Friday, July 31, 2020

இந்தியக் கல்வியின் இருண்ட காலம்


புத்தகம் - இந்தியக் கல்வியின் இருண்ட காலம்

NEP ஐ ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து கல்வித்துறையில் பெரும் ஆளுமைகள் எழுதி பல்வேறு அச்சு ஊடகங்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
விலை – ரூ.80
     பாஜக கூடாரத்துக்குள் துண்டு போடுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கும் போது நடிகை குஷ்பு புதியக் கல்வி ஆதரவு நிலைப்பாடு என்கிற துண்டு போட்டிருக்கிறார். நடிகர் கமலஹாசன் அவர்கள் தேர்தல் சமயத்தில் நீட்டுக்காக டார்ச்லைட்ட எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்செறிஞ்சார் ஆனா இப்போ முழுவதும் தேர்வுகளாலும் நுழைவுத்தேர்வுகளாலும் நிரம்பிய புதியக் கல்விக் கொள்கையை ஆதரிக்கிறார். காரணம் உள்ளே என்ன இருக்கு அதன் பின் விளைவுகள் என்ன என்கிற ஆழமான புரிதல் இல்லாதது தான். (அவங்களும் புதியக் கல்விக் கொள்கை சம்மந்தமா சுருக்கமா போடாம ஒரு 400 பக்கத்திற்கு போட்டு வச்சா எப்படி படிப்பது?)
     அதனாலதான் கல்வித்துறை ஆளுமைகளின் விரிவான அலசல்களை படித்தீர்கள் என்றால் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அனைவருக்கும் ஏற்படும். இந்த புத்தகம் அதற்கு ஒரு நல்ல வழிகாட்டி நூலாக அமையும்.
     சரி புத்தகத்திற்குள் வருவோம்.
தொகுப்பாசிரியர் பேராசிரியர் நா.மணி அவர்களின் தொகுப்புரையில் “உலக முதலாளித்துவ நலன்களும் இந்துத்துவ ஆதிக்க நலன்களும் இணையும் புள்ளியாக உலகமயமாக்கல் தனியார்மயம் தாராளமயமாக்கல் அமைந்துள்ளது” என்கிறார். அந்த நலனைப் பேணவேண்டியே இந்த கல்வித்துறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர பாஜக துடிக்கிறது என்று ஆரம்பிக்கிறார்.
புத்தகம் தோழர் ச.மாடசாமி அவர்களின் “பாலகர்கள்!! பத்திரம் இந்தப் பூனையை நம்பவா?” என்றக் கூர்மையான விமர்சனக் கட்டுரையில் ஆரம்பிக்கிறது. மூன்று வயது முதலே மூன்று மொழி என்கிற விஷயத்தில் ”சமஸ்கிருதத்திற்கு கதாநாயக அந்தஸ்து மற்ற மொழிகள் துணைப்பாத்திரங்கள்” என்று தோலுரிக்கிறார். அப்புறம் இந்தியாவில் 45 விழுக்காட்டினர் பேசும் மொழி இந்தி என்று கதைக் கட்டுகிறார்கள். ஆனால் உண்மைநிலவரம் 25 விழுக்காடு என்று இந்து தமிழ் பத்திரிக்கையை மேற்கோள் காட்டுகிறார். ஏற்கனவே தோழரின் ஒரு புத்தகத்தில் பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளுக்கு சொல்ல ஏற்றவை தானா? என்ற வினாவை படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையில் “பொதுவாக யாரை விலக்குவது என்பது தான் பழைய சமஸ்கிருத கதைகளின் மையம்” என்று அவர்களின் Exclusion பாலிசியை கூறுகிறார். நிச்சயமாக நாம் படித்து உண்மைநிலையை புரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.
அடுத்ததாக ஆர்.ராமானுஜம் என்பவர் எழுதிய கட்டுரையில் வரவேற்கும் அம்சங்கள் என்று தரமற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை களைதல் என்று ஆரம்பிக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு வரையில் இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் ஆமோதிக்கிறார். வரவேற்று எட்டு பாய்ண்ட்டுகள் எழுதிய அவர் எதிர்த்து பத்துப் பாய்ண்ட்டுகள் எழுதியுள்ளார். இறுதியில் ஒ “இந்த வரைவுக் கொள்கை செவ்வாய்க் கிரகத்தில் அமைந்திருக்க கூடிய ஒரு நாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றா?“ என்று இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீது விழுந்த அடி என்று முடிக்கிறார்.

மூத்த கல்வியாளரான சு.சீ.இராஜகோபாலன் அவர்களது சுருக்கமான கட்டுரையில் “ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக் கூடையில் வீசுவதே நமது கடமை” என்று முடிக்கிறார்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் விரிவான நேர்காணலில் மொழித் திணிப்புகள் பற்றி ஆழமாக உரையாடி இருக்கிறார். “அருகமைப் பள்ளி அமைப்பில் தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி முறைமை மூலமாக கல்வி வழங்கப்படுவது தான் மெய்யான கல்வி உரிமை” என்கிறார்.
ஆயிஷா நடராசன் அவர்களின் கட்டுரையில் “சாதாரண மக்களிடமிருந்தும் உழைப்பாளி மக்களிடமிருந்தும் கல்வியை எவ்வளவுக்கெவ்வளவு விலகி இருக்குமாறு செய்யலாம் என்று திட்டமிடுவதே நிலப்பிரபுத்துவ அமைப்பின் கல்விக் கொள்கை“ என்கிற லெனின் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி சிம்பிளாக விளங்க வைக்கும் அவரது கட்டுரை இந்தியக் கல்வி முறை கடந்து வந்த பாதைகளை எடுத்துக் கூறி இந்தக் கல்விக் கொள்கையின் தன்மைகளை கேள்வி பதில் வடிவில் தெளிவாக அலசியுள்ளது.
உயர்கல்வி தொடர்பான கேடுவிளைவிக்கும் மாற்றங்களை ஆதாரங்களோடு சாடும் பேராசிரியர் ப.சிவக்குமார் அவர்கள் “அர்த்த சாஸ்திரமும் மனுதர்மமும் ஒரு கையில் கார்பரேட் வணிகத்துக்கும், Artificial Intelligence  க்கும் சேவை செய்யும் நிதி ஆயோக் மற்றொரு கையில். இவற்றால் பின்னிப் பிணைந்த  சமூகத்தை அமைப்பதே அவர்கள் கொள்கை” என்று முத்தாய்ப்பு வைத்து முடிக்கிறார்.
மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் தனது கட்டுரையில் குழந்தைகள் தங்கள் ஆற்றல் மிகு பருவத்திலேயே பன்மொழிக் கற்க வேண்டும் என்பது எவ்வாறு முரண்பாடானது என்று உண்மைத் தரவுகளின் வழி சாடுகிறார்.
தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் இரா.முரளி அவர்கள் ”ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி…” என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் உயர்கல்வி குறித்த பரிந்துரைகளை நுணுக்கமாக ஆராய்ந்து ராவாக இறங்கி அடிக்கிறார்.
கலகல வகுப்பறை சிவா அவர்களின் கட்டுரையில் “முன்னேறத் துடிக்கும் ஒடுக்கப்பட்டவர்களை பல்வேறு நிலைகளில் கல்வியில் இருந்தே விரட்ட முயலும் சதித்திட்ட வரைவே இஃது” என்கிறார்.
இவையன்றி இன்னும் சில ஆளுமைகளின் கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஆக, இந்தப் புத்தகத்தை வாசித்தோம் என்றால் எதற்காக புதியக் கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதை ஆழமாக புரிந்து கொண்டு தீவிரமாக எதிர்க்கலாம்.

வாசிப்பு 2.0 UPGRADED


வாசிப்பு 2.0 UPGRADED

     இதற்கு முன்பாக வாசிப்போம் வாருங்கள் என்கிற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இதனை வைத்துக் கொள்ளலாம். இல்லையானாலும் பாதகமில்லை.
     தகவல் தொழில்நுட்ப புரட்சியானது பல விஷயங்களைக் காணாமல் போகச் செய்துவிட்டது. கேமரா, டேப் ரிக்கார்டர் அல்லது எம்பி3 பிளேயர் அல்லது ஐபாட், கால்குலேட்டர், அத்தாம்பெரிய தலையணை சைஸ் டிக்ஷ்னரி, போட்டோ பிரிண்ட் கடை, ஊரில் உள்ள இதர பல கடைகள், வீடியோ கேம் மற்றும் இறுதியாக அச்சுப் புத்தகங்களின் உபயோகம். எல்லாமே கையடக்க மொபைலுக்குள் வந்துவிட்டதால் நாம் இப்போது குனிந்த தலை நிமிராமல் நடக்கப் பழகிவிட்டோம். தோண்டத் தோண்ட ஏதேனும் கிடைக்கும் தங்கச் சுரங்கமாகவே மாறிவிட்டது அந்த சின்னஞ்சிறு மொபைல்.
     2004 ம் வருடம் நான் நோக்கியா 3315 வாங்கிய போது ஏர்செல் காரன் மெசேஜ் ஃப்ரீ என்று வைத்திருந்தான். அப்போதிலிருந்தே எதாவது ஜோக் தத்துவங்களை பகிர்ந்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது. பிறகு சாம்சங் காரன் 1.2 எம்பி கேமரா மொபைல் போனை வாங்க சொத்தில் பாதியை எழுதிக் கேட்டான். அப்போதுதான் சைனா செட் கொரியன் செட் எல்லாம் உள்ளே வந்து சாமானியனும் கலர் போன் கேமரா போன் வாங்கத்தக்க விலையில் கொடுக்க ஆரம்பித்தான். அதன் பிறகு மெல்ல ஆண்டிராய்டு மொபைல் காலம் தொடங்கியது. நான் முதன் முதலில் சோனி ஆண்டிராய்ட் போன் 2011 ல் தான் வாங்கினேன். அப்போது வாட்சாப் என்கிற ஒரு செயலியே இருப்பது தெரியாமல் ஒரு ஆறு மாதங்களை வீணடித்திருந்தேன்.
2008ல் கம்ப்யுட்டர் வாங்கிய உடனேயே ஃபேஸ்புக் கணக்கு துவங்கிவிட்டேன். NHM Unicode Writer செயலி வந்த பின்பு தான் தமிழில் முகநூலில் எழுத வாய்த்தது. அதற்கு முன்பே பள்ளியில் இருந்த கணினியில் முயன்று தவறிக் கற்றல் முறையில் “பாமினி“ துணையுடன் தமிழில் தட்டச்சப் பழகியிருந்தேன். (ஆங்கில தட்டச்சு கல்லூரி காலத்தில் தனியாக கற்றுக் கொண்டது தான் சுலப டைப்பிங் கைகூடக் காரணம்) இவ்வாறாக தகவல் தொழில் நுட்ப புரட்சி மெல்ல மெல்ல என்னையும் ஆட்கொண்டது. ஊரே ஆண்டிராய்டு ப்ளாட்ஃபார்ம் பயன்படுத்தும் வேளையில் நான் விண்டோஸோடு தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்த காரணத்தினால் உலகின் நம்பர் 1 மொபைல் நிறுவனமான நோக்கியாவே காணாமல் போனது. சோ காலத்துக்கேற்றபடி அப்கிரேட் செய்து கொள்ளவேண்டியது கட்டாயம். இல்லையெனில் வங்கியில் படித்தவர்களிடம் பாரம் நிரப்பக் கெஞ்சுபவர்கள் போல நாமும் சிறு சிறு வேலைகளுக்கு கூட பிறரை சார்ந்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டு விடும்.
”யோவ் கொஞ்சம் மேலப் பாருய்யா, தலைப்பு என்ன போட்டுருக்கு நீ என்ன சொல்ற” என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. அங்கன தான் வரேன் இருங்க.
இப்படியாக தகவல் தொழில் நுட்ப புரட்சி உச்சத்தை எட்டி பரவ ஆரம்பித்த 2012 ம் ஆண்டுகளில் இருந்து நிறைய மாற்றங்கள். அது நமது வாசிப்பிலும் வந்து விட்டது.
அதுவரை ஒரு முனை வாசிப்பாக இருந்தது அதற்கு பின்பு இன்டராக்டிவாக ஆனது. ஆமாம், வாட்சாப் மற்றும் முகநூலில் வாசித்தவுடன் சூடாக பதிலடி கொடுக்க முடிந்தது. அதற்கு முன்பு வாசகர் கடிதம் எழுதி அதற்கு ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணி அது போய் சேர்ந்து என நினைக்கும் போதே கொட்டாவி வருகிறது அல்லவா? மேலும் நாமும் எதையாவது எழுதி நமக்கு வாய்த்த நண்பர்களை வாசிக்க வைப்பதும் எளிதாக கை கூடியதால் எழுதுதல் வாசித்தல் என்று கொஞ்சம் பரபரப்பானது.
இன்டராக்டிவ் வாசிப்பில் அனுகூலம் உடனடி ஃபீட்பேக் என்றேன் அல்லவா? அங்கேதான் குழாயடி சண்டையில் ஆரம்பித்து நேரிலே போய் வெட்டுக்குத்து என்று நீண்டு அவதூறு வழக்குகள் போடும் அளவுக்கு விபரீதமாக வளந்து கெடக்கு.
     உங்க கருத்துக்கு உடனடி பதிலாக ஆமாம், இல்லை என்று சுரத்தில்லாமல் பதில் தருபவர் சாதாரண வாசகர். அதுவே கமெண்ட் செக்ஷனில் வந்து துணைத்தாளெல்லாம் வாங்கி எழுதி தள்ளுபவர் லெஜென்ட் வாசகர். பதில் ஏதும் கைவசம் இல்லாத கையறு நிலையில் கெட்டவார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடுபவர் “ஆர்டினரி சங்கி” வாசகர் அதுவே ஆண்டி இண்டியன் என்கிற அர்த்தத்தில் திட்டினால் அவர் “அல்ட்ரா சங்கி” வாசகர் என தரநிர்ணயம் செய்து ஐஎஸ்ஓ சான்றிதழே வழங்கலாம்.
     என்னதான் கோபமூட்டினாலும் இந்தமாதிரியான உணர்வெழுச்சி மனதுக்கு சற்று போதையை தருகிறது. எனவே தான் மாசத்தில் முப்பதுநாளும் முகநூல் வாசலில் குத்தவச்சி உக்காந்து கெடக்கோம்.
     அப்புறம் இந்த வாட்சாப் செய்தி பரிமாற்றம் என்பது உண்மையிலேயே வேற லெவல்ங்க!! இந்த கொரோனாவ கூட வீடடங்கு, ஊரடங்குன்னு சொல்லி சமாளிக்க முடியுது ஆனா ஒரு வதந்திய ஏது வாட்சப்ல உலாவ விட்டுட்டீங்கன்னு வைங்க வாட்சாப் ஓனரே நினைத்தாலும் அதன் பரவலை கட்டுப்படுத்த இயலாது.
எந்த டெக்னாலஜி வந்தாலும் முதலில் இறங்கி கோல் போடுவதில் நம்ம சங்கிகளை அடிச்சிக்க முடியாது. ஆமாம், விண்வெளி, கோள்கள், நாசா விஞ்ஞானி, சேட்டிலைட் அப்புறம் எதாவது ஒரு கோயில் கோபுரம் கிடைச்சா போதும் அம்சமான ஒரு வதந்தி ரெடி. திருக்குறள்ல ரெண்டு வரி வாசிங்கப்பான்னு சொன்னா கேக்கமாட்டாய்ங்க, ஆனா இந்த வதந்திய முழுமூச்சா வாசிச்சி முடிச்சி இந்தப் பெருமையை உலகத்திற்கு அறிவிக்க வேண்டிய தார்மீக கடமையில் இருந்து கிஞ்சிற்றும் விலகக்கூடாது என்று ஒரு பத்து பேருக்காவது பரப்பி விட்டுத்தான் அடுத்த வேலைய பாக்க போவாய்ங்க.
சூரியனில் “ஓம்” என்ற ஓசை, ஆறுநாட்களுக்கு சூரியன் மறையாது, பத்து தலை கொண்ட பாம்பு, விண்கல் விழுவதால் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மொபைலை அணைத்து வைக்கவும், திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறளின் காப்பி (ஆனா எண்கள் எல்லாம் Times New Roman Font ல இருக்கும்), ஸ்கூல் வேன் ஆக்ஸிடென்ட், சுகர் மாத்திரையை தூக்கிப்போடுங்க இதச் சாப்பிடுங்க, அல்லது மென்னுச் சாப்பிடுங்க அல்லது எட்டு போடுங்க, இப்படி வாட்சாப் தேசம் ஒர வதந்திகளின் தேசமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்ற தகவல் கூட வாட்சப்பில் வந்த காரணத்தினால் காலையில கஷ்டப்பட்டு கண்விழிச்சி சூரியன் உதிக்கிறத பாத்து உறுதி செய்ய வேண்டியிருக்கு.
மேலே கூறியது யாவும் மூடநம்பிக்கை சார்ந்த வதந்திகள் என்றால் அரசியல் சார்ந்த வதந்திகள் ஒருபக்கம் வேகமாக திட்டமிட்டு பரப்பப் படுகின்றன.
இரண்டாயிரம் ரூபா நோட்டில் “சிப்“, மோடி ஒரு வீர்ர், தீரர் மற்றும் அசகாய சூரர் என்று மோடியை பிராண்ட் பொசிஷனிங் இன்னமும் செய்து கொண்டு தான் உள்ளனர். அப்புறம் அவருக்கு ஜால்ரா தட்டுவதற்கென்றே, கைத்தட்டினால் ஏற்படும் வைப் (வைப்ரேஷன்னு சொன்னா நீங்க வயசான ஆளு!! என்ன, ஒத்துக்கிறீங்களா?) கொரானாவை ஒழிக்கும், விளக்கேற்றினால் கொரானா எப்படியெல்லாம் துடிதுடித்து சாகிறது, அப்புறம் 700 கோடி உலக மக்கள் தொகையில் இருந்து இந்தியாவில் வாழும் ஒரு 800 கோடி பேருக்கு வங்கி கணக்கில் இருபதாயிரம் கோடி என்று மோடிக்கணக்கில் சாரி கோடிக் கணக்கில் அளந்து விடப்படும் செய்திகள் நமது வாசிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போகின்றதல்லவா?
ஏ.கே74, ஆமைக்கறி, இட்லிக்குள் சிக்கன், அரிசி ஏற்றிச் சென்ற கப்பலை சுட்டு பழக்கியது என்று புஹாபுஹா என்ற பின்னணி இசையுடன் கூடிய சீமானிய வதந்திகள் ஒரு புறம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன. அப்புறம் எப்படி நாம் சோஷியல் மீடியாவில் இருந்து நமது கண்களை பேப்பர் மீடியத்திற்கு கொண்டு வர இயலும்?
அப்புறம் இந்த மதவாதிகள் இருக்கிறார்கள் அல்லவா? முகநூலில் இருக்கும் 100 மதவாதிகளும் தன்னுடையது நீங்கலாக மீதி உள்ள 99 கடவுள்களையும் நிராகரிப்பதோடு நிந்திக்கிறார்கள். நாத்திகர்கள் இன்னும் ஒன்றைக் கூட்டி 100 கடவுள்களையும் நிராகரிக்கிறார்கள். இந்த சண்டையில் கடவுள்களின் வீர தீர பராக்கிரமம் என்று அவர்கள் நம்ம காதில் பூ அல்ல பூக்கூடையையே வைப்பது அக்கிரமம். மதவாதிகளில் சற்று மிதவாதிகள் சிலர் உண்டு. (எனது துணைவியார் அந்தவகையினர் தான்) அவர்கள் எதுக்கு வம்பு நாம எந்த சாமியவும் பழிக்கவும் வேணாம் பகைச்சுக்கவும் வேணாம். சாமி தானே பாவம், கழுத கும்புட்டுட்டு போவோம் னு 100 க்கு 102 சாமிய கும்பிடுவதும் அது சார்ந்த பலாபலன்களை பரப்பி தெய்வ கைங்கர்யம் செய்வதும்  சோஷியல் மீடியா வாசிப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அப்புறம் இந்த அரசியல் கட்சிகள் சண்டை படிப்பதற்கு ரம்மியமாக இருக்கும் (சொன்னா நம்புங்க பாஸ் இந்த ”ரம்மி”யமாக என்ற வார்த்தை ஆன்லைன் ரம்மி விளம்பரத்துக்காக வலிந்து திணிக்கப்பட்டது அல்ல). பிரதான அரசியல் கட்சிகளைப் பற்றி பிரச்சினை இல்லை பிரதான எதிரி யாரோ அவரை மட்டுமே இலக்காக வைத்து பங்கம் பண்ணுவார்கள். ஆனால் இந்த இதரக் கட்சிகள் பாடு திண்டாட்டம் தான். ஒரு ஆறு மாசத்திற்கு முன்பு எந்தக் கட்சியை கழுவி கழுவி ஊற்றினார்களோ அந்தக் கட்சியோடு கூட்டணி ஏற்பட்ட பின்பு நிலைப்பாட்டை நேரெதிராக மாற்றிக் கொண்டு எழுதுவார்கள். ஏற்கனவே கழுவி கழுவி ஊற்றப்பட்ட செய்தியை முகநூலில் இருந்து கழுவி கழுவி துடைத்து சுத்தமாக்க வேண்டும். மறதியாக பிரதானக்கட்சிகள் தங்களோடு கூட்டணியில் இருக்கும் கட்சியை கவனிக்காமல் வாயை விட்டுவிடுவார்கள். அப்புறம் அந்த சிறிய கட்சிகள் “தோழமைச் சுட்டுதல்” மூலமாகத்தான் தங்களது சுயமரியாதையை தக்க வைத்த அதே வேளையில் கூட்டணியின் ஒற்றுமையையும் கட்டிக் காக்க வேண்டி இருக்கும்.
இந்த வாட்சாப் குழுக்களின் தொல்லை பெருந்தொல்லை. அது ஒரு சுகமான சோகம், ஆசையான அவஸ்தை. அலுவலக ரீதியான வாட்சப் குழுக்கள் நமக்கு சாதகம் பண்ணுதோ இல்லையோ பாதகம் பண்ணுவதில் முன்னணியில் இருக்கிறது. “ஓடவும் முடிவதில்லை ஒளியவும் முடிவதில்லை“. அடுத்த முறை அரசியல் சட்டத்திருத்தம் செய்யும் போது வாட்சாப் குழுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ குட்மார்னிங் குட்நைட் சொல்வோரை நெட்ஒர்க் இல்லாத தீவுக்கு நாடு கடத்த வகை செய்ய வேண்டும். ஸ்ஸ்…அப்பா முடியல.
எந்த நிகழ்வாக இருந்தாலும் போட்டோ எவிடென்ஸ் குழுவில் போடச் சொல்லிக் கேக்குறாங்க வாஸ்தவம் தான். அதுக்காக கேலரில இருக்குற மொத்த போட்டோவையும் அள்ளி போட்டுவிடுவதா? ஒரு முறை ஒரே தலைமையாசிரியர் 46 போட்டோக்களை போட்டு சிஇஓ குழுவையே கிடுகிடுக்க வைத்தார்.
அப்புறம் இந்த நண்பர்கள் குருப் இருக்கே, நமக்கு சம்மந்தமே இல்லாத குருப்ல எல்லாம் கோத்துவிட்டுவிடுவார்கள். அந்த குழுவில் இருந்து வெளியே வருவதற்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். அதனாலேயே என்னுடைய எண்ணை குழுவில் தானாக இணைக்க இயலா வண்ணம் செட்டிங்சை மாத்தி வைத்திருக்கிறேன்.
ஃபேமிலி குருப் எப்போதும் பிறந்தநாள் கல்யாணநாள் காதுகுத்து நாள் என கனஜோராக போய்க்கொண்டு இருக்கும். அப்புறம் இந்த YouTube உபயத்தால் கற்றுக் கொண்ட மொத்த வித்தைகளையும் இறக்கி செய்த டிஷ்ஷை சூடு ஆறுவதற்குள் குரூப்பில் இறக்கி வைத்து தெறிக்க விடுவார்கள். பாத்தாலே குமட்டுற பல ஐட்டத்திற்கு கூட டம்மியாக ஒரு ”யும்மி” யை டைப் செய்ததை இப்போ நெனச்சாலும் அழுகாச்சியா வருது. மாசக்கடைசியில் மொத்தக் குடும்பத்துக்கும் சைவ உணவின் மேன்மையையும் உடல் நலத்தையும் பற்றி வகுப்பெடுத்து சில்லறையை சிதற விடாமல் கோவணத்தில் முடிந்து வைத்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கமகமவென்று காலை டிபனுக்கே கறிக்குழம்பை போட்டு அத்தனை திட்டத்துக்கும் வேட்டு வைத்து விடுவார்கள். அப்புறம் என்ன காட்ட வித்தாவது கறிக்கடைக்கு நடையைக் கட்ட வேண்டியது தான்.
ஆக, இவ்வளவு தூரம் இந்த சோஷியல் மீடியாக்கள் நம்மை பிசியாகவே வைத்திருக்கிற காரணத்தினால் என்னவெல்லாம் கெட்டுப் போச்சு தெரியுமா?
  • 1.   செய்தித்தாள்கள் விற்பனை எண்ணிக்கை மளமளவென சரிந்து விட்டது. ஒரு சமயத்தில் ஐம்பது லட்சம் பிரதிகள் எல்லாம் விற்ற நிறுவனங்கள் கூட இப்போது ஐந்து லட்சத்திற்கே திணறுகின்றன.
  • 2.   ஒரு காலத்தில் ஆறு லட்சம் பிரதிகள் விற்ற ஆனந்த விகடன் குமுதம் இதழ்கள் கூட ஒரு லட்சத்திற்கு கீழே இறங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன.
  • 3.   அச்சுப் புத்தக விற்பனையும் கணிசமாக குறைந்து விட்டது.
  • 4.   உண்மைச் செய்திகள் அருகி விட்டன.
  • 5.   கூகுளின் உபயத்தில் நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அந்த செய்தியே நம் கண்ணில் காட்டப் படுகிறது. நடுநிலையான கருத்துக்களோ செய்திகளோ புலப்படுவதில்லை.

”வன்புத்தகங்களின் காலம் வழக்கொழிந்து போய் மென்புத்தகங்களாம் மின்புத்தகங்களே எதிர்காலத்தில் கோலேச்சப் போகிறதா?” இப்போவே ரொம்ப லென்த்தா போயிடுச்சி அதனால இன்னொரு பகுதியில் இதைப்பற்றி பேசுவோம்.

Monday, July 27, 2020

வாசிப்போம் வாருங்கள்


வாசிப்போம் வாருங்கள்

“சித்தப்பா நீங்க பெருசு பெருசா எழுதுறீங்க“
“மாமா என்ன பக்கம் பக்கமா எழுதுறீங்க“
“சார், நீங்க நிறைய எழுதுறீங்க”
மேலே உள்ளவைகள் அனைத்தும் நான் காதுபடவே கேட்ட பாராட்டுகள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாளி. அவை அனைத்தும் அங்கலாய்ப்புகள். ’இவ்வளவு பெருசா எழுதுனா எப்படி வாசிப்பதாம்?’ என்பதன் இடக்கரடக்கல்.
நான்கு வரிகளுக்கு மேலே வாசிப்பதே இல்லை என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் இந்த மீம்ஸ் தலைமுறைகளை வாசிப்பை நோக்கித் திருப்புவது நமது கடமை. பேசுவதை நிறுத்தினால் ஒரு மொழி செத்துப் போகும் அல்லவா? அதுபோல வாசிப்பை நிறுத்தினால் அந்த மொழியின் இலக்கியங்கள் இறந்து போகாதா? மொழிசார்ந்த ஆக்குமைகள் அருகிவிடாதா? எனவே தான் இந்தக் கட்டுரை.
பாடப்புத்தகத்தை தாண்டி வாசிப்பு ஆர்வம் உங்களுக்கு துளிர்க்க வில்லை என்றால் உங்கள் ஆசிரியர்களோ பெற்றோரோ வாசிப்பு சுவையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வில்லை என்றுதான் அர்த்தம். எனவே பெற்றோரும் சரி முக்கியமாக ஆசிரியப் பெருமக்களும் சரி குழந்தைகளுக்க வாசிப்பு சுவையை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். மொழிவளமும் வார்த்தை வளமும் இருந்தால் பாடங்களை செய்தியாகவும் பொருளாகவும் உள்வாங்கி அவர்களது சொந்த நடையில் வெளிக்கொணர்ந்து விடுவார்கள். விருப்பம் இன்றி விழுங்கும் மாத்திரைகளைப் போல ஒவ்வொரு வார்த்தையாக விழுங்கி பரிச்சை பேப்பரில் வாந்தியெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. கற்றல் இனிமையாகவும் இயல்பாகவும் நிகழும்.
சரி நான் எப்போது வாசிப்பைத் தொடங்கினேன்? நான் வாசிப்பை எட்டு வயதில் துவங்கினேன். என்ன ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். நான் வாசிப்பை தொடங்கிய இடம் தினமலரின் வெள்ளிக் கிழமை இணைப்பாக அப்போது வந்து கொண்டு இருந்த சிறுவர் மலர். அதில் வரும் படக்கதைகள்தான் நான் முதலில் படித்த பாடம் சாராத விஷயம். எனது நண்பன் மணிவண்ணனுடைய தந்தை ஆசிரியர். அவர் தினமலர் ரெகுலராக வாங்குவார். வெள்ளிக் கிழமைதோறும் சிறுவர் மலரோடு வரும் மணிவண்ணனுக்காக ஆர்வத்தோடு காத்திருந்த நாட்கள் அவை.
நான்காம் வகுப்பு படித்தபோது அதே மணிவண்ணன் வீட்டின் முன்பு ஒரு பெட்டிக் கடை இருந்தது அங்கே 25 பைசா கொடுத்து ராணி காமிக்ஸ் புத்தகத்தை இரவல் வாங்கிச் சென்று படிக்கலாம். இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ் பாண்ட் 007, பூனைக்கண் மனிதம் மற்றும் கௌபாய் வகை படக்கதைகள் அப்போது என்னுடைய விருப்பத் தேர்வாக இருந்தது.
நான் எட்டாம் வகுப்பு படித்த போது எங்கள் ஊருக்கு பகுதிநேர கிராம நூலகம் வந்தது. அதில் படக்கதைகள் ஒன்று கூட இல்லை. படிக்காமல் கைகள் நடுங்க ஆரம்பித்ததால் மறுபடியும் அடுத்த நிலையில் நூலகத்தில் வெகு சொற்பமாகவே இருந்த ராஜேஷ்குமார், சுபா, தமிழ்வாணன் போன்றோரின் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் நாவல்கள் வாசித்து முடித்துவிட்டு ”மாவட்ட மைய நூலகத்தில் இருந்து புது புத்தகங்கள் எடுத்து வாங்கண்ணா” நூலகரைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டேன்.
இதற்கிடையில் வார இதழ்கள் மாத இதழ்கள் வாசிக்கும் பழக்கம் வந்தது. பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்த போது எங்கள் தமிழ் அய்யா(பெயர் ராஜரத்தினம் என நினைக்கிறேன்) ”எத்தனை பேர் இலக்கியங்கள் நாவல்கள் வாசித்து இருக்கிறீர்கள்?” என்றார். நாங்கள் ஒரு நான்கு பேர் கனகம்பீரமாக கையை உயர்த்திக் கொண்டு மற்ற மாணவர்களை சற்று ஏளனமாக “அற்ப பதர்களே” என்பது போல பார்த்தோம். என்ன நாவல்கள் என்றதும் நாங்கள் மேற்படி க்ரைம் நாவல் வகையறாக்களை கூறிய போது “அற்ப புழு“வைப் பார்ப்பது போல பார்த்து விட்டு அவர் சில பெயர்களை அறிமுகப்படுத்தினார். என்னதான் க்ரைம் நாவல் வகையறாக்களை இலக்கியங்கள் என்ற வரையறைக்குள் நுழைய விடாமல் இலக்கிய சுத்திகரிப்பாளர்கள் தடுத்தாலும் பதின்பருவத்தினரை வாசிப்பை நோக்கி இழுப்பது இந்த வகை நாவல்கள் தான். எனவே இலக்கியம் என்றால் அவையும் இலக்கியம்தான் என்பது தான் எனது எண்ணம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்த காலத்தில் கல்கியின் படைப்புகள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். செமஸ்டர் விடுமுறையில் சாப்பாட்டு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் நான் விடாமல் வாசிப்பதைப் பார்த்த என்னுடைய அம்மா, “தம்பி பெரிய பெரிய புத்தகமா படிக்கிறான், சீக்கிரம் வேலை வந்துடும் தானே?” என்று அப்பாவியாய் எனது அப்பாவிடம் கேட்க ,“அதெல்லாம் கதை புஸ்தகம்” என்றது இன்னமும் நினைவில் உள்ளது.
கொல்லிமலையில் ஹில்டேல் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த போது அங்கே இருந்த ஒரு கண்ணாடி போட்ட பீரோ நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்த உடன் கை நம நமவென அரிக்க ஆரம்பித்து விட்டது. உடனே சாவி வாங்கி அந்த பீரோவை குடைந்து ரக வாரியாக புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு ஒரு பத்து புத்தகங்களை கையோடு தங்கும் அறைக்கு எடுத்துச் சென்று விட்டேன். அப்போது தான் அறிவியல் கட்டுரையாளர் என்.ராமதுரை எனக்கு அப்பல்லோ மிஷன் சார்ந்த தொடர் வழியாக அறிமுகமானார்.
அரசு மேல்நிலைப் பள்ளி, உட்கோட்டையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு உட்கோட்டை கிராம நூலகத்தில் இருந்து நூல் தினமும் ஒன்றாக எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
”வாசிச்சேன் வாசிச்சேன்னு ரொம்ப பீத்திக்கிறியே அதனால ஒனக்கு பைசா பிரயோசனம் உண்டா?” என கேட்க நினைக்கும் உங்க மைண்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன்.
நான் ஆசிரியராக பணியேற்ற பின்பு பாடம் சாராத பல விஷயங்களை மாணவர்களுடன் உரையாடி கற்றலை மெருகேற்றவும் இனிமையாக்கவும் முடிந்தது. அதுவும் ஆங்கிலப் பாடங்கள் நடத்தும் போதெல்லாம் முன்னுரையிலேயே மூன்று நாட்கள் பெட்ஷீட் விரித்து படுத்து இருந்த நாட்கள் உண்டு. பேசப்பேச அவ்வளவு விஷயங்கள் கொட்டும். நான்டீட்டைல் கதைகளை டீட்டைலாக யாரும் நடத்தமாட்டார்கள். ஆனா நான் நடத்துவேன். முத்தலெட்சுமிரெட்டி பாடத்தை நடத்தும் போது பாலினசமத்துவம் பழங்கால பிற்போக்கான நடைமுறைகள் பற்றி பேசாமல் இருக்க இயலுமா? இந்திராகாந்தி பாடம் நடத்தும் போது வங்கிகளின் தேசியமயம், மன்னர் மாநியம் ஒழிப்பு என வார்த்தைகளாக கடந்து செல்லமுடியுமா? நிச்சயமாக சொல்வேன் வாசிப்பு என்னுடைய வகுப்பறைகளை வளமாக்கியது.
2018 ஆகஸ்ட் மாதம் தலைமையாசிரியராக பதவியேற்ற சிலநாட்களில் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் ஆண்டாய்வு நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் வந்தவுடன் வரவேற்று காலை கூடுகைக்கு முன்பு வரை மாணவர்களின் கல்வி பற்றி பேசிக் கொண்டு இருந்தாம். பெல் அடித்தவுடன் ”நிறைய வாசிப்பீங்க போலிருக்கு. நிறய விஷயம் சொல்றீங்க சார்” என்றபடி எழுந்தார். மாலை ஃபீட்பேக் கூட்டத்திலும் என்னையும் வாசிப்பையும் வெகுவாக பாராட்டினார். தலைமையாசிரியராக முதல் ஆய்வுக்கூட்டம் என்பதால் சற்று பதட்டமாகவே இருந்தேன். எதையும் திட்டமிட்டெல்லாம் பேசவில்லை. ஆனால் நம்முடைய  வாசிப்பு நமது உரையாடல்களைக் கூட வளமான(Resourceful) ஒன்றாக ஆக்கிவிடும் என்பதை அன்று உணர்ந்து மகிழ்ந்தேன்.
மற்றுமொரு நிகழ்வு. 2002 ல் வேலைக்கு வந்த புதிதில் புத்தகங்கள் மாற்றப்பட்டன. புதிய புத்தகங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. அங்கே தான் ஒரு குழப்பம் நடந்து போச்சு. திடீரென பயிற்சிக்கு நான்கு ஆசிரியர்களை மாட்ட அளவில் கேட்டிருக்கிறார்கள். உடனே அலுவலகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் புதிதாக பணியேற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து பயிற்சிக்கு வடலூர் வள்ளலார் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கே சென்று பார்த்தால் எல்லோரும் பழம் தின்று கொட்டைப் போட்ட மூத்த ஆசிரியர்கள். அப்புறம்தான் தெரிந்தது புதியப் பாடத்திட்டத்திற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சி அது என்பது. அந்த சமயத்தில் நாங்கள் பயிற்சி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் எங்களது தந்தை வயது உள்ளவர்கள். அந்த பயிற்சியில் அவர்களிடம் கணிதம் பேசினால் மாட்டிக் கொண்டு விடுவோம் என்பதால் பாடத்தை தாண்டி பல விஷயங்களைப் பேசிமுடித்து கொஞ்சமாக கணிதமும் பேசி தப்பித்தேன். வாசிப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் அது முடியுமா?
எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? – உங்களை வசீகரிக்கும் எதையும் வாசியுங்கள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள், விளையாட்டுக் கட்டுரைகள், பொது அறிவு, வரலாறு, தன்னம்பிக்கை, நகைச்சுவை, அரசியல் என எது பிடிக்குமோ வாசிக்க ஆரம்பித்து விடுங்கள். சும்மா மொபைல் போன் திரையை நொய்யி நொய்யின்னு நோண்டிக்கிட்டு விட்டேத்தியாக இருக்கும் நேரத்தில் நிச்சயமாக வெட்டியாகத்தான் இருப்போம். எனவே சிந்தனையை சற்று மடைமாற்ற புத்தகங்களை கையில் எடுங்கள். வீட்டில் புத்தகம் இல்லையா? நூலகத்தில் உறுப்பினர் ஆகுங்கள். 30 ரூபாய்தான். நண்பர்களோடு டீ குடிக்கும் செலவில் பாதி செலவுதான். ஒரு ஆண்டு முழுவதும் அங்கே உள்ள புத்தகங்களை இரவல் வாங்கி படிக்க இயலும். இல்ல நான் பொழுதுக்கும் மொபைல் திரையோடு குடியும் குடித்தனமுமாக இருந்து பழகிவிட்டேன் என்கிறீர்களா அப்படின்னா உங்கள் மொபைலில் கிண்டில் ஆப் டவுன்லோட் செய்யுங்கள். தினம்தோறும் நூறு தலைப்புகளில் தமிழ் புத்தகங்கள் மட்டுமே விளம்பரத்துக்காக இலவசமாக தரப்படுகிறது தரவிறக்கி படித்து மகிழுங்கள்.
”வாசிப்பின் பலன் உடனே கிடைக்குமா? வங்கிக்கணக்கில் பணம் ஏறுமா?“ என்றெல்லாம் கேட்காதீர்கள். வாசிப்பு என்பது ஒரு மரம் வைத்து நீர் வார்ப்பது மாதிரி அடுத்த நாள் காலையில் பழம் பறிக்க முயலவேண்டாம், ஆனால் குறுகிய காலத்திலேயே உங்களது மொழிவளம் சிறப்பாக வளர்ந்திருக்கும். Vocabulary எனப்படும் வார்த்தை வளம் கூடியிருக்கும். அது நமது எழுத்திலும் பேச்சிலும் எதிரொலிக்கும். வாசிப்பில் புகும் போதே இதைப் படித்து நான் ஐஏஎஸ் பரிச்சையில் பாஸாக வேண்டும், டி.ஆர்பி அல்லது டி.என்.பி.எஸ்.சி பரிச்சையில் வென்று அரசு வேலைக்கு போகவேண்டும் என்ற உள்நோக்கத் தோடு நுழைய வேண்டாம். எந்த எதிர்பார்ப்போ, முன்முடிவோ இன்றி வாசிப்பில் ”தொபுக்கட்டீர்” என்று குதித்து விடுங்கள். வாசிப்பை உணர்ந்து உள்வாங்கி என்ஜாய் பண்ணி செய்யுங்கள். நாளடைவில் மேற்சொன்ன அனைத்து விஷயங்களும் நடக்க வாசிப்பு நல்லதொரு காரணமாக ஆகியிருக்கும்.
போட்டித் தேர்வுக்கு படிக்கும் போது கூட வினா-விடை வடிவங்களில் இருக்கும் புத்தகங்கள் வாசிப்பது வீண்வேலை. சிலபஸ் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய சுவாரசியமாக எழுதப்பட்ட தொடர்பு நூல்களை வாசித்துப் பாருங்கள். பாடத்திட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் பின்புலத்தோடு உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்புறம் என்ன எப்படிக் கேட்டாலும் அந்தப் பகுதியில் வரும் வினாக்களுக்கு விடையளிக்க இயலும்.
எனவேதான் சொல்கிறேன் ”வாசிப்போம் வாருங்கள்; புத்தகங்களை நேசிப்போம் வாருங்கள்”


Sunday, July 26, 2020

சிலேட்டுக்குச்சி (கட்டுரைத் தொகுப்பு)


புத்தகம் – சிலேட்டுக்குச்சி (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர் – சக.முத்துக்கண்ணன்
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
விலை – 110

     நூலாசிரியர் சக.முத்தக்கண்ணன் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2020 ம் ஆண்டு விகடன் விருதுகள் பெற்ற பட்டாம் பூச்சிகள் என்கிற குழுவில் ஒருவராக இயங்கும் களப்பணியாளர். (பட்டாம் பூச்சிகள் குழு விடுமுறை நாட்களில் இணைந்து சென்று அரசுப் பள்ளிகளின் சுவர்களை வண்ணமயமாக மாற்றி பல அழகிய ஓவியங்கள் வரைவதை ஒரு சேவையாக தமிழகம் முழுவதும் செய்து வருகிறது.) முகநூலில் ஒரு முறை சக.முத்துக்கண்ணன் தனது மாணவர்களுக்கு தண்ணீர் பற்றிய பாடத்தை மாணவர்களின் அனுபவங்களில் இருந்து உள்வாங்கி அவர்களைக் கொண்டே பாடத்தை நிறைவு செய்த விஷயத்தை முகநூலில் சுவைபட பதிந்து இருந்தார். (அந்தக் கட்டுரை இந்தத் தொகுப்பில் இல்லை) பள்ளி விக்கிரமங்கலம் என்ற உடன் ஆர்வமாகி அவருக்கு நட்பழைப்பு விடுத்து இணைந்தேன். அந்தப் பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலருடன் ஆண்டாய்வுக்கு ஆசிரியர் குழுவோடு நான் சென்றிருந்த போது அவர்தம் பணியை பற்றி அருகிருந்து கேட்கவும் நல்வாய்ப்பு கிட்டியது. சரி இந்த நூலுக்கு வருவோம்.
     ”சிலேட்டுக்குச்சி” என்னை மிகவும் வசீகரித்த தலைப்பு. ஆமாம், சிறுவயதில் சிலேட்டுக் குச்சியை அவ்வப்போது கடித்து திண்ணும் பழக்கம் எனக்கு இருந்தது.  மனோஜ் என்கிற குறும்புக்கார சிறுவனில் ஆரம்பிக்கிறது கட்டுரை. ஒரு பையனுக்கு தண்டனை கொடுக்கும் போது சற்று ஓவர் டோஸ் ஆகிவிட்டால் ஆசிரியர்களுக்கு தூக்கம் தொலைந்து போகும் என்கிற நிதர்சனத்தை கூறும் நகைச்சுவையான கட்டுரை.
     ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் சூட்டும் மாணவர்கள் குறித்த கட்டுரையில், ஒரு கண்டிப்பான ஆசிரியருக்கு எல்லோரும் பெயர்வைக்க ஆலோசிக்கும் மாணவர்கள் குழுவில் இருக்கும் ஒருவன் ஆசிரியரின் ஈரமான உள்மனதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன். அவன் தனக்குப் பிடித்த திண்பண்டமான “தொக்குச்சிய்யம்“ என்கிற பெயரை அவருக்குச் சூட்டிவிடுவது நெஞ்சைத் தொடும் பதிவு.
           புத்தகம் முழுவதும் ஆங்காங்கே ”பன்னீர் சார், பன்னீர் சார்” (யாரு சார் அவரு?! பாக்கணும் போல உள்ளது!!.) மாணவர்களை அவ்வளவு அழகாக வழிநடத்தி இருக்கிறார். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானவராக இருந்திருக்கிறார். பசங்களோட எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்திருக்கிறது. வாசித்தபோது  “நான் இவரைப் போல ஒரு ஆசிரியராக இருந்திருக்கேனா?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
     பன்னீர் சாருக்கு அடுத்தது ராமரய்யா. குழந்தைகளோடு குழந்தையாக ஆகிவிடும் ஒரு ஆசிரியர். ”இந்த வயது பிள்ளைகள் தான் எனக்கானவர்கள். இவர்களோடு தான் எனது பணி” என்று பிடிவாதமாக பதவி உயர்வுகளை மறுத்து பணியாற்றுபவர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் முருகன் மற்றும் ராமரய்யா இணையைப் பற்றி படித்த போது சிலிர்த்துப் போனேன்.
     வயது வந்த பெண்பிள்ளைகள் இருக்கும் பள்ளிகளில் நிச்சயமாக கழிவறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். “சார் ஒண்ணுக்கு” என்ற கட்டுரை நகைச்சுவையாக ஆரம்பித்து சற்று அதிர்ச்சியாக பின்பு ஆறுதலாக முடியும் போது கழிவறை வசதி இல்லாத பள்ளிகள் மாணவியருக்கு எவ்வளவு பெரிய உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான அவஸ்தையை கொடுக்கின்றன என்று நமக்கு பொட்டில் அடித்தமாதிரி புரிய வைக்கிறது.
     ஆணுக்குள் ஒரு எக்ஸ் கட்டுரையில் அறிவியல் ரீதியான குரோமோசோம் இணைவில் தொடங்கி பாலினசமத்துவத்தை தொட்டுவிட்டு ஆணுக்குள் இருக்கும் பெண்மையை கூறி சிறப்பாக முடிக்கிறார்.
     வண்டி வண்டியாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கும் பள்ளிகள் மாணவர்களின் சுதந்திரத்தை எவ்வளவு மூர்க்கத்தனமாக நசுக்குகின்றன என்பதை சொல்லும் வீட்டுப்பாடம் கட்டுரை. காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் வினாத்தாளுக்கு விடை எழுதி வரவேண்டும் என்கிற சம்பிரதாயத்தை நான் பலமுறை என்னளவில் உடைத்திருக்கிறேன். எனக்கும் அதிக அளவிலான வீட்டுப் பாடங்கள் கொடுப்பதில் உடன்பாடில்லை. பயிற்சிக்காக சில கணக்குகள் மட்டும் வழங்குவது எனது வழக்கம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறேன் பேர்வழி என்று கோடை விடுமுறையை கொடுமையான விடுமுறையாக மாற்றும் பெற்றோரைப் பற்றி வரும் கடைசி கட்டுரையான “அவன விட்ருங்க பாஸ்” அருமை.
     முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று கடவுளுக்கு கடிதம். பெயர் கூற வேண்டாம் ஆனாலும் மனதில் உள்ளதை கொட்டிவிடுங்கள் என்று கூறிவிட்டோம் என்றால் மாணவர்களிடம் இருந்து எத்தனை எத்தனை உருக்கமான விஷயங்கள் மனத்தடைகளை தகர்த்து வெளியே வரும் என்பதை எங்கள் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூலமாக அறிந்து கொண்டேன். அதிலும் அப்பா அம்மா இல்லாத மாணவி ஒருத்தி கடினமான பல வேளைகளில் “நமக்கும் அப்பா அம்மா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்“ என்கிற சிந்தனை அடிக்கடி வந்து எனது படிப்பை கெடுக்கிறது சார் என்று எழுதியிருந்ததை படித்த போது அழுதே விட்டேன். ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையில் அந்த “தொண்ணச்சோறு“ (வழங்குபவர் வேண்டா வெறுப்பாக போடும் சோறு) என்ற வார்த்தையை பயன்படுத்திய இடம் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது. குடிகார அப்பாவுக்கு பயந்து இரவெல்லாம் அத்தை வீட்டில் தங்கி சாப்பிட்ட தொண்ணச்சோறு பற்றி படித்த போது குடிநோயாளிகள் எவ்வளவு தூரம் பொறுப்பற்று தங்கள் குடும்பத்தை நிர்கதியாக்குகின்றனர் என்பதை புரிய வைக்கிறது.
     Born with the Silver Spoon வகை குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருப்பது கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சிக்கலான குடும்பச் சூழல். அதையெல்லாம் புரிந்து கொண்டு அவர்களை அரவணைத்து அச்சம் நீக்கி படிப்பில் ஆர்வம் ஊட்டி அவர்களை வளர்த்து எடுப்பது எவ்வளவு பெரிய வேலை என்பதை இந்த நூலின் வழி சொல்லாமல் சொல்லி உள்ளார் நண்பர் முத்துக் கண்ணன். தங்கள் பள்ளிவளாக நினைவுகளை மீட்டிப் பார்க்க விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல். முக்கியமாக ஆசிரியர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நூல் என்று கூறினால் அது மிகையில்லை.


Saturday, July 25, 2020

புத்தகம் – ஆண்டன் செகாவ் சிறுகதைகள்


புத்தகம் – ஆண்டன் செகாவ் சிறுகதைகள்
ஆசிரியர் – வேற யாருங்க ஆண்டன் செகாவே தான்
மொழி பெயர்ப்பு – வெங்கட சுப்பராய நாயக்கர்
இந்த புத்தகம் கிண்டிலில் வாசித்தேன்.
பள்ளி ஆங்கிலப் பாடங்களில் கதைப் பகுதி நான் டீட்டெயில் என்று வரும். அதில் பல சுவையான ஆங்கிலக் கதைகள் கொடுக்கப் பட்டிருக்கும். அதில் இவரது கெமிலியான் – பச்சோந்தி என்கிற பிரபலமான கதையை வாசித்து இருக்கிறேன். அதிகார மட்டத்திற்கு ஏற்ப போலீஸ்காரர்கள் எப்படி சட்டத்தை வளைக்கிறார்கள் என்பதை ஒரு நாய் மற்றும் கடிபட்டவன் இருவரையும் ஒரு போலீஸ் நடத்தும் விதத்தை  வைத்து சூப்பராக பகடி செய்து இருப்பார்.
     இந்த தொகுப்பில் என்னை வெகுவாக ஈர்த்த மெல்லிய நையாண்டி இழையோடும் கதைகளைப் பற்றி சிறு அறிமுகம் செய்கிறேன்.
     பேச்சாளர் - ஒரு பிரபலமான பேச்சாளர். கல்யாணம், காதுகுத்து, கெடாவெட்டு எதுக்குன்னாலும் போய் மணிக்கணக்கில் சொற்பொழிவை ஆத்து ஆத்துன்னு ஆத்துறவர். ஒரு பிரபலமான ஆடிட்டர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் சொற்பொழிவு ஆற்ற அவரை அழைக்கிறார்கள். அவரும் அவசரகதியில் எங்கேயோ கிளம்பியவர் ’சரி கழுதை ஆத்திப்புட்டுத்தான் போவோமே’ என்கிற ரீதியில் வருகிறார். வந்து ரொம்ப உருக்கமாக, கண்களில் நீர் வரவழைக்கும் வகையில் தெரியாமல் பெயரைச்சொல்லி உயிரோடு இருக்கும் ஒருவரைப் போட்டு பொள பொள என்று பொளந்து கட்டுகிறார். சம்பந்தப் பட்ட நபரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திகைத்துப் போகிறார்கள்.
கொஞ்சம் அதிகம் – ஒரு நில அளவையாளர் ஒருவர் ஒரு நெடுந்தொலைவு கிராமத்துக்கு பயணப்பட வேண்டி ஒரு குதிரை வண்டிக்காரனை அமர்த்திக் கொண்டு செல்கிறார். ஆரம்பத்தில் மெதுவாக நடந்து கடுப்பைக் கிளப்பும் குதிரை கானகப்பகுதி வந்தவுடன் விரைகிறது. நிலஅளவையாளரோ இந்தப் பயல் நம்மை எங்கோ கடத்திச் சென்று பணம் பறிக்க திட்டமிடுகிறான் என்று எண்ணி எனக்கு ஐ.ஜியைத் தெரியும் என்கிற ரேஞ்சில் அள்ளி விடுகிறார். ஆனாலும் வேகம் குறையவில்லை. அப்புறம் நான் துப்பாக்கி வைத்துள்ளேன் என்கிறார் பிறகு அதை வைத்து எனக்கு சுடத்தெரியும் என்கிறார். பையில் சும்மானாச்சும் கையை விடுகிறார். வண்டியோட்டி திடுமென கீழே குதித்து பின்னங்காவ் பிடறியில் பட ஓடுகிறான். ஏன் ஓடினான் என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கலைப்பொருள் – கோயில் பிரகாரங்களில் மிகவும் கலைநயத்தோடு காமம் சொட்ட சொட்ட பல சிற்பங்களை பார்த்திருப்போம். உடலுறவின் பல்வேறு யுத்திகள் எல்லாம் கூட வடிவங்களாக செதுக்கப் பட்டிருக்கும். அதுமாதிரி ஒரு கலைப் பொருளை கலைக் கண்ணோட்டத்தோடு வாங்கி மேசை மீது வைத்துக் கொள்வோமா? நிறைய பேர் சற்று சங்கடமாக நினைத்து தவிர்ப்பார்கள். இந்தக் கதையில் அதுமாதிரி ஒரு கலைப் பொருளை தனக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு காசுக்கு பதிலாக ஒரு சிறுவன் கொடுத்து நன்றி பாராட்டுகிறான். அதை பெற்ற அவர் அதை மேசையில் வைக்க இயலாது என தனது வக்கீல் நண்பனிடம் தள்ளி விடுகிறார். அவனுக்கும் அதே பிரச்சனை அவன் அதை தனது நண்பனான நடிகனிடம் தள்ளி விடுகிறான். அவனது காரியதரிசியின் ஆலோசனையின் பேரில் அதை கலைப் பொருட்களை வாங்கி விற்கும் ஒரு குடும்பத்தினரிடம் விற்று விடுகிறான். மறுநாள் மருத்துவமனை கதவு தட்டப் படுகிறது. அதே சிறுவன். ”சார் அந்தக் கலைப்பொருள் ஜோடியாக இருந்தால் தான் அழகு. இதோ அதற்கான ஜோடி ஒன்றை ஒருநடிகரிடம் இருந்து வாங்கினேன்” என்று மேசையில் வைக்கிறான். டாக்டர் “ஙே“ என்று விழித்தார்.
குண்டானவன் ஒல்லியானவன் – இந்தக் கதையில் இரண்டு பால்யகால சிநேகிதர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கிறார்கள். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறி மிகவும் அந்நியோன்யத்துடன் பழகுகிறார்கள். அந்த குண்டான நண்பர் மாகாண கவர்னர் என்பது தெரிந்த மாத்திரத்தில் அவர்களது நட்புக்கு இடையில் மேல் கீழ் என்கிற தன்மை வந்துவிடுகிறது. என்ன தான் கவர்னர் மறுத்தாலும் அந்த ஒல்லி நண்பர் அவரை மிகுந்த மரியாதையோடு சற்று விலகி நடத்துகிறார்.
ராஜதந்திரி – நம்மில் நிறைய பேர் இருப்பார்கள். ஒரு சாதாரண விஷயத்தை ரொம்ப ராஜதந்திரமாக செய்ய முனைந்து அதைக் கேலிக்கூத்து ஆக்கிவிடுவார்கள். இந்தக் கதையில் ஒருத்தனுடைய மனைவி இறந்து போகிறாள். சேதி சொல்லி கணவனை அழைத்து வர ஒருத்தன் செல்கிறான். நேரடியாக சொன்னால் அவனுக்கு அதிர்ச்சியில் ஏதேனும் ஆகிவிடும் என்கிற நல்ல எண்ணத்தில் “சிங்கிளாக“ வாழ்வதன் மேன்மையை பற்றி விதந்து ஓதுகிறான். மனைவி சரியான நச்சறிப்பு பிடித்தவர்கள் அப்படி இப்படி என்று அளக்கும் போது வாய்தவறி இரண்டு முறை இறந்து போன விஷயத்தை சொல்லி விடுகிறான். கணவனோ எனது மனைவி இறந்து போய்விட்டாளா என்கிறான். இல்லை நான் எப்போது அப்படி சொன்னேன் என்று சமாளிக்கிறேன் பேர்வழி என்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கி மயக்கமுறச் செய்து விடுகிறான். கடைசியில் “இந்தக் காரியத்தை என்னால் செய்ய இயலாது வேறு யாராவது அவனிடம் சொல்லுங்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் மயக்கம் போட்டு விட்டான்” என்று புலம்புகிறான்.
     ஆண்டன் செகாவ் கதைகள் ஆரம்பகால வாசிப்பாளர்கள் வாசிக்க ஏற்றவை. ஏனெனில் அவ்வளவு எளிமை தெளிவு மற்றும் நய்யாண்டி மிக்கது.  மேலை நாட்டு சிறுகதைகளில்எனக்கு ஆண்டன் செகாவ் மற்றும் ஓ.ஹென்றி சிறுகதைகள் மிகவும் பிடிக்கும்.


Wednesday, July 22, 2020

CHILDREN OF HEAVEN – பெர்சியன் மொழிப் படம்


CHILDREN OF HEAVEN – பெர்சியன் மொழிப் படம்

     1997 ல் வெளியாகி பரவலாக உலகலாவிய கவனத்தை ஈர்த்த ஒரு இரானியப் படம் தான் இந்த சில்ரன் ஆஃப் ஹெவன். இது குழந்தைகள் திரைப்படம் எனவும் கொள்ளலாம் குழந்தைகளை மையமாகக் கொண்ட பெரியவர்களுக்கான திரைப்படம் எனவும் கொள்ள முடியும்.
     அலி, சாய்ரா இருவரும் இரானில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த ஏழ்மையான குடும்பத்தில் உள்ள குழந்தைகள். அப்பா, அம்மா மற்றுமொரு கைக்குழந்தை என ஐந்து பேர்களைக் கொண்ட குடும்பம். ஏழ்மையும் நேர்மையும் உருவானவர் தந்தை. தாய் நோய் வாய்ப்பட்டவர். குழந்தைகள் இருவரும் நன்றாக படிப்பதோடு மிகுந்த பொறுப்போடு சிற்சிறு வீட்டு வேலையையும் செய்கின்றனர்.
     சாய்ராவின் பிய்ந்து போன பள்ளிச் செறுப்பை (Sneakers) தைக்க எடுத்துச் செல்லும் அலி வரும் வழியில் காய்கறி வாங்கும் போது செறுப்பு உள்ள பாலித்தீன் பையை வெளியே வைத்து விட்டு உள்ளே செல்கிறான். இதற்கிடையே காய்கறி கடைகளில் சேகாரமாகும் குப்பைகளை அள்ளும் வண்டி வந்து இவன் செறுப்பு வைத்திருந்த பையையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போய்விடுகிறது. வெளியே வந்து பார்த்தால் செறுப்பைக் காணோம். அவளுக்கு அந்த செறுப்பு சீருடையின் அங்கம். எனவே அது இல்லாமல் பள்ளி செல்ல இயலாது.
     வீட்டிற்கு வந்து அவளிடம் உண்மையை சொல்கிறான். நாளைக்குள் நான் தேடி எடுத்து வந்து விடுகிறேன் என்கிறான். இதற்கிடையே அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு படிக்க அமரும் போது தங்கை எழுத்த மூலமாக “செறுப்பு இல்லாமல் நான் பள்ளிக்கு எப்படிச் செல்வது என்று கேட்கிறாள்” அதற்கு அவன் ”என்னுடைய பள்ளி ஷூவை அணிந்து செல்” என்று பதில் எழுதி தருவதோடு அவளை சமாதானப் படுத்த ஒரு புதிய பென்சிலையும் தருகிறான். தந்தைக்கு தெரிந்தால் அடிவிழும் என்பதை விட தந்தையால் உடனடியாக ஒரு புதிய செறுப்பை வாங்க இயலாதே என்கிற கவலைதான் அவன் செய்த இந்த இடைக்கால ஏற்பாட்டிற்கு காரணம்.
     சாய்ரா காலையில் செறுப்பு அணிந்து கொண்டு பள்ளி செல்ல வேண்டும். பள்ளி முடிந்தவுடன் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வந்து அவனிடம் செறுப்பை தந்து விட வேண்டும். அதைப் போட்டுக் கொண்டு அவன் திரும்ப வேகமாக ஓடிப் பள்ளியை அடைய வேண்டும். தினந்தோறும் இருவரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். (ஈரானில் பெண்களுக்கு காலையிலும் பசங்களுக்கு மாலையிலும் பள்ளி இருக்கும் போலிருக்கிறது.)
     ஒரு நாள் காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் வேறு வகுப்பு சிறுமி ஒருத்தி சாய்ராவின் செறுப்பை அணிந்திருக்கிறாள். பள்ளி முடிந்த பின் அவளைப் பின் தொடர்ந்து அவளது வீட்டைக் கண்டு கொள்கிறாள். திரும்ப அண்ணனை அழைத்து வந்து வீட்டைக் கண்காணிக்கிறார்கள். அப்போது தான் தெரிகிறது அவளது தந்தை பார்வையற்றவர். அந்த நிலையிலும் வீடு வீடாக பிரெட் எடுத்துச் சென்று சொற்ப வருமானம் ஈட்டுகிறார். அவளது குடும்ப நிலை இவர்களுடையதைவிட இரங்கத்தக்கதாக இருப்பதால் செறுப்பை திரும்பவும் கேட்க மனமின்றி திரும்பிவிடுகிறார்கள்.
     அடுத்ததாக ஒரு மருந்து அடிக்கும் இயந்திரம் அலியின் தந்தைக்கு கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு ஒரு விடுமுறை நாளில் நகரத்திற்குச் சென்று எதாவது ஒரு மாளிகையில் தோட்ட வேலை செய்து கூடுதல் வருமானம் ஈட்டி வரலாம் என்று மூச்சு வாங்க சைக்கிள் மிதித்துக் கொண்டு அலியும் தந்தையும் செல்கின்றனர். நீண்ட தேடலுக்குப் பின் ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது. செய்து முடித்த ஏராளமான பணமும் கிடைக்கிறது. அவனது தந்தை பலவாறான கனவுகளை சைக்கிளை மிதித்தபடி அவனிடம் சந்தோஷமாக கூறிவருகிறார். அவனோ முதலில் சாய்ராவுக்கு செறுப்பு வாங்கிக் கொடுங்கள் அவளுடையது பிய்ந்து போய் இருக்கிறது என்கிறான். பெரிய இறக்கத்தில் இறங்கும் போது  பிரேக் பிடிக்காமல் ஒரு மரத்தில் மோதி கீழே விழுகின்றனர். நெளிந்து போன சைக்கிள் கட்டு போட்ட மண்டை என ஒரு லாரியில் வீடு திரும்புகின்றனர். கனவு கானலாகிவிட்டது.
     பள்ளியில் ஒரு நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி ஒன்றை அறிவிக்கிறார்கள். நிறைய பள்ளிகள் பங்கு பெறும் போட்டி. அதில் மூன்றாவதாக வந்தால் கோப்பையுடன் ஒர ஜோடி Sneakers ம் உண்டு என அறிவிக்கிறார்கள். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறான். இவ்வளவு நாட்கள் அண்ணனும் தங்கையும் ஓடிய ஓட்டங்கள் நிற்க வேண்டுமானால் இந்த ஓட்டத்தில் அவன் பரிசு வாங்க வேண்டும். அவளது தங்கையை நினைத்தபடி ஓடுகிறான். இந்த முயற்சியில் அவன் செறுப்பை வென்று தங்கையின் கால்களுக்கு ஓய்வு கொடுத்தானா என்பதை மட்டும் படத்தில் கண்டு கொள்ளுங்களேன்.
     ஒவ்வொரு காட்சியும் அவ்வளவ அருமை. அலியாக நடித்த அந்தப் பையன் கண்களில் சோகத்தை அவ்வளவு அழகாக தேக்கி வைத்து நடித்திருக்கிறான். அவளது நடிப்பைப் போலவே அந்தச் சிறுமியும் அவ்வளவு அழகு. படத்தில் எவரும் கெட்டவர் இல்லை. வேகமாக ஓடிவரும் போது கால்வாயில் ஒற்றைச் செறுப்பு விழுந்து நீரில் வேகமாக அடித்துச் செல்லப்படும் போது அவளோடு நாமும் தவித்துப் போகிறோம். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய செறுப்பு பிரச்சனையை இறுதி வரை சொல்லாமல் சமாளிக்கும் பொறுப்பான அண்ணனாக வரும் அலியாக நடித்தச் சிறுவன் விருதுக்கு தகுதியான அளவு நடிப்பை வழங்கி இருக்கிறான்.
     அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு ஃபீல் குட் மூவி. நிச்சயமாக குழந்தைகளை பார்க்கச் சொல்ல வேண்டும்.

Monday, July 20, 2020

சிறுகதை - குற்றமும் தண்டனையும்


 குற்றமும் தண்டனையும் - சிறுகதை

ஆசிரியர் - மு.ஜெயராஜ், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம்.
     அந்தக்குட்டிச் சுவற்றை அலேக்காகத் தாண்டி குதித்தார் செந்தில்நாதன்.
 ’என்னடா இது லேண்டிங் ஆக இவ்வளவு நேரம் ஆகுது?’
 முன் பக்கம் மூன்றடியாக இருந்து தவ்விக் குதிக்க ஆசை காட்டிய குட்டிச்சுவர் தனது மறுபுறம் பத்தடிக்கு மேல் பள்ளமான ஒரு கிராம சாக்கடைக் காவாயை ஒளித்து வைத்திருந்தது.
     “ச்ச்சை என்னடா இது” என்று முழங்கால் சாக்கடையில் ’சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக’ நின்றார்.
     ஓரடி ஆழத்தில் இருந்த காலை வலுவாக இழுத்து ஊன்றினால் மறுபடி அது இரண்டடி ஆழத்திற்கு பதிந்தது. இரண்டுகால்களையும் மாற்றி மாற்றி அந்த சாக்கடை சேற்றில் நாற்றாங்கால் தயார் செய்து கொண்டு திகைத்துப் போய் செய்வதறியாது நின்றார் செந்தில்நாதன்  மனதில் மெல்லத்திறந்தது கதவு படத்தின் அமலா இறந்துபோகும் காட்சி வேறு படமாக ஓடி பீதியை கிளப்பியது.
     “என்ன வாத்தியார, எங்க ஊரோட மொத்த சாக்கடையும் வந்து விழுற எடத்துல எறங்கி என்னத்த தேடுறீங்க?” என்றார் ஒரு நக்கல் புடிச்ச கிராமத்துப் பெருசு.
     “இந்தப் பக்கமா ஒரு பய ஓடினானா? அவனத்தான் தொரத்திக் கிட்டு வந்தேன் இங்க கால வச்சித் தொலச்சிட்டேன்”
     “என்னது கால வச்சீங்களா? அந்த செவுத்த அப்படியேப் பாய்ஞ்சி தாண்டுனீங்க!!  தூரத்தில் இருந்து பாத்துட்டு தான வரேன்”
     “சரி கொஞ்சம் கைய கொடுங்க”
     பெருசு பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்ததில் சேற்றில் இருந்து வெளியே வந்த வேகத்தில் தள்ளிக் கொண்டு அவர் மீதே குப்புற போய் விழுந்தார் வாத்தியார்.
     “ச்சே என்ன வாத்தியாரே, பழைய படத்துல வாத்தியார் லதா மேல விழுகுற கணக்கா விழுந்து அமுக்கிப் புட்டீங்க?”
     “சார் அவர என்னப் பண்றீங்க?” என்ற படி வந்து வண்டியை நிறுத்தினார் உடன் பணியாற்றிய சக ஸ்குவாட் ரவிக்குமார்.
     ”குற்றம் நடந்தது என்ன?” ன்னு கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போமா?
     இன்று பனிரெண்டாம் வகுப்பு கணக்குத் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஊர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாகும். செந்தில்நாதனுக்கு எப்போதும் போல ஹால் சூப்பர்வைசர் ட்யுட்டி தான் போட்டிருந்தார்கள். அலுவலகத்திற்குச் சென்று சண்டையிட்டு தனது பணி மூப்பு காலங்களை எல்லாம் காட்டி அங்கேயே நின்று ஸ்டேண்டிங் ஸ்குவாட் பணியேதான் வேண்டும் என்று வாங்கிக் கொண்டு “அதாம்ல வர்கீசு“ என்று கம்பீரமாக மீசையை முறுக்கியபடி வந்திருந்தார்.
     அவரே வந்து இந்த மாதிரி டிமாண்ட் செய்து பணியை மாற்றியதில் சற்றே காண்டான அந்த பிரிவு அலுவலர் தினந்தோறும் அவருக்கு நொட்டோரியஸ் சென்டராக (அதாங்க அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் பிட் பேப்பர்களாக சுரக்கும் எக்ஸாம் சென்டர்) பார்த்து பார்த்து பணி வழங்கினார்.
     அந்த வகையில் இன்றைக்கு இந்த கிராமத்துப் பள்ளியில் கணக்குப் பாடத் தேர்வுக்கு ஸ்குவாட் பணி.
     காலையில் தேர்வு ஆரம்பித்த பொழுதில் இருந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு புங்க மரத்தடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து ரவிக்குமாருடன் கதை பேசிக் கொண்டு இருந்தார் செந்தில்நாதன்.
     ”சார் டி.இ.ஓ தலைமையிலான பறக்கும் படை வராங்கலாம் சார்” என்று அலுவலக உதவியாளர் தனக்கு கிடைத்த உளவுத்துறைத் தகவலைக் கூறி உஷார் படுத்தினார்.
     அந்தத் தகவலை எல்லா அறைகளிலும் கூறி எல்லோரையும் ஒழுங்காக அமரச் சொல்லியபடிச் இருவரும் சென்றனர். அப்போது தான் அவரது கெட்ட நேரம் செந்தில்நாதனுக்கு பொறி தட்டியது. ஏற்கனவே தான் பணியாற்றும் பள்ளிக்கு டி.இ.ஓ விசிட் செய்த போது செந்தில் நாதன் தனது  ஆங்கிலப் பாடத்தில் குறைவான தேர்ச்சி காட்டியதற்காக கடிந்து கொண்டிருந்தார். அவரை இந்த சமயத்தில் இம்ப்ரஸ் செய்யலாமே என்று யோசனை செய்தார்.
     இன்னைக்கு எவனையாவது பிட்டும் கையுமா பிடித்து ஒப்படைத்து நல்ல பெயர் எடுத்து விடவேண்டும் என்று முடிவு கட்டி ஒவ்வொரு அறையாக பூனை போல மெதுவாக ஜன்னல் வழியே நோட்டமிட்ட படி சென்றார். இந்த பள்ளிக் கூடம் வேற நொட்டோரியஸ் சென்டர் என்பார்கள். பிட்டு பிடித்ததற்கான பின் விளைவுகள் எதுவும் மோசமாக அமைந்து விடக் கூடாது. எனவே இருப்பதிலேயே கொஞ்சம் அப்பிராணியாகவும் ஒல்லியாகவும் இருக்கும் பயலாக பிடித்து ஒப்படைத்துவிடுவோம் என்று கணக்கு பண்ணி நோட்டம் விட்டார்.
     பனிரெண்டாம் நம்பர் ரூமில் ஒரு பையன் பிட் பேப்பரை சட்டைக் காலர் மடிப்பில் சொருகினான். எழுதி முடித்திருப்பான் போல. ’சிக்கினாண்டா சிவனான்டி’ என்கிற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து உள்ளே ஓடினார். இவர் நுழைந்த மாத்திரத்தில் பிட்டை எடுத்து இவர் முன்னாலேயே ஜன்னல் வழியே எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எறிந்தான்.
     “டேய் எழுந்திரு, பிட் எடுத்து வெளிய போட்ட தானே?”
     “சார், நிறைய எழுதணும் தொந்தரவு பண்ணாதீங்க, நான் பிட் அடிக்கல”
     “இப்போ வெளியே தூக்கிப் போட்டியே”
     “நானா, நான் ஒண்ணும் வெளியே போடலையே”
     “டேய் நானே பாத்தேண்டா”
     “சார் நானெல்லாம் பிட் அடிக்கல எதையும் தூக்கியும் போடல சும்மா தொந்தரவு பண்ணாதீங்க வேற மாதிரி ஆயிடும்” என்றான் அதட்டலாக.
     ’ம்ம்… வெளிய போறப்ப வெட்டுவானோ’ என்று பயம் லேசாக கவ்வியது. ’
எவிடென்ஸ வேற அழிச்சிட்டான். இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான். மேற்கொண்டு கிளறாமல் போனால் தான் நாம பத்திரமா வீடு போய் சேரமுடியும்’ என்று சிந்தித்தவாறு,
”ஒழுங்கா பரிச்சை எழுது, இன்னொரு முறை பாத்தேன் புக் பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்றபடி மீசையை முறுக்கும் சாக்கில் மண்ணை தட்டிவிட்டபடி நடையைக் கட்டினார். 
     பதிமூன்றாம் நம்பர் ரூமை நோட்டமிட்டபோது அல்வாத்துண்டு மாதிரி அவர் எதிர் பார்த்த சர்வ லட்சணங்களோடு ஒருத்தன் சிக்கினான். அப்போது தான் அந்த பத்து மார்க் கேள்வியை முடித்து அந்த பேப்பரை பேண்ட்டுக்கும் ஜட்டிக்கும் இடையில் இருந்த ஒரு “மர்ம தேசத்தில்” சொருகினான்.
     “டேய் எழுந்திருடா, அந்த பிட்ட எடு”
     “சார் இல்ல சார், நான் பிட் அடிக்கல சார்!!“
     ”டேய் அதெல்லாம் ஜன்னல் வழியா பாத்துட்டு தான் உள்ள வரேன், நீயே எடுக்கிறாயா, இல்ல நானே கைய விட்டு எடுக்கட்டுமா?”
     “சார், சார், மன்னிச்சுடுங்க சார், தெரியாம பண்ணிட்டேன் சார்”
     “செந்தில் சார், டி.இ.ஓ வந்துடுவார் சார், அப்புறம் பேசிக்கலாம் சார், அவன விடுங்க சார்” என்றார் அந்த அறைக் கண்காணிப்பாளர் தெரிந்தவர் என்ற தோழமையோடு.
     “என்னது இவன விடச் சொல்றீங்களா? இவன இன்னைக்கு புக் பண்ணாம விடப் போறது இல்ல”
     “சார் என்ன விட்டுடுங்க சார் இனிமே செய்ய மாட்டேன் சார்” என்று காலில் விழ முயன்றான்.
     “ஏய் இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேணாம்” என்று அவனுடைய பரிட்சை அட்டையுடன் அவனை வெளியே இழுத்து வந்தார். தேர்வுக் கட்டுப் பாட்டு அறையில் தலைமைக் கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்து சில எழுத்து வேலைகள் செய்ய வேண்டும்.
     கள்ளச் சாராயத்தை பிடித்த போலீஸ்காரரின் தோரணையோடு மீசையை முறுக்கியபடி கம்பீரமாக நடை போட்டார். ஓ.ஏ வைக் கூப்பிட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட ஆசை மெல்ல எட்டிப் பார்த்தது. ஆனால் அதெல்லாம் சட்ட வரம்புகளுக்குள் வருமா என்கிற சந்தேகம் எழவே ’எதுக்கு வம்பு’ அந்த சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்.
     பையனை முன்னே விட்டு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்தார். மாணவர்கள் எல்லாரும் பரிட்சை எழுதுவதை சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தனர். காரிடாரின் இறுதியில் வெளிப்புறமாக இறங்கும் மாடிப்படி காம்பவுண்ட் சுவரை ஒட்டிச் செல்லும். அந்த மாடிப்படியை ஒட்டியுள்ள காம்பவுண்டை சட்டென தாண்டி குதித்து பரிட்சை பேப்பரோடு குற்றவாளி தப்பினான். செந்தில்நாதனுக்கு “கெதக்“ என்று ஆகிவிட்டது.
     இப்போது பையனை வெளியே தனது பொறுப்பில் கொண்டு வந்திருப்பதால் அந்த பிரச்சனையின் அனைத்து விளைவுகளுக்கும் செந்தில்நாதனே பொறுப்பாளி. மால்பிராக்டீஸ் செய்யும் மாணவர்களின் பேப்பரை சமர்ப்பிக்கத் தவறினால் பிரச்சனை நிச்சயமாக இவர்மீது திரும்பும். பையன் பரிட்சை முடிவடைய இரண்டு மணிநேரங்கள் இருக்கும் போதே வினாத்தாளோடு வெளியேறி இருக்கிறான். சோ, வினாத்தாள் அவுட் ஆவதற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட தலையாய பிரச்சினை டி.இ.ஓ சற்று நேரத்திற்கெல்லாம் வர இருக்கிறார். நடந்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாகப் போகிறார். இந்த நினைவுகள் எல்லாம் ஒரு மைக்ரோ வினாடி நேரத்தில் செந்தில்நாதன் மைண்டில் தோன்றி அவரின் க்ரைம் ரேட்டை பெட்ரோல் விலையைப் போல ஏற்றிக் கொண்டே போனது, ஆகவே சற்றும் யோசிக்காமல் காம்பவுண்டை தாண்டிவிட்டார்.
     ஊருல எதாவது ஒரு வீட்டினுள் மறைந்து கொண்டான் எனில் அவனை பிடிப்பது சிரமம். எனவே அவன் தன் பார்வையில் இருந்து மறைந்து விட்டால் சிரமம். ஓடிக்கொண்டே கைபேசியை எடுத்து சக ஸ்குவாடான ரவிக்குமாரை அழைத்து, “யோவ் ஒருத்தன பிட் அடிச்சதுக்கு புக் பண்ணலாம்னு பாத்தேன். அவன் பேப்பரோடு எஸ்கேப் ஆய்ட்டான்யா, நீ வண்டிய எடுத்துக் கிட்டு வா, அப்படியே எஸ்கார்ட் வந்திருக்கிற போலீஸ் காரரையும் வரச்சொல்லு” என்று மூச்சு வாங்கியபடியே பேசி முடித்தார்.
     “என்னய்யா டி.இ.ஓ வர நேரத்துல ஏழரைய கூட்டுற, சரி வரேன்” என்று வண்டியை எடுக்க விரைந்தார்.
     “போலீஸ் சார், ஒரு பய பேப்பரோட ஓடுறான் வாங்க போய் புடிக்கணும்”
     இந்த வேலை நம்ம பணிகளின் வரம்புக்குள் வருமா என்று ஒரு நிமிடம் யோசித்தார். நம்ம வேலை தேர்வு மையத்தை பாதுகாப்பது தான். இந்த தொரத்திப் புடிக்கிற வேலை எல்லாம் இல்லை என்று யோசித்தவர், “சார் கோவிச்சிக்காதீங்க, நான் எக்சாம் சென்டர் பாதுகாப்புக்குத் தான் வந்துருக்கேன். நான் இங்க இல்லாம இருந்தா சரிபடாது” என்று கறாராக மறுத்துவிட்டார்.
     தலையில் அடித்துக் கொண்டு வண்டியை விர்ரென்று கிளப்பிக் கொண்டு பறந்தார். செந்தில் நாதன் லொங்கு லொங்கு என்று மூச்சு வாங்க பரிதாபமாக ஓடிக் கொண்டு இருந்தார்.
     வண்டியை பார்த்தவுடன் அவசரமாக ஓடுகிற வண்டியிலேயே தாவி ஏறமுயன்று தலைகுப்புற விழுந்து தொலைத்தார். நல்வாய்ப்பாக அங்கே புல் தரையாக இருந்ததால் பற்களின் எண்ணிக்கைக்கு பங்கம் வரவில்லை.
“சார் இதென்ன சைக்கிளா?, நிறுத்துறேன், பொறமையாஏறுங்க, எந்தப் பக்கமா ஓடினான்?”
     “சார் இதே தெருவுல தான் ஓடினான்”
     இருவரும் வண்டியில் ஏறி அவனை துரத்திக் கொண்டு போனார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனை காணவில்லை. இவர் வேகத்திற்கும் அவன் வேகத்துக்குமான இடைவெளியில் அவன் மறைந்து விட்டான்.
     அங்கே பள்ளியில் பசங்க பரிட்சை எழுதிக் கொண்டு இருக்கும் போதே ஆசிரியர்கள் அவரவர் அறை வாசலில் வராண்டாவில் நின்றபடி வியந்து போய் இதே ரீதியிலான பழங்கதைகளை பேசலாயினர். செந்தில்நாதன் இன்று கொண்ட ஆவேசம் ஒட்டு மொத்த தேர்வையும் பாதித்து விட்டது எனலாம்.
     அந்த நேரம் சரியாக டி.இ.ஓ ஜீப் உள்ளே நுழைந்தது. வண்டியில் இருந்து இறங்கியதும் டி.இ.ஓ தேர்வுகள் நடைபெறும் அறைகள் நோக்கி விரைந்தார். அவரோடு ஐந்து பறக்கும் படை உறுப்பினர்களும் சென்றனர். முதன்மைக் கண்காணிப்பாளர் கடப்பாரையை விழுங்கியவராய் நின்று கொண்டு இருந்தார்.
     “என்னய்யா, உங்க சென்டருக்கு ஸ்குவாட் போடலையா, ஒருத்தரையும் காணல?“
     “சார். அது வந்து, பாத் ரூம் போயிருப்பாங்க சார்“ எதற்கும் இருக்கட்டும் என்று அப்போதைக்கு சமாளித்து வைத்தார்.
     சரியாக பதிமூன்றாம் அறைக்குள் நுழைந்து விட்டார். ஒரு இடத்தில் மட்டும் பேனா பென்சில் எல்லாம் இருக்கு பரிட்சை பேப்பரை காணோம்.
     “என்னய்யா, ஒரு பயல காணோம்?”
     “சார் பாத்ரூம் போயிருக்கான் சார்” என்று தட்டு தடுமாறினார் மு.க .
     “ச்சை என்னய்யாது எல்லாரும் யாரக் கேட்டாலும் பாத்ரூம்னு சொல்றீங்க?, ஆமாம், பாத்ரூம் போறவன் பேப்பர்லாம் எடுத்துக்கிட்டா போவான்“
     “சார், அது வந்து…”
     “என்னய்யா பித்தலாட்டம் பண்றீங்க என்ன நடந்ததுன்னு சொல்லித் தொலைங்களேன்” என்று டென்ஷன் ஆனார்.
     “சார், சரவணன் பிட் அடிச்சான்னு ஸ்குவாட் சார் புடிச்சிக்கிட்டு போனாரு, அவன் காம்பவுண்ட எகிறி குதிச்சி ஓடிட்டான் சார். ஸ்குவாட் சார் ரெண்டு பேரும் தொரத்திக்கிட்டு போயிருக்காங்க சார்” என்று சக மாணவன் புட்டு புட்டு வைத்துவிட்டான். முதன்மைக் கண்காணிப்பாளர், துறைஅலுவலர் இருவரும் ஒரே நேரத்தில் தலையை சொறிந்தனர்.
     “என்னய்யா சம்பவத்தோட சீரியஸ்னஸ் தெரியாம தலையை பிராண்டிக்கிட்டு நிக்கிறீங்க. ஒருத்தன் பரிட்சை முடியறதுக்குள்ள கொஸ்டின் பேப்பரோட வெளில ஓடிருக்கான். மால் பிராக்டிஸ்னா விடைத்தாள் வைக்கணும். இப்போ அதுவும் இல்ல. பிரச்சனை பெருசாச்சுன்னா நாறிடும்யா. உங்களோட சேத்து எந்தலையும் உருளப் போகுது” உடன் வந்த பறக்கும் படை ஆசிரியரிடம் ஜீப்பில் பிபி மாத்திரை எடுத்து வர பணித்தார். தனது சர்வீஸ்லயே அப்போது தான் ஒரு பறக்கும் படை ஆசிரியர் பறந்து போனார்.
     இப்போதுதான் துறைஅலுவலர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர் இருவருக்கும் விபரீதம் புரிந்தது. ’ஏண்டா, என்னைய சாவடிக்கிறீங்க, சுகர் பேஷண்ட்ரா நானு’ என்று நொந்து கொண்டார் மு.க.
     பிபி மாத்திரையை வாங்கி டி.இ.ஓ வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரை வாயில் ஊற்றினால், அது வாயைத் தவிர எல்லா இடங்களிலும் பட்டுச் சிதறியது. ’ம்க்கும் அவசரத்துல கைய விட்டா அண்டாவுல கூட கை நுழையாது போலருக்கே’ என்று யோசித்தவாறே வாயில் தண்ணீரால் கோல் போட்டார்.
     “யோவ் வாங்கய்யா என்னன்னு போய் பாத்துட்டு வந்துடுவோம்”
     “ஜீப்ப எடுத்து திருப்பி நிறுத்துறேன் வாங்க சார்” என்று டிரைவர் விரைந்தார்.
     “ஏன், ஒரு மோளம் வாங்கி ஊரு ஃபுள்ளா தண்டோறா போட்டுட்டு வாயேன், யாராவது ஒரு வாத்தியார்ட்ட வண்டி வாங்கிட்டு ஒருத்தர் மட்டும் என் கூட வாங்க”
     இதற்கிடையே தெருவுக்குள் செந்தில் நாதனும் ரவிக்குமாரும் பைக்கில் சைக்கிள் வேகத்தில் இரண்டு பக்கமும் கண்களால் துழாவியபடி சென்றார்கள். ’எங்காவது வீட்டுக்குள் நுழைந்து இருப்பானோ?’ என்ற சந்தேகத்தோடு சென்றார்கள்.
     ஒரு முக்கில் பாதை இரண்டாக பிரிந்தது.
     “சார் எந்தப் பாதையில போயிருப்பான் சார்?“ என்றார் செந்தில் நடுக்கத்துடன்.
     “தெரியலையே” என்று எந்த பதட்டமும் இன்றி பதில் அளித்தார். இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்கிற தெளிவோடு நிதானமாக இருந்தார்.
     ”சார் நான் லெஃப்ட் சைட் போறேன், நீங்க ரைட் சைட் போங்க. யார் கண்ணில் பட்டாலும் போன் பண்ணிக்கலாம்” என்று செந்தில் கூறிவிட்டு வண்டியில் இருந்து குதித்து இறங்கினார்.
     “மறுபடியும் பார்ரா, சார் பாத்து நிதானமா தேடுங்க” என்றபடி ரைட்சைட் வண்டியை திருப்பினார் ரவி.
     லெஃப்ட் சைட் ஓடிய செந்தில்நாதன் அந்தப் பயலை துரத்தி ஓடி ஒரு குட்டிச் சுவற்றை தாண்டி சாகசம் செய்த விஷயத்தை தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.
     ஆளுக்கொரு திக்கில் பிரிந்து தேடிய இருவரும் ஒன்று கூடினர். ரவிக்குமார் அப்பழுக்கில்லாமல் பளீர் வெண்மைநிற உடையில் இருந்தார். செந்தில்நாதனோ துணிவெளுக்கும் பவுடர் விளம்பரத்தில் வரும் சுட்டிப்பயலைப் போல இருந்தார். ’இருக்கட்டும் இந்தக் கறை அவருக்கு நல்லது செய்யும் தானே?’
     “என்ன வாத்தியாரே ஆச்சு, யார எதுக்கு தொரத்திக்கிட்டு ஒடியாந்திங்க?”
     “அய்யா, ஒரு பய பரிட்சை பேப்பரோட பப்ளிக் பரிட்சை ஹால்ல இருந்து ஒடியாந்துட்டான். அவன கூட்டிட்டு போகலன்னா பெரிய சிக்கலாயிடும்”
     “அட நம்ம சீனிவாசன் மொவன் சின்னவன்தான் இந்தப் பக்கம் ஓடினான். கையில பரிச்ச அட்ட வேற வச்சிருந்தான். வாங்க அவனோட அத்த வீட்டுப் பக்கமாத்தான் ஓடினான்” என்றபடி செந்தில்நாதன் காதில் தேனையும் வயிற்றில் பாலையும் ஏக காலத்தில் வார்த்தார்.
     அந்த புதைசாக்கடைக்கு பக்கத்தில் ஒரு இருநூறு அடி தொலைவில் அவனோட அத்தையின் ஒட்டு வீடு இருந்தது. பின்னால் ஆடுகள் அடைக்கும் பட்டி கீற்று வேய்ந்த கதவெல்லாம் போட்டு இருந்தது.
     இடது புறத்தில் இருந்து செந்தில்நாதன், ரவிக்குமார் மற்றும் கிராமத்து பெரியவர் அந்த வீட்டை நெருங்கினர். வலது புறத்தில் இருந்து, டி.இ.ஓ, உள்ளூர் ஆசிரியர் ஒருவர் மற்றும் துறை அலுவலர் நெருங்கினர். முதன்மைக் கண்காணிப்பாளர் மயக்கமுற்றதால் அவரை தெளிவித்து அங்கேயே அமர வைத்துவிட்டு வந்திருந்தனர்.
     ”ஏம்மா, சரவணன் இந்தப் பக்கம் பரிச்சைப் பேப்பரோடு வந்தானா? நாங்க எல்லோரும் அவனத் தேடிக்கிட்டுத் தான் வந்திருக்கிறோம்”
     வெள்ளையுஞ்சொள்ளையுமா ஏழெட்டு பேர் வந்த கேட்டதால், “சரவணன நான் பாத்தே ஒரு வாரம் ஆகுது. அவன் பரிச்சை ஆரம்பிச்சதில் இருந்து இந்தப் பக்கம் வரவே இல்லைங்க” என்று அண்ணன் மகனை காப்பாற்ற முயன்றார்.
     பெயரியவர் பால் வார்த்த வயிற்றில் இப்போது இந்தம்மா புளியை கரைத்தார். செந்தில்நாதனுக்கு கால்களுக்கு கீழே பூமி நழுவுவது போல் உணர்ந்தார். ரவிக்குமாரை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
     “ஏம்மா, நான்தான்மா மாவட்டக் கல்வி அதிகாரி, அவன் வந்திருந்தான்னா சொல்லிடு. அவன் செஞ்சது சாதாரண குற்றமில்ல. இருந்தாலும் அவன மன்னிச்சு பரிச்சை எழுத வைக்கிறேன். நீ என்னை நம்பலாம்” என்று டி.இ.ஓ உறுதியளித்தார்.
     அவர் வார்த்தைகளால் சற்று தெம்பான அந்த பாசக்கார அத்தை அவரது அண்ணன் மகனை வெளியே வரப் பணித்தார்.
     ”டேய் சரவணா, பயப்படாம வாடா, பரிச்சை எழுதலாமாம். இல்லன்னா உன் வாழ்க்கையே வீணாப் போயிடும்டா”
     “அறிவுக் கெட்ட அத்த, நீ ஏன் காட்டிக் கொடுத்த? அவங்களப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது அப்படித்தான் சொல்லுவாங்க, நாளைக்கு நான் பிட் அடிச்சேன்னு பேப்பரில் போட்டு மானத்தை வாங்கிடுவாங்க”
     “தம்பி, நான் சொல்றத கேளுடா, தயவு செய்து வந்துடுடா” என்று வாசல் படி வரை சென்று கெஞ்சினார் செந்தில்நாதன்.
     செந்தில்நாதன் வாசல் படி வரை வந்ததால் உள்ளே நுழைந்து பிடித்துவிடும் சாத்தியம் இருந்ததையும் அத்தை வீட்டில் பின்வாசல் இல்லாத பாதுகாப்பற்ற நிலையையும் எண்ணி நொந்துகொண்டான் சரவணன்.
     யாரும் எதிர்பாரா வண்ணம் ’குபீர்’ என்று பாய்ந்து வெளியே ஓடினான் சரவணன். ஓடிய வேகத்தில் ஆடு கட்டும் கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு ஆட்டுக் கொட்டாயில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.
     செந்தில்நாதனோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் மெல்ல உள்ளே சென்று பரிச்சை அட்டையோடு க்ளிப் போடப்பட்டிருந்த பரிச்சை பேப்பர் மற்றும் வினாத்தாள் இவற்றை சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டு கிளம்ப தயாராக பைக் அருகே வந்துவிட்டார்.
     “யோவ் என்னய்யா, கிளம்பிட்டே, அந்தப் பய அந்த கொட்டாய் உள்ளார கயிற்றோட போய் கதவ சாத்திக்கிட்டு இருக்கான். செத்து கித்து தொலைச்சிட்டான்னா நாம எல்லோரும் கூண்டோட உள்ள போக வேண்டியது தான்” என்று கடும் கோபத்தோடு சீறினார் டி.இ.ஓ
     “நாம என்ன சார் பண்ணமுடியும்”
     “அவன காப்பாத்த என்ன வழின்னு பாருய்யா? மேல ஏறி கீத்த பிரிச்சி உள்ள எறங்கலாமான்னு பாரு”
     சரவணனின் அத்தை போட்ட கூச்சல் குழுமியிருந்த மக்களில் எவரோ அளித்த தொலைபேசி தகவல்கள் என அங்கே பெரிய கும்பல் கூடிவிட்டது.
     “எம்புள்ளய கொல்லத்தான் இப்படி கும்பலா பொறப்பட்டு வந்தீங்களாய்யா?” என்று தலையில் அடித்துக் கொண்டு ஓடி வந்து பொத்தென்று ஆட்டுக் கொட்டாய் வசலில் வந்து விழுந்தார் சரவணன் அம்மா.
     கிராமத்து இளைஞர்கள் இருவர் ஏணிபோட்டு கூரையில் ஏறினார்கள். செந்தில்நாதனும் டி.இ.ஓ வின் கோபப் பார்வையை எதிர் கொள்ள இயலாமல் கூரை மேல் ஏறி ஒளிந்து கொண்டார்.
     அரிவாள் கொண்டு கீற்றுகளை அறுத்து எறிந்தனர். அங்கே உள்ளே, சரவணன் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு இருந்தான். இவர்கள் உள்ளே இறங்குவதற்குள் தட்டியினால் செய்யப்பட்ட கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே இரண்டு பேர் நுழைந்து அவனை கொத்தாக அள்ளி விட்டனர்.
     மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது. மீண்டும் ஒரு மூன்று பத்து மார்க் கணக்குகளை பிட் அடித்து எழுத அனுமதிக்க வேண்டும். மீண்டும் அறைக்குள் சென்று எழுதமாட்டேன், தேர்வுக் கட்டுப் பாட்டு அறையில் அமர்ந்து எழுத அனுமதிக்க வேண்டும். என்கிற முப்பெரும் கோரிக்கைகளுடன் பரிச்சை எழுத வருவதற்கு சம்மதித்தான்.
     இவர்கள் சைடில் இருந்தும் சரி என்று ஒப்புக் கொள்ளப் பட்டது.
     ஒரு பிரச்சனை சுமுகமாக முடிந்ததில் அனைவரும் நிம்மதியாக கலைந்தனர்.
     அன்று இரவு மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு செந்தில்நாதன் “சார், நாளைக்கு எனக்கு எங்க சார் ஸ்டேண்டிங் ஸ்குவாட் டியுட்டி போட்டு இருக்கீங்க” என பவ்வியமாக வினவினார்.
     “சர்வீஸ் முடியறவரைக்கும் தேர்வு சம்மந்தமான எந்த வேலைக்கும் உங்கள போடக்கூடாதுன்னு டி.இ.ஓ என்னைக் கூப்பிட்டு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்” என்ற டி.இ.ஓ அலுவலக சிப்பந்தி இவரது பதிலை எதிர்பாராமலே வெடுக்கென்று இணைப்பைத் துண்டித்தார்.
     ’அப்படி நாம என்ன தப்பு செஞ்சோம்?’ என்று யோசனை செய்தபடியே செந்தில் நாதன் புரண்டு படுத்தார்.
    
    
    
    
    
    



    

    
    
    
      
    
    
    

    

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...