Friday, November 24, 2023

சின்னத்திரைக்குள் வெள்ளித்திரை!! Memories of a 80's kid

சின்னத் திரை நினைவுகள்
அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெ.சுத்தமல்லி ஆறாம் வகுப்பு வகுப்பறை. அங்கே மூன்று மாணவர்கள். வாங்க, பக்கத்தில் போய் பார்க்கலாம் “டேய், கேசவன் வந்துட்டான்டா, போய் கேளுடா!!” “ஏய் இப்போவேவா? சார் பாத்தாரு கொன்னுடுவாரு!” கேசவனின் தாத்தா, சனிக்கிழமை இறந்துவிட்டார். திங்கள் கிழமையான இன்று அவன் பள்ளிக்கு வந்து விட்டான். அவனிடம் இந்தப் பொடியன்கள் என்னத்த கேக்கப் போறானுங்க? இதோ இண்டெர்வெல் பெல் அடிச்சாச்சு. “டேய் கேசவா, நில்லுடா” “என்னடா?“ “உங்க தாத்தா செத்துட்டாரு தானே?” “ஆமாம்“ “அவரு கருமாதி என்னைக்கு?” “அடுத்த ஞாயித்துக் கிழமை” “அப்படின்னா, சனிக்கிழமை நைட்டு கல்லு படைப்பாங்க இல்ல, அப்போ வீடியோ போடுவீங்களா?” என்று தயங்கி தயங்கி கேட்டே விட்டான். “ஏய், எங்கப்பா கிட்ட கண்டீசனா சொல்லிட்டேன், - நீங்க கருமாதி படைங்க படைக்காட்டி போங்க, முறுக்கு அதிரசம் செய்ங்க செய்யாட்டி போங்க ஆனா எனக்கு கல்லுசாத்தி அன்னைக்கு நைட்டு நாலு புதுப்படம் போட்டே ஆகணும் ஆமா!!” என்று முகமெல்லாம் மலர பதில் சொன்னான். அந்த முகத்தில் தாத்தா செத்த துக்கம் அரை விழுக்காடு கூட இல்லை. “டேய், கை கொடுடா, சூப்பர்டா” “எங்கப்பா எம்ஜிஆர் ரசிகரு, ஆனா, இந்த எம்ஜிஆர் சிவாஜி படம்லாம் போட்டு ஏமாத்தினின்னா பாரு தொலைச்சிபுடுவேன். நாலு படமும் புதுப்படமா இருக்கணும் னு சொல்லிட்டேன் டா“ யாரு செத்தா எனக்கென்ன? கல்லுசாத்தி அன்னைக்கு வீடியோ போடுவாங்களா போடமாட்டாங்களா இது தான் இறந்த வீட்டு துக்கத்தைக் காட்டிலும் இளம் பிராய சிறுசுகளின் நெஞ்சைப் பிழியும் கவலை. எல்லோருக்கும் வீடியோ போடுவாங்களோ போடமாட்டாங்களோன்னு கவலைன்னா எனக்கு மட்டும் வீடியோ போட்டாக்கூட எங்க வீட்டுல பர்மிசன் குடுப்பாங்களா குடுக்கமாட்டாங்களா என்கிற கவலை. அந்த நாட்களில் ஊரில் எங்கே மரணம் நிகழ்ந்தாலும் எங்களுக்குள் எழும் கேள்விகள் இரண்டே இரண்டு தான். ஒன்று வயதான ஆளா? மற்றொன்று இழவு வீட்டுக் காரங்க வீடியோ போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் தானா? என்பது தான். எங்கள் ஊரில் அப்போது சாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்தது. ஆனாலும் கூட ஊர் மக்களை நாங்கள் இரண்டே பிரிவுகளில் அழகாக பிரித்து வைத்திருந்தோம். ஆமாம், ஒன்று கருமாதிக்கு வீடியோ போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் மற்றொன்று கருமாதிக்கு வீடியோ போடும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள். “டேய், அந்த தெருவுல ஒரு தாத்தா செத்துப் போய்ட்டாருடா. அவங்க வீடு அங்க…” “அட்ரஸ் எல்லாம் சொல்லாத, வீடியோ போடுவாங்களா போட மாட்டாங்களா?” என்று முதல்வன் பட ரகுவரன் டெம்ப்ளேட்டை எண்பதுகளின் இறுதியிலேயே தொடங்கியவர்கள் நாங்களாக்கும். சில சமயங்களில் பெரிய இடைவெளி விழுந்து விடும். (எதற்கா? அதற்குத்தான்!!) அப்போதெல்லாம் சித்திரகுப்தன் கணக்காக நாங்கள் ஒரு சென்செஸ் எடுக்க ஆரம்பித்து விடுவோம். இந்த தாத்தா எப்போ மண்டைய போடுவாரு அந்த பாட்டி எப்போ பரலோகம் போகும் என்று நோட்டமிட்டபடி பள்ளிக்குச் செல்வோம். ஒரு முறை இது குறித்து ரொம்ப சின்சியராக எங்க சித்தப்பா வீட்டில் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறேன். அதுவும் கைவசம் எத்தனை தாத்தா பாட்டி வீடியோ போடும் வீடுகளில் இறக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று ஒப்பித்து இருக்கிறேன். நான் கல்யாணமெல்லாம் பண்ணிய பிறகும் கூட அந்தக் கதையைச் சொல்லி என்னை ஓட்டு ஓட்டென்று ஓட்டுவார்கள். சில சமயங்களில் கெடுவாய்ப்பாக நல்ல வசதி படைத்தவர்கள் வீடியோ போடாமல் விட்டுவிடுவார்கள். அந்த வாரம் முழுவதும் அந்த வீட்டுக் காரங்களோட கஞ்சத்தனத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போவோம். அதுபோல, சில பேர் வீடுகளில் நான்கு படங்களுமே சிவாஜி எம்ஜிஆர் என்று போட்டு கடுப்பேத்துவார்கள். ஆனாலும் விடுவோமா? எட்டாம் வகுப்புக்கு போவதற்குள்ளாகவே “வசந்தமாளிகை“ படத்தை எட்டு தடவை பாத்த குரூப் நாங்க. வசந்த மாளிகை, அடிமைப் பெண் மற்றும் ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்ததாக எங்க ஊரில் அதிக முறை போடப்பட்ட படம் ஒன்று உண்டென்றால் அது “கரகாட்டக்காரன்“ படம் தான். நாங்கள் எட்டாம் வகுப்பு படித்த போது ராமராஜன் ரசிகர் மன்றம் என்று தொடங்கி ராமராஜனுக்கு கடிதம் எழுதி போட்டோ அனுப்பச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து அட்ரஸ் தேடிக்கொண்டு கொஞ்சம் பேர் அலைந்தார்கள். (அந்த குரூப்ல நான் இல்ல, வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்!!) ஆசை ஆசையாக வீடியோ பார்க்க கிளம்பி முதல் வரிசையில் பாய் துண்டு சகிதம் உட்கார்ந்து இடம் பிடிப்போர் இரண்டாம் படத்திற்கெல்லாம் கனவுலகில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மூன்றாம் படம் போடும் போது முக்கால் வாசி கூட்டம் தூங்கி இருக்கும். விடியற்காலை மூணு மணியில் இருந்து நான்கு மணி வாக்கில் நான்காவது படத்தை போடுவார்கள். அப்போது முதல் படத்திற்கு தூங்கிய கூட்டம் மெல்ல விழிப்படைவார்கள். மூன்று படத்தையும் கில்லி பிரகாஷ்ராஜ் போல கொட்ட கொட்ட முழித்து பார்த்தவர்கள் நான்காவது படத்திற்கு தலை சாய்ப்பார்கள். டெக்கு ஆபரேட்டர்கள் படத்தை போட்டு விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆக, நான்கு படங்களையும் ஒரு வினாடி பாக்கி இல்லாமல் பார்த்து முடிக்கும் சாதனையாளர்கள் அவ்வளவு பெரிய கும்பலில் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் தேறுவார்கள். அதில் நான் அந்த ஒன்றாவது ஆள் என்பதை தன்னடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். சில வசதி படைத்தவர்கள் வீடியோ போடும் போது இரண்டு டிவி பெட்டிகளை கொண்டு வந்து இரண்டு எதிரெதிர் பக்கங்களில் வைத்து ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என்று வைத்து விடுவார்கள். அப்போதெல்லாம் சிறுவர்களான எங்களுக்கு குதூகலமாக இருக்கும். “ஏய், அவங்க வீட்டில் ரெண்டு வீடியோ போடுறாங்கடாவ்” என்போம். இதுமாதிரியான வாய்ப்புகளுக்காக காத்துக் கிடந்த இளையோர்கள் இந்த ரெண்டு வீடியோ சம்பவம் இளசுகளைப் பொறுத்தவரையில் எவ்வளவு பெரிய துன்பியல் நிகழ்வ என்பதை புரிந்து கொள்ளும் வயது எங்களுக்கு இல்லை அப்போது. பிறகு ஒரு முறை எங்கள் ஊருக்கு ரெக்கார்டு டான்ஸ் ஆடும் குழுவினர் கேம்ப் போட்டு நிகழ்ச்சி நடத்தினார்கள். சுற்றிலும் துணி போட்டு மறைத்து உள்ளே டிக்கெட் வாங்கியவர்கள் மட்டும் அமர்ந்து பார்க்க வழிவகை செய்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல் கிடைக்க வில்லை. அப்புறம் எடுத்தார்கள் அந்த பிரம்மாஸ்திரத்தை, ஆமாம், டி.வி டெக்கு வாடகைக்கு எடுத்து வந்து நல்ல நல்ல படங்களாக போட்டார்கள். எனக்கு வீட்டில் சும்மாவே அனுமதி கிடைக்காது, இதுல டிக்கெட்டுக்கு காசு கொடுத்து திலகமிட்டு அனுப்புவார்களா? ஆனாலும் எங்க அப்பாயி இடம் காசு வாங்கிக் கொண்டு ஒரு நாள் போனேன். இன்னமும் ஞாபகம் உள்ளது அன்றைக்கு “இது நம்ம ஆளு“ படம் போட்டார்கள். (காசு கொடுத்து இல்ல பாக்குறேன், அதான் ஆஆஆழமா மனசுல பதிய வச்சிக்கிட்டேன்.) அந்த வயதில் அந்த படத்தின் தலைப்பை பாக்கியராஜ் சோபனாவை காண்பித்து சொல்வதாகவே புரிந்து கொண்டேன். (அப்போது எனது வயது என்ன என்பதை யூகித்து இருப்பீர்கள்!!) இந்த விஷயத்தை சொல்லவில்லை என்றால் இந்த வீடியோ கதை நிறைவாக இருக்காது. எங்கள் ஊரில் ஒரு மாமா சென்னையில் இருந்து வருவார். நாங்க சோனி மாமா என்று அன்போடு அழைப்போம். எங்கள் அன்புக்கு காரணம், சென்னையில் இருந்து சம்பாதித்துக் கொண்டு வரும் காசை வீட்டிற்கு தருவாரோ இல்லையோ, வீடியோ வாடகைக்கு தந்து விடுவார். ஆமாம், அவர் சென்னையில் இருந்து வந்தால் எங்களுக்கு குதூகலம் தான். அவரிடம் என்ன ஒரு சிக்கல் என்றால் நான்கு படங்களுமே எம்.ஜி.ஆர் படங்களாகத்தான் போடுவேன் என்று ஒத்தைக் காலில் நிற்பார். அப்புறம் வீடியோ வாடகைக்கு எடுக்க போகிற பசங்க ஏதேனும் ஒரு படத்தை கலப்படமாக கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஒரு படமும் கூட ராமராஜன் படமாகத்தான் இருக்கும். கல்லூரி நாட்களில் ராமராஜனை டவுசர் என்று ஓட்டும் போதெல்லாம் உள்ளுக்குள்ளே ரகசியமாக வருத்தப் பட்டுக் கொள்வேன். ஆமாம், ரசிகர் என்று சொன்னால் போச்சு அப்புறம் என்னை ரவுண்டு கட்டி ஓட்டுவார்களே!! மெல்ல 1990ம் ஆணடில் சில வீடுகளில் கறுப்பு வெள்ளை சாலிடர் தொலைக்காட்சிப் பெட்டியும் சில வசதி படைத்தோர் வீடுகளில் ஒனிடா அல்லது பிபிஎல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் நுழைந்தது. எங்கள் பள்ளியில் கூட ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அதில் விளையாட்டு ஆசிரியரின் ஆசீர்வாதத்தோடு கிரிக்கெட் மேட்ச் பார்க்கத் துவங்கினோம். எனது நண்பன் மணிகண்டனின் தந்தை ஆசிரியர். அவர்கள் வீட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் தூர்தர்ஷன் விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக படம் போடுவார்கள். அப்போது வாரம் தவறாமல் அவர்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வைத்து அனைவரும் காணச் செய்வார். நண்பன் என்கிற உரிமையில் நானும் ஓரிரு முறை சென்று பார்த்துள்ளேன். (எங்களுக்கு டியுசன் கிளாஸ் அங்கேதான்) 1992 க்கு பிறகு லால்குடி விடுதி வாசம். மணக்கால் பஞ்சாயத்து தொலைக்காட்சி முன்னால் ஒட்டுமொத்த விடுதியுமே ஞாயிறு மாலை வேளைகளில் அமர்ந்து விடுவோம். பனிரெண்டாம் வகுப்பு படித்த போது லால்குடி பூங்காவனம் மற்றும் பூவாளூர் காவேரி தியேட்டரில் அட்டென்டண்ஸ் வைத்து படம் தவறாமல் கையெழுத்து போட்டு பார்த்த காலகட்டம். ஆகையால் இந்த டிவி முன்னால் காவல் காக்கும் பழக்கம் விட்டது. கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மட்டுமே பார்ப்போம். 1994-97 தேசியக் கல்லூரி நாட்களுமே அவ்வண்ணமே கழிந்தது. சுப்பிரமணியபுரம் சபியா சங்கீத் என லோ பட்ஜட் தியேட்டர்களில் ஆரம்பித்து பாலக்கரை காவேரி என்று ஹை பட்ஜட் தியேட்டர் வரை திருச்சி மாநகரிலே ஒரு தியேட்டர் பாக்கி வைக்காமல் படம் பார்த்திருக்கிறோம். நான் முதுகலை கணிதம் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தான் எங்க அப்பாயி இறந்து போனார்கள். ஆம், அவர்களின் கல்லு சாத்தி அன்றைக்கு எங்க வீட்டிலும் வீடியோ போட்டார்கள். ஆனால், நான் என்ன படங்கள் போட்டார்கள் என்று கூட எட்டிப் பார்க்கவில்லை. பிறகு கலைஞர் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி காலத்திற்கு பிறகு இந்த சின்னத்திரையில் படம் பார்க்க அங்கே இங்கே என்று சிறார்கள் ஓடுவது வழக்கொழிந்து போனது. அத்தோடல்லாமல் கேபிள் டிவியும் கணக்கு வழக்கின்றி படங்களாக பேட்டுத்தள்ள ஆரம்பித்த பின்பு சுத்தமாக டி.வி டெக் வாடகைக்கு எடுத்து பார்க்கும் விஷயம் பி.சி.ஓ பூத்துகள் போல வழக்கொழிந்து போய்விட்டது. அநேகமாக நாற்பது வயதைக் கடந்த அனைவருக்குள்ளும் இந்த டி.வி. டெக்கு கதைகள் நினைவுச் சாளரங்களில் ஏராளமாக இருக்கும். அவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்தால் பழங்கால நினைவுகளை சுகமாக அசை போட்ட திருப்தி எல்லோருக்கும் கிட்டும்.

Tuesday, November 14, 2023

குழந்தைகளின் ஆளுமையை காப்போம்

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் சூழல் அமைவதிலே!! பெற்றோர் வளர்ப்பதில் 50 விழுக்காடு தாக்கம் இருந்தாலும் மீதமுள்ள 50 விழுக்காடு சமூக சூழல் வயதொத்த நண்பர்களின் அழுத்தம் (peer pressure) போன்ற காரணிகள் தாக்கத்தை செலுத்தும். 80 களிலும் 90 களிலும் பதின் பருவத்தை கழித்தவர்கள் நல்வாய்ப்பினை பெற்றோர் எனலாம், ஏனெனில் அவர்களுக்கான சூழலியல் கவன சிதறல் காரணிகள் தற்போதைக் காட்டிலும் மிக மிக குறைவு தான். 90களில் இருந்த பதின் பருவ மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் நண்பர்களோடு விளையாடி ஊரை சுற்றி வருதல் இவை தவிர்த்த வேறு பொழுதுபோக்கு நிச்சயமாக இல்லை எனலாம் . இதைத் தாண்டியும் பொழுது போக்கு என்றால் நூலகம் சென்று நூல்களை எடுத்து வாசித்தல் வானொலியில் பாடல்கள் கேட்டல் என்கிற அளவில் தான் இருக்கும். ஆனால் தற்போது எதை எடுப்பது எதை விடுவது என்கிற பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பொழுது போக்குகள் மலிந்து கிடக்கின்றன. அவை எந்த அளவுக்கு ஆரோக்கியமானவையாக ஆளுமை வளர்ச்சிக்கு உகந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயமாக கேள்விக்குறி தான். பதின் பருவ மாணவர்களின் உளவியல் சிக்கலுக்கு அவர்கள் 'தான் எப்படிப்பட்ட ஆளுமையாக வளர வேண்டும்?! நமக்கு என்னென்ன தெரிகிறது? எது நமக்கான இலக்கு? இதை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் எல்லோரும் தவறு என்கிறார்கள் இதை செய்யலாமா செய்யக்கூடாதா? எதைச் செய்தால் வயது ஒத்த நண்பர்களின் மத்தியில் கெத்தாக காண்பித்துக் கொள்ளலாம்?' என்பன போன்ற பல நுட்பமான காரணிகள் உண்டு. பழக்கவழக்கங்களிலும் ஆளுமையிலும் தற்போதைய காலகட்டத்தில் சினிமாவின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. எங்கேயெல்லாம் செய்யலாமா செய்யக்கூடாதா என்கிற குழப்பம் மேலோங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் சினிமாக்கள் மிகச் சரியாக தவறான பாதையையே காட்டுகின்றன. சினிமாக்களில் 90களில் தொடங்கி தற்போது வரை பல விஷயங்களில் "இது அப்படி ஒன்றும் தவறு இல்லையே!" (normalizing) என்கிற ஒரு போக்கினை குழந்தைகள் மனதில் விதைத்து வருகின்றன அவற்றுள் சிலவற்றை கீழே பார்ப்போம். 1. புகைப்பிடிப்பது- பழைய படங்களில் ஒருவரை கெட்டவராக காண்பிக்க அவர் சிகரெட் பிடிப்பதாக காண்பிப்பார்கள் ஆனால் தற்பொழுது கதாநாயகர்களே சிகரெட்டை ஸ்டைலின் அடையாளமாக காட்டுகிறார்கள். 2. மது அருந்துதல்- பழைய படங்களிலும் சரி வீடுகளிலும் சரி மது அருந்துதலை அபாண்டமான குற்றம், மிகப்பெரிய தவறு என்பது போல காட்டுவார்கள் ஆனால் சமீபமாக "எப்போதாவது மது அருந்துதல் (occasional drinking) நண்பர்களோடு மது அருந்துதல்( social drinking) என்கிற போர்வையில் இவையெல்லாம் அப்படி என்று பெரிய தவறு இல்லை என்று ஆகி வருகின்றன முக்கியமாக ஹீரோ அவரது தம்பி தந்தை தாத்தா உள்ளிட்ட அனைவரும் சகஜமாக அருந்துகிறார்கள். 3. பள்ளிப் பருவத்தில் இயல்பாக எழும் எதிர் பாலின ஈர்ப்பினை காதல் காவியம் புடலங்காய் என்று நீட்டி முழக்குதல் - அழகி ஆட்டோகிராப் தொடங்கி சமீபத்தில் வந்த 96 வரை எல்லாராலும் சிலாகிக்கப்பட்ட படங்கள் அனைத்துமே இந்த தவறினை செய்கின்றன. அதனால்தான் பதின் பருவத்தில் உள்ள ஆண்களும் சரி பெண்களும் சரி எதிர்பாலின ஈர்ப்பினை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு மனச்சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 4. வன்முறை - எந்த ஒரு சிக்கலையும் எதிர்த்து நிற்றல் ஓடி ஒளிதல் ( Fight or flight response ) என்பதைத் தாண்டி பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு அமைதியான முறையில் சுமுகமான தீர்வினை எட்டும் ஒரு பக்குவமான மனநிலை கோழைத்தனமாக பார்க்கப்படுகிறது. மேலும் வன்முறையைக் கையில் எடுத்தல் என்பது ஆண்மையின் பெருமை என்பது போல சினிமாக்களில் கட்டமைக்கிறார்கள். எனவே பதின் பருவத்தினர் முக்கியமாக ஆண்கள் சிறிய பிரச்சனைக்கு எல்லாம் வன்முறையில் இறங்கும் போக்கு அதிகமாக உள்ளது. 5. கெட்ட வார்த்தை பேசுதல்- குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை கேட்ட வார்த்தையை தான் பேசுகிறார்கள் என்று ஒரு சினிமாவில் வசனம் வந்தது நல்ல விஷயம் தான். ஆனால் சினிமாக்களில் தான் எந்தெந்த சூழலில் எந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை எடுத்து வீச வேண்டும் என்பதை சொல்லித் தருகிறார்கள். எந்த ஒரு படத்தின் அறிமுகத்தையும் பரபரப்பான விஷயமாக்க கெட்டதாகவே இருந்தாலும் பரபரப்புக்காக கெட்ட வார்த்தை பேசும் காட்சியை டீசரில் வைக்கிறார்கள். ஆக வீர பராக்கிரமத்தோடு இருக்கும் கதாநாயகன் செய்யும் எதுவுமே குழந்தைகளை சட்டென்று ஈர்க்கும் அது போல தான் அவர்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளும் பராக்கிரமத்தில் அடையாளமாக குழந்தைகளால் பாவிக்கப்படும். எனவேதான் சினிமாக்களில் இருப்பவர்கள் சற்று சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். கோடிகளில் புரளும் கதாநாயகர்கள் தெருக்கோடியில் இருக்கும் சின்னஞ்சிறுவனை கூட மனதில் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும். இது பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் சினிமா இயக்குனர்கள் கூறுவது "நாங்கள் என்ன சமூகத்தில் இல்லாத விஷயத்தையா சொல்லிவிட்டோம் இவையெல்லாம் சமூகத்தில் இருப்பது தானே?!" என்று கூறுவார்கள். ஆனால் சமூகம் என்பது நல்லவை கெட்டவை இரண்டும் கலந்தது தானே!! மிகுந்த ஒப்பனையுடன் கவர்ச்சிகரமாக நாம் கெட்டதை காண்பிக்கும் போது அது வெகு எளிதாக வளரிளம் பருவ குழந்தைகளை ஈர்த்து விடும். இறுதியாக ஒன்று முற்றிலுமாக சினிமாக்காரர்களை மட்டும் குறை சொல்லி விட முடியாது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு நிச்சயமாக பெற்றோர்களின் பங்கு அவசியம் எனவே நல்ல விஷயங்களை பாராட்டவும் கெட்ட விஷயங்களுக்காக கண்டிக்கவும் ஒருபோதும் தயங்கி நிற்கலாகாது. மிக சிக்கலான அதி முக்கியமான பருவத்தில் குழந்தைகள் நம் வசம் தான் உள்ளனர். எனவே மிக கவனமாக அவர்களது ஆளுமையை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரிய பெருமக்களுக்கும் உண்டு. நல்லவை எவை அல்லவை எவை என்கிற சரியான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். சூழலியல் புறத்தாக்கம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு எதிரான ஒரு கவசமாக இருந்து குழந்தைகளை பாதுகாத்து சரியாக வளர்த்து எடுக்க நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியரால் இயலும். சமூக காரணிகள் பெற்றோர் வளர்ப்பு மற்றும் சூழலியல் தாக்கங்களை குறை கூறிக்கொண்டு ஆசிரியர்கள் வாளாவிருத்தலாகாது!! இது போன்ற ஒரு ஆசிரியராக நாம் இருத்தல் தான் குழந்தைகள் தினத்தில் நாம் அவர்களுக்கு தரும் சிறந்த பரிசு!!

Thursday, November 9, 2023

கலாச்சார வேறுபாடுகளை மதிப்போமாக...!!

(ரொம்பவும் தேடாதீங்க, கருத்து கடைசியில் உள்ளது) CCRT Hyderabad நினைவுகள்… “ஷி இஸ்ஸ ஃபேண்டஸி… ன்னான னான ன்னான… ஷி ஹேஸ்ஸ ஹார்மனி.. ன்னான னான ன்னான.. ….. ….. ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளாம்….” அவள் எங்களை கடந்து போகும் போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல் டைரக்டர் கௌதம் மேனன் ஸ்டைலில் எங்கள் காதுகளில் ஒளிக்கும். தனது நாற்பதுகளில் இருந்த நண்பர் ஒருவரோ “அழகே அழகு தேவதை…“ என ஜேசுதாஸ் அவர்களின் துணைகொண்டு “ராஜப்பார்வை“ பார்த்தார். ஆனால் எல்லோரும் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருக்கையில் “பார்த்த விழி பார்த்த படி பார்த்து இருக்க… காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க…“ என்று இரு கைகளிலும் வடையை வைத்துக் கொண்டு அதை உண்ண மறந்து அவளையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள். என்றெல்லாம் ஒரு பெண்ணின் அழகு குறித்த வர்ணனை செய்வது ஒரு ஆசிரியருக்கு அழகல்ல என்பதால் அவர் ஒரு நாகாலந்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் என சுருக்கமாக கூறித் தொடங்குகிறேன். சிசிஆர்டி ன் ஆரம்ப நாட்களில் அனைத்து மாநில ஆசிரியர்களும் அவரின் தோற்றம் மற்றும் நேர்த்தியான நவீன உடை குறித்து சிலாகித்தபடி இருப்பார்கள். ஆனால் சாப்பிட வரும் போது மட்டும் ரங்கீலா பட ஊர்மிளா மாதிரியான சிக்கன உடையில் வருவார். பெண்களுக்கான கடுமையான உடைக்கட்டுப் பாட்டை வலியுருத்தும் காஷ்மீர் நண்பர்கள் அவரை உள்ளூர இரசித்தபடி திட்டித் தீர்ப்பார்கள். ஒரு நாள் வகுப்பு துவங்கியபின் வேக வேகமாக ஓடிவந்த அந்த ஆசிரியை எனது அருகே இருந்த காலி இருக்கையில் அமர்ந்து கொண்டார். எனது சக தமிழக ஆசிரிய நண்பர்கள் கிண்டல் கலந்த ஒரு பொறாமைப் பார்வை பார்த்தார்கள். நானோ நாகரிகம் கருதி நாற்காலியை நகர்த்தி இடைவெளியை அதிகரிப்பது போல பாவனை செய்தேன்.( நாற்காலி ஒரு இஞ்ச் கூட நகரவில்லை என பிறகு நண்பர்கள் கூறினார்கள்) என்னைப் பார்த்து நட்பு ரீதியில் புன்னகைத்து விட்டு “அச்சு ஃப்ச்சம் ட்தமில்நட்து?“ எனக்கு ஒரு எழவும் புரியாததால் வகுப்பை கவனியுங்கள் என முன்னோக்கி கை காண்பித்து சமாளித்தேன். இருந்தாலும் என்ன சொன்னார் என மனதில் ஒவ்வொரு வார்த்தையாக கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்து ஆழமாக சிந்தித்துக் கொண்டு இருந்தேன். ஒரு முப்பது நிமிடங்கள் கழித்து “யா அயாம் ஃப்ரம் டமில்நாடு“ என்றேன். நாகாலாந்து மக்கள் பேசும் ஆங்கிலம் கூட சீனமொழி மாதிரிதான் இருக்கும். வகுப்பு மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டு இருந்ததால் வகுப்போடு ஒன்றிவிட்டேன்(சத்தியமா!!) திடீரென்று அந்த ஆசிரியை ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்து ரகசியமாக கையில் கொட்டிக் கொண்டார். வகுப்பை பார்த்துக் கொண்டே கையை பிசைந்து கொண்டு இருந்தார். பின் இடக்கையில் இருந்து கொஞ்சத்தை மட்டும் வலது கைக்கு மாற்றி எனது முகத்துக்கு நேராக நீட்டியபடி “ச்ச்சேக் ச்த்டிஸ்“ என்றார். “ஊவ்வ்வே…“ அடச்சே பான்பராக். அடுத்த நிமிடமே ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஜேசுதாஸ் அனைவரும் மூட்டை முடிச்சுக்களோடு வெளியேறி விட்டார்கள். நாகாலாந்து ஆசிரியர்கள் எட்டு பேருமே குட்கா போடுவார்கள். இடைவேளையின் போது அறைக்குச் செல்லும் போதெல்லாம் கொஞ்சம் “சரக்கும்“ போடுவார்கள். இது அங்கே உள்ள பரவலான பழக்கம் என பிறகு அறிந்து கொண்டேன். அவர்களின் பழக்கத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அந்த குட்கா நாற்றம் ஒவ்வாமை என்பதால் அதன் பின் அந்த ஆசிரியையைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட எதிர் முனைக்கு ஓடுவேன். மற்ற நாகாலாந்து ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் குட்கா வாடையோடு வளைய வருவதில்லை. கருத்து:பழக்க வழக்கத்திலேயே இத்தனை வேறுபாடு இருக்கையில் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்று கோஷமிட்டபடி எல்லோரையும் ஒரே கோணிப்பைக்குள் திணிக்க முயலுவது என்ன நியாயம். பன்முகக் கலாச்சாரத்தை சீரழிக்காமல் எல்லோரையும் அவரவர் பழக்க வழக்கங்களோடும் இந்தியர் என்ற உணர்வோடும் இருக்கச் செய்தாலே போதும். இல்லையெனில் உங்கள் கோணிப்பை அவிழ்த்து விட்ட நெல்லிக் காய் மூட்டையாகிவிடும்.

Wednesday, November 1, 2023

நந்தினி ஐஏஎஸ் 2.0 (climax changed)

தலைப்பு:“நந்தினி ஐஏஎஸ்“ ஆசிரியர்: மு ஜெயராஜ், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம் , அரியலூர் மாவட்டம். “நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தார் தமிழாசிரியர் மணிகண்டன். “நம்ம ஸ்கூல்ல புதுசா சேந்த ஆறாம் வகுப்பு நந்நதினி எழுதிய புத்தகம் சார்” சென்ற ஆண்டின் பழைய ரூல்டு நோட்டின் எழுதப்படாத பக்கங்களை கிழித்து எடுத்து நான்காக கத்தரித்து அவற்றை பிசிறு இன்றி நூலால் தைத்து குண்டு குண்டான கையெழுத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது. பிறப்பு, தாய் தந்தையர் குறித்த குறிப்பு, சொந்த ஊர் குறித்த குறிப்பு பிறகு தனது லட்சியமான ஐ.ஏ.எஸ். அதற்கான காரணம் என அழகாக வரிசையாக விஷயங்களை அடுக்கி இருந்தாள் குட்டிப் பெண் நந்தினி. தலைமையாசிரியர் வாயடைத்துப் போய் அவளைப் பார்த்து சிரித்தார். அவளோ வெட்கத்தில் “சார்“ என்றபடி சிரித்து நெளிந்தாள். “அப்பா என்னம்மா பண்றாரு?“ “அப்பா இல்லைங்க சார்" “அம்மா” “அம்மா கள வெட்டப் போவாங்க சார்“ “படிச்சி இருக்காங்களாம்மா” “ அஞ்சாப்பு முடிய படிச்சி இருக்காங்க சார்“ “உனக்கு ஐ.ஏ.எஸ் பத்தி யாரும்மா சொன்னாங்க?” “டி.வி நியுஸ்ல பாப்பேன் சார், அப்புறம் நம்ம மாவட்ட கலெக்டர் போன வருசம் நம்ம ஊருக்கு வந்து பேசினாங்கல்ல சார். அவங்கள போல நானும் கலெக்டர் ஆகணும்னு தோணுச்சி சார்“ சென்ற ஆண்டு பணியாற்றிய கலெக்டர் ரசியாபேகம் பணியாற்றிய ஓராண்டில் பல மாணவியருக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். அதன் ஒரு சாம்பிள் தான் இந்த நந்நதினியின் புத்தகம் என தலைமையாசிரியர் புரிந்து கொண்டார். ”இந்தப் புத்தகத்தை நான் படிச்சிட்டு வச்சிக்கட்டுமா நந்தினி?“ “வச்சிக்கோங்க சார், நான் இன்னைக்கு நைட் வேற எழுதிக்கிறேன் சார்” என்றாள் பெருமை பொங்க. அமுதவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட சிறப்பாக இருந்ததன. வண்ண வண்ணமாய் கொடித் தோரணங்கள் கொடிமரத்தில் இருந்து நான்கு பக்கங்களும் இழுத்துக் கட்டப் பட்டிருந்தன. கொடி மரத்தின் கீழே வண்ணக் கோலப்பொடிகளால் அழகிய ரங்கோலி இடப்பட்டிருந்தது. மாணவர்களும் சீருடையில் தேசியக் கொடியைக் குத்தியிருந்தனர். “அடுத்ததாக ஆறாம் வகுப்பு மாணவி நந்தினி பரதநாட்டியம் ஆடுவார்” என்று அறிவியல் ஆசிரியை விஜி அறிவித்தார். நந்தினி, ஆடிய நாட்டியம் அழகியப் பூச்செண்டு அசைந்து ஆடியது போல இருந்தது. வாய்க்குள் கல்கோனா மிட்டாயை அடக்கி வைத்துக் கொண்டு பேசுவது போல மழலையாய்ப் பேசுவாள் நந்தினி. அவளை பேசவைத்துக் கேட்பதற்காகவே சும்மாவே ஆசிரியர்கள் அவளிடம் ஏதாவது விசாரிப்பார்கள். அவளும் பட்டாம் பூச்சி சிறகசைப்பது போல கண்களை படபடவென்று அசைத்த வண்ணம் பேசுவாள். பேச்சினூடாக மூச்சுவாங்கிய படி பட பட வென்று பொறிந்து தள்ளுவாள். அவளுக்கு பேசவும் அலுக்காது ஆசிரியர்களுக்கு கேட்கவும் அலுக்காது. நந்தினி எட்டாம் வகுப்பிற்கும் வந்துவிட்டாள். ஆனால் ஆறாம் வகுப்பில் பார்த்தது போன்ற அதே மழலை மாறா குரலும் முகமும். அந்த ஆண்டு பள்ளிக்கு ஆண்டாய்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வருவதாக இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமையாசிரியர் ஆசிரியர் கூட்டத்தை கூட்டினார். “நாம எவ்வளவு தான் வகுப்பறைக் கற்பித்தலில் நமது திறமையை காண்பித்தாலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சொதப்பி விட்டோமானால் அனைத்தும் பாழ். அதனால் வழிபாட்டுக் கூட்டத்திலேயே சி.இ.ஓ வை அசத்தும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்திவிட வேண்டும்“ என்றார் தலைமையாசிரியர். “சார் இந்த முறை வழிபாட்டுக் கூட்டத்தை முழுவதும் ஆறாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நடத்தி விடலாம் சார். அவர்கள் தவறு செய்தால் கூட அது ரசிக்கத் தக்க வகையில்தான் இருக்கும்.“ என்றார் கணித ஆசிரியர் சரவணன். “சார் திருக்குறள் மட்டும் எட்டாம் வகுப்பு நந்தினியே சொல்லட்டும் சார். அவளும் ஆறாவது மாதிரியே தான் இருப்பா, மேலும் அவளோட மழலைக் குரலில் திருக்குறள் கேட்க நன்றாக இருக்கும்” என்றார் அறிவியல் ஆசிரியை விஜி. ஆண்டாய்வு அன்றைக்கு காலை எட்டு முப்பதுக்கெல்லாம் அனைவரும் வந்து விட்டார்கள். ஒரு பக்கம் காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிகர்சல் நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் சுருட்டிய சார்ட் பேப்பரை கையோடு எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் திரிந்தார்கள். “நந்தினி என்னம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கே” கணித ஆசிரியர் சரவணன். “சார், இங்கப் பாருங்க சார் ரிகர்சல் ரிகர்சல்னு சொல்லி அதே திருக்குறளை பத்து தடவை சொல்ல வச்சிட்டாங்க சார்” என்று அழகாக அலுத்துக் கொண்டாள். அமுதவயல் பள்ளியில் மட்டும் வழிபாட்டுக் கூட்டத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் “வாழ்த்துதுமே“ஐந்து முறை ஒலிக்கும். ஆம், பசங்க ஒன்ன புடி என்ன புடி என்று இழுத்து முழக்கி கொத்து பரோட்டா போட்டு விடுவார்கள். ஆனால் ஆண்டாய்வின் போது எல்லோரும் நூல் பிடித்தாற் போல் சரியாக பாடி முடித்துவிட்டனர். ’அப்பாடா, ஒரு கண்டத்த கிராஸ் பண்ணியாச்சு’ என்று தலைமையாசிரியரும் உடற்கல்வி ஆசிரியரும் பெருமூச்சு விட்டனர். நந்தினி திருக்குறளுக்கு அழைக்கப் பட்டாள். வந்தவள் ஒரே தாவாக மைக்கை இழுத்து தனது உயரத்திற்கு அட்ஜஸ்ட் செய்தாள். பிறகு மைக்கின் தலையில் ரெண்டு தட்டு தட்டி ஒர்க் பண்ணுதா என்று சோதனை செய்தாள். அவளின் இந்த செயலை சிஇஓ புன் சிரிப்போடு ரசித்துக் கொண்டு இருந்தார். “நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு“ என்று தலையை ஆட்டி ஆட்டி குறளையும் பொருளையும் அழகான மழலைக் குரலில் பேசி முடித்தாள். சி.இ.ஓ அவளின் கன்னத்தை தட்டி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை பரிசளித்தார். காலை வழிபாட்டு கூட்டம் சிறப்பாக முடிந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. முதன்மை கல்வி அலுவலர் மாலை பின்னூட்டம் வழங்கும் கூட்டத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட்ட விதத்தையும், பள்ளியையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றார். அந்த பாராட்டிற்கு நந்நதினியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை. நந்தினி பத்தாம் வகுப்பிற்கும் வந்து விட்டாள். சற்று வளர்ந்திருந்தாள். ஆனால் அதே பட்டாம் பூச்சி படபடப்புடனான கண்கள், கல்கோனா மிட்டாய் அடக்கிய மழலைப் பேச்சு மட்டும் அவளை விட்டு நீங்க வில்லை. மதிய உணவு முடித்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வந்த ஆசிரியர்களை அப்படியே நிறுத்தி ஒரு கூட்டத்தை நடத்தினார் தலைமையாசிரியர். “சார் அடுத்த வாரம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிடுங்க. கடையில காசு கொடுத்து வாங்கி ரெடிமேட் எக்சிபிட் எதுவும் இருக்க கூடாது. முழுக்க முழுக்க நாமே செய்ததாக இருக்க வேண்டும். எக்சிபிட் எப்படி இருந்தாலும் அத ப்ரசெண்ட் பண்ற விதத்தில் தான் பரிசு வாங்க முடியும். அதனால நல்லா ப்ரசெண்ட் பண்ணக் கூடிய பசங்கள பாத்து தேர்வு செய்யுங்க“ “சார் நான் மேத்ஸ் சார்பா ஒரு காட்சி வைக்கிறேன் சார்.“ இது கணித ஆசிரியர் சரவணன். “வெரி குட் எல்லா வருசமும் கணக்குல எக்சிபிட் குறைவாத்தான் வருது சிறப்பா பண்ணுங்க நிச்சயம் பரிசோட வரலாம்” “சார் நான் குளோபல் வார்மிங் பற்றி ஒரு ஐடியா இருக்கு அத டெவலப் பண்ணிடறேன் சார்” இது அறிவியல் ஆசிரியை விஜி. அடுத்த நாள் அறிவியல் கண்காட்சி. கண்காட்சிக்கு தேர்வு செய்யப் பட்ட மாணவர்களை தலைமையாசிரியர் அழைத்து அவர்களை விளக்கச் சொல்லி ஒரு முறை கேட்டு திருப்தி அடைந்தார். உங்கள் யூகம் சரிதான். அறிவியலுக்கு நந்நதினி தான் செல்கிறாள். “விஜி மிஸ், குளோபல் வார்மிங் பற்றிய கண்காட்சியில் வெறும் விழிப்புணர்வு கருத்து மட்டும் தான் இருக்கு. அதனால நந்தினிக்கு எதாவது வித்தியாசமா காஸ்ட்யும் போட்டு விட்டு அந்த கருத்துக்களை சொல்ல வச்சா நல்லா இருக்கும்“ “நல்ல ஐடியா சார், நிச்சயமா நல்லா இருக்கும் சார்” நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்குவதாக இருந்தது. பணி நிமித்தம் வர இயலாமையால் சி.இ.ஓ திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் மாலை பரிசளிப்பிற்கு வருவதாக உறுதியளித்திருந்தார். நந்தினி குறி சொல்லும் பெண் போல வேடமிட்டு வந்திருந்தாள். புருவத்திற்கு மையிட்டு மேலாக சுற்றிலும் வண்ணப் பொட்டுகள், கோணலான குதிரை வால், அதற்கு மேலே மல்லிகை கனகாம்பரம் பூ, நேர்த்தியாக கட்டிய புடவை, கக்கத்தில் ஒரு கூடை அப்புறம் கையில் குறி சொல்லுபவர்கள் வைத்திருக்கும் சிறு கோல் என்று குறி சொல்லும் பெண்ணாகவே மாறி இருந்தாள். பூமிப் பந்தின் அருகே நின்று “நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா" என்று தொடங்கி சுற்றுச் சூழல் மாசுபாடு விளைவு மற்றும் தவிர்க்க யோசனைகள் என அனைத்தையும் அழகாக ஜக்கம்மா பாஷையில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள். அவளிடம் குறி கேட்பதற்கென்றே அமுதவயல் பள்ளி அரங்கில் மட்டும் கூட்டம் அலை மோதியது. நந்தினியும் சற்றும் உற்சாகம் குறையாமல் சிரித்த முகத்தோடு அனைவருக்கும் குறி சொல்லி அனுப்பினாள். மாலை பரிசளிப்பு விழாவுக்கு கலெக்டர் வந்திருந்தார். பரிசு அறிவிக்கப் பட்டது. நந்தினிக்கு சுற்றுச் சூழல் பிரிவில் முதல் பரிசு கிடைத்தது. அப்போது தலைமையாசிரியர் கலெக்டர் அருகே சென்று ஏதோ கூறினார். அதற்கு சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்டார். பரிசு வாங்க நந்தினியோடு, விஜி மிஸ் மற்றும் தலைமையாசிரியரும் மேடைக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மைக்கில் “தற்போது பரிசு பெறுபவர் நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று புன்னகைத்தபடி கூறி கோப்பையோடு தலைமையாசிரியரால் அழகுற பைண்ட் செய்யப் பட்டிருந்த அவளது புத்தகத்தையும் வழங்கினார். இந்த ஆனந்த பேரதிர்ச்சியால் நந்தினி அழுதுகொண்டே தனது புத்தகத்தை வாஞ்சையோடு தடவினாள். அடுத்த மாதம் இன்னுமோர் அதிர்ச்சி காத்திருந்தது. நந்தினி 10 நாட்களாக பள்ளிக்கு வரவே இல்லை. அப்புறம் கூப்பிட்டு அனுப்பிய பிறகு வந்திருந்தாள். பழைய சிரிப்பு, உற்சாகம் எதுவும் இல்லை. கண்களில் படபடக்கும் பட்டாம்பூச்சியும் காணவில்லை. “என்னம்மா ஆளே வித்தியாசமா இருக்கே, என்னாச்சு?” என்று தலைமையாசிரியர் பரிவோடு விசாரித்தார். “ஒண்ணுமில்ல சார்“ என்று முடித்துக் கொண்டாள் நந்தினி. “முன்னெல்லாம் சாப்டியாம்மான்னு கேட்டாளே மூச்சு வாங்க முக்கா மணிநேரம் பேசுவ இப்போ இவ்வளவு சுருக்கமா பேசுற. “மாமா வந்துருக்காங்க சார்” “பாக்க சின்னப் பையனா இருக்காரு இவருதான் உங்க மாமாவா?“ “ஆமா சார்“ "சரி, நாளையிலிருந்து பள்ளிக்கூடம் வந்துடனும் சரியா?" " இல்ல சார் நான் படிக்கல நான் டிசி வாங்கிக்கிறேன்" "நீ கொஞ்சம் வெயிட் பண்ணு நான் அப்புறம் பேசுறேன்" தலைமை ஆசிரியர் அலுவலக உதவியாளரை அழைத்து விஜி மிஸ்ஸை அழைத்து வரக் கூறினார். “விஜி மிஸ் என்னாச்சு? ஏன் அழுதுகிட்டே வரீங்க?“ “சார்…“ “நிதானமா சொல்லுங்கம்மா, என்னாச்சு?” “சார் நந்தினிக்கு அவங்க பேரண்ட்ஸ் மே மாசம் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம் சார்” “என்னது, கல்யாணமா?" “கூட வந்தப் பையன் தான் மாப்பிள்ளையாம் சார். ஏதோ சொத்து பிரியக் கூடாதுன்னு சொந்தத்துல கல்யாணம் செஞ்சி வைக்கப் போறாங்களாம் சார் அப்பா இல்லாத குழந்தை வேற" “என்னம்மா சொல்றீங்க?” “ஆமாம் சார், அவ மாமாவ அனுப்பிட்டு இவ்வளவு நேரம் என்னைக் கட்டிக்கிட்டு அழுதுட்டு போறா சார். இத உங்கக் கிட்ட கொடுக்க சொன்னா சார்” வெள்ளை பேப்பர் போட்டு பேக் செய்யப் பட்டிருந்த பார்சலை பிரித்த போது “நந்தினி ஐ.ஏ.எஸ்“ புத்தகம் எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரித்தது. "ஆமாம், என்றைக்கு கல்யாணம்?" " நாளை காலை வீட்டிலேயே பண்றாங்களாம்" "15 வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க என்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைது செய்த பட்டனர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிற செய்தி அடுத்த நாள் காலை நாளிதழில் பளிச்சிட்டது. 'யாரு 1098க்கு போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்தி இருப்பாங்க' இதற்கிடையில் 1098 கட்டுப்பாட்டு அறையில் "எப்பா நேற்று இந்த அமுதவயல் கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரே கல்யாணத்தை நிறுத்த சொல்லி 50 பேருக்கு மேல போன் பண்ணிட்டாங்கப்பா" குறிப்பு: குழந்தை திருமணம் குறித்து தெரியவந்தால் 1098 க்கு போன் பண்ணி புகார் அளிக்கலாம்

Saturday, October 28, 2023

எமோஷனல் ஏகாம்பரங்களும், ஆசிரியர்களின் சங்கடங்களும்!!

 



கொரோனாவுக்கு பிறகான பள்ளி சூழலில் மாணவர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்படுவது மிக அதிகமாக உள்ளது. அதீத  மொபைல் போன்களின் பயன்பாடு மற்றும் தற்போது வரும் ரத்தம் தெறிக்கும் வன்முறை நிறைந்த  சினிமா காட்சிகள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்!!


சட்டதிட்டங்களுக்கு முரணாக நடப்பதை கெத்தாக நினைத்துக் கொள்ளும் போக்கு மாணவர்களிடம் அபாயகரமான அளவில் பெருகி வருகிறது.


ஆக, தற்போது IQவுடன் EQ வையும் வளர்த்தெடுத்தல் அவசியமாகிறது.


பத்தாண்டுகளுக்கு முன் செய்தித் தாளில் படித்தது.  அந்த மாணவி நன்றாக படிக்கக் கூடியவள், கட் ஆஃப் 200 எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதே இலட்சியம். ஆண்டுப் பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. கணிதத் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது. கட்டாய வினாவாக வந்திருந்த இரண்டு வினாக்களுக்கும் அவளுக்கு பதில் தெரியவில்லை. கட் ஆஃப் 200 அண்ணா பல்கலைக்கழக கனவு எல்லாமே அந்த ஒரு வினாவால் நொறுங்கிப் போனது. மூன்றாவது மாடியில் இருந்த தேர்வு அறைக்கு வெளியே ஓடிவந்து கீழே குதித்து விட்டாள்.


பெற்றோரின் எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்த பெற்றோருக்கு பொறியியல் படிப்பில் செலவு வைக்காமல் மதிப்பெண் குவிக்க வேண்டும். இரண்டாண்டு உழைப்பு. இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து புத்தியை பேதலிக்கச் செய்துவிட்டன. விளைவுகள் பற்றி யோசிக்க இயலாமல் போனது.


  அவன் சுமாராக படிக்கும் மாணவன்தான். ஆனால் ஆசிரியர்களிடம் பணிவு சக மாணவர்களிடம் நல்ல நட்பு என எல்லோருக்கும் பிடித்தமானவனாக வலம் வந்தான். திடீரென அவன் நடவடிக்கையில் மாற்றம். வேண்டுமென்றே தேர்வில் வெற்று காகிதத்தை கொடுத்துச் சென்றான். என்னவென்று கேட்ட ஆசிரியரை எதிர்த்துப் பேசிவிட்டான். அவனின் இந்த போக்கை பற்றி ஆசிரியர்கள் கூடி பேசினோம். ஒவ்வொருவரும் அவனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததாக கூறினார்கள்.


அவனை அழைத்து தனியே விசாரித்த போது, “---” என்ற பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். அதற்கு காரணம் காதலித்து பின் பாராமுகமாக இவன் நடந்து கொண்டது தான் என்றொரு வதந்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் உலாவியபடி இருந்துள்ளது. இந்த விஷயம் ஆசிரியர்களுக்கும் தெரிந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டான். அது தான் அவனின் மாற்றத்திற்கு காரணம். ”உன்னிடம் விரும்பத்தக்க எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்கும் போது இந்த சின்ன விஷயத்திற்காக உன்னை தப்பாக நினைப்போமா? நீ எப்போதுமே எங்கள் செல்லப் பிள்ளை தான்டா!”என சமாதானம் கூறி சகஜ நிலைக்கு திருப்பினோம்.


முதல் சம்பவத்தை Emotional Hijack என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உணர்வெழுச்சியால் கடத்தப்படுதல் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமா?


இது எப்போது எதனால் நடக்கிறது? உங்கள் சிந்தனையையும் செயலையும் உணர்வெழுச்சி வெற்றி கொள்ளும் போது நடக்கிறது. நம் விருப்பத்திற்கு மாறான சிந்தனையும் செயல்பாடும் அரங்கேறும். அடுத்தவர்களின் எண்ணவோட்டத்தை லட்சியம் செய்ய மாட்டோம். சரியான செயலையோ வார்த்தையையோ தேர்ந்தெடுக்க இயலாது. குமரப்பருவம்தான் என்றில்லை வயது வரம்பு பாராமல் நிறைய பேர் இந்த மாதிரி உணர்வெழுச்சியால் கடத்தப்படுவதை காண்கிறோம். இது மிகவும் ஆபத்தான சமூக விளைவை ஏற்படுத்தி விடும்.

இரண்டாவது சம்பவம் முதலாவதை விட சற்று மிதமானதுதான். தீவிர மனவெழுச்சி கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லையானாலும் சூழலுக்கு பொருத்தமான உணர்வை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்த தவறிவிட்டான்.


     நாம் எல்லோரும் மாணவர்களிடையே IQ வை அதாவது ”நுண்ணறிவு ஈவை”( intelligent quotient) பெரிய அளவில் வளர்த்து பெரிய பதவிகளில் அமர வைத்து அழகுபார்க்கவே ஆசைப் படுகிறோம். பாடம் சார்ந்த புலமையும் தொழில் நுட்ப அறிவு மட்டுமே வெற்றிகரமான எதிர்காலத்தை மாணவர்களுக்கு வழங்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்பேர்பட்ட “வெற்றிகரமான“ பிள்ளைகள் அனைவருமே வாழ்வில் வெற்றிகரமாக வலம் வருகிறார்களா என்றால் இல்லை. 


மனவலிமையோடு இருக்க வேண்டிய காவல் துறை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடினமான தேர்வினை தங்களின் உயர்நிலை நுண்ணறிவால் வெற்றிகொண்ட IAS அதிகாரிகள் கூட தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளை நாளிதழ்களில் காண்கிறோம்.


காரணம் வளரிளம் பருவத்தே வளர்க்க வேண்டிய EQ வை வளர்க்காமல் போனது தான். “அப்படியா! அது என்ன?” என்ற அளவில் தான் EQ பிரபலமாகியுள்ளது. IQ க்கு இணையாக அத்தியாவசியமாக தேவை என்பதால் ரைமிங்குக்காக EQ என்று சொன்னாலும் அது “உணர்வு சார் நுண்ணறிவு“ என்னும் (Emotional Intelligence) என்பது தான். IQ வை அளக்க துள்ளியமான அளவுகோலாக நிறைய தேர்வுகள் இணையத்தில் கிடைக்கின்றன ஆனால் EQ வை வெளிப்படையாக அளந்து கூற அளவுகோல் எதுவும் இல்லாதது தான் பரிதாபம்.


     ”டேனியல் கோல்மேன்“ என்பவர் தான் முதன் முதலில் “உணர்வு சார் நுண்ணறிவு” என்ற கருத்தாக்கத்தை 90களில் அறிமுகப்படுத்தினார். “சரியான உணர்வுகளை இனங்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் நேர்மறையான விளைவுக்கு வழிகோலுதல்“ என்பது தனிநபர் சார் EQ ஆகும். அதுவே “மற்றவர்களின் உணர்வுகளை துல்லியமாக இனங்கண்டு அவர்களுடன் ஆரோக்கியமான நேர்மறை உறவினை பராமரிக்கும் திறனே“ சமூகம் சார்ந்த EQ ஆகும்.


இதனைப் பற்றி இணையத்தில் தேடியபோது எனக்கு கிடைத்த அழகான சின்னஞ்சிறு விளக்கம் “ எண்ணங்களையும் உணர்வுகளையும் சரியான வகையில் இணைத்து விரும்பத்தக்க முடிவுகளை எடுக்கும் திறமை தான் உணர்வு சார் நுண்ணறிவு“.


ரொம்ப சிம்பிளா சொன்னா வாட்சாப் எமோஜிக்களை பொருத்தமாக கையாளுவது போல நடத்தைகளிலும் கையால்வதுதான்.


மாணவர்களின் குமரப்பருவம்  இரண்டு விஷயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒன்று சமூக வாழ்வு சார்ந்தது. மற்றொன்று உணர்வு ரீதியிலானது.

சமூக வாழ்வு சார்ந்து பின்வரும் மாற்றங்களை காணலாம்.


 1.அடையாளம் தேடிக்கொள்ளல். நான் யார்?, இந்த உலகில் எனக்கான இடம் எது? இவற்றுக்கான பதிலை பாலினம், வயதொத்த நண்பர்குழு, குடும்ப மற்றும் கலாச்சார பிண்ணனி போன்ற காரணிகள் சார்ந்து நிறுவிக் கொள்கிறார்கள்.


அதீத சுதந்திரமும் அதீத பொறுப்பும் தேவையென நினைக்கிறார்கள். மேலும் புதிய அனுபவங்களை செய்துணர துடிக்கிறார்கள்.

உணர்வு ரீதியிலான மாற்றங்கள்

     உணர்வு ரீதியிலான பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. சிரிப்பு, அழுகை, கோபம், மற்றும் கருணை எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸ் தான்.


     அவர்களின் மனநிலை வானிலை அறிக்கை போல் ஆகிவிடுகிறது. அதாவது கணிக்க இயலாதது ஆகிவிடுகிறது.


     “இளங்கன்று பயமறியாது“ என்பதற்கேற்ப எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வகையில் செய்து வைத்துவிடுவார்கள்.


எனவே தான் குமரப்பருவத்தில் இருக்கும் மாணவர்களின் ”உணர்வு சார் நுண்ணறிவை” வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரியருக்கு உள்ளது. 


இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே பெருகிவரும் வன்முறைப் போக்கிற்கும் தற்கொலைகளுக்கும் எதிர் பாலினத்தவருடனான பாலியல் சீண்டல்களுக்கும் ”உணர்வு சார் நுண்ணறிவு” குறைவே காரணம் என்று குற்றம் சாட்டினால் தவறாகாது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர் மத்தியில் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.


ஆசிரியர்கள் மாணவர்களின் "உணர்வுசார் நுண்ணறிவில்" கவனம் செலுத்தினால்தான் 'எடுத்தேன்  கவிழ்த்தேன் ' என்று நடந்துகொள்ளும் எமோஷனல் ஏகாம்பரங்கள் ஏற்படுத்தும் சங்கடமான சூழல்களை தவிர்க்க இயலும்.!!

Wednesday, October 25, 2023

அணு உலையில் இருந்து கிளம்பும் பரிசுத்த ஆவிகள்

 1.       அணு உலையில் இருந்து கிளம்பும் பரிசுத்த ஆவிகள்


 


     “என்னப்பா சொல்ற நீ, அணுகுண்டு டெக்னாலஜிய பயன்படுத்தி மின்சாரம் தயாரிச்சாங்களா?”


     “டேய் அருண் முதல்ல கரண்ட் எப்படி தயார் பண்றாங்கன்னு தெரியுமா?”


     “நெய்வேலில நிலக்கரி பயன்படுத்தியும், மேட்டூர்ல தண்ணிய பயன்படுத்தியும் அப்புறமா ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி பக்கம்) காற்றாலை மூலமா பிறகு கூடங்குளத்தில் அணுஉலை என்று பல வகையில் தயார் பண்றாங்க. ஆனா எல்லாத்துலயும் அடிப்படை ஒண்ணுதான் தெரியுமா?”


     “என்னப்பா அடிப்படை?”


     ”காந்தம் தெரியுமா, அதாம்பா மேக்னெட்!!”


     “தெரியும்பா, நானே வச்சிருக்கேன்”


     “அதுல வட துருவம் தென் துருவம் எல்லாம் உண்டு, ஒத்த துருவங்கள் விலக்கும் எதிர் துருவங்கள் கவரும்”


     “அது தெரியும்பா”


     “ஒரு காந்தம் இருந்தா அதைச் சுற்றி காந்த புலம் உருவாகும். இரண்டு காந்தங்களை அருகருகே வைத்தால் இரண்டிற்கும் இடையில் வலிமையான காந்த புலம் இருக்கும்”


     “சரி, கரண்ட் எப்படி அதிலிருந்து வருதுன்னு சொல்லுங்கப்பா!!”


     “வரேன் இருடா, சதுர அல்லது செவ்வக வடிவில் நெருக்கி சுற்றப் பட்ட காப்பர் ஒயர்கள் கொண்ட அமைப்புக்கு பேர் காயில். அந்த காயிலை அந்த வலிமையான காந்த புலத்தில் அதாவது இரண்டு வலிமையான காந்த புலங்களுக்கு மத்தியில் செல்லும் அச்சில் காந்தபுலத்தை செங்குத்தாக வெட்டுமாறு சுழற்றினால் அந்த காயிலில் சுற்றப் பட்ட ஒயரில் மின்சாரம் உண்டாகும். இதுதான் மின்சாரம் உண்டாக்க வேண்டிய தத்துவம்”




     “நீங்க சொன்ன எல்லா வகை மின் நிலையங்களிலும் அப்படித்தான் மின்சாரம் உண்டு பண்றாங்களா?”


     “ஆமாம். சுழற்சி என்கிற இயக்க ஆற்றலை மின் ஆற்றலா மாற்றணும். அந்த சுழற்சியை யார் செய்றாங்க என்பது தான் மின்நிலையங்களை பிரித்து காண்பிக்கிறது”


     “எப்படிப்பா?”


     “மேட்டூர் அணை மாதிரியான நீர்த்தேக்கங்களில் வேகமாக அதிக அழுத்தத்துடன் வெளியேற்றப் படும் நீர் அந்த காயில் இருக்கும் அச்சை (இனி டர்பைன் என்று சொல்வேன்) சுழற்றும். இதுவே நெய்வேலியில் நிலக்கரியை எரித்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் நீரை கொதிக்க வைத்து நீராவியை உருவாக்கும். அந்த நீராவி அதிக அழுத்தத்துடன் டர்பைனை சுழற்றும் வகையில் செலுத்தப் படும். இதுவே காற்றாலை என்றால்…”


     “தெரியும்பா, காற்று அந்த ராட்சத ஃபேனோட ரெக்கையை சுழற்றும் அது டர்பைனை சுழற்றி மின்சாரத்தை உருவாக்கும்”


     “அப்புறம் அணு உலை மின்சாரத்திலும் நெய்வேலி கதை தான். ஆனால் அங்கே நிலக்கரியை எரிப்பதற்கு பதிலாக கட்டுப் படுத்தப் பட்ட அணு வெடிப்பு மூலம் பெறப்படும் வெப்பம் நீராவியாக பெறப்பட்டு டர்பைன் சுழற்றப் படும்”


     “ஆனா இந்த சோலார் பேனல் மூலமாக கிடைக்கும் மின்சாரம் டோட்டலா வேறவகை தானேப்பா?”


     “கரெக்டா சொன்னடா செல்லக்குட்டி. ஐன்ஸ்டீன் கண்டறிந்த ஒளிமின் விளைவு அடிப்படையில் அது கிடைக்கிறது. இது பற்றி விளக்கமா வேற சந்தர்ப்பத்தில் கதைப்போம்”.


     “அப்பா அணு உலையில் எரிபொருளா பயன்படுத்தப் படுவது யுரேனியம் தானே?“


     “ஆமாம், ஆனா அப்படி வெறுமனே சொல்லக் கூடாது யுரேனியம்233, யுரேனியம் 235 போன்ற யுரேனியம் ஐசோடோப்புகளும் புளுட்டோனியம்239 ம் தான் அணுக்கருப் பிளவுக்கு உகந்தவை”


     “அப்பா, எனக்கு ஒரு டவுட்டு அணுகுண்டு பத்தி சொன்னப்ப, கிரிட்டிகல் மாஸ் என்கிற எல்லையை தாண்டியதும் தானாகவே வெடிக்கும் என்று சொன்னீங்க. ஆனா இங்க தானா வெடிக்காது இல்லையா? அப்போ எப்படி வெடிப்பை துவக்கி வைப்பாங்க?”


     “அப்படி கேளு, அணு குண்டு மாதிரி இங்கே எரிபொருள் இரண்டு துண்டா இருக்காது. ஆனால் மாத்திரை வடிவ பெல்லட் களாக சிறிது சிறிதாக செய்யப் பட்டு செங்குத்தான குழாய்களுக்குள் பத்திரமாக வைக்கப்படும். இது போன்ற குழாய்கள் நிறைய சேர்ந்து ஒரு உருளை வடிவ தொகுப்பாக அணுஉலையின் மையத்தில் இருக்கும்   ( fuel Assembly) பகுதியில் வைக்கப் படும். இது கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய வேலை என்பதால் மாதக் கணக்கில் ஆகும்“.



     “பத்திரமா உள்ளே வைத்த பிறகு எப்படி முதல் வெடிப்பை துவக்குவாங்க?”


     “அணுகுண்டு பற்றி சொன்னபோது சொல்லி இருக்கிறேன் அல்லவா, ஒரு யுரேனியம் இரண்டாக பிளந்த பிறகு வெப்ப ஆற்றலோடு மூன்று நியுட்ரான்கள் வெளியேறி வேறு மூன்று அணுக்களை பிளக்கும், பிறகு அவற்றிலிருந்தும் இதுவே என பிளவு தொடர் செயல்பாடாகவும் அபரிமிதமான ஆற்றலாகவும் வெளியாகும். ஆனால் இங்கே முதல் பிளவை நிகழ்த்த நியுட்ரான் கொண்டு எரிபொருள் தாக்கப்பட்டு வெடிப்புக்கு பிள்ளையார் சுழி போடப்படும்”


     “அப்புறம் அடுத்த மூன்று நியுட்ரான்கள் அடுத்த மூன்று அணுக்களை தாக்கி தொடர்வினையாக தொடர்ந்து வெடித்தபடியும் வெப்ப ஆற்றலை கொடுத்தபடியும் இருக்கும் தானே?”


     “வெரிகுட் டா செல்லக்குட்டி”


     “ஆனா எப்படிப்பா நிறுத்துவாங்க?”


     “நிறுத்துவது என்றில்லை, தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் நியுட்ரான் வேகத்தை மட்டுபடுத்துவது என்பதெல்லாம் ரொம்ப முக்கியம் பா”


     “நியுட்ரான் வேகத்தை ஏன் மட்டு படுத்தணும்”


     “அணுக்கரு பிளவுக்கு அதிவேக நியுட்ரான்களை விட மிதவேக நியுட்ரான்கள் தான் உகந்தவை. எனவே நியுட்ரான்களின் வேகத்தை மட்டு படுத்த காட்மியம் போன்ற உலோக கழிகள் அணு உலைக்குள் தாழ்த்தி உயர்த்தும் வகையில் வைத்திருப்பார்கள்“


     “எரிபொருள் தீர்ந்து போச்சுன்னா எப்படிப்பா மாற்றுவாங்க?“





     ”நல்ல கேள்வி, தற்போது அணு உலை செயல்பாட்டில் இருக்கும் போதே புதிய எரிபொருளை உள்ளே செலுத்தவும் பயன்படுத்தப் பட்ட எரிபொருளை அப்புறப் படுத்தவும் வழிவகை உண்டு. ஆனால் பழைய அணுஉலைகள் 18 அல்லது 24 மாதங்கள் முடிந்து நிறுத்தப் பட்டு எரிபொருள் மாற்றுவது பழைய உபயோகிக்கப் பட்ட எரிபொருளை அப்புறப் படுத்துவது என்று வேலைகள் நடக்கும்”.


     “அப்பா, பயன்படுத்திய யுரேனியத்தை தூக்கிப் போட்ருவாங்களா?”


     “அப்படில்லாம் தூக்கிப் போட்டா அந்த ஏரியாவில் இருக்குறவன் எல்லாம் கேன்சர் வந்து சாகவேண்டியது தான். ஆமாம், பயன்படுத்தப் பட்ட எரிபொருட்களில் இருந்தும் ஆபத்தான கதிர்வீச்சு பல நூறு ஆண்டுகளுக்கு வெளிப்பட்ட வண்ணம் இருக்கும். இப்போ வரைக்கும் அந்த பயன்படுத்தப் பட்ட எரிபொருட்களை என்ன செய்வதென்று தெரியாமல் பாதுகாப்பாக பத்திரப் படுத்தி சேம்பர்ஸ்ல வச்சிட்டு இருக்காங்க”


     “அப்பா மறுபடியும் எனக்கு ஒரு டவுட்டு!!”


     “கேளுப்பா”


     “அணுக்கரு இணைவு மூலம் ஹைட்ரஜன் குண்டு தயார் பண்ணுனாங்கன்னு சொன்னீங்கள்ல, அப்படின்னா, ஹைட்ரஜன் பாமை கட்டுப் படுத்தி வெடிச்சி மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்ல, வெறும் ஹைட்ரஜன் தானே, கதிரியக்க ஆபத்து எதுவும் இருக்காதுல்ல?!”


     “செல்லக்குட்டி நீ அறிவாளிடா, ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. ஹைட்ரஜன் பாமை எப்படி வெடிக்க வச்சாங்க?”


     “ஹைட்ரஜன் தான் இருப்பதிலேயே சின்ன அணு அதாவது ஒரே ஒரு எலக்ட்ரான் புரோட்டான் உள்ளது. அதனால ரெண்டு ஹைட்ரஜன் அணுவை இணைத்து ஹீலியம் அணுவா மாத்தும் போது அபரிமிதமா வெடிக்கும். ஆனா அந்த இணைவு பிளாஸ்மா நிலையில் தான் நிகழும். அந்த நிலைக்கு போகணும்னா சூரியனின் மையத்தில் உள்ள அளவுக்கு 150000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கணும்னு சொன்னீங்க. அந்த வெப்பநிலையை பெற அணுகுண்டை வெடிக்க வைக்கணும்னு சொன்னீங்க”


     “பரவால்லையே ரொம்ப கரெக்டா ஞாபகம் வச்சிருக்கியே, ஆமாம், வெளியே அணுகுண்டு மூலமா ஒன்றரை லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேணும். அதே நேரத்தில் ஹைட்ரஜனை திரவநிலையில் வைக்க -254 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேணும். அதனாலதான் அந்த ஹைட்ரஜன் குண்டு கூட சாண்ட்விச் மாடலில் செய்திருந்தார்கள்”


     “அதெல்லாம் வேணாம்பா, ஃபியுசன் மூலமா மின்சாரம் தயார் பண்ணிட்டாங்களா இல்லையா?”


     “அவசரப்படாதடா, ஹைட்ரஜன் குண்டு போல அணுஉலையை தயார் பண்ண பலநாடுகள் இணைந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. இப்போதைக்கு டோகமாக் (TOKAMAK)  என்கிற மாடல் அணுஉலையை ரஷிய விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். அதில் டெஸ்ட் ரன் எல்லாம் சமீபத்தில் பண்ணிப் பார்த்திருக்காங்க. என்னதான் ஃபியுசன் ரியாக்டர் என்றாலும் அதில் வெடிப்பை துவங்குவதற்கு யுரேனிய அணுகுண்டுதான் தேவை”


     “அப்படின்னா இதுவும் ஆபத்தானது தான் இல்லையா? ஆனாலும் நமக்கு மின்சாரம் தேவையாச்சே என்னப்பா பண்றது?” என்று கவலையோடு அருண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.


     “அப்படில்லாம் ரொம்ப வெசனப்படாதடா தம்பி, உலக மின்சார பயன்பாட்டில் வெறும் பத்து விழுக்காடுதான் அணு உலை மூலமாக கிடைக்கிறது”


     “ஆமா, கதிர்வீச்சினால் என்னதான் ஆபத்துப்பா, அதை சரிபண்ணிட்டோம்னா நல்லது தானே?. கதிர்வீச்சு ஆபத்து பற்றி கொஞ்சம் சொல்லுங்கப்பா”


     “டேய் தம்பி அப்பாவுக்கு தூக்கம் வருது. இதுபற்றி நாம விலாவாரியாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்” என்று கூறிவிட்டு கவுந்தடித்து படுத்துக் கொண்டேன்.

Thursday, October 19, 2023

விலக்கப்பட்டவர்கள் சாதித்த வரலாறு!!

 


நான் பி.எட் முடித்த அடுத்த வருடம் ஒரு தனியார் பள்ளியில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராக பணியாற்றினேன். என்னை பத்தாம் வகுப்பு “பி“பிரிவிற்கு வகுப்பாசிரியராக நியமித்தார்கள். எனக்கோ பெருமை பிடிபடவில்லை. வந்த உடனே பத்தாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரா?!


வகுப்பில் பிரபல நகைக் கடை ஓனர் பையன் முதல் இனிப்புக்கடை ஓனர் பையன் வரையில் அடக்கம். ஒரு பேருந்து முதலாளி பெண்கூட படித்தார். 


வீட்டுப் பாடம் செய்வதில் சற்று முன்ன பின்ன இருந்தாலும் ஆசிரியரிடம் அவ்வளவு அன்பாகவும் பணிவாகவும் இருப்பார்கள். நானும் கஷ்டமான கணக்குகளை நான் போட்டுவிட்டு ரொம்ப சப்பையான கணக்குகளை அவர்களுக்கு வீட்டுப் பாடமாக தருவேன். அவர்களும் போட்டு வந்துவிடுவார்கள். 


பள்ளி தாளாளர் மற்ற வகுப்புகளுக்கு கொடுக்கும் எந்த நெருக்கடியும் எனது வகுப்பிற்கு தரமாட்டார். இவர்கள் மாநிலப் பாடத்திட்டம் படிப்பவர்கள் (அப்போது மெட்ரிக் பாடத்திட்டமும் அமலில் இருந்தது) மேலும் “மொதலாளி நம்மை முழுதாக நம்புகிறார்“ என்று பெருமை பொங்க எண்ணிக் கொண்டு கம்பீரமாக வலம் வருவேன்.


டிசம்பர் மாதவாக்கில் பத்தாம் வகுப்பு பிரைவேட் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் தருணம் (அப்போதெல்லாம் ஆன்லைன் எல்லாம் இல்லை ஒன்லி “பென்“லைன் தான்) வந்த போது எனது வகுப்பு மாணவர்கள் 25 பேரையும் கொத்தாக விண்ணப்பிக்க அழைத்துச் செல்லுமாறு பிரின்சிபல் என்னை பணித்த போது தான் அவர்கள் எல்லாம் பள்ளி பெயரில் எழுதவில்லை பிரைவேட்டாக எழுத உள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன்.


அதாகப் பட்டது என்னுடைய வகுப்பு என்று நான் பெருமையாக பீற்றிக் கொண்டது ஒரு டுடோரியல் கிளாஸ். 


எங்க பள்ளியை தப்பா நினைக்காதீங்க, அந்த 25 மாணவர்களும் அந்த நகரத்தின் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஆண்டு இறுதியில் “உங்க பிள்ளை ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி அடைய வாய்ப்பில்லை, அதனால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம், அவன் பெயிலாகி எங்க பள்ளியில் இரண்டாம் வருடம் படிக்கலாம் அல்லது ஒன்பதாம் வகுப்பு பாஸ் என்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு இடம் பெயரலாம்” என்று “டீல்“ பேசியுள்ளனர். இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்து வெளியேறியவர்களை அரவணைத்து இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அதே வேளை தனது பள்ளி தேர்ச்சி விழுக்காட்டிற்கும் பங்கம் வராமல் பிரைவேட்டாக எழுத வைப்பது தான் எங்க பள்ளியின் செயல் திட்டம்.


ஆண்டு விழாவின் போது எல்லா வகுப்பு மாணவர்களும் அவரவர் வகுப்பு சார்பாக ஒரு நடனத்தை ஏற்பாடு செய்தனர். எனக்கு அந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமோ முன் அனுபவமோ கிடையாது. ஆனாலும் கூட பசங்க “ஈஸ்வரா வானும் மண்ணும் பிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…” என்ற பாடலை தேர்வு செய்து அவர்களே பிராக்டீஸ் செய்து வந்தனர். எங்க வகுப்பு ரிகர்சலை பார்வையிட முதல்வரை அழைத்த போது “சார் உங்க வகுப்பு வேண்டாம் சார்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார். இது அன் அபிஷியல் வகுப்பு என்பதால் மேடையேற்ற பயந்திருக்கிறார் என்று பின்னர் உணர்ந்தேன்.


மெட்ரிக் மாணவர்கள் எல்லோரும் ஒரே சென்டரில் தேர்வினை எழுத எனது வகுப்பு மாணவர்கள் அந்த நகரத்தின் பிரைவேட் சென்டரில் அகரவரிசைப் படி அமர்வதால் 25 பேரும் 15 வெவ்வேறு அறைகளில் எழுதினார்கள். அவர்களோடு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தனியார் பள்ளி சீருடையில் வருவதை வித்தியாசமாக பார்ப்பார்கள். அவர்களை நானே தேர்விற்கு அழைத்துச் சென்று எழுதச் செய்து அழைத்து வருவேன்.


இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு நம்ப முடியாததாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆமாம், 25 பேரில் 23 பேர் தேர்ச்சி பெற்று விட்டனர். ஏற்கனவே பயின்ற பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட அந்த மாணவர்களில் ஒருவன் 443 மதிப்பெண் எடுத்தான். கணிதப் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு இரண்டு பேர் 90க்கு மேல் முக்கால் வாசி மாணவர்கள் 60 விழுக்காட்டிற்கு மேல் பெற்றிருந்தார்கள். எனது மாணவர்களின் பழைய பள்ளி நிர்வாகம் எந்த அளவுக்கு இவர்களின் திறமையை கணித்து உள்ளது பார்த்தீர்களா?



Wednesday, October 18, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்தரங்கம்

 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு  விழாவின் ஒரு பகுதியாக "கலைஞர் கருத்தரங்கம்"  தொகுதிக்கு ஒன்று என  பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதில் அரியலூர் தொகுதிக்கு எங்கள் பள்ளி தேர்வு செய்யப்பட்டிருந்தது.






பள்ளியில் அரங்க மேடையோ ஆடிட்டோரியமோ இல்லை, ஆகையால் வெளியில் மேடை அமைத்து பந்தல் போட்டு விடலாம் என்று எண்ணியிருந்தோம்.


ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு உறுத்தல் ஏனென்றால் ஒரு சிறு மழை பெய்தாலே எங்கள் பள்ளியில் பல இடங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு சேர் சகதி ஆகிவிடும்.


 ஏனெனில் எங்கள் பள்ளி வளாகம் ஆனது இதற்கு முன்பு அனேகமாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஏரியாக இருந்துள்ளது அதைத்தான் பள்ளிக்கு கிராமத்தினர் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்கள்.

 

எங்கள் பள்ளிக்கு NABARD மூலம் கிடைக்கும் சிறப்பான கட்டிட வசதி வராததுக்கு இதுதான் காரணம். தரைப்பகுதி கடினமானதாக இல்லாத காரணத்தினால் இரண்டு அடுக்கு அல்லது மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்புடையதாக இல்லை.


 நான் சென்ற பிறகு இரண்டு இரண்டாக அறைகள் உள்ள இரண்டு கட்டிடங்களை போராடி பெற்றேன். இது போலவே இன்னும் ஒரு ஆறு அறைகள் கொண்ட கட்டிடம் கிடைத்தால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல அறை வசதியை செய்து கொடுத்து விடலாம்.


விழாவுக்கு முன் ஏற்பாடுகாக வந்திருந்த அலுவலர்களும் பார்த்துவிட்டு பந்தல் மேடை வசதிகளுக்கு எல்லாம் அளவெடுத்த பிறகு இறுதியாக நான் மழை அச்சுறுத்தல் எனில் விழா நடத்த இடம் உகந்ததாக இருக்காது என்று கூறியதால் பக்கத்தில் உள்ள மண்டபத்திற்கு மாற்றி விடலாம் என்றார்கள்.


ஆக மண்டபம் நாகமங்கலம் ரேவதி திருமண மண்டபம் அதில் நடக்கும் விழா அரசு உயர்நிலைப்பள்ளி நாகமங்கலம் விழா!!


விழா பணிகள் அனைத்தையும் பகுதி பகுதியாக பிரித்து ஆசிரியர்களை கொண்ட குழுக்கள் அமைத்து ஒதுக்கீடு செய்து கொண்டோம்.


விழாவுக்கு முதல் நாள் அன்று அனைத்து பேரும் பரபரப்பாக இயங்கி அனைத்து பணிகளையும் முன்னதாகவே முடித்தோம் அன்றைக்கு மாலை மிகக் கடுமையான மழை!!


 பள்ளி வளாகத்தில் மேடை ஏற்பாடு செய்யவில்லை என்று ஆறுதல் கொண்டோம். 


மண்டபம் சற்று சிறியது ஆகையால் 8, 9 & 10 வகுப்பு மாணவர்களை மட்டும் மண்டபத்தில் அனுமதிப்பது என்று முடிவு எடுத்து இருந்தோம். பிறகு மாணவர்களுக்கு நாற்காலிகளை கொடுத்தால் 200 பேருக்கு இடம் சரியாக போய்விடும். 


 மாணவர்கள் அனைவரையும் பெஞ்சில் அமர வைத்து விடலாம் என்று பள்ளியில் இருந்து 40 பெஞ்சுகளை லாரியில் ஏற்றி மண்டபத்திற்கு காலையிலேயே அனுப்பிவிட்டோம். 


மாணவர்களை பாதுகாப்பாக சாலையை கடக்க செய்து மண்டபத்தில் சென்று பெஞ்சுகளில் அமர வைத்தால் இன்னொரு வகுப்பு தாராளமாக உட்காரும் அளவுக்கு இடம் இருந்தது அதனால் ஏழாம் வகுப்பையும் வரவழைத்தோம். 


அரசு விழா என்பதால் காலதாமதத்திற்கு வேலை இல்லை. ஆகையால் விழாவிற்கு அரை மணி நேரம் முன்பாகவே நாங்கள் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சரியாக முடித்து அனைவரையும் அமர வைத்து விட்டோம்.


அந்த அரை மணி நேரத்தில் கூட்டத்தினரை engage செய்வதற்காக கலை திருவிழா நாட்டியத்தில் ஒரு நாட்டியத்தை அரங்கேற்றினோம். 


மாணவர்களின் கருத்தரங்க பேச்சு என்பது மேலும் சில பள்ளிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக எங்கள் பள்ளி மாணவர்களை 5 இலிருந்து இரண்டாக குறைத்துக் கொண்டோம். மீதி 3 பேர் வேறு பள்ளியில் இருந்து வந்திருந்தனர்.


எனவே வாய்ப்பு கிடைக்காத மீதி மூன்று மாணவர்களை அந்த நேர இடைவெளியில் பேச அனுமதித்திருந்தோம். ஆகவே அந்த 30 நிமிடங்களும் சுவாரசியமாகவும் engaging ஆக இருந்தது.


 வரவேற்பிற்கு welcome clap கொடுப்பதற்காக 20 பேர் கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நிறுத்தி இருந்தோம்.


 சிறப்பு விருந்தினர் அரசு தலைமை கொறடா அவர்கள் வந்து இறங்கினார். அவரது வாகனம் சற்று முன்னே வந்து விட்டது, கட்சிக்காரர்கள் வேறு உடனே சூழ்ந்து கொண்டனர்.   welcome clap captain என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.


 அவனது திகைப்பை புரிந்து கொண்ட கொறடா அவர்கள் "நீங்கள் என்ன செய்யப் போறீங்க செய்ங்கப்பா" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

 உடனடியாக welcome clap go  என்றவுடன்  வெல்கம் கிளாக் கொடுக்கப்பட்டது.


 விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிமிட வாரியாக துல்லியமாக திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக தயாரித்திருந்தார்கள்.

முழுவதும் தலைமைச் செயலகத்திலிருந்து வந்திருந்த அலுவலர்கள் பார்த்துக் கொண்டனர்.


 மேடையில் தொகுத்து வழங்குவதையும் கூட மாவட்ட ஆட்சியரின் பிஆர்ஓ அவர்கள் எடுத்துக் கொண்டார். தொகுத்து வழங்க ஏற்பாடு செய்திருந்த ஆசிரியருக்கு ஓய்வு கொடுத்து விட்டோம்.  எனது வேலை வரவேற்புரையோடு முடிந்தது.


மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினருக்கு இடம் விட்டு தொகுதியில் எம்எல்ஏ மாண்புமிகு சின்னப்பா அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் இன்னா பிற அலுவலர்களும் தங்கள் உரையை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.


 மாணவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பேசினர். மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மிக அழகாக திட்டமிட்டு அனைவரையும் பாராட்டும் விதமாகவும் ஒருவரையும் விட்டு விடாமல் அனைவரையும் குறிப்பிட்டு சொல்லி பாராட்டி பேசத் தொடங்கினார்.


 ஒரு சிறு ஊராட்சியில் உள்ள ஒரு உயர் நிலை பள்ளியில் நடைபெறும் மிகப்பெரிய விழா இது, இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்.  இந்த கிராமத்தில் கிடைத்த ஒரு சிறிய மண்டபத்தை கூட ஒரு வெள்ளை மாளிகை போல அலங்கரித்து அழகாக விழாவை ஏற்பட்டு செய்துள்ளீர்கள் என்று அவர் கூறியதில் நாங்கள் விழாவை ஏற்பாடு செய்த பட்ட கஷ்டமெல்லாம் பறந்து ஓடியது.


 பிறகு மாணவர்களில்  பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  அதில் முதல் பரிசு எங்கள் பள்ளி மாணவி ப்ரீத்திக்கு கிடைத்தது .


முதல் பரிசு பெற மேடை ஏறியவர் என்ன ஆச்சுன்னே தெரியவில்லை அழுகையை அடக்கிக் கொண்டு பரிசு பெற்றார்.


 ceo தனியாக அழைத்து அவரை பேசி பாராட்டும் போது வெடித்து அழும் நிலைக்கு போய்விட்டார்.


 மேடையில் இருந்து இறங்கியவுடன் பொங்கிப் பொங்கி அழுதார்.   அந்த மாணவியை ஆசிரியர்கள் பூ போல அள்ளி  மடியில் வைத்துக் கொண்டு தேற்றினர். 

அது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது.


ஆக இந்த நிகழ்ச்சி மிக அழகாக திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பள்ளி வளாக தூய்மை மற்றும் மண்டபத்தின் ஏற்பாடு போன்ற பல பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவரும் செயலாளரும் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகளும் பல வேலைகளை செய்து மிகுந்த ஒத்துழைப்பை கொடுத்தனர்.


 நிச்சயமாக இது  ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. எனக்கும் இது மிகப்பெரிய ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது!!

Wednesday, October 11, 2023

சக்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட வாங்க!!

 சக்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட வாங்க!!



"சக்கரைவள்ளிக் கிழங்கு"

இந்தப்பேரைக் கேட்டதும் “இந்து“ படத்தில் வரும் “சக்கரைவள்ளிக் கிழங்கு நீ தான் சமைஞ்சது எப்படி…” என்ற பாடல் நினைவுக்கு வந்தால் நீங்கள் தமிழ் சினிமா பார்த்துக் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டீர்கள் என்று அர்த்தம். எனக்கெல்லாம் சுத்தமாக ஞாபகம் வர்லீங்கோ(?!)


“உன் பேரைச் சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..” இந்தப் பாடல் காதலன் காதலி உறவுக்குப் பொருந்துமோ இல்லையோ எனக்கும் சக்கரைவள்ளிக் கிழங்குக்கும் உள்ள உறவுக்கு மிக்கப் பொருத்தம்.


கொக்கி அறுந்த டவுசரின் முனைகளை முடிச்சு போட்டு மானம் காத்த சிறு பிராயம் தொடங்கி சொட்டை பின்னோக்கியும் தொப்பை முன்னோக்கியும் இறங்கும் எனது தற்போதைய கட்டிளம் காளைப் பருவம்( பாஸ் உங்க வயசு 40 பாஸ்) வரையில் இந்த சக்கரைவள்ளிக் கிழங்கு ஆசை ‘ஹட்ச்“ நாய்க்குட்டியாய் பின் தொடர்ந்து வருகிறது.


“யாகாவாராயினும் நாகாக்க…“ வள்ளுவனின் இந்தக் குறட்பாவை  மட்டும் இந்தக் கிழங்கின் சுவை விஷயத்தில் என்னால் கடைபிடிக்க இயலவில்லை.


அப்போ எனக்கு ஏழு வயதிருக்கும் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.( ஏழு வயசுன்னா இரண்டாம் வகுப்பு தானே ஏன் இந்த பில்டப்பெல்லாம்). இந்தக் கூட்டு வண்டி தெரியுமா? மாட்டு வண்டியில் பொருத்தமான “அக்ஸஸரீஸ்“ எல்லாம் இணைத்து மேற்புறத்தை உருளையை செங்குத்தாய் வெட்டி கவிழ்த்தது போன்ற அமைப்பால் கூரை அமைத்தால் கூட்டு வண்டி ரெடி. கோவிலுக்கு வண்டிக் கட்டிக் கொண்டு செல்வார்கள். திருமண காரியங்களில் மணப் பெண்ணை அழைக்க இந்த கூட்டு வண்டி பயன் படுத்துவார்கள். ( இப்போ முயற்சித்தீர்கள் என்றால் திருமணம் நின்று போவது திண்ணம்). அப்புறம் இந்த சக்கரைவள்ளிக் கிழங்கு இந்த வண்டியில் தான் வைத்து விற்பார்கள். 


மாட்டு வண்டியில் உட்காரும் பரப்பில் கிழங்கின் பச்சையான கொடியினை பரப்பி அதன் மேல் உறுத்தாமல் இருக்க கோணி சாக்கினை விரித்து குறைந்தபட்சம் இரண்டு பேர் அமர்ந்திருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று மூட்டைகளில் சக்கரைவள்ளிக் கிழங்கு வைத்திருப்பார்கள். ஒரு தராசு ஒன்று இருக்கும். வண்டியை இழுக்கும் மாட்டுக்கு பசி எடுக்கும் போதெல்லாம் இந்த பச்சைக் கொடியை இழுத்து போடுவார்கள். 


“சக்கரைவள்ளிக் க்க்கிழங்ங்..கே….” என்று உரத்தக் குரலில் ஒலி எழுப்புவார்கள். என் போன்ற சிறார்க்கு எல்லாம் இந்தக் குரல் “செந்தேன் குழல்”


பெரும்பாலும் எவரும் காசு கொடுத்து கிழங்கு வாங்குவதில்லை. “ச்சீச்சீ“ நீங்க நினைக்கிற மாறி இல்லைங்க காசுக்கு பதிலா நெல் அல்லது நிலக்கடலை போன்றவற்றை கொடுத்து வாங்கிக் கொள்வோம் பண்டமாற்று முறை அமலில் இருந்த காலம். வண்டி வீதி வழி போகும். வேண்டியவர்கள் “ஏ கிழங்கு நில்லுங்க“ என்று நிறுத்தி வாங்க வேண்டியது.


வண்டி எங்கள் வீட்டைக் கடக்கும் போது நான் அம்மாவிடம் போய் கெஞ்சுவேன்.


 “சரி நிக்கச் சொல்லு வாங்குவோம்“ என்று கூறிவிட்டு போய் அடுக்குப் பானைகளை (தானியங்கள் நிரம்பிய பெரிய பானைகளை அடுக்கடுக்காய் சுவற்றின் மூலைகளில் சாய்த்து வைத்து இருப்பார்கள்) திறந்து பார்த்தால் அது காசு தீர்ந்த “ஏடிஎம்“ ஆக பல் இலிக்கும். 

“அப்பன்னா குதிர்ல இறங்கி எடு” என்பார்கள்.

 “யப்பா நான் நாலு எடம் போவணும் வெரசா வாப்பா!“ என்று வண்டிக்காரர் அவசரப்படுத்துவார். 

“அவசரத்துல கை விட்டா அண்டாவுல கூட கை நுழையாது“ என்பது போல வழக்கமாக ஒரே துள்ளலில் ஏறும் குதிரில் இப்போ ஏறுவது ரொம்ப கடினமாக உள்ளது.


 “சரிப்பா எடுத்து வைங்க வரும் போது நிப்பாட்டுறேன்” என்று கூறி விட்டு “எல சம்முவம் உட்றா போவட்டும்“ என்று கிளம்பி விட்டார்கள். திரும்பி வருவதற்குள் கிழங்கு தீர்ந்து விடக் கூடாதே என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் குதிருக்குள் இருந்தபடி வேண்டிக் கொண்டேன்(அப்போ விவரம் அறியாமல் பெரும் பக்தி மானாக இருந்தேன்).


சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுத்த முறை அவிப்பதற்கான நெல்லையும் சேர்த்து என்னை வைத்தே எடுத்து விட்டார்கள். “ஏம்மா ஒரு ஐந்து கிலோ வாங்கிக்கலாம்மா“ என்றேன். “உதைபடுவே படுவா“ என்று திட்டிக் கொண்டே ஒரு கிலோ கிழங்கிற்கான நெல்லை மட்டும் என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை வைத்துக் கொண்டு ரோட்டில் உக்காந்து கொண்டேன். நிறுத்தாமல் சென்றால் சாலை மறியல் செய்வதாய் உத்தேசம்.


உலகத்திலேயே வெகு இலகுவாக மிகச் சுவையான ஒரு தின்பண்டம் செய்யும் முறை ஒன்று உண்டென்றால் அது சக்கரைவள்ளிக் கிழங்கு செய்யும் முறைதான். கிழங்கினை அலசி முனைகளை வெட்டி நீக்கி குறுக்காக இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி அகலமான மண்சட்டியில் கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைத்து தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்க வேண்டியது. வேக வைப்பதற்கு முன்பு கிழங்கின் தோல் கிழங்கோடு அன்றில் பறவைகள் போல பிரிக்க இயலா வண்ணம் ஒட்டிக் கொண்டிருக்கும். வெந்தபின்பு “பிரேக்கப்“ ஆன ஜோடிகள் போல டப்பென்று பிரிந்து வந்து விடும்.


சுவை?! அதை விளக்குவதற்கு பாவம் தமிழில் வார்த்தைகள் பஞ்சம். மெல்ல நாவில் பட்டு தொண்டையில் இறங்க இறங்க நீங்கள் கிறங்கிப் போவீர்கள். ஆங்கிலேயன் போல் அடிமை படுத்திவிடும். அப்புறம் எப்போதும் ஆகஸ்ட் பதினைந்து கிடையாது. 

சத்து?!


உங்களுக்கு வழக்கமாக தேவையான விட்டமின் ”ஏ“ ஆனது இதில் 400 சதவீதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் நார்ச்சத்து நிரம்ப உள்ளதால் காலைக் கடன்களை எளிதில் செலுத்திவிட்டு கவுரவமாக நடமாடலாம்.


“பொட்டாசியம்“ சத்தும் நிரம்ப உள்ளதாம். இவற்றோடு இயற்கையான சர்க்கரை ஆனால் வெகு குறைவான கலோரி மதிப்பில் உள்ளதாக சொல்கிறரார்கள். ஆதாரம் http://www.medicalnewstoday.com/articles/281438.php

சரி சரி இன்னைக்கு சந்தையில் வாங்கிய கிழங்கை வேக வைக்க வேண்டும் போய்வருகிறேன். நீங்களும் வாங்குங்க. சமைச்சு சாப்பிடுங்க. உண்மையான தமிழனா இருந்தா “ஷேர்“ பண்ணுங்க.(கிழங்கச் சொன்னேன்)

Monday, October 9, 2023

ரேடியேஷன் என்றால் என்ன?

 மு ஜெய



ராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி நாகமங்கலம்


ரேடியேஷன் என்கிற கதிர்வீச்சு அபாயம்


ரேடியேஷன் என்றால் என்ன?


ஒரு மூலத்தில் இருந்து வெளியேறும் சக்தி, வெளியில் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வல்லது கதிர்வீச்சு என்கிற ரேடியேஷன் என்பார்கள்.


எங்கே இருந்தெல்லாம் இந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது?


எங்கே இருந்தெல்லாமா? கதிர் வீச்சு இந்த வெளியெங்கிலும் நீக்கமற நிறைந்து இருக்கு. தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் துருபிடிக்காத இரும்பிலும் கூட இருக்கும். கதிர் வீச்சு இல்லாத இடம் ஏது?


அய்யய்யோ அப்படியா?


ஆமாம், இருப்பதிலேயே மேஜர் சோர்ஸ் ஆஃப் ரேடியேஷன் இந்த சூரியன் தான். அதில் இருந்து தான் அளவில்லா காஸ்மிக் கதிர்வீச்சுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. காஸ்மிக் கதிர்வீச்சில் ஆபத்தானவைகள் புவியின் வளி மண்டலத்தில் வடிகட்டப் படுகின்றன. 


ஆனால் இந்த நியுட்ரினோ துகள்கள் இந்த வெளியெங்கும் நீக்கமற நிறைந்தபடி ஒளியின் வேகத்தில் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நொடி உங்கள் உடம்பை கோடிக்கணக்கான நியுட்ரினோ கதிர்கள் ஊடுருவிய வண்ணம் இருக்கும் என்பது தெரியுமா?


அப்படின்னா ஒண்ணும் பிரச்சனை இல்லையா?


கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு. அயனியாக்க கதிர்வீச்சு அயனியாக்கா கதிர்வீச்சு. செல்போன் கதிர்வீச்சுகள், நியுட்ரினோ கதிர்வீச்சுகள் போன்றவை அயனியாக்கா கதிர்வீச்சு வகைப்பட்டது. இந்த கதிர்வீச்சு எந்த தடமும் காட்டாமல் கமுக்கமாக நல்லபிள்ளையாக ஊடுருவும் வகை. இதனால் தீங்கு ஒன்றும் இல்லை.


இந்த செல்ஃபோன் ரேடியேஷன்…


செல்ஃபோன் ரேடியேஷன் நேரடியாக இந்தவகையிலான பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவ எந்த தரவுகளும் இல்லை என்று நான் தேடிய பல நம்பகமான தளங்களில் கூறியுள்ளார்கள்.


அயனியாக்க கதிர்வீச்சு என்றால் என்ன?


ஒரு அணுவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும் எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்களும் ஒரே எண்ணிக்கையில் இருப்பதால் அவை நடுநிலையோடு இருக்கின்றன. 

அந்த அணுவில் ஒரு எலக்ட்ரானை எக்ஸ்ட்ராவாக போட்டால் எதிர்மின்சுமை மெஜாரிட்டி ஆகிவிடும். அந்த நடுநிலை அணு இப்போது எதிர்மின் அயனி ஆகிறது. 

அந்த அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை கழட்டி விட்டால் நேர்மின்சுமை மெஜாரிட்டி ஆகிவிடுகிறது. அந்த நடுநிலை அணு இப்போது நேர்மின் அயனி ஆகிறது.


அயனியாக்கா கதிர்வீச்சுகள் எந்த தொந்தரவும் செய்யாமல் பொட்டாட்டம் பயணிக்கும் அதே வேளை அயனியாக்க கதிர்வீச்சுகள் சற்று கிருத்துவம் பிடித்தவை. ஆமாம், போகிற போக்கில் நடுநிலை அணுவில் ஒரு எலக்ட்ரானை கழட்டிவிட்டோ, எலக்ட்ரானை சேர்த்து விட்டோ அயனியாக மாற்றிச் சென்று விடுகிறது.


இந்த அயனியாக்க கதிர்வீச்சுகள் என்பவை ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்வீச்சுகள், எக்ஸ் ரே கதிர்வீச்சுகள், நியுட்ரான் கதிர்வீச்சுகள் போன்றவையாகும். 

இவை சக்தி வாய்ந்தவை. இவற்றின் அலைநீளங்கள் குறைய குறைய ஊடுறுவும் திறன் அதிகமாகிறது. 

எனவே கதிர்வீச்சின் தன்மைக்கேற்ப இவை தடைகளை ஊடுருவிச் சென்று நடுநிலை அணுக்களை அயனியாக மாற்றிவிடுகின்றன. மூலக்கூறுகளுக்கிடையே உள்ள பிணைப்பை உடைக்கவல்லவை.

உடற்செல்களில் புகுந்து ஜீன் திடீர் மாற்றங்களை தூண்டி புற்று செல்கள் உருவாக காரணமாகின்றன.


ரேடியேஷன எப்படி அளப்பாங்க?


ரேடியேஷனின் அலகுகள் நான்கு விதமாக கையாளப்படுகின்றன.


1. கதிர்வீச்சு செயல்பாடுகளில் உமிழப்படும் அளவுகள். 

இது பெக்கொரல் (Bq) என்கிற அலகு கொண்டு அளக்கப் படுகிறது. ஒரு மூலத்தில் இருந்து ஒரு வினாடிக்கு உமிழப்படும் ஃபோட்டான் துகல்களின் எண்ணிக்கையை பெக்கொரல் என்பார்கள். இதனை கெய்கர் எண்ணி (Geiger Counter) கொண்டு அளவிடுகிறார்கள். 


2. ரேடியேஷன அளப்பதன் இரண்டாம் வகை.

 ரேடியேஷன் காரணமாக ஒரு கிலோகிராம் பொருளில் செலுத்தப் படும் ஆற்றலை கிரே (Gy) என்கிற SI Unit  மூலமாக குறிக்கிறார்கள்.


இது நேனோ கிரே (One billionth of a Gray 1/1000,000,000)


 மைக்ரோ கிரே (One Millionth of a Gray 1/1000,000)


மில்லி கிரே (Milli Gray 1/1000) என்றெல்லாம் வகைப்படுத்தி தேவைக்கேற்றவாறு பயன்படுத்துவார்கள்.


3. ரேடியேஷன் திசுக்களில் ஏற்படுத்தும் அழிவின் ஒப்பீட்டளவு. 


நமக்கு எப்போதும் இந்த ரேடியேஷன் நமது உயிரி திசுக்களில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிற ஒப்பீட்டு அளவு தான் தற்காப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?


வெவ்வேறு வகை ரேடியேஷன்கள் உடற்திசுவில் வெவ்வேறு அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். உடற்திசுவிலேயே வெவ்வேறு உடல் பாகங்கள் வெவ்வேறு அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும். எனவே திசுக்களை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் அளவிலான கதிர்வீச்சு சீவர்ட் (Sievert – Sv) என்கிற அலகினால் குறிப்பிடப்படுகிறது.


இதிலும் மேலே குறிப்பிட்ட நேனோ, மைக்ரோ மற்றும் மில்லி போன்ற அடைமொழியுடனான பயன்பாடுகள் உண்டு.


கதிர்வீச்சு என்றாலே அது அணுஉலையோடு சம்மந்தப் பட்ட மேட்டரா?


அப்படி எல்லாம் ஒரேயடியாக குற்றம் சாட்டிவிட இயலாது. ஒரு இடத்தில் இருக்கும் கனிமப் படிவுகள் கூட கதிர்வீச்சை உமிழ்ந்த வண்ணம் இருக்கும்.

அணு உலை அன்றியே ஒரு சராசரி ஆஸ்திரேலியன் மீது 1500-2000 மில்லி சீவர்ட் கதிர்வீச்சு படிகிறது.

இதுவே பிரிட்டனில் 7800 மில்லி சீவர்ட் ஆகும்.

வீட்டில் கிரானைட் தரை போட்டு இருக்கிறீர்களா? கையை கொடுங்க உங்களுக்கு 1000 மில்லி சீவர்ட் இலவசம்.


எக்ஸ் ரே அல்லது சிடி ஸ்கேன் டெஸ்ட் எடுக்குறீங்களா அப்படின்னா தடவைக்கு 2600 மில்லி சீவர்ட் கதிர்வீச்சை வாங்கி உடலில் போட்டுக் கொள்கிறீர்கள்.

கேன்சர் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரப்பி கொடுப்பார்கள் அல்லவா? அந்த மருந்துகளிலும் கனிசமான அளவுக்கு ரேடியேஷன் உண்டு. அந்த மருந்துகளை மிகுந்த பாதுகாப்பான முறையில் தான் கையாளுவார்கள்.


கஞ்சி முதல் கம்பங் கூழ் வரை பீங்கான் எனப்படும் செராமிக் மெட்டீரியலில் தான் குடிக்கிறீர்களா. அப்படின்னா உங்களுக்கும் கதிர்வீச்சு உண்டு.

அட அதெல்லாம் விடுங்கப்பா, வாழைப்பழம் சாப்பிட்டால் கூட அதில் இருக்கும் பொட்டாசியம் 40 என்கிற ஐசோட்டோப் மூலமாக கதிர்வீச்சு கிடைக்கிறது.

ஆக, அணு உலை அன்றி பிற வகைகளிலும் இயற்கையாகவே நாம் குறிப்பிட்ட அளவிலான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறோம். ஆனால் அவையெல்லாம் திசுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக அளவிலானவை அல்ல. எனவே அஞ்சற்க.


4. இந்த நான்காவது அலகு எஃபக்டிவ் டோஸ் என்கிற முறையில் அளவிடப்படுகிறது. அதாவது rem – Roentgen Equivalent man.


இதிலும் நானோ, மைக்ரோ, மில்லி என்கிற வகையில் அளவிடப்படுகிறது.


1 மில்லி ரெம் எனப்படுவது ஓரு வருடம் முழுவதுமாக நாம் டிவி பார்ப்பதால் கிடைக்கும் அளவு.

அல்லது ஒரு ஆண்டு செயல்படும் அணு உலை அருகே வசிப்பதால் கிடைப்பது.


அல்லது மூன்று நாட்கள் அட்லாண்டாவில் வாழ்வதால் கிடைப்பது. (அய்ய்யயோ ஏன்? அங்கே படிந்திருக்கும் ரேடியோ ஆக்டிவ் கனிம படிவுகள் தான்)


செல்ஃபோன் ரேடியேஷன் ஆபத்தானதா?


நூறு ஆண்டுகள் பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே கோலேச்சிய டெலிஃபோன்கள் அவர்களின் வீடுகளைத் தாண்டி வெளியே வரவே இல்லை. ஆனால் செல்ஃபோன்கள் இருபது ஆண்டுகளுக்குள் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் கைகளிலும் வந்து விட்டது. நிச்சயமாக இது புரட்சிகரமான தகவல் புரட்சி தான்.


தற்போது உலகத்தில் 8 பில்லியன் செல்ஃபோன் வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆகவே நியுட்ரினோ மற்றும் காஸ்மிக் ரேடியேஷன்களுக்கு அடுத்த லெவலில் புவி முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது செல்போன் சிக்னல்களை தாங்கும் ரேடியோ அலைகள் தான்.


முதலில் செல்ஃபோன் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். செல்போன்களையும் செல்ஃபோன் டவர்களையும் இணைத்து உலகளாவிய ரேடியோ அலைகளால் ஆன ராஜபாட்டை போடப்பட்டு இருக்கிறது. அந்த ராஜப்பாட்டையில் மின் காந்த அலைகளாக மாற்றப் பட்ட நமது பேச்சு மற்றும் டேட்டா அடங்கிய டிஜிட்டல் தகவல்கள் கம்பீரமாக ஒளியின் வேகத்தில் பயணித்து தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கின்றன.


ரேடியோ அலைகளின் அலைக்கற்றையின் அகலத்தை பொறுத்து அது 2ஜி, 3ஜி,4ஜி மற்றும் வரவிருக்கும் 5ஜி என்று வரையறுக்கப் படுகிறது. அலைக் கற்றையின் அகலத்திற்கு ஏற்றவாறு ரேடியோ அலைவரிசை மாறுபடும். தற்போது நாம் பயன் படுத்தும் 4ஜி ரேடியோ அலைவரிசையானது 0.7 லிருந்து 2.7 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகும். இதுவே 5ஜிக்கு 80 ஜிகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.


செல்ஃபோன்களில் பயன்படுத்தப் படும் ரேடியோ அலைவரிசைகள் அயனியாக்கா கதிர்வீச்சு என்கிற வகையின் பால் படும். எனவே இதனால் ஆபத்து எதுவும் இல்லை. 


ஆனாலும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு SAR என்கிற அலகினால் அளவிடப்படுகிறது. SAR- Specific Absorption Rate.


 அனுமதிக்கப்பட்ட SAR லிமிட் என்பது 1.6 Watt/Kg. 

நாம் பயன்படுத்தும் செல்போன்கள் அந்த எல்லைக்குள் வருமாறு தயாரிக்கப் படுகின்றன. என்னுடைய சாம்சங் எம்31 தலையில் 0.52 எனவும் உடலுக்கு 0.69 எனவும் SAR உள்ளது.


இந்த அளவீடுகள் தகவலுக்காக கொடுத்துள்ளேனே அன்றி செல்ஃபோன் ரேடியேஷன்களால் மனிதனுக்கோ பிற உயிர்களுக்கோ எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தகவல்கள் இணையத்தில் இல்லை.


இதன் மூலமாக நான் அணுஉலைகள் பாதுகாப்பானவை என்று கூற வரவில்லை. அணுஉலைக் கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாக அழிப்பது என்பது தெரியாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்ட அணுஉலை எரிபொருள்கள் மற்றும் பல தளவாடங்களை அப்படியே மூட்டை கட்டி வைத்துக் கொண்டு உள்ளன. வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பது போல என்று கிராமத்தில் சொல்வார்கள் அல்லவா? உண்மையிலேயே புவியின் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது அணுஉலைகள் தான். ஏனெனில் செர்னோபில் மற்றும் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட விபத்துகளில் நாம் கற்காத பாடங்கள் ஏராளம் உள்ளன.

Saturday, October 7, 2023

Walking to School - சீனமொழிப் படம்.

 



சீனாவில் ஒரு மலைப் பாங்கான உள்கிராமம். அங்கே உள்ள ஒரு சிறிய குடும்பம். அதில் ஒரு பாட்டி, அம்மா, நஜியாங்,வாவா ஆகிய குழந்தைகள்மற்றும் வெளியூரில் வேலை பார்க்கும் அப்பா. அந்த ஊரில் ஒரு பள்ளி, ஆனால் பள்ளிக்கு போகவேண்டுமானால் நுஜியாங் என்கிற கடும் வெள்ளம் புரண்டோடும் ஆற்றினை கம்பியில் கயிறு போட்டு சறுக்கிக் கொண்டே கடக்க வேண்டும். 


வீட்டில் அம்மா, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் மற்றும் பாட்டி (சீன கலாச்சாரத்தில் தாத்தா பாட்டிகளை அழகாக மரியாதையோடு நடத்துகிறார்கள்) பராமரிப்பு என எல்லாவற்றையும் தோளில் சுமக்கிறார். சிறுவன் வாவா அழகான துறுதுறு சுட்டிப்பயல். எதையும் சட்டென்று கற்றுக் கொள்பவன். பள்ளி செல்ல ஆர்வத்தோடு இருக்கிறான். ஆனால் அவனுடைய அம்மா, கம்பியில் சறுக்கும் ஆபத்தான வேலை வேண்டவே வேண்டாம் என்று கடுமையாக மறுக்கிறார். சிறுமி (அக்கா) நஜியாங் தம்பி மீது அதீத பாசமும் அக்கரையும் காட்டுகிறாள். அவள் பாடங்கள் படிக்கும் போது வாவா வும் பாடங்களை படிக்கிறான். பாடல்கள் எல்லாம் பாடுவதை பார்த்து எப்படியாவது ஆற்றைக் கடந்து பள்ளிக்கு சென்றே ஆக வேண்டும் என்ற ஆர்வம் பீறிடுகிறது.


வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் கயிறும் மற்றும் கொக்கியை எடுத்துக் கொண்டு சிறுவன் வாவா கம்பியில் சறுக்கி ஆற்றைக் கடந்து பள்ளிக்கு சென்றுவிடுகிறான். ரகசியமாக ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கிறான். அன்றைக்கு பள்ளிக்கு புதிதாக வரும் பயிற்சி ஆசிரியை நீ யை நேருக்கு நேர் பார்த்து பயந்து ஓடிவிடுகிறான்.


ஆசிரியை நீ பிள்ளைகள் மீது மிகுந்த பாசத்தோடு இருப்பதோடு புதிய முறைகளை பயன்படுத்தி அழகாக பாடம் சொல்லித் தருகிறாள். தனது தொடர்பில் உள்ள நண்பர்கள் மூலமாக குழந்தைகளுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அதனை நேரில் தருவதற்கு நஜியாங் வீட்டிற்கு செல்கிறாள். அந்த கம்பிவடத்தில் சறுக்கும் போது டீச்சர் பாதியில் சிக்கி நின்று போக, நஜியாங் சறுக்கி வந்து அவரை நகர்த்தி கரை சேர்க்கிறாள். 

வீட்டிற்குள் நுழைந்தவுடன் வாவா ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறான். டீச்சரை பார்க்க முடியாது என பிடிவாதம் பிடிக்கிறான். காரணம் டீச்சர் அவனை ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றால், அவன் திருட்டுத்தனமாக ஆற்றைக் கடந்து பள்ளி சென்ற விஷயம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

 

அப்புறம் பிடிவாதமாக அவனை அழைத்து வரவும் அவன் பயந்தது போலவே நடந்துவிடும். அவனுடைய அம்மா துடைப்பக்கட்டையால் அவனை விளாசுவதற்கு துரத்துகிறாள். (அந்த நாட்டிலும் அம்மாக்களின் பவர்ஃபுள் வெப்பன் துடைப்பக்கட்டை தான் போல)

அப்புறம் அனைவரும் சமாதானப் படுத்தி அவன் ஆற்றைக் கடக்க கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவனோ நஜியாங்கிற்கு டீச்சர் வழங்கிய அழகிய ஷூவைக் கொடுத்தால் தான் ஆச்சு என்கிறான். அக்கா நஜியாங் தம்பிக்கு ஷூவைக் கொடுத்து சமாதானப் படுத்தி தூங்க வைக்கிறாள். அவனோ ஷூவைக் கட்டிப் பிடித்தபடியே தூங்குகிறான். 


அடுத்தநாள் காலை எழுந்தால் அக்கா பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கிறாள். மற்ற பிள்ளைகள் ஷூ அணிந்துள்ளார்கள். நஜியாங் அதே பழைய சப்பலோடு செல்கிறாள். உடனே வாவா அக்காவை அழைத்து நிறுத்தி அமரவைத்து அவளது காலை மடிமேல் எடுத்து வைத்து தனது ஸ்வெட்டரால் துடைத்து ஷூ வை அணிவிக்கிறான்.

பள்ளி செல்லும் நஜியாங் மளிகை பொருள் வாங்கிய பிறகு அங்கே இருக்கும் ஷூ வை பார்த்து விலை கேட்கிறாள். ஆனால் அதற்கான காசு அவளிடம் இல்லை. அப்போது அங்கே வரும் புதிய டீச்சர் நீ அவளுக்கு அதனை வாங்கிக் கொடுக்கிறார். ஆசையாக நஜியாங் தம்பிக்கான புதிய ஷூ வோடு வீட்டுக்கு புறப்படுகிறாள்.


இங்கே தம்பி ஏற்கனவே அக்காவின் காற்றாடி ஒன்றை தவறுதலாக நசுக்கி விட்டுருப்பான். தற்போது அதுபோன்ற ஒரு காற்றாடியை செய்து கொண்டு அக்காவுக்காக காத்திருக்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதை மட்டுமாவது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

படத்தில் சிறுமியாக வரும் நஜியாங் அவ்வளவு அழகான தேர்ந்த நடிப்பை வழங்கி உள்ளார். சிறுவன் வாவா – வாக நடித்த பையனும் அற்புதமாக நடித்திருப்பார். 


முக்கியமாக படத்தின் இறுதிக் காட்சிகளில் இயக்குனர் அவனிடம் இருந்து எப்படி இப்படி ஒரு நடிப்பை கறந்திருப்பார் என்று வியந்து போனேன். ஆசிரியை நீ மற்றும் அம்மா இருவரும் அழகாக நடித்திருப்பார்கள்.

படம் எடுக்கப் பட்டிருக்கும் அந்த இடம் கொள்ளை அழகு. அவர்களது பாரம்பரிய வீடும் செம்மயாக இருக்கும். 


பாட்டிக்கு வைத்தியம் பார்க்க மருத்துவரை வற்புறுத்தி சிறுமி அழைத்து வரும் இடம் அவ்வளவு அழகு. அது போல சிறுவன் அவளுக்கு ஷூ அணிவித்துவிடும் இடமும் காட்சிக் கவிதை.


எண்ணிக்கை குறைவாக உள்ளது என பள்ளிகள் இணைப்பு நடைபெற்றால் இதுபோன்ற மலை கிராம குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடும். எனவே அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை உரிமையான கல்வியை அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதே அறம்!!


Youtube ல் இலவசமாக காணக்கிடைக்கிறது(ஆங்கில சப்டைட்டில் உடன்) மொத்த படத்திற்கும் இடையே ஒரு 50 விநாடிகள் தான் விளம்பரம் வந்தது. இணைப்பு முதல் கமெண்டில்.


https://youtu.be/OwyqYeiNbCY

Thursday, October 5, 2023

மேக்நாட் சாகா – புரட்சிகர விஞ்ஞானி- நூல் விமர்சனம்

 இன்று மேக்நாத் சாகா அவர்களின் பிறந்த நாள்.


அவரது வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த மீள்பதிவு:


நூல்- மேக்நாட் சாகா – புரட்சிகர விஞ்ஞானி



ஆசிரியர்-தேவிகாபுரம் சிவா


பாரதி புத்தகாலயம்


பள்ளிக்கு அன்பளிப்பாக வாங்கப்பட்ட ஒரு நூலை சுடச்சுட வாசிக்கும் சுகமே அலாதி!!


அதுவும் எனக்கு பிடித்த வானியல் & அணுக்கரு இயற்பியல் என்றால் கேட்கவா வேண்டும்.


வான் இயற்பியல் விஞ்ஞானி மேக்நாட் சாகா அவர்கள் தற்போதைய வங்க தேசத்தில் ஒரு ஒடுக்கப் பட்ட பிரிவில் பிறந்தவர்.


 அவர் பிறந்த காலத்தில் அது இந்தியா அல்லவா! சுதந்திரத்திற்கு பிறகு அவரும் அகதியாக மேற்கு வங்காளம் வந்தவர் தான்.


 அவர் விஞ்ஞானி மட்டுமல்ல, சுதந்திர போராட்டத்தில் தீரமுடன் பங்காற்றியவர், அறிவியல் புலத்தில் எதிரி நீச்சல் போட்டதோடு மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் ஆக்டிவாக இருந்துள்ளார். தீவிர பொதுவுடமை வாதி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் and of course பகுத்தறிவாளர்.


நேரு பிரதமராக இருந்த  முதல் நாடாளுமன்றத்தில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்று பல விஷயங்களுக்காக காத்திரமாக குரல் எழுப்பி உள்ளார்.


ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்து அபரிமிதமான அறிவாற்றல் உள்ளவர்கள் தங்களது திறமைக்கான அங்கீகாரத்தை பெற பெரும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.


 அம்பேத்கர் போலவே இவரும் பல உதாசீனங்கள் அவமானங்கள் இவற்றை கடந்து தான் தனது அயராத போராட்ட குணத்தால் அறிவியல் வானில் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.


பள்ளி காலத்திலேயே ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அதன் காரணமாகவே டிகிரி முடித்தவுடன் அரசு வேலைக்கு “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட“ என்று ஆகிவிட்டது.


அப்பறம் தான் பயன்பாட்டு கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற துறையில் ஆராய்ச்சி செய்ய முனைகிறார். இதைத் தான் தடைக்கல்லை படிக்கல்லாக ஆக்கி கொள்வது என்பதோ?!


வான் பொருட்களில் இருந்து வரும் நிறமாலை குறித்து மேலை நாடுகளில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வந்த காலகட்டம். ஆனால் அதில் தொடர்ந்து ஒரு தேக்க நிலை. அப்போது மேக்நாத் சாகாவின் “வெப்ப அயனியாக்க கோட்பாடு“ அவர்களது ஆய்வுகளை துரிதப் படுத்தியது. அவரது ஆய்வு வான் இயற்பியல் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான திருப்பு முனை என்ற அறிவியல் அறிஞர்களே ஒப்பக் கொள்கிறார்கள். 


விண்ணிலிருந்த கிடைக்கும் நிறமாலையைக் கொண்டே அந்த வான் பொருளின் வெப்பநிலை மற்றும் அங்கே பொதிந்து இருக்கும் தனிமங்களை அறியமுடியும் என்பது தான் அந்த திருப்பு முனை ஆய்வு.

சூரியனில் இருந்து பிறந்த புவியில் 90க்கு மேற்பட்ட தனிமங்கள் கண்டறியப் பட்ட நிலையில் 36 தனிமங்களின் நிறமாலைகள் தான் சூரிய ஒளியில் இருந்து பெற முடிகிறது. மற்றவை நிலை என்ன? என்கிற கேள்வி உருவான போது, ”அந்த தனிமங்களின் ஆற்றல் குறைவாக இருப்பதால் முழுமையாக அயனியாக்கம் அடைந்து இருக்கும். வெப்பம் குறைவான சூரிய புள்ளிகளை குறிவைத்து ஆய்வு செய்தால் அங்கே கிடைக்கலாம்” என்கிற அவருடைய அனுமானம் ஆய்வுகள் மூலமாக மெய்ப்பிக்கப் பட்டது.


சாகாவின் வெற்றி என்பது அவரது காலம்வரை தனித்தனியாக பிரிந்து கிடந்த வானியலையும் அணு இயற்பியலையும் எளிமையாக ஆனால் நிபுணத்துவத்தோடு இணைத்து வைத்ததில் அடங்கி இருக்கிறது.


இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரான சர்.சி.வி.ராமன் அவர்களுக்கு கிடைத்த ஆதரவோ, அங்கீகாரமோ அனுகூலமோ சிறிதளவு கூட சாகாவுக்கு கிடைக்க வில்லை. 


சாகா அவர்களின் கோட்பாட்டையும் சமன்பாட்டையும் அடிப்படையாக வைத்து அமெரிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வகங்களில் துள்ளிக் குதித்து குதூகலத்துடன் பல வானியலின் பல புதிய  கதவுகளை திறந்து கொண்டு சென்றனர்.


 ஆனால் சாகாவுக்கு இங்கே ஒரு ஆய்வகத்தை நிர்மானிக்க கூட நிதியுதவி கிடைக்கவில்லை. ஒரு எண்ணை பம்பு வாங்க கூட காசு கிடையாது என்று விட்டனர்.


 அவருக்கு துணையாக ஆய்வுகளின் பங்கு பெற ஆய்வு உதவியாளர் பதவி கூட மறுக்கப் பட்டது.


1924 ல் அமெரிக்காவில் உள்ள ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு ஆய்வகம் அமைக்க நிதி உதவி கேட்டு கடிதம் எழுதுகிறார். அங்கே அறிவியல் நிதி உதவிப் பிரிவுக்கு தலைவராக இருந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மில்லிகன் அவர்களுக்கும் “புறஊதாக் கதிர் குவார்ட்ஸ் நிறமாலை மானி“ வாங்க 2000 டாலர் நிதி உதவி கேட்டு எழுதியிருந்தார். அந்த சமயத்தில் அங்கே சுற்றுப் பயணத்தில் இருந்த சர்.சி.வி.ராமன் அவர்களிடம் மில்லிகன் இது குறித்து கேட்ட போது, “சாகா நல்ல கோட்பாட்டு இயற்பியலாளரே ஒழிய ஆராய்ச்சியாளர் அல்ல, மேலும் தனது ஆய்வு குறித்த நம்பகத்தன்மையை இந்தியாவில் ஏற்படுத்தி இருந்தால் இந்தியாவிற்கு வெளியே நிதி கோர அவசியம் ஏற்பட்டு இருக்காதே“ என்று கூறி விட்டதால் அந்த வாய்ப்பம் கிட்டவில்லை.


சர் சி.வி.ராமன் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப் பட்ட அதே 1930 ம் ஆண்டில் சாகாவின் பெயரும் பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. அது மட்டுமின்றி வெப்ப அயனியாக்க கோட்பாட்டிற்காக அவரது பெயர் நான்கு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருந்தது.


 சாகா மற்றும் சத்யேந்திரநாத் போஸ் இருவருமே நோபல் பரிசுக்கு முற்றிலும் தகுதியான விஞ்ஞானிகள் என்பது சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்துள்ளது.


 அறிவியலில் சாதனை புரிந்தால் மட்டும் போதாது, அதனை சரியாக 'மார்க்கெட்டிங்' செய்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும் போல.


1927 ல் சாகாவின் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக இவரை தேர்வு செய்ய பெரும் எதிர்ப்பு வந்த போதிலும் இவர் ராயல் சொசைட்டி உறுப்பினராக விஞ்ஞானிகளால் தேர்வு செய்யப் பட்டார்.


சாகா அவர்கள் தனது பார்வையை வான் இயற்பியலில் இருந்து அணுக்கரு இயற்பியல் பக்கம் திருப்பினார். அவர் பணிபுரிந்த அலகாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் “சைக்ளோட்ரான்“ என்கிற துகள் முடுக்கியை நிறுவ பல இடங்களில் உதவி கோரி முயற்சித்தார். ஒரு முறை அவ்வாறு உதவியும் கிடைத்துவிட்ட போதிலும் அதன் முக்கிய பாகங்களில் ஒன்றான வேக்வம் பம்ப் கொண்டு வரப்பட்ட கப்பல் இரண்டாம் உலகப் போரில் தாக்கப் பட்டது.


 அவர் 1956 ல் இறக்கும் வரையில் சைக்ளோட்ரான் கனவு மெய்படவே இல்லை.


1945-46 களில் சாகா அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மான்ஹாட்டன் புராஜக்ட் என்னும் அணுகுண்டு தயாரிப்பு ஆராய்ச்சி ரகசியமாக பல ஆய்வகங்களில் நடைபெற்று வந்தது. சாகா அவர்களோ அதே துறை நிபுணர் என்பதால் அது சார்ந்த உரையாடல்களை செல்லும் இடங்களில் எல்லாம் நிகழ்த்தினார். அதனால் FBI ன் விசாரணைக்கு ஆளானார். அவருடன் விசாரித்த பிறகு அவருக்கு அணு ஆயுத திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே ஒரு மாத்திரை சைஸ் உள்ள யுரேனியத்தில் இருந்து பல டன் கணக்கிலான நிலக்கறிக்கு இணையான சக்தியை பெற முடியும் என்பதை அனுமானித்து கூறியிருந்தார்.


சுதந்திரத்திற்கு பிறகு அணு இயற்பியல் குறித்து ஆய்வு மையம் அமைக்கவும் அந்த துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் நேருவுக்கு கருத்துருக்கள் அனுப்பினார். ஆனால் நேரு பாபா தலைமையில் அணுசக்தி கழகத்தை மும்பையில் துவங்க ஆதரவளித்தார். 


இந்தியாவின் முதலாவது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று வெற்றியும் பெற்று பாராளுமன்றத்தில் அறிவியல் சார்ந்த பல விவாதங்களை முன்னெடுத்தார். அவர் தொடர்ந்து முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிச ஆதரவு நிலைப்பாட்டினை கொண்டிருந்தார்.


இந்த நூலில் இருந்து நான் சிறு பகுதியை தான் கூறியுள்ளேன். ஆனால் நூலில் இன்னும் சுவாரசியமான பல பகுதிகள் உள்ளன.

Tuesday, October 3, 2023

இயற்பியல் துறையில் நோபல் பரிசு எதைப்பற்றிய ஆய்வுக்கு கொடுத்துள்ளனர் தெரியுமா?!


 


செந்தில் ஒரு படத்தில் ஊரில் உள்ள அனைவரிடமும் அந்த மலையை தூக்க போகிறேன் என்று காசு வசூல் செய்து விடுவார், மலையை தூக்க போகும் அன்று தெளிவாக "அந்த மலையை தூக்கி என் கைகளில் வையுங்கள் நான் தூக்குகிறேன்" என்று டபாய்ப்பார்.  அதாவது மலையை தூக்கும் அளவுக்கு கருவி நம்மிடம் இல்லை என்பது அவருக்கு தெரியும்


 அறிவியல் ஆராய்ச்சியை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் ஆய்வு கருவிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு புதிய ஆய்வு கருவிகள் நம் கைக்கு கிடைக்கும் போதெல்லாம் அதை சார்ந்த பல அறிவியல் விடுகதைகளுக்கு விடைகள் கிடைக்கின்றன.


19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நம்ம விஞ்ஞானிகள் கையில் மின்சாரத்தை கடத்தும்  வெற்றிடக் குழாய்   கிடைத்த உடன் ஆளாளுக்கு அதை வைத்துக் கொண்டு பல ஆய்வுகளை செய்து எலக்ட்ரான், நியூட்ரானின், உட்கருவின் இருப்பிடம் , எக்ஸ் கதிர்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.


மேலும் பிளக்கவே முடியாது என்று கருதப்பட்ட அணுவை பிளந்து கொண்டு சென்று உள்ளே என்ன இருக்கிறது என்று உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.


 ஆக ஆய்வு கருவிகளின் கண்டுபிடிப்புகள் என்பது  அறிவியல் உலகம் முன்னோக்கி பாய்ந்து செல்ல போடப்படும் ராஜபாட்டை.


  கைக்கு அடக்கமான பொருட்களையோ விஷயங்களையோ ஆய்வு செய்ய நமக்கு சுலபமாக ஆய்வு கருவிகள் கிட்டிவிடும். அதுவே கற்பனைக்கு எட்டாத பெரிய அளவில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்வதும் அல்லது நானோ ஸ்கேல் அளவில் இருக்கும் சின்னஞ்சிறு துகள்களை ஆய்வு செய்வதும் நமக்கு சவாலாக இருப்பதற்கு காரணம் அதற்கு உரிய கருவிகள் நம்மிடம் இல்லாததுதான்.


 பிரிக்கவே முடியாது என்று இருந்த அணுவை பிளந்தாயிற்று. உள்ளே சென்று எலக்ட்ரான்களை கண்டு கைகுலுக்கி சிறிது நேரம் அளவளாவி விட்டு வரலாம் என்று பார்த்தால் எலக்ட்ரான்களோ வடிவேல் பட காமெடியில் வரும் "வாம்மா மின்னல்" என்பது போல சரட்டு சரட்டு என்று தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன .


ஆக அவ்வளவு வேகமாக செல்லும் எலக்ட்ரானை அதன் இயக்கங்களை கண்டு ஆய்வு செய்ய மிக மிக நுண்ணிய நேர இடைவெளியில் தோன்றி மறையும் ஒளித்துடிப்பு தேவை.  அதாவது ஆட்டோ செகண்ட் துல்லியமான அளவில் துடிக்கும் ஒளி துடிப்பு தேவைப்படுகிறது.


மைக்ரோ செகண்ட், நானோ செகண்ட் கூட தெரியும், அது என்ன ஆட்டோ செகண்ட்?!!


 அதாவது ஒரு வினாடியை 100 கோடியே 100 கோடியாக பிரித்தால்  கிடைப்பது. அதாவது 1/10^-18 விநாடி. 




நுண்ணிய  ஒளித்துடிப்பை உருவாக்குவதில் உலகம் முழுவதும் உள்ள இயற்பியலார்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த வண்ணம் இருக்கின்றனர்.  இந்த ஆட்டோ செகண்ட் ஒளித்துடிப்புக்கு முன்பு 62ஃபெம்டோ செகண்ட் துல்லியமான ஒளி துடிப்பே  கண்டுபிடிக்க ப்பட்டிருந்தது.

1 ஃபெம்டோ செகண்ட் என்பது  ஆயிரம் ஆட்டோ செகண்ட்ஸ்.


 செகண்டுக்கு கீழே இறங்கி ஆட்டோ செகண்ட் துல்லியத்தில் ஒரு ஒளி துடிப்பை உருவாக்குவதன் மூலமாக அணுக்கருவை சுற்றி வரும் எலக்ட்ரான்களின் பாதை அதன் சுழற்சி வேகம் குறிப்பிட்ட நேரத்தில் அதன் இருப்பிடம் போன்ற பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும் என்று அறிவியல் உலகம் நம்புகிறது.


 இத்தகைய மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வினை கண்டறிந்த விஞ்ஞானிகள் மூவருக்கு தான் இந்த ஆண்டு இயற்பியல துறையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களின் இந்த கண்டுபிடிப்புகளின் வாயிலாக வேதிவினை நடக்கும் பொழுது எலக்ட்ரான்களுக்கு இடையே எந்த மாதிரியான உறவுகள் ஏற்படுகிறது என்பதை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இது உயிரியல் துறையிலும் கூட ஏராளமான புதிய திறப்புகளை ஏற்படுத்தும் என்றால் மிகை இல்லை

Thursday, September 28, 2023

நீதியரசர் சந்துரு கமிட்டிக்கு என்னுடைய பரிந்துரைகள்!!

 நீதியரசர் சந்துரு கமிட்டிக்கு என்னுடைய  பரிந்துரைகள்!!


சமூக நீதி குறித்த புரிதல் மாணவர்களுக்கு இல்லாமல் இருந்தால் வியப்பில்லை. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கே இல்லாமல் இருக்கிறது. 

எனவே சமூக நீதி, கலாச்சார பாகுபாடுகளை மதித்தல் போன்ற விஷயங்களில் ஆசிரியர்களுக்கே விழிப்புணர்வு தேவையாக உள்ளது.  ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சாதி அடிப்படையிலான குழுக்களாக செயல்படுவது, சாதி அடிப்படையில் ஓய்வறையை பகிர்வது  (உதாரணமாக அறிவியல் ஆசிரியர்கள் ஆய்வகத்தை ஓய்வறையாக பயன்படுத்தினால் தனது இனம் சார்ந்தோரை மட்டும் அங்கே நிரந்தரமாக அனுமதிப்பது)


இட ஒதுக்கீடு பற்றிய புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது நல்லது. சமூகத்தில் பெரும்பாலான இடைசாதியினர் (MBC & BC வகையறா) இட ஒதுக்கீட்டில் பெருவாரியான விகிதாச்சாரத்தை பயன்படுத்தி பயன் அடைந்தாலும் இடஒதுக்கீடு சார்ந்த விஷயங்களில் பட்டியல் இனத்தாரை குற்றவாளிகளாக நிறுத்துகின்றனர். 

அல்லது அவ்வாறு பேசப்படும் இடங்களில் கள்ள மௌனத்தோடு வாளாவிருந்து விடுகிறார்கள். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதை கற்றுத் தரும் பள்ளிகளில் சாதிச் சான்றினை கேட்கிறார்கள் – என்பது போன்ற செய்திகள் திட்டமிட்டு பரப்ப படுகிறது. 


முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏன் அவசியம், அதிகாரப் பரவலாக்கத்தில் இட ஒதுக்கீட்டின் பங்கு என்ன என்பது பற்றி பெரும்பாலான ஆசிரியர்களுக்கே சரியான புரிதல் இருப்பதில்லை.  எனவே எனது முதல் இரண்டு பரிந்துரைகளிளும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிருத்துகிறேன்.


பள்ளிகளில் கலை இலக்கிய போட்டிகள் வருடம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. சமூக நல்லிணக்கத்தை கருப்பொருளாக கொண்ட பல்வகைப் போட்டிகளை பள்ளி தோறும் நடத்த ஆவண செய்ய வேண்டும். பள்ளி அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க நிதியுதவி அளிக்கப் பட வேண்டும்.

UBUNTUISM  என்ற கருத்தாக்கத்தை வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளில் முன்னிருத்த வேண்டும். 


(UBUNTUISM ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றிருந்த ஒரு மானுடவியல் ஆய்வாளர் அங்கிருந்த பழங்குடி சிறுவர்களுக்கு முன்னால் சுவையான இனிப்புகள் நிறைந்த கூடையை வைத்து அவர்களுக்கு பந்தயம் வைத்துள்ளார். ”துவக்க கோட்டில் இருந்து யார் வேகமாக ஓடிவந்து கூடையை முதலில் தொடுகிறார்களோ அவர்களுக்கே கூடையில் உள்ள அனைத்து இனிப்புகளும் சொந்தம்” என்று கூறியுள்ளார். ஆனால் சிறுவர்கள் அனைவரும் கைகோர்த்தபடி ஒன்றாக ஓடி வந்து இனிப்பை எடுத்து சமமாக பகிர்ந்து உண்டனராம். அனைவரையும் அரவணைத்து இணைந்து முன்னேறும் இந்த கோட்பாடு UBUNTUISM எனப்படுகிறது.) 


வகுப்பறைகளில் மாணவர்கள் குழுவாக செய்யும் செயல்பாடுகள், தாங்களே கற்கும் செயல்பாடுகள், Team Project  போன்ற அனைத்திலும் அனைத்து இன மாணவர்களும் இணைந்த குழுவை ஏற்படுத்தித் தர வேண்டும்.  குழுவில் உள்ள கடைசி மாணவரையும் அரவணைத்து செல்ல சொல்லித் தர வேண்டும்.


“Remembering the Titans” என்கிற ஆங்கிலப் படத்தில் கருப்பின மாணவர்களும் வெள்ளையின மாணவர்களும் கலந்த ஒரு அணியை கட்டமைத்து அவர்களுக்குள் ஒரு உணர்வு பூர்வமான ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி நாட்டிலேயே வெற்றிகரமான அணியாக உருவாக்கி சாதிப்பார் அந்த அணியின் பயிற்சியாளர். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்ட திரைப்படமாகும்.


விளையாட்டினைப் போல மாணவர்களை ஒருமித்த குழுவாக உணர்வுப்பூர்வமாக இணைக்கும் விஷயம் வேறில்லை. எனவே பள்ளிகளில் விளையாட்டிற்கு போதுமான முக்கியத்துவம் வழங்கி பள்ளி அளவிலான பல்வகை விளையாட்டு அணிகளை உருவாக்க வேண்டும். அணியில் அனைத்து சமூக மாணவர்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


சமய மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மதிக்கும் பக்குவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நீதி போதனை வகுப்புகளிலோ அல்லது மொழிப்பாட வகுப்புகளிலோ போதனை செய்ய ஆசிரியர்களை வலியுறுத்துவதோடு அது சார்ந்த கற்பித்தல் கையேடுகளைக் கூட வழங்கலாம்.  சமூக நல்லிணக்க நட்பினை ஏற்படுத்திக் கொள்ள மாணவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.


”சமூக நல்லிணக்க சிற்றுலா” கல்லூரி படிக்கும் காலங்களில் இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருமுறை சென்று விருந்துண்டு வருவார்கள். அது போல வகுப்பில் உள்ள அனைத்து சமூக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஒவ்வொரு நாள் ( ஒரு தெருவில் 4 மாணவர்கள் இருந்தால் அவர்கள் அனைவர் வீட்டிற்கும் ஒரே நாள்) சென்று பார்த்து சிற்றுண்டி சாப்பிட்டு வருதலை ஒரு செயல்பாடாக நடத்தலாம். ஆசிரியர்கள் மூலமாக ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் சிற்றுண்டி செலவினை பள்ளியே ஏற்கத்தக்க வகையில் நிதியுதவியும் செய்யலாம்.


பள்ளி நூலகங்களில் சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் சிறுகதை நூல்களை பெருமளவு வைக்க வேண்டும். குறிப்பாக அந்த நூல்களை குறிவைத்து நூல் திறனாய்வு போட்டிகளை நடத்தலாம்.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...