவார். அவ்வாறு அவர் ஊருக்குச் செல்வது எங்களுக்கு மிகப்பெரிய அனுகூலம்.
காலையில் போஸ்டர் பார்த்திருந்தோம் விஜயகாந்த் நடித்த சர்க்கரைத் தேவன் (*மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் ..., நல்ல வெள்ளி கிழமையில... ஆகிய பிரபல பாடலகள் இடம்பெற்ற படம் *) பூவாளூர் காவேரி தியேட்டரில் போட்டிருந்தார்கள். இந்த படத்தை சுடச்சுட பார்த்து விட வேண்டும் என்று காலையிலேயே சங்கல்பம் செய்து கொண்டோம்.
“டேய் செல்வம், அட்டெண்டர் இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாராடா?” இது விஜயகாந்த் அவர்களின் டை ஹார்ட் ஃபேன் பாலு.
“கிளம்பறதா சொன்னார்டா“ இது ஏஜன்ட் செல்வம் எங்கள் உளவுத்துறை நிபுணர்.
“படத்துக்கு டயம் ஆச்சுடா” ஹஸ்கி வாய்ஸ் ல் அவசர அவஸ்தையில் இருந்தேன்.
“பேண்ட் சர்ட் போடுறாருடா” வார்டன் ரூமை உளவு பார்த்து லைவ் அப்டேட் கொடுத்தான்.
“சரி சரி படத்துக்கு வர்றவனுங்கள கூப்பிடுறேன்“ என்று விரைந்தேன்.
அரியலூரில் இருந்து எங்களுடன் விடுதியில் தங்கியிருந்த சக நண்பன் செல்வம். சற்று முரட்டுத்தனம் நிரம்பிய வெகுளி.
செல்வமும் பாலுவும் அட்டெண்டரை பஸ் ஏற்றிவிட பஸ் ஸ்டாண்ட் சென்று அவர் பஸ் ஏறியதும் வந்து விடுவார்கள். நாங்கள் குறுக்கு வழியில் சென்று பெட்ரோல் பங்கில் காத்திருந்து அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு.
பேருந்து கிடைக்காமல் அட்டெண்டர் விடுதி திரும்பி விட்டால், படம் விட்டு வரும் நாங்கள் அவரிடம் தொக்காக மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
“ஏய் ஸ்ட்ரீட் லைட் எரியலடா நாய கீய மிதிச்சிடாம வாடா“ என்றபடி TELC சர்ச் தாண்டி கிழக்கு நோக்கி செல்லும் தெருவில் விரைந்து நடந்து கொண்டு இருந்தோம்.
“மணி என்னடா?”
”மணி 9.30 டா“
“பஸ் ஏறி இருப்பாராடா?”
“பஸ் ஏறி இருந்தா பெட்ரோல் பங்க் க்கு சீக்கிரம் செல்வமும் பாலுவும் வந்து விடுவானுங்க”
“சரி சரி வேகமா போ”
மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாக பெட்ரோல் பங்க் வந்து சேர்ந்தோம். இந்த பெட்ரோல் பங்க் முனையோடு லால்குடி முடிந்துவிடும். பிறகு ஆள் அரவம் இருக்காது. (1993-94ல்)
”டேய் செல்வம் டா!”
“என்னடா அதுக்குள்ள பஸ் ஏத்தி விட்டுட்டிங்களாடா?“ ஆச்சரியத்தில் வாயை வானம் வரை பிளந்தேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் திரு திரு என்று பார்த்து விழித்தபடி “பஸ் ஏத்தி விட்டு பஸ் புறப்பட்ட பிறகுதாண்டா வரோம்”
சரி பிரச்சனை தீர்ந்தது என்று அரியலூர் சாலையில் விரைவாக நடக்க ஆரம்பித்தோம்.
பூவாளூர் காவேரி தியேட்டர் எப்போதும் சற்று புதிய படங்களை போடுவார்கள். அப்போது கேபிள் டிவிக்கள் இங்கொன்றும் அங்கொன்றும் முளைத்த காலம். டி.வி யே ஊரிலேயே ஒரு சில வீடுகளில் தான் இருக்கும். மக்கள் படம் பார்க்க தியேட்டருக்குத் தான் வருவார்கள். படம் பெரிய நகரங்களில் முதலில் ரிலீஸ் ஆகி 50,100, மற்றும் 200 நாட்கள் என்று படத்தின் தரத்திற்கு ஏற்ப ஓடும்.
மரண மொக்கை படமாக இருந்தாலும் 50 நாட்கள் தாக்குப் பிடித்து ஓடும். “உள்ளத்தை அள்ளித்தா“ படம் 225 நாட்கள் திருச்சி சோனா மீனா தியேட்டரில் ஓடிய வரலாற்றை எல்லாம் கண்ணாற கண்டதுடன் அல்லாமல் அந்த படத்தை மூன்று முறை சோனா மீனா தியேட்டரில் பார்த்திருக்கிறேன்..
அதனால் பூவாளூர் காவேரி மாதிரியான தியேட்டருக்கு படங்கள் ஓராண்டு கழித்து அல்லது ஆறு மாதங்கள் கழித்து தான் வரும். இப்போவெல்லாம் இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று ஒரு மாதத்தில் கூட போட்டு விடுகிறார்கள்.
நாங்கள் இருட்டிலே அரியலூர் சாலையில் ஓடிக்கொண்டு இருந்தது அந்தமாதிரியான ஒரு வயதே ஆன ஓரு புதுப் படமான சக்கரைத் தேவனுக்குத்தான்.
இருப்பதில் மினிமம் காஸ்ட் உள்ள டிக்கட் தான் எப்போதும் எங்கள் சாய்ஸ். இரவு இரண்டாவது காட்சி என்பதால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இல்லை.
ஸ்கிரீனுக்கு வெகு அருகில் தான் என்றாலும் எங்கள் பட்ஜெட் அதற்குத் தான் இடமளிக்கும். முதல் வகுப்பு கட்டணத்தில் இன்னோரு படம் பார்த்து விடலாம் என்கிற தொலை நோக்கு சிந்தனையும் ஒரு காரணம்.
இன்டர்வெல் தீனி முறுக்கு தேநீர் இவற்றுக்கெல்லாம் பட்ஜெட் இடம் தராது. இப்படியெல்லாம் கறார்த்தனமாக இருந்தால் தான் வீட்டில் கொடுக்கும் சொற்ப காசில் சில படங்களை பார்த்து ரசிக்க முடியும்.
படம் முடிந்து மறுபடியும் அரிலூர் இலால்குடி சாலையில் இரவு 1.30 சுமாருக்கு ஓட ஆரம்பித்தோம். எனக்கு இருளைப் பார்த்து பயம் எப்போதும் இருந்தது கிடையாது. நள்ளிரவு நேரம் என்பதால் குறுக்கு வழி உகந்தது அல்ல. ஏனென்றால் திருடன் என்று நினைத்து எங்களை நையப்புடைத்து விடும் அபாயம் அதில் உண்டு. எனவே நேரா போயி கடைசி லெஃப்ட்.
பேசி கும்மாளமிட்ட படி இரவின் இறுகிய மௌனத்தை கிழித்து கிடாசியபடியே விடுதி வாசலை எட்டினோம்.
“உஷ்…டேஏஏய் சத்தம் போடாத, அங்கபாரு ஃபேன் சத்தம் கேட்குது“ பட்டாசு பாலு பதட்டமான பாலுவாக ஹஸ்க்கினான்.
“டேய் ஆமாண்டா, அப்படின்னா பதினோறாம் வகுப்பு ஹால்ல அட்டெண்டர் படுத்துருக்கார்” இது செல்வம்.
“டேய் செல்வம் என்னடா, பஸ் ஏத்தி விட்டிங்களா இல்லயாடா?” பார்வையால் பஸ்பமாக்கியபடியே கடிந்து கொண்டேன்.
செல்வம் எங்க உளவு ஏஜெண்ட் தான் ஆனா முக்கியமான சமயங்களில் சிறப்பாக சொதப்பிவிடுவான்.
“படத்துக்கு டயம் ஆச்சின்னு பஸ்டாண்ட் வந்தவுடன் போயிட்டு வரோம்னு சார்ட்ட சொல்லிட்டு வந்துட்டோம்டா” என்றான் பரிதாபமாக.
“டேய் சைலண்டா போய் லுங்கி மாத்திக் கிட்டு போர்வைய எடுத்துக் கிட்டு வந்து வராண்டாவில் படுத்துக்கலாம் வாடா“ இது நான்.
“வேணாம்டா அப்படியே வராண்டாவில் படுத்துக்கலாம்“ மறுபடி ஒரு வீக்கான டேமேஜ் கன்ட்ரோல் மெக்கானிசம் ஃப்ரம் செல்வம்.
“ஏண்டா ஏற்கனவே சொதப்பி வச்சதெல்லாம் பத்தாதா?!எல்லோரும் பேண்ட் சர்ட்ல இருக்கோம் காலையில் எந்திரிக்கும் போது மாட்டிக்குவோம், சரி வா உள்ள பாத்து மிதிச்சிடாம வா“ என்றபடி நான் முன்னே சென்றேன்.
இது என்னடா இது சம்மந்தம் இல்லாம இங்க நீளமா குச்சி மாதிரி என்று காலால் இடறினேன் “ஆத்தாடி அட்டண்டர் காலூஊஊ”
“ம்ம்… யாருப்பா அது…” உறக்கம் களைந்தார் அட்டெண்டர்.
எனது இரும்புப் பெட்டிக்கும் அமிர்தராஜின் பெட்டிக்கும் இடையில் இருந்த பள்ளத்தாக்கில் பட்டென பதுங்கினேன்.
அப்படியே சம்மணமிட்டு சுவற்றோடு சாய்ந்து கொண்டேன். எல்லோரும் கிடைத்த இடத்தில் அப்படியே தரையோடு தரையாக பதுங்கிக் கொள்ள கடைசியாக வந்த செல்வம் கேப் கிடைக்காததால் செய்வதறியாமல் விழித்தபடி நின்று கொண்டு இருந்தான்.
“டேய் செல்வம் என்னப்பா இந்த நேரத்தில?“
“சார் …. அது வந்து…சார்… ஒன்னுக்கு..”
“என்ன பேண்ட் போட்டுக்கிட்டா?!" நள்ளிரவு நேரத்திலும் லாஜிக் மாறாமல் சிந்தித்தார்.
" சினிமாவுக்கு போனிங்களாப்பா?“ அக்கரையோடு பஸ்டாண்ட் வந்தது இப்போ நள்ளிரவில் விழித்தபடி நிற்பது ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று கண்டு பிடித்து விட்டார்.
“சரி சரி போய் படு காலையில் பேசிக் கொள்ளலாம்“
பஞ்சாயத்தை காலையில் கூட்டலாம்னு அர்த்தம்.
ஏறக்குறைய ஒரு அரைமணி நேரம் இருந்த பொசிஷனில் அசையாமல் இருந்த நாங்கள் எல்லோரும் அரவம் அடங்கிய பின் மெதுவாக உடை மாற்றி வராண்டாவில் வந்து படுத்துக் கொண்டோம்.
காலையில் எழுந்த போது மணி ஏழு.
வார்டன் ரூமில் கூட்டம்.
எட்டிப் பார்த்தால் செல்வம் கைக்கட்டிக் கொண்டு நின்றான். யார் பெத்த புள்ளையோ எங்க சார்பில் சிலுவை செமக்குரானே!!
“யார் யார் சினிமாவுக்குப் போனது நீயும் பாலுவும் போனிங்களா?”
“இல்லசார் வந்துக சார்...நான் மட்டும் தான் சார்” என்று எங்களை காப்பாற்றும் முனைப்பில் இருந்தான்.
அவன் காட்டிக் கொடுக்காமலே அவராக யூகிக்கும் அளவுக்கு பாலு அவரோட “பேட் புக்கில்“ இருந்தான்.
இந்த கசமுசா எதிலும் கிஞ்சிற்றும் சம்மந்தம் இல்லை என்கிற தோரணையில் நான் மெல்ல அறையில் தலையை நீட்டினேன்.
“பாருப்பா ஜெயராஜ் இந்த பையன் நைட்டு சினிமாவுக்குப் போயிருக்கான்” என்று என்னிடமே முறையிட்டார். என்ன ரியாக்சன் கொடுக்குறதுன்னே விளங்காமல் மையமாக லைட்டா சிரிச்சி வச்சேன்.
“செல்வம், ஜெயராஜ பாரு நல்லா படிக்கிறான். எந்த பாடத்திலும் பெயில் ஆகறது இல்ல ரேங்கும் பத்துக்குள்ள வந்துடறான். அவன் கூட சேர்ந்து படி மத்த பசங்க கூட சேர்ந்து வீணாப் போயிடாதே” படத்திற்கு செல்லும் திட்டம் வகுத்த சூத்திர தாரியே நான் தான் என்றாலும் என் மீது கிஞ்சிற்றும் சந்தேகம் வராத வகையில் அவருடைய “குட் புக்கில்“ இருந்தேன்.
எந்த சூழ்நிலையிலும் நண்பர்களை காட்டிக் கொடுக்காத செல்வம் ஒரு 90's சசிக்குமாராக எங்கள் மனதில் உயர்ந்தான். கண்களால் ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து நழுவினேன்.
Friday, December 6, 2024
நினைவே ஒரு சங்கீதம் - லால்குடி டேஸ்!!
லால்குடிக்கு பள்ளி துவங்கும் நாளன்று போய் சேர்ந்ததே ஒரு பெருங்கதை. என்னை பள்ளிக்கு கொண்டு சென்று விடுமாறு எனது அண்ணன் சேகரை அப்பா கேட்டுக் கொண்டதால் சேகரும் நானும் செல்வதென்று முடிவாயிற்று.
சேகர் எனக்கு அண்ணன் என்பதைவிடவும் நல்ல நண்பர். வானிற்கு கீழ் உள்ளது மட்டுமல்ல வானம் தாண்டியவை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.
இந்த பகுதியில் பள்ளித் துவக்க நாள் அன்று நாங்கள் மேற்கொண்ட பேருந்துப் பயணம்.
மணி காலை 7.15
ஓட்டமாய் ஓடிவந்து பேருந்து நிலையத்தில் நுழைந்தோம்.
“ஏய் ஜெயராஜ் அங்கே பாரு திருச்சி பஸ் நிக்கிது!“
“அது கவர்ன்மண்ட் பஸ் வேற பஸ்ல போகலாம்“
காதை கிழிக்கும் இசை ஒரு பேருந்தில் இருந்து வந்தது, இசையை மோப்பம் பிடித்தபடி சென்று அந்த தனியார் பேருந்தின் முன்னால் போய் விழுந்தோம்.
பேருந்துநிலைய கொடிக்கம்பங்களின் ஓரமாக அந்தப் பேருந்து நின்றுகொண்டு இருந்தது.
கொடிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.
."போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’"
என்ற சிலப்பதிகார தற்குறிப்பேற்ற அணி பாடல் ஞாபகம் வந்தாலும் லட்சியம் செய்யாமல் ஏறினோம்!!
“அடே…ய் இதுவும் திருச்சி பஸ் தான்டா!“
“இந்த பஸ்ல போனாதான்டா இந்த கட்ட வேகும்!!“ என்றேன் தீர்மானமாக.
உள்ளே சென்று பார்த்தால் பேருந்தே காலியாக கிடந்தது. ஜனங்களுக்கு இசைஞானம் கிஞ்சிற்றும் இல்லாமல் போனது பற்றி கவலை கொண்டவாறே உள்ளே அமர்ந்தோம்.
திருச்சி செல்லும் அரசுப்பேருந்து கிளம்பியது. மற்றொரு திருச்சி பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தும் நிறைய ஆரம்பித்தது. மக்கள் இந்த மாதிரி இருந்தா தனியார் எப்படி தொழில் பண்ணுவான் என்று கவலையாக இருந்தது.
“டிக்கெட் டிக்கெட்“
“சார் லால்குடி ரெண்டு“
“என்னாது லால்குடியா?“
“ஆமா சார் திருச்சி பஸ் லால்குடி வழியாதானே போகும்?“ இது சேகர்.
“ஆமாம்பா, லால்குடி குடுத்துடவா?“
“ம்ம்..ரெண்டு குடுங்க“
பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் எழுதும் புத்தகத்தில் ஏற்கனவே எழுதியதல்லாமல் புதிய பக்கத்தை எடுத்து எழுதினார். பாவம் நாங்கள் லால்குடி இந்த பஸ்ஸில் போவது அவருக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி போல. பேருந்தில் இளையராஜாவின் இசை ராஜாங்கம் நடந்து கொண்டிருந்தது.
“டான் ட ட டன் ட ட டன் ட டை ங்…ஹே எவ்ரிபடி விஷ் யு ஹேப்பி நியு இயர்….“ சகலகலா வல்லவன் வாழ்த்திக் கொண்டிருந்தார்.
இசை காதை கிழித்தது. அந்த சமயத்தில் உலகத்திலேயே மகிழ்ச்சியான நபர்கள் நாங்கள் இருவர் தான்.
மணி காலை 7.30
மெல்ல மெல்ல ஊர்ந்து ஒருவழியாக பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது.
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தாண்டிய உடன் பேருந்து வலது புறம் திரும்பியது.
“அடடே பஸ் என்னா இங்க திரும்புது?“ என்றோம் கோரஸாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி
“நீங்க எங்கப்பா போகணும்?“
“லால்குடி“
“அட எறங்கிக்கோங்கப்பா இது செந்துரை வழி!!”
“அய்யோ டிக்கெட்லாம் எடுத்துட்டோமே!” என்றேன்
“பரவால்ல இதுலயே போகலாம்“ சேகர்.
"லால்குடில எங்க போறிங்கப்பா?!"
"ஸ்கூலுக்கு ங்க!!"
"பள்ளிக்கூடந்தான் போறீங்களா?! நான்கூட அவசரமா எதுவும் போறீங்களோன்னு நினைச்சேன்!!" அவரது பார்வையில் பள்ளி விஷயங்கள் எல்லாம் அவசர சிகிச்சை பிரிவில் வராது என்பது புரிந்தது.
இளையராஜா எங்களை பேருந்தோடு கட்டிப் போட்டு விட்டார்.
பேருந்து செங்குந்தபுரம் நிறுத்தத்தை நெருங்கியது. குளித்து விட்டு ஏரிக்கரையில் ஏறிய நபர் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டிக்கொண்டே இடுப்புத் துண்டோடு ஓடிவந்தார். வேகமாக வந்து மரப் பொந்தில் சொருகியிருந்த வேட்டி சட்டையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.
“டிரைவர் பரவால்லடா ஒரு ஆளுக்காக நிறுத்துறார்“
“இன்னும் பாருங்கப்பா வீடு வீடா நிறுத்தி ஏத்துவார், நீங்க இதுல அரியலூர் போற நேரத்தில் அந்த பஸ்ல லால்குடியே போயிருக்கலாம்“
எனக்கு இப்போது தான் வயிற்றில் புளி கரைத்தது. பதினோறாம் வகுப்பு அட்மிட் ஆகி முதல் நாள் இன்னைக்கு. முதல் நாளே லேட்டா? என்று பயம் லேசாக கவ்வ ஆரம்பித்தது.
“அட என்னப்பா இவன் பாட்ட நிறுத்திட்டான்“
“டிக்கட் ஏத்தறத்துக்காக மட்டும் தான் பாட்டு, இப்போ டிக்கட் போடறதுக்காக நிறுத்திட்டான்“
ஒரு வழியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் செந்துரை வந்து சேர்ந்தாச்சு.
இப்போ பாட்டு நல்லா ஃபுல் சவுண்டில் ஓடியது ’பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…..’
கூட்டம் முண்டியடித்து ஏறியது. மழை தரையை நனைப்பதற்குள் டிரைவர் நிறுத்திவிடுவார் என்பது எங்களுக்கு தெரியும்.
இதற்கு மேல் வருந்துவதற்கு ஒன்றுமில்லை வருந்தியும் ஒன்றும் ஆகப் போவதும் இல்லை என்று சூழலை என்ஜாய் பண்ண ஆரம்பித்து விட்டோம்.
முந்திரிக் காடு, கருவேல மரங்கள், திட்டுத் திட்டாக தெருக்கள் என்று கண்களில் காட்சிகள் பயணித்த வண்ணம் இருந்தது.
திடீர் என்று தோள் பட்டையில் ஆரம்பித்து கழுத்து வரை இனம் புரியாத பாரம் அழுத்தியது. பார்த்தால் கூட்டத்தில் சிக்காமல் தன் மகனை காப்பாற்றும் பொருட்டு என் தோள்பட்டையில் உட்கார வைத்து பேருக்கு அவனை பிடித்துக் கொண்டிருந்தார் ஒரு பாசக்கார தந்தை. என்னை பொருத்தவரை அவர் நாசகார தந்தை.
எனது புத்தம் புது வெள்ளை சீருடையை பரிதாபமாக பார்த்தேன். பயலுக்கு இயற்கை உபாதை எதுவும் ஏற்பட்டு விடக் கூடாதே என்று பயந்து கொண்டே அரியலூர் வரை பயணித்தேன்.
“வெள்ளிப் பனியுறுகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்” என்ற பாடல் வரி வந்ததுமே சந்தேகத்தோடு தோளினை தடவினேன். அசம்பாவிதம் ஒன்றும் நடக்கவில்லை இதுவரையில். அதன் பின்னர் இயற்கையாவது காட்சியாவது.
அரியலூர் வந்த உடன் புதுப் பட கேசட் ஒன்றை பிளேயரின் வாயினுள் திணித்தார்.
“தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே….” கமல் அழகாக அழுது கொண்டிருந்தார்.
அரியலூரில் அரியலூர் டு திருச்சி பேருந்துகள் அதிகம் இருந்ததால் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனாலும் நடத்துனர் விடுவதாய் இல்லை.
“டால்மியா, புள்ளம்பாடி, லால்குடி, திருச்சி” என்று போவோர் வருவோரை எல்லாம் கையை பிடித்து இழுக்காத குறையாக கூவிக் கூவி அழைத்தார்.
அரியலூரிலிருந்து பேருந்து புறப்பட 20 நிமிடத்திற்கு மேல் ஆகியது.
மணி காலை 9.30
தாய் வீட்டுக்கு வந்துவிட்டு கணவன் வீட்டிற்கு புறப்படும் பெண்ணைப் போல பேருந்து மெல்ல மெல்ல மெல்ல அரியலூரை கடந்தது. அரியலூரிலேயே கிட்டத்தட்ட 3 நிறுத்தங்கள். பேருந்து நிறைந்தது. வழக்கம் போல் பாட்டும் நின்றது.
“நீயொரு காதல் சங்கீதம் …” என்று ஆரம்பித்த மனோவை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
“சேகர், மொத நாளு லேட்டா போனா அடிப்பாங்களா?“
“மொத நாள் அடிக்கமாட்டாங்க கவலப் படாதே!”
“நேரா ஜெகநாதன் சித்தப்பா வீட்டுக்கா, இல்ல ஸ்கூலுக்கா?“
“இப்போவே லேட்டு, நேரா ஸ்கூலுக்கே போயிடு“
ஒரு வழியாக பேருந்து லால்குடியை அடைந்து விட்டது. மணி 11.30 ஆகியிருந்தது.
“சரி ஜெயராஜ், நான் கிளம்பறேன் போய்ட்டு வா பத்திரமா இரு“
“சரி சேகர்“
மெல்ல கேட்டை திறந்தேன்.
“க்க்றீறீ…ச்“ ஒரு திடீர் பேரிடி கூட என்னை இப்படி கலவரப்படுத்தியது இல்லை.
கையில் மெலிசாகவும் நீளமாகவும் பிரம்பு வைத்துக் கொண்டு நின்ற ஆசிரியர்கள் மூவரும் என்னை நோக்கி கேமராவை திருப்பி கூர்மையாக "ஜூம்" செய்தார்கள்.
பயந்தபடியே மெல்ல சென்று அவர்களிடம் “…..“ “….“ வெறும் காத்து மட்டும் தாங்க வந்தது.
“என்னடா புது அட்மிஷனா?“ இது முறுக்கு மீசை வைத்திருந்தவர்
“எங்கேருந்து வர?“ இது தொண்டையில் துணி கட்டியிருந்தவர் அடி தொண்டையால் கேட்டார்
“இது தான் மொத நாள் ஸ்கூல் வர நேரமா?“ இது கண்ணாடி அணிந்து பெருங்கோபக்காரராக தெரிபவர்.
“ஆமாம் சார் பதினோறாம் வகுப்பு மேத்ஸ் பயாலஜி சார்“
“பி ஒன்னா? மாடில லாஸ்ட் ரூம் போ இனிமே லேட்டா வராதே“
ஒரு வழியாக வகுப்புக்கு வந்து சேர்ந்தேன்.
Thursday, November 28, 2024
தேனீருக்குள் புதைந்து கிடக்கும் துயர வரலாறு!!
எரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல்
மொழி பெயர்ப்பு – இரா.முருகவேள்
இந்த நூல் நீண்ட காலமாக வாசிக்க வேண்டிய நூல் பட்டியலிலேயே இருந்தது. ஆனால் ஒரு போதும் வாங்க முயலவே இல்லை. கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் மறந்து போவேன்.
சீர் வாசகர் வட்டத்தினர் பல அருமையான நூல்களை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் தந்து வருகின்றனர். புதுமைப் பித்தன் சிறுகதைகள், தாய் நாவல், போரும் வாழ்வும் போன்ற செவ்வியல் நூல்களை மலிவாக பதிப்பித்து அனைவர் கைகளிலும் சேர்க்கின்ற மகத்தான பணியை செய்து வருகிறார்கள். விலை மட்டுமே மலிவு மற்றபடி தரத்தில் பலபடி உயர்வு.
எரியும் பனிக்காடு நாவல் சீர் வாசகர் வட்டத்தின் சார்பாக வருகிறது என்றவுடன் எனக்கு ஐந்து காப்பி சொல்லி வாங்கி விட்டேன். எனக்கு ஒன்று பரிசளிக்க மீதி.
ரெட் டீ என்கிற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு தான் இந்த எரியும் பனிக்காடு. இந்த நாவலைப் பற்றி இயக்குனர் பாலா வின் பரதேசி படம் வந்த போது கேள்விப் பட்டேன். அதன் பின்பு முகநூலிலும் விமர்சனங்கள் வாசிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்தே இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகரித்த வண்ணம் இருந்தது.
எனவே பார்சல் கிடைத்தவுடனே கையில் எடுத்து விட்டேன். மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி.
மூலநூலின் ஆசிரியர் பி.எச் . டேனியல் நாகர்கோவில் அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர். 1940 வால்பாறை காரமலை எஸ்டேட்டில் மருத்துவ அதிகாரியாக பணிபுரியச் சென்றவர் அங்கே நிலவிய மோசமான உழைப்புச் சுரண்டல், மனித உரிமை மறுப்பு, அடக்குமுறைகள் என பலவற்றையும் கண்டு அந்த தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வென்றுள்ளார். அவர் நேரில் கண்ட கேட்ட விஷயங்கள் இந்த அற்புதமான வரலாற்றுப் பதிவு புதினமாக விரிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயிலோடை என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் தம்பதிகள் கருப்பன் – வள்ளி. வறட்சி பாதித்த பகுதி. மழை பொய்த்து போனதால் அன்றாட பாட்டுக்கே திண்டாட்டம். கயத்தாறுக்கு போய் ஏதாவது வேலை கிட்டினால் கால்வயிற்றுக்காவது பசியாறலாம் என்று நம்பிக்கையோடு செல்கிறான்.
அங்கே சங்கரபாண்டி மேஸ்திரி மிடுக்காக இருக்கிறார். அவரது பணக்காரத்தனத்தில் மயங்கிப் போய் குமரிமலை எஸ்டேட்டுக்கு பணிக்கு செல்ல ஒப்புக் கொண்டு மலையேறுகிறார்கள். நாற்பது ரூபாய் அட்வான்ஸ் தொகைக்கு அவர்களது வாழ்க்கை எத்தனை ஆண்டுகளுக்கு அடகு பிடிக்கப் பட்டிருக்கிறது என்பது தெரியாமலேயே மலையேறுகிறார்கள் கருப்பனும் வள்ளியும்.
அவன் ஒரு பட்டு வேட்டி
பற்றிய கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது.
இந்த கவிதை நிறைய இடங்களில் பொருத்தமாக அமர்ந்து கொள்கிறது என்றால் கருப்பனின் விதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து நம்பியார் சிரிப்பு சிரிக்கிறது.
அரசு படத்தில் வடிவேல் சொல்லும் ”புறாக்கூண்டுல பார்ட்னர்ஷிப் வேற” நிஜமாகவே எஸ்டேட் லைன் குடியிருப்புகளில் நிஜமாகிறது.
எஸ்டேட்டுக்கு புதிதாக வந்திறங்கிய கொத்தடிமைகளுக்க பழைய கொத்தடிமைகளான முத்தையா ராமாயி இணை ஆதரவாக இருக்கிறார்கள். வீட்டையும் கஷ்டங்களையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் கூட திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் இளம் பெண்களில் பலர் பெற்றோர் வாங்கிய அட்வான்ஸ் தொகைக்காக அடகு வைக்கப் பட்டவர்களே. செங்கல் சூளைகளும்கூட இந்த வகையில் தான் வருகிறது. தொழிலாளர் உரிமைகள், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டங்கள் என்று பல விஷயங்கள் இருக்கும் இந்த காலகட்டத்திலேயே இவையாவும் நடக்கின்றன என்றால் இவை எதுவும் இல்லாத செய்தி ஊடகங்கள் செல்ல இயலாத எஸ்டேட்டுகளில் என்ன என்ன அடக்குமுறைகளும் சுரண்டல்களும் நடைபெற்றிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.
ஒரு ஆண்டு முடிவில் கணக்கு தீர்க்கப் படும் போது வெறும் பதிமூன்று ரூபாயே மிஞ்சுகிறது. ஆமாம், அவர்களுக்கு வழங்கப் பட்ட கம்பளி, ரேஷன், ரயில் பயண டிக்கெட் உணவு என்று எல்லாவற்றிற்குமாக பிடித்துக் கொள்கிறார்கள். அந்த எஸ்டேட்டில் கடை வைத்திருக்கும் காளியப்பச் செட்டியார் தன் பங்கிற்கு ஒன்றுக்கு இரண்டாக விலை வைத்து விற்பதோடு நிற்காமல் கடன் பாக்கியை நோட்டில் இஷ்டத்திற்கு நிரப்பி மீதிப் பணத்தை பிடுங்கிக் கொள்கிறார். முதலாம் ஆண்டு வெறும் கை தான் மிஞ்சுகிறது.
அங்கே நிலவும் சுகாதாரமற்ற இருப்பிடம் மற்றும் சூழல் காரணமாக வருடம் தவறாமல் காலரா வந்து ஏகப்பட்ட பேரை கொன்று போடுகிறது. அங்கே இருக்கும் அவ்வளவு பேருக்கும் ஒரு மருத்துவமனை என்கிற பேரில் ஒரு மாட்டுக் கொட்டாய் இருக்கிறது. டாக்டர் என்கிற பேரில் கம்பவுண்டர் தகுதி கூட இல்லாத குரூப் என்கிற மலையாளி இருக்கிறான். சுகாதாரமான இருப்பிடமும் சரியான மருத்துவ வசதியும் வழங்கப் பட்டிருந்தாலே அத்தனை பேரையும் காப்பாற்றி இருக்க முடியும். அதற்காக செலவிட்டால் லாபம் குறையும் என்பதால் ஆங்கிலேய அதிகாரி ஒயிட் “இந்த நாயிங்க செத்து ஒழியட்டு யாருக்கு என்ன நட்டம்“ என்று இருந்து விடுகிறான்.
காலரா போனவுடன் குளிர்காலம் அட்டை ரத்தம் உறிஞ்சுவதும், நிமோனியா காய்ச்சலும் அட்டென்டன்ஸ் போடுகிறது. அடுத்து அந்த வியாதியும் தங்கள் பங்குக்கு மக்களை கொன்று போடுகிறது.
இரண்டாம் ஆண்டு இறுதியில் இரண்டுக்கும் தப்பி உயிர் பிழைத்தாலும் கடன்கள் போக வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே மிஞ்சுகிறது. இரண்டாம் ஆண்டில் இருவருக்கும் பலமுறை காய்ச்சல் காலரா, கருச்சிதைவு என்று பல நாட்கள் விடுப்பு என்பதால் ஊருக்கு தப்பிச் செல்ல பணம் போதவில்லை.
துயரமான மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. வள்ளி வயிற்றில் ஒருபக்கம் சிசுவும் இரண்டு பக்கங்களில் காய்ச்சல் கட்டியும் வளர்கிறது. உடல் நலிவை பொருட்படுத்தாமல் எப்படியாவது இந்த ஆண்டு ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு விடுப்பு எடுக்காமல் உழைக்கிறார்கள்.
ஏழைகளின் கனவு என்றைக்குமே கானல் நீர் தானே? அப்படித்தான் கதை துயரமாக முடிகிறது.
வெள்ளைக்காரன் எஸ்டேட் முதலாளி என்றால் அவனுக்கு கீழே அனைவருமே இந்தியர்கள்தான். அதுவும் தொழிலாளர்களை நேரடியாக கட்டுப்படுத்தும் கங்காணிகள் இந்தியர்கள் தான். அனைவருமே தங்கள் சுயலாபத்திற்காகவும் தங்களுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ளவும் மிக மோசமான சுரண்டலுக்கு துணை போய் உள்ளார்கள். அவர்களது சுரண்டல் எவ்வாறு இருந்தது என்பதற்கு சின்ன சாம்பிள்.
“காலையில் மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட வெள்ளையனின் (கங்காணி) வற்புறுத்தலின் காரணமாக அவளது அம்மாவும் அப்பாவம் வேலைக்கு போக வேண்டி வந்தது. அந்தச் சிறுமியின் தம்பியான பத்து வயது பையன் தான் நோய்வாய்ப்பட்ட அக்காவோடு கைக்குழந்தையாய் இருந்த தன் தம்பியையும் பார்த்துக் கொண்டான். தகப்பன் மாலையில் வேலையில் இருந்து திரும்பியபோது தன் மகள் விரைத்துப் பிணமாக கிடப்பதையும், மகன் குளிர்க் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டு இருப்பதையும் குழந்தை இறந்து போன அக்காவின் பிணத்தோடு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டான்”
இந்த பத்தியை இளகிய மனம் கொண்ட யாரும் இயல்பாக கடந்துவிட இயலுமா?
வெள்ளைக் காரர்கள் மற்றும் உயர் பதவி இந்தியர்கள் அனைவருமே மோசமான பாலியல் அத்துமீறலிலும் வெகு இயல்பாக ஈடுபட்டுள்ளனர். ஒத்துழைக்க மறுக்கும் பெண்களுக்கு மிக கொடுமைகள் செய்துள்ளனர்.
குடித்துவிட்டு உளறுவதையே இரண்டு அத்தியாயங்கள் எழுதியுள்ளார். குடித்துவிட்டு அக்கபோர் பேசுவதோடு அல்லாமல் தங்களது பாலியல் அத்துமீறலை சாகசம் போல விவரித்துக் கொள்கிறார்கள். இன்று வரை பெண்கள் மீதான பாலியல் அத்து மீறலை ஒரு சாகசம் என்றுதானே பல ஆண்கள் கருதி வருகிறார்கள். தான் இத்தனை பெண்களோடு சல்லாபித்திருக்கிறேன் என்பதை ஏதோ விருது போல் அல்லவா பீத்திக் கொள்கிறார்கள்.
அறிவியல் வளர்ந்து அறிவியல் வெளிச்சம் வெள்ளமாய் பாய்ந்தோடும் இந்த காலத்திலேயும் அறிவியலைத் தாண்டி மூடநம்பிக்கைகளும் புதுப் புது பரிமாணங்களில் வளர்நது கொண்டு தானே வருகின்றன.
அங்கே எஸ்டேட் வாசிகள் மத்தியில் முத்துக் கருப்பன் என்கிறத மந்திரவாதி பிரபலமாக இருந்துள்ளான். கருப்பன் வள்ளிக்கு நோய் வருவது கெட்ட சக்தியின் செயல் என்று கருதி முத்துக் கருப்பனிடம் செல்ல அவனோ கருப்பனின் வருட வருமானத்தில் பாதியை பெற்றுக் கொண்டு பரிகாரம் செய்து தருகிறான். அதன் பிறகு தான் 15 நாட்கள் படுத்த படுக்கையாகிறாள் வள்ளி. அவள் வீடு திரும்பியவுடன் முத்துக் கருப்பன் ”இன்றைக்கு உன் பொண்டாட்டி உயிரோடு இருக்கிறாள் என்றால் அது நாம செய்த மந்திரத்தின் சக்தி என்று கூறி நம்ப வைப்பதோடு அல்லாமல் மேலும் இரண்டு தாயத்துகளையும் விற்று விடுகிறான்.
அதோடு மட்டுமல்லாமல் எஸ்டேட்டில் மழை வரவேண்டி மழை துவங்கும் காலத்தில் பலி கொடுக்கிறார்கள். இடைவிடாத மழை நிற்க வேண்டியும் மழை காலம் முடியும் தருவாயில் பலி கொடுக்கிறார்கள். இறுதியில் மந்திரக்குருவி உட்கார பனங்காய் விழுகிறது. இரண்டு பலிகளுக்குமான செலவுகளை கங்காணிகள் கம்பெனிக்காரர்களிடம் கடனாக பெற்று நிறைவேற்றுகிறார்கள்.
இந்த சிஸ்டம் இதே போல சுரண்டலுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமானால் இவனுங்க சிந்திக்க கூடாது என்பதால் ஒயிட் இந்த மாதிரி மாந்திரீகத்தை ஆதரிக்கிறார்.
ஆங்கிலேயே அதிகாரி வரும்போது மற்ற துறை கீழ்நிலை அதிகாரிகள் அனைவரும் சலாம் துறைகளே என்பதோடு செறுப்பை கழட்டிக் கொள்ள வேண்டும், குடை இருந்தால் மடக்கி கொள்ள வேண்டுமாம்.
துரை கீழ்நிலை அதிகாரிகள் யாரையும் வீட்டின் முன்புறத்தில் அனுமதிக்க மாட்டார். பின்பக்கம் வழியாக சென்று சமயல் காரனிடம் சொல்லி தூது அனுப்ப வேண்டும். முக்கியமாக ஒன்று துரை எந்தக் கடையிலும் பொருள் வாங்க காசு கொடுக்க மாட்டார். இந்த எழவு பணத்தை எல்லாம் உழைக்கும் கூலிகளின் கடன் கணக்கில் ஏ(மா)ற்றி எழுதுவது தான் வாடிக்கை. அதோடு மட்டுமின்றி சற்றும் கூச்சம் இன்றி ஏராளமான பரிசு பொருட்களையும் பணத்தையும் லஞ்சமாக பெற்றுக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒயிட்டுக்கும் டாக்டர் பார்பருக்கும் நடக்கும் உரையாடல் இந்தியர்கள் பற்றியும் இந்திய தலைவர்கள் பற்றியும் பகட்டான வெள்ளைக் காரர்களின் மனநிலையை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கும்.
இறுதியாக ஆபிரகாம் என்கிற மருத்துவர் கதாப்பாத்திரத்தில் உள்ளே வருபவர் நூலாசிரியர் பி.எச் டேனியல் அவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து ஏராளமான செல்வங்களை சுரண்டிக் கொண்டிருந்ததோடு நிற்கவில்லை. மகத்தான மனிதவளத்தை மிக கோரமான முறையில் சுரண்டிக் கொழுத்திருக்கிறார்கள் என்பதற்கான ஆவணம் தான் இந்த நூல்.
மொழிபெயர்ப்பாளர் குறித்து கூறியே ஆகவேண்டும். மிக அருமையான மொழிபெயர்ப்பு. ஒரு மொழி பெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்கிற நினைப்பு எந்த இடத்திலும் எழவில்லை.
நூல் வடிவமைப்பில் மற்றுமொரு சுவாரசியம், ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒரு மேற்கோலை எழுதி துவங்கி உள்ளார்.
“நெருக்கம் வெறுப்பையும், குழந்தைகளையும் உற்பத்தி செய்கிறது – மார்க் ட்வைன்.
“அவன் அனைத்தின் விலையும் தெரிந்தவன், எதன் மதிப்பும் தெரியாதவன்“ – ஆஸ்கார் வைல்ட்
“வெட்கப்படும் ஒரே மிருகம் மனிதன் தான் அல்லது வெட்கப்பட வேண்டிய தேவை உள்ள ஒரே மிருகம் மனிதன் தான்“ – மார்க் ட்வைன்
தென்னிந்திய தேயிலைத் தோட்டங்கள் யாவுக்கும் அடியுரமாக போடப்பட்டிருப்பது மகத்தான மனித உடல்கள்தான் என்பதை உலகுக்கு அறிவிக்கும் ஆவணம் தான் இந்த நாவல். ஒருமுறை வாசித்து பாருங்கள். கல் மனமும் கசிந்து உருகிவிடும்.
Tuesday, November 26, 2024
கத்தியுண்டு ரத்தமில்லை!!
ரத்தமின்றி இதயத்தை துடிக்க வைப்பது எப்படி?! survival techniques not by Bear Grills but by our T.R sir.
"சலங்கை இட்டாள் ஒரு மாது..." பாடலில் அமலாவுக்கு போட்டியாக பாடல்வரிகள் பேரழகாக இருக்கும்.
"தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ" எவ்வளவு நுணுக்கமான கற்பனை & ஒப்பீடு!!
"அதுவும் இடையின் பின்னழகில் இரண்டு குடங்கள் கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்" தம்புராவைக் கொண்டு போய் எங்க வச்சி பாத்து இருக்கார் பாருங்க!!
அழகியலை இந்தப்பாடலில் நமக்கு பாடமாக நடத்தியவர் இறுதிக் காட்சியில் survival skill course ஏ நடத்தி இருப்பார். Tutoring turned fatal என்றாலும் பரவாயில்லை கண்களைத் துடைத்துக் கொண்டு மேலே(சாரி கீழே scroll பண்ணுங்க) படிங்க!!
"காதலிக்க கூடாது, அத மூடி வச்சால் ஆகாது " என்று பாடினாலும் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். காதலைச் சொல்லாமல் மூடி வைத்து அணத்துவதில் இதயம் முரளிக்கு இவரே முன்னோடி!!
அப்படியும் எல்லாம் கூடி வந்தா இவர குத்திப் போட்ருவாய்ங்க இல்ல அந்தப் புள்ளைக்கு கல்யாணம் ஆகிடும் இல்ல செத்துப் போயிடும்.
அவர் படத்தில எந்த சஸ்பென்ஸ் ஃபேக்டர் ஒர்க் அவுட் ஆனாலும் ஆகும், ஆனா "அவர் காதல் கைகூடுமா" என்கிற suspense plot flat ஆகவே இருக்கும்.
ஏன்னா audience will be 200% clear அவர் "அதுக்கு சரிபட்டு வரமாட்டார்".
No romance , no touching!!
ஆனாலும் கூட இந்த "நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேலை வேடன் செய்த லீலை..." பாடலைப் பாருங்களேன்.
"வேடன் லீலை செய்யாட்டி மட்டும்... , நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டியே கோப்ப்பாஆஆல்..." என்று சிந்தித்தபடியே அமலா அழகாக ஆடுவார்!!
இந்த வில்லனுங்க காதலை மதிக்கலைன்னாலும் சுற்றுச்சூழலை மதிக்குறானுங்க .
குறி வச்சா எற விழணும், ஆறுன்னு இருந்தா கடல்ல கலக்கணும் அது ரத்த ஆறா இருந்தாலும்!! அப்படின்னு குத்துமதிப்பா ஒரு அஞ்சாறு எடத்துல குத்தி ரத்த ஆற கடல்ல கலக்க ஏற்பாடு பண்ணிடுவானுங்க!!
ரத்த ஆறு சுத்தமா வடிஞ்ச பின்னாலும் பரிசுத்தமான காதல் வாழும். அத வாழ வைக்க தட்டு தடுமாறி ஒரு அஞ்சாறு கிலோமீட்டர் நடந்து அமலாவை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்கு வந்துடுவாப்ள!!
"யார்ரா நீ செத்தப்பயலே" (literally GP muthu dialogue justified here only) என்று வில்லன் ஆச்சரியப்பட்டா பரவாயில்ல, அமலாவே ஆச்சரியப் படுவார்!!
அவங்க ஆச்சரியத்தை அபாயகரமான அளவுக்கு அதிகப்படுத்தும் விதமாக தம் பிடித்து ஒரு ஏழெட்டு கட்டையில் பெருங் குரலெடுத்து பாடத் துவங்குவார்.
"யோவ் என்னய்யா இது?" என்று வில்லன் டென்சனாக
"பாஸ் பாஸ் க்ளைமாக்ஸ் ல ஒரு பாட்டு வந்தா பாட்டு எண்ணிக்கை ரவுண்டா பத்து ஆயிடும் ப்ளீஸ்.."
"பாடி முடிச்சுட்டு அவரே செத்துடுவாரு ஆரும் அவர குத்தக் கூடாது.." என்று தனது அடிப்பொடிகளுக்கு கட்டளை இட்டு விட்டு அரைகுறையாடை அழகிகளை மீண்டும் அயர்ன் பண்ணத் தொடங்குவான் HOD of the villain department.
"இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா"
"அத ஆல்ரெடி குத்தி ஓபன் பண்ணிட்டானுங்க, ரத்தமெல்லாம் சுத்தமா போயிடுச்சி செத்த அணத்தாம செத்துடு கோப்பாஆஆல்.." என்று சலித்தபடி இவரது பாடலுக்கு மூச்சிரைக்க மீண்டும் ஆடுவார்.
"புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ"
"புயல்ல ஏம்பா கடல்ல?!, சாரி பாஸ் எனக்கு வேலை இருக்கு .." என்று சைலண்ட்டா போன அமலாவை பாடியே காதில் ரத்தம் வரவழைத்து சாகடித்து அமலா காதலை அமரக்காதலாக்கி விட்டு தானும் செத்துப் போகிறார்.
" இரத்தம் இல்லாத கடுமையான சூழல்களில் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்று இந்த எபிசோடில் பார்க்கப் போகிறோம்" என்பது போல அல்லவா இருக்கிறது என்று நான் சொல்லல டிஸ்கவரி தமிழோட fan ஆன என் பையன் சொல்றான்!!
டெய்ல் பீஸ்: இந்த கூகுள்காரன் சுத்த இரக்கமில்லா அரக்கனாயிட்டான் பாத்துக்கிடுங்க.
இந்த பதிவுக்காக நடிகை அமலா பரதநாட்டிய உடையில் இருப்பது போல ஒரு படத்தை தேடுவதற்கு கூகுளில் முயற்சித்தால் அது அமலாபாலை பரதநாட்டிய டிரஸ்ஸில் காண்பித்து என்னை பீதியில் ஆழ்த்தியது ஆகவே இந்த " ஏ ஐ" படத்தை இணைத்துள்ளேன் அட்ஜஸ்ட் கரோ
Saturday, October 5, 2024
First Look முக்கியம் பாஸ்!!
First Look ரொம்ப முக்கியம்!!
காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!!
ஒரு பேராசிரியர் ஒருவர் ஒரு கணக்கை குறிப்பிட்டு இந்த கணக்கை சால்வ் செய்வதற்கு எனக்கு நான்கு நாட்கள் ஆனது, ஏகப்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ரெஃபர் செய்து தான் சால்வ் செய்ததாக பெரிய பில்டப்போடு கணக்கை ஆரம்பிப்பார். அந்த சமயத்தில் தூங்கி வழிந்த தனுஷை டஸ்டரால் அடித்து விட்டு நீ போடுறியா என்பார் தனுஷோ ஜஸ்ட் லைக் தட் லெப்ட் ஹாண்டில் டீல் செய்து முடித்து விடுவார்!!
பெரும்பாலானவர் தான் கற்றுள்ள வித்தையை அரிதான ஒன்றாகவும் வேற யாராலும் அந்த அளவுக்கு செய்து விட முடியாது என்பதை குறிப்பிட்டு காண்பிப்பதற்காகவும் அது எவ்வளவு கஷ்டமானது என்று பில்டப்பை ஏற்றி கூறுவார்கள். பொதுவாகவே அது சாதாரண ஒன்றாக இருக்கும் இருந்தாலும் தான் கற்றுள்ள வித்தை அவ்வளவு ஈசி கிடையாது எல்லாராலும் முடியாது என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்வார்கள்.
கெடுவாய்ப்பாக முந்தைய தலைமுறை கணித ஆசிரியர்களில் பலர் இது மாதிரி ஜிம்மிக்ஸ் வேலைகளை வகுப்பு தொடங்கும் போது சொல்லி தொலைத்தது உண்டு. மேலும் சிடுமூஞ்சியாக இருப்பதை சிரத்தையாக இருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டு இருந்ததும் உண்டு.
நான் கொல்லிமலை பள்ளிக்கு நேர்காணலுக்கு சென்று இருந்த போது sample class எடுக்கும் போது நான் இயல்பாக சிரித்ததை "கணக்கு சார் சிரிக்கிறாருங்க சார்" என்று ஆச்சரியமாக பள்ளி முதல்வரும் தாளாளரும் பேசிக் கொண்டதாக அங்கே இருந்த எனது நண்பர் பின்பு ஒரு நாளில் கூறினார். "கணக்கு சார் னா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு சிரிக்க கூட மாட்டாங்க" என்கிற பொதுபிம்பம் இருந்திருக்கும் போல.
தற்போதுள்ள புதிய தலைமுறை ஆசிரியர்கள் ஒன்றும் சிடுமூஞ்சி கிடையாது இவர்களது மெத்தட் ஜனரஞ்சகமானது. அவர்களது வகுப்பில் சிரிப்புக்கு கேலி கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது.
"அறிவியல் பாடங்களின் ராணி கணிதம்" என்று சொல்வார்கள் அதற்கு ஏற்றார் போல் அறிவியல் புலம் நடப்பதற்கான பாதையை கணிதம் போட்டுக் கொண்டே செல்லும்.
ஆக கணித பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அறிவியலிலும் தேர்ந்த அறிவினை வலிந்து பெற்றுக் கொள்வது நலம். ஏனென்றால் கணித பாடத்தை எந்தெந்த துறைகளில் எவ்வாறெல்லாம் பயன்படுத்த போகிறோம், அறிவியலை தெளிவுற புரிந்துகொள்ள கணிதம் எந்தெந்த வகையில் எல்லாம் துணை நிற்கும் என்கிற விஷயத்தை பாடத்தின் ஊடாகவே சொல்லிக்கொண்டு சென்றோம் என்றால் வகுப்பறை சுவாரசியமாக செல்வதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அறிவியல் கணிதம் இரண்டிலும் ஒரு தேடல் ஏற்படுவதற்கு உத்வேகத்தை கொடுக்கும்.
வகுப்பறைக்கு உள்ளே நுழைந்த மாத்திரத்தில் ஏதோ கிணற்றுக்குள் தலைகீழ் நீச்சல் அடிப்பதற்கு குதிப்பது போல் "தொபுக்கட்டீர்" என்று பாடத்துக்குள் குதித்து விடல் ஆகாது. மாறாக மாணவர்களின் மனதை அந்த பாடவேளைக்கு ஏற்றவாறு பதப்படுத்திவிட்டு துவங்க வேண்டும்.
முக்கியமாக புதிய பாடம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அந்தப் பாடத்தின் பயன்பாடுகள் இருக்கும் துறை சார்ந்த ஏதேனும் ஒரு சுவாரசியமான முடிச்சை எடுத்து போட்டு அவர்கள் முன்னால் அவிழ்க்க வேண்டும். அதற்கு பிறகு அந்த பாடம் மேற்கூறிய விஷயத்தின் பின்புலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கூறினோம் என்றால் பாடத்தின் முக்கியத்துவம் அறிந்து நிமிர்ந்து உட்கார வழி வகுக்கும் .
அதை விட்டுவிட்டு "டேய் இந்த பாடம் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ரொம்ப ஈசி கிடையாது, இதெல்லாம் ரொம்ப கஷ்டம், கவனமா படிக்கணும். நான் நடத்தும் போது ஒரு நிமிஷம் விடாம கவனமா பார்த்துகிட்டே வரணும் அப்பதான் உங்களுக்கு புரியும்!!" என்று துவங்கும் போதே ஒரு வெடிகுண்டை வீசினோம் என்றால் மாணவர்கள் பாடத்திலிருந்து சற்று விலகி நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.
என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு பாடத்தை துவங்குவது என்றாலும் சென்ற ஆண்டு பயன்படுத்திய அதே உத்தியை பயன்படுத்தியதே கிடையாது, ஒவ்வொரு ஆண்டும் அதை வெவ்வேறு விதமாக மேம்படுத்தி சுவாரசியத்தை கூட்ட முயலுவேன். மேலும் பாடத்தை துவங்குவதை இயக்குனர் திரைப்படத்திற்கான ஸ்கிரீன் பிளே எழுதும் நேர்த்தியோடு மனதுக்குள் வடிவமைத்து அதனை நூறு விழுக்காடு வகுப்பறையில் ஒர்க் அவுட் செய்வதற்கு முயல்வேன்.
Though I was a strict teacher, நான் கணிதம் எடுக்கும் வகுப்புகளில் கணிதத்தில் அதிக ஆவரேஜ் மார்க் கிட்டும், அதுபோல ஆங்கிலம் எடுக்கும் வகுப்புகளிலும் ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுப்பார்கள், எனது மாணவர்களில் பலர் கணிதத்தை படமாக எடுத்து படிக்கின்றார்கள் கணித ஆசிரியர்களாகவும் உள்ளார்கள்!!
ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பது என்பது சிடுமூஞ்சியாக இருப்பதல்ல, வேலையில் சரியாக இருப்பதுதான்!!
பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் உள்ளது அது சுலபமான படமாக ஆவது என்பது!!
பாடம் நடத்தும்போது சிரிப்பும் கும்மாளமுமாக இருக்குமானால் வகுப்பறை உயிரோட்டமாக இருக்கும் அங்கே நிச்சயமாக கற்றல் இனிதே நடக்கும்.
"இந்த பாடம் ரொம்ப கஷ்டம்ப்பா அதனால ஜாக்கிரதையா இருங்க, எல்லாரும் கவனமா கவனிங்க" என்று பீடிகை போட்டு ஒரு பாடத்தை துவங்கும் ஆசிரியருக்கு நிச்சயமாக அந்த பாடம் அவர் மாணவராக இருந்த காலத்தில் கடினமாக இருந்திருக்கும், அதே கஷ்டத்தை அவர் அறிந்தோ அறியாமலோ மாணவர் மனதிற்கும் கடத்தி விடுகிறார்!!
ஒரு விஷயத்தை நம்மால் தெளிவாக, சரியாக, முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் நிச்சயமாக அந்த விஷயத்தை மற்றவருக்கு எளிமையாக சொல்லி புரிய வைக்க இயலாது என்பது மிகப்பெரிய உளவியல் உண்மை!!
இந்த உண்மையை அனைத்து பாட ஆசிரியர்களும் மனதில் நேர்மையோடு ஏந்திக்கொண்டு வகுப்பறைக்குள் சென்றோம் என்றால் பாடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரமாதமாக வந்துவிடும். அதற்குப் பிறகு பாடங்கள் மாணவர்கள் மனதில் ஹவுஸ் ஃபுல்லாக ஹிட் அடிக்கும்.
மு ஜெயராஜ்,
தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம்.
Thursday, October 3, 2024
CECRI - CENTElRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE
CECRI - CENTElRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE
நம்ம பாஜக குரூப் நேரு இந்தியாவ சர்வநாசம் ஆக்கிட்டார் என்று சதா சர்வ காலமும் குற்றம் சாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தொழில் துறை விவசாயம் அறிவியல் என்று அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அவர்தான் போட்டு வைத்து சென்றுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.
மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் ( CECRI )1953ல் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமானால் தொழில் துறைக்கு தேவையான உபகரணங்கள் சார்ந்து தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு கொண்டே வர வேண்டும். அந்த அடிப்படையில் தான் CSIR - (அறிவியல் மற்றும் தொழில் துறைக்கான ஆராய்ச்சி) தொடங்கப்பட்டது.
அந்த CSIR ன் கீழே வரும் ஒரு ஆய்வு மையம் தான் CECRI - KARAIKUDI. சிக்கிரியைப் பொறுத்தவரையில் மின்துறை சார்ந்த வேதிப் பொருட்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இங்கே ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்ட பல விஷயங்கள் தொழில் துறையில் அறிவியல் துறையிலும் பாதுகாப்பு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு கொண்டு உள்ளது என்பதை இன்று நேரில் பார்த்தபோது கண்கூடாக உணர முடிந்தது .
ஆமாம் இன்றைக்கு CECRI ஆய்வுக்கூடத்தை பொதுமக்கள் & மாணவர்கள் நேரில் கண்டு பயன்பெறும் வகையில் ஓபன் டே வைத்திருந்தார்கள்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது இந்த நிறுவனம் குறித்து எனது சக நண்பர்கள் குறிப்பிட்டு பேசியிருந்தனர்.
அப்பொழுது இருந்தே ஒரு முறை இங்கே சென்று வர வேண்டும் என்று ஒரு ஆவல் இருந்து கொண்டே இருந்தது.
ஓபன் டே குறித்த சர்குலர் பள்ளிக்கு வந்திருந்தது . அன்றே நிச்சயமாக இந்த ஆண்டு தவறாமல் சென்று வர வேண்டும் என திட்டமிட்டேன்.
CECRI யில் B.Tech in Chemical and Electrochemical Engineering நடைபெற்று வருகிறது. இந்த படிப்பு அண்ணா யுனிவர்சிட்டி யின் கீழ் வருகிறது . ஆகவே மாணவர்களின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆஃப் அடிப்படையில் சேர்க்கைக்கு பெறலாம்.
பல்வேறு ஆராய்ச்சி வல்லுநர்களின் நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக இங்கே படித்து வருகிறார்கள்.
அவர்கள்தான் மக்களுக்கு சற்று சலிப்பில்லாமல் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
காரைக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக்,கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொறுமையாக பார்த்துச் சென்றார்கள்.
முக்கியமாக பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் சென்று அங்கே இருந்த ஆய்வு மாணவர்களிடம் தெளிவாக விளங்கிக் கொள்ள பல கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர்.
சூப்பர் கெபாசிட்டர் என்று புதியதொரு கெபாசிட்டரை கண்டறிந்து டெமோ காண்பித்தனர்.
அதுபோல துருப்பிடித்தலை தவிர்ப்பதற்கு பூசப்படும் வேதிப்பொருள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் பற்றியும் அவை மிகப்பெரிய கட்டமைப்புகள் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இவர்களது தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்படுவது பற்றியும் வைத்திருந்த காட்சி பொருள்கள் சுவாரசியத்தை தந்தன.
முக்கியமாக ஒரு விளையாட்டு மைதானம் அளவுக்கு பெரிய இரும்பு நீர் தேக்க தொட்டி தேக்கு மரத் தூண்களின் மேல் வைக்கப்பட்டிருக்கிறதாம் அது 150 ஆண்டுகள் கடந்து இன்றளவுக்கும் பயன்பாட்டில் இருக்கிறது என்கிற தகவல் கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆமாம் கொல்கத்தாவில் அந்த நீர்த்தக்க தொட்டி உள்ளதாம்.
3D printer குறித்த ஏராளமான சுவாரசியமான தகவல்கள் ஆச்சரியத்தை கொடுத்தன.
முக்கியமாக மருத்துவத்துறையில் 3டி பிரிண்டர்களின் பங்கு எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
ஹைட்ரஜன் எரிபொருளை பிரிப்பது குறித்த ஆய்வுகளும் எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு நவீனமயமான இலகுவான பேட்டரிகள் வரப்போகின்றன என்பது குறித்த ஆய்வுகளும் சிறப்பான முறையில் அங்கே நடைபெற்றுக் கொண்டு உள்ளன.
அடுத்த ஆண்டு ஓபன் டேவை மையப்படுத்தி எங்கள் பள்ளி மாணவர்கள் பார்த்து வரும் படி ஒரு கல்வி சுற்றுலாவை ஏற்பாடு செய்யலாம் என்கிற எண்ணம் உள்ளது ஏனெனில் இது போன்ற மையங்களுக்கு செல்லும்போது மாணவர்கள் கல்வி குறித்த இன்னும் ஆழமான விசாலமான பார்வையை பெற முடியும்.
Tuesday, September 24, 2024
மதிப்பீட்டு முறைகள் மட்டும் மாறவே மாறாதா?
கல்வித் துறையில் ஏதேனும் சின்ன சின்ன பரபரப்புகள் எழுந்து அடங்கும்போதெல்லாம் எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை என்கிற அங்கலாய்ப்புகள் வருவது வாடிக்கை.
ஆனால் EDUCATION SYSTEM என்பது என்ன என்கிற புரிதல் பெரும்பான்மையானவருக்கு இருப்பதில்லை.
எஜூகேசன் சிஸ்டம் என்பது பின்வரும் அடுக்குகளை உள்ளடக்கியது.
EDUCATION POLICY
அதாவது அரசு கல்விக் கொள்கையை உருவாக்கும்.
கனடா போன்ற பரப்பளவில் பெரிய நாடுகள் அந்தந்த மாகாணங்களே தங்களுக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.
ஆனால் இந்தியா பெரிய துணைக் கண்டம், கலாச்சார பன்முகத்தன்மை உள்ள நாடு. ஆனால் இங்கே கல்விக் கொள்கையை Centralise செய்கிறார்கள். கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் மாநில அரசுகள் அவரவர்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளும் வகையில் நெகிழ்வு தன்மையோடு இருத்தலே அவசியம்.
சரி அது வேற மேட்டர் நாம் விஷயத்துக்கு வருவோம்.
கல்வி கொள்கைகள் என்பன அவ்வப்போது அமையும் அரசுகளை பொறுத்து மாறும்.
பொதுவாக கல்விக் கொள்கை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு என்னென்ன விதமான அறிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு தற்போது இருக்கும் நவீன உலகில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மதிப்பு கல்வி இவற்றின் அடிப்படையில் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படும்.
CURRICULUM FRAMEWORK
கலைத்திட்ட வடிவமைப்பு
கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை வழிகாட்டியாக கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது கூட NCF2023 புதிய கல்விக்கொள்கைக்கு (NEP 2020) சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
இவற்றை கல்வித் துறையின் வல்லுனர் குழு நிர்ணயம் செய்வார்கள்.
SYLLABUS
பிறகு வகுப்பு வாரியாக கலைத்திட்டத்தில் உள்ள விஷயங்கள் பிரித்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். ஆனால் தற்போது நாம் NEET/IIT-JEE என்று இவற்றை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டத்தை அமைத்து வைத்திருக்கிறோம். Inclusive ஆக இருக்க வேண்டிய விஷயம் நிறைய மாணவர்கள் தெறித்து ஓடுவதற்கு ஏற்றாற்போல் உள்ளது. கல்லூரிகளில் கணித புலம் காலியாக கிடப்பது கவலைக்குறியது.
TEXT BOOKS
பாடத்திட்டங்களில் உள்ள கருத்துக்கள் மாணவர்களுக்கு எளிமையாக சென்று சேர ஏதுவாக பாட புத்தகங்கள் எழுதப்படுகின்றன பாட புத்தகங்களை வல்லுநர் குழுவும் பாடத்தில் தேர்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களும் இணைந்து உருவாக்குகிறார்கள்.
PEDAGOGY
பாட புத்தகம் கைக்கு வந்த பிறகு பாடப்புத்தகங்களில் இருக்கும் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிமையாக புரியச் செய்வதற்கு கற்றல் கற்பித்தல் முறைகள் ஆசிரியர்களால் வகுக்கப்படுகின்றன. இதற்கு கல்வித் துறையும் வழிகாட்டுதலும் உண்டு.
ASSESSMENT
மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளதுஎன்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன.
கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ற அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் பல இடங்களில் “அந்த காலம் அது வசந்த் அன்கோ காலம்”, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” போன்ற அறிய பொக்கிஷங்கள் இடம் பெற்றுள்ளன.
கல்விக் கொள்கை கள் மாற்றம் அடையும்போது அதற்கு ஏற்றார் போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது. கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதிய புதிய கல்வி அறிவியல் கருத்துக்கள் எல்லாவற்றையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு பாடத்திட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன.
அந்த காலத்தில் பாட புத்தகம் என்பது கருப்பு வெள்ளையில் மட்டுமே இருக்கும். படங்கள் அரிதாகவே இருக்கும் அதுவும் கையால் வரையப் பட்டதாக இருக்கும். தற்போது பாட புத்தகங்களில் வண்ண படங்கள் இடம்பெறுகின்றன பாடப் புத்தகங்கள் சார்ந்த கருத்துக்களை காணொளி வடிவில் காண்பதற்கு QR CODE வழங்கப்பட்டுள்ளன. ஆக மாணவர்களுக்கு தேடல் இருந்தால் அவர்களுக்கு கை அருகிலேயே அனைத்து பாடக் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களில் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியை செய்ய வல்ல நவீனப்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அநேகமாக வேறு மாநிலங்களில் இவ்வளவு நவீனமாக இல்லை.
மணற்கேணி ஆப் மாணவர்கள் ஆசிரியர்கள் பிரத்தியேகமாக பாடம் சார்ந்த காணொளிகளை பார்க்கும் வண்ணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆக பாடப்புத்தக வடிவமைப்பிலும் அதற்கான innovative supporting tools வடிவமைப்பிலும் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை.
எந்த பாடமாக இருந்தாலும் லக்சர் மெத்தட் ஒரு நாளும் கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த கற்பித்தல் முறை தற்போது மலையேறிப் போனது.
தற்போதுள்ள கற்பித்தல் முறைகள் நவீனமாகவும் பன்முகத் தன்மையோடும் உள்ளன என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆசிரியர்கள் ஆடல் பாடல் பொருத்தமான காணொளிகள் படங்கள் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் என்று நவீன மயமாக கற்றல் கற்பித்தலை உயிரோட்டமாக கொண்டு செல்கின்றனர்.
ஆக கல்வி அமைப்பில் உள்ள மேலே உள்ள ஐந்து அடுக்குகளும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால் இன்றளவும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் பழைய முறையே மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. பரீட்சை பேனா பேப்பர் மதிப்பெண் இந்த முறை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது வருத்தத்திற்கு உரியது.
ஆனா பாருங்க இந்த அதரப் பழசான தேர்வு முறையை எவ்வளவு நவீனமயமாக நாம் நடத்தி வருகிறோம். ஆமாம் முன்பெல்லாம் மாணவர் பெயர்ப் பட்டியல் தயார் செய்வது பெரிய வேலை. ஆமாம், மாணவர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் இடம் பெறப் போகும் பெயர் அல்லவா. அதற்கு பிறகு அந்த பெயரில் உள்ள பிழைகளை சரி செய்வது மாபெரும் சிக்கல் நிறைந்த வேலை.
அதற்குப் பிறகு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் போட்டோ ஒட்டி தயாரித்து வழங்க வேண்டும் ஆள் மாறாட்டம் செய்ய இடம் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்களை அறை வாரியாக பிரித்து அமரச் செய்து தேர்வு எழுத வைத்து பேப்பர் வாங்கி அழகாக அடுக்கி மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்புவது என்பது மாபெரும் சிக்கலான பொறுப்பான தலைவலி பிடித்த வேலை.
ஆனால் மிக மிக எளிய முறையில் தற்போது ஒவ்வொரு மாணவனின் புகைப்படமும் அவனது தேர்வு பேப்பரிலேயே வந்துவிடுகிறது. பேப்பர் மாறிப் போவதற்கோ ஆள்மாறாட்டம் செய்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை.
அக, தேர்வு நடத்தும் முறை என்பது எந்த ஒரு சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க கணினி மையப்படுத்தப்பட்டு ஆக நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு நவீனமயப் படுத்தப் பட்ட மதிப்பீட்டு முறையில் என்ன சிக்கலை கண்டீர்கள் என்று நீங்கள் எண்ணலாம்.
மாணவர்கள் தங்கள் அறிவினை பெறுவதற்கு பன்முகப்படுத்தப்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. அதே வேளையில் அவர்களின் புரிதலை வெளிப்படுத்துவதற்கு வழங்கப்படும் ஒரே வாய்ப்பு இறுதி பரீட்சை அன்று தரப்படும் பேப்பர் பேனாவோடு முடிந்து போகிறது.
இங்கே பாடப் பொருள் சார்ந்த நுண்ணறிவை சோதிப்பது என்பது குறைவாகத்தான் இருக்கிறது மாறாக மனப்பாட முறையை சோதிப்பது என்பது தான் 90 விழுக்காடு உள்ளது.
மாணவர்கள் செயல்திட்டம் சமர்ப்பிப்பது, செமினார் எடுப்பது, POWER POINT PRESENTATION உருவாக்குவது, பாடம் சார் கண்காட்சி பொருட்களை உருவாக்கி காட்சிப் படுத்தி விளக்கி கூறுவது, பாட கருத்துக்களை கலையாக்கம் செய்வது இப்படி பன்முக தன்மைகள் வகுப்பறைகளில் வெளிப்படுகின்றன.
ஆனால் அவை எல்லாவற்றையும் கொன்று புதைத்து கம்பீரமாக நிற்பது பேப்பரும் பேனாவும் தான்.
ஒரு வெளிச்ச கீற்று தென்படுவது போல CCE என்கிற ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்காவது தனிப்பட்ட வகுப்பு செயல்பாடுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு செயல்பாடுகள் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையை கொண்டிருந்தது.
அங்கே மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேட் முறை அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை வந்து சேரும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனென்றால் எவ்வளவு முயற்சித்தும் எட்டாம் வகுப்புக்கு மேல் அந்த முறையை கொண்டு வரவே இயலவில்லை.
இன்னும் சொல்லப் போனால் அது எட்டாம் வகுப்பில் இருந்து சுருங்கி திரும்பி போய் ஏழாம் வகுப்பில் படுத்துக் கொண்டது.
ஆக எல்லாவற்றையும் எண்களாகவே பார்த்து பழகிய பெற்றோருக்கு மதிப்பீடு என்பது எண் சார்ந்த விஷயமாகவே இருக்க வேண்டும் என்கிற ஒரு பிடிவாதம் உள்ளது.
அதோடு மட்டுமின்றி மதிப்பீட்டுக்கு எண்கள் வழங்கி விட்டால் அது ஒப்பீடு செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்கள் பையன் நன்றாக படிக்கிறான் என்கிற ஒற்றை பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை, எனது பையன் யாரை விட எல்லாம் நன்றாக படிக்கிறான் என்கிற ஒப்பிட்டு மதிப்பீட்டு முறைக்கு பழகிப்போன வர்ணாசிரம அடுக்குகளை கொண்ட சமூகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான எழுத்துக்களை வழங்கும் கிரேடு முறையை ஏற்பது சற்று கடினம் தான்.
இந்த மதிப்பீட்டு முறை எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடும் பின்லாந்தில் எப்படி இருக்கிறது?!
பின்லாந்தை பொருத்தவரையில் தேசிய அளவிலான கட்டாய தேர்வு என்ற ஒன்று அடிப்படை வகுப்புகளுக்கு கிடையாது. சில இடைநிலை வகுப்புகளுக்கு கணிதம் ஆங்கிலம் ஸ்வேதிஷ் ஆகிய பாடங்களுக்கு தேசிய தேர்வுகள் இருந்தாலும் அந்த தேர்வுகளை எழுத செய்வதும் வேண்டாம் என்று மறுதலிப்பதும் ஆசிரியர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறார்கள்.
அங்கே தனது மாணவர்களின் புரிதலை அளப்பதற்கான மதிப்பீட்டு முறைகளை ஆசிரியர்களே உருவாக்கும் சுதந்திரம் உள்ளது.
அவர்கள் முதன் முதலில் எழுதும் தேசிய அளவிலான தேர்வு என்பது மேல்நிலை வகுப்புகளில் இறுதி கட்டத்தில் மட்டுமே இருக்கிறது.
கீழ்நிலை வகுப்புகளுக்கு WILMA என்றொரு இணைய வழி மூலமாக தொடர் மதிப்பீட்டு தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இங்கே EMIS PORTAL மூலமாக அவ்வப்போது இந்த வகைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதற்கடுத்ததாக எல்லோரும் சிலாகித்த படம் தென்கொரிய கல்வி முறைகளிலும் மதிப்பீடு அனைத்து விதமான வளர்ச்சிகளை HOLISTIC DEVELOPMENT கருத்தில் கொள்ளும் வண்ணமாக மதிப்பீடு முறைகள் உள்ளன .
வகுப்பு தேர்வுகள், செயல்திட்டம், பாட இணை செயல்பாடுகளில் பங்கேற்பு போன்றவற்றுக்கு எல்லாம் மதிப்பெண்கள் அங்கே வழங்கப்படுகின்றன.
இடைநிலை வகுப்புகளில் தென் கொரியாவில் ஒவ்வொரு வகுப்பிலும் இடைப்பருவ தேர்வு ஆண்டு தேர்வு உள்ளன.
அங்கே கிரேட் சிஸ்டம் தான் மதிப்பீட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது ரேங்க் கிடையாது.
கனடா போன்ற பெரிய நாடுகளில் கல்வி கொள்கைகள் கூட அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வு தன்மையோடு உள்ளது. மதிப்பீடு முறைகளையும் மாகாணங்களே இறுதி செய்து கொள்கின்றன.
இங்கே நமது மக்கள் எண்களை கண்டு மயங்கி கிடக்கும் அந்த அறியாமையில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும். எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் போக்கினை மாற்ற வேண்டும். அதுபோல இங்கே ஒழிக்கப்பட வேண்டிய மற்றும் ஒரு விஷயம் ரேங்க் என்கிற தரப்படுத்துதல்.
அனைவருக்கும் தேர்ச்சி வழங்கிவிடுதல், கிரேடு முறை, தரப்படுத்தும் முறையை எல்லா வகையிலும் ஒழித்துக் கட்டுதல் ( ரேங்க்கை ஒழித்தாலும் 600/600 ஐ கொண்டாடுதல் மாவட்ட அளவில் உயர் மதிப்பெண்களை கொண்டாடுதல் எல்லாவற்றிலும் ரேங்க் ஒட்டிக் கொண்டு தான் உள்ளது) எண்களில் ஒன்றும் இல்லை என்பதை முழுமையாக அனைவருக்கும் தெளிவு படுத்தும் விதமான ஒரு பன்முகத்தன்மை கொண்ட புதிய மதிப்பீட்டு முறை அவசியமாக வரவேண்டும்.
உணவின் சுவை உணறாது அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கும் ஒரு பசி கொண்டவனைப் போல மாணவர்கள் பாடக்கருத்துகளை புரிந்து கொள்ளாமல் அள்ளிவிழுங்கி தேர்வுகளில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்த அவல நிலை மாற வேண்டும்.
இதையே மாநில பாடத்திட்ட கருத்துக் கேட்புக் குழுவிடம் நான் கூறியிருந்தேன். இங்கே சற்று விசாலமாக கூறியுள்ளேன்.
Sunday, September 22, 2024
ஆன்லைன் வகுப்புகளின் காலத்தில் கூட ரோபோ ஆசிரியர்களுக்கு இடமில்லை!!
நான் வேலைக்கு சேர்ந்த காலகட்டத்தில் பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பெரும்பாலும் இருக்காது. பள்ளியில் பணிபுரியும் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் தான் ஆங்கிலப் பாடம் எடுப்போம்.
2004 துவங்கி 2011 ல் உட்கோட்டை பள்ளியில் இருந்து முதுகலை கணித ஆசிரியராக செல்லும் வரையில் நான் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகவே அறியப் பட்டேன். கணித பாடவேளைகள் ரொம்ப சீரியஸாக செல்லும். ஆனால் ஆங்கிலப் பாடவேளைகள் ரொம்ப ஜாலியாக செல்லும். நான் வாசித்தவை நடப்பு கால நிகழ்வுகள் போன்ற பல விஷயங்களை பாடத்தோடு ஒட்டி கதைக்க நல்ல வாய்ப்பாக அமையும். ஆங்கில துணைப்பாடக் கதைகளை இரண்டு மூன்று நாட்கள் வைத்து வைத்து ருசித்து நடத்திய காலம் அது.
அந்த காலகட்டத்தில் தான் மேலே நான் சொன்ன தலைப்பில் ஐசக் அசிமோவ் எழுதிய அறிவியல் புனைகதையை நடத்தினேன். நாங்கள் நடத்திய காலத்தில் இந்த பாடம் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Prose ல் Tommy found a Book என்கிற தலைப்பில் வந்து இருந்தது. தற்போது புதிய பாடபுத்தகத்தில் அதே ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Non-detail story பகுதியில் The Fun They Had என்கிற தலைப்பில் வந்துள்ளது.
இயல்பிலேயே அறிவியல் சார்ந்த விஷயம் மேல் எனக்கு ஆர்வமுண்டு. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த பாடத்தை அனுபவித்து நடத்தினேன்.
ஐசக் அசிமோவ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியர். அறிவியல் புனைகதைகள் ஏராளமாக எழுதியவர்.
இந்த கதைக்கு வருவோம். கதை நடக்கும் காலகட்டம் 2157. டாமி மற்றும் மார்கீ அண்ணன் தங்கை. டாமி வீட்டின் பரண் மீது இருந்து ஒரு புத்தகம் ஒன்றை கண்டு பிடிக்கிறான். அன்றைய காலகட்டம் வன்புத்தகங்கள் சுத்தமாக மறைந்து மென்புத்தகங்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் காலம். கசங்கி மடங்கிய காகித புத்தகம் அவனுக்கு வியப்பைத் தருகிறது. அந்த புத்தகம் பழங்கால பள்ளிகள் பற்றிய புத்தகம். அன்றைய காலகட்டத்தில் திரையில் எழுத்துகள் ஓடும் ஆனால் காகித புத்தகத்தில் நிலையாக நிற்கும் எழுத்துகளை வாசிப்பது அவனுக்கு வியப்பை தருகிறது.
மார்கீ அவனிடம் அந்த புத்தகம் பற்றி கேட்கிறாள். இது பள்ளிகள் பற்றிய புத்தகம் என்கிறான். அவளுக்கோ பள்ளி என்றாலே வெறுப்பு. பள்ளியை பற்றி எழுத என்ன இருக்கிறது என்று வெறுப்பாக கேட்கிறாள்.
அவர்களது வீட்டில் பள்ளி என்பது வீட்டில் இருக்கும் கணினி. அது அவர்களுக்கான பாடத்தை நடத்துகிறது. வீட்டுப் பாடம் கொடுக்கிறது. அவர்கள் வீட்டுப் பாடத்தை அதற்கான துவாரத்தில் கொடுக்க அது திருத்தி மதிப்பெண் வழங்கி வெளியே தள்ளுகிறது. பாடவாரியாக நேரம் பிரித்து வைத்து பிள்ளைகளை கணினி முன்பு அமர்ந்து பெற்றோர் படிக்கச் செய்கின்றனர்.
மார்கியின் பள்ளிக் கணினி அவளுக்கு புவியியல் பாடத்தில் டெஸ்ட் மேல் டெஸ்ட்டாக வைத்து சோதிக்கிறது. அவளும் தொடர்ந்து புவியியலில் பெயிலாகியபடி இருக்கிறாள். அதனாலேயே பள்ளி என்றால் வெறுப்புக்கு உள்ளாகிறாள். இறுதியில் அவளது அம்மா மெக்கானிக் ரோபோவை வரச்செய்து பள்ளியை சரி செய்கிறாள். புவியியல் பாடம் சற்று வேகமாக சென்றுள்ளது. மார்கியின் மீது எந்த தவறும் இல்லை என்று மெக்கானிக் கூறுகிறார். மெக்கானிக் பள்ளி ரோபோவை கழட்டியபோது மார்கி “இதை அவர் மீளவும் பொறுத்த தெரியாமல் போய்விட வேண்டும் அல்லது கொஞ்ச நாட்கள் இந்த ரோபோவை மெக்கானிக் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட வேண்டும்“ என்றெல்லாம் எண்ணுகிறாள்.
அந்த புத்தகத்தில் உள்ள பழங்கால பள்ளியானது பிரத்தியேகமான இடத்தில் செயல்பட்டுள்ளது. ஊரில் உள்ள சமவயது சிறார்கள் ஒரே வகுப்பில் கும்பலாக அமர்ந்து படிக்கின்றனர். மனித ஆசிரியர் பாடம் நடத்துகிறார். சேர்ந்து விளையாடி மகிழ்கின்றனர். இந்த தகவல்கள் அவர்களுக்கு ஏக்கத்தையும் ஆச்சரியத்தையும் தருவதாக கூறி கதையை முடித்திருப்பார்.
இந்த கதையில் கல்வி சார்ந்து ஒரு மூன்று விஷயங்களை அசிமோவ் வழி நின்று புரிந்து கொண்டேன்.
குழந்தைகளின் புரிதல் நிலை அறிந்து பக்குவமாக பாடம் நடத்திட மனித ஆசிரியர்கள் தான் சரி. எத்தனை கேட்ஜெட்டுகள் வந்தாலும் ஒரு ஆசிரியரின் இடத்தை அவற்றால் நிரப்ப இயலாது.
வயதொத்த குழந்தைகள் கூடி ஆடி களித்து மகிழ பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள தோதான இடம் பள்ளி மட்டுமே. எவ்வளவு கேட்ஜெட்களை வீட்டில் நிரப்பினாலும் வயதொத்த குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாடிடும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது.
எத்தனை யுகங்கள் கடந்தாலும் பள்ளிக் குழந்தைகளின் விடுமுறை ஏக்கம் என்பது மாறாத ஒன்று என்பதையும் கதைப் போக்கிலேயே அசிமோவ் உணர்த்திச் செல்கிறார்.
அசிமோவ் அவர்களின் கற்பனையில் பிறந்த ரோபோ ஆசிரியர் என்பவர் இன்று வரையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் கணினியின் வளர்ச்சி குறித்த அவரது கற்பனையைத் தாண்டி பலமடங்கு வேகத்தில் கணினி யுகம் வளர்ந்து விட்டது. (அவரது ரோபோ ஆசிரியர் பஞ்ச்டு கார்ட் தான் ரீட் செய்கிறார். பிள்ளைகளும் வீட்டு பாடத்தை பஞ்ச்டு கார்டில் எழுதியே இன்புட் செய்கிறார்கள்)
இறுதியாக ரோபோ எனப்படும் ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் குறித்த எனது பார்வையை கூறிவிடுகிறேன்.
நானறிந்த வரையில் சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல இத்தனை ஆசிரியர்கள் தேவையில்லை என்று வெளியேற்றியுள்ளார்கள். மீதம் இருப்போருக்கும் பாதி சம்பளம் வழங்கியிருக்கிறார்கள்.
இது போலவே பல துறைகளில் ரோபோக்கள் நுழையும் போதெல்லாம் பல நூறு ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். எனவே ஆட்டோமேஷன் என்பது ஆபத்தானது.
எனவே ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை வரவேற்கவேண்டாம்.
வேண்டுமானால் மனிதர்கள் செய்ய இயலாத ஆபத்தான பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Thursday, September 12, 2024
அணுக்கரு உலை - அமைப்பு
அணு உலைகளில் அப்படி என்னதான் இருக்கிறது?!
" டேய் அருண், ஏற்கனவே நாம அணு உலைகள் பற்றி பேசினோம் இல்லையா?!"
"ஆமாம்பா, அணு உலைகள்ல எப்படி மின்சாரம் உற்பத்தி பண்றாங்க அப்படின்னு சொன்னீங்க?!"
"இன்னைக்கு அந்த அணு உலை எப்படி இருக்கும் அதுல என்னென்ன உதிரி பாகங்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு பார்ப்போமா?!"
"அது நானே சொல்றேன் பா, எங்களுக்கு இப்ப பாடத்திலேயே அது இருக்கு!!"
" அது இருக்கட்டும் முதன்முதல்ல அணு உலை எப்ப கட்டினாங்க தெரியுமா?! முக்கியமா அணுகுண்டு போட்டதுக்கு பிறகா, அல்லது அணுகுண்டு போடுறதுக்கு முன்னாடியா?! அதை மட்டும் சொல்லு பாப்போம்!!"
" எப்படி இருந்தாலும் அணுகுண்டு வெடிச்சதுக்கு பிறகு தானே அதை கட்டுப்படுத்தி ஒரு அறைக்குள் வெடிக்கிறது மூலமா மின்சாரம் தயார் பண்ணலாம் அப்படிங்கிறத கண்டுபிடிச்சி இருப்பாங்க"
"அப்படி இல்ல, அணு உலைகள் அமெரிக்காவில் சிக்காகோல 1942-ல என்ரிக்கோ ஃபெர்மி அவர்களால் நிறுவப்பட்டது"
" சரி அதுல என்னென்ன இருக்கு நீ சொல்லு பாக்கலாம்!!"
" முதலில் அணு உலைக்கான எரிபொருள்"
"அணு உலை எரிபொருள் யுரேனியம் தானே?!"
"அப்படி பொசுக்குன்னுல்லாம் சொல்லக்கூடாது, யுரேனியத்திற்கு நிறைய ஐசோடோப் இருக்கு எல்லா வகை யுரேனியத்தையும் அணு உலைகள்ள பயன்படுத்த முடியாது,. அணு எடை 235 இருக்கிற யுரேனியம் மட்டும் தான் பயன்படும்"
"ஆமா, U235"
"ஆனால், இயற்கையா கிடைக்கிற யுரேனியத்துல 0.7% தான் U235 இருக்கும். ஆனா U238 நிறைய இருக்கும் அதை செறிவூட்டுவதன் மூலமா 4% அளவுக்கு U235வ பெற முடியும்"
"அருண், ஒரு சந்தேகம்"
"கேளுப்பா "
"அணு உலைகளில் யுரேனியம் நிலைமாறு நிறை அளவுக்கு (critical mass ) அளவுக்கு இருக்குமா என்ன?!"
"இல்லையே"
" அப்படி இருந்தா தானே அணுக்கரு பிளவு தானா நடக்கும்?!"
" அப்படி இல்லப்பா, அணுக்கரு பிளவு தானா நடந்தால் அது அணுகுண்டு, கட்டுப்படுத்தி நடக்க வச்சாதான் அது அணு உலை!!
அதனால கிரிட்டிக்கல் மாஸ் அளவுக்கு யுரேனியத்த வைக்க மாட்டாங்க, அதுக்கு மாறாக குட்டி குட்டி மாத்திரை வடிவத்தில் பெல்லட்டுகளா மாத்தி அதை உருளை வடிவ குழாய்கள்ல வச்சிருவாங்க அந்த உருளை வடிவ குழாய்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பு மேல செருகப்பட்டு இருக்கும், இதுக்கு பேரு எரிபொருள் தொகுப்பு ( fuel assembly)"
"அப்படின்னா, அணுக்கரு பிளவை தொடங்க நியூட்ரான் வேணுமே என்ன செய்வாங்க?!"
" அணுக்கரு பிளவு என்றாலே யுரேனிய அணுவை போட்டு பொளக்குறது தான் அது பொளக்குறதுக்கான கோடரி நியூட்ரான், பிளவுக்கு அப்புறம் மூன்று நியூட்ரான் தெறிச்சி ஓடிவரும், அது மீண்டும் மூன்று அணுக்கள போட்டு பொளக்கும், இந்த மாதிரி அந்த ரணகளம் தொடங்கும்"
"சரி விஷயத்துக்கு வா நியூட்ரானுக்கு எங்க போவாங்க?!"
"சொல்றேம்பா, அவசரப்படாதீங்க!! பெரிலியம் மற்றும் புளுட்டோனியம் கலவை இல்லன்னா பொலோனியம் வைப்பாங்க, இவை நியூட்ரான்கள உமிழும்"
"சரி சரி, அணு உலை எரிபொருள் பற்றி விலாவாரியா பார்த்தாச்சு, அடுத்து என்ன ?!"
"அடுத்ததா தணிப்பான் ஆங்கிலத்தில் moderators"
" ஆமா, இது எதுக்கு, என்னத்த அப்படி தணிக்கப் போறாங்க?!"
" அணுக்கரு பிளவு நடக்கும்போது யுரேனியம் அணுவில் இருந்து புறப்பட்டு வரும் 3 நியூட்ரான்களும் அதிவேக நியூட்ரான்கள் ஆகும் அவை அடுத்ததாக மூன்று அணுக்களை பிளப்பதற்கான சாத்தியம் குறைவு எனவே அந்த அதிவேக நியூட்ரான்களின் வேகத்தை தணிப்பதற்கு தணிப்பான்கள் தேவை?"
" அது என்ன தொழில்நுட்பம் எப்படி தணிக்க முடியும்?!"
" சற்றேறக் குறைய நியூட்ரான்களின் அளவே உடைய மிக மிக குறைவான எடையுள்ள அணுக்கருக்களை கொண்ட தனிமங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும், ஏனெனில் நியூட்ரானின் அளவே இருக்கும் அந்த உட்கருக்கள் உடன் மோதும் போது நியூட்டனின் வேகம் தணிக்கப்படும்"
" ஓ அப்படியா அப்படின்னா தணிப்பான்களா எதை பயன்படுத்துறாங்க?!"
" கடின நீர் பயன்படுத்தப்படும்( H2O க்கு பதிலாக ஹைட்ரஜனின் இன்னொரு வகையான டியூட்ரியத்தை கொண்ட நீர் D2O) பெரும்பாலான அணு உலைகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது சில அணு உலைகளில் யுரேனியம் பெல்லட்டுகளுடன் கிராஃபைட்டை கலந்து வைத்து விடுவார்கள் அந்த கிராஃபைட் தணிப்பானாக பயன்படும்"
" அணு உலைகளில் திடீர்னு வெப்ப அளவு உயர்ந்து இருக்கும்போது அதை கட்டுப்படுத்தவும் அல்லது பராமரிப்புக்காக சுத்தமாக நிறுத்தி வைக்கவும் ஸ்விட்ச் இருக்கா?!"
" அடுத்த காம்பொனண்ட் அத பத்தி தான் சொல்ல வரேன் பா, Control Rods என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டுக் கழிகள் அணு உலைகளில் உண்டு அவைகள் நியூட்ரான்களை பிடித்து விழுங்க கூடியவை."
" அதோடு மட்டுமின்றி பெரும்பாலான அணு உலைகளில் மேல் பகுதியில் கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே விழுவதற்கு தயார் நிலையில் பிரத்தியேக அமைப்புகள் மூலமாக வைக்கப்பட்டிருக்கும். சில அணு உலைகளில் கீழே இருந்து மேலே உயர்த்தும் வகையில் கூட வைக்கப்பட்டிருக்கும்"
" ஆமா இதை எப்போது பயன்படுத்துவார்கள்?!"
"அணுவுலைகளின் வெப்பம் தேவைக்கு அதிகமாக உயரும் போது கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே இறக்கப்படும், அணு உலைகளின் வெப்பத்தை சரியான அளவில் பராமரிக்க ஏற்றவாறு இந்த கட்டுப்பாட்டுக் கழிகள் உள்ளே இறக்கவோ அல்லது மேலே எடுக்கவோ செய்வார்கள்"
" அவசரகால நடவடிக்கைகளின் போது உடனடியாக நிறுத்துவதற்கு அணு உலைகளுக்கு மேலே இருக்கும் கட்டுப்பாட்டு கழிகள் முழுவதுமாக உள்ளே இறக்கப்படும் அப்போது நியூட்ரான்களின் வெளிப்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தி அடுத்தடுத்த அணுக்கரு பிளவு வினைகள் நடக்காமல் முடக்கி வைக்கப்படும்"
"ஆமாம் இந்த கட்டுப்பாட்டு கழிகள் அதாவது நியூட்ரான் விழுங்கிகள் எந்த மெட்டீரியலில் செய்கிறார்கள்?!"
" கட்டுப்பாட்டு கழிகள் என்பவை தகடு போன்றோ குழாய் போன்றோ செய்யப்பட்டிருக்கும், அவை போரான் அல்லது ஹாஃப்னியம் என்கிற தனிமத்தை பயன்படுத்தி செய்திருப்பார்கள்"
" பொதுவா எத்தனை கழிகள் அப்படி இருக்கும்?"
" ஒரு கொத்தில் 20 கழிகள் வரை இருக்கும் இதுபோன்று பொதுவாக எல்லா அணு உலைகளிலும் 50 கொத்து கழிகள் தயார் நிலையில் இருக்கும்"
"எல்லாம் சரிப்பா அணுக்கரு உலையில் வெப்பம் உண்டாக்குறாங்க ரைட், அந்த வெப்பத்தை எப்படி எடுத்துட்டு வந்து டர்பைனை சுழற்றி மின்சாரத்தை உற்பத்தி பண்ணுவாங்க அதைச் சொல்லு?!"
"அணுக்கரு உலையில் இறுதியா உள்ள ஒரு முக்கியமான பகுதி குளிர்விப்பான்!!"
"இஞ்சின்ல ரேடியேட்டர் மாதிரியா?!"
" கிட்டத்தட்ட அப்படித்தான் அணுக்கரு பிளவு நடக்கக்கூடிய பகுதியில் அபரிமிதமான வெப்பம் உண்டாகும் அந்த வெப்பத்தை குளிர்விப்பதற்கு குளிர்விப்பான்கள் பயன்படுத்தப்படும் பொதுவாக நீர் பயன்படுத்தப்படுகிறது சில அணு உலைகளில் கடின நீர் பயன்படுத்துக்கப்படுகிறது இன்னும் சில உலகில் திரவ சோடியமோ அல்லது ஹீலியமோ பயன்படுத்தப்படும் அதிக வெப்ப நிலை காரணமாக இந்த குளிர்விப்பான்கள் ஆவியாகி அந்த ஆவி அதிக அழுத்தத்தோடு குழாய்கள் வழியே வெளியே சென்று டர்பைன் சேம்பரில் உள்ள டர்பைன்களை சுழலச் செய்வது தான் இதில் உள்ள மெக்கானிசம்"
" யுரேனியம் ரொம்ப ஆபத்தான கதிர்வீச்சுகளை வெளியிடும் அப்படின்னு சொல்றாங்க இவ்வளவு வேலையும் நடக்கக்கூடிய இடத்தை எப்படி பாதுகாப்பா பராமரிக்கிறாங்க?!"
"நான் மேலே கூறிய அனைத்து பாகங்களும் செயல்பாடுகளும் நடக்கக்கூடிய இடம் தான் அணுக்கரு உலை இருக்கும் இடம், அந்த மைய மண்டபமானது containment Vessel என்று சொல்லக்கூடிய ரேடியேஷனை வெளிவிடாத உலகத்தால் மூடப்பட்ட அமைப்பில் இருக்கும். அதற்கு மேலாக ஒரு மீட்டர் தடிமனுக்கு மேலான அளவுக்கு கான்கிரீட்டால் கட்டப்பட்ட அமைப்பு இருக்கும், எனவே ரேடியேஷன் அளவானது மிகவும் பாதுகாப்பான அளவிலேயே வெளியேறுமாறு பராமரிக்கிறார்கள்"
" பரவாயில்லயே உங்க பாடத்தில் இருக்கிற இந்த பகுதியே தெளிவாத்தான் படிச்சு வச்சிருக்க!! சந்தோஷம், அடுத்தது அந்த அணுஉலைகளில் எரிபொருள் நிரப்புவது அது செயல்படும் விதம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாக்கும் அமைப்புகள் இதுபோன்று அணுஉலையின் அனைத்து செயல்பாடுகளையும் பற்றி பார்ப்போம்"
"ஓகே ப்பா, அடுத்து உங்க டர்ன், நான் கேப்பேன் நீங்க சொல்லணும் சரியா?!"
"டபுள் ஓக்கே"
Monday, August 5, 2024
*ஹிரோஷிமா பேரழிவு"
இன்று ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட தினம்.
அணுகுண்டின் வரலாறு குறித்து நான் எழுதியுள்ள எனது
நூலில் இருந்து ஒரு அத்தியாயம்.
ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட அன்றைய நிகழ்வு உங்கள் பார்வைக்கு.
***ஹிரோஷிமா பேரழிவு***
“அணுகுண்டை பயன்படுத்தித் தான் ஆக வேண்டுமா? தற்போது உள்ள முறையிலேயே குண்டுகள் தொடர்ந்து வீசி ஜப்பானை வழிக்கு கொண்டு வந்து விட முடியுமே” என்று அமெரிக்க ராணுவத்தில் ஒரு யோசனை முன்வைக்கப் பட்டது.
“அமெரிக்க ராணுவம் ஏற்கனவே ஜப்பானால் ஏராளமான உயிர்ச் சேதத்தை கண்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய நவீன ஆயுதம் இருந்தும் பழைய முறையிலேயே சண்டையிட்டு நமது வீரர்களை சாகவிட்டுள்ளார்களே என்று நாளைய வரலாறு நம்மை தவறாக பேசக்கூடும், ஆக நோ செகண்ட் தாட், குண்டை வீசிவிட வேண்டியது தான்” என்று கூறிவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ருமென்.
அமெரிக்காவின் சரணடைதல் குறித்த எச்சரிக்கையை முற்றிலும் ஜப்பான் நிராகரித்துவிட்டது. “ஆகஸ்ட் 3 க்கு பிறகு என்றைக்கு வேண்டுமானால் அணுகுண்டை வீசுங்கள், எனக்கு வெற்றிச் செய்தி மட்டும்தான் தேவை” என்று அமெரிக்க அதிபர் ராணுவத்திற்கு உத்தரவு போட்டுவிட்டார்.
“அது என்ன ஆகஸ்ட் 3 க்கு பிறகு?” என்று தானே கேட்குறீர்கள், ஆகஸ்ட் 2 வரைக்கும் பாட்ஸ்டேம் உச்சி மாநாடு நடந்து வருகிறது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் என்கிற வார் எதிக்ஸ் தான் காரணம்.
ஜப்பானிலிருந்து 1400 மைல் தொலைவில் உள்ள டினியன் தீவில் அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டு மையம் தான் இந்த அணுகுண்டு வீசும் நடவடிக்கைகளுக்கான செயல்பாட்டுக் கேந்திரம். ஜெனரல் ஃபெர்ரல் தான் தலைவர்.
ஆகஸ்ட் 4 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு “ஜப்பான்
மீது 20000 டன் டி.என்.டி க்கு நிகரான அழிவை ஏற்படுத்த வல்ல ஒரு சக்திவாய்ந்த குண்டை போடப் போகிறோம் மூணு மைல் சுற்றளவுக்கு அனைத்தும் சாம்பல் ஆகப் போகிறது” என்று தனது குழுவினருக்கு தெரிவிக்கிறார் ஜெனரல் ஃபெர்ரல்.
ஆகஸ்ட் 5 ம் தேதி காலை 8.47 க்கு கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வருகிறது. “அடுத்த 24 மணி நேரத்திற்கு ஜப்பான் வானிலை கிரிஸ்டல் கிளியர” என்கிறார் அமெரிக்க ராணுவ ரமணன் சார். ஆகஸட் 6 ம் தேதி அதிகாலை 2.45 க்கு டயர்ல எலுமிச்சம் பழம் வச்சி நசுக்கி அணுகுண்டோடு விமானம் பறக்கத் துவங்கலாம் என்று நாள் நட்சத்திரம் குறிக்கப் படுகிறது.
குண்டு எடுத்துச் செல்லும் விமானம் எனோலா கே என்றும் விமானி டிப்பெட் என்பதையும் முடிவு செய்கின்றனர்.
ஆகஸ்ட் 5 அதிகாலை 2.00 மணிக்கு “லிட்டில் பாய்” அமெரிக்க போர் விமானமான “எனோலா கே” வில் ஏற்றப் படுகிறது. அப்போது குட்டிப் பையனுக்கு உயிரூட்டப் படவில்லை. ஆமாம், ராணுவக் கேந்திரத்தில் யுரேனியம் நிரப்பும் போது ஏதேனும் எசகு பிசகாக ஆகிவிட்டால் “டினியன்” தீவு பூமிப் பந்தில் இருந்து துடைத்து எறியப் பட்டுவிடும். எனவே யுரேனியம் நிரப்பும் வேலையை வானத்தில் பாத்துக்கலாம் என்று கூறி தொழில்நுட்ப வல்லுனர்களும் “எனோலா கே” வினுள் இழுத்துப் போடப்படுகின்றனர்.
நள்ளிரவு 02.31 க்கு டார்கெட் இறுதி செய்யப் படுகிறது. ஆமாம், ஏற்கனவே ஹிரோஷிமா, கோகுரா மற்றும் நாகசாகி இந்த மூன்று விரலில் ஒன்றைத் தொட்டு முடிவெடுக்கலாம் என்று வைத்திருந்தனர். இப்போதுதான் ஹிரோஷிமாவில் இருக்கும் ‘T” வடிவ பிரிட்ஜ் தான் டார்கெட் பாய்ண்ட் என்று ஸ்கெட்ச் போடுகின்றனர். பைலட் டிப்பெட் ரகசியமான ஒரு மாத்திரை குப்பியுடன் தனது கேபினுக்குள் நுழைந்து இக்னிஷனை ஸ்டார்ட் செய்கிறார்.
02.45 க்கு எனோலா கே மேலே எழும்பி தனது டயர்களை வயிற்றுக்குள் போட்டு மூடிக்கொண்டது. கூடவே தி கிரேட் ஆர்டிஸ்ட் அப்புறம் ஒரு வெதர் ரிப்போர்ட் செய்யும் விமானம் என்று மூன்று விமானங்கள் மிஷனுக்குள் இறக்கிவிடப் பட்டன. வெதர் ரிப்போர்ட் விமானம் ஒரு மணிநேரம் முன்னதாக டார்கெட்டை அடைந்து ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப் பட்டிருந்தது.
ஆகஸ்ட் 6 காலை 06.27 எனோலா கே ஜப்பானிய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கிறது. குறுக்கே எந்த ஜப்பானிய விமானமும் வந்து வழி மறிக்க வில்லை. ஹிரோஷிமா 300 மைல் தொலைவில் இருந்தது. “லிட்டில் பாய்” ன் வயிற்றுக்குள் யுரேனியம் நிரப்பும் வேலையும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
07.30 வெதர் ரிப்போர்ட்டிங் விமானம் ஹிரோஷிமாவை அடைந்து எனோலா கே க்கு “ஆல் கிளியர்” வாங்க பாஸ் என்ற சிக்னல் கொடுக்கிறது.
08.15 க்கு எனோலா கே ஹிரோஷிமா எல்லைக்குள் நுழைந்தது. டிப்பெட் கீழே உற்று நோக்கி அந்த “T” வடிவ பிரிட்ஜை தேடிக் கண்டடைந்தார். பாம் விடுவிக்கும் ஸ்விட்சை அழுத்த லிட்டில் பாய் மெல்ல இறக்கப்படுகிறது. பாராசூட்டில் பறந்த படி கீழே இறங்குகிறது. எனோலா கே சர்ரென்று யு டர்ன் எடுத்து வேலையை முடித்து கிளம்புகிறது.
தரையில் இருந்து 2000 அடி உயரத்தில் வெடிக்க வைக்கப் படுகிறது. வெடித்த அந்த நொடியில் ஐந்து லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வெளியாகிறது.
நியுட்ரான் மற்றும் காமா கதிர்கள் போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சு வெளியாகி வேலையை துவங்குகிறது.
கிரௌண்ட் ஜீரோ வில் இருந்து அரை மைல் தொலைவில் இருந்த ஒட்டா ஆற்றங்கரைப் படிக்கட்டில் இருந்த பெண்மணி ஆவியாகி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கூரையில் இருந்த ஓடுகள் உறுகி ஒட்டிக் கொண்டன.
வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை உருகி விட்டிருக்கிறது. கிரானைட் கற்கள் கூட உருகியிருக்கிறது.
மரக் கட்டைகளால் ஆன டெலிபோன் பூத் உடனடியாக கரிக்கட்டையாகி இருக்கிறது.
சூரியன் தனது வெப்பமயமான ஒளியை ஐந்தரை மைல் தொலைவில் இருந்து பாய்ச்சினால் எவ்வளவு வெப்பமோ அதைவிட பத்து மடங்கு வெப்பம் உணரப் பட்டிருக்கிறது.
காளான் போல மேலெழும்பி போன மேகம் போன்ற அமைப்பினால் கதிரியக்க மழை கறுப்பாக பொழிந்திருக்கிறது. ஏற்கனவே ஏற்பட்ட வெடிப்பில் தப்பியவர்களை அந்த மழையின் கதிரியக்கம் தாக்கியிருக்கிறது. மேலும் ஏகப்பட்ட நீடித்த உடல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. (இதனை ஓபன்ஹைமர் குழுவினர் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் டிரினிடி டெஸ்ட் பாலைவனத்தில் நடந்த காரணத்தினால் கதிரியக்க மழை பெய்ய போதுமான ஈரப்பதம் இல்லையாம்)
காளான் போன்ற மேகம் மேலெழும் போது அதனைப் பார்த்துக் கொண்டே விமானத்தை விரட்டிக் கொண்டு இருந்தார் டிப்பெட். அவர் வைத்திருந்த குப்பியில் இருக்கும் சயனைடு மாத்திரைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஆமாம், பின்ன லட்சக்கணக்கான மக்கள் சாவு ஆகையால் மிஷன் அக்கம்ப்ளிஷ்டு அல்லவா?!
Tuesday, July 9, 2024
கதவுகள் திறந்தே இருக்கட்டுமே!!
கதவுகள் திறந்தே இருக்கட்டுமே!!
எனது மகன் அருணும் அவனது நண்பன் ஒருவனும் இயற்பியல் சம்பந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர் அவனது நண்பன் கணிதம் இல்லாத அறிவியல் பாடப்பிரிவில் படிப்பவர்.
"டேய் அருண் இந்த ஸ்டெப் எங்கேருந்துடா குதிச்சிது?"
"டேய் அது பைனாமியல் தியரம் டா?!"
" எது பைனமியலா?!"
" ஆமாண்டா அது 11-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் வரும்"
இதுக்கே இப்படி என்றால் Integral symbol எல்லாம் வரும் இடங்களில் 'என்னது கொட கம்பியை போட்டு வச்சிருக்காங்க?' என்றெல்லவா கேட்பான்
மேல்நிலை வகுப்புகளில் ஃபர்ஸ்ட் குருப் செகண்ட் குருப் என்றெல்லாம் பாடவாரியாக பிரிவுகள் உண்டு. தேர்வு நோக்கங்களுக்காக குருப் கோட் எண்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கும். அந்த எண்கள் தான் தமிழகம் முழுவதும் யுனிக்காக இருக்கும். மற்றபடி குருப்புகளின் பெயர்கள் பள்ளிக்கு பள்ளி வேறுபட்டு இருக்கும்.
மொழிப்பாடங்களோடு சேர்த்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என்கிற பிரிவு தான் காலங்காலமாக முதல் குருப் என்று அழைக்கப் பட்டு வந்தது. 90 களின் துவக்கத்தில் கணினிப் பிரிவு என்ற ஒன்று அறிமுகம் ஆகிய போது இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என்று மற்றுமொரு ஃபர்ஸ்ட் குருப் உதயமானது.
இவையன்றி Pure Science Group என்ற ஒன்று இருக்கும். அங்கே இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் இருக்கும். அதாவது உயிரியல் பாடம் சற்று பல்க்காக தனித்தனியாக இருக்கும் அவ்வளவு தான்.
”எனக்கு கணக்குன்னா தாங்க பயம் மற்றபடி எனக்கும் கனிணி அறிவியல் பிடிக்கும்” என்று கூறும் பசங்களுக்காக கணக்கு இல்லாத கனிணி அறிவியல் பிரிவொன்றும் உதயமானது. அதாவது அவர்களுக்கு இயற்பியல் வேதியியல், கணினி அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்கள் இருக்கும்.
பிரச்சனை என்னவென்றால் இயற்பிலிலும் சரி வேதியியலிலும் சரி ஏராளமான மேல்நிலை கணித கருத்துக்கள் அந்த பாடங்களை தூணாக இருந்து தாங்கி நிற்கும். மேல்நிலைக் கணிதம் பயிலாத மாணவர்கள் அதை அப்படியே விழுங்கித் தொலைக்க வேண்டியதுதான். ஒரு ஆனியனும் புரியாது.
அறிவியலின் ராணி கணிதம் என்பார்கள். கணித அறிவு இல்லாத ஒருவர் இயற்பியலையோ வேதியியலையோ ஆழமாக புரிந்து கொள்ள இயலாது. அதுவும் போக கணிதப் பாடம் இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை 11 & 12 வகுப்புகளில் படிக்கலாம் ஆனால் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் சேர முடியாது. ஏனெனில் அங்கே அவர்களுக்கு கணிதப் பாடம் துணைப்பாடமாக வரும். கட்டாயமாக 3 பேப்பர்கள் கணிதம் உண்டு. கணித அடிப்படை அறிவு இல்லாத ஒருவர் கணினி நிரல்கள் எழுதுவதில் விற்பனர் ஆகமுடியுமா.
இந்த Pure science படிக்கும் மாணவர்கள் அறிவியலை Impure ஆகத்தானே படிக்கிறார்கள். கணிதம் இல்லாமல் அவர்களுக்கு இயற்பியலோ அல்லது வேதியியலோ தெளிவாக புரியுமா. மேலும் அவர்களால் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியலையோ அல்லது வேதியியலையோ எடுத்து படிக்க இயலுமா?
அதோடு மட்டுமல்லாமல் கணிதம் இல்லாத அறிவியல் பிரிவு மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை எழுத வேண்டிய சூழல் உள்ளது. சென்ற ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் இயற்பியலில் உள்ள 50 ல் 38 வினாக்கள் கணிதக் கருத்துகளை ஒட்டியே இருந்தன.
உயிரியல் பாடங்களை படித்து பி.எட் படித்து தேறியவர்கள் ஆசிரியப் பணிக்கான TET தேர்வினை எழுத வேண்டும். அவர்கள் கணிதப் பாடத்தை உள்ளடக்கிய TET தேர்வினைத் தான் எழுத வேண்டும். உயிரியல் பாடங்கள் படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு TET ல் கணிப் பாட வினாக்கள் சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.
நான் கணிதப் பாடம் தான் உசத்தி எல்லோரும் கணிதப் பாடத்தை படித்தே ஆகவேண்டும் என்று கூறவில்லை. அதே வேளையில் அறிவியல் பாடங்கள் படிப்போர் மட்டுமாவது கணிதப் பாடத்தை உள்ளடங்கிய குருப் எடுத்து படிப்பது பல வகைகளில் அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.
முக்கியமாக நான் இந்த கட்டுரையை எழுத நேர்ந்த காரணம் இனிமேல் தான் வருகிறது.
எங்கள் பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பெற்ற மாணவி அவர். தமிழகத்தில் முதலில் 11 மாவட்டங்களில் மட்டும் பைலட் ப்ராஜக்ட்டாக சிறப்பு மாதிரி பள்ளிகள் துவங்கப் பட்டபோது அரியலூரிலும் வந்தது. அந்த பள்ளியின் வசதி வாய்ப்புகள் பற்றி அறிந்த காரணத்தினால் அந்த மாணவிக்கு அங்கே இடம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி இருந்தேன்.
அந்தப் மாணவியின் தந்தையும் ஆர்வமாக இருந்தார். ஆகஸ்ட் மாத வாக்கில் அந்த மாணவிக்கு இடம் கிடைத்து இருப்பதாக மெயில் வந்தது. உடனடியாக அழைத்து தகவல் கூறினேன். அவர் பயின்று வந்த பள்ளியில் இருந்து இங்கே வந்து சேர வேண்டும்.
அடுத்த நாள் அவர் தந்தைக்கு பேசினேன். “சார் அங்க கணக்கு இல்லாத பயாலஜி குருப் தான் சார் இருக்கு. ஒரு வேளை மெடிக்கல் இல்லன்னா இஞ்சினியரிங்கோ அல்லது இயற்பியல் வேதியியல் பாடங்களையோ படிக்க முடியாது, அதனால வேண்டாம் என்று வந்து விட்டோம் சார்” என்றார்
இந்த ஆண்டும் ஒரு மாணவிக்கு இடம் கிடைத்தது. அவர் மருத்துவம் படிப்பதையே இலக்காக கொண்டு படிப்பவர். ஆனால் அவருக்கு உயிரியல் இல்லாத கணிதப் பிரிவுதான் கிடைத்தது. இரண்டு வார காத்திருப்புக்குப் பிறகு யாரோ ஒரு உயிரியல் பிரிவு மாணவி டிசி வாங்கியதால் இவருக்கு கிடைத்தது. கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு இருந்தால் அலைக்கழிப்பு இன்றி சேர்ந்திருப்பார்.
இன்று வரையில் சிறப்பு மாதிரிப் பள்ளிகளில் இருக்கும் நிலை இதுதான். அங்கே NEET க்கான பிள்ளைகள் தனியே மற்றும் IIT-JEE மற்றும் இதர பொறியியல் சார்ந்த படிப்புகள் தனியே என பிரித்து பயிற்றுவிக்கிறார்கள். முன்னவர்கள் இயற்பியல் வேதியியலோடு, உயிரியல் மற்றும் கணினி படிக்கிறார்கள். பின்னவர்கள் உயிரியலுக்குப் பதிலாக கணிதம் படிக்கிறார்கள்.
எல்லோரும் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு படிக்கட்டும், சிறப்பு வகுப்புகள் மற்றும் இணைய வழி கோச்சிங் மட்டும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப NEET OR IIT-JEE ல் சேர்ந்து படிக்கட்டுமே.
மாவட்டம் முழுவதிலும் இருந்து படிப்பில் கெட்டிக்கார குழந்தைகளைத் தான் தேர்வு செய்து சிறப்பு மாதிரிப் பள்ளிகளில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். நீட் எழுதும் குழந்தைகள் கூடுதலாக கணிதப் பாடத்தை பயில்வதால் என்ன ஆகிவிடப் போகிறது. மேலும் சேரும் அனைத்து குழந்தைகளையும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த உடன் நீட்டில் அரசுக் கல்லூரி கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற வைத்து விடமுடியுமா. 90 விழுக்காட்டுக்கு மேல் Repeaters தான் அரசுக் கல்லூரிகளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டையும் பிடிக்கிறார்கள்.
மெடிக்கல் இல்லன்னா இஞ்சினியரிங் என்பதே பெரும்பாலான பெற்றோரின் சிந்தனைப் போக்காக இருக்கிறது. மெடிக்கல் கிடைக்காத நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் அந்த குழந்தைகள் இஞ்சினியரிங் படிக்க எண்ணினால் அதற்கு வாய்ப்பு இல்லையே.
நீட் தேர்வு வினாக்களிலேயே இயற்பியலில் கேட்கப்படும் வினாக்களில் பெரும்பகுதி கணக்கை அடிப்படையாக கொண்டவை என்பதால் மேல்நிலையில் கணக்கை கூடுதலாக படிப்பதால் என்ன நட்டமாகிவிடப் போகிறது.
அரசுப் பள்ளியோ, சிறப்பு மாதிரிப் பள்ளியோ பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையோடு மாணவனை வெளியே அனுப்பி விடப் போகிறோம். அவன் ஒரு வேளை Repeater ஆக NEET தேர்வு எழுத எண்ணினாலும் அது அவனது சொந்தப் பொறுப்பில் தான்.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் ஆனாலும் கூட 7.5% ஒதுக்கீட்டை பெற Repeater ஆக கோச்சிங் சேர்ந்து தேர்வு எழுதினால் தான் இடம் உண்டு. ஆகவே தனியார் கோச்சிங் செல்ல வசதி வாய்ப்பு உள்ள அரசுப் பள்ளி மாணவன்தான் NEET மூலமாக மெடிக்கல் சீட் பெறமுடியும் என்பது தான் நிதர்சனம்.
அப்படி இருக்கும் போது மாவட்டத்திலேயே சிறப்பிடம் பெற்ற குழந்தைகளை பொறுக்கி எடுத்து கோச்சிங் கொடுத்து மெடிக்கல் இல்லை என்றால் இஞ்சினியரிங் என்கிற வாய்ப்பினை ஏன் அடைக்க வேண்டும்.
இறுதியாக கணக்கு இல்லாத அறிவியல் குருப் என்பது சுத்த மோசடியான விஷயம். அறிவியல் என்பது கணக்கோடு இணைந்தே பயணிக்க வேண்டிய ஒன்று.
பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருக்க வேண்டுமானால் கணிதப் பாடம் அவசியம் வேண்டும்.
அவர்களுக்கான அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கட்டுமே!!
கீழே படத்தில் இருப்பது 12 ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகம் பாருங்கள் எவ்வளவு கணக்குகள் இருக்கின்றன என்று நிச்சயமாக இந்த விஷயங்கள் கணிதம் சாராத அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு புரியாது
Monday, July 1, 2024
கறிவிருந்து!!
"அகிலா கறி எடுக்கட்டுமா உனக்கு சுவரொட்டி வாங்கிட்டு வரேன்"
"ஞாயிற்றுக்கிழமை ஒரு பங்க்ஷன் திருச்சியில் இருக்கு அங்க மத்தியானம் நான் வெஜ்தான் கண்டிப்பா போடுவாங்க ஞாயிற்றுக்கிழமை ஃபங்ஷன் வேற!!"
நம்முடைய தொடர் டயட்டை கரெக்டா ஃபாலோ பண்ணனும் என்கிற எண்ணத்தில் இரண்டு நாட்கள் முன்பில் இருந்தே ஞாயிற்றுக்கிழமை கறி விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தேன்.
சனிக்கிழமை வேறு விஷயமாக தஞ்சாவூர் சென்றபோது வசந்த பவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை!!
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். அன்றைக்கு ஞாயித்துக் கிழமைன்னு கூட பாக்கலையே!!
கொஞ்சம் கம்மியான சொந்தம் தான், வழக்கமாக ஒரு ஆள் போனா கூட போதும் தான். ஆனா இந்த ஃபங்ஷன் க்கு குடும்பத்தோடு தான் போவது என்று மூன்று காலில் நின்றோம். அதாவது மூவருமே ஒற்றைக் காலில் நின்றோம்.
"ஏங்க, நான் மட்டும் அக்கா கூட போயிட்டு வந்துடறேன், நீங்களும் அருணும் வீட்டிலேயே இருங்க!!" என்று ஒரு திடீர் குண்டை வீசினார்.
"ச்சேச்சே அப்படி செய்யறது மரியாத இல்ல, நம்மள மதிச்சி கூப்டாங்க, குடும்பத்தோட வாங்கன்னு வேற சொல்லி இருக்காங்க" அவ்வ்... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.
காலை பத்து மணிக்கு ஒன் டு ஒன் பஸ், 200% உறுதியாக அகிலாவால் கிளம்ப முடியாது. அடுத்ததாக உள்ள பேருந்தை பிடித்தோம். 1-1 ஐ விட்டாலும் 1-5 ஐ பிடித்தோம்.
திருச்சியில் எந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொண்டு மேப்பில் பத்துமுறை சரி பார்த்துக் கொண்டேன்.
"அகிலா, எங்க வந்துட்டு இருக்க?!" அகிலா அக்காவிடம் இருந்து போன்.
"ஏன் பந்தி முடிய போவுதா?! என்று பதட்டமானேன்.
"உங்களுக்கு வழி தெரியுமான்னு கேட்டாங்க!!"
"அகிலா, எங்க ஊரு சுத்தமல்லியை விட எனக்கு திருச்சியைத்தான் நல்லாத் தெரியும் நீ கவலைப் படாதே!!"
மண்டபத்தில் இருந்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருந்தது.
மடமடவென்று வேகமாக கிரவுண்ட் ஃபுளோர் உள்ளே நுழையப் போனேன்.
"ஏங்க மேலப் போயி மேடைல மொய் கொடுத்துவிட்டு வந்துடுவோம்"
"சாப்டு தெம்பா மேல போலாமே!!" என்றதற்கு அகிலா கோபப் பார்வை வீசினார் அந்தப் பார்வையின் அர்த்தம் "அலையாதீங்க".
லேசாக ஒருக்களித்து திறந்திருந்த கதவின் வழியே வரிசையாக பரப்பி வைத்த பீடா "சீக்கிரம் வாங்க பாஸ்" என்று கண் சிமிட்டியது.
"மாப்ள, சாப்டு வந்துடுங்க தீர்ந்துடப் போவுது" என மாமா கேட்ட மாத்திரத்தில் திகீர் என்றது.
போன உடனே மேடையேறி மொய் கொடுத்தோம். அடுத்த நொடியே கீழே நோக்கி பாயும் தோட்டாவாக மாறிய என்னை மீண்டும் தடுத்து நிறுத்தி, "ஏங்க, அக்காவ விசாரிச்சிட்டு போவோம் வாங்க" என்று முகமே மறந்து போன முன்னூறு கிமீ தூரத்து சொந்தம் ஒருவரை நோக்கி அழைத்துச் சென்றார் எனது மனைவி.
அடுத்து ஒரு அண்ணன் அதற்கடுத்து சில அடையாளம் தெரியாத பந்தங்கள்.
"தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணம் நிகழும்" என்ற பாடலின் பொருள் விளங்கிய தருணம்.
ஒரு வழியாக கீழ்தளத்தில் இருந்த சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தோம்.
போகும்போதே இலைகளை ஸ்கேன் செய்தபடி சென்றேன்.
மட்டன் சுக்கா, சிக்கன் 65, மட்டன் பிரியாணி இத்யாதிகள் கண்களை குளிரச் செய்தன.
அமர்ந்த உடனே "இது வெஜிட்டேரியன் வரிசை இல்லையே" என அருகில் இருந்த வயதான நபரிடம் வினவினேன். அவர் "என்னது வெஜிடேரியன் வரிசையா?!" வித்தியாசமாக நோக்கினார்
அப்போது தான் அந்த பெருத்த ஏமாற்றமான துன்பியல் சம்பவம் நடந்தது.
ஆக்சுவலாக அங்கே வெஜிடேரியன் விருந்து மட்டுமே ஏற்பாடு ஆகியிருந்தது.
நான் கண்டதாக மேலே கூறியவை யாவும் தோற்றப்பிழையே!!(optical illusion)
சேனைக்கிழங்கை பொறியல், காலிஃபிளவர் 65 மற்றும் மஷ்ரூம் பிரியாணி இவை தான் எனக்கு அப்படி காட்சியளித்தன.
"என்னங்க, வெஜ்ஜூ" என்று அகிலா ஜ் ல் கொடுத்த அழுத்தம் தாளாமல் அந்த இடத்தில் பூமி அரையடி அழுந்தியது.
"நீயும் அப்படித்தானே நெனச்ச?! அப்போ நான் நெனச்சது ஒன்னும் தப்பில்லையே" என்ற விவேக் டெம்ப்ளேட் தான் ஞாபகம் வந்தது.
போட்டது வெஜ் பிரியாணி & மீல்ஸ் அதுக்கு பீடா ஒன்னுதான் கொறைச்சல் என்று ஐஸ் கிரீமில் கரையைக் கடந்தோம்.
"அவன் ஒரு
பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த பொழுது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது!!" அட, இந்த கவிதை எல்லா இடங்களிலும் சிக்குன்னு பொருந்திப் போவுதே!!
Saturday, June 22, 2024
அவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுப்போம்!
"நாங்க Msc அ படிக்கப்போறோம் அப்புறம் எறும மாடு மேய்க்கப் போறோம்" என்கிற வரியோடு ஒரு கானா மாதிரியான பாடல் 90 களில் பிரபலம்.
நான் கல்லூரி படித்த காலத்தில் ஊருக்கு வரும் போதெல்லாம் விசேஷங்களில் இந்த பாடலை அலற விடுவார்கள். சரியாக இந்த வரியை பாடி என்னை வெறுப்பேற்றிய சம்பவங்களும் உண்டு.
ஊரில் வேலையின்றி இருந்த பட்டம் படித்த முந்தைய தலைமுறை மற்றும் இந்தமாதிரி தற்குறித்தனமான பாடல்கள் நிறைய பேரை கல்லூரி வாசல்களை மிதிக்க விடாமல் செய்துள்ளன.
எப்படியோ உயர்கல்வி குறித்த எதிர்மறை சிந்தனைகள் கிராமங்களில் வேர்விட்டு விஷச் செடியாக வளர்ந்து தொலைத்துவிடுகிறது. தற்போது உயர்கல்வி குறித்த ஏராளமான informations and success stories உண்டு. அவைகளை உரியோரிடம் சேர்த்து எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையையும் நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.
ஒரு சம்பவம்.
அவர் ஒரு பிரமாதமாக படிக்கும் மாணவி. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு நல்ல மதிப்பெண்ணோடு வெளியே செல்வார் தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார் என்று எண்ணியிருந்தோம், ஆனால் கொரோனா காரணமாக தேர்வு இன்றி பத்தாம் வகுப்பு தாண்டி சென்றுவிட்டார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளியில் பயின்றவருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நேரம் இந்த மாணவி ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு (aided school)சென்று விட்டார்.
நான் கூட அவர்களுடைய பெற்றோரை கடிந்து கொண்டேன். அரசு பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் படிக்க வைத்தால் அவர் நிச்சயமாக 7.5% ஒதுக்கீட்டில் நல்லதொரு மேற்படிப்பை தேர்வு செய்து விடுவார் என்று கூறினேன்.
சென்ற ஆண்டு அந்த மாணவியை பற்றி அவரது உறவினரிடம் விசாரித்த போது 550+ மதிப்பெண்ணோடு பன்னிரண்டாம் வகுப்பை தேறி இருந்தார்.
நிச்சயமாக பொறியியல் பிரிவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் அவர் NEET தேர்வுக்கு தயாராவதற்காக ஓராண்டு கோச்சிங் சேர்வதாக கூறியிருந்தார்.
எனக்கு சற்றே பதட்டமாக இருந்தது ஏனெனில் ரிப்பீட்டர்ஸ் கோர்ஸ் சேரும் அனைவருமே அதற்கடுத்த ஆண்டில் நல்ல மதிப்பெண்ணோடு டாக்டர் சீட் பெறுவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.
ஆனாலும் நீட் தேர்வு எழுதி மருத்துவர் ஆவது தான் தனது லட்சியம் என்று பிடிவாதமாக ஓராண்டு சிறப்பு பயிற்சிக்கு சென்று விட்டார்.
இந்த ஆண்டு அவரது அம்மாவுடன் பள்ளிக்கு ஒரு நாள் வந்திருந்தார். அப்போது விசாரித்தால் இந்த ஆண்டு நீட்டில் மிகச்சிறப்பான ஒரு மதிப்பெண் பெற்றிருந்தார்.
உறுதியாக அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தனக்கென்று ஒரு லட்சியத்தை வரித்துக் கொண்டு விடாப்பிடியாக அதை நோக்கி பயணித்து வெற்றியும் பெற்றுவிட்டார்.
மற்றுமொரு சம்பவம்!!
இன்று ஒரு மாணவனை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனது பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்திருந்தனர் அவனுடைய அப்பா அம்மா வேறு ஊர் இவன் தனது பெரியம்மா வீட்டில் தங்கி படிக்க இருக்கிறான்.
ஏற்கனவே இது போல நிறைய மாணவர்கள் உறவினர் வீட்டில் தங்கி படிப்பதற்கு என்று வந்து விட்டு அடுத்த ஆண்டுகளிலேயே வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள்.
அதோடு மட்டுமின்றி வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி கட்டுப்பாடு இன்றி இருப்பார்கள். படிப்பிலும் பின்தங்கி இருப்பார்கள் எனவே பள்ளியில் சேர்ப்பதற்கு நிச்சயமாக அவனுடைய பெற்றோர் வரவேண்டும் என்று கூறிவிட்டேன்.
இன்று மதியமே வந்தனர். "பள்ளியில் சேர்ப்பதற்காக நீங்கள் வர வேண்டாமா?! முழுவதுமாக அவர்களை நம்பி ஒப்படைத்து விடுவதா?! பள்ளியில் சேர்ப்பதுடன் மட்டுமே நின்றுவிடாமல் மாதம் ஒரு முறை வந்து ஆசிரியர்களிடம் அவனுடைய நடவடிக்கைகள் மற்றும் படிப்பு நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும்" இன்று கறாராக கூறிவிட்டேன்.
எனது முன்னிலையில் தனது மகனுக்கு அறிவுரை கூறுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய அம்மா பேசினார். "எப்படியாவது ஒரு பத்தாவது வரைக்குமாவது படிச்சுக்கடா நல்லது" என்றார்.
நான் உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். "பிள்ளைகளை நல்லா படிக்க சொல்லணும் அப்படிங்கறது நல்ல விஷயம் தான், அதுக்காக பத்தாவது முடிச்சுக்கோ என்று சொல்வதா?! ஏன் ஒரு கலெக்டராகவோ டாக்டராகவோ இன்ஜினியராகவோ வரணும் அப்படின்னு பெரிய பெரிய படிப்பு பற்றி எல்லாம் சொல்ல மாட்டீங்களா?!" என்று கடிந்து கொண்டேன்.
குறிப்பாக அந்த அம்மாவிடம் இந்த விஷயத்தை கூறுவதற்கு காரணம் அவனுடைய ஊரில் இருந்து எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவருமே 8 அல்லது 9 ஆம் வகுப்புகளோடு படிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள்.
சென்ற ஆண்டில் கூட ஐந்து பேர் ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாள் கூட பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அவர்கள் ஊரிலேயே சென்று பார்த்த போது ஒரு போன் நம்பர் கூட மிச்சம் வைக்காமல் வெளியூர் சென்று விட்டதாக அருகில் இருப்பவர்கள் கூறியிருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு முகநூல் பதிவு போட்டு இருந்தேன். ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் நன்றாக படிப்பவன் அந்த ஊர் காரன் தான்.
இடையில் திடீரென்று காணாமல் போய்விட்டான். நான்காண்டுகள் கழித்து மாற்று சான்றிதழ் வாங்க வந்திருந்தான் அப்போது விசாரித்த போது தான் தெரிந்தது, பைனான்ஸ் காரர்கள் இடம் அவனது பெற்றோர் கடன் வாங்கி இருந்ததற்காக கடன்காரர்கள் இவனை பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம்.
அடிக்கடி அவர்களின் தொந்தரவு தாங்காமல் பெற்றோர் இவனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். குடும்பத்தோடு வேறு ஊர் சென்று விட்டார்கள்.
இது அங்கே வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. நான் முதலில் கூறிய மாணவியும் சரி இந்த மாணவர்களும் சரி ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் இருப்பிடம் வேறு வேறு.
அந்த மாணவிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு விழிப்புணர்வு இருந்தது மருத்துவர் ஆவதற்கு நிச்சயமாக வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இந்த ஊரைச் சார்ந்த மாணவர்களுக்கு படிப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லை படிப்பு என்னென்ன விஷயங்களை எல்லாம் சாதிக்கும் என்கிற விழிப்புணர்வும் கிடையாது.
உயர் கல்விக்கு வழிகாட்டி உதவி செய்ய அரசு எவ்வாறெல்லாம் முயல்கிறது என்கிற விஷயமும் தெரியவில்லை.
சென்ற ஆண்டு கூட இதே ஊரில் இருந்து பிளஸ் டூ முடித்த மாணவி தனது தம்பிகளுக்கு தாயாக இருந்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கல்லூரிக் கனவே இல்லை.
தனது தம்பிகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட வந்த போது அழைத்து கடிந்து கொண்டேன்.
மேலும் படிப்பதற்கு என்ன வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன, என்பதையும் நான் முதல்வன் திட்டம் பற்றியும் கூறி அனுப்பி ஏதாவது ஒரு வகையில் படிப்பை தொடர வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன்.
தமிழக முதல்வர் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த "நான் முதல்வன் திட்டம்" என்பது சத்தம் இன்றி பல சாதனைகளுக்கான விதைகளை ஊன்றிக் கொண்டு உள்ளது இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் அந்த விதைகள் எல்லாம் பெரு விருச்சமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதே வேளையில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு இல்லாத இது போல பின்தங்கிய மக்கள் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மேலும் கல்வியால் உச்சம் தொட்ட சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை அவர்களின் வாயாலயே இந்த பகுதிகளில் எல்லாம் கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் .
கனவுகளுக்கு கூட கடிவாளம் போட்டு இருக்கும் இந்த பரிதாபத்திற்குரிய மக்களின் கடிவாளங்களை எப்படியாவது தகர்க்க வேண்டும்.
தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சார்ந்த தகவல்கள் EMIS PORTAL ல் மிகச் சிறப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதில் அவுட் ஆப் ஸ்கூல் சில்ட்ரன் (OOSC) என்கிற தலைப்பில் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த டேட்டா பேஸை மாவட்ட ஆட்சியர்களும் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த தகவல்களை எடுத்து ஆய்வு செய்தோமானால் எங்கள் பள்ளியை பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பழங்குடி பிரிவை சார்ந்த மாணவர்கள் மட்டுமே நிரம்ப உள்ளனர்.
மற்ற பிரிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று இருக்கும். ஆனால் இந்த பிரிவு மாணவர்களில் 10 பேர் வந்தால் அதில் ஒரு நான்கு பேர் கூட பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து வருவதில்லை.
எனவே பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்குகளை தெளிவாக பகுத்தாய்ந்தோமானால் எந்தெந்த பகுதிகளில் இருந்து இந்த மாணவர்கள் வருகிறார்கள் என்பதை கண்டறிய இயலும்.
அரசு அந்தப் பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து கல்வி சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்க முடியும்.
மேலும் அந்த குடும்பங்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து செல்ல என்ன காரணம் என்பதை அறிந்து அவர்கள் அதே ஊரில் தொடர்ந்து இருக்க ஏற்பாடு செய்ய இயலும்.
இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக நான் முதல்வன் திட்டம் அனைத்து மாணவர்களையும் மேற்படிப்புக்கு வாஞ்சையோடு கைபிடித்து அழைத்துச் செல்லும் வேளையில் இடை நின்ற மாணவர்களை எப்படியாவது இந்த வட்டத்துக்குள் கொண்டு வர முயல வேண்டும்.
இல்லை என்றால் சில குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும்.
ஆகவே தகுதியானவருக்கு உதவிகள் வழங்குவது மட்டும் இல்லாமல் விழிப்புணர்வு இன்றி இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது ஒரு நல்ல அரசின் கடமை.
எனவே தங்கள் கனவுகளுக்கு கூட கடிவாளம் இட்டுக் கொண்டு மிக எளிமையாக வாழ்ந்து வரும் அவர்களின் கடிவாளங்களை தகர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நிச்சயமாக நமக்கு உண்டு.
Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...